• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 6

படுக்கையில் விழுந்த தீரன் அபர்ஜித்தை சில நிமிடங்களில் நித்திராதேவி ஆட்கொண்டிருந்தாலும் இந்த ஒரு வாரமாக அவன் காதில் கேட்கும் குதிரையின் குளம்பொலி இன்று வெகு அருகில் கேட்டதோடு, முன்ஜென்மத்தின் நீங்கா நினைவுகளும் மங்கிய ஒளியில் அவன் கண்முன்னே விரிந்தன...



பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு...



அன்று மன்னர் அதியன் நெடுமாறனின் முடிசூட்டு விழாவிற்காக இராஜசிங்காபுரியின் பிரமாண்டமான அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருந்தது...


படுக்கையில் உயிரற்ற உடலாய் கிடந்த அதியனைக் கண்டு, "தமையனே..!!!" என்றதோடு மூர்ச்சையாகி மயங்கி விழுந்த இளவரசி மதிவதனியை அவளின் மாமன் மகனான மகேந்திரனும், படைத்தளபதியான இளந்தீரனும் 'மதி' 'வதனி' என்றழைத்தபடி ஒருசேர தாங்கிப் பிடித்தனர்..!


மதியின் தோழி வான்மதி எடுத்துக்கொடுத்த நீரை வாங்கிய மகேந்திரன் அதை அவள் வதனத்தில் தெளிக்கவே அவளின் நீள்விழிகள் மெதுவாகத் திறந்து கொண்டன..!


எனினும் முழுமையாக சுயமடையாது அரை மயக்கத்தில் இருந்தவளை அவள் தோழிகளிடம் ஒப்படைத்தவன், அழுதுக் கொண்டிருந்த தன் அத்தைக்கு அருகில் நின்றுகொண்டான்...


தகவல் கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்த கவுதமனிடம் அரண்மனையிலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி நான்கு வாயில் கதவுகளையும் இழுத்து மூடும்படி பணித்த தீரன், மக்கள் வெளியே நடமாடுவதற்கும் முப்பது நாழிகை நேரம் தடை விதிக்கும் அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு ராஜகுருவிடம் கூறிவிட்டு அடுத்து ஆக வேண்டியக் காரியங்களில் கவனம் செலுத்தினான்...


(முப்பது நாழிகை = அரை நாள்)


நேற்றிரவு வரை திண்மையான தேக பலத்துடன் நடமாடிய தங்கள் முடிஇளவரசனிற்கு ஓர் இரவில் அப்படி என்ன அனர்த்தம் நேர்ந்தது என்பதை அந்நாட்டின் படைத்தளபதியாக அவனுக்கு அறியவேண்டியக் காட்டாயம்..!


மன்னரின் பட்டாபிஷேகத்திற்கு வருகைப் புரிந்த விருந்தினர்களையும் அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்யும்படி மேலும் சிலரை அனுப்பிவிட்டு தனக்கு எதிரில் அசையாமல் நின்றிருந்த மகேந்திரனை சந்தேகமாக நோக்கினான்...


படைவீரர்கள் அரண்மனையின் வாயிற்கதவுகளை அடைத்துவிட்ட தகவலை நண்பனிடம் தெரிவிக்க வந்த கவுதமனிடம், "இங்கிருந்து ஒருவர் கூட வெளியேறக் கூடாது கவுதமா..! சில வீரர்களை நியமித்து வெகு கவனமாக அரண்மனையின் உள்ளே இருப்பவர்களைக் கண்காணிக்கச் சொல்..." என்று உத்தரவிட்டதோடு, இளவரசரின் இறுதிப்பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சில வீரர்கள் நியமியத்தவன் அவ்வாறு வெளியேறுபவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தான்...


இத்தனை பாதுகாப்பு அடுக்குகளைத் தாண்டி அதியனைக் கொல்ல முடிந்துள்ளதென்றால் கண்டிப்பாக அவனோடு நெருங்கிப் பழகும் ஆட்களாக தான் இருக்க வேண்டும் என்பதை அவனின் இறப்பு செய்தியைக் கேட்டவுடனேயே கணித்துவிட்டான்..!


