மார்கழி மாத குளிரில் பகலவனும் சோம்பல் கொண்டு மெல்ல துயில் கலைய அன்றைய தினத்திற்கான வேலையை செய்யும் பரபரப்பில் மக்கள் வேளையில் மூழ்கினார்கள். குறிப்பாக குடும்பத் தலைவிகள். கணவன்மார்களையும், பிள்ளைகளையும் கிளப்ப மிகவும் பரபரப்பாய் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
சென்னையில் மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மற்ற வீடுகளை தாண்டி ஒரு வீடு மிகவும் பிரம்மாண்டமாய் இருந்தது. வீட்டின் தோட்டத்தில் ஒருவர் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்ல இன்னொருவர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார். இரண்டு மூன்று பேர் அங்கு இருக்கும் கார்களை துடைத்துக் கொண்டு இருந்தார்கள். வீட்டின் நடு கூடத்தில் இரண்டு பெண்கள் கூட்டி துடைத்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். உள்ளே சமையல் அறையில் இருந்து கமகமவென்று வாசனை காற்றில் பரவி அங்கு இருப்பவர்களுக்கு பசியை தூண்டியது.
வாசனை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றால் அங்கு அடர் நீல நிறத்தில் சிப்பான் புடவை கட்டியிருந்த இளம் பெண் மும்மரமாக சமைத்துக் கொண்டு இருந்தாள். கூந்தலை அல்லி கொண்டையிட்டு இருந்தவள், சில முடிகற்றுகள் அவளை போலவே அடங்காமல் அவள் முகத்தில் வந்து விழுந்திருந்தது. சமையல் அறையின் சூடு அவளின் சந்தன நிற முகத்தில் வைர கற்கள் போல் வேர்வை துளிகளை பூக்க வைத்தது. சீர் திருத்தப்பட்ட புருவங்கள் வெறும் நெற்றியில் இருக்க, அதற்கு கீழே இருக்கும் அளவான மூக்கில் எடுப்பான மூக்குத்தி ஒன்றி இருந்தது. தோராயமாக இருபத்தேழு வயது இருக்கும்.
சேலை முத்தானையினால் வியர்வையை துடைத்தவள் இரண்டு தண்ணீர் பாட்டிலில் குடிநீரை நிரப்ப்பினாள். அடுத்ததாய் ஒரே போல் இருக்கும் இரண்டு சாப்பாட்டு பையை எடுத்து மேஜையில் வைத்தாள். நேரத்தை பார்க்க மணி ஏழு என்று காட்டியது. வீட்டு வேலையை முடித்து விட்டு அவளின் வேலைக்கு வேறு அவள் செல்ல வேண்டும். வீட்டு வேலையை செய்ய ஆட்கள் நிறைய பேர் இருந்தாலும் வீட்டின் சமையல் அறையில் அவளை தவிர யாரும் வருவது அவள் பெற்ற புத்திரர்களுக்கு பிடிக்காது. அவள் சமைத்த உணவினை மட்டும் தான் உண்பார்கள். கொஞ்சம் ருசி மாறினாலும் உன்னன மாட்டார்கள். அதுவும் அவள் கையால் ஊட்டி விட்டாள் தான் போனால் போகிறது என்று உண்பார்கள். அவர்களின் பிடிவாதம் அவளை அதீத கோவப்படுத்தினாலும் மிகவும் பக்குவமாய் கையாலுவாள் தீர்த்தி. கோவம் என்று வந்தால் பெண் சிங்கமாய் உருமாறி விடுவாள். ஆனால் அவற்றை வீட்டில் மட்டும் காட்டிடவே மாட்டாள்.
தியா ஃபேஷன் பாரடைஸ் கம்பனியை நிறுவியவள். வேலையை பொறுத்தவரை அவள் எள் என்றால் எண்ணெயாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பாள். இந்த வீட்டை தாண்டி போனால் அவளுக்கு இருக்கும் முகமே வேறு. நேரம் ஆவதை உணர்ந்தவள் நேரே அவளின் புத்திரர்கள் இருக்கும் அறைக்கு சென்றாள். எட்டு முப்பதுக்கு பள்ளியில் இருக்க வேண்டும் ஆனால் மணி ஏழேகால், இன்னும் இருவரும் எழாமல் இருக்க அவர்களை எழுப்ப சென்றாள் தீர்த்தி.
