• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 10

ரோசி கஜன்

Administrator
Staff member

இரவு நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருந்த தீர்த்தி அவளை அறியாமலே விடியர் பொழுதில் தான் உறங்கிப் போனாள். சூரியன் அறை உள்ளே பளிச்சென்று நுழைய அவன் கதிர்வீச்சில் கண்விழித்தாள். கண்ணை திறந்ததுமே முதலில் அவள் தேடியது என்னவோ அவளின் பிள்ளைகளை தான். இருக்கும் இடம் அறிந்தவள் பெருமூச்சுடன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர, அப்பொழுதுதான் அவள் இருந்த அறையை நன்றாக சுற்றி பார்த்தாள். ஆறு வருடங்களுக்கு முன்பு எப்படி இந்த அறையை அவள் மாற்றி வைத்தாளோ இன்றும் அதே போல் அப்படியே இருந்தது.

ருத்ரனின் பொருட்களை எவ்வாறு அவள் அடுக்கி வைத்திருந்தாளோ அந்த இடத்திலிருந்து அது கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தது. அவள் விட்டு சென்ற உடைகள் இன்னும் அப்படியே அங்கு இருந்தது. அவளுக்காக மேலும் புதிய துணிகளை வாங்கி வைத்திருந்தான். அளவு கச்சிதமாய் இருந்தது. குளித்து முடித்து அதனை உடைத்தியவள், கண்ணாடி முன்பு நின்றாள். ருத்ரனின் சீப்பு, சென்ட், என அனைத்தையும் எந்த டிராவில் அவள் வழமையாய் வைப்பாளோ அதே இடத்தில் இருந்தது. அவள் மாற்றி வைத்த எதையும் மாற்றாமல் வைத்திருந்தான் ருத்ரன். மாற்றும் எண்ணமும் அவனுக்கில்லை. இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று அவள் மனம் யோசிக்காமல் இல்லை. அலைபாயும் மனதை அடக்கி விட்டு நேரடியாக கீழே இறங்கி பிள்ளைகளின் அறைக்கு சென்றாள்.

கதவைத் திறந்தவள் கண்ட காட்சியில் லேசாய் அதிர்ந்து போனாள். அருளும் சூர்யாவும் மெத்தையில் ஆளுக்கு ஒரு பக்கமாய் உருண்டு படுத்து இருக்க, சூர்யாவின் பக்கத்தில் தலையணையை அணைகட்டி வைத்திருந்தான் ருத்ரன். மெத்தையின் மறுபகுதியில் கீழே அமர்ந்த வாக்கிலே மெத்தையில் தலை சாய்த்து அருள் கால்களை பிடித்தபடி உறங்கிக் கொண்டு இருந்தான் ருத்ரன்.

“பசங்க கூட தூங்கணும்னா பெட்டுல ஏறி படுத்து இருக்க வேண்டியதுதானே” என்று உள்ளுக்குள் கடுகடுத்தவள் அவனை பொருட்படுத்தாது அருளையும் சூர்யாவையும் எழுப்ப சென்றாள்.

இருவரின் தலையையும் பரிவாய் வருடிவிட்டவள் ஆளுக்கொரு முத்தத்தை நெற்றியில் பரிசாக கொடுத்து மெல்ல எழுப்பினாள்.

“அருள் சூர்யா ரெண்டு பேரும் எழுந்திரிங்க..” என்று மிகவும் மென்மையாய் அவள் எழுப்ப அவர்கள் எழுந்தார்களோ இல்லையோ ருத்ரன் எழுந்து விட்டான். ஒரே பக்கமாய் தலை சாய்த்து படுத்து இருந்ததில் கழுத்து வலி வர நெற்றி முறித்தவன் தலையை அங்குட்டும் இங்குட்டும் ஆட்டி சரி செய்ய பார்த்தான்.

