• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 13

விடுமுறை முடிந்து பாட்டி வீட்டில் இருந்து திரும்பிய தமிழின் முகம் வாடி இருந்ததில் யோசனையான விசாலம், மகளிடம் விசாரிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

தமிழும் தன் தாயிடம் தனக்கு நேர்ந்ததை கூறினால் தாயின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற அச்சத்துடன் தயங்கி கொண்டு இருக்க, தனியாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்த வேளையில் "என்னாச்சு தமிழு?" மகளிடம் மெதுவாக விசாரித்தார் விசாலம்.

அவள் பதில் ஏதும் கூறாமல் மிரண்டு விழிக்க, அவளை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தவர் நிதானமாக மீண்டும் அதையேக் கேட்கவும் அன்று நேர்ந்ததை நடுக்கத்துடன் கூறி முடித்தாள் தமிழ்.

தாயிடம் தனது தாய் மாமன் செய்த விஷயத்தை கூறியதும் அதற்கு அவர் குறைந்தபட்சம் மாமன் மீது கோபம் கொண்டு தனக்காக அவரிடம் சென்று சண்டையிடுவார் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவரோ அமைதியாக இருந்தார்.

பிறகு ஏதோ யோசித்தவர், "இந்த விஷயத்தை இத்தோட மறந்துடு தமிழு. யார்கிட்டயும் சொல்லாத." என்று மட்டும் அழுத்தமாகக் கூறிய தாயை புரியாதப் பார்வை பார்த்திருந்தாள் தமிழ்.

அவர் தன்னிடம் இவ்வாறு கூறிவிட்டு ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக மாமனிடம் சண்டையிட்டு அவனை அடிக்கக்கூட செய்வார் என்றெல்லாம் தனக்குள் கற்பனை செய்து கொண்டு அமைதியாகி விட்டாள் தமிழ்.

ஆனால் அடுத்துவந்த காலாண்டு விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு தாயோடு தமிழ் சென்ற போது, எதுவுமே நடவாதது போல அவர் இயல்பாக மாமனுடன் உரையாடக் குழம்பிப் போனாள்.

விசாலத்தை பொறுத்தவரை அந்தக் காலத்தில் சொந்த குடும்பத்திலோ அல்லது வெளியிடத்திலோ இம்மாதிரியான சூழ்நிலைகளை கடக்காத பெண் குழந்தைகளே இல்லை.

அவருக்குமே அவரது சிறு வயது பிராயத்தில் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டதால், தமிழுக்கு நடந்ததை அவர் பெரிதாக எடுக்கவில்லை அதன்பின் ஊருக்கு செல்லும் போது தன்னுடனே அவளை அழைத்துச் சென்று திரும்பக் கூட்டி வந்தார்.

தமிழ் சொன்ன அனைத்தையும் கேட்ட அகத்தியனுக்கு ரத்தம் கொதித்து கொண்டிருக்க, கண்கள் மூடிய நிலையில் தனது சிறுவயது நினைவுகளில் நிலைத்திருந்த அவளோ, இரணம் ஆறாமல் புலம்பிக் கொண்டிருந்தாள்

"அம்மா அவனை எதுவுமே பண்ணல தெரியுமா?! எனக்கு தான் அவன பார்க்கும் போதெல்லாம் எதாவது எடுத்து அடிக்கணும்னு அவ்ளோ கோபம் வந்துச்சு.அவனை அம்மாவும் எதுவும் கேட்கல, அப்பாவும் எதுவும் செய்யல." என்று மனத்தாங்கலோடு கண்கள் கலங்கக் கூறினாள் தமிழ்.

தமிழ் தேம்பியபடி கூறவும் உருகிப் போன அகத்தியன் 'நீ அழாதே செல்லம்! அவனை நான் என்ன பண்றேன் பாருடா.' என்பதைப் போல கண்ணீரைத் துடைத்து ஆறுதலாகக் கூற அவளருகே வரவும்," ஷ்ஷ்!" வாய்மீது விரல் வைத்து அவனை அடக்கினார் மருத்துவர் சித்ரா.

"சரிவிடு தமிழ். அதுக்கு அப்றம் வேற யாராவது..எங்கேயாவது உங்கிட்ட இதுமாதிரி நடந்துகிட்டாங்களா?" சித்ரா மெதுவாகக் கேட்க, அவள் உறங்கி விட்டாளோ என்றபடிக்கு சில நிமிடங்கள் மௌனமாக இருந்தாள் தமிழ்மொழி.

உடனே சித்ரா, "தமிழ்! தமிழ்! நான் கூப்டுறது கேட்குதா?" எனக் கேட்டு அவளை உசுப்ப, மெல்லிய குரலில் "ம்ம்" பதிலளித்தவளிடம் மீண்டும் அதேக் கேள்வியைக் கேட்டார் அவர்.

