• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 19

Vishakini

Moderator
Staff member
மழை - 19

அவர்கள் அடித்து விடவும், அனைவரின் முன்பும் அசோக்கிற்கு அவமானமாகிவிட்டது.

கடைசி ஆயுதமாக இந்த திருமணத்தை நிறுத்த அவன் கொண்டு வந்ததை உபயோகிக்க நேரம் வந்துவிட்டது என்று எண்ணியவன். அனைவரின் முன்னிலையிலும் ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டியிருந்தான்.

அதில், செந்நிலாவின் கையை பொற்செல்வன் பற்றிக் கொண்டு நின்றிருந்தான்.

அதைப் பார்த்த அனைவரின் விழிகளுமே பெரிதாக விரிந்துக் கொண்டது.

"இங்க பாருங்கம்மா, உங்க மகனுக்கு பொண்ணுக்கு பாத்திருக்கீங்களே அவ இவனுடைய காதலி. இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறாங்க. அப்படி இப்படி எல்லாம் கூட இருந்திருக்காங்க. நானே என் கண்ணால பார்த்திருக்கேன். அப்போ எடுத்த போட்டோ தான் இது. இதுக்கும் மீறி உங்க பையனுக்கு இந்த பொண்ண தான் கட்டுவேன்னு நீங்க ஆசைப்பட்டா தாராளமா கட்டிக்கோங்க" என்று கூறிவிட்டு செந்நிலாவைப் பார்த்து வன்மமாக புன்னகைத்தான்.

அவளுக்கோ கொஞ்சமும் வருத்தமோ, அழுகையோ வரவில்லை. அசோக்கின் மேல் கொலை வெறியே வந்தது. முகம் ரத்தமாக கோபத்தில் சிவந்து விட. அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அந்த புகைப்படத்தைப் பார்த்த வள்ளி, "என்னங்க இது?" என்று அதிர்ந்து தன் வாயில் கையை வைத்தார்.

"அப்பா அன்னைக்கு கோவில்ல பொங்கல் வைக்க போகும்போது கால் தடுக்கி விழப்பார்த்தா, அப்ப நான் காப்பாத்துனேன். அதை தான் இவன் இப்படி போட்டோ எடுத்து வச்சிருக்கான்" என்று தன் பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்தை உள்ளடக்கிய குரலில் உரைத்தான்.

"இங்க பாருங்கம்மா, இந்த ரெண்டு பசங்களுமே எந்த தப்பும் செய்யாதவங்க. அந்த பையனுக்கு அவனுக்கு கட்டிக் கொடுக்காத கோபம், அதனால இவங்க ரெண்டு பேரு மேலயும் அபாண்டமா பழி சொல்றான். இதையெல்லாம் நீங்க நம்பாதீங்க. அந்த பொண்ணு ரொம்ப ஒழுக்கமான பொண்ணு" என்றார் காமராஜ்.

"ஆஹா! அதான் ஒழுக்கம் போட்டோல பல்ல காட்டுதே, அப்பவே இந்த சம்பந்தம் வேண்டாம்னு தலபாடா அடிச்சுக்கிட்டேன். என் புருஷன் தான் தேவராஜ் அய்யா சொல்லிட்டாருன்னு இந்த பொண்ண கட்டணும்னு ஒத்தக் காலுல நின்னாரு. அதுக்கும் மேல இந்த மடையனுக்கு அவள புடிச்சு போச்சு. அவங்க ரெண்டு பேருக்காக தான் நானும் ஒத்துக்கிட்டேன். கடைசில பாத்தா கதை இப்படி போகுதா.. இப்பதான் தெரியுது, உறவே வேணாம்னு இருந்த தேவராஜ் ஐயா ஏன் அந்த பொண்ணுடைய கல்யாணத்த எடுத்து செய்யுறாருன்னு. அவர் வீட்டுக்கு எங்க அந்த பொண்ணு மருமகளா வந்துட போகுதோன்னு அவங்க காதல் விவகாரம் தெரிஞ்சதும் எங்க தலையில கட்டி வைக்க பாக்குறீங்களா. அதான் உங்க பையனுடைய நிச்சயமும் நேத்து நின்னு போயிடுச்சா" என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் அபாண்டமாக பேசிவிட்டார்.