ஆனால் அவனைக் கொல்லும் அளவிற்கு மனதில் வஞ்சம் வைத்து அவனோடுப் பழகியது யார்??? என்று தெரிய வேண்டுமே...


ஏனென்றால் தங்கள் நாட்டு இளவரசனைப் பற்றி அவன் நன்கறிவான்..! தன்னைத் தாக்க வருபவர்களைத் திருப்பித் தாக்கக்கூடிய அனைத்து போர்க் கலைகளையும் திறம்பட கற்றுத் தேர்ந்த மாவீரன் அவன்..!


மனதில் எழுந்த வெஞ்சினத்தோடு, அழுதுக் கொண்டிருந்த ராணியார் நயனத்தேனருவியில் தொடங்கி அதியனின் மனைவி ஆதினி வரையில் அவனோடு நெருங்கிப் பழகிய அனைவரின் உடல்மொழியையும் பாதாதிக்கேசம் உற்றுக் கவனித்தபடியே தன் பணிகளை மேற்கொண்டான்..!


அரைமயக்க நிலையில் விழிகளில் பொங்கிப் பெருகிய கண்ணீர் ஊற்றைத் துடைக்கும் சக்தியற்று கல்தூணில் சிரம் சாய்த்தபடி வீற்றிருந்த இளவரசி மதிவதனியை கூட அவனது கூர்விழிகள் விட்டுவைக்கவில்லை..!


விருந்தினர்களையும் அவர்களின் உடைமைகளையும் சோதனையிடும் பணிகள் முடிந்துவிட்டதாக வந்து நின்றவர்களிடம், அவர்களுக்காக ஒதுக்கியிருந்த அதே அறைகளில் அவர்களை சிறைவைக்கும்படி பணித்தவன், மகேந்திரனிடம் வந்து நின்றான்...


அவனை தன் தீர்க்கமான விழிகளால் அளந்துவிட்டு, "என்னையும் சோதனையிடப் போகிறாயா தீரனே?" என்றவன் வினவ,


"யாவருக்கும் ஒரே நடைமுறை தான் இளவரசே..! எங்கள் மன்னரின் இறப்பிற்குக் காரணமானவர்கள் யாராயினும் தயவு தாட்சண்யமின்றி அவர்களின் சிரம் கொய்யப்படும்..." என்ற மிரட்டலோடு அவனை தன் வலிமையான கரங்களால் நன்கு சோதனையிட்டான்...


"உங்கள் மன்னரா? அதியன் நெடுமாறன் மன்னராகவில்லை தீரனே..! அதற்கு முன்பாகவே மாண்டுபோனானே..! பிறகு எப்படி மன்னர் என்கிறாய்?..." என்று வினா எழுப்பிய மகேந்திரன், அதியனோடுப் பெரிதாக நல்லுறவைப் பேணவில்லை...


அதற்காக அவன் தான் குற்றவாளியா என்றால் அதுவும் இல்லை..!


தன்னிடம் தேவையின்றி வம்பு வளர்த்தவனைக் கண்டு ஆத்திரம் எழுந்தாலும், "அதைப்பற்றி தாங்கள் கவலைக்கொள்வது அவசியமற்றது இளவரசே... எம் நாட்டு மக்களுக்காக அடுத்து அரியணை ஏறப்போவது யார் என்பதுத் தெரியும்வரை அவர் தான் எங்கள் மன்னர்... தங்களின் சோதனை நிறைவுற்றது, போய் வாருங்கள்..." என்று அனுப்பிவிட்டு அவனைக் கண்காணிக்குமாறு கவுதமனிடம் கண்ணசைவில் உத்தரவுப் பிறப்பித்தான்...


அதன் பின்னர் அங்குக் கூடியிருந்த பெண்களின் அழுகுரலால் அந்த அரண்மனையும் அதன் நான்மாட வீதிகளும் சோகமயமாகக் காட்சியளித்தது..!


அத்தனை நேரம் தீரனின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த ராணியார் அவன் அங்கிருந்து நகர்ந்ததும், "தீரனே..!.." என்று அழைக்கவே அவரிடம் விரைந்து வந்து நின்றவன், "ஆணையிடுங்கள் மகாராணி..." என்றான் பணிவாக..


