• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 22

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 22


மருத்துவர் குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தபோது, கண்ணீர் திரையிட்டது ஆத்மீகாவுக்கு.


அவர்களிடம் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளை பற்றி தெரிவித்தவர், ஆகும் செலவை பற்றியும் கூறினார்.


அனைத்திற்கும் உடனடி ஒப்புதல் தெரிவித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவரிடம் பேசிய கையோடு கீழே சென்று அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்பணத்தையும் கட்டினாள்.


அவளின் பின்னேயே திரிந்தான் சித்தார்த்தன்.


அவள் கட்டிய தொகை பெரிது. நிச்சயம் அவனின் சொற்ப வருமானத்தில் அதனை கட்டியிருக்க முடியாது. தந்தையாய் இருந்தும் குழந்தைக்கு உதவ முடியாத தனது நிதிநிலையை அறவே வெறுத்தான்.


குழந்தையின் இந்நிலைக்கு காரணம் தான் தான் என்ற குற்றவுணர்வில் அவளிடம் ஒருமுறை, “ஸாரி மேடம்” என்றபோது,


“இப்ப ஸாரி கேட்க என்ன அவசியம் வந்தது மிஸ்டர் சித்தார்த்தன்?” என்று கேட்டாள்.


அவ‌ன் மனதை மயிலிறகால் வருடின அவ்வார்த்தைகள்.


லீலாவதியிடம் அவள் ஏற்கனவே‌ தனது நிலைபாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும், அவளின் அடிமனதில் தன்னை பற்றி என்ன ஓடுகிறது என்று அறியும் முயற்சியாகவே மன்னிப்பு கேட்டான். நல்லவேளை அவள் அவனை குற்றவாளியாய் கருதவில்லை.


அவன் நிம்மதி பெருமூச்சு விட்டது அஞ்சலிதேவிக்கு பொறுக்கவில்லையோ என்னவோ, காவல் ஆய்வாளருடன் அம்மருத்துவமனைக்குள் நுழைந்தார்.


சமைந்து போயிருந்த லீலாவதி, தனது பாட்டியை காவல்துறையினருடன் கண்டதும், “பாட்டி என்னாச்சு?” என்றாள்.


“ம்? திருடுபோச்சு என் டைமண்ட் நெக்லஸ். நேத்து நைட் என் ரூமுக்கு நீயும் இந்த சித்தார்த்தனும் தான வந்தீங்க? நீ நகையை எடுத்திருக்க வாய்ப்பில்ல. அதான் இவன் மேல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன்.” என்று அசராமல் பொய் கூறவும், லீலாவதிக்கு புரிந்து விட்டது- பாட்டியின் தீயக்குணம் தலை நீட்டுகிறதென்று.


அவள் அவனுக்காக குரல் கொடுக்கும் முன் ஆத்மீகா கொடுத்திருந்தாள்.


“அபாண்டமான பழி இது. மிஸ்டர் சித்தார்த்தனை அரெஸ்ட் பண்ண ஒருகாலும் நான் சம்மதிக்க மாட்டேன். இப்பவே என் லாயர்கிட்ட போன் போட்டு தரேன் பேசுங்க” என்றதும், அவளுடன் லீலாவதியும் சேர்ந்து கொண்டாள்.


“சார் இங்கப் பாருங்க, இவரை ஆறரை வருசமா எனக்கு தெரியும். இவர் நகையை எடுத்திருக்க வாய்ப்பே இல்ல. என் பாட்டி ஏதோ தெரியாம உளர்றாங்க” என்றாள்.


அஞ்சலிதேவி உக்கிரமானார்.


“அவன் தான் எடுத்தான் லீலாவதி. நேத்து நைட் என் ரூம்ல இருந்து நீ போன பின்னாடி, உங்க மகனோட வாரிசு நான் -எனக்கும் இந்த அரண்மனைல உரிமை இருக்கு -என்னோட பங்கை எனக்கு கொடுங்கன்னு கேட்டான். நான் அதுக்கு முடியாது. உன்னால முடிஞ்சா கேஸ் போட்டு வாங்கிக்கோ சொன்னேன். அதான் கேஸ் நடத்த பணம் வேணும் இல்ல? என் நகைல கை வச்சிட்டான்.” என்றதும், மற்றவர்களுக்கு தலை கிறுகிறுத்தது.


என்னவொரு நளினமான பொய்யை என் மேல் சுமத்திவிட்டார் என்று வீராவேசமாக நின்றிருந்தான் சித்தார்த்தன்.


