• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 11

Vishakini

Moderator
Staff member


மையல் 11
கதிரவன் மெல்ல கிழக்கே உதயமாகிக் கொண்டிருந்தான்‌. இன்னும் இருள் பிரியாது இருக்க, செயற்கை விளக்குகளின் உதவியால் ஒளிர்ந்து கொண்டிருந்தது சென்னை எக்மோர் ரயில் நிலையம்.

நடைமேடையில் நின்றது தொடர்வண்டி. தனது உடைமைகளுடன் முதல் ஆளாய் மேகவி இறங்கிட, மனைவியைத் தொடர்ந்து வெளியே வந்தான் சத்தி‌.

அனிச்சையாய் இருவரது விழிகளும் சுற்றுப் புறத்தை ஆராய, பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் அங்கிருந்த மக்கள்.

பயணத்திற்கான அதிகாலை வண்டியைப் பிடிக்க வேண்டியவர்கள், நின்ற இரயிலில் இருந்து இறங்கிச் செல்லும் பயணிகள், அடுத்து வரும் தொடரிக்காக காத்திருப்பவர்கள், வயிற்றுப் பிழைப்பிற்காக ஓய்வை மறந்து உழைக்கும் வியாபாரிகள், பாரம் சுமக்கும் பணியாளர்கள் என்று நிதானத்திற்கு இடம் இல்லாது இருந்தது அவ்விடத்தில்‌.

மனைவியைக் கவனித்த சத்தி, "பொண்டாட்டி டீ.?"

ஆடவனின் வினாவில் திரும்பியவள், "நோ தேங்க்ஸ்‌." என்றுவிட்டு பைகளோடு வெளிப்பக்கத்தை நோக்கி நடக்க, "ஹேய்.. பொண்டாட்டி. சொல்லாம கொள்ளாம எங்க போற.?‌" எனக் கேட்டபடி வேக எட்டுகளில் வந்து அவளோடு இணைந்தான்‌.

"எங்க போவாங்க? என்னோட அப்பார்ட்மெண்டுக்குத் தான். உடனே கிளம்பினா தான், ஆபிஸுக்கு கரெக்ட் டைமுக்கு நான் போக முடியும்."

"அப்ப நான்?"

"ஏன், உனக்கென்ன.?"

"கொஞ்சமாவது கட்டுன புருஷன் மேல அக்கறை இருக்கா உனக்கு? இப்படி அம்போனு விட்டுட்டுப் போற?"

அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "ஆம்பளை தான நீ?"

மங்கையின் வினாவில் மெலிதாய் சிரித்தவன், "திடீர்னு உனக்கு ஏன் இந்த சந்தேகம்‍?"

"பின்ன, கூட்டத்துல தொலைஞ்சு போன சின்னப் பையன் மாதிரி பேசுற.?"

"அதுசரி! பொண்டாட்டிக்குனு சில பொறுப்புகள் எல்லாம் இருக்கு. அதைச் செய்யாம, இப்படிக் கடமை தவறலாமா?"

"நான்‌ உன்னை ஹஸ்பெண்டா அக்செப்ட் பண்ணிக்கிட்டா தான், அந்த கடமைக்கு எல்லாம் வேல்யூ. அப்புறம் அதென்ன பொண்டாட்டிக்கு மட்டும் கடமை? அவசியம் செஞ்சு ஆகணுமா என்ன?"

"செஞ்சா சந்தோஷம். இல்லனாலும், உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். எனக்கு வேணும்கிறதை நான் பார்த்துக்கிறேன். இப்ப உன்னோட டைமை வேஸ்ட் பண்ண விரும்பல‌. நீ போ, அப்புறம் நிதானமா பேசிக்கலாம்!"

'அப்புறம் பேசவா? அதுக்கு சான்ஸ் கொடுத்தா தான? பார்க்கிறேன் நான், என்ன செய்யிறனு.' என மனதோடு எண்ணியவள், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாடகை வாகனத்தில் ஏறிச் சென்றாள்.

அடுத்த நாற்பது நிமிடங்களில் தான் தங்கி இருக்கும், அடுக்கு மாடி குடியிருப்பை அடைந்தாள்.‌ காலை நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சற்று விரைவாகவே வந்து சேர்ந்து விட்டாள்.

மேகவி இருப்பது ஒன்பதாம் மாடியில். பளுதூக்கியில் மேலே வந்ததும், சட்டென்று நினைவில் வந்து ஒட்டிக் கொண்டாள் தாரிகா.

ஊரில் சிந்தாமணியைப் போல், சென்னையில் தாரிகா அவளின் தோழி. ஒரே இடத்தில் தான் வசிக்கின்றனர்.

