• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 9

தீரன் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி தந்தையிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கு அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ராமச்சந்திரனையும் கோகிலாவையும் கண்டு திகைத்தாள்...



அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுடைய மகனின் நடத்தையைப் பற்றி எப்படி குறைசொல்வது?



சரி சந்தர்ப்பம் அமையும்போது அதைப்பற்றி பேசுவோம் என்ற முடிவோடு நடையை எட்டிப்போட்டவள் அவளின் பிரியமான மாமாவையும் அத்தையையும் வெகு நாட்களுக்குப் பிறகு பார்த்த மகிழ்ச்சியில், "வாங்க மாமா, வாங்க அத்த... நல்லா இருக்கீங்களா?.." என்று முறையாக குசலம் விசாரிக்க,



"நாங்க நல்லா இருக்கோம்டா மதி..! நீ வந்து இப்படி உட்காரு... என் மருமகளப் பார்த்து எத்தன நாளாச்சு..!" என்ற கோகிலா அவளின் கரம் பற்றி தன்னருகே அமர்த்திக்கொண்டார்...



அவர்களுடன் சிறிது நேரம் பாசமாகப் பேசியவள் தீரனின் தம்பி யுகேந்திரனைப் பற்றி விசாரித்ததோடு, உடைமாற்றி வருவதாக சொல்லிவிட்டு மாடியேறினாள்...



யுகேந்திரன் தீரனின் ஒரே தம்பி... சொந்தமாக ஃபேஷன் ஃபோட்டோகிராஃபி ஸ்டூடியோ வைத்துள்ளான்...



அவனுக்கும் மதிவதனிக்கும் இடையே ஒரு வயது வித்தியாசமே இருந்ததால் இருவரும் நன்றாகப் பேசிக்கொள்வதோடு, அவ்வப்போது அவன் உருவாக்கும் ஃபேஷன் காலண்டர்களுக்கு நகை வடிவமைத்துத் தருவாள் அவள்..!



அவர்கள் வீட்டில் தீரனைத் தவிர அனைவரும் கலகலப்பாகப் பழகுபவர்கள் தான்...



இதுநாள் வரை காட்டில் இருந்து தப்பித்து வந்த ஜந்துவை போல தன்னைப் பார்த்து வந்த அவன், இப்போது திடீரென்று கல்யாணம் செய்யப்போவதாக சொல்லி அவளுக்குள் கலவரம் உருவாக்க முயல்கிறான்...



ஆனால் அதற்காகவெல்லாம் அவள் அசரவில்லை..! தந்தையிடம் சொன்னால் பிரச்சனை ஓய்ந்தது என்று அவனை சுலபமாக எடைபோட்டு விட்டாள்..!



அவன் விரும்பியதை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் தீரம் நிறைந்தவன் என்பது அவளுக்கே போகப்போக புரிந்துவிடும்...



மாடி வராண்டாவில் நின்றிருந்த அதியமான் தங்கையின் குழம்பிய முகத்தை கவனித்துவிட்டு, அதைப்பற்றி விசாரிக்க வருவதற்குள் அவள் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்திருந்தாள்...



ஒரு பிங்க் நிற சுடிதாருக்கு மாறியவள் கண்ணாடி முன்பாக நின்று தன்னை ஆராய்ந்துப் பார்க்க, தீரன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தது நினைவில் எழுந்து அவளை ஸ்தம்பிக்க வைத்தது..!



பரபரவென கன்னத்தை அழுத்தித் தேய்த்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து வெளியே வந்தவளிடம் வந்த அதியன், "பாப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றதில் அங்கிருந்த இருக்கையில் தளர்வாக அமர்ந்து,



"சொல்லுண்ணா... ரொம்ப முக்கியமான விஷயமா?.." என்று வினவ,



"ஆமா அப்படி தான் பாப்பா..! உனக்கு உண்மையாவே மகேன பிடிச்சு தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சியா?" என்றவனின் பார்வை தங்கையைக் கூர்ந்தது...



