• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 10

தமிழும் அகத்தியனும் ஊருக்கு திரும்பி கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது. இருவருக்கிடையே ஒரு மாற்றமுமின்றி வாழ்க்கைச் சென்று கொண்டிருந்தது.

அவளது ஊருக்குச் சென்றால் அவளைப் பற்றி எதாவது தெரிந்து கொள்ளலாம் என்ற அகத்தியனின் திட்டம் நமத்துப் போக, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்தான் அவன்.

அவளிடமே நேரடியாக கேட்டு விடலாமா? என்ற அவனது எண்ணத்தை மீண்டும் ஒரு சம்பவத்தைச் சிறப்பாகச் செய்து, ரப்பர் கொண்டு அழித்திருந்தாள் அவனது தர்மபத்தினி.

விடுமுறையுடன் கூடிய வார இறுதியில் அகத்தியன் அவளை 'மாதேரன்' என்ற மலைப்பகுதிக்கு குட்டிச் சுற்றுலா போல அழைத்துச் செல்ல, அங்கு ஊட்டியில் உள்ளது போல மலைமீது பயணிக்கும் ரயில் உண்டு.

அதில் பயணிக்க அவள் சிறுபிள்ளை போல் உற்சாகமாக குதூகளித்து கேட்டதால், அவன் டிக்கெட் எடுக்கச் சென்றிருந்த சமயத்தில், தனியாக நின்ற தமிழ் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

அச்சமயம் சற்று தொலைவில் ஒரு பெண்ணின் இடையில் ஒருவன் கை வைத்துவிட அவனை நோக்கி விரைந்தவள் அவனது கையைப் பிடித்து திருகி, விரல்களை மடக்கி, முஷ்டியை உடைத்து என்று அவனை ஒருவழி செய்து விட்டாள்.

அவனது அலறலில் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட அவனை அவளிடமிருந்து விலக்குவது பெரும்பாடாக இருந்தது. போலீஸ் எல்லாம் வந்து ஒரே களேபரமாகிவிட, அவளிடம் வேறொரு நாள் அழைத்து வருவதாகச் சொல்லி வீட்டிற்குத் திரும்ப அழைத்து வந்து விட்டான்.

வீட்டிற்கு திரும்பிய பிறகு, அவளது பிரச்சனை என்னவென்று அறியாமல் தவித்த அகத்தியன் அவனது சிந்தனையில் இருக்க, அவனது சுருங்கிய வதனம் கண்டு அவள் மனம் வாடியது.

அன்றைய இரவு "அவன் தப்பு செய்தான் தானே? அவனுக்கு தண்டனை வேணாமா?" அவள் தனது செயலை நியாயப்படுத்த அவனிடம் கேட்க, அதற்கான அவனது ஒற்றை எழுத்து பதிலான 'ம்' அவளுக்கு அதிருப்தியாக இருந்தது.

அவனுக்கு அவள்மேல் வெறுப்பு வந்து விட்டதென அவள் அழுது தீர்க்க, 'அப்படி எல்லாம் ஒன்றுமில்ல.' என்று அவளை சமாதானம் செய்வதற்குள் ஒருவழியாகி விட்டான் அவன்.

அப்படி இருந்தும் அவளிடம் பேச்சிற்கு இடையே 'உனக்கு சிறுவயதில் எதாவது பிரச்னை ஏற்பட்டதா?' கேட்டவனை கண்கள் கலங்கப் பார்த்தாள் அவள்.

"அப்போ என்னை மனநிலை சரியில்லாதவள்னு சொல்றீங்களா? நான் பைத்தியமா? உங்களுக்கு என்னைய பிடிக்கலையா? " என்று ஒருபாடு மீண்டும் அழுது புலம்ப, அவனுக்கு விழி பிதுங்கும் நிலை.

அவளது தற்போதைய மனநிலையில் எதைப் பேசினாலும் சரியாக வராது அவளிடம் இனிமேல் இதைப்பற்றி பேசக்கூடாது என்ற முடிவை எடுக்க வைத்து விட்டாள் அவள்.

இதற்கு என்னதான் தீர்வு என்று அவன் குழம்பி இருந்த சமயம், மருத்துவமனையில் பணிபுரியும் அவனது நண்பன் சந்திரன் மூலமாக அதற்கு ஒரு முடிவு பிறந்தது.

"என்னடா அகத்தியா இப்ப எல்லாம் ஒரே சிந்தனையாவே இருக்க? எதாவது பிரச்சனையா?" எனக் கேட்க, "அதெல்லாம் ஒன்னுமில்ல சந்தர்." தனது மனைவியின் நிலையைப் பற்றி நண்பனிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கினான்.

" நாமளே எப்பயாவது ஒரு முறைதான் சந்திக்கிறோம். அப்போக்கூட நீ அவுட் ஆஃப் மைன்ட்ல இருந்தா எப்படிடா? என்னை உன்னோட ஃப்ரெண்டுனு நினைச்சா எங்கிட்ட ஷேர் பண்ணு. உனக்கு விருப்பம் இல்லனா விட்டுடு. ஸாரி! " அவனை வற்புறுத்துவதாக எண்ணி உடனே மன்னிப்பைக் கேட்டான் சந்திரன்.

