தீர்த்தியின் ஆபிஸ் ரூமில் பெரும் அமைதியே நிலவி இருந்தது. அழைப்பு துண்டிக்கப்பட்டு முழுதாய் ஐந்து நிமிடம் ஆகியும் இருவரும் பேசவே இல்லை. தீர்த்தி ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருக்க, பிரயுக்தா அவள் என்ன முடிவு எடுப்பாள் என்ற யோசனையிலே இருந்தாள். நன்கு யோசித்த தீர்த்தி கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு வேகமாய் எழ, அவளுடன் எழுந்தாள் பிரயுக்தா.
“அவசரப்படாத.. இப்போ என்ன அங்க போக போறியா? கூட நானும் வரேன்.. நம்ம கார்ட்ஸ் சில போரையும் கூட்டிட்டு போவோம்” அவளின் கைகளை பிடித்துக் கொண்டு கூற தீர்த்தி வருத்தம் தேய்ந்த முகத்துடன் மறுப்பாக தலை அசைத்தாள். “நீ இங்கயே இருந்து கம்பெனிய பாத்துக்க, இனி நான் இங்க வருவேனான்னு தெரியல.. நம்ம எத்தனை பேர கூட்டிட்டு போனாலும் என்னையும் என் பசங்களையும் அவன் கிட்ட இருந்து காப்பாத்த முடியாது. ஒன்னு நானே போய் மொத்தமா முடிக்கணும்.. இல்ல நான் பண்ண தப்புக்கான தண்டனைய அனுபவிக்கனும்” என்றவளின் குரல் உடைந்திருக்க,
அதனை தாங்க முடியாதவள், “நீ என்ன டி தப்பு பண்ண? அவங்க பிரச்சனையில உன் வாழ்க்கை தான் இந்த நிலமையில இருக்கு” என ஆதங்கத்துடன் கூறினாள்.
அதில் வலி நிறைந்த புன்னகையை வெளியிட்ட தீர்த்தி, “அவன காதலிச்சேனே.. அத விட பெரிய தப்பு என்ன இருக்க போது?” என்றாள்.
பிரயுக்தா என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருக்க, தீர்த்தி அவளின் போனை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப தயாரானாள். முன்பே அனைத்து ஏற்பாடையும் ருத்ரன் செய்திருக்கிறான் என அவளுக்கு தெளிவாய் புரிந்தது.
“பிரயு, கம்பெனிய பாத்துக்க.. முடிஞ்சா உனக்கு கால் பண்றேன்..” என்றிட, “நானும் வரேன் டி.. உன்ன விட்டா எனக்கு யாரு இருக்கா?” என கூறியவளுக்கும் கண்கள் கலங்கியது.
தீர்த்தி பேசுவதிலே அவள் திரும்ப வருவது நடக்காத காரியம் என்று அவளுக்கு புரிந்தது. இத்தனை வருடமாய் யாருமில்லா பிரயுக்தாவிற்கு அவள் ஒருவள் தான் அடைக்கலமே. தீர்த்தியின் பிள்ளைகளுக்கு அவளும் மற்றொரு தாய் ஆகி இருந்தாள். இனி பிள்ளைகள் இருவரையும் அவளையும் பார்க்கவே முடியாதோ என்ற பயம் அவளுக்கு. அதை விட, மீண்டும் தீர்த்தி எதை அனுபவிக்க கூடாது என்று நினைத்திருந்தாளோ அந்த வாழ்க்கைக்குள்ளே அவள் செல்வது அவளுக்கு ஒப்பவில்லை. ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லையே.
“பிரயு.. நான் சொன்னதை செய்.. ப்ளீஸ்.. கண்டிப்பா என் பசங்க என் கைக்கு கிடைச்சதும் திரும்ப வர பாப்பேன்.. என் வாழ்க்கைய அவன கன்ட்ரோல் பண்ண விட மாட்டேன்” என அழுத்தமாய் கூறினாள். அவனின் கை பாவையாக உருக போவது அறியாமல் வீராப்பாக பேசிக் கொண்டு இருந்தாள்.
