• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 11


சித்தார்த்தனின் வீட்டிலேயே அன்றிரவு முழுவதும் தங்கிவிட்டு காலையில் தனது வீட்டிற்கு வந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவளுக்கு சித்தார்த்தன் இப்படி ஊரை விட்டு ஓடியது ஆத்திரத்தையும், மனக்கிலேசத்தையும் ஒருங்கே உண்டாக்கியது.


இந்த உள்ளங்கை அளவு உலகத்தில் அவன் எங்கே ஓடிவிடமுடியும் என்றே ஆணவமாக நினைத்தாள்.


அவள் தனது காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, பணிப்பெண் பொட்டலம் ஒன்றை கொண்டு வந்து‌ நீட்ட, அதை திறந்தவள் உள்ளே சித்தார்த்தன் அனுப்பிய கைக்கடிகாரம் இருப்பதை கண்டதும், கோபமலையின் சிகரம் சென்றாள்.


அதை சுக்குநூறாய் நொறுக்கி எறியவே மனம் உந்தினாலும், அது அவனுக்கு உரியது என்பதால் ‘அவனிடம் எப்பொழுதேனும் சேர்த்தே ஆவேன்‌’ என்று கோபாவேசமாக மின்தூக்கியில் தனது படுக்கையறைக்குச் சென்றாள்.


மனம் அடங்க மறுத்தது.


என்னை என்ன ராட்சசி என்று முத்திரை குத்திவிட்டானா? நான் என்ன கெடுதல் செய்தேன் அவனுக்கு? அவன் தங்கை அவமானப்பட்டு விடக்கூடாது என்று அவன்‌ என் படுக்கைக்கு வர சம்மதித்தான். அவனுடைய இன்னொரு தங்கையின் திருமணத்திற்கு எனது பணம் உரிமையாக கையாளப்பட்டிருக்கிறது. அதற்கு நான் அவனை தண்டித்தேனா? பிறகேன் என்னுடன் உறவாடுவது அவனுக்கு அவ்வளவு கடினமாக இருக்கிறது?


என்னை கேவலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறான். அது தான்! அது தான் இந்த கைக்கடிக்காரத்தை திருப்பி அனுப்பியிருக்கிறான்.


சித்தார்த்தன்! நீ என்று எனது கண்ணில் பட்டாலும் சரி, இதை உன்னிடம் ஒப்படைக்காமல் நான் ஓயமாட்டேன்! என்று மனதுள் சூளுரைத்தாள்.


பின், விஹானிடம் இருந்தது எப்படி அவனுடைய கைக்கு சென்றது என்று யோசித்தாள்.


பானுமதி நிச்சயம் நிலவரத்தை விவரித்திருக்க மாட்டாள் என்பது திண்ணம். ஏனெனில், அதைவிட உயிரை விடுவது எளிது என்றாளே!


அப்படியென்றால்? விஹான்.. மை காட்! அன்று விஹான் வீட்டிற்கு வந்துவிட்டு என்னை சந்திக்காமலே வெளியேறியது- சித்தார்த்தனை பார்த்ததால் தானா? அவனுக்கு சித்தார்த்தன் வந்து சென்ற காரணம் தெரிந்திருக்கிறது. அவன் யாரென்பதுவும்.


அது தான் விஹான் கைக்கடிகாரத்தை திருப்பி கொடுத்திருக்கிறான். எந்தவொரு நல்ல ஆண்மகனும் செய்யக்கூடியது தான். அந்த பானுமதியின் செயலுக்கு சரியான தண்டனை.


ஆனால்? ஆனால்? இந்த முட்டாள் ஏன் ஊரை விட்டு ஓடினான்? நான் அவனை தேடப்போவதில்லை. என்னை அவமானப்படுத்தி சென்றவனை நான் ஏன் தேட வேண்டும்? நான் ஆத்மீகா கண்ணபிரான்! நான் யாரென்று‌ உணர்ந்து நீயே என்னை தேடி வருவாய் சித்தார்த்தன்! என்று திண்ணமாக நினைத்தாள்.


இன்னொரு‌புறம் விஹான் தன்னிடம் நடந்ததை கேட்காததும், அவளுக்கு தாங்கலாய் இருந்தது.