லீலாவதிக்கும் ஆத்மீகா கண்ணபிரானுக்கும் அஞ்சலிதேவியின் திட்டம் புரிந்துவிட்டது.


ஆனால், ஆத்மீகா முதலில் சுதாரித்தவளாக, “அந்த நெக்லஸை திருடினது நான் தான். என்னை அரெஸ்ட் பண்ணுங்க” என்று முன் வந்தாள்.


லீலாவதி அவசரமாக அவளை தடுத்தவள் காவல் ஆய்வாளரிடம், “சார் நானும் என் பாட்டியும் ஒரு பத்து நிமிசம் தனியா பேசலாமா?” என்று அனுமதி கேட்டுவிட்டு, தனது பாட்டியை தள்ளிக்கொண்டு சென்றாள்.


எடுத்ததுமே, “பாட்டி எதுக்கிந்த டிராமா?” என்றாள் பல்லைக் கடித்தபடி.


அவரோ சித்தார்த்தனை பார்த்தபடி, “உன் வாழ்க்கையை சரி செய்ய” என்றார்.


அவளுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.


“என் வாழ்க்கையை ஆளாளுக்கு சரி செய்ய அதுவொன்னும் விளைநிலம் இல்ல பாட்டி” என்று கறாராய் கூறினாள்.


அவர் மசியவில்லை. “உனக்கு ஒன்னும் தெரியாது. நாம இப்படி ஏதாவது செய்யலைனா, அந்த ஆத்மீகா அவனை கொத்திட்டு போயிடுவா” என்று ரகசியம் கூறினார்.


ஆக இவருக்கு ஆத்மீகாவுக்கும் சித்தார்த்தனுக்கும் உள்ள தொடர்பு தெரிந்திருக்கிறது என்று அருவருப்புடன் பார்த்தாள் லீலாவதி. அதை வார்த்தைகளில் கொட்டவும் செய்தாள்.


“எப்படி பாட்டி உங்களால இப்படியொரு காரியத்தை செய்ய முடிஞ்சது? ஏற்கனவே வேற ஒரு பொண்ணுக்கூட பழகி குழந்தை கொடுத்தவரை எப்படி என் வாழ்க்கையில இணைக்க முடிஞ்சது?” என்று கேட்டதற்கு, சுள்ளென்று பதிலளித்தார் அஞ்சலிதேவி: “நீ ஒன்னும் கன்னி இல்ல லீலாவதி” என்று.


அவள் குன்றிவிட்டாள். பின் வெடித்தாள்.


“ஆமா நான் கைப்படாத ரோசா இல்ல தான். ஐ அக்ரீட் தட். அதுக்காக ஒவ்வொருத்தர் கையிலயும் மாறிக்கிட்டிருக்க ரோசாவும் இல்ல. எனக்கு ஒவ்வொரு முறையும் தோற்க தெம்பில்ல பாட்டி. இவ்வளவு நாள் ஆத்மீகாவுக்கும் சித்துக்கும் என்ன மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் இருந்ததோ தெரியாது. இப்ப அவங்களே ஒன்னு சேர தயாராகிட்டாங்க. நாம அவங்களை பிரிக்க வேண்டாம்” என்றாள் துயரத்துடன்.


பாட்டி கேட்கவில்லை. “உனக்கு உன் முன்னாள் புருஷன் மேல ஒரு மயக்கம். அதான் சித்தார்த்தனை வேண்டாம் சொல்ற.” என்று குற்றம் சாட்டியதும், அவள் வேதனையாக சிரித்தாள்.


“நான் நம்பிக்கை துரோகத்தை லேசுல மறக்கறவ இல்ல பாட்டி. அவரை இந்த ஜென்மத்துல என்னால ஏத்துக்க முடியாது” என்று உறுதியாக சொன்னாள்.


அஞ்சலிதேவியோ அவளின் கன்னத்தை தடவினார்.


“இந்த சித்தார்த்தன் ரொம்ப நல்லவன் லீலா. அவனை நாம விட்டுட்டா நீ தனி மரமாகிடுவ.” என்று வருந்தினார்.


அவளுக்கு குரல் லேசாக நடுங்கியது.