“ரெண்டு பேரும் எழுந்திரிங்க மணி ஆச்சு பாருங்க” என கொஞ்சியபடியே மெல்ல எழுப்ப சூர்யா முதலில் லேசாக கண்ணை திறந்தான். தீர்த்தி சத்தத்தில் அருள் புரண்டு அவள் பக்கம் படுத்து கொண்டான்.

“என்ன இன்னைக்கு ரெண்டு பேரும் எழுந்திருக்கவே மாட்டேங்கிறீங்க.. இப்ப ரெண்டு பேரும் எழுந்திருக்க போறீங்களா இல்லையா” லேசாக குரலை உயற்றி அவள் எழுப்ப இருவருமே படுத்துக் கொண்டு கண்களை திறந்தார்கள்.

“குட் மார்னிங் அம்மா” என தூக்க கலக்கத்தில் அருள் கூற சூர்யா தீர்த்தியை கண்களை கசக்கி கொண்டே பார்த்தான்.

இருவரின் செயலில் லேசாய் சிரித்தவள், “ரெண்டு பேரும் இப்ப எழுந்து நிக்கிறீங்களா இல்ல நான் எழுந்திருச்சு போகவா” என்றதும் உடனே இருவரும் எழுந்து அவள் மடியில் படுத்து கொண்டார்கள். அவர்களது செயலில் தீர்த்தி இன்னமும் சிரித்தாள்.

இவர்கள் மூவரும் ஒரு உலகத்தில் இருக்க ருத்ரன் என்னவோ ஒதுக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தான். அவர்கள் இருவரும் அவன் பிள்ளைகள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அவன் இல்லை என்ற உணர்வு அவனை மூச்சடைக்க வைத்தது. நேற்றிலிருந்து அவனும்தான் பார்க்கிறானே இருவரும் அம்மா அம்மா என்று அவளின் முந்தானையை பிடித்துக் கொண்டு அல்லவா சுற்றுகிறார்கள். அவர்களுக்கு அப்பா பற்றிய நினைவு வந்திருக்கிறதா என சந்தேகம் அவனுக்கு எழுந்தது. இந்த விஷயத்தில் தீர்த்தியை நினைத்து அவனுக்கு பொறாமையாக இருந்தது. ஒரு பக்கம் அவன் மீது அவன் குற்றம் சுமத்திக் கொண்டான். இத்தனை வருடம் அவர்கள் வாழ்க்கையில் இல்லாததால் தான் அவர்களை இழந்து இன்று தவிக்கிறோம் என உணர்ந்தாலும் அவர்களின் பாசம் அவனுக்கு கிடைக்குமா என ஏங்கினான்.

ஏக்கப்பார்வையுடன் அவர்கள் மூவரையும் பார்க்க, தீர்த்தி இருவருக்கும் கிச்சுகிச்சு மூட்டி எழுப்பி விட்டாள். இருவரின் சிரிப்பு சத்தம் அந்த வீடே நிறைந்திருக்க, ருத்ரனுக்கு அந்த காலை ரம்மியமாய் இருந்தது. ஏக்கத்தில் இருப்பவனுக்கு தானே இது புரியும். ரசனையுடன் அவர்களை பார்க்க, அவனை முதலில் கவனித்தது சூர்யா தான்.

“குட் மார்னிங் அங்கிள்” என குழி விழும் சிரிப்போடு கூறிட அதே புன்னகையுடன் ருத்ரனும் பதில் அளித்தான். ருத்ரனுக்கு இருக்கும் கன்னக்குழி அவனின் மகன்கள் இருவருக்கும் அப்படியே இருந்தது.

சூர்யா ருத்ரனுடன் பேசிட அருள் தீர்த்தி மடியிலே ஒன்றி கிடந்தான்.

“அங்கிள் நேத்து ஃபிஷ் பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்கல இன்னைக்கு கூட்டிட்டு போறீங்களா? நம்ப அம்மாவையும் கூட்டிட்டு போலாமா?” சிறுவனுக்கே உரிய ஆர்வத்துடன் சூர்யா கேட்க ருத்ரன் சம்மதமாய் தலையசைத்தான்.

