படுக்கையிலிருந்து பதறி எழுந்தமர்ந்த வேணி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, கன்னங்களை கண்ணீர் தழுவ, உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் ஆட்டுவிக்க, வாயை கைகளால் மூடிய படி சத்தம் வராமல் அழுதாள்.
"நீ இப்படியே அழுதுட்டு இரு. உனக்கு கஷ்டங்களை கொடுத்தவங்க நிம்மதியாக இருக்கிறாங்க. இன்னும் நீ ஏன் இருக்க? " இதயத்தை கிழித்துக் கொண்டு கேட்ட செந்நிற மியாவின் குரல் மெய்யாகவே இதயத்தை கனப்படுத்தியது.
"நாம யாருக்கும் பயன் இல்லாமல் இருப்பதற்கு இல்லாமல் இருந்தால் எல்லாரும் சந்தோஷமா தானே இருப்பாங்க. ஆமா அதுதான் சரி" என்பது போலான சிந்தனைகள் தொடர்ந்து அவளை வட்டமிட, முன்யோசனையின்றி முடிவெடுத்தவளாய் தன் முப்பது வருட நட்பு தோழியின் 'வாட்சப்'பிற்கு ஒரு 'குறுஞ்செய்தி' அனுப்பியவள் ஆசுவாசமுற்று படுக்கையில் விழுந்தாள்.
சிஷ்ட்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
வைகாசி மாதத்தின் அதிகாலை பொழுதில் எழுந்த முருகப் பக்தையவள் , தலைக்கு ஊற்றி முருகனுக்கு முல்லை சரம் தொடுத்து சாற்றியவள், வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இதழ்களோ பக்தி பரவசத்தில் பாடலைப் பாட, தலையைச் சுற்றிக் கட்டியிருந்த டவலினைத் தாண்டி சுதந்திரமாக வெளியே நீண்டிந்த கூந்தல் கற்றைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக்கொட்டிருந்தன.
"நன்மதி யாழி எழுந்துட்டா பாரு"
உள்ளிருந்து அவளின் கணவன் அழைக்க
"இதோ வந்துட்டேன்ங்க"
என்றவள் கோலத்தை முடித்துவிட்டு அதனை ஒருமுறை நின்று ரசித்தபடியே உள்நுழைந்து
"யாழி குட்டி முழிச்சிட்டீங்களா தங்கம்? குட்மார்னிங்"
என்றவள் தன் மகவைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கிச்சனில் பூஸ்ட் கலப்பதற்காக சென்றாள்.
சர்க்கரைப் பொங்கல் செய்து முருகனுக்கு படைத்தவள் ஏனைய வேலைகளை முடித்து விட்டு அக்காடா என்று அமர்ந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
"ஹாய்டி மதி சொல்றேனு தப்பா நினைக்காத. எனக்கு ஏதாவது ஆகிடுச்சினா எங்க அம்மா அப்பா காலத்துக்கு அப்புறம் என் பசங்களுக்கு கார்டியனா நீயும் அண்ணாவும் இருப்பீங்களாட்டீ? வழிகாட்டியா இருந்தா மட்டும் போதும் அவனுக நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துருவானுகடி. பிளீஸ்டி மாட்டேன் மட்டும் சொல்லிடாதா, நீ செய்வ. எனக்கு தெரியும். எனக்காக செய்வ. இதுதான் என் கடைசி ஆசை"
வேணி அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை பார்த்தவள் படபடப்புடன் அலைபேசியில் வேணியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். 'அழைப்பை ஏற்க யாராவது வாங்க' என்று கதறிய அலைபேசியை கண்டுக் கொள்ளதான் யாருமில்லை.
"வேணி பிக் அப் மை கால்டி" வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பிப் பார்த்தாள். அதுவோ டெலிவரி ஆனதற்கான ரெட்டை டிக் மார்க்குடன் காட்சியளித்தது. நன்மதியின் பதட்டம் பன்மடங்கு அதிகரித்தது. மறுபடியும் அழைப்பு விடுத்தாள். அழைப்பு ஏற்கப்படாமலே துண்டித்திருந்தது. நீண்ட நேர அலைபேசியின் தவிப்பை பூர்த்தி செய்ய வந்துவிட்டிருந்தாள் வேணி.
"ஹலோ டி மதி" மெல்லிய குரலில் பேசியவளை சரமாரியாகக் கத்தியிருந்தாள் நன்மதி.