“தப்பு பாட்டி. நிச்சயம் நான் தனி மரமாக மாட்டேன். எனக்கு நான் இருக்கேன். என் தொழில் இருக்கு. என் பொண்ணு இருக்கா. இன்னும் இன்னும் நிறைய இருக்கு. நான் எப்படி இந்த சித்தை இழந்ததுக்காக வருத்தப்படுவேன்? என் வாழ்க்கையை ஒரு டென்னீஸ் ப்ளேயர் கெடுத்தா. நான் எப்படி பாட்டி அதே மாதிரி ஆத்மீகா கண்ணபிரான் வாழ்க்கையை கெடுக்க முடியும்? உண்மையிலேயே சித் ஒரு ஜென்டில்மேன். ஆத்மீகாவை தவிர வேற ஒரு பொண்ணு தன் வாழ்க்கையில வர சம்மதிக்கல பாருங்க. அந்த சந்திரன் ஏன் பாட்டி அப்படி இல்ல? அந்த டென்னிஸ் ப்ளேயர் இருக்காளே, அவக்கூட ஒரு அரைமணி நேரம் சுகம் கிடைச்சிருக்குமா? அதுக்காக என் மனசை ஏன் உடைச்சாரு? நான் மறந்துட்டதா நினைக்கறவரை பத்தி நீங்களே அடிக்கடி பேசுறது தான் வேதனையா இருக்கு பாட்டி” என்றதும், அவருக்கும் மனம் கனத்தது.


“அப்ப சித்தார்த்தன் உனக்கு வேண்டாமா?” என்றதும், அவர் முகத்தை பார்க்காமல், “வேண்டாம்” என்று தலையசைத்தாள் பேத்தி.


நேரே காவலதிகாரியிடம் சென்று வழக்கை திரும்பப் பெறுவதாக சொன்னவர், ஆத்மீகா கண்ணபிரானிடம் சென்று ஜம்பம் பேசினார்.


“இங்கப்பாரு உன் ராமனோட அசோகவன சிறைவாசம் இன்னையோட முடிஞ்சிருச்சி. நீ அவனை உன் கூடவே அழைச்சிட்டு போகலாம்” என்றதும், அவரை கண்கள் மின்ன பார்த்தாள் ஆத்மீகா.


பின்னால் வந்த லீலாவதியோ, “அப்ப நான் தான் ராவணனா பாட்டி? அட! இன்னொரு விசயம் கூட ஒத்துப்போகுதே. சித்தை நான் முதன் முதலா ஒரு மான் மூலமா தான் பாட்டி சந்திச்சேன். இராவணன் சீதாபிராட்டியை கடத்திட்டுப்போக ஒரு பொன்மானும் தானே உறுதுணை?” என்றதும், அனைவரின் மனதும் இலகுவாகியது- சித்தார்த்தனை தவிர்த்து.


அப்போது அஞ்சலிதேவி மிடுக்காகவே குழந்தையின் நிலையை மருத்துவரை அழைத்து விசாரித்தார்.


அறுவை சிகிச்சைக்குப்பின் அவளின் உடல்நிலையில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்‌ என்று சொன்னதும், அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


*


அன்றைய நாளைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் மகளுடன் கழித்த ஆத்மீகா ஆறாவது நாள் கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை பயணித்தாள்.


காயங்களுக்கு கட்டுப் போட்டிருந்தாள் சித்தாரா.


அவள் மருத்துவமனையில் இருந்த நேரம் முழுவதும் உடனிருந்து பார்த்துகொண்டான் சித்தார்த்தன்.


“இந்த அங்கிள் ஏன் மம்மி எனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்றாங்க?” என்றவள் கேட்டபோது,


“உன் உடம்புல அவங்க ப்ளட் ஓடுது இல்ல? அதான்” என்றாள் ஆத்மீகா.


சித்தாராவுக்கும் அந்த ரத்தம் கொடுத்த அங்கிளை நாளாக நாளாக பிடித்துவிட்டது.


அவர்கள் விமானத்தில் சென்னை திரும்பியபோது, தான் இரயிலில் திரும்பிக் கொண்டிருந்தான் சித்தார்த்தன். உடன் தங்கை பானுமதி. அவள் இவ்வளவு நாள் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்ததை இன்று அவனிடம் கேட்டாள்.


“ஆக உன் மனசுல லீலாவதி மேடமும் இல்ல. நந்தினியும் இல்ல. இந்த ஆத்மீகா கண்ணபிரான் மேடம் தான் இருந்திருக்காங்கல்ல? ஏண்ணா நீ சொல்லாம விட்ட? அப்பறம் அந்த குழந்தை சித்தாரா உன்னோடது தான் இல்ல? விஹான் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு. ஏன் அவர் என்னை பிரிஞ்சாருன்னும் தான். என்னால தான் நீ அன்னைக்கு அங்க போன இல்ல? என்னால உனக்கு எவ்வளவு பெரிய அக்கிரமம் நடந்திருக்கு. என்னை உன்னால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அடிண்ணா. நான் பாவி.” என்று அந்த ஆளற்ற கம்பார்ட்மெண்டில் அவன் காலருகில் அமர்ந்து கதறினாள்.