“கண்டிப்பா உங்க அம்மா ஓகே சொன்னா நம்ப உடனே கிளம்பி போகலாம்.. சூர்யா குட்டிக்கு எங்கெங்க போகணுமோ அங்க எல்லாம் போலாம் ஓகே?” என அவனும் கொஞ்ச, சூர்யா மகிழ்ச்சியில் குதித்தான். தீர்த்தி சிறு புன்னகையுடன் சூர்யாவை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவன் உற்சாகமாய் இருக்க அருள் மட்டும் சோர்வுடன் தீர்த்தியின் மடியில் படுத்து இருந்தான். அவனை கவனித்த தீர்த்தி, உடனே அவன் நெற்றியில் கைவைத்து உடல் சூடாக இருக்கிறதா என சரி பார்த்தாள்.

“என்ன ஆச்சு அருள் ஏன் இப்படி இருக்க இன்னும் கொஞ்ச நேரம் உனக்கு தூங்கணுமா?” என பரிவுடன் கேக்க, அவனின் முகத்தை மேலும் அவள் மடியில் புதைத்துக் கொண்டவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“அம்மா அண்ணா நேத்துல இருந்து இப்படி தான் இருக்கான் சரியா பேசவே மாட்டேங்கிறான்..” என சூர்யா கூற ருத்ரனும் அருளை கேள்வியாக பார்த்தான்.

நேற்றிலிருந்து அவனும் பார்த்து கொண்டுதான் இருக்கிறான். அருள் அவனை முறைத்து கொண்டே இருப்பதும், பேசாமல் அமைதியாய் இருப்பதையும் வழக்கமாய் வைத்திருந்ததை.

“அருள் இங்க பாரு அம்மா பாரு” என அவனை நிமிர்த்த, பாவமாய் அவளை பார்த்தான். “என்ன ஆச்சு அருள் ஏதாவது வேணுமா? அம்மா மேல எதுவும் கோவமா இருக்கியா?”.

அவள் கேட்ட கேள்வியில் உடனே மறுப்பாக தலை அசைத்த அருள் அவளை கட்டிக் கொண்டான். அவளின் அரவணைப்பை அவன் நாடுகிறான் என உணர்ந்தவள் அவனை கட்டிக்கொண்டு தலையை பரிவாக வருடிவிட்டாள்.

“எப்போதுமே அருள் இப்படி இருந்ததில்லையே என்னாச்சு அவனுக்கு? இங்க வந்துல இருந்து அவன் முகமே சரி இல்ல.. இங்க வர வழியில ஏதாவது நடந்திருக்குமா ஆனா பிரயுக்தா கூட தானே இவங்க வந்தாங்க அப்படின்னா இவங்க பயந்து இருக்க வாய்ப்பே இல்லை, அவ கிட்ட கேட்டு பாக்கணும்.. இல்லனா ஒரு வேலை ஹோம் சிக்கா பீல் பண்றானோ என்னவோ” என மனதினுள்ளே நினைத்தவள் அருள் தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.

“சரி அம்மா தோசை ஊத்தி தரவா ரெண்டு பேரும் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறீங்களா.. சாப்டுட்டு நம்ம வேணும்னா வெளிய போலாம்?” என அவன் நிலைமையை சரி செய்ய கேட்க அருள் மறுப்பாக தலையசைத்தான்.

“எனக்கு எங்கேயும் போக வேணாம் நான் உங்க கூடவே இருக்கேன் மா” என கூற, தீர்த்திக்கு ஏதோ சரி இல்லை என புரிந்தது.

“அம்மா அண்ணா வரலைன்னா அப்போ நானும் போகல” என சூர்யா கூற அவள் பெருமூச்சுடன் சம்மதம் தெரிவித்தாள்.

