• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
மழை - 11


திறக்கப்பட்ட விழிகளில் எந்த ஒரு உணர்வும் பிரதிபலித்திருக்கவில்லை. அன்பு, காதல் என எதுவுமே அற்று வெறுமையாய் இருந்தது, அவனின் மனதைப் போலவே.


*****


காலில் சரியாக அமராத செருப்பை இழுத்துக்கொண்டு நடந்துச் சென்று தன்மகள் உமாவின் வீட்டை அடைந்திருந்தார் காமாட்சி.


இந்நேரத்தில் தன் தாயை சற்றும் எதிர்பாராத உமா அவசரமாக தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி, "என்னம்மா, என்ன இந்த நேரத்துல?".


தன் மகளின் முகத்தைப் பார்த்தவர் அப்படியே அவரைத் தாண்டி அறைக்குள் எட்டிப் பார்த்தார்.


அவரின் மருமகன் சேகர் மது போதையில் ஏதேதோ பிதற்றியபடி குப்புறப்படுத்துக் கிடந்தார்.


இந்திரா இதழில் நிலைத்த மென் வெட்க புன்னகையோடு செல்பேசியில் எதையோ அழுத்திக் கொண்டிருந்தாள்.


"இந்தாங்க அம்மாச்சி" என்று அவரின் முகத்தருகே தண்ணீர் குவலையை நீட்டி இருந்தாள் ரதி.


"என்னவாம்?" என்றவாறு தன் மருமகனை நோக்கி கண்ணைக் காண்பித்தார் காமாட்சி.


"அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இவ்வளவு நேரம் ஒரே சண்டை அம்மாச்சி".


"எதுக்கு?" என்றார் மூக்கு விடைக்க.


"அது வந்து, அம்மாவோட வலையலை அடமானம் வைக்க கேட்டு அப்பா ஒரே சண்டை".


"ஏன், இருந்த அம்புட்டையும் ஒன்னு ஒன்னா வித்து அழிச்சது போதாதாமா. இப்போ கையிலயும், காதுலயும் ஒட்டிக்கிட்டு கெடக்கிறதையும் மொத்தத்தமா தொடச்சு எடுத்துடணுமோ" என்று சுருக்கென்று கேட்டார்


ரதிக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை அமைதியாக சென்றுவிட்டாள்.


"அதை விடுமா, என் தலையெழுத்து இதான்னு ஆகிப்போச்சு. இனி இந்த மனுஷன திட்டினாலும் ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் கிடையாது. அந்த ஆளு அப்படித்தான்னு தெரியுமே விடு".


"ஆமா, உம்புருசன ஒன்னு சொல்லிட கூடாது. உடனே உனக்கு பொத்துக்கிட்டு வந்துடும். அந்தாளு எல்லாத்தயும் அழிச்சிட்டு உட்கார்ந்திருக்காரு. இப்போ உன் கையில காதுல கெடக்கிறது எல்லாம் நான் எம்மவனுக்கு தெரியாம கஷ்டப்பட்டு சேர்த்தி வச்சு உனக்கு செஞ்சு போட்டிருக்கேன். இதையும் அழிச்சா கோபம் வராதா பின்ன. கட்டுனா இவனத்தேன் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்ன, உன் அண்ணன்காரனுக்கு நீ இந்தாள காதலிச்சது தெரியாம நாங்களா பார்த்து கட்டிக் கொடுக்கிற மாதிரி கட்டி கொடுத்தேன். இப்போ எங்க வந்து நிக்குதுன்னு பாரு".


"இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு மட்டும் என்னமா தெரியும். ஆரம்பத்துல கொஞ்சம் கொஞ்சமா குடிச்சுக்கிட்டு கிடந்தாரு. காரணம் கேட்டா, ஊருல இருக்கவனுங்க எல்லாம் உம்மாமனாருக்கு ரெண்டு பொண்டாட்டினு கேக்குறான். எனக்கு ஒரே அவமானமா இருக்குன்னு சொன்னாரு. என்னாலயும் வாயைத் திறந்து பேச முடியல. அப்படி கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சது இப்போ இங்க வந்து நிக்குது" என்று சொல்லும் பொழுதே அவருக்கு விம்மியது.


"வாய மூடுடி! இன்னும் எத்தன காலந்தேன் இதே நொண்டி சாக்க சொல்லுவாறு உம்மடபுருசன். எம்புருசன் ரெண்டு பொண்டாட்டி வெச்சிருந்தா பொண்டாட்டிக்காரி நானே திடமாத்தேன இருக்கேன். நான் என்ன தண்ணி அடிச்சுக்கிட்டா சுத்துதேன். இந்த மனுசனுக்கு என்ன வந்துச்சா? தண்ணி அடிக்க தேவ ஒரு சாக்கு, அதுக்கு காரணத்த தூக்கி நம்ம தலையில போடுறாரு பாரு" என்று கடுகடுத்தவர்.