அவன் அவளை மேலே எழுப்பி உட்கார வைத்தான்.


“நடந்து முடி‌ஞ்சதை பேச வேண்டாம். ப்ளீஸ் பானு” என்றான் கெஞ்சலாக.


அவள் அழுகை குறைந்தது.


“விஹான் சொன்னாரு. அந்த மேடம் இப்ப முன்ன மாதிரியெல்லாம் இல்லையாம். அவங்க உன்னை விரும்பறதா சொல்றாரு” என்றதும், விரக்தியாக சிரித்தான் அண்ணன்.


“அண்ணா நீ அவங்களை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழனும்ணா” என்றாள் தங்கை.


அதற்கும் முறுவலித்தான் சித்தார்த்தன். அதிலிருந்து எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.


*


சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது ஆத்மீகாவிடம் கோரிக்கை ஒன்றை வைத்தான் விஹான்.


“ஆத்மீ, எனக்கு நீ இன்னொரு உதவி பண்ணனும். என் அப்பா அம்மாகிட்ட நீதான் எனக்காக பானு பத்தி பேசனும்” என்றதற்கு,


திண்ணமாய் மறுத்தாள் ஆத்மீ: “ஸாரி விஹான். சிலந்திவலையை சிலந்தி தான் பின்னனும்” என்றுவிட்டு போனாள்.


அவனும் தலையை அழுந்த கோதிக்கொண்டு நடந்தான்.


*



சென்னைக்கு வந்ததும் தனது இரண்டாவது தங்கை மதுமதியின் வீட்டில் பொருட்களை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு, தங்களின் பழைய குடியிருப்பிற்கு சென்றான் சித்தார்த்தன்.


வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் வேறு ஒருவர் வசிப்பதாக கூற, அவன் சோகமாக வெளியே வந்தபோது, ஆத்மீகாவின் வீட்டு வேலையாள் அவனை எதிர்கொண்டார்.


தன் கையிலிருந்த அலைபேசியில் இருப்பது அவன் தானா என்று மீண்டும் உறுதி செய்துவிட்டு, அவனது பழையவீட்டின் சாவியை நீட்டினார்.


அவன் அலங்க மலங்க விழித்தபோது, “ஆத்மீகா மேடம் தான் சார் நீங்க இங்க வருவீங்க. உங்ககிட்ட கொடுத்துட்டு வரனும்னு சொன்னாங்க” என்று சாவியை ஒப்படைத்துவிட்டு உல்லாசமாக நடந்து சென்றார்.


அவன் ஒன்றும் விளங்காமல் வீட்டின் பூட்டை திறந்தான். பழக்கப்பட்ட வாசனை திரவியம் குபீரென்று மூக்கில் ஏறியது- உடன் தூசியும்.


ஆறரை வருடங்களுக்கு முன்பு எப்படி அவன் வீட்டை கொடுத்துவிட்டு போனானோ அப்படியே இருந்தது. ஒரு பொருள் கூட நகர்த்தப்படவில்லை. ஆனால் சிலந்திகளும் பல்லிகளும் தான் அதிகமாய் இனப்பெருக்கம் செய்திருந்தன. தரையிலோ தூசிப்படலம். அதிலும் ஒரே பக்கமாய் அடிக்கடி சென்ற காலடித் தடங்கள். வேறு எந்த பக்கமும் அது சென்றிருக்கவில்லை.


அதனை தொடர்ந்து அவன் சென்றான். அது அவனது குட்டி படுக்கையறையில் முடிந்திருந்தது.


தரையில் கிடந்த மெத்தையில் மட்டும் துசி அவ்வளவாய் இல்லை. புதிராய் இருக்கவும் அதில் சென்று விழுந்தான். புரண்டான். அன்றொரு நாள் ஆத்மீகாவுடன் சங்கமிக்கும் போது அவள் கூந்தலில் அவன் நுகர்ந்தானே! அதே வாசனை மெத்தையில். ஆங்காங்கே அவளின் முடிக்கற்றைகளும் சிதறிக் கிடந்தன. அதிலொரு அடர் பழுப்பு நிற முடியை எடுத்து அதன் நீளம் பார்த்தான்.


பின் அதனிடம் கேட்டான். “நீங்க என்னை இந்தளவுக்கு லவ் பண்றீங்களா மேடம்?” என்று.



தொடரும்…


லீலாவதியின் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன டியர்ஸ்? ஆத்மீகாவின் காதல் கண்மூடித்தனமா? இல்லை ஆத்மார்த்தமா?
 
Top Bottom