இவளின் இல்லம் ஒன்பது ஏ, அவள் இருப்பது ஒன்பது இ. பளுதூக்கிக்கு அண்மையில் தாரிகாவின் இல்லம். அதனைக் கடந்து தான், மேகவி தனது வீட்டை அடைய முடியும். இங்கு குடி வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளாய் இருவரும் தோழிகளாய் பழகி வருகின்றனர்.

மேகவி சற்று அதிகப்படியான நீண்டதொரு மூச்சை வெளியிட்டாலே, கண்டறிந்து விடுவாள் அவள்.

திடீரென நடந்த திருமணம், அதன் பின்னரான அழுத்தம் ஆகியவற்றால் ஊரில் நடந்த நிகழ்வுகளைத் தோழியிடம் பகிர மறந்து இருந்தாள். அதிசயத்திலும் அதிசயமாய், அவளுமே கடந்த பத்து தினங்களாய் மேகவிக்கு அழைக்கவே இல்லை.

'ஏன், அவ ஃபோனே போடல?' என யோசனை எழுந்தாலும், "ஸ்டாரோட கண்ணுல படாம வீட்டுக்குப் போயிடணும். நமக்குக் கல்யாணம் ஆன விஷயம் மட்டும் தெரிஞ்சிச்சு, அப்புறம் வச்சு செஞ்சிடுவா!" என்று முணுமுணுத்தபடி வேக நடையில் இல்லத்தை நோக்கி நடந்தாள்.

சரியாய் அந்நேரம் குடியிருப்பின் காவலாளி தாரிகா வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, அரைகுறை தூக்கத்துடன் கொட்டாவியை வெளி விட்டபடி வெளியே வந்தாள்.

"என்ன செக்யூரிட்டி அண்ணா?"

"சாரோட காரை கிளீன் பண்ணியாச்சு மேடம். இந்தாங்க சாவி.." என்று நீட்டினார்.

"தேங்க்ஸ். நான் அவருக்கிட்ட சொல்லிடுறேன்." என உரைத்திட, நெற்றியில் கை வைத்து அசைத்துவிட்டு நகர்ந்தார்.

அந்த இடைவெளியில் மேகவி அவளின் பார்வையில் பட்டுவிட, "ஹலோ.. மிஸ் கிளவுட் எங்க அப்படியே நைஸா மிதந்து போறீங்க.?"

தோழியின் வினாவில் சட்டென்று நின்ற மங்கை, சுட்டித்தனம் செய்து சிக்கிக் கொண்ட குழந்தை போல், திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்.

நிலவுப் பற்கள் இதழ்களுக்கு இடையில் பளீரென மின்னிட, "என்ன சிரிப்பு இது? எதுவும் தப்பு செஞ்சியா.?"

"சீச்சீ.. அதெல்லாம் இல்ல."

"அப்படியா? ஆனா ஏதோ டிஃபரெண்ட் தெரியிதே உன்கிட்ட?"

"பத்து நாள் கழிச்சு மீட் பண்ணுறோம்ல, அதுனால அப்படி இருக்கும்."

"ஹோ.. இருக்கலாம். ஆமா, ஊருக்கு வர்றதை ஏன் என்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லல நீ.?"

"நீ மட்டும் எனக்குப் பேசுனியா? பத்து நாளா ஒரு கால் கூட இல்ல?"

"நான் பண்ணல, சரி. நீ பேசி இருக்கலாம் இல்ல?"

"ஊர்ல வரிசையா ஃபங்ஷன். அதுல பிஸி ஆகிட்டேன்."

"ஹேய்.. ஆமா இல்ல? உன்னோட அண்ணாவுக்கு மேரேஜுனு தான கிளம்பிப் போன? மறந்தே போயிட்டேன் பாரு! சரி, எப்படி நடந்துச்சு கல்யாணம்?"

"சூப்பரா நடந்துச்சு!"

"ஓகே ஓகே!"

"சரி, நீ எதுக்குக் கால் பண்ணல சொல்லு.?"

"ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்."

தோழியின் பதிலில் பதற்றமடைந்த மேகவி, "ஏய், என்னாச்சு?" என்றபடி எதிரே இருந்தவளின் கைகளைப் பற்றிக் கொண்டு முன்னும் பின்னுமாய் திருப்பிப் பார்த்தாள்.

"எனக்கு எதுவும் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன்."

"அப்புறம் ஆக்ஸிடெண்டுனு சொன்ன?"

"அவருக்குத்தான்."

"இப்ப எப்படி இருக்காரு, உன்னோட ஹஸ்பெண்ட்?"

"ஃபைன். ஒன் வீக் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் வந்தோம். அந்த பிரஸர்ல, நான் உன்னை மறந்துட்டேன்."