"அறிவுக்கெட்டவளே எங்கடி போன? எத்தனை தடவை கால் பண்ணியிருக்கேன் பாரு? உசுரே போயிருச்சு எனக்கு" படபடவென்று பொரிந்து விட்டாள் நன்மதி.
"ஏட்டி ஏம்ட்டி கத்துரவ? நான் குளிக்கலாம்னு போனேன்... அது.. லேட் ஆகிருச்சி"
"என்ன ஆச்சு வேணி உனக்கு? ஏதேதோ மெஸேஜ் அனுப்பி இருக்க? உனக்கு இப்ப என்ன பிரச்சினை? என்ன பிரச்சனைனாலும் அதுக்கு தீர்வுனு ஒன்னு இருக்கும். நீ இப்படி எல்லாம் சிந்திக்க மாட்டியேட்டி. என்ன ஆச்சு சொல்லு" மனம் பதைபதைக்க அவசரமாக அதேநேரம் உணர்வுபூர்வமாக பேசியவளை வருத்தப்பட செய்து விட்டோமே என்றுணர்ந்த இளவேனில்,
"சாரிட்டி அது..."
"ஷட் அப் வேணி. எப்பல்ல இருந்து இப்படி லூசு மாதிரி உளர ஆரம்பிச்ச? நீ எந்த தப்பான முடிவும் எடுத்துரதாட்டி. உனக்குலாம் ஒன்னும் ஆகாது. இப்படி பேசாத கஷ்டமா இருக்கு" வசவுடன் ஆரம்பித்தவள் கடைசி வரியில் அழுதே விட்டாள்.
"ஏட்டி சாரி நான் சொ...."
"உன்னை உடனடியாக பாக்கனும் போல இருக்கு ஆனால் கிட்டே இல்லையே நாம"
"நன்மதி ஸ்டாப் க்ரையிங்"
"நீ பேசாதட்டி. நீ எவ்வளவு போல்டான பிரேவ் கேர்ள்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை. நீயா இப்படி பேசுற? நம்மள விட எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டபடுறாங்க. நீ உன் பசங்கள மட்டும் நினைச்சி பாரு. நீ இல்லாமல் இருபாங்களாட்டி? நீதான்ட்டி அவங்களுக்கு எல்லாமே"
"...."
"உனக்கு அங்கு இருக்க முடிலயா? கஷ்டமா இருக்கா? கிளம்பி வாட்டி. ஒரு வேலையை பாரு. பினான்சியலா உன்னை ஸ்டேபிள் பண்ணிக்க. அத விட்டு இப்படி பேசுற?"
"....."
"உன் பசங்கள நல்லா படிக்க வை. நீ கூட இரு. அவங்களுக்கு நீ தான் எல்லாமே"
"...."
"பேசுட்டி ஏட்டி என்ன பண்ணுதவ? வேணி... வேணி..."
"ம்ம்ம் இருக்கேன். என்னால முடிலட்டி. வெறி பிடிச்சவன் போல நடந்துகிறான். தாங்க முடில" வலியோடு பேசினாள்.
"மனசு விட்டு பேசுட்டி. இல்லனா அழுது தீத்துடு. உள்ள வச்சிட்டே இருக்காத"
"என்னால முடிலட்டி... மனசு விட்டு போச்சு.... என்னை கொன்னுப் போட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இல்லைனா நானே என்னை ஏதாவது செய்றமாதிரி என்னைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை.... யார் கிட்டே பேச? என்னனு பேச? மனுஷியா கூட மதிக்க மாட்றாங்கட்டி. வேதனையா இருக்குட்டி... ங்ஹே...ங்ஹே..." கேவிக் கேவி அழ ஆரம்பித்திருந்தாள் இளவேனில்.
"அழாதட்டி நீ நம்ம ஊருக்கு வந்துரு. எதுவும் தப்பா முடிவு எடுக்காத. இப்பவாது என்ன நடந்ததுனு சொல்லுட்டி"
நடந்த அனைத்து அனர்த்தங்களையும் அழுகையூனூடேச் சொல்லியவள் "என் பசங்கள பாத்துக்க மாட்டியாட்டி?" என்றுக் கேட்டிருந்தாள்.
"முடியாது வேணி உன் பசங்கள நீதான் பாத்துக்கனும், தாய் போல ஒரு குழந்தைக்கு அன்பு காட்டி வளர்க்க இந்த உலகத்தில் யாராலும் முடியாது வேணி. நீ வாழ்ந்து காட்டு வேணி உன்னால முடியும். அப்பாகிட்ட எல்லாம் சொல்லி இதுக்கு ஒரு முடிவு எடுடி" திடமான வார்த்தைகளாய் அவள் உதிர்த்த சொற்கள் வேணியின் மனதை அம்புக் கொண்டு குத்தியதாய் வலித்தது. நிதர்சனம் முகத்தில் அறைந்தது. அமைதியாக இருந்தாள்.
