• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7


விருந்து நடக்கும் இடத்திலிருந்து புறப்பட்ட ஆத்மீகா கண்ணபிரான் நேரே சென்றிறங்கிய இடம் சித்தார்த்தனின் வீடிருக்கும் காலணி.


அங்கிருந்தவை அனைத்தும் சுவர் பெயர்ந்த கட்டிடங்கள். அதிலொரு கட்டிடத்தில் தான் இரண்டாம் மாடியில் குடியிருந்தான் சித்தார்த்தன்.


அவளின் கெட்டநேரம் மின்தூக்கி எதுவும் வேலை செய்யவில்லை.


அவளுக்கு இது போன்ற இடங்களுக்கு வருவதென்றாலே தர்ம சங்கடம். சிக்னலில் ஒரு பாவமான முகத்தை பார்த்துவிட்டாலே, இரவில் தூக்கம் வராது சமூகத்தை திட்டி தீர்ப்பாள்.


இன்றோ மனோதிடத்தோடு படிகளில் ஏறினாள்.


திடீரென அவளுக்கொரு சந்தேகம். மின்தூக்கி சரிவர இயங்காத இந்த கட்டிடத்தில் எப்படி ஷாப்பிங் செய்து வந்த பொருட்களை கை வலிக்க தூக்கிச் செல்வார்கள்? எட்டு வைக்கவே முடியாத முதியவர்களோ, இல்லை காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களோ எப்படி படிகளில் ஏற முடியும் என்று யோசித்துக்கொண்டே சித்தார்த்தனின் வீட்டு எண் முன்பு சென்று நின்றாள்.


நந்தினி தனக்கு வாட்ஸப்பில் அனுப்பியது இது தானா என்று மீண்டுமொருமுறை உறுதிபடுத்திக் கொண்டு சுவிட்சை தட்டினாள்.


அழைப்புமணி சத்தம் கேட்டு கதவை திறந்த சித்தார்த்தன், பேயைக் கண்டவன் போல் நின்றான்.


அவளுக்கு கையில்லாத டீசர்ட்-சார்ட்ஸில் நின்றவனை கண்டதும், மீண்டும் மோக தேவதைகள் வயலின் வாசித்தன.


நிச்சயம் அவன் சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனின் புனர்ஜென்மம் என்றே அவள் உள்மனம் கூவியது.


தொண்டையை செருமியவள், “வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்ல மாட்டீங்களா மிஸ்டர் சித்தார்த்தன்? உங்க அப்பா அம்மா நல்லா வளர்த்திருக்காங்க உங்களை?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.


“இல்ல.. அது வந்து.. வாங்க” என்று திணறி சமாளித்தான்.


உள்ளே வந்தவள் மிடுக்காக வீட்டை சுற்றி நோட்டமிட, “நீங்க இங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு..” -தயங்கினான்.


“ஏன் வரக்கூடாதா? நான் உங்களுக்கு இருபது லட்சம் கொடுத்திருக்கேன் மிஸ்டர் சித்தார்த்தன். ஞாபகமிருக்கட்டும்.”


அவனுக்கு எரிச்சலானது.


“அதுக்காக இருபது லட்ச நாள் இங்க வந்து என் கழுத்தறுக்கறதா உத்தேசமா?”


“ஆசை தான். ஆனா அதுக்கு ஐந்நூத்தியெட்டு வருசம் நான் உயிரோட இருக்கனுமே”


“முதல்ல பணத்தை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு, பின்னாடி கழுத்துல துண்டு போடுறது தான் உங்களுக்கு வழக்கமா மேடம்?”


“உங்களுக்கு என்னை பத்தி இன்னும் சரியா தெரியல மிஸ்டர் சித்தார்த்தன்.”


“தேவையில்ல மேடம். தெரிஞ்சிக்கறதுக்கான இடமும் இதுயில்ல. இது நாலு பேர் குடித்தனம் பண்றது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க நீங்க இப்படி அடிக்கடி வந்துட்டு போறதை பார்த்தா என்ன நினைப்பாங்க?”


“அதானே என்ன நினைப்பாங்க?” என்று அவன் அருகில் வந்து புருவத்தை உயர்த்தியவள், “இந்த சித்தார்த்தனை பாரேன் அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு டாப்பு டக்கரா ஒரு பணக்கார ஃபிகரை உஷார் பண்ணிட்டான்டானு பேசுவாங்க. பேசிட்டு போகட்டும். அவங்களா உங்களுக்கு இருபது லட்சம் கொடுத்தாங்க? நான் தானே கொடுத்தேன்?” என்று அவனை வெறுப்பேற்றினாள்.


“அய்யோ! அதுக்காக என்னை டார்ச்சர் பண்ணாதீங்க மேடம். எனக்குன்னு இங்க ஒரு பேரு இருக்கு.”


“அது சித்தார்த்தன் தானே?” என்று விடாமல் வம்பிழுத்தவளை, பானுமதியின் வருகை கப்சிப்பாக்கியது.