அதியன் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் தீரன் முத்தமிட்ட நினைவு மீண்டும் வந்து தாக்க, அதை சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டு, "ப்ச் ண்ணா..! இதக் கேட்கவா இவ்ளோ பில்டப்? எனக்கு தனிப்பட்ட விருப்பம்னு ஒன்னு இல்லண்ணா.. நீங்க சொல்றீங்க அவ்ளோ தான்..." என்றாள் அவன் கண்களை சந்திக்க முடியாத தயக்கத்தில்..



சற்று முன்னதாக அவள் தீரனின் காரிலிருந்து சிரித்தபடி இறங்கியதைக் கண்டுவிட்டு தான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டது..!



அவனுக்கு மகேன் அளவுக்கு தீரனோடு பேசி பழக்கமில்லை...



இவனாக பேச ஆசைப்பட்டாலும் முன்பிருந்த தீரன் பேசியிருக்க மாட்டான் அல்லவா..!



ஒருவேளை தங்கை அவனை விரும்பினால், அந்த அகம்பாவியோடு வாழும் வாழ்க்கை அவளுக்கு இனிக்காது என்ற பயம் அவனை மிரட்டியது...



இப்போது மதிவதனி பேசியதை வைத்து மனதின் பாரம் சற்று நீங்கியிருந்தாலும் முழுதாக போகவில்லை...



அதற்கு மேல் அவளை நிறுத்தி வைக்காமல் கீழேப் போகும்படி அனுப்பியவன் யோசனையில் ஆழ்ந்தான்...



இங்கு தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் விழுந்த தீரனுக்கு அன்றைய இரவு தங்களின் முன்ஜென்ம நினைவுகள் கட்டாயமாக கனவில் வரும் என்ற நம்பிக்கை..!



எல்லாம் அவளை முத்தமிட்டதால் வந்த நம்பிக்கை..!



ஆனால் தனக்கு வரும் ஞாபகங்கள் அவளை மட்டும் இன்னும் தீண்டாமல் இருப்பதை நினைத்து அவனின் மனம் சிறு சுணக்கமும் கொண்டது...



இத்தனை வருடங்களாக எதையோ தேடி அலைபாய்ந்த அவனின் உயிர் நேற்றிலிருந்து நிறைந்துத் தழும்பியதை அவனால் உணர முடிந்தது..!



அவளுக்கு ஞாபகம் வராமல் போனாலும் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழும்போது அதே நிறைவை அவளும் உணர்வாள் என்று நம்பினான்...



அப்படியே கண்மூடி படுத்திருந்த தீரனுக்கு, மகேனோடு அவளுக்கு நடக்கவிருக்கும் நிச்சயம் அதுவாக நிற்பதற்குள் நீயாக எதையாவது செய்து அதனை நிறுத்திவிடு என்று உள்ளிருந்து ஒரு குரல் அறிவுறுத்த, தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்தவன் அன்று இரவுணவை முடித்துவிட்டு தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்த தந்தைக்கு முன்னால் சென்று, "ப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என்றான்...



"வா தம்பி..! இப்படி நடந்துக்கிட்டே பேசுவோம்.." என்று சொல்லிய ராமச்சந்திரன் மகனைக் கேள்வியாக ஏறிட,



"அ..அது இதுவரைக்கும் நானா எனக்கு இது வேணும்னு கேட்டதில்ல தானேப்பா..! ஆனா இப்போ நான் ஒன்னு கேட்பேன் நீங்க நோ சொல்லக்கூடாது.." என்றான் மென்மையான குரலில்...



அவன் கேட்பதற்கு முன்பே அவனுக்கு தேவையானதை செய்யும் பெற்றோர் இருக்கையில் எதற்காகக் கேட்க?



அதை சொல்லி மகனை கஷ்டப்படுத்த விரும்பாத அவர், "ம்ம் சொல்லு கண்ணா..! உனக்கு அப்படி என்ன வேணும்" எனக் கேட்டது தான் தாமதம், "எ..எனக்கு மதி..மதிவதனி வேணும்ப்பா..! ஐ லவ் ஹெர்.." என்றான் எவ்வித தயக்கமுமின்றி..