'பாரு இவளெல்லாம் உனக்கு ப்ரெண்டா? இவளது நட்பை இப்பவே துண்டித்துக் கொள்' இதயச்சுவர்களில் பட்டு எதிரொலித்த மியாவின் குரல் நட்பின் முன் அமுங்கி போனது.
"டி வேணி பேசுட்டி. ஜோனீ நீ இல்லாமல் ஒரு நிமிஷம் இருப்பானா? ஜோவீக்கு நீதானே எல்லாம். இப்படி சிந்திக்கறத விட்டுடு. பிரச்சினையிலிருந்து வெளிவர பாரு. வேலைக்கு போனால் கொஞ்சம் நிலைமை மாறும்டி. பேசிடி வேணி... டி வேணி.."
"ம்ம்ம்..."
"அம்மாகிட்டயாது சொன்னீயா?"
"சொல்லி மட்டும் என்ன ஆக போகுது மதி? சொன்னேனே எதுவும் நடக்கலயே" மீண்டும் கேவினாள்.
"என்னட்டி சொல்ற?"
"ஆமா மதி, நடந்ததுமே சொல்லிட்டேன். ஆனால் பாரேன் இந்த சமூதாயம் என்ன நடந்தாலும் பெண்ணை தான் தப்பு சொல்லும். என் பெத்தவங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை போல. ஒரு பொண்ணு சரியாவே இருந்து ஆண் தப்பு செஞ்சாலும் அதுக்கு காரணம் அந்த பொண்ணுனு தான் சொல்லும். அந்த பொண்ணு தப்பு பண்ணாலும் அதுக்கும் காரணம் அந்த பொண்ணுனு தான் சொல்லும்"
"உண்மை தான் வேணி. நீ மனச தளரவிடாத. நல்லா மூச்சை இழுத்து விடு. நீங்க காதலிச்ச நாட்களில், கல்யாணம் ஆனதுக்கு அப்புறமான நாட்களில் எல்லாம் எவ்வளவு அன்யோன்யமா இருந்தீங்கனு நினைச்சி பாரு. அதுவே உனக்கு மனசுக்கு அமைதிய தரும்."
"ம்ம்ம்" என்றவள் விழிகளை மூடி தன் காதல் வாழ்க்கையை விழி வழி நினைவகத்தின் வாயிலாக பயணம் செய்தாள்.
தமிழின் ஐந்திணைகளில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் ஒருங்கிணைந்த மாவட்டமான, இயற்கை பேரழகுக்குப் பெயர் போன கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அஞ்சுகிராமத்தின் பிரதான திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், மலர்ச்சரங்களாலும் அலங்கரிப்பட்டு அந்த இரவை பேரழகுடன் ஜொலிக்க வைத்திருந்தது. மண்டபத்தின் வாசலில் மணமக்களின் புகைப்படங்களோடு கூடிய ப்ளக்ஸ் போர்டு அன்புடன் வரவேற்றன.
திருமணம் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கா பஞ்சம்? பாடல்கள் இசைக்கப்பட அதற்கேற்ப நடன அசைவுகளை மணமக்களின் தோழமைகள் உற்சாகத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஒன்னு சேரும் வரம் கேப்பேன் நான்
ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோடு அடகாப்பேன் நான்
நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன பாப்பேன் நான்
கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
அந்த வானம் வற்றும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்ன காதல் செஞ்சிடுவே தன்னால
கண்ணில் காட்சி உள்ள வர
கண்ணை மூடி செல்லும் வரை
உன்ன காத்து வச்சிருப்ப அன்பால
ஆத்தாடி தலகாலு புரியாம
பாா்த்தேனே உன நானும் தயங்காம
காத்தோட காத்தாக
கைகோர்த்து நடப்பேனே விலகாம
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
'ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி' என்ற வரிகள் இசைக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. பேதமின்றி இருபாலரும் ஆடிக்கொண்டிருக்க, நெடுநெடு உயர இளைஞன் ஒருவன் ஆடிக்கொண்டிருந்த பெண்ணொருத்தியைக் கைப்பற்றி சுற்றி விட்டு தன்பக்கம் இழுத்து தோளில் கைப்போட்டு ஆட சற்றே அதிர்ந்து போனாளவள். சுற்றி வந்ததில் அவளின் கூந்தலில் ஒருசில கற்றைகள் நெடுநெடு ஆட்டநாயகனின் முகத்தில் படர்ந்திருக்க 'என்ன இது?' என்று அவன் திரும்பி பார்க்க, பெண்ணவளின் அதிர்ந்த முகமும், உடனே அதை மறைத்து விழிகளை உருட்டி முறைப்புடன் காட்சியளித்த அழகுப் பெண்ணவளை தான்.
