NTYU - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 17

file_000000001c847208a34b540d9c0ba2ea.png


ஊர் பெரியவர் ஒருவர் சபாபதியிடம்..

“இதுவரைக்கும் நம்ம கோயில் ல இப்படி நடந்ததில்ல..வருஷா வருஷம் மரகத நகை செட் உன் பொறுப்பு தானே சபாபதி..இப்ப அம்மன் அட்டிகை ய காணோம் னா எப்படி பா..?

நேத்து நைட் கூட அம்மன் கழுத்துல இருந்ததுங்க..இன்னிக்கு கடைசி நாள் ..இடையில கட்சி ஆளுங்க வேற..அவங்கள கவனிக்கவே சரியாயிருந்தது..நான் இந்த பக்கமே வரலங்க..” என்றார் சபா. சட்டென பூசாரி..

“ஐயா நானும் வர்ற மக்களுக்கு மஞ்சள் பூ குடுக்குறது னு பிசியா இருந்தேன்..எனக்கு எதுவும் தெரியாது..” என பின்வாங்கினார். குழப்பத்துடன் அனைவரும் அமர்ந்திருக்க அங்கு வந்த நிவேதிதா..

“பெரியவங்க தப்பா நினைக்கல னா நான் ஒன்னு சொல்லலாமா..?

சொல்லு மா..” என ஊர் பெரியவர் கூற தன் மகளை நினைத்து திக்கென்றிருந்தது தேவிகாவிற்கு. நிவியோ..

“அம்மன்க்கிட்டயிருந்து பூ எடுக்கும் போது தவறுதலா கையோட வந்திருக்கலாம்..அத கவனிக்காம பூசாரியும் கொடுத்துருக்கலாம்..இங்கிருக்குறவங்க பூஜை கூடையை செக் பண்ணி பாக்கலாமே ஐயா..” என்றாள் நிவி. பெண்ணவளின் துணிவும், சமயோசித புத்தியில் அசந்து நின்றாள் மரகதம். மேலும் அக்கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று தன்மையாக..

“மகாஜனங்களே உங்களுக்கெல்லாம் இங்க என்ன பிரச்சினை நடக்குது னு தெரியும்..தயவு செய்து தப்பா நினைக்காம அந்த அட்டிகை உங்க கூடையில இருக்கா னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க..கோயில் சொத்து..” என கை கூப்பி வேண்ட சுற்றியிருந்த மக்கள் தம் கூடைகளை ஆராய்ந்தனர். கோயில் பணியாளர்களும் சேர்ந்து தேட எங்குமே கிடைக்கவில்லை மரகத அட்டிகை.

தன் கவனமின்மையால் தொலைந்து போன அம்மன் நகை குறித்து சபாபதி நெஞ்சம் குற்றவுணர்ச்சியில் தளும்பியது..கோயில் நிர்வாகிகளும் சபாவிடம்..

“என்னவோ இது வரைக்கும் உன் பேர் ல ஒரு களங்கம் வந்ததில்ல..கோயில் பணியை கவனமா செய்றவன் நீ..இனி பாத்து நடந்துக்கோ சபா..புது நகை வாங்கி அம்மனுக்கு சாத்த வேண்டியது முழுசும் உன் பொறுப்பு..” எனக்கூற கனத்த மனதுடன் தலையசைத்து வீடு வந்து சேர்ந்தார் சபாபதி.

மறுநாள் தன் பூர்விக நிலத்தை ஒரு வாரத்திற்குள் கிடைத்த தொகைக்கு விற்று அன்றே அம்மனுக்கான புது மரகத அட்டிகை செய்ய முன்பணமாக ஆசாரியிடம் ஐம்பதாயிரம் கொடுத்தார். தப்போ சரியோ தன் பொறுப்பில் நிகழ்ந்த இழப்பை ஒரு சொல் தாங்காது சட்டென சரி கட்ட நினைத்த தந்தையை நினைத்து நிவேதிதா பெருமையுடன் பார்த்தாள். கணவன் உள்ளுக்குள் குமுறும் உணர்வுகளை கண்டு அவரை தேற்றுபவராக தேவிகாவும் சபாவின் துணை நின்றார்.