ஆனால், அவன் அப்படியொன்று நடந்ததாக காட்டிக்கொள்ளாமல், விருந்துகளில் சந்திக்கும்போது தோழமையாக இருப்பதுவும் அவளுக்கு ஆறுதலே.


இப்படியான மன சுழல்களில் அவள் சிக்கியிருந்தபோது தான், ஒரு நாள் தாம்பரம் கிளைக்கு சென்றாள்.


நந்தினி இவள் குழப்பரேகைகளுடன் இருப்பதை கண்டதும், “மேடம் நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும். என் எக்ஸ் பாய் ஃப்ரண்ட் சித்தார்த்தன் இல்ல? அவர் ஊரைவிட்டே போயிட்டார் மேடம். அவர் தங்கச்சி இந்துமதி என் க்ளோஸ் ஃப்ரண்ட். அவ அவர் எங்கயிருக்காருனு சொன்னான்னா..” என்று ஆரம்பித்ததும்,


“ஸ்டாப்பிட் மிஸ் நந்தினி! என் கம்பெனில கண்டவங்களை பத்தி பேசுறதுக்கொன்னும் நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கல. உங்களுக்கு கொடுத்த வேலை எதுவோ, அதை மட்டும் நீங்க பார்த்தா போதும். தொணதொணக்க வேண்டாம்” என்று கத்தரித்தாள்.


நந்தினியோ கோப்புகளை எடுத்துக்கொண்டு தொங்கிய முகத்துடன் வெளியேறினாள்.


அன்று ஒருநாள் ஆத்மீகா சித்தார்த்தனின் முகவரியை கேட்டது வைத்து தான், இன்று அவனை பற்றிய பேச்சை ஆரம்பித்தாள்.


இதில் தனக்கு அனுகூலமாக எதுவும் அமையும் என்று தான் ஆர்வமாக பேசியது. ஆனால், இவள் என்னவோ வல்லென்று விழுகிறாளே என்று சலித்தாள்.


உண்மையில் நந்தினிக்கு சித்தார்த்தன் ஊட்டியில் இருக்கிறான் என்பதை அறிந்தபோது, அவனின் தாய் அநுத்தமாவின் நினைவு தான் வந்தது.


இந்துமதியின் தோழி என்ற அடைமொழியுடன் அவள் அவர்களின் வீட்டிற்கு வந்து சென்ற சமயங்களில், சித்தார்த்தன் ராஜவம்சத்தை சேர்ந்தவன் என்பதையறிந்து, அவனின் தாத்தா பாட்டியை பற்றி அநுத்தமாவிடம் விசாரித்திருக்கிறாள் நந்தினி.


முதலில் அவளின் கயமைத்தனங்களை அறியாது ஓரிரு ரகசியங்களை வெளியிட்டுவிட்ட அநுத்தமா, அவள் அவரிடம், “நீங்க உங்க பங்கை கேஸ் போட்டு வாங்க வேண்டியது தானே ஆன்ட்டி?” என்று கேட்டபோது தான் சுதாரித்தார்.


என் கணவருக்கு வேண்டாதது எனக்கும் வேண்டாம் என்று முகத்திலடித்தாற் போல் சொல்லிவிட்டவர், அதன்பின் தான் அவளின் உள்நோக்கமறிந்து மகளிடம் அவளைவிட்டு விலகியே இருக்கச் சொன்னார். மகள் கேட்கவில்லை.


இப்போது இந்துமதியின் மூலம்- சித்தார்த்தன் ஊட்டிக்கு சென்றுவிட்டான் என்பதை அறிந்ததும், அஞ்சலிதேவி தான் அவனின் பாட்டி என்பதை அறிந்தால்- அவனது முகம் எப்படியிருக்கும் என்று யோசித்தாள்.


ஒருவேளை அவனது சொத்துக்கள் அவனுக்கு திரும்ப கிடைத்துவிட்டால்? நாம் அதிர்ஷ்டத்தை காலால் எட்டி உதைத்தது போலாகிவிடுமே. எப்படியாவது சித்தார்த்தனுடன் பழைய உறவை புதுப்பிக்க முயல வேண்டும் என்று திட்டம் தீட்டினாள்.