உடனே கைகளை விலக்கியவன் "ஹேய்.. ஹேய்.. கூல் சாரி சாரி" என்றவன் அங்கு இங்கு திரும்பி யாரையோ தேட,
இரு கைகளிலும் பஞ்சுமிட்டாய் குச்சியுடன் வந்துக்கொண்டிருந்தவனை கைநீட்டி காண்பித்து "ஏங்க அவன் கூட தான் நின்னு ஆடிகிட்டு இருந்தேன். அவன் எப்ப அங்க போனானே தெரில சாரி" என்க சிறு தலையசைப்புடன் நகர்ந்தாள்.
"டேய் மச்சான்.. உனக்கு பஞ்சுமிட்டாய் வேணுமாடா?" என்று வந்தவனை
"அடேய் பஞ்சத்தில் அடிப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு அலைஞ்ச பஞ்ச பரதேசி உன்னால அந்த பொண்ணு கிட்டே நான் செருப்படி வாங்கி இருப்பேன்டா" என்று நடந்ததை சொல்ல விழுந்து விழுந்து சிரித்தவன்
"அப்படியே பேசி உஷார் பண்ணுடா இந்தா இந்த பஞ்சுமிட்டாய கொடுத்து அப்படியே பேச்சு கொடு" என்று அவன் கைகளில் திணித்தான் ஒரு பஞ்சு மிட்டாயை.
"எனக்கு செருப்படி வாங்கிக் கொடுக்காம ஓயமாட்ட நீ?" என்றவாறு அவனை துரத்த, அவனைப் பிடிக்கும் சமயத்தில் நண்பனவன் நகர்ந்து விட அவன் கட்டி அணைத்திருந்தான் பெண்ணவளை மீண்டும். அவளோ உக்கிரமாக முறைக்க,
"ஐயயோ... ஏங்க இருங்க இருங்க, இவனை பிடிக்க தான் வந்தேன்" என்று பதற அவனின் பதற்ற முகத்தைப் பார்த்தவள் புன்னகைத்திருந்தாள். சிறு தலையசைப்புடன் அவன் நகரவும் " டி யாரு இவன்? ஆள் பாக்க நல்லா வாட்டசாட்டமா இருக்காப்ள. அப்ப என்னடானா கையை வளைச்சி ஆடி தோள்ல கைப்போடுறான், இப்ப உரிமையா வந்து கட்டி பிடிக்கிறான். என்னடி நடக்குது? " தோழியொருவள் வினவப
"அடியேய் அவேன் யாருனே எனக்கு தெரியாது ஆனால் நல்ல அழகா.. ஹைட்டா.. ஸ்மார்ட்டா இருக்கான்லா?" இளவேனில்
"ஆமாடி முத்தம் கொடுக்கனும்னா கூட ஸ்டூல் போட்டு தான் நீ கொடுக்கனும்" என்று ஒருவள் குறும்பாக மொழிய கொல்லென்று தோழியர் கூட்டம் சிரித்தனர்.
"அதலாம் என் கவலைடி நான் பாத்துகிறேன். எனக்கு அவென் யார் என்னனு தெரியனும். என்ன பண்ணலாம்?" என்றிருந்தாள் பெண்ணவள்.
"டி இளவேனி நிஜமாவே கவுந்திட்டியாடி?" என்று மற்றொருவள் கேட்க,
"ஏம்ட்டி இப்படி பேசுதீய? நல்லா இருக்கவளையும் கெடுத்துருவாள்வ. இங்க பாரு வேணி பெத்தவிய இருக்கும் போது இதலாம் நமக்கு தேவையே இல்லாத ஆணி. நாம வந்தது நான்சியோட மேரேஜ்க்கு. அவளை ப்ளெஸ் பண்ணமா, சாப்பிட்டமா, என்ஜாய் பண்ணோமானு கிளம்பி போயிரனும். நீ வா நான்சிய பாக்க போவோம்" என்று நன்மதி அவளின் கைப்பற்றி இழுத்துக் கொண்டு மணமகள் அறையை நோக்கி சென்றாள்.