மகன் தொழில் சம்பந்தமாக எதுவும் கேட்பான் என்று நினைத்த ராமச்சந்திரனுக்கு அவன் மதியைக் கேட்டதில் ஒரு நொடி வார்த்தை வராமல் உறைந்துவிட்டு, "மகேந்திரா..!" என்றார் அழுத்தமாக...



"ஹாஹா..! ஆமாப்பா இந்த பழைய மகேந்திரனுக்கு அவனோட வது வேணும்.." என்றவனின் குரலில் தெரிந்த பிடிவாதத்தில் துணுக்குற்றார் அவனைப் பெற்றவர்...



ஆம்..! இவனும் மகேந்திரன் தான்..! மகேந்திரன் அபர்ஜித்..! சிறு வயதில் மகேனோடு ஒரே வகுப்பில் படித்தபோது இருவரையும் இனிஷியல் வைத்து அழைத்ததுப் பிடிக்காமல் ஒன்பது வயதிலேயே தன் பெயரை தீரன் அபர்ஜித் என்று மாற்றிக்கொண்ட பிடிவாதக்காரன்..!



"நீ ஆசப்பட்டுக் கேட்க மதி ஒன்னும் பொருள் இல்ல தம்பி... நான் உன்கிட்ட கேட்டு நீ வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் ம..மகேனுக்குப் பேசுனது... இப்போ திரும்ப வடிவேல்கிட்ட என்னால கேட்க முடியாது... இந்தப் பேச்ச இதோட விட்ரு கண்ணா..! அப்பா உனக்கு அவள மாதிரியே நல்ல பொண்ணுப் பார்க்குறேன்.." என்றார் நயமாக...



அவனை ஒரேயடியாக எதிர்த்தால் எந்தப்பக்கம் பாய்வான் என்பதைக் கணிக்க முடியாதென்பது அவருக்குத் தெரியுமே..!



அவரை ஆழ்ந்துப் பார்த்தவன், "ஹான் சரிப்பா..!" உடனே நல்லவனாக மாறி அவரை திகைக்க வைத்ததோடு அங்கிருந்து விலகி நடந்தான்...



தந்தை ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை அவன் ஏற்கனவே ஊகித்திருந்தான்... அதனால் அவனுக்கு பெரிதான ஏமாற்றமும் ஏற்படவில்லை..!



இதற்கு மேல் யாரிடமும் போய் நிற்கும் அளவுக்கு அவன் தைரியமில்லாதவன் இல்லையே... அவனாகவே அவளை அடைவான்..!



என்ன ஒன்று தன்னவளைக் காயப்படுத்தாமல் தன்னிடம் கொண்டு வரவேண்டும் என்ற கவனம் மட்டுமே இப்போது...



இங்கு அவள் அறையில் விழிமூடிப் படுத்திருந்த மதிவதனிக்கு தூக்கம் வந்தபாடாக இல்லை... இத்தனைக்கும் அவன் முத்தமிட்ட கன்னத்தின் குறுகுறுப்பு தாங்காமல் பலதடவை நீரால் அடித்துக் கழுவியிருந்தாள்...



இதுவரை எந்த ஆண்மகனும் அவளிடம் இப்படி நடந்து கொண்டதில்லை..! அவள் அதற்கு விட்டதும் இல்லை..!



இப்படி அவன் அத்துமீறும் வரையில் அவனை அனுமதித்ததே அதிர்ச்சி என்றால் அதற்குப் பிறகும் அவள் எதிர்ப்பார்த்த அளவுக்கு அவளால் அவன் மீது கோபத்தைக் காட்ட முடியவில்லை என்பது தான் அவளின் இப்போதைய பிரச்சினையே..!



தன் மனம்போன போக்கில் அதை அலைபாயவிட்டு புரண்டு புரண்டு படுத்தவள் எப்போது உறங்கினாள் என்பதை அறியாமல் உறங்கியிருந்தாள்...



தன்னவளை அடைய ஒரு வாய்ப்பாகப் பெயருக்கு தந்தையிடம் கேட்டுவிட்டு பால்கனியில் நின்று வான்நிலவை ரசித்துக் கொண்டிருந்த தீரன், ஒரு நீண்ட பெருமூச்சுடன் உள்ளே வந்து படுக்கையில் விழுந்தான்...