"பரவாயில்ல, விடு! வீட்டுல தான இருக்காரு, அப்புறம் எதுக்கு காரை வாஷ் பண்ணீங்க?"

"டாக்டர், இன்னைக்கு ஒன் டைம் செக்கப்புக்கு வரச் சொல்லி இருக்காங்க. பார்த்துட்டு அப்படியே வொர்க்குக்கு போறாரு."

"ஏன் அதுக்குள்ள? ரெஸ்ட் எடுக்கலாம்ல இன்னும் ரெண்டு மூனு நாளு?"

"ரெஸ்ட்டா? ஐயையே! எந்நேரம் பார்த்தாலும் மொபைலும் கையுமாத்தான் இருக்காரு. அத்தனை கால் வருது, ஆஃபிஸ்ல இருந்து. அதுக்கு அவரு அங்க போறதே பெட்டர். இவரு பேசுறதுல இருந்து, என்னோட காதாவது தப்பிச்சிக்கும்."

சிரித்த மேகவி, "ஓகே ஸ்டார், டைம் ஆகுது. நானும் போய் ஆஃபிஸுக்கு ரெடி ஆகுறேன். பாய்!" என விடைபெற, "சரி, இப்ப கிளம்பு. ஆனா, ஈவ்னிங் வந்து உன் அண்ணாவோட மேரேஜ் ஸ்டோரிஸ் எல்லாம் எனக்குச் சொல்லணும்!" என்ற நிபந்தனையோடு தோழியை வழி அனுப்பினாள் தாரிகா.

அதன் பின்பான பொழுதுகள் எல்லாம் பரபரப்பில் தஞ்சமடைந்து கொண்டன.

கிட்டத்தட்ட பத்து தினங்கள் பூட்டியிருந்த இல்லம். படிந்திருந்த தூசியால் காலோ கரமோ பதிக்கும் இடங்களில் எல்லாம், அதன் அச்சு விழுந்தது.

முழுமையாய் சுத்தம் செய்துவிட்டு நிதானமாக பணிக்குக் கிளம்பும் நிலையில் இல்லை அவள்.

தனது படுக்கை அறையை மட்டும் தூய்மைப் படுத்திக் குளித்துத் தயாராகி‍, கைப்பையுடன் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாள்.

தோழியினது குடியிருப்பின் அழைப்பு மணியை அழுத்த, அதற்காகவே காத்திருந்தது போல் வந்தாள் தாரிகா.

"இந்தா டீ.." எனத் தேநீரை நீட்ட, வாயிலில் நின்றபடியே வாங்கி அருந்தினாள்.

"உள்ள வந்து ஹால்ல உட்கார்ந்து குடிச்சா தான் என்ன?"

"ஏற்கனவே லேட், அதுக்கு எல்லாம் டைம் இல்ல. ஸ்டார், செக்யூரிட்டிக்கிட்ட அப்பார்ட்மெண்டோட இன்னொரு கீ இருக்கு. உன்னோட வீட்டுக்கு வேலைக்கார அம்மா வரும்போது, அப்படியே அங்க கிளீன் பண்ண சொல்லிடுறியா? நான் பணம் கொடுத்திடுறேன்."

"அச்சோ! மதியம் ஏதோ வேலை இருக்குனு காலையிலயே வந்து கிளீனிங் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு இப்பதான் ஃபைவ் மினிட்ஸுக்கு முன்னாடி கிளம்புனாங்க."

"ஹோ.. சரி விடு, நான் ஈவ்னிங் வந்து பார்த்துக்கிறேன்."

"நான் வேணும்னா கிளீன் பண்ணட்டுமா?"

"நீ, உன்னோட வீட்டுக்கே செய்ய முடியலனு தான் வேலைக்கு ஆள் வச்சிருக்க. இதுல, என் வீட்டுக்குச் செய்யப் போறியா?‌ காமெடி பண்ணாத என்ன?‌"

அவள் பாதிப் பற்கள் தெரியும் படி சிரித்துச் சமாளிக்க, காலியான தேநீர் டம்ளரைத் தோழியிடம் கொடுத்த மேகவி புன்னகையுடன் வேலைக்குக் கிளம்பினாள்.

ஆண்களைப் போல் அணிந்திருந்த பொத்தான்கள் வைத்த மேல் சட்டைக்குள் திருமணம் ஆனதன் அடையாளமான மஞ்சள் கயிறு மறைந்து கொள்ள, எவரின் பார்வையிலும் படாமல் போனது. ஷூவைப் போலான காலணிக்குள் கால் விரலோடு தங்கிக் கொண்டது மிஞ்சி.

