• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 5

STN-116

Member
MTN 5

சாப்பாட்டு மேசையில் ஒரு மயான அமைதி நிலவியது. மகேஸ்வரி பரிமாறிய புட்டும், மீன் குழம்பும் ஆவி பறக்கக் காத்திருந்தன. ஆனால், யாருடைய கைகளும் உணவை நோக்கி நகரவில்லை. மேகலா தலையைக் குனிந்தவாறே வந்து அமர்ந்தாள். தகப்பனும் தமையனும் அவளையே மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த மௌனத்திற்குள் ஒரு எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. கண்களில் நின்றிருந்த கண்ணீர் ஒரு துளியாக அவள் தட்டில் விழுந்தது.

“சூடு ஆற முதல் எல்லாரும் சாப்பிடுங்கோ... மத்தியானமும் வரப்போகுது.” என்று மகேஸ்வரி ஆரம்பித்து வைத்தார்.

மேகலா மெதுவாக ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தாள். அவளுடைய விருப்பமான புட்டு இன்று அவளுக்கு வேம்பாய் கசந்தது. விழுங்க முடியாமல் தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

"சாப்பிட்டு முடிச்ச பிறகு ஹோலுக்கு வாங்கோ..." என்று மேகலாவைப் பார்த்து கூறிவிட்டு எழுந்து சென்றார் அரவிந்தன், அதிகாரமாகவும் அல்லாமல் அன்பாகவும் அல்லாமல். ஆனால், ஒரு தீர்ப்பின் முன்புரை போல இருந்தது அவர் குரல். அவளுக்கு ஒரு முறைப்பைக் கொடுத்து விட்டு, அவர் பின்னே முரளியும் சென்றான். அதன்பிறகு சாப்பாடு இறங்கவில்லை அவளுக்கு. கைகளை அலம்பிவிட்டு அடிமேல் அடிவைத்து வரவேற்பறையை நோக்கிச் சென்றாள்.

அவளது கண்கள் அனைவரையும் ஒரு நொடி நோட்டமிட்டது. அவள் குற்றவாளிக் கூண்டில் மீண்டும் ஒருமுறை நிறுத்தப்பட்டிருக்கிறாள். ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு விசாரணை மன்றம், இந்தமுறை தவறே செய்யாமல்.

அனைவரின் கூர்மையான பார்வையும் அவளைக் கூறு போட்டது. தான் பேசவேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்தவளாக நிமிர்ந்து அமர்ந்தாள். அவனின் பிரத்தியேக விளிப்புக்களை தவிர்த்து, அனைத்தையும் கடகடவென ஒப்பித்தாள்.

ஒருநிமிடம் அந்த அறையில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம். பின் அரவிந்தன் மௌனம் கலைத்தவராக,

“மேகலா... அப்பவே உங்கட்ட இந்த வேலைக்கு முழுக்கு போடுங்கோ எண்டு ஏன் சொன்னனாங்க தெரியுமா...? வான்படை அதிகாரிக்கும், விமானப் பணிப்பெண்ணுக்கும் நடுவுக்க எப்பவுமே இந்த வானம் ஒரு பாலமா இருக்கும். ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அவரை நீங்க முகம் கொடுக்க வேண்டி வரும். கூடவே வேண்டாத பிரச்சினைகளும் சேர்ந்து வரும். அதை எங்களால தடுக்கேலாது. ஆனால் நீங்க கேட்கேல்ல. இனி அவனைப் பார்க்கவோ கதைக்கவோ மாட்டன் எண்டு அடிச்சு சொன்னனீங்க. ஆனால் இப்ப என்ன நடந்தது. அவர் உங்கட கண்ணு முன்னுக்க வந்து நிற்கிறார்."

அரவிந்தனின் பார்வையில் இருந்த ஏமாற்றம் அவளைச் சுட்டது.

“அப்பா... சத்தியமா இது தற்செயலா நடந்த ஒண்டு. நான் திட்டமிட்டு எதையும் செய்யேல்ல. அவர் வருவார் எண்டு எனக்குத் தெரியாது. வந்தாலும் வராதே எண்டு சொல்ல அது என்ர சொந்த இடமும் இல்ல. அங்கே அவர் ஒரு பெசெஞ்சர், நான் ஒரு க்ரூ. அவ்வளவு தான். அங்கே ஒரு பணிப்பெண்ணா நான் என்ர கடமையை மட்டும் தான் செஞ்சன். ரிட்டர்ன் வரும்போது அவர் எங்கட பிளைட்டில வரவேயில்ல.” என்று மேகலா அழுகையின் விளிம்பில் சொன்னாள்.