"என்னமா பேசுறீங்க நீங்க? அதான் இது எல்லாமே கட்டுக்கதைனு இவ்வளவு தூரம் சொல்றாங்கல்ல. கொஞ்சம் கூட நம்பாம உங்க வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க" என்றார் கீதா.

"சும்மா நிறுத்துங்கம்மா. ரெண்டாம் தாரத்துக்கு பொறந்த பேத்தியா இருந்தாலும் பரவாயில்லன்னு கட்டிக்க சம்மதிச்சு வந்தா, உள்ள இவ்வளவு கதை நடந்திருக்கா. நேத்து உங்க வீட்டு பையனுடைய நிச்சயம் நின்னிருக்கு. இன்னைக்கு இப்படி ஒரு போட்டோ வெளியில வந்திருக்கு. ஆனா, ரெண்டு பேரும் எந்த தப்பும் பண்ணல. இதை எங்களையெல்லாம் நம்ப சொல்றீங்களா.. டேய் முதல்ல எழுந்திருடா. இப்படி ஒரு சம்பந்தமே நமக்கு தேவையில்ல" என்று தன் மகனை அழைத்துக் கொண்டு உடனே மண்டபத்திலிருந்து வெளியேறிவிட்டார் மணமகனின் தாயார்‌.

அவரின் வார்த்தையில் செங்கேணி தலைகுனிந்து நின்றிருக்க. யாராலும் எதுவும் செய்ய முடியாமல் நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது.

இவ்வளவு பேசிய பிறகு யாருக்கும் அவரை சமாதானம் செய்து இந்த திருமணத்தை நடத்தி வைக்க விருப்பமில்லை.

மணக்கோலத்தில் நின்றிருந்த செந்நிலாவின் கண்களில் இருந்து கொஞ்சமும் கண்ணீர் எட்டிப் பார்க்கவில்லை. அதற்கு மாறாய் அவளின் முகத்தில் அத்தனை கோபமும், ஆதங்கமும் தான் வெளிப்பட்டது.

தேவராஜ் தலைமையில் முன்னிருந்து ஏற்பாடு செய்த திருமணம் என்பதால், இந்த திருமணம் நின்றதில் அவருக்கும் தலைகுனிவு ஏற்பட்டது.

மேலும், செங்கேணிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி வருத்தமாகிப்போக.

"வள்ளி இந்த பொண்ணு உனக்கு மருமகளா வந்தா உனக்கு சம்மதமா?" என்றார் தன் மனைவியைப் பார்த்து.

தன் மகனுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா என்று கூட அவர் வினவவில்லை. முதலில் தன் மனைவியைத் தான் கேட்டார். அவரும் வேறு வழி இன்றி சம்மதமாக தலையசைத்ததும்.

"செல்வா உனக்கு சம்மதம்னா மணவறையில போய் உட்காரு".

பொற்செல்வன் கொஞ்சமும் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. தன் தந்தையின் சொல்லுக்கு அடுத்த நொடி மணவறையில் அமர்ந்துவிட்டான். அவன் மனதில் கொஞ்சமும் எந்த ஒரு சஞ்சலமோ, தடுமாற்றமோ இருப்பது போல் தெரியவில்லை. ஒருவித தெளிவோடு தான் காணப்பட்டான்.

நொடியில் அரங்கேறிய சம்பவத்தில் செய்வதறியாது திகைத்து விழித்தது என்னவோ செந்நிலாவும், செங்கேணியும் தான்.

அவர்களின் அதிர்ச்சியை உணர்ந்த காமராஜ், "போய் மணவறையில உட்காருமா" என்றார் செந்நிலாவைப் பார்த்து.

இத்தனைப் பேரின் முன்னிலையில் முடியாது என்று மறுக்க முடியாத நிலையில் நின்றிருந்தாள் செந்நிலா.