“சரி டி.. ஆனா ஏதாவது பிரச்சனைன்னா உடனே எனக்கு கால் பண்ணு சரியா? உன் கம்பெனி பத்தி நீ கவலைபடாத எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.” அவளை இருக்கமாய் கட்டிக் கொண்டு ஆறுதல் கூறினாள்.
அதன் பின் தீர்த்தி நேரத்தை வீணாக்காமல் உடனே அவளின் போனை எடுத்துக் கொண்டு மின் தூக்கி நோக்கி சென்றாள். உள்ளே சென்றவள் தரை தளம் பட்டனை அழுத்த கதவு மெல்ல மூடப்பட்டது. வெளியே பிரயு அவளையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, தீர்த்தி லேசாக தலையசைத்து அவளிடமிருந்து விடைபெற்றாள்.
அடுத்த நொடியே பிரயுவை சிலர் சூழ்ந்து கொண்டார்கள். இங்கு இருப்பதை அவள் பார்த்துக் கொள்வாள் என்ற தைரியத்தில் தீர்த்தி சென்றாள். ஆனால் விதி இல்லை அந்த சதிகாரன் வேறு திட்டம் வைத்திருப்பது அறியாமல் போனாள்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அவள் தரை தளத்திற்கு வந்துவிட அங்கு கருப்பு நிற கார் ஒன்று, ‘RV’ என பொறிக்கப்பட்டு அவளுக்காக காத்திருந்தது. அவளை கண்டதும் டிரைவர் கார் கதவை திறக்க, அதில் ஏறிக் கொண்டாள். மெல்ல மெல்ல கார் அந்த இடத்தை விட்டு செல்ல அவளின் பார்வை வெளியே இருந்தது.
அவளின் எண்ணமெல்லாம் அருள் மற்றும் சூர்யா மீதே இருந்தது. இருவரும் அழுகிறார்களா? அவளை தேடுகிறார்களா? என்ன செய்கிறார்கள் என்றே சிந்தித்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு எண்ணம் இருந்தாலும் பதட்டம் சற்று குறைவாகவே அவளுக்கு இருந்தது. காரணம் உரியவனிடத்தில் பிள்ளைகள் இருப்பதனாலோ என்னவோ.
அதை அவள் மனம் தான் ஏற்க மறுத்தது. இருபது நிமிடத்தில் ருத்ரனின் பிரைவேட் ஜெட் இருக்கும் இடத்தில் கார் நிற்க, தீர்திக்கு எரிச்சலடைந்தது. “இவன் பணக்கார திமிர இப்படி தான் காட்டுவான்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என முனுமுனுக்க, ஒரு பணி பெண் வந்து அவளை ஜெட் உள்ளே அழைத்து சென்றாள்.
சீட்டில் அமர்ந்த உடனே பழைய நினைவுகள் எல்லாம் அழையா விருந்தாளியாக அவள் கண் முன்னே தோன்ற, அதனை நினைத்து பார்க்கும் எண்ணமே அவளுக்கு துளியும் இல்லை. மிகவும் கடினப்பட்டு கவனத்தை அவளின் பிள்ளைகள் மீது திருப்ப போராடினாள். கண்களை மூடி அமர, அவள் கட்டுப்பாட்டையும் மீறி ருத்ரன் நினைவு அவளை இம்சை செய்தது. முதல் முறையாக அவனுடன் இதே பிரைவேட் ஜெட்டில் சென்ற நினைவேல்ல்லாம் வந்து செல்ல, கலங்கிய விழிகளுடன் அவனை மனதில் கருவினாள்.
“பொருக்கி வேணும்ன்னே பண்றான்.. என் பசங்க மட்டும் என் கைக்கு கிடைக்கட்டும் அப்பறம் இருக்கு இவனுக்கு.. திரும்ப திரும்ப இவன என் வாழ்க்கையில விளையாட விட மாட்டேன்” என தீர்மானமாய் நினைத்துக் கொண்டு பயணித்தாள்.
