• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
புனர்ஜென்மம் 4


“ஏன்டா இப்படி பண்ற?? கல்யாணத்துக்கு பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்ட. இப்ப பொண்ணு பார்க்க வர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?? அவங்க வீட்ல உன்னைப் பார்க்கணும்னு நினைப்பாங்க இல்லையா??” என்று கையில் ஒரு கவருடன் நின்றிருந்தார் அஷ்டலட்சுமி.


“இதோ பாருங்கம்மா, உங்களுக்காக நான் ரொம்ப பெரிய மனசு பண்ணி இறங்கி வந்திருக்கேன். அதுவும் சரியா சாப்பிடாம, முகத்தை தொங்க வச்சுட்டே இருக்கீங்கன்னு தான் என் மனச மாத்திக்கிட்டேன். கல்யாணத்துக்கும் ஒத்துக்கிட்டேன். நீங்க இதுக்கெல்லாம் அடம் பிடிச்சீங்கனா, அப்புறம் திரும்பவும் நான் முருங்கை மரம் ஏறிடுவேன். எனக்கு இப்பயும் கல்யாணத்துல இன்ட்ரஸ்ட்டில்ல. நீங்க கல்யாணத்துக்காக பார்த்து வச்சிருக்க பொண்ணு எப்படிப்பட்டவனு எனக்கு சுத்தமா தெரியாது”.

“கயிற்றைக் கட்டி மலையை இழுக்கற மாதிரி. உங்களை நம்பி அந்தப் பாழும் கிணத்துல குதிக்கத் தயாராகிட்டேன். ஒரு வேளை அவள் சரியில்லனா கண்டிப்பா டைவர்ஸ் பண்ணிடுவேன். உங்களுக்காக ஒரு சான்ஸ் மட்டும் தான் எடுக்கிறேன். அந்த பொண்ணு சரியா இருந்துட்டா ஓகே? இல்லன்னா கஷ்டம் தான்” என்றான் ராஜ்.


“ஏன்டா நல்ல காரியத்துக்கு போகும்போதே அபசகுனமா பேசுற?? அதெல்லாம் நல்ல பொண்ணு தான். நாங்க நல்லா தீர விசாரிச்சுட்டோம். காதல் கீதல்னு எதுவுமே இல்ல. அப்பா அம்மா சொல்ற பையனுக்கு தான் கழுத்தை நீட்டுவேன்னு இருக்குற நல்ல பொண்ணு. உன்னையும் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்க போறாள். அதனால எந்த பிரச்சனையும் இருக்காது. நீ ஒரு வாட்டி போட்டோவ பார்த்துட்டு அப்படியே நாளைக்கு பொண்ணு பாக்க போறதுக்கு வந்துட்டேனா, நல்லா இருக்கும். அப்படியே தட்டை மாத்தி திருமண தேதி குறிச்சிட்டு வந்துடலாம்” என்றார் இழுவையாக.


“காதலே செய்யலனா அவள் நல்ல பொண்ணுன்னு எந்த கேட்டகிரியில் நீங்க சொல்றீங்கன்னு எனக்கு புரியல? ஆனா நாளைக்கு நான் வருவதற்கு வாய்ப்பே இல்லை. நோ சான்ஸ், நான் வந்தேன்னா எதையாவது ஏடாகூடமா கேள்வி கேட்டிடுவேன். அப்புறம் உங்க பிளான் எல்லாம் சொதப்பி பெயிலியராகிடும். நீங்க கட்டி வச்சிருக்க மலைக்கோட்டை சாஞ்சுடும். பரவாயில்லையா?? உங்கள நம்பி தான் நான் இதுல இறங்கி இருக்கேன். நீங்க பார்த்து ஓகே சொன்னாலே எனக்கு போதும். நான் பொண்ண நேர்ல பாக்கவே வேணாம். அவள் கிட்ட பேசி சொதப்பவும் வேண்டாம். என்னை கூப்பிடாம போறது தான் உங்களுக்கு நல்லது. அது புரியாம என்கிட்ட கெஞ்சிட்டிருக்கீங்க?” என்று அவன் கூறி நிறுத்திக்கொள்ள.


‘அதுவும் சரிதானோ?’ என்று தோன்றி விட்டது அஷ்டலட்சுமிக்கு.


அவர் முகத்தை தொங்க வைத்துக் கொண்டிருக்க. அவர் கையில் இருந்த பழுப்பு நிற கவரைப் பறித்தவன்.


“என் போட்டோவை அவங்க கிட்ட கொடுத்திருக்கீங்க தானே?? என் முகத்தை அவங்க பார்த்து பிடிச்சிருக்குன்னு தானே பொண்ணு பாக்க வர சொல்லி இருக்காங்க. அப்புறம் என்ன?? நீங்க அக்கா மாமா அத்தை எல்லாரும் தானே போறீங்க?? போய் எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க. தாலி கட்டுறதுக்கு மட்டும் என்னை கூப்பிடுங்க. நான் வந்து கட்டுறேன்” என்றான் ராஜ்.