அதே கட்டிடத்தில் வேறொரு அறையில் இருந்த ஆத்மீகா கண்ணபிரானோ, ‘இப்போது தான் வேலையில் மனதை திசை திருப்பினோம். அதற்குள் வந்து அவனை பற்றி பேசி, இப்படி புலம்ப வைத்துவிட்டாளே இந்த நந்தினி?’ என்று சிகரெட் ஒன்றை எடுத்தாள்.


பற்றவைக்கும் முன் அவன் தனக்கு அது பழக்கமில்லை என்று சொன்ன ஞாபகம்.


“ஷிட்! படுத்தறடா என்னை” என்று வாய்விட்டே புலம்பினாள்.


பின், உதட்டில் வைத்து இரண்டு இழு இழுத்தாள்.


குமட்டிக்கொண்டு வந்தது. வாஷ்பேஷன் ஓடினாள். வாந்தியெடுத்துவிட்டு முகத்தை அடித்துக் கழுவி கண்ணாடியில் பார்த்தவளுக்கு, கண்கள் இரண்டும் கோவம்பழங்களாய்.


அவனது வீட்டில் அவனது படுக்கையில் படுத்தாலே உறங்குவேன் என்று அடம்பிடிக்கும் மனதை என்ன செய்ய என்று தவித்தாள். உடலும் அவனையே ஏன் ஒவ்வொருநாளும் தேடுகின்றன என்று அவளுக்கு வெறுப்பாய் இருந்தது.


உடனே அவனை மனப்புத்தகத்திலிருந்து கிழித்தெடுக்க, வேறொரு ஆண்மகனை நாட உத்தேசித்தாள்.


எப்போதும் இதற்கு ஆள் அனுப்புபவனிடமே ஒருவனை‌ அனுப்ப சொன்னாள்.


அவனும் வந்தான். இவள் தயாராக இருந்தாள்.


“இது ரெண்டு நாள் முன்னாடி வந்த என் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் மேடம்.”


வழக்கமாக வருபவர்கள் காண்பிப்பது தான். அசட்டையாக பார்த்தாள்.


“புதுசா கார் ஒன்னு வாங்கியிருக்கேன் மேடம். ஈ.எம்.ஐ-ல தான். நீங்க பேசின அமௌண்டை விட கூடக்கொஞ்சம் கொடுத்தா வசதியாயிருக்கும்.”


இந்தக் கதைகளும் சிலர் சொல்வது தான் என்பதால் இயந்திரமாய் பார்த்தாள்.


அவன் இணக்கமாக ஏதேதோ பேசிக்கொண்டே தனது ஆடைகளை களைய ஆரம்பித்தான்.


அவனின் படிக்கட்டு தேகம் அணுவளவும் அவளை அசைக்கவில்லை.


அசந்தர்ப்பவசமாய் சித்தார்த்தன் இவன் அளவுக்கு உடற்பயிற்சி செய்பவனில்லை என்று யோசனை சென்றது அவளுக்கு.


தலையை உதறி முன்னிருப்பவனை கண்டாள்.


இத்தொழிலுக்கேற்றாற்போல் நெஞ்சிலிருந்த முடிகளை நீக்கியிருந்தவன், வெந்நீரிலிட்டு இறகுகள் பிடுங்கிய கோழியைப் போல் தோன்றினான். ஆனால், அன்று சித்தார்த்தனின் அகன்ற மார்பிலிருந்து குறுகலாக வயிற்றிற்கிறங்கிய அந்த கருகரு இமைமுடி நகல்கள்! அவை தந்த‌ குறுகுறுப்புகள்! கொன்றான் அவன்.


இவனின் மொழுமொழு கன்னங்கள் காலையில் தான் சவரம் செய்தான் என்று சத்தியம்‌ செய்தன. ஆனால், அன்று சித்தார்த்தனின் முகத்திலிருந்த ஆறுநாள் கூந்தல்‌ குழந்தைகள்? உஃப்! ரோஜாச்செடி சிலும்பல்கள்!


இவன் நிறம் வெட்டி வைத்த ஆப்பிள் போல் மங்கிய ஒன்று. ஆனால், அவனது? மிதமாக குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பாசுந்தி போல் மினுமினுப்பது.