அவனின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் அவர்களின் காதல் நினைவுகள் அவனை வந்து ஆட்கொண்டது...!!!




அன்று இராஜசிங்காபுரி அரண்மனையில்...



மன்னர் அதியன் நெடுமாறனின் இறுதிச்சடங்கு முடிந்ததும் அங்கு ஒரு அசாதாரண பேரமைதி நிழவியது..!



உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தீரனைக் கண்ட கவுதமன் அவனிடம் விரைந்து, "எம்மை மன்னித்துக்கொள் தீரா..! மிகுந்த கவனத்துடன் இருந்தும் மன்னரைப் பாதுகாக்க இயலவில்லை..." என்று மீண்டும் வருந்த,



"நடந்ததை நினைத்து வருந்துவதால் எவ்வித பயனும் இல்லை கவுதமா..! இப்போது நம்முடைய ஒரே குறிக்கோள் மன்னரைத் தேடுவது மட்டுமே... நாம் ஒரு மூலிகையை வைத்து அவரை இறந்தவராக மாற்றி எதிரிகளிடம் இருந்துக் காப்பாற்ற நினைத்தால் இப்போது யார் அவரைக் கடத்தியது? அவர்களின் நோக்கம் என்ன? நம் திட்டங்கள் எவ்வாறு வெளியே சென்றன? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடையில்லை...



எனினும் இன்னும் ஒரு திங்களுக்குள் அவரை அரியணையில் மன்னராக அமர வைக்க வேண்டும்... பின்னர் அப்படி ஒரு நல்முகூர்த்தம் வருவதற்கு பல திங்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்பதை அரண்மனை ஜோசியர் முன்னரே கணித்துக் கூறியுள்ளார் கவுதமா..! நிச்சயமாக இந்நேரம் மன்னருக்கு சுயம் திரும்பியிருக்கும்...



எதிரி யாராயினும் நமது வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, மன்னரையும் கையில் வைத்துக்கொண்டு நம் ராஜ்ஜியத்தை விட்டு வெளியே செல்வதென்பது அவனுக்கு இயலாத காரியம்..." என்றவனின் அனுமானத்தை ஆமோதித்த கவுதமன்,



"அப்படி என்றால் அவன் எங்கே இருக்கிறான் என்பதைப் பற்றி உமக்கு ஏதும் ஊகமுள்ளதா தீரா?.." என்று வினா எழுப்ப,



"என் அனுமானம் சரியென்றால் அவன் நம் மன்னரை இந்த அரண்மனையில் தான் எங்கோ மறைத்து வைத்திருக்க வேண்டும்..! எனினும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இந்த பரந்து விரிந்த அரண்மனையில் தேடுவது சற்று கடினமான காரியம் கவுதமா..! நீர் இப்போதே தேடுதல் வேட்டையைத் தொடங்கு... நான் அதற்குள் ஒரு சிறு வேலையை முடித்துவிட்டு உன்னோடு இணைந்து கொள்கிறேன்.." என்று தங்களின் அடுத்தகட்ட பணிகளைப் பற்றி நண்பனிடம் தெரிவித்த இளந்தீரன் நேராக ராணியார் நயனத்தேனருவியின் முன்பாக நின்று பணிந்து வணங்கினான்...



அவனை அருகில் இருந்த ஆசனத்தில் அமருமாறு பணித்த ராணியார், "சொல் தீரனே..! எம் புதல்வனைக் கொன்றது யார் என்பதைக் கண்டுவிட்டாயா?" என்று வினவியதற்கு எந்த பதிலும் உரைக்காதவன், அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு நடந்த அனைத்தையும் தாழ்ந்த குரலில் அவரிடம் விவரித்தான்...



உயிர் நீத்ததாக நினைத்த தம் மைந்தன் உயிரோடு இருப்பதை அறிந்துகொண்டதில் விவரிக்க இயலா மகிழ்ச்சியில் நெஞ்சம் நெகிழ அக்கணத்தில் உறைந்திருந்தார் ராணியார்..!