"இத விட்டு தள்ளு, ஒரு முக்கியமான சோலியப் பத்தி பேசத்தேன் நான் இங்கன வந்தேன்".


"என்னம்மா?".


அவரிடம் வீட்டில் நடந்த மொத்த கதையையும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக ஒப்பித்தார் பாட்டி.


"என்னம்மா சொல்ற, அண்ணனா இப்படி செஞ்சது?".


"ஆமாட்டி. அதேன் எனக்கு மனசு ஆற மாட்டேங்குது கெடந்து அடிச்சிக்கிது. அசிங்கத்த கொண்டு வந்து சபையில உக்காத்தி வெக்க பாக்குதான் உம்மட அண்ணங்காரன்.


"என்ன இருந்தாலும், அதுவும் ஒரு வகையில தங்கச்சி மக தானே. அதான் பாசம் பொத்துக்கிட்டு வருது போல. கூட பிறந்தவளுக்கு ஒரு வழி செய்ய முடியல, அந்த குடும்பத்துக்குனா மட்டும் முன்னாடி போய் நிக்கிறாங்க" என்று தன் பங்கிற்கு முகத்தை முழு நீளத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டார் உமா.


"என்னால முடிஞ்ச மட்டும் நான் பேசி பார்த்துட்டேன். என்னத்த பேசுனாலும் ஏதாவது பதில் சொல்லி என் வாயை அடைச்சுடுதான். அதான் இப்ப நான் ஒரு முடிவோட இங்க கிளம்பி வந்திருக்கேன். நீ உடனே கிளம்பி வா, நாம போய் பொற்செல்வனுக்கு இந்திராவ பேசி முடிச்சுட்டு வந்துருவோம்" என்று அவர் கூறியது தான் தாமதம்.


இத்தனை நேரமும் செல்பேசியில் மூழ்கிக் கிடந்தவள் வெடுக்கென்று தன் தலையை நிமிர்த்திப் பார்த்திருந்தாள் இந்திரா.


அவளின் விழிகளே அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.


"அம்மா அந்த மனுஷன் இந்த நிலைமையில இருக்கும்போது.." என்று இழுத்த உமாவை முறைத்துப் பார்த்தவர்.


"அவர யாருடி கூப்பிட்டு வரச் சொன்னது? சுத்த கூறுகெட்டவளா இருக்க. அவர கூப்பிட்டு போனாலே உன் அண்ணங்காரன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட மாட்டான். எப்பிடியாவது என் ரெண்டு பேத்திகளையும் ரெண்டு மகனுங்க வீட்ல வாழ வச்சிடனும். அது மட்டும் செஞ்சிட்டா போதும் உம்புருசன் இருக்க நிலைமைக்கு ஒழுங்கா ஒரு மாப்பிள்ளைய பார்த்து கட்டி கொடுக்க அவரால முடியுமா?".


"அவர் இல்லாம எப்படி மா?" என்று மீண்டும் அவர் தயக்கத்தோடு கூறவும்.


"ஆமா, பொல்லாத புருசன். நீதான் மெச்சுக்கணும் உம்புருசனோட லட்சணத்தை.. ஏற்கனவே, உன் அண்ணனுக்கு இவரப் பிடிக்காது. இப்போ இந்த நிலைமையில இவர கூப்பிட்டு போக சொல்றியா.. உன் புருஷசன பத்தி யோசிச்சதெல்லாம் போதும். இனியாவது உன் பொண்ணுங்கள பத்தி கொஞ்சம் யோசி. அவங்களுடைய வாழ்க்கைய பாரு. என் கூட கிளம்பி வா நாம போய் பேசி முடிச்சுட்டு வந்துருவோம்" என்றவாறு திரும்பியவரின் விழிகளில் வந்து விழுந்தாள் இந்திரா.


அவளின் அதிர்ந்த பார்வையைக் கண்டு கொண்டவர், "என்னட்டி நீ எதுக்கு இப்போ இப்படி முழிக்கிறவ. என்ன வேற ஏதாவது சோலிய பார்த்து விட்டுட்டியா?" என்றார் அதட்டலாக.


"இல்ல அம்மாச்சி" என்றாள் மெலிந்த குரலில்.