ஆனால் ருத்ரனுக்கு தான் மனம் கஷ்டமாய் இருந்தது. பிள்ளைகளுடன் அவளும் வருவாள் நான்கு பேரும் ஒரே குடும்பமாய் ஒன்றாய் வெளியே சென்று விட்டு வரலாம் என மிகவும் ஆசையுடன் இருந்தான். ஆனால் இப்பொழுது அது எதுவும் இல்லாமல் போக அவனுக்கு வேதனையாய் இருந்தது. அதனை காட்டிலும் அருளின் மவுனம் அவனை ஏதோ செய்தது. இன்னும் சொல்ல போனால் அருள் பார்வையை அவனால் சந்திக்க முடியவில்லை. ஏதோ ஒரு குறுகுறுப்பு அவன் மனதை அரித்தது.

“சரி ரெண்டு பேரும் இன்னொரு நாள் வெளிய போங்க இப்போ யாரு ஃபர்ஸ்ட் குளிச்சிட்டு வரீர்களோ அவங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் தோசை” வழக்கம் போல் அவள் விளையாட்டாக கூற சூர்யா உடனே மெத்தையை விட்டு இறங்கினான்.

“நான் தான் ஃபர்ஸ்ட் போவேன் ஆனா அம்மா டவல் எங்க இருக்கு” என கேக்க, தீர்த்தி உடனே ருத்ரன் பக்கம் திரும்பினாள். அவள் பார்வையை புரிந்து கொண்டவன் உடனே அங்கு இருக்கும் கப்போர்டில் இருந்து இரு துண்டும் இரண்டு செட்டு டிரஸ்சும் எடுத்து மெத்தையில் வைத்தான். ஒருவித ஏக்கத்துடன் சூர்யாவிடம் துண்டை கொடுத்து, “நான் வேணும்னா உன்ன குளிப்பாட்டி விடவா?” என ஆசையாக கேட்டான். அதில் சிரித்தான் சூர்யா.

“அங்கிள் நான் இப்போ பிக் பாய் அதனால நான் தனியாவே குளிப்பேன்..”

துண்டை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடிவிட ருத்ரன் சிறுசிறுப்புடன் நின்றான். அவன் பார்வை அருள் மீது படிய, இவ்வளவு நேரம் ருத்ரனை பார்த்துக் கொண்டு இருந்தவன் அவன் பார்த்ததும் தீர்த்து நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொண்டான்.

“என்ன ஆச்சு இந்த பையனுக்கு சூர்யா மாதிரி நம்ம கிட்ட பழக மாட்டேங்கிறானே.. ஒருவேளை அவனுக்கு என்ன பிடிக்கலையோ?” என பலவாறாக யோசித்தான்.

“தம்பி கோச்சுப்பான்னு அவனே பஸ்ட் போகட்டும்னு விட்டுட்டியா அருள்?” என அவன் முடியை வருடியபடியே கேக்க, “இல்லம்மா எனக்கு உங்க கூட இருக்கணும்” என்றான்.

சோர்வான குரலில் அருள் பேசுவது அவளுக்கு நெஞ்சை பிசைந்தது. ஏதோ ஒன்று அருளை போட்டு உலுக்குகிறது என புரிந்து கொண்டாள்.

அருளிடம் தனியாக பேசி அவனை சரி செய்ய வேண்டும் என நினைத்தாள்.

“சரி அருள் தம்பி குளிச்சிட்டு வந்ததும் நீ போய் குளி சரியா.. அவன் வந்ததும் உங்க ரெண்டு பேரையும் ரெடி பண்ணிட்டு நம்ப போய் தோசை ஊத்தி சாப்பிடலாம் ஓகே” என பரிவாய் கூறினாள்.

அருள் சம்மதமாய் தலையசைக்க தீர்த்தி ருத்ரனை பார்த்தாள். பிள்ளைகள் முன்பு எதையும் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை. அதனால் மவுனமாகவே இருந்தாள். மீண்டும் அவள் கேட்காமலே அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டான் ருத்ரன்.