"எம் புதல்வனின் இன்னுயிரை எடுத்தது யாராகினும் அவர்களின் சிரம் கொய்யப்பட வேண்டும்... நம் அரண்மனை பணியாளர்களை வைத்து அக்கயவர்களை அடையாளம் கண்டவுடன் தண்டனையை விரைவாக நிறைவேற்றிவிடு தீரனே... இப்போது சென்று வா..!" என்று ஆணையிட்டதில்,


"உத்தரவு மகாராணியே..!" என பணிந்துவிட்டு வெளியேறினான்...


இளவரசரின் உயிர்த்துடிப்பு எப்படி நின்றதென்று அங்கிருந்த வெகு சிலரைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாதக் காரணத்தினால், இறப்பு எப்படி நேர்ந்தது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்காமல் அதியன் நெடுமாறனின் இறுதிக் காரியங்கள் நடைபெற்றன...


அவர்களின் குல வழக்கப்படி இறந்தவர்களின் உடலை எரியூட்டும் வழக்கமிருந்ததால் மன்னர் வம்சத்திற்குப் பாத்தியமான ஒரு இடத்தில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது...


அங்கு மிகவும் நெருங்கிய உறவினர்களும், அரண்மனையின் முக்கியஸ்தர்களும் மட்டுமே செல்ல முடியும்..!


தீரனிற்கு அதைவிட முக்கியமான ஒரு வேலையிருக்கவே, அவனுக்கு பதிலாக கவுதமனிடம் சில ரகசியங்கள் கூறி அனுப்பி வைத்தவன், அவனின் சந்தேக வளையத்திற்குள் இருந்த அந்தப் பெண்ணின் செயல்களை உற்றுக் கவனித்தான்...


அவள் வேறு யாருமில்லை, அதியன் நெடுமாறனின் மனைவி ஆதினி தான்..!


அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து சில மணிநேரங்கள் ஆதினியைத் தொடர்ந்ததிலேயே அவள் தான் குற்றவாளி என்பது ஊர்ஜிதமானது..!


எனினும் அங்கு வந்திருந்த மற்ற நாட்டினரும், உறவினர்களும் சென்றபின்பு மகாராணியிடம் தெரிவித்துவிட்டு அவளை சிறையில் அடைப்போம் என்ற முடிவிற்கு வந்தவன், தன் நிலையைப் பற்றிய சிந்தையின்றி தமையனின் புதல்வனான அமுதனை அணைத்து அழுதுக் கொண்டிருந்த மதிவதனியை நெருங்கினான்...


அதற்குள் மன்னரின் இறுதிக் காரியங்களை முடிக்கச் சென்றவர்கள் நீராடிவிட்டுத் திரும்பி வருவதைக் கண்டு கவுதமனிடம் விரைந்தவன் அவனைத் தனியே அழைத்து, "நான் சொன்னதை நிறைவேற்றிவிட்டாயா கவுதமா?.." என்று விசாரித்தான்...


அங்கு நடந்ததை விவரித்த கவுதமன் தோழன் வெகுவாக எச்சரித்து அனுப்பியும் அவன் கூறியதை நிறைவேற்ற முடியாமல் போனதில் கூனிக்குறுகி நின்றிருந்தான்...


"உன்னிடம் கவனம் கவனமென்று அத்தனை முறை அழுத்தமாக எச்சரித்திருந்தேனே..! இப்படிக் தவறவிட்டு வந்து நிற்கிறாயே மூடனே..! இனி எப்படியடாக் கண்டுபிடிப்பது..?" என்று அவன் புஜங்களைப் பற்றி உலுக்கியவன், மிதமிஞ்சிய சினத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வேக எட்டுகளோடு மாடிப்படிகளில் ஏறி மேல்மாடத்தில் இருக்கும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்...


பின்னால் ஓடிவந்த நண்பனிடம் அதற்கு மேல் கோபித்துக் கொள்ள முடியாமல் இயல் இசைக் கலைஞர்களைப் பரிசோதிக்கும் பணியை மேற்பார்வையிட அனுப்பிவிட்டு, "இனி வரும் வாரங்களில் இந்த ராஜ்ஜியத்தை எதிரிகளிடமிருந்து எப்படிக் காப்பது?..." என்று விழிமூடி சிந்தித்தவன் நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்...