"பிறகு ஏன் அதை எங்கட்ட சொல்லேல்ல..? பேப்பர்ல நாங்க பார்க்காட்டி அப்படியே மறைச்சிருப்பாய் என..?” என்று கோபத்துடன் கேட்டான் முரளி.

“அப்படி இல்ல அண்ணா... சொல்லோணும் எண்டு தான் நான் முதல்ல நினைச்சன்... பிறகு அப்பா வருத்தப்படுவாரோ எண்டு..." என்று நிறுத்தி,

"அதோட முந்தியே உங்களுக்கு நான் இந்த வேலை செய்றது பிடிக்கேல்ல.. இதை சாட்டா வெச்சிக்கொண்டு, நீங்க என்னை வேலையை விடச்சொல்லிப் போடுவீங்க எண்டு பயந்தனான். உங்களுக்கே தெரியும் எனக்கு இது எவ்வளவு பிடித்தமான வேலை எண்டு." என்று தயங்கிய குரலில் கூறினாள்.

“என்னைப் பத்தி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறனீ…? அவ்வளவுக்கு மோசமானவன் எண்டா…”
முரளி எகிறிக்கொண்டு வந்தான்.

அவனின் கையை மெதுவாக பிடித்து அமர்த்திவிட்டு, தன் குரலைச் சற்றே தணித்து, நிதானமாகப் பேசத் தொடங்கினார்.

"நாங்க ஒண்டும் உங்களுக்கு எதிரிகள் இல்ல மகள். உங்களுக்கு பிடித்த வேலை எண்ட ஒரு காரணத்துக்காகத்தான், எங்களுக்கு விருப்பம் இல்லையெண்டாலும் சம்மதிச்சனாங்க. ஆனால்..." என்று நிறுத்தி பெருமூச்சை வெளிப்படுத்தி,

"அதுவே எங்கட நிம்மதியைக் குலைக்கிற ஆயுதமா மாறிவிடக் கூடாது எல்லோ... நடந்தது ஒரு தற்செயல் எண்டே வைப்பம். ஆனால் இனியும் அதன்ட நிழல் தொடர்ந்தால்… இத்தனை வருஷமா நீங்களும் ஒரு இயந்திரம் மாதிரி ஓய்வேயில்லாம ஓடிட்டே இருக்கிறீங்க... கொஞ்சம் காலம் போகட்டும் எண்டு நாங்களும் விட்டு வெச்சோம்... உங்கட மனசு ஒண்டும் கரும்பலகை இல்லையே... எதையோ கிறுக்கிட்டு, அடுத்த செகண்டே டஸ்ட்டரால அழிச்சு விட.. காலம் மாத்தும் எண்டு நினைச்சோம்... உங்கட மனசில அந்த நினைப்பு ஒரு முள்ளு மாதிரி தைச்சுக்கொண்டே இருக்கு எண்டு எங்களுக்குத் தெரியும்... அந்த முள்ளு மறுபடியும் விஷமா ஏறக்கூடாது எண்டுறது தான் எங்கட கவலை... எங்கள விளங்குது தானே மகள்... குறை நினைக்காதீங்கோ.."

"இல்லையப்பா... நான் ஒண்டும் நினைக்கேல்ல... உங்கள மட்டுமில்ல... அண்ணாவை கூட நான் குறை நினைக்கேல்ல... என்ர கோவம் வருத்தம் எல்லாம் என்ர மேல மட்டும் தான்... என்னால எல்லாருக்கும் கஷ்டம்... நான் எல்லாத்தையும், எல்லாரையும் யோசிச்சிருக்கோணும்... என்ர மனசை அலைப்பாய விட்டிருக்க கூடாது... அவரின்ர அளவுகடந்த அன்பு என்ர கண்ணை மறைச்சுப் போட்டுது... நான் இதில இருந்து வெளிய வர என்னட்டையே போராடிக்கொண்டு இருக்கிறன்..." என்று விழிகளில் நீர் நிறையப் பேசினாள்.

தன் மகளின் வாடிய முகத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தார் அரவிந்தன்.