பொற்செல்வன் வேறு மணவறையில் அமர்ந்துவிட்டான். இப்பொழுது தான் அமரவில்லை என்றால் அது அவனுக்கும் மரியாதைக் குறைவாக தானே இருக்கும். எத்தனை இடத்தில் தனக்காக உதவிகளை செய்திருக்கிறான். அவனை பதிலுக்கு அசிங்கப்படுத்த அவளால் முடியுமா என்ன..

ஆனால், இந்த குடும்பத்திற்கு மருமகளாகப் போகவும் அவளின் மனம் முரண்டு பிடித்தது. காதுக்குள் காமாட்சியின் சொற்கள் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

செந்நிலாவை நெருங்கிய செங்கேணி, "என்ன கண்ணு யோசிக்கிற, வேண்டாம்னுட்டு சொல்லிடாதத்தா. மணமேட வரைக்கும் வந்து கண்ணாலம் நின்னா திரும்ப மாப்பிள்ளை அமையுறது அத்தன சுலுவில்ல கண்ணு. என்னால உன் வாழ்க்கை நாசமா போயிடக்கூடாது. தயவு செஞ்சு, இந்த கிழவிக்காக இந்த கண்ணாலத்த கட்டிக்கோ கண்ணு" என்றார் கண்களில் கண்ணீரோடு.

அவளின் மூளை மொத்தமாக தன் சிந்தனைத் திறனையே இழந்துவிட்டிருந்தது. அனைவரின் சொல்பேச்சையும் கேட்டு அப்படியே செய்யும் கைப்பாவை போல் ஆகிவிட்டாள்.

"அக்கா நல்ல பொண்ணு தான். ஆனாலும், நல்லா யோசிச்சுட்டிங்களா" என்று வள்ளியின் காதுக்குள் கிசுகிசுத்தார் கீதா.

"நேத்துதான் அவங்க இந்த பொண்ண பத்தி சொன்னாங்க கீதா. ரொம்ப ஒழுக்கமான பொண்ணாம். இந்திரா மாதிரி ஒரு பொண்ண பார்த்த பிறகு, இந்த பொண்ணு எவ்வளவோ மேல்னு தான் தோணுது".

"அப்படி சொல்லுங்க, அதுவும் வாஸ்தவம் தான். நம்ம மாமனார் செஞ்ச காரியத்துக்கு பாவம் இவங்க என்ன செய்வாங்கன்னு நானும் சில முறை யோசிச்சிருக்கேன். சரி வாங்க" என்று வள்ளியை அழைத்துக் கொண்டு மணவறை ஏறியவர்.

அங்கே அதிர்ந்து நின்ற செந்நிலாவின் தோள்களைப் பற்றி மணவறையில் அமரச்செய்தார்.

அவளுக்கு நடக்கும் எதையுமே உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை‌. எதுவுமே அவளின் மூளையில் பதியவில்லை.

ஏதோ, பதுமைப் போல் அவர்கள் சொல்வதை செய்தாளே ஒழிய, அவளுக்குள் ஏதோ ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருந்தது.

அது நிச்சயம் பொற்செல்வனை மணந்துக் கொள்வதால் கிடையாது. ஆனால், தேவராஜின் குடும்பத்திற்கு மருமகளாக செல்வதால் தான் இருக்கும்.

கெட்டி மேளம் முழங்க அனைவரின் சாட்சியாகவும் அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் பொற்செல்வன்.

அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்த நொடி இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டன.

அவளின் கண்களில் அன்று அவன் கண்ட அதே பரிதவிப்பு, கலக்கம் என அனைத்தும் கலந்த குவியலை அவளின் கண்கள் இன்றுமே பிரதிபலித்தது.

அன்று அவளுக்கு உதவி புரிந்து துணையாய் நின்றவன். இன்றும், இனி வாழ்க்கை முழுவதும் அவளுக்கு துணையாய் இருக்க முடிவு செய்துவிட்டான்.

அவளின் விழிகளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவளின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து முடித்தான்.

அவள் கண்கள் காட்டும் உணர்வுகளை அவனால் படிக்க முடிந்தது போல், அவனின் கண்கள் காட்டும் உணர்வுகளை பாவம் பேதையின் மனதால் பிரித்தறிய முடியவில்லை.