திருவிழா முடிந்து இரு வாரங்கள் கடந்த நிலையில் காய்ந்த பூமாலையை அகற்ற எண்ணி கையிலெடுத்த மரகதத்திற்கு அதனுடன் ஒளிந்திருந்த அட்டிகையை கண்டதும் நெஞ்சம் படபடவென அடித்து கொண்டது. அன்று கோயிலில் தேடி கிடைக்காத நகை இதோ இன்று இவளிடம் என்பதில் மற்றவரோ இல்லை தன் அண்ணன் அண்ணியோ எப்படி எடுத்து கொள்வர் என கலங்கியவள் யாருக்கும் தெரியாமல் அதை மறைத்து வைத்தாள். கோயிலை சேர்ந்த பொருட்களை அடைய நினைப்பவருக்கு குலநாசம் என தெரிந்திருந்தும் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என அஞ்சி தோவாளை சென்றதும் அதை விற்று பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிடுவோம் என தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள் மரகதம்.

வேலாயுதத்திற்கு சத்தியமங்கலத்தில் சொந்தமாக தங்கை பெயரில் ஒரு பண்ணை வீடு வாங்க என அலைந்துக்கொண்டிருந்தமையால் மேலும் சில நாட்கள் பங்காளி வீட்டில் தங்கவும் இங்கு மரகதத்திற்க்கு வயிற்றில் புளியை கரைத்தது..எப்போதடா தோவாளை செல்வோம் என அடித்துக்கொண்டது அவள் மனம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை இராகு கால நேரத்தில் விளக்கேற்றி வழிபட்ட மரகதம் அன்னை காளிதேவியிடம் மனமுருக மன்னிப்பை யாசித்து சுற்று முற்றும் பார்த்து யாருமில்லை என தெரிந்து கொண்டவள் தாவணியில் மறைத்து வைத்திருந்த மரகத அட்டிகையை உண்டியலில் போடும் முன் அவள் கையை பிடித்தது மற்றொரு வளைகரம். எதிரே தன் காதலன் நவீனுடன் கண்களில் கோபம் மின்ன அவளை பார்த்தாள் நிவேதிதா.

நிவியை அதுவும் தன் திருட்டுத்தனத்தை கண்டுக்கொண்டாளே என நெஞ்சம் பதற அச்சத்துடன் அவளை ஏறிட்டாள் மரகதம். நிவி அதே திடமான குரலில்..

“உங்ககிட்ட இத நான் எதிர்ப்பார்க்கவேயில்ல..நீங்களா இப்படி..?

ஐயோ..எனக்கு இன்னிக்கு தான் என்க்கிட்ட இந்த நகையிருக்கிறதே தெரியும்..தெரிஞ்சதும் உடனே ஓடி வந்தேன்..”என அப்பட்டமாய் பொய்யுரைப்பவளை நம்பவியலாமல் நிவி உறுத்து விழிக்க..அவளின் காதலன் நவீன்..

“நீங்க சொல்றது உண்மையாவேயிருக்கட்டும்..உங்களுக்கு தெரிஞ்சதும் நேரா கோயில் கமிட்டி மெம்பர்ஸ்க்கிட்டல்ல கொடுத்திருக்கனும் ..இப்படி யாருக்கும் தெரியாம உண்டியல்ல போட்டா என்ன அர்த்தம்..? “என கடுங்குரலில் கேட்கவும் பயத்தில் முகம் வியர்க்க சற்று பின்வாங்கினாள் மரகதம். நவீன் சொந்த ஊர் கடம்பூர் அருகிலுள்ள மல்லியம்மன் துர்க்கம் எனும் மலைகிராமம். சிறு வயது முதலே காவல்துறை அதிகாரியாக வேண்டுமென கனவு கண்டவன் முறையாக தேர்வெழுதி காவலர் பணி நியமனத்திற்கு காத்திருக்கும் துடிப்பு மிக்க இளைஞன். நவீன் ஒருவகையில் சபாபதியின் தூரத்து உறவினன்.. நிவேதிதா நவீன் இருவரும் விரும்புவதை அறிந்த இரு குடும்பத்தினர் நிவியின் படிப்பு முடியவும், அதற்குள் நவீனுக்கும் வேலை கிடைத்துவிடும் பின்பு திருமணம் என ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தனர். நிவி அட்டிகையை கையில் வாங்கியபடி மரகதத்திடம்..

“அன்னைக்கு எங்கப்பா கூட்டத்துக்கு மத்தியில எப்படி தலை குனிஞ்சு நின்னார் னு பாத்தீங்க தானே..? இத்தனை நாள் உங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ வச்சிருந்தாலும் ஒரு வகையில நீங்களும் இதுக்கு பொறுப்பு தான்..உங்க கவனமின்மைக்கு எங்கப்பா பழி ஏத்துக்கிட்டாரு..அதை சரி பண்ண உங்களால தான் முடியும்.. ப்ளீஸ் வாங்க..” என மரகதத்தின் கையை பிடித்திழுக்க அவள் கையை தட்டிவிட்டான் மரகதத்தின் அண்ணன் வேலாயுதம் கூடவே அவன் பங்காளி முருகனும்.

“அன்னைக்கு சரியா கவனிக்காம போனாலும் என் தங்கச்சி அதை வச்சுக்க நினைக்கலியே..யாருக்கும் தெரியாம வந்தது யாருக்கும் தெரியாம அம்மனுக்கு சேரட்டும் னு உண்டியல் ல போட நினைச்சவளை கூட்டி போய் அசிங்கபடுத்தினா நாளை பின்ன இவ எதிர்காலம்..?” என சற்று குரல் உயர்த்தி பேச அண்ணனை கண்டதும் அவன் கையை பிடித்து கொண்டு மரகதம்...

“அண்ணா எனக்கும் இப்ப தான் தெரியும்..ஆனா இவங்க..” என கண்ணீர் வடிக்கும் தங்கையை தேற்றினான்..ஏதோ வேலையாக வந்த வேலாயுதமும் முருகனும் தன் தங்கை பதட்டத்துடன் கோயிலுக்கு செல்வதை கண்டு பின் தொடர அவளிடமிருந்த நகையை கண்டு முதலில் திகைத்தான்..விஷயம் கை மீறி செல்லவும் தங்கையிடம் விரைந்தான்

“அழாத பாப்பா…நான் பாத்துக்கறேன்..” எனும் போதே சிறு கூட்டம் கூட கோயில் நிர்வாகிகள் இவர்களிடம் வந்தனர். நிவேதிதா கையில் காணாமல் போன அட்டிகையை கண்டு அதிர்ச்சியுடன் அவர்களை பார்க்க சட்டென வேலாயுதம்..

“இந்த பொண்ணு தான் இந்த பையனோடு சேர்ந்து நகையை திருடிட்டு அதை பார்த்த என் தங்கச்சி மேல பழியை போட்டு திசை மாத்த பாக்குது..” என இங்கு வரும் முன்பே நிவி மற்றும் அவளுடன் நவீனை பற்றி அரசல் புரசலாக அறிந்துக்கொண்டு அபாண்டமாய் பழி சுமத்தினான் வேலாயுதம். அவனின் பழியில் வெகுண்டெழுந்த நவீனை ஊர்பெரியவர்கள் அடக்கினர். ஆனாலும் திமிறியபடி அவன்..

“ஐயா..இவர் பொய் சொல்றாரு..உங்களுக்கே தெரியும் எங்களை பத்தி..இத்தனை நாளா தெரிஞ்சே வச்சிட்டு இப்ப மாட்டிக்கிட்டதும் நாக்குல நரம்பில்லாம பொய் பேசுறாங்க..” என எகிறினான்.

பரம்பரை பரம்பரையாக அம்மனுக்கு பணி செய்வதை தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவளுக்கு திருடி என கேவலபடுத்திய வேலாயுதத்தை பார்க்க பார்க்க பற்றி கொண்டு வந்தது நிவிக்கு. தன் பெற்றோரை அழைத்தவள், மரகதத்தை பார்த்து..

“எங்க இந்த காளி மேல சத்தியம் பண்ணி சொல்லு..நான் திருடி வச்சிருந்தேனா..? “ என மிரட்ட முருகன் எகிறிக்கொண்டு வந்தான் நிவியிடம்.

“எங்க வீட்டுக்கு வந்த ஒரம்பரைய இப்படி கேவலபடுத்துறது நான் பொறுத்துக்க மாட்டேன்..ஏ பாப்பா பாத்து பேசு..” என எச்சரிக்க தீட்சயமாண பார்வையுடன் கை கட்டியபடி அவனையே பார்த்து நின்றாள் நிவி.

விஷயமறிந்து ஓடோடி வந்தனர் நிவியின் பெற்றோர். தன் தந்தையிடம் நிவி..

“அப்பா..அன்னைக்கு காணாம போன நகை இவங்க பூமாலைக்குள்ள இருந்துருக்கு..இத்தனை நாளைக்கப்புறம் யாருக்கும் தெரியாம கோயில் உண்டியல்ல ல போட வந்தாங்க..” முருகனை கை காட்டி..