இது நாள் வரையில் அவன் போட்டக் கணக்கு எதுவுமே தப்பியதில்லை..! ஆனால் இன்று அவன் ஒன்றை நினைக்க வேறொன்று நிகழ்ந்துவிட்டது..!


அதற்கு மேல் வீணடிக்க தனக்கு நேரமில்லை என்பதை உணர்ந்து அறையிலிருந்து வெளியேறி வந்தவன் பூக்கள் மற்றும் மா இலைத் தோரணங்களால் அலங்கரித்திருந்த மாடத்தில் நின்றவாறு ஆலயத்தில் வீற்றிருந்த அந்த பரமேஸ்வரனை வெறித்தான்..!


அந்தி பொழுதின் அழகிய ஒளிச்சிதறல்களும், அந்த அரண்மனையில் நிழவிய பேரமைதியையும் கணக்கில் கொள்ளாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன் யாரோ தன்னை நெருங்கும் அரவம் கேட்கவே விரைத்து நிமிர்ந்தான்...


"உம்முடைய விசாரணை முடிவுற்றதா, குற்றவாளியை நெருங்கிவிட்டாயா தீரனே?..." என்ற வினாவோடு அவனருகே வந்து நின்றவன் மகேந்திரன்...


"இதற்கான விடை தங்களுக்குத் அவசியம் தெரிய வேண்டுமா இளவரசே? எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் சுந்தரவனத்து இளவரசருக்கு ஏன் இத்தனை ஆர்வம்?..." என்றவனின் புஜங்களில் கரம் வைத்து அழுத்தியவாறு மேலும் அவனை நெருங்கி நின்றவன்,


"ஏன் என்றா கேட்கிறாய்? இன்று இந்த நிலையில் நீ நிற்பதற்கு நானும் ஓர் காரணி எனும்போது, இங்கு நடப்பதை அறிந்து கொள்ள எமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது தீரா..!" என்று உண்மையை உரைத்ததில் எழுந்த நெடுமூச்சை வெளியேற்றிவிட்டு,


"அல்ல இளவரசே..! எமக்கு முன்பாக வேறு எளிதான மார்க்கமிருந்தும் தாங்கள் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டது என் தனிப்பட்ட முடிவு..! எனவே அதனால் வரும் சிக்கல்களையும் நான் தான் கலைய வேண்டும்... இதற்குள் தங்களை இழுத்துவிட என் மனம் ஒப்பவில்லை..!" என்றான் சுற்றிலும் நோட்டமிட்டபடி...


தீரனின் கவனத்தில் இதழ் பிரியாமல் நகைத்த மகேந்திரன் அவன் கரங்களைப் பற்றி அழுத்திவிட்டு விலகி நடந்தான்...



சரியாக அதற்கு மேல் தீரனின் ஞாபகங்கள் வெளிவருவதைத் தடுப்பதைப் போல் அவனின் அலைபேசி விடாமல் இசைத்தது...


ஆழ்ந்த உறக்கத்தில் முன்ஜென்ம நினைவுகளோடு ஒன்றியிருந்தவன், விடாமல் ஒலித்த அழைப்பில் பிரம்ம பிரயத்தனப்பட்டு இமைப்பிரித்து தன் அலைபேசியைத் தேடி எடுத்து காதில் பொருத்தினான்...


அவனை அழைத்தது மகேந்திரன் தர்மராஜ்..!


"ஹலோ மச்சான், தூங்கிட்டு இருந்தியா? உன்கிட்ட முக்கியமான ஒரு சந்தேகம் கேட்க தான்டா கால் பண்ணேன்..." என்று சொல்ல,


நண்பன் கண்விழித்து தங்கள் நிறுவனத் தொடர்பான வேலை செய்வதாக நினைத்ததால், "ம்ம் சொல்லுடா.." என்றான் கனத்த குரலில்..