இருவரின் முகமுமே எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு இருவரும் தயாராக இருக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை. ஆனால், திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்டனர்.

ஆனால், ஒருவர் மேல் மற்றொருவருக்கு நிறையவே நம்பிக்கையும், மதிப்பும், மரியாதையும் இருந்தது.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை, ஆசையும் இல்லை, கனவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை..

இருவரும் கணவன் மனைவி என்னும் பந்தத்திற்குள் நுழைந்துவிட்டனர்.

"இந்த பொண்ணுக்கு மாமா தலைமையில கல்யாணம்னு சொன்னதுமே அத்த அவ்வளவு பேச்சு பேசினாங்க. இப்போ உங்க வீட்டுக்கே மருமகளாக்கி இருக்கிங்க. என்ன செய்யப் போறாங்களோ" என்று கீதா கூறியதும் தான் வள்ளிக்கும் சற்று பதைபதைப்பாக இருந்தது.

நேற்று முதல் செங்கேணியின் குரல் வீட்டில் சற்று ஓய்ந்து தான் காணப்பட்டது. அதற்கு காரணம் இந்திராவின் விஷயம்தான். ஆனால், இப்பொழுது அப்படி அமைதியாக இருக்க மாட்டாரே என்ற எண்ணமும் ஒரு புறம் அவருக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

மணமக்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று தேவராஜின் வீடு நோக்கி புறப்பட்டனர்.

"பாட்டி" என்ற செந்நிலா சற்று தயங்கி நின்றாள்.

முதலெல்லாம் திருமணம் முடிந்து செல்லும்பொழுதே தன் பாட்டியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருந்தவளிற்கோ, இப்பொழுது அப்படி கேட்க கூட வாய் வரவில்லை.

அப்படியே இவரை அங்கே அழைத்து சென்றாலும் காமாட்சியின் முன்பு இவருக்கு அங்கே என்ன மரியாதை கிடைக்கும் என்பதை அறியாதவளா அவள்.

அதனாலேயே அவளுக்கு அப்படி கேட்க கூட வாய் வரவில்லை. அவளின் நிலையை உணர்ந்த செங்கேணி, "நீ நல்லபடியா போய் அங்கன சந்தோசமா வாழ்ந்தா எனக்கு அதுவே போதும் கண்ணு. நான் என்னை பாத்துக்குதேன்" என்றதும்.

அவர் அருகில் நின்றிருந்த கனகம், "உம்பாட்டிய நான் பத்திரமா பார்த்துக்கிட மாட்டேனாக்கும், என்னத்துக்கு இப்ப கண்ண கசக்குறவ. நீ போய் குடும்பம் நடத்துற வழிய பாரு" என்று இன்முகமாக கூறவும் தான் அவளுக்கு சற்று தெளிவு பிறந்தது.

அனைத்தையும் தன் மனதிற்குள் குறித்துக் கொண்டுதான் இருந்தான் பொற்செல்வன்.

பொற்செல்வனை அழைத்து வாழ்த்து கூறிய ரகு, "வாழ்த்துக்கள் அண்ணி" என்றான் செந்நிலாவைப் பார்த்து இன்முகமாக.

பதிலுக்கு புன்னகைத்தாளே தவிர, பதில் ஏதும் பேசவில்லை. பேசும் நிலையிலும் அவள் இல்லை.

அங்கிருந்து புறப்பட்டவர்கள் நேராக வீட்டிற்கு செல்லவும். மணமக்கள் இறங்குவதற்கு முன்னதாக வேகமாக இறங்கிய கீதாவும், வள்ளியும் வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தனர்.

இவர்கள் திருமணத்திற்கு சென்றதைப் பற்றி அறிந்த காமாட்சி, திருமணம் முடிந்து வந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க. இவர்கள் ஆரத்தி தட்டோடு வெளியே செல்லவும் புருவம் இடுங்க யோசனையோடு அவரும் வெளியே வந்தார்.

மூச்சுவிடக் கூட மறந்தவராக அப்படியே தன் வாயின் மீது கையை வைத்து அதிர்ந்து நின்று விட்டார்.
 
Top Bottom