அவளின் தீர்மானம் அவன் கோட்டையில் நுழைந்த நிமிடமே சுக்கு நூறாய் ஆக போவது அறியாமல் இருந்தாள். இவள் ஒருவளுக்காக எதையும் செய்ய துணிபவனுக்கு இவளை கட்டுக்குள் கொண்டு வருவது மிக சுலபமானது. ஆனால் அதில் தீர்த்தி தான் அதிக காயப்படுவாள். அவளை காயப்படுத்தினாலும் தாம் தான் மருந்திட வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் அழுத்தக்காரன். அவனின் வெறித்தனமான காதலில் சிக்கி விட்டாள்.
பிள்ளைகளை எப்படி திரும்ப இங்கு அழைத்து வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டே அவள் பயணிக்க இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவள் முகத்தில் இருந்த தெளிவே தீர்த்தி புதிய திட்டம் தீட்டி விட்டாள் என்று அப்பட்டமாய் காட்டியது. ஜெட் போர்ட் பிலார் வந்தடைய வெளியே இறங்கினாள். அந்தமான் தான் அவள் வாக்கப்பட்ட ஊர். இங்கு தான் ருத்ரன் தனி தீவு ஒன்றையே அவன் கட்டுக்குள் வைத்திருக்கிறான்.
ருத்ர வேலனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு இங்கு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தமான் தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அவனின் சொகுசு ரேசார்டில் தான் தங்குவார்கள். இங்கு RV என்ற பெயரில் பல ரெசார்ட், கடல் உணவுகள் அதிகமாய் கிடைக்ககூடிய உணவகம், கூடவே சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்காக ஸ்குபா டைவிங், இன்னும் நிறைய தண்ணீர் சார்ந்த விளையாட்டு நிறுவனங்களை நிறுவி வருகிறான். அவன் பெயரில் நூற்று கணக்கில் பாய்மர கப்பல், சொகுசு கப்பல், ஸ்பீட் போட் என ஏராளமாய் இருக்கிறது.
இவன் ஆட்சி தான் இங்கு. இவனுக்கு எதிரே யாரும் தொழிலில் வளரவில்லையா என்று கேட்டாள் ஆம். வளரவில்லை, அவன் வளர விட்டதும் இல்லை. அடுத்தவர்களை வளர விடாமல் செய்வது தவறு இல்லையா என்று கேட்டாள், தடுப்பது என் வேலை திறமை இருந்தாள் அவர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என்றிடுவான் திமிரெடுத்தவன். ஆணவத்தில் சொல்கிறானா என்று கேட்டாள் இல்லை. இது தான் அவனின் தொழில் உக்தி. எதிரி என்றால் கொடைச்சல் கொடுப்பான் தான், அதனை தாண்டி தொழில் நடத்துபவன் தான் உண்மையான தொழிலதிபர் என்றிடுவான்.
எதிரிக்கு பயந்து ஓடுபவர்களை துச்சமென பார்ப்பான். இன்று வரைக்குமே என்னை எதிர்க்க எவன் வேண்டும் என்றாலும் வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று இருப்பான். அவனின் மூலாதாரமே இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வைத்து தான் இருக்கிறது. இந்த தொழிலுக்க எளிதாக யாரையும் நுழைய விட மாட்டான். எதையுமே வேரோடு அறுத்து எரிய நினைப்பவன். இப்படிப்பட்ட அலுத்தக்காரனை பற்றி அறியாமல் காதல் மாயையில் சிக்கி இப்பொழுது தவித்துக் கொண்டு இருக்கிறாள்.
புவியில் காலடி வைத்ததுமே அவனின் கோட்டைக்குள் நுழைந்த உணர்வு அவளுக்கு தெரிந்தது. கடலோரத்தில் அவன் லோகோ பொறிக்கப்பட்ட பல படகுகளை அவள் கண்டாள். பெருமூச்சு விட, ருத்ரனின் அடியாள் ஒருவன் அவளை நோக்கி வர அவனை அடையாளம் கண்டுக் கொண்டாள் தீர்த்தி. அவனுடன் இதே ஊரில் பல மாதங்கள் வாழ்ந்தாள் அல்லவா.. இன்னும் பழைய ஆட்கள் இருப்பதை எண்ணி வியந்தாள்.
