மொழியின் இலக்கணம் நீயடா - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
அத்தியாயம் - 11

அகத்தியனிடம் பேச எண்ணி அறையில் காத்திருந்த தமிழ்,
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்து அவன் வராததால் தங்களது அறைக்கு வெளியே வந்து பார்த்தவள், ஹாலிலேயே அவன் உறங்குவதில் வேதனையாக உணர்ந்தாள்.

மெதுவாக அவனருகில் வந்தவள் அவனது தோளைத் தொட, சட்டென கண் விழித்தவன், "என்னாச்சு மொழி?" எனக் கேட்க அவனருகில் தமிழ் தரையில் அமர்ந்தாள்.

"ஹே!! இங்க உட்காரு மொழி. ஏன் கீழே உட்கார்ந்துட்டு இருக்கடா?" தனது அருகில் ஸோஃபாவில் அமருமாறு தட்டிக் காட்டியவன் பதறிப் போனான்.

அவனது பதற்றத்தைக் கண்டு கொள்ளாமல் மெதுவாக அவனது மடிமீது தலை சாய்த்து சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். அகத்தியனும் அவளது கேசத்தை வருடியபடி அவளது நெற்றியில் விழுந்த கற்றை முடியை ஒரு விரலால் ஒதுக்கியவாறே, "என்னம்மா!?"பரிவுடன் வினவினான்.

"நாந்தான் அதை உங்கள்ட்ட கேட்கனும்." என்றவள் தலையை நிமிர்த்தி அவனது கண்களைப் பார்த்து "ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?" கேட்க, ஒன்றுமில்லை என்றபடி தன் பார்வையை விலக்கி தடுமாறினான் அகத்தியன்.

"நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் இருக்கேன். நீங்க அடிக்கடி அப்செட் ஆகி இருக்கீங்க. நான் எதாவது தப்பு செய்துட்டனா?" கலக்கமாக அவள் கேட்க,"அப்படி எல்லா இல்லம்மா." என்றான் வேகமாக.

"இல்ல நீங்க எங்கிட்ட எதையோ மறைக்கறீங்க. டாக்டர் எதாவது சொன்னாங்களா? எனக்கு எதுவும் சரி செய்ய முடியாத மாதிரி பிரச்சனை இருக்குனு சொன்னாங்களா?" அவள் கேட்கவும் அவனது முகத்தில் அதிர்வு.

அவனது அதிர்வை சட்டென மாற்றியவன், அவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள் என்பது தெரியாமல் வாய் திறக்க வேண்டாமென அவன் அமைதி காக்க அவளே தொடர்ந்தாள்.

"எனக்கு எல்லாம் தெரியும். சித்ரா டாக்டர்கிட்ட எனக்கு ட்ரீட்மென்ட் பார்க்கத்தானே அடிக்கடி அங்க கூட்டிட்டு போறீங்க." அவள் உண்மையை உடைக்க, "அது வந்து, உனக்கெப்படி தெரி" அவன் கேட்பதற்குள்,

" ஒருத்தர் ஃப்ரெண்ட்லியா பழகறதுக்கும் பர்பஸ்ஆ பழகறதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா? என்னால உங்களுக்கு முதல்ல இருந்தே தொல்லை தான்ல," விரக்தியாக அவள் சொல்ல அவளது வாயை தன் கைகொண்டு மூடி மறுப்பாகத் தலையசைத்தான்.

அவனது கரத்தை விலக்கி லேசாக புன்னகைத்த தமிழ், "உண்மைய சொல்லனும்னா நான் கல்யாணம் வேணாம்னு சொன்னபிறகு கூட வலுகட்டாயமா என்னைய கட்டிட்டு நீங்கதான் இப்ப அவஸ்தைப் படுறீங்க." அவளது கண்கள் கலங்கி விட்டன.

அந்த கண்ணீர் அவனுக்கானது. தன்னை திருமணம் செய்த இந்த அன்பானவனுக்கு, தன்னால் இயல்பான கணவன் மனைவி போல ஒரு மகிழ்வையும் தர இயலவில்லை என்ற அவளது இயலாமையால் வந்த கண்ணீர்!

