• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 11

STN-116

Member
MTN 11

அந்தப் பயிற்சி மையத்தில் மொத்தம் நாற்பது பெண்களும் பத்து ஆண்களும் இருந்தனர். ஒரு அறைக்கு ஐந்து பேர் விகிதம் எட்டு அறைகள் பெண்களுக்கும், இரண்டு அறைகள் ஆண்களுக்கும் என, சகலவிதமான வசதிகளுடன் கூடிய விசாலமான அறைகள் கொடுக்கப் பட்டிருந்தன.

அதன்படியே மேகலா, சுபா, நிம்மி, பாத்திமா மற்றும் காஞ்சனா ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

உணவறையில் நடந்த கலாட்டாவில், மேகலா யாரின் முகத்தையும் பார்க்காமல் வெளியே வர, அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியேறி, நேராக கேட்போர் கூடத்திற்குச் சென்றனர்.

அதன் பிறகு ஆற அமர பேச நேரமின்றி, இரண்டாம் கட்ட அறிமுக நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து, மாலைத் தேநீரை முடித்துவிட்டு ஐவரும் தங்களது விடுதியறைக்குள் நுழைந்தனர்.

வந்ததும் வராததுமாக மற்ற மூவரும் மேகலாவைச் சூழ்ந்துகொள்ள, சுபாவும் கூட்டு சேர்ந்தாள்.

"உண்மைய சொல்லு... உனக்கும் ஏடிக்கும் நடுவில என்னடி ஓடுது..."
என்று நிம்மி படுக்கையில் விழுந்தபடி வம்புக்கு இழுத்தாள்.

"ஐயோ... ஒண்டுமில்ல டி..."
என்று மேகலா மழுப்பினாள்.

"ஏடி யா..??? வழக்கமா நான் தான் பெயர் வைப்பன்... எனக்கே தெரியாம அதென்னடி..." அதிமுக்கியம் போல சுபா கேட்க,

"இது இப்ப ரொம்ப முக்கியம்... போடி இவளே... ஏடி எண்டால் 'எயார் டிபென்ஸ்'... "
என்று பாத்திமா பதிலளித்தாள்.

"அவருக்கு ஏற்கனவே உன்னத் தெரியுமா..?" என்று காஞ்சனா தன் பங்குக்கு கேட்டாள்.

"தெரிஞ்சு தான் இருக்கணும்... மனுசன் பார்வையாலேயே கபளீகரம் செய்றார்... எங்க எப்படினு இப்ப சொல்லுறாய் நீ... இண்டைக்கு விடுறேல்ல..."
என்று நிம்மி கிடுக்குப்பிடி போட்டாள்.

“சுபா… உனக்கு ஏதும் தெரியுமா... ஒருவேளை பேஸ்புக் பிரெண்டா...?” என்று பாத்திமா ஆர்வமாகக் கேட்டாள்.

"அதுக்கு, முதல் அவள் அவன் குடுத்த ரிக்வெஸ்ட்டை எக்செப்ட் செய்யோணுமே..." என்று சுபா கொழுத்திப் போட,

“சுபா…!”

என்று மேகலா அவசரமாய் அவள் வாயை மூடினாள்.

"இனி என்னால ஒண்டையும் மறைக்க ஏலாது டி... அவன்ர சீத்துவம் இவேயளுக்கும் விளங்கட்டும்... "
என்று சிரிப்புடன் மன்னிப்பு வேண்டிக் கொண்டு, அந்தச் சந்திப்பு முதல் பேஸ்புக் ரிக்வெஸ்ட் வரை அனைத்தையும் கட கடவென ஒப்புவித்தாள் சுபா.

"என்ன...!!!" என்று மூவரும் அதிர்ந்தனர்.

"பார்த்த முதல் சந்திப்பிலயே பேஸ்புக்ல தேடிப் பிடிச்சு ரிக்வெஸ்ட் குடுத்திருக்கிறானா..." என்று நிம்மி கண்களை விரித்தாள்.

"ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது..." என்று பாத்திமா வடிவேல் பாணியில் கேட்டாள்.

"அது எப்படி எங்கட கண்ணுல மட்டும் படாம இருந்தான்..." என்று கேட்ட காஞ்சனா மெதுவாக தன் அலைபேசியுடன் நகர்ந்தாள்.

"காஞ்சு மூஞ்சு சிறுத்துப் போச்சு... நேத்தும் அவளை நோட் பண்ணினனான்... ஏடிக்கு அவ ரூட் விடுறாள் போல... இப்ப கூட போனை எடுத்துட்டு அவன்ர எப் பீ எகௌன்ட்டை பார்க்க தான் போய் இருப்பாள்..." என்று சுபா கிசுகிசுத்தாள்.

"அவ தான் நேத்தே சொன்னாளே... ஏடி அவ சைட் எண்டு... ஆனா அவன் சைட் எங்கட 'மிஸ் மேகலா அரவிந்தன்' எல்லா... ஆனாலும்டி, ஒரு ஹேன்ஸ்சம் ஹங்க் உண்ட பின்னுக்கு சுத்தியும் நீ அவனை தவிக்க விடுறாய் என..." என்று நிம்மி மேகலாவின் கன்னத்தைக் கிள்ளினாள்.

"அடியேய்... அது ஏடிட ப்ரோபர்டி... நீ கிள்ளாத..." என்று பாத்திமா கண்ணடித்தாள்.

"ஐயோ... கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா.... கேக்கவே சகிக்கேல்ல... எனக்கு ஒண்டும் அவன் மேல பீலிங்ஸ் இல்ல... நான் அதுக்காகவும் இஞ்ச வரேல்ல..." என்று மேகலா கெஞ்சினாள்.

அதன்பிறகு, மற்ற மூவரும் மேகலாவை வைத்து ஓட்டியதில் அறை முழுவதும் சிரிப்பலை பரவியது.

அடுத்த வாரம் முழுவதும், காலையில் தோற்றம் மற்றும் அலங்காரப் பயிற்சியும், மாலையில் தகவல் தொடர்புப் பயிற்சியும் என, நிற்கவே நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அங்கேதான் மேகலா, அனைவரையும் அநாயாசமாக கையாண்டுக் கொண்டிருந்த புதிய ஒருவனைச் சந்தித்தாள்.

“ஹலோ… நான் சிவசங்கரன்.... அலைஸ் சிவா... மீன் பாடும் தேன் நாட்டிலிருந்து வாறன்... தாங்கள்...?” என்று புன்னகையுடன் கைகுலுக்கினான். அவன் எயார்லைன்ஸ் நிர்வாகப் பிரிவில் பயிற்சியாளராக சேர்ந்திருந்தான்.

"ம்ம்ம்... நான் இலங்கையின் தலையிலிருந்து வாறன்..." என்று மேகலா நக்கலாக பதிலளித்தாள்.

தாய் மொழியில் ஒருவனைக் கண்டதும் மேகலாவுக்குள் ஒரு நிம்மதி பரவியது. எளிதாகத் தொடங்கிய அவர்களது உரையாடல், சில நிமிடங்களில் அவர்களுக்குள் இயல்பான நட்பு உருவாகிவிட்டது. கலகலப்பான சிவாவின் பேச்சில், அந்த வாரம் போன வேகமே தெரியவில்லை.

அந்த வார இறுதியில், பயிற்சியின் களைப்பை மறக்க அனைவரும் வெளியே செல்ல முடிவு செய்து, இலங்கையின் பிரபல வர்த்தகச் சங்கிலியான ‘நோலிமிட்’ விற்பனை நிலையத்திற்குச் சென்றனர்.