"உன் அப்பன்தேன் இப்படி இருக்கான் நீயாவது கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்க வேண்டாமா.. உன் அப்பன் புத்தி தப்பாம வந்திருக்கு உனக்கு. படிக்கும்போது ஒருத்தவன் கூட காதல்னு சுத்துன, அது தெரிஞ்சதும் கண்டிச்சு வச்சோம். அதுக்கப்புறமாவது சும்மா இருந்தியா, காலேஜ்ல சேர்த்துவிட்டதுமே இன்னொரு காதல். திரும்ப மிரட்டி கிரட்டி சரிகட்டி வச்சிருக்கோம். இந்த விசயம் எல்லாம் உம்மாமங்கரனுக்கு தெரிஞ்சா என்ன ஆகிறதுனு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியாடி. உன்ன எப்படியாவது அந்த குடும்பத்துக்கு மருமகளாக்கணும்னு நான் கனா கண்டுகிட்டு கெடக்கேன். நீ என்னடான்னா இப்படி சுத்திக்கிட்டு திரியிறவ. இதெல்லாம் தெரிஞ்சா அவன் உன்ன எப்படி அவங்க வீட்டு மருமகளா ஏத்துப்பியான். உம்மாம மகன் நல்லா படிச்சு முடிச்சுட்டு சொந்தமா மில் வச்சு நடத்துறான். பார்க்கவும் வாட்டசாட்டமா ராஜா கணக்கா இருக்கியான். கை நிறைய சம்பாதிக்கியான். அறிவு நிறைஞ்சு கெடக்கு. இப்படி ஒருத்தன் உனக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது, காதல் கீதல்னு எதையும் இழுத்துக்கிட்டு வந்துடாத".


அவருக்கு அவள் நாளா புறமும் தன் தலையை ஆட்டி வைக்கவும். தன் மகளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் தன் மகனின் வீடு நோக்கி.


"ஏன் டி ரதி, நம்ம அம்மாச்சி செல்வா மாமாவ பத்தி ரொம்ப பில்டப் கொடுக்குது".


"பில்டப்லாம் இல்லக்கா. அம்மாச்சி சொல்றது எல்லாம் உண்மை தான. நம்ம மாமா மாதிரி ஒரு புருஷன் உனக்கு அமையுறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அவர்கிட்ட குறைன்னு உன்னால ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா.. அழகு, அறிவு, படிப்பு, வசதி, வேலைன்னு எல்லாமே அவர்கிட்ட இருக்கு. நம்ம பெரிய மாமா போலவே ரொம்ப கம்பீரமானவர். நேர்மையா நடந்துப்பாரு. நானே பல தடவ மாமாவோட பேச்ச கேட்டு அசந்துப் போய் இருக்கேன். அம்மாச்சி சொல்ற மாதிரி நீ மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா அமையும்கா. தேவையில்லாத வேலை எதுவும் பார்க்காத" என்றாள் அவளின் கையில் வீற்றிருக்கும் செல்பேசியில் தன் பார்வையைப் பதித்து விளக்கியவாறு.


அவளின் பார்வைப் போகும் திசையை உணர்ந்த இந்திரா கோபத்தோடு, "அதெல்லாம் எனக்கு தெரியும். நீ உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு" என்று சூடாக கூறிவிட்டு வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அன்றே தன் மகளை அழைத்துச் சென்று இந்திராவிற்கும் பொற்செல்வனுக்கும் தான் திருமணம் என்னும் அளவிற்கு பேசி வைத்து விட்டார் காமாட்சி.


திருமணத்தையும் உடனே நடத்தி முடிக்க வேண்டும் என்று அவர் அடம் பிடிக்க.


"முடியாதுமா, படிக்கிற பொண்ணுக்கு படிப்ப நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்களா.. அவ படிப்பு முடிஞ்சதும் தான் கல்யாணம்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் தேவராஜ்.


"சரி, ஆனா அவளோட பேத்திக்கு கல்யாணம் நடக்கிறதுக்கு முன்ன என் பேரனுக்கும், பேத்திக்கும் நிச்சயம் நடந்தாகணும்".


தன் தாயை மாற்ற முடியாது என்று எண்ணிய தேவராஜ் 'சரி' என்று ஒப்புக் கொண்டார்.


தன் தங்கையின் குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்ததால் தங்கை மகள்களின் வாழ்க்கை வீணாக போய்விடக் கூடாதே என்ற எண்ணத்தோடு இந்திராவையே தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.


இவர்கள் மட்டும் முடிவு செய்துவிட்டால் போதுமா.. காலமும், நேரமும் யாரை யாருடன் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறதோ அவர்களை தானே ஒன்று சேர்க்கும்.


இருவரின் மனமும் நிர்மலமான நீரோடையாய் இருக்க…

பாதைகள் மட்டும் இரு வேறு திசைகளில் நீள்கின்றன.

ஆனால்…

விதி எழுதும் எழுத்தில் விலகல் என்பது ஒரு இடைவெளி மட்டுமே,

முடிவு அல்ல.


எந்த ஓர் கணத்தில்,

எந்த ஓர் திருப்பத்தில்

இரு பாதைகளும் ஒன்றாகுமோ…

அன்று புரியும்,

பிரிவும் கூட சேர்க்கைக்கான பயணம் தான் என்று.
 
Last edited:
Top Bottom