உடனே அறையை விட்டு வெளியே வந்தவன் இளங்கோவை அழைத்து, “உங்க அண்ணி சமைக்கப் போறா கிச்சன்ல தேவையான பாத்திரம் காய்கறி என்னென்ன வேணுமோ அதை எல்லாத்தையும் உடனே ரெடி பண்ணு. பசங்க தோசை சாப்பிடுவாங்களாம் அதனால மாவு வாங்கிட்டு வந்து வை தொட்டுக்க சாம்பார் வைப்பாலா? சட்னி வைப்பாலான்னு தெரியல அதனால எல்லாத்தையும் ரெடி பண்ணி வை.. இது எல்லாம் பசங்க குளிச்சிட்டு வாரத்துக்குள்ள ரெடி பண்ணிடு அப்புறம் பிரிட்ஜ்ல இருக்கிற சரக்கு பாட்டில் எல்லாத்தையும் உங்க அண்ணி பாக்குறதுக்குள்ள தூக்கி போட்டுடு” என கட்டளையிட்டுவிட்டு குளிக்க சென்றான்.

செல்லும் ருத்ரனையே சிறு சிரிப்புடன் உடன் பார்த்த இளங்கோ, “இப்பதான் இந்த வீடு வீடா மாறப்போகுது” என சொல்லிக் கொண்டு அவன் சொன்ன வேலையை செய்ய சென்றான்.

அடுத்த அரை மணி நேரத்தில் தீர்த்தி பிள்ளைகள் இருவரையும் கிளப்பிக்கொண்டு வெளியே வர கிச்சனில் அனைத்தும் தயாராக இருந்தது. புதிதாய் பாத்திரங்கள் முதற்கொண்டு, கத்தி, மற்ற சமையல் பொருட்கள் வரை அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அருளையும் சூர்யாவையும் மேடையில் அமர வைத்தவள் ஆளுக்கு ஒரு கேரட்டை கையில் கொடுத்து சாப்பிட சொல்லி, சாம்பார் வைக்க காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். பிள்ளைகளிடம் பேசியபடியே அவள் வேலை செய்து கொண்டு இருக்க ருத்ரனும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

கிச்சன் உள்ளே சென்றால் அவர்கள் மூவரின் பேச்சும் தட்டுப்படும் என நினைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான். வெளியே இருந்தபடியே அவர்கள் பேசுவதை ரசித்துக்கொண்டிருந்தான். மாவு பாக்கெட் வாங்கி வந்த இளங்கோ நேராக கிச்சனுக்கு சென்று அங்கு வைத்தான். பிள்ளைகளின் முடியை கலைத்து விட அருள் லேசாக புன்னகைதான்.

ஆனால் சூர்யாவோ, “அம்மா பாருங்க இந்த அங்கிள் என் தலை முடியை கலைச்சு விட்டுட்டாரு” என புகாரலித்தான்.

“அடடா ஹீரோ சாருக்கு கோபத்தை பாருங்க..” என வம்பிழிக்க, சூர்யா அவனுக்கு பலிப்பு காட்டினான். அவன் செயலில் சத்தமாய் சிரித்தான் இளங்கோ.

“இளங்கோ நான் எல்லாருக்கும் சேர்த்து தான் சமைக்கிறேன்.. சாம்பார் ரெடி ஆயிடுச்சு தோசை ஊத்துனதும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என பொதுவாய் அவள் கூறிட இளங்கோ சம்மதமாய் தலையசைதான்.

“என்ன அண்ணா உங்க காதுல விழுந்துச்சா?” என உள்ளே இருந்தபடி இளங்கோ கத்த ருத்ரன் அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாய் இருந்தான்.