இவன் கண்கள் காமனின் சேவகனுக்குரியது. ஆனால் அவனது? கடலே பௌணர்மி என்று ஆர்ப்பரிக்கும் ஈர்ப்புவிசையை உற்பத்தி செய்வது.


நெற்றியில் சரிந்திருக்கும் இவன் தலைமுடிகள் சேவலின் பின் இறக்கைகள். ஆனால், அவனது? ஷிட்! நினைக்கவே கூடாதென்று நினைத்தாலும் சித்தார்த்தனே மனக்கண்ணில் வந்து நின்றான் அவளுக்கு.


மீண்டும் தலையை உதறினாள்.


கால்சட்டையின் பெல்ட்டை முன் நின்றவன் அவிழ்த்திருந்த தருணம் இனம் புரியாததொரு தவிப்பு அவளுக்கு.


சித்தார்த்தனின் அந்த வாசனை- தேகச்சூடு- அவ்வப்போது செய்த தொண்டை செருமல்- இறுகிய வல்லான் தசைகள்- கூச்சம்- ஆகிருதி- அழகு- ஆண்மை- அந்த அனுபவம்! இது.. இது… உவேக்…


குடம் குடமாய் வாந்தியெடுத்தாள் ஆத்மீகா கண்ணபிரான். ஆடைகள் களைவதை நிறுத்தியவன் ஓடி வந்து அவளின் சிரம் தாங்கினான். நன்றியுணர்வு பளிச்சிட்டது அவள் கண்களில்.


மிகவும் தளர்ந்து போனவளை தூக்கி வந்து மெத்தையில் கிடத்தினான். அவளிடம் எந்தப் பொத்தான் எனக் கேட்டு வேலையாளை வரவழைத்து, பழச்சாறு அருந்த வைத்தான்.


அவன் மூலமே வாந்தியை சுத்தம் செய்ய வைத்து அனுப்பினான்.


அவள் வேதனையாய் கண்மூடிக் கொண்டாள்.


“நீங்க ரொம்ப டயர்டா தெரியுறீங்க மேடம். நான் வேணும்னா இன்னொரு நாள் வரவா?” என்றவனை அருகில் வரும்படி அழைத்தாள்.


அவன் வந்தான். தனது பர்ஸிலிருந்து கத்தையாக பணத்தையெடுத்து கொடுத்தாள்.


“அடுத்து எப்ப வரணும் மேடம்?” என்றதும்,


“ம்ஹூம் வரவே வேணாம்” என்றாள் ஸ்திரமாக.


அவன் குழப்பமாகவும், பணம் கிடைத்த சந்தோசத்துடனும் வெளியேறினான்.


அவள் அப்படியே கிடந்துவிட்டு மாலை மருத்துவமனை சென்றாள்.


அவளை பரிசோதித்த மருத்துவர், “ஆத்மீ, நீ எப்படி இந்த விசயத்துல கேர்லெஸா இருந்தன்னு தெரியல. காண்டம் யூஸ் பண்ணாம எந்த ஆணையும் உன்னை நெருங்கவிட்டது இல்லைனு சொல்லுவ. இப்ப எப்படி இது நடந்தது? யாரையாவது விரும்பறியா? எனக்கு தெரியும் நீ கடைசி வரை கல்யாணமே பண்ணிக்க கூடாதுங்கற முடிவுல இருக்கன்னு. இதுவொரு ஆக்சிடென்ட் தானே? ஷால் வீ அபார்ட் இட்?” என்க,


“நோ! இட்ஸ் மை பேபி!” என்று பதறி வந்தன அவளது வார்த்தைகள்.


அவளின் மருத்துவருக்கே அதை கேட்டு ஆச்சரியமாக இருந்தது.


“ஆர் யூ ஷூர்?” என்றார்


ஆமாம் என்று தலையசைத்தாள்.


அவளுக்கு சித்தார்த்தன் தேவை. முழுதாகவோ, இல்லை இப்படி மறுவடிவாகவோ. அவனையே தனக்குள் சுமப்பது போல் பரவசமடைந்தாள். மனம் பழைய நிலைக்கு திரும்பியது. உடல்.. ஒரு சில அசௌரியங்களை தவிர்த்து முன்பு போல் பேச்சை கேட்டது.