“ஐயா வீட்டு சொந்தம் னு தெரியும்..ஆனா இப்ப மாட்டிக்கிட்டதும் என் மேல பழி தூக்கி போடுறாங்க..” என்றாள். மகளின் கூற்றில் நம்பிக்கையிருப்பினும் ஊர் மக்கள் நம்ப வேண்டுமே என சபாவின் உள்ளம் துடித்தது. தேவிகா அன்னை காளியிடம் தன் மகளை இரட்சிக்கும்படி கண்ணீருடன் வேண்டி நின்றார்.

அரண்யகாளி தேவி ஆலயத்தின் நற்பணிகளுக்கு வருடந்தோறும் கணிசமாக நன்கொடை வழங்கியும் தன்னால் முடிந்த வரை அரசிடமிருந்து பல சேவைகளை பெற்று தரும் பெரும்புள்ளிகளுள் ஒருவன் இந்த முருகன். நெடுநாட்களாக கோயிலின் நிர்வாகத்தில் தன் குடும்பத்தை இணைக்க காத்திருந்தவன் சபாபதியை அப்புறபடுத்த இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டான். கோயில் நிர்வாகிகளிடம்..

“இந்த பையனுக்கு இதே ஊர் ல போஸ்டிங் கிடைக்க இந்த பொண்ணு எல்லா வழியிலும் முயற்சி பண்றது உங்களுக்கே தெரியும்..நேத்து கூட நம்ம கவுன்சிலர்க்கிட்ட எவ்வளவு செலவானாலும் பரவால்ல இவருக்கு இங்கயே வேலை வாங்கி கொடுங்க னு சொன்னதை நான் கேட்டேன்..வயசு பொண்ணுக்கு எங்கிருந்து அவ்வளவு காசு வரும்..?” எனக்கேட்க அன்றைய நாளை விட இன்று கூனி குறுகி நின்றார் சபாபதி.

இதற்கு முன்பே தந்தையிடம் நவீன் வேலை விஷயத்தில் உதவுமாறு கேட்டிருந்த மகளை அதட்டி..

“முதல்ல உன் படிப்பு முடிஞ்சு கௌரவமா ஒரு வேலையை தேடிக்கிற வழியை பாரு..நவீனுக்கு தானா வேலை கிடைக்கும்..எந்த சிபாரிசும் முக்கியமா நீ இதுல தலையிடாதே..” என சொல்லியும் தன்னை மீறி சென்ற மகளை வெறுப்புடன் நோக்கினார். தந்தையின் பார்வையை வைத்தே கண்டு கொண்டவள்..

“அப்பா..” என ஏதோ சொல்ல வர அவளை தடுத்து..

“நேத்து கவுன்சிலரை மீட் பண்ணியா..?

ஆமாப்பா..ஆனா..” என சொல்வதற்க்குள்..இடை மறித்து நிர்வாகிகளிடம்..

“எப்ப தலைமை நிர்வாகியா அம்பாளுக்கு சேவை செய்ய வந்தேனோ சின்ன கற்பூரத்தை கூட இதுவரை நான் எடுத்துட்டு போனது கிடையாது..அப்படிபட்ட எங்க குல கௌரவத்துக்கே கேடு மாதிரி இவ்வளவு நடந்த பின்னும் எது சரி எது தவறு னு மேற்கொண்டு விசாரிக்காம நானே இதுக்கெல்லாம் முழு பொறுப்பேத்து விலகிக்கிறேன்..பொறுப்பில்லாம நகை ய தொலைச்சதுக்கு பிராயசித்தமா புது அட்டிகையை நீங்க ஏத்துக்கனும்..எல்லாரும் எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடுங்க..” என சாஷ்டாங்கமாக சபை முன்னால் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்ட சபாபதி அம்மனை ஒரு தரம் கண்களால் நிரப்பிக்கொண்டு மனைவியுடன் மெல்ல வெளியேறினார்.

“மாமா..” என அவரை தடுக்க போனவனை மறித்த நிவி..

“விடுங்க நவீன்..நீங்க என்ன சொன்னாலும் நம்மை யாரும் நம்ப போறதில்ல..பெத்தவங்களுக்கே நம்ம மேல நம்பிக்கையில்ல..” என முருகன், வேலாயுதம் மற்றும் மரகதத்தை பார்த்து..

“உங்களுக்கு எது உண்மை னு நல்லா தெரியும்..அது உங்களையே ஒரு நாள் வச்சு செய்யும்..” என்று கூறிவிட்டு மடமடவென வெளியேறினாள்.

தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.