சொன்னது போல மறுநாள் அவர்கள் குடும்பம் சகிதமாக பெண் வீட்டிற்கு கிளம்பினார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக்கூட கருதாமல் தன் வேலையை பார்க்க சென்றான்.


திருமணம் முடித்த மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டுதான் சென்றார். அத்தோடு துணைக்கு தன் தம்பியையும் தம்பி மனைவியையும் அழைத்துக் கொண்டார். அவன் வரவே இல்லை. ஏன் அவன் வீட்டிலேயே இருக்கவில்லை.

………


“என்னை போட்டோவில் பார்த்துட்டு தானே பொண்ணு கேட்டு வராங்க?? இந்த அலங்காரம் போதும். ஏதோ கல்யாணத்துக்கே அலங்காரம் பண்ற மாதிரி எதுக்கும்மா பண்றீங்க??” சலித்துக் கொண்டாள் ஸ்ரீ.


“நீ உன் அண்ணன் கல்யாணத்துல புடவை கட்டி எடுத்திருந்த போட்டோவை தான் அவங்க வீட்டுல கொடுத்திருந்தோம். அதேபோல இப்பயும் அலங்காரமா நின்னா தான் நல்லா இருக்கும். ரொம்ப சலிச்சுக்காத, வா” என்று மகளுக்கு அணிகலன்களை பூட்டி விட்டார்.


முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டவள். அனைத்தையும் அமைதியாக கழுத்தில் மாட்டிக்கொண்டாள். ஏற்கனவே அவர் கொடுத்த புடவையை அவள் உடுத்தியிருக்க. கண்ணாடியின் முன்பு நின்றவளுக்கு ஏதோ நகைக்கடை விளம்பரத்தில் வருபவர்களைப் போலத்தான் தோன்றினாள்.


மீண்டும் முகத்தை சுருக்கி தாயை திரும்பி பார்த்தாள் “இத்தனையா?” என்று கேட்டாள்.


“ஒதைப்படுவ, எதையும் கழட்டக்கூடாது. அப்படியே தான் இருக்கணும். வந்து பார்த்துட்டு போயிட்ட பிறகு நீ எல்லாத்தையும் கழட்டி வைக்கலாம்” என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.


ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவள். மிதமான ஒப்பனையை ஆரம்பித்தாள். அவளுடைய முகத்திற்கு அதீதமான அலங்காரம் நன்றாகவே இருக்காது. அது அவளுக்கு பிடிக்கவும் பிடிக்காது. மிதமான அலங்காரம் தான் அவளை தேவதையாக காட்டும். அது அவளுக்கு நன்றாகவே தெரியும்.


அதனால் அலங்காரத்திற்கென்று அவள் தன்னை யாரிடமும் ஒப்புக் கொடுக்க மாட்டாள். அவளுக்கான அலங்காரத்தை அவளே தான் எப்போதும் செய்து கொள்வாள். அதிகம் இல்லாத படி பார்த்துக் கொள்வாள்.


சற்று நேரத்தில் வாகன சத்தம் கேட்க. வீட்டிலும் சலசலப்பு தென்பட்டது. மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டார்கள் என்று அவளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டிலும் முக்கியமான சொந்தங்கள் குழுமி இருந்தார்கள்.


அவளுடைய தாய் பதட்டமாக அனைத்தையும் செய்து கொண்டிருக்க. அவள் ரிலாக்ஸாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். எழுந்து நின்று இப்படியும் அப்படியும் ஒயிலாக திரும்பி தன் அழகை கண்ணாடியின் பிம்பத்தில் பார்த்தாள். நன்றாகவே இருந்தாள்.


“பார்த்தவுடனே பிளாட்டாயிடனும். ஆனா ஆவாங்களா??” கண்ணாடியில் தெரியும் அவள் பிம்பத்திடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க.


அது எந்த எதிர்வினையும் கொடுக்காமல் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.


“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. அட்லீஸ்ட் இப்பயாச்சும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு பொண்ணு பார்க்க வராங்களே, அதுவே பெரிய விஷயம் தான்” என்று நினைத்துக் கொண்டவள்.


பெரியவர்கள் தன்னை அழைத்துச் செல்ல வருவார்கள் என்று காத்திருக்க ஆரம்பித்தாள்.


அந்த நேரத்தில் அவள் தாயும் அத்தையும் வந்து அவளை அழைத்துச் செல்ல. பதுமையைப் போல நடந்து சென்றவள். தலை குனிந்து நின்றாள்.


“பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க பொண்ணுக்கு என்ன போடுறீங்களோ அதை போடுங்க” என்றார் அஷ்டலட்சுமி.


“மாப்பிள்ளையோட அப்பா வரலையா??“ என்று வீட்டில் இருக்கும் பெருசுகள் கேள்வி கேட்டனர்.


அஷ்டலட்சுமி சங்கடமாக தலை குனிந்தார்.


“அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதனால வெளிய போயிருக்காரு. பொண்ணு பாக்குற விசேஷம் தானே?? அதனால எங்களையே முன்னால் நின்னு பண்ண சொல்லிட்டாரு” என்று கூறினாள் ராஜின் தமக்கை.


கல்பனாவிற்கு இந்த பெருசுகளை ஏன் அழைத்தோம் என்றாகி விட்டது. வந்தோம்மா மிக்ஸ்சரை சாப்பிட்டோமா, டீயை குடித்தோமா சென்றோமா என்று இல்லாமல் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு குழப்பி அடிப்பதே இவர்களின் வேலையாக போய்விட்டது. மனதிற்குள் தான் புலம்பிக் கொண்டார்.


அவரைப் பற்றி தெரிந்திருந்தமையால் பெற்றவர்கள் எதையும் கேட்கவில்லை. தோண்டி துருவவும் இல்லை. தங்கள் வீட்டு சார்பாக கேட்டவர்களையும் அடக்கினார்கள்.


பிறகு பொதுப்படையான பேச்சுக்கள். அவர்களுக்குள் நீண்டு கொண்டே செல்ல.


கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருந்தவள். அதையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


“இவ்வளவு அலங்காரமும் வேஸ்டா போச்சு. நீங்க வருவீங்கன்னு காத்துகிட்டிருந்தேன். இப்படி என்னை ஏமாத்திட்டீங்களே ராஜ்?? இதுக்காக எங்க அம்மாகிட்ட எவ்வளவு நடிப்பு நடிக்க வேண்டி இருந்தது??” என்று அவள் வெளிப்படையாக புலம்பினாள்.


நல்ல வேலையாக அதைக் கேட்க அவளின் சொந்தங்கள் அங்கு நின்றிருக்க வில்லை.


அவள் தாய்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்திருந்தால் அவ்வளவுதான்?? சாமியாடிவிடுவார். ஆனால் நல்ல வேளையாக அது அவருக்கு தெரியாது. அது அவளுக்கும், அவள் தகப்பனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.


ஆம், மகள் இரண்டு வருடங்களாக வரன்களை தட்டிக் கழித்துக் கொண்டிருப்பது எதனால் என்று புரியாமல் தவித்த பெற்றவர்கள். தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருக்க.


ஒருநாள் மனைவியின் சொந்தத்தில் திருமணம் என்று ஊருக்கு சென்று இருந்தார் கல்பனா. இதுதான் சமயம் என்று நினைத்தவர். மகளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார்.


மகளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார். மகளை அமர வைத்து அவளிடம் பொறுமையாக பேசினார்.


“இந்த காலத்துல நிறைய காதல் விஷயங்களை நானும் கேள்விப்படுறேன். ஒருவேளை உனக்கு காதல் ஏதாவது இருந்ததுனா எனக்கு பிரச்சனை இல்லம்மா?? என்ன ஒன்னு மாப்பிள்ளை பையன் நல்லவனா இருக்கணும். அதை மட்டும் தான் நான் யோசிக்கிறேன். உங்க அம்மா தான் தாம் தூம்னு குதிப்பாள். ஆனா அதுக்கும் என்கிட்ட ஒரு சொல்யூஷன் இருக்கு. அப்படி ஏதாவது இருந்ததுனா மறைக்காம என்கிட்ட சொல்லு மா?” என்று கேட்டுவிட்டார்.


இல்லை என்று உடனே அவளிடம் பதில் வராததே?? ஏதோ இருக்கிறது என்று அந்த தந்தைக்கு புரிய வைத்துவிட்டது. அவள் அமைதியாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.


“இந்த அப்பன் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லையாமா??” என்று மகளின் தலையை வருடி கொண்டே பாதூரமாக கேட்டார் சுந்தரம்.


அவரை ஏறெடுத்து பார்த்தாள்.


தந்தையைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் தாய் இல்லாமல் தனிமையில் அழைத்துப் பேசும்போது. இதற்கு மேல் மறைத்து தான் என்ன செய்யப் போகிறேன்?? என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது.


“ஆமாம்பா, நான் ஒருத்தர லவ் பண்றேன்” என்று மெல்ல கூறினாள் ஸ்ரீ.


“அப்புறம் என்னம்மா?? அதை ஏன் முதலிலேயே சொல்லல??” என்று அவர் கேட்க.