சிவா வழக்கம்போல் எல்லோருடனும் விகடமாகப் பேசிக் கொண்டிருந்தான். ஒரு சேலையை எடுத்துக் காட்டி,

“இந்த நிறம் உனக்கு வடிவா இருக்கும் மேகி…” என்று சொன்னான்.

“அப்ப எனக்கு…?”

என்று சுபா புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

"உனக்கு அதோ... அங்க இருக்கிற அந்த வேட்டி சட்டை சூப்பரா இருக்கும்..." என்று கூறிவிட்டு, சுபாவிடம் மொத்து வாங்கினான்.

மேகலாவும் இயல்பாகக் கலகலத்து சிரித்தபடி அவர்களுடன் நகர்ந்தாள்.

அப்பொழுது, சடாரென ஆண்கள் உடை மாற்றும் அறை திறக்கப் பட, மேகலா நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே தரிந்து அழுத்தமான பார்வையுடன், அவர்களை அளவிட்டபடி நின்று கொண்டிருந்தான்.

அவனது கட்டுக்கோப்பான உடலமைப்புக்கு, அவன் அணிந்திருந்த கருப்பு நிற முழுக்கை டீ-ஷர்ட்டும், பழுப்பு நிற காற்சட்டையும் தனிக் கவர்ச்சியை அளித்தன.

முதன்முதலில் அவனை சீருடையில்லாமல் பார்த்த மேகலாவே ஒரு கணம் அசந்து நின்றாள்.

அவன் பார்வை முதலில் மேகலாவின் மீது நிலைத்தது. பின்னர் மெதுவாக அவள் அருகில் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்த சிவாவின் மீது நகர்ந்தது.

தரிந்துவின் முகம் சட்டென்று இறுகியது. அவனது கண்களில் ஒருவிதமான ஏமாற்றமும், அதே நேரத்தில் சொல்ல முடியாத கோபமும் கொப்பளித்தது. மேகலாவுக்குத் தொண்டை வறண்டு போனது.

மேகலா ஒரு இளைஞனுடன் நெருக்கமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை தரிந்து துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதும், அவன் முகத்திலிருந்தே தெளிவாகப் புரிந்தது.

மௌனமாக அவளையே கூர்ந்து நோக்கினான். ஆனால் அந்த மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் மோதிக்கொண்டன. மேகலா அப்படியே சிலையாய் நின்றிருந்தாள்.

“மேகி… என்ன… பிரீஸ் மோடுக்கு போயிட்டியா…?”
என்று சிவா அவள் தோள்பட்டையில் மெதுவாகத் தட்டினான்.

அவன் கேட்டது கூட காதில் விழாமல், ஸ்மரனையற்று நின்றிருந்தாள் மேகலா.

ஒரு நொடி தாமதித்து, பின் விறுவிறுவென அவளைக் கடந்து சென்றான் தரிந்து. போகும் அவனையே திரும்பிப் பார்த்தாள்.

ஒரு வாரமாக அவனைக் காணாத தவிப்பா…
அல்லது சீருடையின்றி சாதாரண ஆடையில் இருந்த அவனது கவர்ச்சியான தோற்றமா…
எதுவோ ஒன்று, அவள் உள்ளுக்குள் சில்லு சில்லாய்ச் சிதறியது.

"வாவ்... ஏடி....!!!"
என்று கோரஸ்சாக பெண்கள் கூவ,

"யாரது ஏடி...??? யாரவன்...???" என்று வினவினான் சிவா.

"அடேய்... அது ஆரெண்டு விளங்கேல்லையா... இனோக்ரேஷனுக்கு வந்தாரே எயார் ஒபிஸர்... அவன் தான்... 'எயார் டிபென்ஸ்' தான் சுருக்கமா ஏடி.." என்று சுபா விளக்கினாள்.

"ஓஹ்... யூனிபோர்ம் இல்லாம இருக்கவும் சரியா விளங்கேல்ல... அதுக்கு மரியாதை இல்லாம அவன் இவன் எண்டு சொல்லுவியா நீ..." என்று அவள் தலையில் தட்டினான் சிவா.