அவள் அதை வார்த்தைகளில் வெளியிட அவளை எழுப்பி தன்னருகே அமர்த்தி அணைத்து கொண்டவன், "உளறாதே மொழி. என்ன நடந்தாலும் நீதான் என் மனைவி. செக்ஸ் மட்டும் தான் முக்கியம்னு இல்ல. ஒரு வயசுக்கு அப்றம் அதுவும் சலிச்சு போயிடும்."

"எனக்கு உன்முகத்தை எப்பவும் சிரிப்போட பார்க்கனும். அதுக்கு நீ என்னைக் கொன்னாக்கூட எனக்கு சந்தோஷம் தான்." என்றவன் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளது விழிகளில் முத்தமிட்டான்.

எதிர்பார்ப்பு இல்லாத அவனது அந்த நேசம் அவளுள் ஆழமாக இறங்க, அவன்மீது பொங்கிய காதலில் முதல்முறையாக அவளாக எம்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அவளது முதல் முத்தத்தை கண்கள் மூடி அனுபவித்த அகத்தியனின் இதழ்கள் புன்னகைத்தன.

இருவருமே அந்த தருணத்தின் இதத்தை உணர்ந்து மௌனமாக அதை ரசித்து உள்வாங்கிட, "நான் உண்மையில சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறீங்க தானே?"எனக் கேட்டுத் தமிழ் தான் அதைக் கலைத்தாள்.

அகத்தியன் அமைதியாக திரும்பி அவளைப் பார்க்க, "அப்ப அந்த டாக்டர் என்ன சொன்னாங்கனு உண்மைய சொல்லுங்க. எனக்கு பெரிய மென்டல் ப்ராப்ளம் எதுவும் இருக்கா?" வினவினாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணம்மா. இனி நீ முழு மனசோட ஒத்துழைச்சா தான் மேற்கொண்டு ட்ரீட்மெண்ட் ப்ரோசீட் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. அதை உங்கிட்ட எப்படி சொல்றதுனு தான் யோசனையா இருந்தேன்." என்றவன்,

அவளது தலையைப் பிடித்து செல்லமாக ஆட்டியபடி,"அதுக்குள்ள மேடம் தான் சிஐடி மாதிரி எல்லாம் தெரிஞ்சுட்டீங்களே!" பெருமிதத்துடன் கூற, மலர்ந்து சிரித்தாள் தமிழ்.

பிறகு,"எந்த நொடியில நீங்க என் மனசுல நிறைஞ்சீங்க தெரியல. ஆனா ஒரு சராசரி மனைவியா, உங்களோட சந்தோஷமா வாழனும்னு என் மனசு ரொம்ப ஆசைப்படுது. ஆனா என் மனசு ஏத்துக்கிட்ட விசயத்தை, என் உடலால 'அந்த' விசயத்தை இயல்பா ஏற்க முடியல. நான் என்ன செய்றது?" தயக்கமாகக் கூறியவளது கண்களில் மீண்டும் நீரூற்று.

அவளது மனமாற்றம் அகத்தியனுக்கு அத்தனை நிறைவைத் தர, அந்த மகிழ்வில் அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபின்,"நீ எதுவும் செய்ய வேணாம். டாக்டர்க்கு கொஞ்சம் கோஆப்ரேட் செய்தா போதும்டா." என்றவன்,

"என்னை நம்பு மொழி. நாமளும் எல்லா கணவன் மனைவி போல ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம். அதுக்கு சாட்சியா எத்தனை வேணுமோ அத்தனை பிள்ளைகளையும் பெத்துக்கலாம் சரியா?!" ஒற்றைக் கண்ணடித்து புன்னகைக்க அழகாக வெட்கம் கொண்டாள் தமிழ்.

முதல்முறையாக அவளது வெட்கத்தைக் கண்டவனுக்கு காதல் பித்தம் தலைக்கேற அத்துமீறத் துடித்த கரங்களையும் மனதையும் மிகுந்த சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டான் அகத்தியன்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty