NTYU - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 13

file_00000000df5471fa8da16dc77ce48f5b.png

நாட்கள் வேகமாய் நகர அன்று வழக்கம் போல ருஷியை விட வந்த தீரனிடம் மாணிக்கம்..

“தீரா..செந்தாக்கு இந்த ஊர் லேயே போஸ்டிங் கிடைச்சிருக்கு..நம்ம திருநெல்வேலி எம்.பி சிபாரிசு ல டிரான்ஸ்பர் ஆர்டர்க்காக வெயிட் பண்ணிட்டுருக்கா..இன்னும் ஒரு மாசம் தான்..கிருஷிகாவையும் இந்த வருஷம் முடிஞ்சதும் இங்கயே சேர்த்திடலாம்..என்ன தான் ருஷிக்காக னாலும் உன் ஹெல்த்தையும் பாக்கனுமில்ல..இது மட்டும் னா ஓகே, இங்க உன் பிரண்ட் பண்ணை வீட்டுல வேற விவசாயம் பண்ற..இப்படி ரெஸ்ட் எடுக்காம ஓடிக்கிட்டேயிருந்தா பிற்காலத்துல உடம்பு ஆட்டங்கொடுத்துடும்..ஒரு நாளைக்கு எவ்வளவு உழைக்கனுமோ அதுக்கு தகுந்த ரெஸ்ட்டும் அவசியம் ப்பா..” என்றார் மாணிக்கம். அவரின் அக்கறையில் மனம் மகிழ்ந்தாலும் அந்த 3 மணி நேர பயணத்தை விரும்பி ஏற்றிருந்தான். அவன்.

“பரவால்ல அங்கிள்..எப்படியும் இன்னும் மூணு மாசம் இங்க தானிருப்பேன்..அவங்க உங்க பக்கத்துல இருக்கிறது இன்னும் நல்லது தான்..வீடெல்லாம் பாத்தாச்சா..?

இதோ அடுத்த தெருவுல தான் வீடு பாத்திருக்கு..போன வாரம் வினுவோட போய் அட்வான்ஸ் கொடுத்தாச்சு..நம்ம வீட்லயே தங்க சொன்னா கேக்க மாட்டேங்கறா..

சரி..அங்கிள்..” என தீரன் கிளம்பினான். என்ன மூன்று மாத பயணம் ஒரு மாதமாக குறைந்து விட்டதில் மனம் சுணங்கினாலும் இனி பெரியவர்களின் பாதுகாப்பில் தன் ருஷி இருப்பாள் என்பதே அவனுக்கு நிம்மதியை கொடுத்தது. மாணிக்கம் சொன்ன வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவன், அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி அங்கு இட்லி கடை வைத்திருந்தவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டான்.

அன்று வெள்ளிக்கிழமை ஒரு வேலையாக ஊரின் எல்லையை கடக்கும் போது கையில் பூஜைகூடையுடன் கால்கள் தள்ளாட சிரமப்பட்டு நடந்து வந்த வேதாவை கண்டான் தீரன். உடனே தன் வண்டியை அவரருகில் நிறுத்தி..

“என்ன ம்மா இந்த பக்கம்..?” என கேட்க, சோர்ந்த முகத்துடன் வேதா..

“மலைக்கோயில் துர்கையம்மனுக்கு ஒரு வேண்டுதல் ப்பா..” என்றார்..தீரன் அங்கிருந்த கடையில் நீர் பாட்டிலை வாங்கி அவரிடம்..

“முதல்ல தண்ணி குடிங்க..

இல்ல தீரா..இன்னிக்கு நான் விரதம்..

ம்மா..எந்த கடவுளும் உங்க உடம்பை வருத்தி என்னை கும்பிடு னு சொல்லாது..ப்ளீஸ்..” என பாட்டிலை கொடுக்க வாங்கி பருகினார் வேதா. அவரை பக்கத்திலிருந்த கல்மேடையில் அமரவைத்து தன் வண்டியில் கிளம்பி சென்றவன் சில நிமிடங்களில் பழச்சாறுடன் வந்தான். அவரிடம்..

“நீங்க வேண்டினது கண்டிப்பா உங்களுக்கு நடக்கும்..இதை குடிங்க..” எனக்கூற சரியாக உச்சிகால பூஜைக்கென கோயில் மணி ஒலித்தது. பரவசமான முகத்துடன் அவனை ஏறிட்ட வேதா..

“உன்க்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் தீரா..” என்றதும் அவன் முகம் சுருங்கியது..அதை கண்டு வேதா..

“என் பையனை பத்தி இல்ல..இது செந்தாழினி விஷயமா உன்க்கிட்ட பேசனும்..

செந்தா விஷயமா..? நான் காடு னா மேட்டு பக்கம் போறவங்க அவங்கள பத்தி அதுவும் என்க்கிட்டயா..?

இதோ இந்த வித்யாசம் தான்..நுணுக்கமா கவனிச்சா அவ மனசுல நீ இருக்கிறது நல்லா தெரியும்..” என்றவரை திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தான் தீரன். சிறு நகைப்புடன் வேதா..

“நீ அவளை உயிரா நினைக்கிறே னு தெரிஞ்சி தான் அவ பழைய வாழ்க்கைய உன்க்கிட்ட சொல்லனும் தீரா..மனசுல நினைச்சவங்க கிடைக்காம போனா வாழ்க்கை எவ்வளவு கொடுமைங்றதை என் பையன் விஷயத்துல இப்பவும் அனுபவிக்கறவ நான்..செந்தாக்கு உன்னை பிடிச்சிருந்தாலும் பப்ளிக்கா ஒத்துக்க மாட்டா..அவ மட்டும் இல்ல அவளோட பெத்த பொண்ணு னு ரெண்டுமே சின்னஞ்சிறுசுக..உன்னை மாதிரி ஒருத்தன் பாதுகாப்புல இருக்கிறது தான் அவங்களுக்கு நல்லது..நாளைக்கு உன் பண்ணை வீட்டுக்கு வர்றேன்..இப்ப கிளம்புறேன் ப்பா..” என எழுந்தார் வேதா. கலவையான உணர்வுடன் தீரனும் கிளம்பினான்.

மறுநாள் சொன்னபடி வந்த வேதாவை வரவேற்று வேப்பமரத்துக்கடியில் போடபட்டிருந்த கூடை நாற்காலியில் அமரவைத்தான். அவரிடம்..

“மோர் இல்ல இளநி குடுக்கிறீங்களா ம்மா..?

வேணாம் ப்பா..கொஞ்ச நேரம் போகட்டும்..” என செந்தாழினியை பற்றி சொல்ல ஆரம்பித்தார் வேதா.

செந்தாழினியின் சொந்த ஊர் கோவை. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் தன் பெற்றோருக்கு ஒரே செல்ல மகளாக கல்லூரி முதல் ஆண்டில் கால் பதித்த நேரம்..தனியார் நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக இருந்த அவள் தந்தை பாலனுக்கு நடந்த சாலை விபத்தில் அவரது வலது பக்க உடல் முழுவதும் செயல்படாமல் முடங்கி போனதில் படுத்த படுக்கையானார். செந்தாவின் அம்மா அமுதா கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட பணிகளின் கீழ்நிலை அதிகாரியாக பணிபுரிபவர்..எதிர்பாராத விபத்தால் நிலைகுலைந்த குடும்பத்தை தன் மாமியாரோடு கணவனை, தன் மகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டு ஒற்றை பெண்ணாய் குடும்ப பொறுப்பை தாங்கி நின்ற இரும்பு பெண்மணி. அவர் கூட பிறந்தவனே அவர் குடியை நாசமாக்கும் நச்சு பாம்பு என அறியாமல் அவனை நம்பி ஏமாந்து போனார்.

தனக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்தை குறிவைத்து சொந்த தமக்கையின் பரிதாபமான நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர் பெண் செந்தாழினியை திருமணம் செய்து தருமாறு நச்சரித்த தன் சொந்த தம்பி வாசுவை திடமாக மறுத்து துரத்தி அனுப்பினார் அமுதா. சதா மது, மாது என தனக்கு வந்த சொத்தை அழித்து ஊர் ரவுடிகளை கையில் போட்டுக்கொண்டு பொறுக்கி திரியும் கேடு கெட்டவனை வீட்டுக்குள் சேர்ப்பதையே அனுமதிக்க மாட்டார் அமுதா. கணவன் முடங்கியிருந்தும் அரசு வேலை தந்த நிமிர்வில் இவனிடம் அடிபணியாத அமுதாவை சமயம் பார்த்து அடியோடு வீழ்த்த காத்திருந்தான் வாசு.

அன்று வழக்கமாக கல்லூரி விட்டு வந்த 19 வயது செந்தா தன் வீட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டபடி சிவப்பேறிய விழிகளுடன் அமர்ந்திருந்த வாசுவை கண்டதும் மனதில் திகில் பரவ தன் பாட்டியை தேடினாள். இளஞ்சிட்டின் மேனியினை வக்கிரமாக பார்வையிட்டவன், கஞ்சா தந்த போதையில் அவளிடம் நெருங்கி அவள் கையை பற்றி..

“பாட்டி மாவரைக்க போயிருக்கு..நீ வா..” என அவளை இழுக்க..பயத்தில் பேச முடியாமல் கன்னங்களில் கண்ணீர் வழிய தன் தந்தையை நோக்கி கை காட்டினாள். பெற்ற மகளிடம் கண்ணெதிரே ஒருவன் தகாத முறையில் நடக்கிறான், அவனை தடுக்க முடியாது இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தவர் ஆங்காரத்துடன்..

“மரியாதையா என் பொண்ணை விட்ரு..உனக்கு சொத்து தானே வேணும்..அமுதா வந்ததும் நாளைக்கே உன் பேருக்கு மாத்தி எழுத சொல்றேன்..என் பொண்ணை விட்ரு..” என நெஞ்சில் கதற கதற அடித்துக்கொண்டு அழுதவரை சட்டை செய்யாமல்..

“சொத்து நாளைக்கு வாங்கிக்குறேன். இப்ப எனக்கு..” என தரதரவென செந்தாழினியை இழுத்துக்கொண்டு அறையில் தள்ளி கதவை சாத்தினான் வாசு. மகளின் கண்ணீர் கதறல்களை கேட்க கேட்க அக்கயவனை கொன்று புதைக்க முடியாமல் இன்னும் இந்த உயிர் எதற்கு என தலையில் அடித்துக்கொண்டு அழுதார் பாலன். வீடு திரும்பிய பாலனின் அன்னை மகனை கண்டு பதற..

“அம்மா..நம்ம செந்தா..காப்பாத்தும்மா..” என துடிக்க..பேத்தியின் கதறலில் மனம் பதைக்க கதவை பலமாக தட்டினார். பின் அக்கம் பக்கம் வசிப்பவர்களை அழைக்க வெளியேறும் முன் உள்ளே வந்த அமுதாவின் கையை பிடித்து கதறவும்..உடலில் குளிர் பரவ அமுதா கதவை பலமாக தட்டியும் திறக்காததால் பக்கத்திலிருந்த அறுவாமனையை கையில் எடுக்கவும் கதவை திறந்து வெளியே வந்தான் வாசு..தன் தமக்கையை கேவலமாக பார்த்தபடி வெளியே வந்தவனின் முடியை கொத்தாக பற்றி ஓங்கி அறைந்தார் பாலனின் அன்னை. மகளின் அலங்கோல நிலையை கண்டு உறைந்து நின்ற மனைவியை பாலன்..

“அமுதா..அமுதா..நம்ம பாப்பா வை..பா..ரு..” என சொல்வதற்குள் பாலனின் நெஞ்சு துடிப்பு ஏறி இறங்கியது. எதிர்பாராத அறையில் கீழே விழுந்த கயவன் பாலனின் அன்னையை தள்ளி விட தடுமாறி பக்கத்திலிருந்த கடப்பா கல்லின் மேல் தலை பட்டு பலத்த காயத்துடன் அவர் மயங்கி விழுந்தார். ஒரு பக்கம் கற்பை பறிகொடுத்த மகள், மறுபுறம் மூச்சு விட சிரமப்படும் கணவர், அருகே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடக்கும் மாமியாரை பார்த்ததும் எங்கிருந்து வந்ததோ அடங்கா வெறியுடன் அசுரனை வதம் செய்யும் மாகாளியாய் நொடிப்பொழுதில் அவன் கழுத்தை அறுவாமனையில் வெட்டி எறிந்தார் அமுதா. சற்று முன் சிறு பெண்மலரை கசக்கி எறிந்தவனது உடல் சிறிது சிறிதாய் துடித்து பின் மொத்தமாய் அடங்கியது.

எளியவரின் வாழ்க்கை வலிக்க வலிக்க அடித்தாலும், தட்டுதடுமாறி சமாளித்து நிற்கும் நெஞ்சுரம் மிக்க அமுதாவிற்கே இனி மானத்தை இழந்து எதற்கு இந்த வாழ்க்கை என யோசித்தவர்..தன் கணவனின் காலை பிடித்தபடி..

“மத்தவங்களை போல ஒரு சாதாரண நிம்மதியான வாழ்க்கை வாழ நமக்கு கொடுப்பினை இல்லைங்க..வேண்டாம் நாம யாருமே இனி இந்த பூமிக்கு பாரம் இருக்க வேண்டாம்..என்னை மன்னிச்சுடுங்க..” என கண்ணீருடன் கெஞ்சிய மனைவியை ஆறுதல் படுத்த கூட முடியாமலிருப்பதை எண்ணி கண்ணீர் சிந்தினார் பாலன்.

அமுதா வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து கதவை உள்பக்கமாக தாழ் போட்டார். ஸ்டோர் ரூமில் உள்ள மண்ணெண்ணையை வீடு முழுக்க தெளித்து அங்கிருந்த துணியில் நெருப்பை பற்ற வைத்தார். சில நிமிடங்களில் மடமடவென கொழுந்து விட்டெறிந்த நெருப்பு வீடு முழுக்க பரவ உயிரோடு தங்களை தீக்கு இரையாக்கிக்கொண்டனர் செந்தாவின் பெற்றோர்.

இன்னும் தீ பற்றிக்கொள்ளாத உள்ளறையில் மயக்கம் தெளிந்து எழ முடியாமல் தடுமாறிய செந்தா தன் பெற்றோர், பாட்டி அனைவரும் தீயில் கருகுவதை பார்த்தவள் அவர்களிடம் விரையும் முன் பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதாவால் வெளியே இழுக்கபட்டாள். காலை தரையில் பதித்து வரவேமாட்டேன் என அடம் பிடித்த செந்தாவை இறுக பற்றியபடி வேகமாக வெளியேறினார்.

தன் குடும்பத்தை ஒரே சமயத்தில் மொத்தமாக இழந்த வேதனையை தாங்கி கொள்ள முடியாமல் மயங்கி விழுந்த செந்தாவை உடனே மருத்துவமனையில் சேர்த்தார்.

மறுநாள் கண் விழித்தவள் பார்த்தது பக்கத்து வீட்டு கீதா ஆன்டியை தான். கீதா திருமணமாகாத பெண். தன் குடும்பத்திற்காகவே உழைத்து அனைவரையும் கரையேற்றிய பின் இன்று மக்கள் சேவையே என் சேவை என NGO ல் சேர்ந்து பணி புரிகிறார் கீதா. மேலும் அமுதாவின் உற்ற தோழியாதலால் அவர்களை பற்றி நன்கு அறிந்திருந்ததால் செந்தாவை எப்போதும் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்து அவளை நன்றாக கவனித்து கொண்டார் கீதா.

மாதங்கள் உருண்டோட எவ்வித அறிகுறிகளின்றி செந்தாவின் வயிறு மட்டும் பெரிதாகி கொண்டே வருவதை கண்டு மருத்துவரிடம் காண்பிக்க அவள் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக சொன்னதும் கீதா செந்தாவை நினைத்து கவலை கொண்டார். தம் குடும்பத்தை இழந்ததிலிருந்தே இயந்திரம் போல வாழும் செந்தாவை மேலும் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் கீதா. கிருஷிகா பிறந்ததும் தன் அன்னையே தன்னை தேடி வந்திருப்பதாக நினைத்து தன் மகவுடன் செந்தாவும் புதிதாய் பிறந்தாள்.

கீதாவின் உதவியுடன் பூஞ்சிட்டு மெல்ல மெல்ல வளர தன் அன்னையின் வேலையை முறையாக வாங்கி கொண்டு கீதாவையும் அழைத்து கொண்டு மதுரைக்கு இடம் பெயர்ந்தாள் செந்தாழினி.

கிருஷிகாவின் ஐந்தாவது வயதில் கீதாவை கொரோனா ஆட்கொள்ள மீண்டும் அன்னையும் மகளும் தனித்து விடப்பட அலுவல் விஷயமாய் முளைத்த முன்விரோதத்தில் செந்தாழினியை முடித்து கட்ட ஏவிவிடப்பட்ட கூலிப்படையினரிடம் சிக்காமல் ஓடியவளை தக்க சமயத்தில் காப்பாற்றி அவளை தோவாளைக்கு அழைத்து வந்தது மாணிக்கம் மற்றும் வேதாவும்.

எகிப்து மம்மி போல ஆடாமல் அசையாமல் இருந்தான் தீரன். தன் யாழி சிறு வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவித்தாளா..? ஐயோ..என உள்ளுக்குள் நொறுங்கி நின்றான் தீரன். அவன் முகம் பிரதிபலித்த உணர்வுகளை உள்வாங்கியபடி அவன் தோளை பற்றி வேதா..

“செந்தா கணவனை இழந்தவ னு அங்கிள் சொன்னது, நீ அவளுக்கு தாலி கட்டின கோபத்தில் தானே தவிர அவளை என் மருமகளாக நினைச்சது நான் மட்டும் தான்..அவங்களுக்கு அந்த எண்ணமே இல்ல..அவங்களுக்குள்ள இருக்கிறது ஒரு அழகான நட்பு மட்டுமே.. இதை நீ தெளிவா புரிஞ்சுக்கனும் தீரா..” என்றதும் மேலும் தன் செயலால் கூனி குறுகி நின்றான் தீரன். பின்,

“இனி செந்தாழினி கிருஷிகா உன் பொறுப்பு தீரன்..நான் கிளம்புறேன்..” என வேதா கிளம்பியதை கூட உணராமல் ஆணியடித்த சிலையாய் அசையாமல் அமர்ந்திருந்தான் தீரன்.


தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஓ நோ..... செந்தா எவளோ பாவம்🥺🥺🥺🥺🥺🥺
தீரா பாரு வாய் இருக்குனு பேசுற....இப்ப பார்த்தியா
 
  • Love
Reactions: STN - 90