அறை உள்ளே செல்ல ஐந்து வயது சிறுவர்கள் அறை போன்றே இல்லை. பொம்மைகள் புத்தகங்கள் என அனைத்தும் ஒருங்கே இருந்தது. இருவரும் தாய் சொல்லை தட்டாத செல்வங்கள். விளையாடிவிட்டு அவர்களே அடுக்கி வைத்து விடுவார்கள்.
இருவரும் இன்னும் எழாமல் இருப்பதை கண்ட தீர்த்தி, “சூர்யா, அருள் ரெண்டு பேரும் எழுந்திருங்க.. லேட் ஆச்சு ஸ்கூல்லுக்கு..” என்று கூறி போர்வையை விளக்க அருளை கட்டிக் கொண்டு சூர்யா படுத்திருந்தான்.
இருவர் தலையையும் பாசமாய் வருடியவள் இருவருக்கும் முத்தம் ஒன்றை பரிசாக கொடுத்தாள்.
“எழுந்திரிங்க” என்று கூறியவளுக்கும் அவர்களின் துயிலை கலைக்க விருப்பமே இல்லை.
அவர்கள் தூங்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்று இருந்தது அவளுக்கு. அவளின் உலகமே இந்த இரட்டையர்கள் தான். அவளை தவிர யார் சூர்யா யார் அருள் என்று மற்றவர்களுக்கு தெரியாது. தாய்க்கு தெரியாதது இருக்குமா என்ன? இருவரில் அருள் தான் மூத்தவன்.
தீர்த்தி குரல் கேட்டதுமே கண் விழித்து விட்டான். சூர்யா இன்னும் அண்ணன் கையில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான்.
தீர்த்தியை பார்த்ததும் அருள் மகிழ்ச்சியாக புன்னகைத்து, “ஹை, அம்மா சாரி கட்டி இருக்காங்க” என்று கூறி சூர்யாவை தள்ளி விட்டு அவளை கட்டிக் கொண்டான். ஏனோ அருளுக்கு அவன் அம்மா புடவை கட்டினால் அவ்வளவு பிடிக்கும். மற்ற உடையை காட்டிலும் அவளை புடவையில் பார்க்கவே அவன் ஆசை கொள்வான்.
அருள் தள்ளி விட்டதில் கண் விழித்த சூர்யா, கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தான். தீர்த்தி சிரித்துக் கொண்டே அருளை அனைத்துக் கொண்டாள்.
“அவனுக்கு மட்டும் ஹக் குடுக்குரிங்க?” என்று உதட்டை சூர்யா பிதுக்க தீர்த்தி சிரித்துக் கொண்டே அவனையும் காட்டிக் கொண்டாள்.
“குட் மோர்னிங் என் செல்ல குட்டி” என்று இருவர் தலையிலும் முத்தம் கொடுத்தாள் தீர்த்தி. இருவரும் ஒன்று போல், “குட் மோர்னிங் அம்மா” என்றிட தீர்த்திக்கு இத்தனை நேரம் இருந்த களைப்பு எல்லாம பறந்து புத்துணர்வு வந்தது போல் இருந்தது. தினமும் இதனை கேட்பாள் தான். ஆனாலும் அவர்கள் அருகில் மட்டும் அவள் சந்திக்கும் இன்னல்கள் எல்லாம் மறந்து வேறு உலகில் இருப்பது போன்று உணருவாள்.
“அம்மா சாப்பாடு செஞ்சிட்டேன், இப்போ முதல்ல யார் குளிச்சிட்டு வராங்களோ அவங்கள தான் முதல்ல நான் கிளப்பி விடுவேன்” என்று விளையாட்டாக தீர்த்தி கூற சூர்யா குடு குடுவென்று குளியலறை உள்ளே ஓடினான். அருள் அமைதியாய் அவள் மடியிலே அமர்ந்துக் கொண்டான்.
“நீ ஏன் அருள் போல” என அவன் தலை முடியை கலைத்து விட்டபடியே கேக்க, “நான் முதல்ல போனா அவன் அழுவான் மா.. நீங்க தானே நான் பிங் பாய் தம்பிய பாத்துக்கணும்னு சொல்லி இருக்கீங்க” என்று கூறிட அவள் உதட்டில் வலி நிறைந்த புன்னகை ஒட்டியது.