எதிரில் வந்தவனோ தீர்த்தியை கண்டதும் ‘அண்ணி’ என்று அழைக்க வர, அந்த வார்த்தையை கேட்டாள் காது எறிந்துவிடும் எண்ணம் அவளுக்கு. அவள் முறைத்த முறைப்பில் அவன் கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டான்.
“இந்த பக்கம் வாங்க.. அண்ணே உங்கள யாட்-ல கூட்டிட்டு வர சொன்னாங்க..” என்று அவன் கூற, அவள் பதில் ஏதும் பேசாமல் அவன் பின்னே நடந்தாள்.
கரையோரம் சென்றதும் அவளுக்காய் நிற்க வைக்கபட்டிற்குக்கும் யாட் கப்பலை கண்டு திகைத்தாள் தீர்த்தி. வேண்டும் என்றே அதே யாட் கப்பலை அனுப்பி வைத்திருக்கிறான் என்று கனத்த மனதுடன் அவள் ஏறினாள். அவளை மீறி பழைய எண்ணங்கள் அந்த கப்பலில் ஏறியதும் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது. கப்பலில் ஒவ்வொரு மூலையிலும் அவர்கள் செய்த காதல் லீலைகள் எல்லாம் வந்து செல்லல கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
இன்று அவள் செல்லும் இதே கப்பலில் தான் அவர்களின் முதலிரவே நடந்தது. இதே கப்பலில் தான் ஒரு வாரமாய் தேன்நிலவு கொண்டாடினார்கள். அனைத்து காதல் நினைவுகளும் போட்டி போட்டுக் கொண்டு வர தீர்த்திக்கு தொண்டை அடைத்தது. கத்தி ஓ வென்று அழ வேண்டும் என துடித்த இதயத்தை வெகு சிரமப்பட்டு அடக்கினாள். கண்களை மூடினாலே அவன் பேசிய காதல் வார்த்தைகள், அவன் கண்ணில் அவளாக நினைத்து பார்த்த காதல் என அனைத்தும் வந்து சென்றது. அன்று அவன் பேசிய ஒவ்வவொரு வார்த்தையும் இன்னும் அவள் ஆழ்மனதில் பதிந்திருந்தது.
திருமணம் செய்து கொண்ட பிறகு நேராக அவன் ஊருக்கு அழைத்து வந்தவன், அவளை இந்த படகில் தான் அழைத்து செல்ல வேண்டும் என்று இருவரும் தனியாக இதில் அவன் வீட்டை நோக்கி பயணித்தார்கள். கடலில் முதல் முதலாக பயணிக்க தீர்த்தி பயத்தில் நிற்க, அவளின் இடையோடு வளைத்து பிடித்துக் கொண்டான்.
அவனின் இரும்பு கரங்களுக்கு இடையே அவளை நிற்க வைத்து பறந்து விரிந்திருக்கும் கடலை அவள் கன்னம் உரசிக் கொண்டே ரசித்தான். அவன் நெருக்கத்தில் அவளும் பயத்தை விடுத்து அந்த நேரத்தை அனுபவித்தாள்.
“பிடிச்சிருக்கா?” என்று மீசை முடி அவள் கழுத்தில் குத்தியெடுக்க கேக்க, செல்லமாக சிணுங்கினாள் தீர்த்தி.
“சும்மா இரு வேலா.. நம்ம இப்போ கடல்ல இருக்கோம்” என பெயருக்காக கூறினாள்.
உண்மையில் அவனின் நெருக்கம் அவளுக்கு பிடித்தே இருந்தது. அவள் செயலில் லேசாக புன்னகைத்தவன் அவளை மேலும் இறுக்கி அனைத்துக் கொண்டு, “இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.. நீ சொல்ற இதே கடல்ல தான் நடக்க போகுது.. நம்ம நாளக்கி தான் என் ஊருக்கு போவோம்.” கிசுகிசுப்பான குரலில் கூறியவன் அவளின் தாலியை எடுத்து வெளியே தொங்க விட்டான்.