சில நொடிகள் யோசித்த அகத்தியன் தமிழின் செய்கையை பற்றி விளக்கமாகச் சொல்லாமல், தன் மனைவியின் மனதில் ஏதோ அழுத்துகிறது அவளிடம் நேரடியாக கேட்டறிய முடியாமல் விழிப்பதாக மேலோட்டமாகச் சொல்லி முடித்தான்.

அகத்தியன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்ட சந்திரன், "நீ எதுக்கும் சைக்கார்டிஸ்ட் கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டுப் போய் பாரேன். எங்களோட ஹாஸ்பிடல்ல சித்ரா டாக்டர் ரொம்ப நல்லா பார்ப்பாங்க. உனக்கு ஓகேனா அவங்கள்ட்ட ஒருமுறை கன்சல்ட் பண்ணலாமா?" ஆலோசனைக் கூறினான்.

அகத்தியனும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறான் ஆனால் ஏற்கனவே 'நான் பைத்தியமா?' என்று கேட்டபடி புலம்பிக் கொண்டிருக்கும் தமிழிடம் எப்படி சம்மதிக்க வைப்பது என்று குழம்பியவன் தனது குழப்பத்தை நண்பனிடமும் கூறினான்.

"அட, அவங்க ஹாஸ்பிடல் எல்லாம் வர வேணாம், எனக்கு டாக்டர் ரொம்ப பழக்கம். அவங்கள்ட்ட சூழ்நிலையை எடுத்துச் சொல்றேன். டாக்டர் வீட்டுக்கு லன்ச் போற மாதிரி சொல்லிக் கூட்டிட்டு வா."

"யூ டோன்ட் வொர்ரி. மீதியை அவங்க பார்த்துக்குவாங்க." நண்பனுக்கு தைரியமூட்டும் விதமாகச் சொல்ல அகத்தியன் பெரும் ஆசுவாசத்துடன் சந்திரனை அணைத்துக் கொண்டான்.

அதன்படி முதலில் அந்த மருத்துவரிடம் பேசிய அகத்தியன் தமிழின் மனநிலைப் பற்றி எடுத்துரைத்து சற்று தயங்க,"டோன்ட் வொர்ரி அகத்தியன். எடுத்த உடனே உட்கார வைச்சு ஹிப்னடைஸ் பண்றது எல்லாம் சினிமாவுல தான்." என்று சிரித்தவர்,

"முதல்ல அவங்க ஃப்ரெண்ட்லியா ஃபீல் பண்ணனும் அன்ட் தென் சில பிக்சர்ஸ் காட்டி டெஸ்ட், இப்படி படிப்படியா தான் போகனும். கண்டிப்பா அவங்க ரெக்ரட் பண்ற அளவுக்கு போகாது. முதல்ல நீங்க இயல்பா இருங்க." என்று அறிவுறுத்தினார்.

மருத்துவரிடம் ஆலோசித்து ஒருநாளை தேர்ந்தெடுத்து தமிழை அழைத்து வந்து விட்டான் அகத்தியன். நட்பு முறையில் பேசி உணவை முடித்தபிறகு சிறு விளையாட்டு போல சில புகைப்படங்களைக் காட்டி அவளது கருத்தைக் கேட்டார் சித்ரா.

அவளது பதிலில் புருவங்கள் சுருக்கியவர் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மறுநாள் அகத்தியனிடம் அவளது மனதில் ஏதோ பிரச்சனை இருப்பதை ஊர்ஜிதம் செய்தார்.

அதற்கு அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் அவளது விடுமுறையை கணக்கிட்டு அவளுக்கு சந்தேகம் வராதவாறு மருத்துவருடன் சந்திப்புகள் நடந்தன.

இறுதியில் அகத்தியனிடம் அவளது ரிப்போர்ட் கொடுத்த மருத்துவர் சித்ரா, " இனிமே அவங்களோட ஒத்துழைப்பு இருந்தா மட்டும் தான் முழுசா பிரச்சனையை டைக்னஸ் பண்ணி ட்ரீட்மெண்ட் தொடங்க முடியும் அகத்தியன்." என்று விட்டார்.

அவரிடம் பேசிவிட்டு அன்று வீட்டிற்கு வந்த அகத்தியன் அமைதியாக இருக்க, அவன் எதிர்பார்த்தது போல தமிழுக்கு அவனது வாடிய வதனம் கவலைக் கொள்ளச் செய்தது.

இரவில் படுக்க வராமல் ஹாலில் ஸோஃபாவில் அமர்ந்தபடி அவன் தலைமீது கைவைத்து சாய்ந்து படுத்திருக்க, அவன் வருவான் அவனிடம் பேசி என்னவென்று கேட்கலாம் என்று தங்களது அறைக்குள் காத்திருந்தாள் தமிழ்.
 
Top Bottom