பின்பு முதற்கட்ட அதிர்ச்சி நீங்கியதும் அவனிடம் நடந்ததைப் பற்றி மீண்டும் ஒருமுறை கேட்டுத் தெரிந்துகொண்டவர் அதியன் கிடைக்கும் வரை அவனை மன்னராக முடிசூட்டிக் கொள்ளும்படி பணித்தார்...



அவரின் வார்த்தையை மீற முடியாத தீரன் அந்நாட்டைக் காப்பதற்காக வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்த பின்னர் காலம் தாழ்த்தாமல், அடுத்த மூன்றாம் தினம் பொழுது புலர்ந்ததும் அரண்மனையின் முக்கியஸ்தர்களை அழைத்த ராணியார் தம் முடிவை அறிவித்ததோடு தீரனின் சிரசில் வைரங்கள் பதித்த தங்கள் நாட்டு மன்னருக்கு உரித்தான தங்க கிரீடத்தையும் அணிவித்துவிட்டார்...



அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஓர் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ஆதினியின் விழிகளில் பழிவெறி மின்னியது..!



அப்பொழுது அங்கு கூடியிருந்த சிலர் திருமணமாகாத ஒருவரை மன்னராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுப்புத் தெரிவிக்கவே, அவர்களை கூர்விழியால் நோக்கி தன் கம்பீர நகையை உதிர்த்த மகேந்திரன் இளந்தீரன், "யாருக்குத் திருமணம் முடியவில்லை... எமக்கு திருமணம் முடிந்துவிட்டது சான்றோர் பெருமக்களே..! இதோ இங்கே நிற்கும் ராணியாரின் புதல்வி, இந்நாட்டின் இளவரசி மதிவதனி தான் எம்முடைய மகாராணி..!" என்று உண்மையை உரைத்து அங்கு கூடியிருந்தவர்களோடு சேர்த்து அவனை மன்னராக்கிய ராணியாரையும் திகைக்க வைத்திருந்தான்...



சுற்றி நின்று அவனது விளக்கத்திற்காகக் காத்திருந்தவர்களை கவனத்தில் கொள்ளாமல், தன்னை தீவிழியால் சுட்டெரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய தன் தர்மபத்தினி மதிவதனியின் பின்னால் விரைந்தவன் சினம் தணியாமல் மேல்மாடத்தில் ஏற முயன்றவளின் கரம் பற்றி தடுத்ததோடு அருகாமையில் இருந்த ஓர் அறைக்குள் நுழைந்து கொண்டான்...



"எம்மை விடுங்கள் மன்னா..! இக்கணம் எமக்கு ஓய்வு எடுப்பது அத்தியாவசியமான ஒன்று..." என்று அவனிடமிருந்து விடுபட போராடியவளை தன் காதல் பார்வையால் அளந்தபடி,



"மன்னனா? நானா? அல்ல டி தங்கப்பெண்ணே..! நான் எப்பொழுதும் உமக்கு தீரன் மட்டுமே... எம்முடைய ராணிக்கு இன்னும் என்ன கோபமாம்?" என்றபடி தரையில் பார்வையைப் பதித்திருந்த அவளின் மதி முகத்தை நிமிர்த்தியவன் அவளது பிறை நெற்றியில் அழுத்தமாக இதழொற்றினான்...



தன்னை மயக்க முயன்ற மன்னவனை தன் பலம் கொண்ட மட்டும் விலக்கி நிறுத்திய மங்கையவள், "எம்மையா ராணி என்றீர்கள்? அல்ல மன்னா நான் தங்களின் ராணி அல்ல..! உங்களின் வீரவாளிற்கு கங்கணம் கட்டி விவாகம் செய்தாலே சோலைநாட்டு இளவரசி காஞ்சனை, அவளை அன்றோ தாங்கள் ராணியாக ஏற்க முடியும்.." என்று கோபமாக படபடத்ததில் மன்னனும் ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டான்..!



தொடரும்......
 
Last edited:
Top Bottom