"அவனுக்கெல்லாம் மரியாதை காணும்... உனக்கே நாங்க மரியாதை தாறதில்ல... அவனுக்கு குடுத்துட்டாலும்... போவியா..."

என்றுவிட்டு மேகலாவை இழுத்துக்கொண்டு, பெண்கள் பிரத்தியேகப் பகுதிக்குள் நுழைந்தனர் நால்வரும்.

"இதெல்லாம் திருந்தாத கேஸ்..." என்று தலையில் அடித்துக் கொண்டு, ஆண்கள் பகுதியில் நின்றான் சிவா.

வெளியே வந்த தரிந்துவுக்கோ நிலைகொள்ள முடியவில்லை. ஒருவாரம் அவளைக் காணாமல் அவன் தவித்த தவிப்பு அவன் மட்டுமே அறிவான்.

முதன்முதலில் அவளை புடவையில் பார்த்த நொடியே விழிகளினூடாக இதயத்தினுள் நுழைந்துவிட்டாள்.

அவன் பார்த்து பழகிய நவநாகரிக பெண்களின் மத்தியில், பாந்தமான அழகோவியமாய், கண்ணுக்கு உறுத்தாத புடவையில், நெற்றி நடுவே பொட்டு வைத்து, நெடுநெடுவென்ற கூந்தலை அள்ளி முடித்திருந்த அவளது புறத்தோற்றம் அவனை இம்சித்தது.

அவன் இனத்தில் பெண்கள் யாரும் பொட்டு வைப்பதில்லை. அவன் கண்ட தமிழ் பெண்களும் நகரத்தின் நாகரீகத்தின் பிடியில் இருந்தனர். முதன்முதலாய், மிக நெருக்கத்தில், ஒரு தேவதையைக் கண்டதும் பிரம்மித்து நின்றான். அவள் பேசிய பேச்சுக்கள் அவனுள் தேவாமிர்தமாய் இறங்கியது.

அவளறியாமலே அவளின் பெயரையும் ஊரையும் அறிந்துக் கொண்டான். ஒரு உத்வேகத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று நட்பழைப்பு விடுத்தும் விட்டான்.

வேறு எந்த நடவடிக்கையும் அவன் முன்னெடுக்கவில்லை. அவனுக்கு இது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தானா அல்லது அதற்கும் மேலா என்று, அவனைப் பற்றி ஆராயவேண்டி இருந்தது. கண்ணில் இருந்து மறைவது கருத்தில் இருந்தும் மறையும் என நம்பினான். நாட்கள் நகர்ந்ததே தவிர, அவள் நினைப்பை அழிக்கவே முடியவில்லை.

அவனது காதலுக்கு எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலே, அவளுக்காக தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். அவர்கள் இணையும் சித்தம் இருந்தால், அவளை மறுபடியும் அவன் கண்ணில் இறைவன் காட்டுவான் என்று நம்பினான்.

அப்போதுதான், இலங்கை விமான சேவையின் புதிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்க, வழமைப் போன்று இம்முறையும், விமானப்படையினரின் உதவி கோரப்பட்டது.

அவளை மீண்டும் பார்க்க இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த நுழைவுச் சீட்டாக அதையெண்ணி, அந்த அழைப்புக்கு தன்னார்வத்துடன் முன்வந்தான் தரிந்து.

கார்மேகங்களின் விளிம்பில் தெரியும் ஒளிவெளிச்சம் போல, அவனுள் ஒரு நம்பிக்கை கீற்று ஒளிர்ந்தது.

அதே கோபப் பார்வையுடன் மீண்டும் அவளின் தரிசனம்...
வெட்ட வெட்ட துளிர்கின்ற அரும்பு போல, அவள் முகம் திருப்ப திருப்ப அவனுள் நேசம் ஆழமாய் வேர் விட்டது. இம்முறை அவளைக் கைவிடவே கூடாது என்று திடசங்கற்பம் பூண்டான்.