ஏனோ அது புடவைக்குள் மறைந்திருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. அவளையே விழுங்கும் பார்வையில் அவனிருக்க தீர்த்தி உறைந்து நின்றாள். காதலில் காமம் இல்லாமையா? பெண்ணவளுக்கும் உண்டு, ஆனால் நாணம் உயர்ந்து நிற்க பேசாமடந்தை ஆனாள்.
அவள் அமைதியாய் இருக்க கன்னம் உரசியவன், “அமைதியா இருந்தா வேணாம்னு எடுத்துப்பேன்.. உனக்கு ஓகேன்னா வாய திறந்து சொல்லு டி பொண்டாட்டி..” என்றான்.
மெல்லிய சிரிப்போடு அவன் பக்கம் திரும்பி கழுத்தில் மாலையாக கையை கோர்த்தவள், “மவுனம் சம்மதத்தின் அறிகுறின்னு சொல்லுவாங்களே கேள்விபட்டது இல்லையா?” என கேலியாக கேட்டாள்.
சேலைக்கு இடையே தெரியும் அவளின் வெற்றிடையில் கையை பதித்தவன், அவன் நெஞ்சோடு சேர்த்து பிடித்து, “அது டெஸ்பரட்டா இருக்குறவன் சொல்றது.. என்ன பொறுத்த வரை வேணும்ன்னா பளிச்சின்னு சொல்லணும்..” என்றான்.
“அப்போ நான் வேணாம்ன்னு சொன்னா என்ன பண்ணுவ?” என கேட்டவளிடம் தோளை குலுக்கியவன், “ஒன்னும் இல்ல கப்பலை வீட்டுக்கு திருப்ப சொல்லுவேன்.. என் பொண்டாட்டி என்ன கேக்குறாலோ அதை தான் பண்ணுவேன்” என சற்றும் யோசிக்காமல் கொஞ்சம் கூட வருத்தத்தை தெரிவிக்காமல் அவன் கூறுவதை கண்டவளுக்கு வியப்பு தான் அதிகரித்தது.
இந்த நாளுக்காக அவன் எத்தனை நாள் காத்திருந்தான் என அவளுக்கு தெரியும், ஏன் இதே அவனிடத்தில் அவள் இருந்து இருந்தாள் வேண்டாம் என்பதற்கு காரணம் கேட்டு இருப்பாள். ஆனால் அவன் காரணம் கூட கேக்காமல் அவள் விருப்பத்தையே முன்னிறுத்துவது அவளின் காதலை இன்னும் அதிகரிக்க செய்தது.
அதே காதலோடு கன்னத்தில் முத்தம் பதித்து, “i need you” என்றாள். அதில் மகிழ்ந்தவன், கன்னத்தில் பெற்ற முத்தத்தை அவள் இதழில் கொடுத்து கடனை இரட்டிப்பாக அடைத்துக் கொண்டிருந்தான்.
பின்னால் இருந்து அவளை அழைக்கும் குரல் கேட்டு நடப்பிற்கு வந்தவள், அவளை அறியாமல் வெளிவந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கப்பலை விட்டு இறங்கினாள். ருத்ரன் அவளுக்காக அனைத்து ஏற்பாடையும் செய்து இருந்தான். அவள் வந்ததுமே அவளை அழைத்து செல்ல காரையும் அனுப்பி வைத்திருக்க, ஏனோ இப்பொழுது அவனின் பகட்டான வாழ்க்கை அவளுக்கு வெறுப்பை கொடுத்தது. அதனை விட அவன் மீது அவளுக்கு வெறுப்பு அதிகமாய் இருந்தது. அவன் சட்டையை பிடித்து சண்டையிட்டாவது பிள்ளைகளுடன் திரும்ப வேண்டும் என நினைத்தாள். அவளின் வேலன் நடக்க விட்டுவிடுவானா?