"இஞ்சப்பார்... நீ ஸ்கூல் போற டீனேஜ் பிள்ளை இல்ல... உன்ன அதட்டி உருட்டி வீட்டில அடைச்சு வெச்சு அட்வைஸ் மழை பொழிய... உனக்கும் இருவத்தெட்டு வயசு ஆகிட்டுது... தோளுக்கு மேல வளந்தா தோழன் எண்டுற மாதிரி, நீயும் எனக்கு ஒரு தோழி மாதிரி தான்... எனக்கும் உன்னை அடக்கணும் எண்டு எல்லாம் விருப்பமே இல்ல... அந்த நேரத்தில எனக்கு கோவம் வந்தது உண்மை தான்... பிறகு நல்லா யோசிச்சனான்... நீங்களும் வேணாம், உங்கட உபதேசமும் வேணாம் எண்டு உன்னால இந்த தழைகளை எல்லாம் அத்து எறிஞ்சிட்டு போயிருக்க ஏலும் தான்... யாராலும் ஒண்டும் சொல்லவோ செய்யவோ ஏலாது... ஆனால் நீ அப்படி செய்யேல்ல... எங்கட சொல்லுக்கு அடி பணிஞ்சு நீ உன்ர மனசில இருக்கிறத அறுத்து எறிஞ்சிட்டு இண்டுவரை உண்ட மனசுக்கு ஒரு திரையை போட்டுட்டு நடமாடிட்டு இருக்கிறாய்... உன்னை இப்படி பார்க்க எங்களுக்கும் வேதனையா தான் இருக்கு... நீ ஆசைப்படுறத எல்லாம் செய்யோணும் எண்டு தான் எங்கட மனம் நிறைஞ்ச ஆசையும்... ஆனால் உன்ர ஆசை எங்கட ஆக்களின்ர கருப்பு பக்கங்கள்... அந்த இராணுவ உடைகளை பார்த்தாலே என்ர காதில எங்கட ஆக்களின்ர மரண ஓலங்கள் தான் கேக்குது." என்று தன்மையாக சொன்னான் முரளி.

தங்கையின் கண்களில் கண்ணீரை கண்டவனின் கோவம் எங்கோ தூரப் போயிருந்தது. ஆனால், இன்று வெறுப்பாய் பார்க்கும் உடையை பின்னாளில் அவன் காதலாய் பார்ப்பான் என்று சத்தியம் செய்துக் கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். பாவம் அவனே அறியவில்லை, அவனை அடக்க ஒரு புயல் வானில் முற்றுகை இட்டுக் கொண்டிருப்பதை.

“உங்களுக்கே தெரியும் மா... நானோ அம்மாவோ உங்கள் ரெண்டுபேரியிலேயும் எங்கட கருத்துக்களை எண்டைக்குமே திணிச்சதில்ல... கேட்காம எதையும் செஞ்சதுமில்ல... உங்க ரெண்டு பேரோட நியாயமான ஆசைகளை நிறைவேற்ற தவறியதுமில்ல... முதல் முறையா உங்கட்ட கேட்காம அப்பாவா ஒரு முடிவு எடுத்திருக்கிறன். அதுக்கு கட்டுப்படுவீங்க எண்டு நம்புறன்… அதில உங்கட வாழ்க்கை மட்டுமில்ல அண்ணாவின்ர வாழ்க்கையும் சேர்த்து அடங்கி இருக்கு.."

என்று சொல்லவும் பிள்ளைகள் இருவரும் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தனர். மகேஸ்வரிக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

“என்னப்பா… என்ன விசயம்… சொல்லுங்கோ..” என்று முரளி கேட்க, மேகலாவும் கேள்வியாகப் பார்த்தாள்.

ஒரு கணம் மேகலாவை பார்த்து தொண்டையைச் செருமிவிட்டு,
“லண்டனில் இருக்கிற உங்கட கலா அன்ட்ரி கோல் பண்ணினவா.. அவேக்கு நல்லா தெரிஞ்ச ஆக்களாம், நல்ல மனுசராம். அவேன்ர பெடியனுக்கும் பெட்டைக்கும் சம்மந்தம் பார்க்கினராம். மாற்றி கட்டினால் கூடுதல் நல்லம் எண்டு சொல்லவும், கலாவுக்கு உங்கட ஞாபகம் வந்ததாம். உங்க ரெண்டுபேரை பத்தியும் அவேட்ட சொன்னவாவாம். ரெண்டு நாளைக்கு முந்தி எனக்கு கோல் பண்ணி சொன்னவா.. அவே லீவுக்கு அடுத்த கிழமை இஞ்ச வருகினமாம்... பார்த்து கதைச்சு பிடிச்சா ஒண்டாவே கட்டலாம் எண்டு சொன்னவா. போட்டோவும் அனுப்பினவா... உங்கட போட்டோஸ் அனுப்பேல்ல நாங்க... உங்கட்ட கேட்டுட்டு சொல்லுவோம் எண்டு நினைச்சனாங்க.. ஆனால் இப்ப எனக்கு அந்த சம்மந்தத்துக்கு விருப்பம் சொல்லலாம் எண்டு நினைப்பா இருக்கு.."