“அம்மாவுக்கு பிடிக்காதேப்பா. அது மட்டும் இல்ல. அவர் என்னை காதலிக்கல. இன்பாக்ட் அவருக்கு என்னோட காதலே தெரியாது??” என்று பெரிய குண்டாக தூக்கிப் போட்டாள்.


“என்னமா இப்படி சொல்ற?? நீ அவர்கிட்ட காதலை சொல்லலையா??” என்று சுந்தரம் கேட்க.


‘இல்லை’ என்று தலையாட்டி உதட்டை பிதுக்கினாள் மகள்.


“அப்புறம் எப்படிம்மா கல்யாணம் ஏற்பாடு பண்றது?” என்று அவர் தயக்கத்தோடு கேட்க.


“எனக்கே தெரியலப்பா? இன்பாக்ட் அவருக்கு என்ன தெரியவே தெரியாதுன்னு நினைக்கிறேன். அவர் முன்னாடி நான் நிறைய வாட்டி வந்திருக்கேன். ஆனா என்னை அவர் கவனிச்சது கூட இல்ல. அவரு ரொம்ப நல்லவருப்பா. அதனாலதான் எனக்கு அவர பிடிச்சு தொலச்சது. ஆனா எனக்கு மட்டும் தான் அவர் மேல காதல் இருக்கு. அதுவும் ஒரு தலை காதல். இப்படி ஒருத்தி இருக்கேனு கூட அவருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியல??” என்று தலை கவிழ்ந்து பேசிய மகளை புரியாமல் பார்த்தவர்.


பிறகு மகளின் தலையை வருடி கொடுத்து ‘என்ன ஏது?’ என்று கேட்டார்.


அவளும் ஒன்று விடாமல் தன் மனதில் இருப்பதை தன் தகப்பனிடம் பகிர்ந்து கொள்ள. அவர் தாடையில் கையை வைத்து யோசித்தார்.


“இப்ப அவர் எங்க இருக்காருன்னு தெரியாது? என்ன பண்றாருன்னு தெரியாது? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா ஆகலையான்னு கூட உனக்கு தெரியாது?? அப்புறம் எப்படி மா??” என்று கேட்டார் சுந்தரம்.


“கண்டிப்பா அவருக்கு திருமணமாகி இருக்காதுப்பா. ஏன்னா அவர் திருமணம் பண்ணிக்க மாட்டாரு. அவரு அஷ்டலட்சுமி ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்திட்டு இருக்கிறார் அப்பா. ஆனா அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியாது” என்று மகள் சிறு குரலில் கூறினாள்.


“எப்படிமா அவ்வளவு உறுதியா சொல்ற?” என்று சுந்தரம் கேட்டார்.


“நான் சொன்ன காரணங்கள் தான்பா. அவர் கண்ணில் தெரிந்த உறுதி எனக்கு அதை உணர்த்தியது” என்று பேசும் மகளை பாவமாக பார்த்தார்.

‘என்ன இவள் இப்படி வெள்ளந்தியாக இருக்கிறாள்’ என்று.


“ஏதோ ஒரு கோபத்தில் சொல்றதுதாமா, ஆனா அதுக்கப்புறம் அப்படியே இருப்பாங்கன்னு நம்மளால உறுதியா சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும் நாம வரனை கொண்டு போனா, அந்த தம்பி அதுக்கு ஒத்துக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். இப்ப என்ன பண்றது?” என்று கேட்டார்.


உண்மையில் அவளிடம் அதற்கான பதில் இல்லை. அமைதியாக இருந்தாள்.


“அவங்க எந்த வகையறான்னு தெரியுமா?” இப்பொழுது அவர் தயக்கமாக கேட்டார்.


சட்டென்று அவரை ஏறெடுத்து பார்த்தாள்.


“எனக்கு பிரச்சனை இல்லம்மா. ஆனா ஒரு திருமணம் சுமூகமா பெரியவங்களோட ஆசிர்வாதத்தோடு நடக்கணும்னா, அது ஒரே சமூகத்துல இருந்தா ஈசியா போய்விடும். உங்க அம்மாவுக்கும் தெரியாமல் நடத்தணும் இல்லையா?? அதனால கேட்டேன்” அவர் தன் கேள்விக்கு விளக்கம் கொடுத்தார்.


உதட்டைப் பிதுக்கி மகள் தெரியவில்லை என்று கூறினாள்.


ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டார். இதற்கு மேல் தான் கேட்கும் எந்த கேள்விக்கும் மகளுக்கு பதில் தெரியாது என்பது மட்டும் அவருக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அப்படியே விட முடியாது அல்லவா?? தன் அன்பான மகளின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு தந்தையின் கடமை தானே?? அதனால் அதை செய்ய முடிவை எடுத்திருந்தார்.
 
Top Bottom