நன்மதி எப்பொழுதும் அப்படி தான். பெற்றோருக்கு தெரியாதா தன் குழந்தைக்கு எது தேவை ? எந்த நேரத்தில் தேவை? என்று சொல்வாள். இளவேனிக்கோ இளமை துறுதுறுப்பு. இருப்பது ஒரு வாழ்க்கை. அதை இன்பமாக கழிப்போம் என்று கொஞ்சம் அட்டகாசம் செய்பவள். அதற்கென்று ஒழுக்கம் மீறும் செயலிலும் ஈடுபடமாட்டாள்.
மணமகள் நான்சியோடு விதவிதமான 'போஸ்'களில் தற்படங்களை எடுத்து தள்ளியவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பமானதும் நண்பர் குலாமோடு இருக்கைகளில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.
சபை ஊழியர் வந்து ஜெபம் செய்து ஆரம்பித்த நிகழ்ச்சி, மணமக்களின் வாழ்க்கை முழுவதுக்குமான உறுதி மொழிகளையும் மொழிந்து மணமக்களை வாழ்த்தியிருந்தார்.
சாப்பாடு நேரம் நெருங்கவே ஒவ்வொருவராக சாப்பிட செல்ல, இளவேனியும் தோழியர் கூட்டமும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.
"டி இது என்ன சாதம் இவ்வளவு குண்டு குண்டா இருக்கு?" என்று ஒருத்தி கேட்க
"ஆமாடி இது வீட்டு அரிசி. அவங்க நிலத்தில் உழுத அரிசியை பொண்ணு கல்யாணம் அப்ப சாப்பாடு செஞ்சு போடுறது அவங்க வழக்கம். இன்னும் வெரைட்டி வரும் பாரு. சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, மல்லிழை போட்ட மோரு, அவியல் ஆஹாஹா அதோட டேஸ்ட்க்கு நானெல்லாம் அடிமைடி"
என்று திரும்ப அவள் பேசியதை இதழ் விரியா புன்னகையுடன் கேட்டிருந்த அந்த இளைஞன் கையில் இருந்த வாளியில் அவியல் இருந்தது. அவளுக்கு மட்டும் இரண்டு கரண்டி எக்ஸ்ட்ரா எடுத்து வைத்தவன் நகர்ந்து செல்ல "இவன் வேற குறுக்கால வந்துட்டு" என்று சலித்தவள்,
"கடைசியில் அடைபாயாசம் வைப்பாங்க பாரு அதுல அப்பளத்தை உடைச்சி போட்டு உச்சு கொட்டி சாப்பிடுவேன்டி" ரசித்து சொன்னாள் இளவேனில்.
"வாழைபழத்தை விட்டுட்டிங்களே?" பந்தியில் பரிமாறிக்கொண்டே வந்தவன் சொல்ல "ஈஈஈஈஈ" என்றவள் 'போ' என்று சைகை செய்தாள்.
"ம்ம்ம் இதலாம் உங்கூரூ பேரு என்ன அது? ஆங்.. சென்னை தானே ஆங்.. அங்கு போடற பிரியாணிக்கு ஈடாகுமா? நெவர்..." விழிகளை மூடி சிலாகித்து சொன்னவளை டமாரென்று நிகழ்வுக்கு கொண்டு வந்தன அவனின் வார்த்தைகள்.
"ஏங்க என்ன இப்படி சொல்லிடீங்க? இந்த வெஜ் சாப்பாட விட பிரியாணி எவ்வளவு அற்புதமா இருக்கும் தெரியுமா? சாப்பிட சாப்பிட சலிக்கவே சலிக்காதுங்க" என்று உரைக்க, உஷ்ணமான இளவேனில்
"ஹலோ உங்களுக்கு என்ன பிரச்சினை? என்ன வேணும்?" என்று சத்தம் போட
"டேய் இளா"
"டேய் மச்சான்" என்று அவனுக்கு ஆதரவாக வந்து நின்றவர்கள் "ஆங் எல்லாம் போ போ போ " என்று சொல்லி அழைத்து சென்றனர்.
உணவு அருந்தி விட்டு வந்த நண்பர்கள் பட்டாளம் மணமக்கள் 'ஆப்ரஹாம் நான்சி கிரேஸ்' இருவரையும் வாழ்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு அவரவர் அறைகளுக்குச் சென்றிருந்தனர்.
முகை உதிரும்...
Author: ரோசி கஜன்
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.