தீர்த்திக்கு தெரியும் ருத்ரனை விட்டு விட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் இருவரும் சும்மா இருக்க மாட்டார்கள் என்று. அதுவும் இல்லாமல் பிள்ளைகளுக்காக அவன் ஏங்குவதை அவளும் தானே கண்டாள். அதனால் பிள்ளைகளுடன் அவன் சாப்பிடட்டும் என நினைத்தாள் தீர்த்தி.

“நான் எல்லாரையும் சொன்னது பிரயுக்த்தாவையும் சேர்த்து தான்.. அவளையும் சாப்பிட கூட்டிட்டு வா” என்று கூற, இளங்கோ தயங்கினான்.

“அது வந்து அண்ணி..” என அவன் இழுக்கும் பொழுதே, “கூட்டிட்டு வா இளங்கோ” என ருத்ரன் குரல் கொடுத்தான்.

இளங்கோ சம்மதமாய் தலை அசைக்க, “அங்க சொன்னாதான் வேலை நடக்குமோ” என புருவத்தை உயர்த்தினாள் தீர்த்தி.

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல அண்ணி அது வந்து..”

“போதும் போதும் ரொம்ப நடிக்காத.. போ அவளை கூட்டிட்டு வா” என கூற அவனும் சரி என்று செல்ல பார்த்தான். ஆனால் அவனின் கையை பிடித்துக் கொண்டான் சூர்யா.

“அங்கிள் நானும் உங்க கூட வரேன் என்னையும் கூட்டிட்டு போங்க” என அமர்ந்திருந்த இடத்திலே துள்ளிக் கொண்டு இருக்க இளங்கோ தீர்த்தியை பார்த்தான். அவள் சம்மதமாய் தலையசைக்க சூர்யாவின் மூக்கை நிமிடினான்.

“உன்ன கூட்டிட்டு போகணுமா அப்போ பதிலுக்கு நீ ஒன்னு பண்ணனும் பண்ணுவியா?”

“என்ன பண்ணனும் அங்கிள் சொல்லுங்க”

“என்ன சித்தப்பான்னு கூப்பிடு உன்ன கூட்டிட்டு போறேன்” என்று கூற, தீர்த்தி புருவத்தை உயர்த்தினாள்.

“ஹிஹிஹி.. அது வந்து நான் உங்கள அண்ணின்னு சொல்றேன்ல அப்படி பார்த்தா அருளுக்கும் சூர்யாக்கும் நான் சித்தப்பா தானே.. இவங்க என்ன மாமானு கூப்பிட்டா அப்புறம் எல்லாமே ரொம்ப தப்பா ஆயிடும்” என அசடு சிரிப்பு சிரிக்க சிறு சிரிப்புடன் தீர்த்தி தலை அசைத்தாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாத இளங்கோ சூர்யாவை அப்படியே தூக்கிக் கொண்டவன், அருளை பார்த்து, “நீயும் வரியா?” என கேக்க, “இல்ல நான் அம்மா கூட இருக்கேன்” என்றான். இளங்கோ வெளியே சென்று விட ருத்ரன் பார்வை சமையல் கட்டிலே இருந்தது.

“இங்க நான் ஒருத்தன் இருக்கிறதே அவ கண்ணுக்கு தெரியாத மாதிரி நடந்துக்கிறா. சரியான பிடிவாதக்காரி இவளை எப்படித்தான் நான் சரி கட்ட போறேனோ. இவளை மாதிரியே அங்க உள்ள ஒருத்தன் உட்கார்ந்து இருக்கான் அவன் மனசுல வேற என்ன இருக்குன்னு தெரியல.. பசங்க ரெண்டு பேருமே அவ மட்டும்தான் அவங்களோட உலகம்னு இருக்காங்க இவ்வளவு சந்தோஷமா இருக்கிற அவங்க வாழ்க்கையில திடீர்னு நான் எப்படி போறது? அவங்க வாழ்க்கையில எனக்கான இடம் கொஞ்சம் கூட இல்ல” என நினைக்கவே ருத்ரனுக்கு மனம் ரணமாய் வலித்தது.
 
Top Bottom