"ஓம் அப்பு... கலா சொல்லேக்க எனக்கும் சரியான விருப்பமா இருந்தது... ஒரே வீட்டில சம்மந்தம் பண்ணினால் காலத்துக்கும் நீங்க ரெண்டுபேரும் பிரியாம இருப்பீங்க எல்லோ... எங்களுக்கும் அதுதானே வேணும்... ரெண்டு பிள்ளையும் சீரும் சிறப்புமாய் வாழுறதை பார்க்கிறதை விட வேற என்ன ஆசை இருக்க போகுது..."
என்று தன் பங்குக்கு மகேஸ்வரியும் ஒத்து ஊதினார்.

முரளி எதுவும் சொல்லாமல் தங்கையை மெல்லத் திரும்பிப் பார்த்தான். மேகலா முகம் வெளிர திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவளுக்கு பூமி சற்றே சுழன்றது போல இருந்தது.

திக்கித் திணறி, “அப்பா… இப்போ... எதுக்கு.. வேணாமே...?” என்றாள்.

அரவிந்தன் அமைதியாக இருந்தார்.
அந்த அமைதியே அவளுக்கு பதிலாக இருந்தது.

"இன்னும் என்ன வேணாம்... இத்தனை வருசம் போதாதா உங்களுக்கு...??? உங்களின்ர மனசின் காயங்கள் ஆறோணும் எண்டு தானே நாங்களும் காத்திருந்தோம். இனிமேலும் வேணாம் எண்டால் என்ன அர்த்தம்??? அவனை இன்னும் நீங்க மறக்கேல்ல... நீறுபூத்த நெருப்பா இருந்த நினைப்பு இப்ப அவனைக் காணவும் வெளியே வந்திட்டு என???"

"இல்லையப்பா... சத்தியமா இல்ல... அவர் இனிமே என்ர வாழ்க்கையில இல்ல..."

"பிறகு என்ன... யாரும் இல்லையெண்டால் இனிமேல் வாரவரை குடி வையுங்கோ... உங்களுக்காக தான் உங்கட அண்ணா முப்பத்தஞ்சு வயசாகியும், நிறைய சம்மந்தங்கள் வந்தும் எல்லாத்தையும் தவிர்த்துட்டு இருக்கிறான்... அவனுக்காக சரி நீங்க சம்மதிக்கோணும் பிள்ள..."

"நான்... உங்கட மகளா மட்டும் இருந்துட்டு போறனே அப்பா... அண்ணாவுக்கு இந்த சம்பந்தத்தை முடியுங்கோ... ப்ளீஸ்..."கண்களில் கண்ணீர் திரையிட கைக்கூப்பி கெஞ்சினாள்.

"அப்பா சரியெண்டாலும் நான் சம்மதிக்க மாட்டன் மேகலா... உன்னை கைபிடிச்சு கொடுத்துட்டு தான் என்ர கலியாணத்தை பத்தி யோசிப்பன்.." என்று உறுதியாகச் மறுத்தான் முரளி.

அதன்பிறகு மேகலா கண்ணீர்மல்க எவ்வளவு கெஞ்சியும் அங்குள்ளவர்கள் பிடிகொடுக்கவில்லை. இறுதித் தீர்ப்பு இதுதான் என்பது போல அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிச் சென்றனர். வரவேற்பறையில் மேகலா மட்டும் அநாதையாக நின்றாள். மகேஸ்வரி மெதுவாக அருகில் வந்து அவள் தலையைத் தடவினார்.

"ஒண்டும் கவலைப்படாதீங்கோ... எல்லாம் காலம் போகப் போக சரியா போயிடும். உங்களின்ர அறையில போய் கொஞ்சம் படுத்து எழும்புங்கோ..." என்றார் மகேஸ்வரி. கண்ணீரால் தன்னைக் கரைத்து விடுவாள் என்று அவளை ஆறுதல் படுத்தவோ அறிவுரை சொல்லவோ முனையவில்லை.

மேகலா இயந்திரம் போலத் தன் அறைக்குச் சென்றாள். உள்ளே நுழைந்து கதவைச் சாத்தியவள், அப்படியே ஜன்னலோரம் இருந்த கட்டிலில் அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்து விம்மியழுதாள்.

அவளது நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி மெல்லச் சுழலத் தொடங்கின.

இந்த உடுவில் மண்ணின் செம்மண் வாசனையையும் புழுதியையும் தாண்டி, முதன்முதலில் அவள் கொழும்பில் கால் வைத்த அந்த நாள்...

பயிற்சி மையத்தின் பெரிய வாசல்.
கனவுகளால் நிறைந்த கண்கள்...

அங்கே… அந்தக் கூட்டத்தில் நீல நிறச் சீருடையில்… உயரமாக நின்ற ஒருவன்...

சில நேரங்களில் வாழ்க்கை நமக்கு தேர்வைத் தருவதில்லை... முடிவை மட்டும் அறிவிக்கும்...

 
Top Bottom