"தூங்கவே விடாம ஒரு பொண்ணோட முகம் கண்ணுக்கு முன்னாடி வந்துட்டே இருந்தா அது காதல் தானே மச்சி?" என்று அர்த்த ராத்திரியில் இவன் மனநிலைக்கு சற்றும் பொருந்தாத ஒரு கேள்வியை அவன் கேட்டதில் திகைத்தவன், சுருசுருவென எழுந்த ஆத்திரத்தை பல்லைக் கடித்து அடக்கியபடி,


"அது.. ம்ம் நா.. நானும் அப்படி தான் நினைக்கிறேன் மகேன்..." என்று பதிலளிக்கவே,


"அப்போ சரிடா தீரா‌... நீ தான் அவளுக்குப் ப்ரொபோஸ் பண்றதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணனும்..." என்றான் குதூகலமாக...


அதற்கு மேல் கடுப்பை அடக்க முடியாது, "ஆமாடா உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு எனக்கு ஏழு காதல் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் இருக்குப் பாரு..! அழைப்பை வையடா மூடனே..." என்றுக் கத்தியதோடு அழைப்பைத் துண்டித்திருந்தான்...


வெளிநாட்டில் மேற்படிப்புப் படித்தவனுக்கு இன்னுமே கனவில் கண்டக் காட்சிகளை நம்ப முடியாமல் தான் இருந்தது..!


ஆனால் அதையும் மீறி அவற்றை நம்புவதற்கு அவனிடம் வலுவான ஒரு காரணம் இருப்பதை அவன் மட்டுமே அறிவான்..!


"ப்ச் இதென்ன கனவு..! அதுவும் இவ்ளோ தத்ரூபமா? ஒருவேள எங்க எல்லாருக்கும் முன்ஜென்ம தொடர்பு எதுவும் இருக்குமோ..! அந்த அதியன் செத்துப்போன மாதிரி வந்துச்சே.. அவன யாரு கொன்றுப்பா?


மதி..! வதனி..! க்ஹூம் வது..! ப்பா அந்த கெட்டப்ல என்ன ஒரு அழகு..! ஆ.. ஆனா கனவுல வந்தவ என்னைய நிமிர்ந்து கூடப் பார்க்கலையே..! அதோட அ.. அவள மகேன் தானே அதிகமா கேர் பண்ண மாதிரி இருந்துச்சு.. அப்புறம் எனக்கு ஏன் அவளப் பார்த்தாலே ஏதோதோ தோணுது?.. இதுல நிறைய மர்மம் வேற..!" என பலவற்றை யோசித்துக் கொண்டிருந்தவன்,


ஒருவேளை தன் கனவில் தோன்றிய காட்சிகள் அனைத்தும் உண்மையாக இருந்தால், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகளும் அப்படியே வரலாம் என்ற நம்பிக்கையோடு கண்ணயர்ந்தான்..!



இங்கு நண்பனோடு பேசி முடித்ததும், "ஹாஹா..! அழைப்பை வையடா மூடனே..! வாடா வாடா தீரா..! எனக்கு வந்த மாதிரி உனக்கும் ஏதோ ஞாபகம் வந்துருச்சு போலயே... முழுசா வரட்டும் அப்போ தான் இன்னும் சுவாரசியமா இருக்கும்.." என்று சிரித்த மகேந்திரன் தன் மனம் கவர்ந்த மங்கையின் மதிமுகத்தை நினைத்தபடியே படுக்கையில் விழுந்தான்...


ஆண்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் உறங்க முயன்றுக் கொண்டிருக்க, இங்கு தன் அறையில் படுத்திருந்தப் பெண்ணவளோ எவ்வித சஞ்சலமுமின்றி நிம்மதியாக உறங்கியிருந்தாள்..!


அதிகாலை ஐந்து மணியளவில் அவன் கண்டக் கனவில் அதிர்ந்து எழுந்திருந்தான் தீரன் அபர்ஜித்...


ஏனெனில் இராஜசிங்காபுரி அரியணையில் மன்னனாக அவன் அமர்ந்திருக்க குற்றச்சாட்டும் பார்வையோடு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் மதிவதனி..!




தொடரும்......
 
Top Bottom