"மாமா அப்படி செய்தபிறகு எனக்கு அப்பாவை தவிர யாரைக் கண்டாலும் பிடிக்கல. ஆம்பள பசங்கள்ட்டேயே பேசவே மாட்டேன். அப்பத்தான்,எங்க ஸ்கூல்ல.. புதுசா ஒருத்தன் வந்து சேர்ந்தான்." அவள் தொடங்கவும், 'இப்போது என்னவோ!?' என்ற பதைபதைப்புடன் இருந்தான் அகத்தியன்.

அன்றைய சம்பவத்திற்கு பிறகு தமிழ் தனக்குள் ஒடுங்கிப் போனாள். தனக்கு நேர்ந்ததை தட்டிக் கேட்காத தாய், தந்தை மீது அவளுக்கு இப்போதும் கூட வருத்தம் உண்டு. ஆனால் அவளது விசயம் தந்தைக்கு கடத்தப்படவில்லை என்பதை அவள் அறியவில்லை.

ஒருவேளை விசாலம் கணவனிடம் நடந்ததைக் கூறியிருந்தால் வருணை இழுத்துப் போட்டு அடித்தே இருப்பார். அவர் வெளிநாட்டு வேலைக்கு ஐந்து வருட கான்ட்ராக்ட் மூலம் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பில் மனைவி மகளை விட்டுச் செல்ல முடிவெடுத்திருக்க மாட்டார்.

தமிழ் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பிடிவாதம் பிடித்ததால் பாட்டி வீட்டிற்கு செல்லும் திட்டம் தவிர்க்கப்பட்டு தாயும் மகளும் மட்டும் சுற்றி இருந்த நண்பர்களின் துணையுடன் அங்கேயே வாழ்ந்திருந்த காலகட்டம் அது.

தாய்மாமனின் செயலால் ஆண்பிள்ளை என்றாலே அதீத வெறுப்பு அவளுக்கு. அதற்கு முன்பு வரை பள்ளியில் பாட சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே சில மாணவர்களிடம் பேசி இருக்கிறாள்.

ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு யாரையும் ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவளை கடுப்பேற்றவே வந்தான் பிரதீப்.

அவனது ஒழுங்கீனத்தால் ஏற்கனவே படித்த பள்ளியில் இடைநீக்கம் செய்யப்பட்டு மேலும் இரு பள்ளிகள் மாறி அங்கும் 'தேறாத கேஸ்' என்ற ரீதியில் கழித்துவிடப்பட்டவன்,

தமிழ் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அவனது தந்தையின் பணபலத்தால் புதிதாக வந்து சேர்ந்தான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அனைவரையும் விட மூன்று வயது மூத்தவன்.

பெரிய கண்களோடு கன்னங்குழிய சிரித்தபடி கௌசல்யாவிடம் பேசிக் கொண்டிருந்த தமிழைக் கண்டு வகுப்பிற்குள் நுழைந்த முதல்நாளே காதல் கொண்டு விட்டானாம்.

அந்த வருடம் முழுவதும் அவளது கவனத்தை ஈர்க்க என்னென்னவோ முயற்சித்துப் பார்த்தவன், எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றதும் வருடக் கடைசியில் அவளிடம் நேரடியாக அதைச்சொல்லி விட்டான்.

அதைக்கேட்ட தமிழ் கோபத்தில் முகம் சிவக்க, அவன்மீது கேவலமான பார்வை வீசியவள், "இனிமே எங்கிட்ட இந்த மாதிரி பேசுன, அவ்ளோ தான் உனக்கு. பேசாம போயிடு." என்ற மிரட்டலோடு விலகிச் சென்று விட்டாள்.

அதன்பின் அவளிடம் சொல்லிவிட்ட தைரியத்தில் அவன் அடிக்கடி அவளைத் தொல்லை செய்ய, "இவனைப் பற்றி ஹெச்.எம் கிட்ட போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் தமிழ்." கௌசல்யா சற்று அச்சத்துடன் தோழிக்கு ஆலோசனை கூறினாள்.

"எல்லா ஸ்கூல்லேயும் விரட்டுன பிறகு இங்க வந்து சேர்ந்து இருக்கான். ஹோம் வொர்க் செய்யலனா நம்மை எல்லாம் அடிக்கற டீச்சர்ஸ் கூட, அவன் க்ளாஸ் கவனிக்கலைனா கூட கண்டுக்க மாட்டீன்றாங்க."

"நாம போய் சொன்னாலும் எதுவும் மாறாது கௌசி. என்னைத்தான் ஒதுங்கிப் போகச் சொல்லுவாங்க. இன்னமும் கொஞ்சநாள் தானே அப்றம் நாம வேற க்ளாஸ்க்கு போயிடுவோம். பார்த்துக்கலாம் விடு." இப்படிக் கூறி அலட்சியமாக விட்டது தான் தமிழ் செய்த தவறு.
 
Top Bottom