அதனால் அன்றைய தினம் அறிந்தவர், தெரிந்தவர், பார்ப்பவர், பழக்கமானவர், பேசுபவர், உடன் பணிபுரிபவர்கள் என அனைவருக்குமே இயல்பான மேகவியாகவே தென்பட்டாள்.

மங்கையானவள் மனதளவில் புது உறவிற்குத் தயார் ஆகாததால், மற்றவரிடம் அதைத் தெரிவிப்பதிலும் தயக்கம்.

'கணவனாய் இருப்பவனை இனி எப்படிக் கையாள்வது?' என்ற சிந்தனையிலேயே அன்றைய தினத்தைக் கடத்திவிட்டு, இரவில் இல்லத்தை அடைந்தவளை அதிர வைத்தது, அங்கு நடந்திருந்த நிகழ்வு.

*

"டேய்.. பதிலே சொல்லாம இருந்தா என்னடா அர்த்தம்?‌" என சாகரன் வினவிட, "ஒன்னும் இல்ல மாம்ஸ்." என்று மெலிதான பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு சமாதானம் உரைத்தான் சத்திய கீர்த்தி.

"என்ன ஒன்னும் இல்ல?‌ நீயும் பாப்பாவும் காலையில ரீச் ஆனதும் என்னென்ன செஞ்சீங்கனு கேட்டேன். ஒரு பதிலும் வரல உன்கிட்ட இருந்து."

"சொல்லுறதுக்கு எதுவும் இல்ல. அதுனால சொல்லல."

"ஓ.."

"மாம்ஸ் எங்களைப் பத்தி எதுவும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. நான் பார்த்துக்கிறேன்."

"என்னோட மாமனார் மாமியாரு தான்‌ 'அவன்கிட்டப் பேசுனீங்களா மாப்ள?‌ என்ன சொன்னான்'னு கேட்கிறாங்க. பெரியவங்களால அலைய முடியாது ஓகே தான். நானும் தனாவும், உங்கக்கூட வந்து தேவையானதை செஞ்சு கொடுத்துட்டு வந்திருப்போம். எங்களுக்காகவாது, பாப்பா கொஞ்சம் உன்கிட்ட நார்மலா பழகி இருப்பா‌‌. நீ அதையும் வேணாம்னு மறுத்துட்ட. நான் இப்ப வீட்டு ஆளுங்களுக்கு என்ன பதில் சொல்லுறது?"

"இன்னைக்குத் தான் போயி இருக்காங்க.‌ வீட்டுல செட்டில் ஆக எப்படியும் ஒரு வாரம் ஆகும்னு சொல்லி சமாளிங்க."

"இப்ப சமாளிக்கலாம், சரி. ஒரு வாரத்துக்கு அப்புறம்‍?"

"பார்த்துக்கலாம் மாம்ஸ்‌."

"உண்மையை சொல்லு, காலையில என்ன நடந்துச்சுன்னு."

"பெருசா ஒன்னும் இல்ல."

"என்னோட சுயநலத்துக்காக, உனக்கு இந்த கல்யாணத்தை செஞ்சு வச்சுட்டேனோனு கில்ட்டா இருக்கு சத்தி. பாப்பாவுக்கும் விருப்பம் இல்ல‌. உங்க வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனா?"

"மாம்ஸ்.‌. என்ன பேச்சு இது? உங்க தங்கச்சியை கல்யாணம் செஞ்சுக்க கேட்டது நான். சோ, இந்த லைஃப்ல எது நடந்தாலும் அதுக்கு முழு பொறுப்பும் நான்தான். அதுனால இந்த கவலையை விட்டுட்டு, என் தங்கச்சியை எப்படி சந்தோஷமா வச்சிக்கிறதுன்னு மட்டும் பாருங்க."

"அதெல்லாம் தனாவை நான் நல்லபடியா பார்த்துக்குவேன்."

"உங்க மேல, அந்த நம்பிக்கை இருக்க போயி தான கல்யாணம் செஞ்சு கொடுத்தோம்.?" என சத்தி அச்சூழலை இலகுவாக்க முயன்றான்.

"டேய் மாப்ள, பாப்பாவை கன்வின்ஸ் பண்ணுறது அப்படி ஒன்னும் லேசான விஷயம் இல்ல. எதுனாலும் என்கிட்ட சொல்லிடுடா. மனசுக்குள்ளயே வச்சுக்காத! நானும் என்னால என்ன முடியும்னு பார்க்கிறேன்."

"அப்ப, உங்க தங்கச்சி புருஷனுக்காக இந்த ஒரு குட்டி வேலையை மட்டும் செய்ங்க." என சத்தி தனது தேவையை உரைக்க, "ஸுயர்!" என்று விட்டு இணைப்பை நிறுத்தினான் சாகரன்.



























































































 
Top Bottom