ஐந்து வயது சிறுவனிடம் இவ்வளவு பக்குவம் இருக்கிறதா என்று ஆச்சரியமாய் இருந்தாலும், மற்ற பிள்ளை போல் அவன் இல்லாமல் இருப்பது அவளுக்கு வருத்ததை கொடுத்தது. சூர்யா அடம் பிடிப்பது போல் அருள் ஒரு நாளும் செய்தது இல்லை. அனைத்திலும் விட்டு கொடுப்பான். இவ்வளவு முதிர்வு எங்கிருந்து வந்தது என்று யோசித்தவளுக்கு விடை தெரிய அவள் முகம் இறுகியது. அருளை பார்க்க பார்க்க அவளுக்கு பல நினைவுகள் வந்து போக சிரிப்பால் அவற்றை எல்லாம் தவிர்க்க பார்த்தாள்.
“நீ ரொம்ப குட் பாய் அருள், சரி நீ போய் பக்கத்து ரூம்ல குளி அம்மா பெட் சரி பண்றேன்” என்று கூறிட அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு குளிக்க சென்றான். லேசான சிரிப்புடன் தீர்த்தி மெத்தையை சரி செய்தாள். தலையனை அருகே ஒரு வரைபடம் இருந்தது. ஒரு அம்மா அப்பா அவர்களுக்கு இரு பக்கத்திலும் இருவர் கையை பிடித்துக் கொண்டு இருப்பது போல் இருக்க தீர்த்திக்கு பார்த்ததுமே புரிந்து விட்டது. இருவரில் சூர்யாவிற்கு தான் வரைவதில் ஆர்வம் மிகவும் அதிகம். அவன் தான் இதனை வரைந்து வைத்திருக்கிறான். பிள்ளைகளின் ஏக்கம் என்ன என்று பார்வையாலே தாயாக அவளால் உணர முடிந்தது. ஆனால் அதை காட்டிலும் இருவரும் வாயை திறந்து இந்நாள் வரை எதுவும் கேட்டது இல்லையே என்று வியப்புடன் இருந்தாள். மெத்தையில் அமர்ந்து தீர்த்தி அதனை பார்த்துக் கொண்டு இருக்க இடுப்பில் துண்டோடு குளியலறையில் இருந்து ஓடி வந்தான் சூர்யா.
“தீரா மா குளிருது” என்று அவன் நடுங்க அவன் செயலில் சிரித்த தீர்த்தி அருகே இருக்கும் துண்டை எடுத்து அவனை போர்த்தி துடைத்து விட்டாள்.
தீர்த்தி என்று அழைக்க சூர்யாவிற்கு வரவில்லை.. அதனால் தீர்த்தியை சுருக்கி தீரா என்று செல்லமாக அழைப்பான். தீர்த்தி அவனுக்கு பள்ளி சீருடை மாட்டி விட அருள் அவனே உடையை மாட்டிக் கொண்டு அங்கு வந்தான். இருவருக்கும் தலை வாரி விட்டு, பெல்ட், சாக்ஸ், ஷூ என்று அனைத்தையும் போட்டு விட்டு கீழே அழைத்து சென்றாள். வேலை செய்யும் இரு பெண்களும் மேஜையில் சாப்பாட்டை எடுத்து வைக்க தீர்த்தி இருவரையும் ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர வைத்து சாப்பாட்டை பரிமாறினாள்.
“தீரா மா ஊட்டி விடுறிங்களா?” என்று ஆசையாக சூர்யா கேக்க, உடனே அருள் சாப்பாட்டை எடுத்து சூர்யா முன்னே கொண்டு சென்றான்.
“அம்மா போய் ஆபிஸ்க்கு கிளம்பட்டும் நான் ஊட்டி விடறேன்” என்று கூற தீர்த்தி லேசாக புன்னகைத்தாள்.
“அம்மா போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று கூறிட இருவர் முகமும் வாடியது.
“அம்மா”
“தீரா மா”
இருவரும் ஒன்று போல் அவளை சோகமாய் அழைக்க தீர்த்தி இன்னும் சிரித்தாள்.
“சரிங்க டா.. சேரி மாத்தல போதுமா..” என்று கூறிட இருவரும் அவளை பார்த்து அழகாய் சிரித்தார்கள்.