கடந்த ஒரு வாரமாக, மூச்சுவிடக் கூட நேரமில்லாத அளவிற்கு அவனுக்கு வேலைகள் வரிசை கட்டி நின்றன. இடையிடையே மேகலாவின் நினைவுகள் ஊடுருவி அவனைக் கொன்று தின்றன.

அவள் மிக அருகாமையில், அவனது அதிகார எல்லைக்கு உட்பட்ட அதே பயிற்சி மையத்தில்தான் இருக்கிறாள். நினைத்தால் ஒரே நிமிடத்தில் அவளைச் சென்று பார்த்துவிட முடியும். ஆனாலும், ஒரு மெல்லிய ஏக்கம் அவனைச் சூழ்ந்து கொண்டது.

காரணமில்லாமல் அடிக்கடி அங்கே செல்வதை அவன் விரும்பவில்லை. அவன் வகிக்கும் உயரிய பதவிக்கு அது அழகல்ல என்பதோடு, தேவையற்ற பார்வைகள் அவள் மீது விழுந்து, அதனால் மேகலாவிற்கு எந்தவொரு சங்கடமும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அவன் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தான்.

சற்றுமுன்னர் ஆண்கள் உடைமாற்றும் அறையில் கண்ணாடி முன்னால் நின்றிருந்தவன், வெளியிலிருந்து கேட்ட அந்தப் பரிச்சயமான குரலில் இன்பமாய் அதிர்ந்தான். அது மேகலாவின் குரல்... ஒரு வாரமாக அவன் எவளது குரலுக்காகக் காத்திருந்தானோ, எவளது நினைவுகளில் வெந்து தணிந்தானோ, அவள்... மிக அருகில்...

அவசரமாக வெளியே வந்து பார்த்தான். ஆனால், அங்கே தெரிந்த காட்சியில் அவனது புன்னகை முகம் மாறியது.

மேகலா தனியாக இல்லை. ஒரு ஆடவனுடன் நெருக்கமாக நின்றிருந்தாள். அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் மலரெனச் சிரிப்பதும், அவனுடன் இயல்பாக உரையாடுவதும் தரிந்துவின் நெஞ்சில் பொறாமையை தூண்டியது.

தான் பொக்கிஷமாகக் கருதிய ஒரு பொருள், கண் இமைக்கும் நேரத்தில் கைநழுவிச் செல்வது போன்ற உணர்வு அவனைத் தாக்கியது.

'ஒரு கிழம... கடந்த ஏழு நாட்களும் மேகலா என்ற ஒற்றைப் பெயரே எண்ட மூச்சாக இருந்தது.... பதவி, அதிகாரம் என அனைத்தையும் தாண்டி ஒரு சராசரி மனுசனா நான் அனுபவிச்ச வலியில் ஒரு சதவீதம் கூடவா இவ உணரேல்ல...? நான் இங்க இவளுக்காகத் துடிச்சுக்கொண்டிருக்க, இவ அங்க வேறொருத்தனோட சிரிச்சிட்டு இருக்கிறா...?'

அவனுக்குள் எழுந்த அந்தக் கோபம் நியாயமானதா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால், மேகலாவை வேறொருவருடன் இணைத்துப் பார்த்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒரு நொடி கூட அங்கே நிற்க அவனது காதல் மனம் இடந்தரவில்லை. அங்கிருந்தால் தன் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சியவன், சட்டென்று அங்கிருந்து வெளியேறினான்.

பொருட்களை வாங்கி முடித்துவிட்டு, சுபா மேகலாவைத் தேட அவளைக் காணவில்லை.

அங்கே அவள்... அவனின் கைச்சிறையில் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள்...

காதல் முகம் காட்டிய கனவானின் கோப முகம் தாங்குவாளா இந்த மேகப்பெண்...

 
Top Bottom