முதல் ஐந்து மாதங்கள் வரை தான் கருவுற்றிருப்பதை யாருக்கும் தெரியாமலே பார்த்துக்கொண்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அதன்பின் முழு நிலவாக- தன்னுள் வளரும் பிறையை அதற்கு மேல் மற்றவர்களிடம் மறைக்க முடியாது என்பதறிந்து, நிமிர்வுடனே அனைவரையும் எதிர்கொண்டாள்.


இது அவள் தேர்வு. இதில் மற்றவர்களின் விருப்பங்களுக்கு எதற்கு மதிப்பளிப்பானேன் என்று வயிற்றில் பிள்ளையுடனே தளர்வான கோட் ஷூட்டில் வலம் வந்தாள்.


விஹானின் தந்தை கோகுல பிரகாஷ் மட்டும் ஒருமுறை அவளிடம் நேரடியாகவே ஆட்சேபனையை தெரிவித்தார். குழந்தை பிறந்ததும் ஆசிரமத்தில் விட்டுவிட்டு, அவரது மகனை திருமணம் புரியச் சொன்னார். அவள் கலகலவென நகைத்துவிட்டு அலைபேசித் தொடர்பை துண்டித்துவிட்டாள்.


அவர் தன் மகன் திருமணம் புரிய மறுப்பதற்கு காரணம் ஆத்மீகா கண்ணபிரான் தான் என்று உறுதியாக நம்பினார். அவன் பானுமதியை நினைத்து வெம்புவதை அறியாமல்.


மாதங்கள் கடக்க கடக்க பிள்ளை தன்னுள் செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு சித்தார்த்தனின் உரு கொடுத்து கொஞ்சினாள் ஆத்மீகா கண்ணபிரான்.


உதைத்தபோது செல்லமாய் கோபப்பட்டாள். உருண்டபோது அவன் தீண்டிய பொழுதை நினைத்தாள். அதன் உடற்பாகங்கள் வயிற்றில் பதிந்தபோது இருவருக்கும் ஒரு சுவர் தான் வித்தியாயம் என்று விரல்களில் கொஞ்சி முத்தமிட்டாள்.


அவள் எப்போது குழந்தையை நேரில் காண்போம் என்று ஆவலுடன் ஒவ்வொரு நாளையும் கடத்த, ஒரு அதிகாலை பொழுதில் கிஸான் ஜாம் தடவப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரெட்டாக மருத்துவரின் கைகளில் தவழ்ந்தாள் சித்தார்த்தனின் ஜீன்களில் முளைத்தவள்.


மகனுக்கு பதிலாக மகளை கண்டதும் ஏமாற்றம் பரவியது ஆத்மீகாவின் முகத்தில். அதிலும் அந்த குட்டி கற்கண்டு மூட்டை முழுக்க முழுக்க அவளை அல்லவா உரித்து வைத்திருந்தது.


அவளுள் சித்தார்த்தனை தேடி களைத்துப்போனாள் ஆத்மீகா கண்ணபிரான். அவனால் இந்த முறையும் அவளுக்கு ஏமாற்றம்.


அவனை நினைத்து காலம் முழுதும் ஏங்கி தவிக்கவே இறைவன் இந்த ஏற்பாட்டை செய்தானா என்று ஆத்திரப்பட்டாள்.


குழந்தை வீறிட்டு அவளை அழைத்தது.


தனங்கள் கனக்க, மார்போடு அவளை அரவணைத்துக் கொண்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.



தொடரும்…


ஆத்மீகா சித்தார்த்தனை மீண்டும் அடைவாள் என்று உங்களுக்கு தோன்றுகிறதா நண்பர்களே?

உங்களிடம் நான் ஒரு விசயத்தை தெளிவு படுத்த கடமைபட்டிருக்கிறேன் நண்பர்களே.

ஆணோ பெண்ணோ யார் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாலும் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே.

ஆனால் இந்த சமூகம் தொடர்ந்து பெண்ணையே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது போல் சித்தரிப்பதால்- ஒரு பெண்ணாய் சலித்து- நாவலாசிரியராய் ஒரு சுவாரசிய மாறுதலுக்காக இக்கதையில் ஆண் துன்புறுவது போல் சித்தரித்தேன். அவ்வளவே!
 
Top Bottom