சிரித்துக் கொண்டே தீர்த்தி அவள் அறைக்கு சென்று ஆபிஸ்சிற்கு கிளம்பினாள். இருவர் குணமும் ஒன்று போல் இருக்க இதற்கு எல்லாம் மூல காரணமானவனை நினைத்து அவள் பல்லை கடித்தாலும் கோவப்பட நேரம் இல்லை என்று கவனத்தை திசைதிருப்பி கீழே சென்றாள். இருவரும் சாப்பிட்டு முடித்து இருக்க அவர்களுக்கு பால் கொண்டு வர கூறினாள்.
இருவரும் ஒன்று போல் தலையை மறுப்பாக அசைத்தார்கள். அதை எல்லாம் கண்டுக் கொள்ளாத தீர்த்தி அவள் உணவை உண்டாள். வேலை செய்யும் கமலா அக்கா பாலை கொண்டு வந்து வைக்க, “அம்மா..” என்று அருள் கெஞ்ச, “தீரா மா வேணாமா.. குட் அம்மால” என அவள் சொல்வது போலவே கூறினான் சூர்யா.
“குடிக்கலன்னா சாயந்தரம் நான் விளையாட வர மாட்டேன்” என்று கூறியவள் அவர்கள் பக்கம் திரும்பாமலே சாப்பாட்டை சாப்பிட்டாள். இருவருக்கும் தனி தனி உணவுகள் சமைக்கும் பொழுது கூட அவளுக்கு இவ்வளவு களைப்பு ஏற்படவில்லை. ஆனால் இவர்களை குடிக்க வைக்க தான் அவளுக்கும் பெரும் வேலையாக இருந்தது.
இருவரும் குடிக்காமலே இருக்க, “குடிக்கலன்னா டிரைவர் அங்கிள் கூட தான் ஸ்கூல் போகணும்.. நான் வர மாட்டேன்” என்று கூற நிச்சயம் அம்மா வருவார் என்ற நம்பிக்கையில் இருவரும் அழுத்தமாய் இருந்தார்கள்.
அதில் பெரு மூச்சு விட்ட தீர்த்தி, “கமலா அக்கா சண்முக அண்ணாவ வண்டிய எடுக்க சொல்லுங்க, மூர்த்தி அண்ணாவை இன்னிக்கு பசங்களை ஸ்கூல்ல விட சொல்லுங்க” என்று கூறிட சூர்யா வேகமாய் பால் டம்மிலாரை எடுத்து குடிக்க ஆரம்பிக்க அருள் மிகவும் கடினப்பட்டு குடிக்க ஆரம்பித்தான்.
“அப்படி வாங்க டா வழிக்கு” என்று நினைத்த தீர்த்தி கமுக்கமாய் சிரித்துக் கொண்டாள். இப்படி தினமும் ஏதாவது காரணம் சொல்லி அவர்களை மிரட்டி தான் வழிக்கு கொண்டு வர வேண்டியதாய் இருக்கிறது. அவள் சாப்பிட்டு முடித்ததும் மூவரும் கிளம்பினார்கள்.
கருப்பு நிற பென்ஸ் காரில் மூவரும் ஒன்றாய் சென்றார்கள்.
டிரைவர் சண்முகம் காரை ஓட்ட தீர்த்தி அவளின் டேப்லெட்டில் அன்றைய தினம் அவள் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொண்டே வந்தாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இரு வாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
பள்ளி வந்ததும் கார் நிற்க, தீர்த்தி அவர்கள் இருவரையும் இறக்கி விட்டுக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது அவர்களுக்கு அறுகே இன்னொரு கார் ஒன்று வந்து நின்றது. அடர் நீல நிற காட்டன் புடவையில் ஒரு பெண் இறங்கினாள். கலையான முகம். ஆனால் முகத்தில் அதற்கான பொலிவு இல்லை. கண்களில் சோகம் குடி இருந்தது. காரில் இருந்து அவளின் ஏழு வயது பெண்ணை இறக்கி விட்டாள். அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பி விட்டு திரும்ப தீர்த்தியும் அவளின் இரு மகன்களும் அந்த பெண்ணை பார்த்தபடி நின்றிருந்தார்கள். அந்த பெண் ஒரு நொடி இரு சிறுவர்களையும் பார்த்து விட்டு தீர்த்தியை கண்டும் காணாமல் காரில் ஏற போனாள்.
அவளை தடுக்க நினைத்த தீர்த்தி, “அண்ணி” என்று அழைக்க கடுப்பில் கண்களை இறுக மூடினாள் அவள்.
“ரூபாக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
அந்த பெண்ணிற்கு தான் பதில் சொல்ல கொஞ்சமும் விருப்பம் இல்லை.
“அண்ணி” என்று தீர்த்தி மீண்டும் அழைக்க, அவள் பக்கம் கோவத்துடன் திரும்பியவள், “முடிஞ்சி போன உறவை திரும்பவும் ஆரம்பிக்காத.. உன்ன தான் எப்போவே தலை முழுகியாச்சுல்ல.. இன்னும் என்ன உறவு கொண்டாட வந்துட்ட.. இன்னொரு முறை இப்படி பேச வந்த அப்பறம் அசிங்கம் ஆகிரும்” என்று சீற்றத்துடன் கூறி விட்டு காரில் ஏறி கதவை அறைந்து சாற்றினாள்.
அவள் கோவத்திற்கு ஏற்ப காரும் சீறி பாய்ந்தது. வலி நிறைந்த விழிகளுடன் தீர்த்தி அந்த காரை பார்த்துக் கொண்டு இருக்க, இரு மகன்களும் அவளின் கையை பிடித்து இழுத்தார்கள். அதில் அவர்களை பார்த்த தீர்த்தி, அவர்கள் உயரத்திற்கு அமர்ந்தாள். அருள் ஒரு பக்கமும் சூர்யா ஒரு பக்கமும் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு அவளை கட்டிக் கொண்டார்கள். அவளை அறியாமலே அவளின் கண்ணீர் வெளி வந்தது.
இவர்களை பார்த்துக் கொண்டு இருந்த சண்முகத்திற்கு மனம் கஷ்ட்டமாக இருந்தது. தீர்த்தி பிறந்ததிலிருந்தே அவர்கள் குடும்பத்தில் வேலை பார்க்கிறார். இடையில் ஏற்பட்ட பல பிரச்சனைக்கு பின்பும் தீர்த்தி பெற்றோர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற அவளுக்கு விசுவாசமாய் அவளிடம் வந்து விட்டார்.
“மிசஸ்.தீர்த்தி” என்று அழைத்தபடியே அருள், மற்றும் சூர்யாவின் வகுப்பாசிரியர் அங்கு வந்தார்.
அதில் எழுந்து நின்ற தீர்த்தி, “ஹலோ மேம்” என மரியாதையாக தலையசைக்க, வகுப்பாசிரியர் சிநேகமாய் புன்னகைத்தார்.
“மேம், இந்த வாரம் PTA இருக்குறதை பத்தி பசங்க சொன்னாங்களா?” என்று அவர் கேக்க, அதில் கேள்வியாக முகத்தை சுருக்கிய தீர்த்தி இருவரையும் பார்த்தாள். இருவரும் தலையை குனிந்துக் கொள்ள அவர்களின் ஆசிரியரை பார்த்து மறுப்பாக தலையை அசைத்தாள்.
“இட்ஸ் ஓகே மேம், மீட்டிங் முன்னாடி நாள் மெசேஜ் வரும், இந்த முறை ஆச்சும் பசங்களோட அப்பா வருவாங்களா?” என்று கேக்க தீர்த்தி பதில் சொல்ல முடியாமல் நின்றாள். அந்த நொடி புரிந்தது ஏன் இருவரும் அவளிடம் இதை பற்றி கூறவில்லை என்று.
லேசாய் சிரித்து சமாளிக்க பார்த்தவள், “சாரி மேம், அவரு லண்டன்ல இருக்காரு.. பிசினஸ் விசயமா கொஞ்சம் பிஸியா இருக்காரு” என்றாள்.
“ஓகே மேம், நீங்க மறக்காம வந்துருங்க, கிட்ஸ் வாங்க நம்ம கிளாஸ்க்கு போலாம்” என்று வகுப்பாசிரியர் அழைக்க, தீர்த்தி இருவர் கன்னத்திலும் முத்தம் பதித்து வழி அனுப்பி வைத்தாள். அவர்கள் சென்றதும் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு மொத்தமாய் வடிந்தது.