பானுமதி ஆத்மீகாவை கண்டதும், “நீங்க இங்க?” என்று பதட்டமடைய,


“அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்குமே ஹாஸ்பிடாலிட்டினா என்னனே தெரியல. இந்த வீட்டுப் பெரியவங்க யாரு?” என்று கேட்டதும், அனிச்சையாய் பின்னாலிருந்த தனது தாய் தந்தையரின் புகைப்படத்தை பார்த்தாள் பானுமதி.


“ஓ! மர்கயாவா? அதான் இப்படி” என்று அனுதாபப்பட்டவள்,


“மிஸ்டர் சித்தார்த்தன் ஏற்கனவே எனக்கு நன்றிக்கடன் பட்ட உங்களை இன்னொரு தடவை கடன் பட வச்சிருக்காங்க உங்க அருமை தங்கச்சி பானு..மதி” என்று விசயத்திற்கு வந்தாள்.


அவன் பார்வை கூர்மையானது.


“நீங்க சொல்றது புரியல” என்றான்.


“அது வந்து எனக்கொரு நெருங்கிய நண்பர் இருக்காரு மிஸ்டர் சித்தார்த்தன். அவருக்கு ஆசை ஆசையா ஒரு வாட்ச் வாங்கினேன். அது பாருங்க பேக் பண்ண அடுத்த நிமிசம் மாறிப் போயிடுச்சி. ரொம்ப வருத்தம் எனக்கு. ஆனா உங்க தங்கச்சி பானுமதி என் வருத்தத்தை புரிஞ்சிக்கிட்டு, என் நண்பர்கிட்ட அலுங்காம குலுங்காம அதை கொண்டுபோய் சேர்த்துட்டாங்க. அதுவும் தன் காதலி ஸ்தானத்தை காப்பாத்திக்க தன்னோடதுனு பொய் சொல்லி. என் நிலைமை உங்களுக்கு புரியுதில்ல மிஸ்டர் சித்தார்த்தன்? யாரோ சாப்பிட்டதுக்கு நான் மொய் எழுதிட்டு வந்து நிற்கறேன். நீங்க இன்னும் என்னை உட்கார சொல்லல. எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கு மிஸ்டர் சித்தார்த்தன். எனக்கு தானம் செஞ்சா அதை என் கையால செய்யனும். இப்ப நான் என்ன செய்றது சொல்லுங்க?” என்று நேர்பார்வையாக கேட்டதும், விதிர்த்துப்போய் தனது தங்கையை பார்த்தான் அவன்.


அவள் குன்றிப்போய் நின்றாள்.


“இவங்க சொல்றது உண்மையா பானு?” என்றவன் அதட்டியதும்,


“இல்லைனு பொய் சொல்ல ட்ரை பண்ணிடப் போறீங்க பானுமதி. என்னால சிசிடிவி ப்ரூஃப் காமிக்க முடியும். அதை மனசுல வச்சிட்டு பேசுங்க” என்று நாலாப் பக்கமும் அணை கட்டினாள் ஆத்மீகா கண்ணபிரான்.


“என்னை மன்னிச்சிடுண்ணா. நான் அவரை ரொம்ப விரும்பறேண்ணா. அவர் மேல உள்ள அளவு கடந்த பிரியத்துல தாண்ணா நான் இப்படி ஒரு தப்பை பண்ணிட்டேன்.” என்று கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாள் பானுமதி.


“நீ அடிக்கடி நம்ம அம்மா அப்பா இருந்திருக்கணும்ணானு சொல்லுவ பானு. நான் இப்ப நெனைக்கறேன், நம்ம அம்மா அப்பா இல்லாம போனதே நல்லதுனு. அவங்க ரெண்டு பேரோட பேருக்கும் பெரிய கலங்கம் நீ.”


“என்ன மிஸ்டர் சித்தார்த்தன்! இவ்வளவு தான் உங்க எதிர்வினையா? தூக்கிப்போட்டு சாத்துவீங்கனு நெனச்சேன். சாத்வீகமா போயிட்டீங்க?”


“என் அண்ணன் இதுவரை எங்க யார் மேலயுமே கை நீட்டினது கிடையாது” என்று தேம்பலுக்கிடையில் சொன்னாள் பானுமதி.


“அட! என் டாடியும் அப்படி தான். என் மேல கை நீட்டினது கிடையாது. காந்தியவாதி அவரு. இந்த விசயத்துல மட்டும். சரிங்க மிஸ்டர் சித்தார்த்தன் இப்ப நாம என்ன பண்ணலாம் சொல்லுங்க?” என்றதும், அவன் பானுமதியிடம் சென்றான்.


“அந்த வாட்சை நீ யார்கிட்ட கொடுத்தியோ, அவர்கிட்ட இருந்து திருப்பி வாங்கிட்டு வர சொன்னா, உன்னால முடியுமா பானு?”


“அதுக்கு பதிலா என்னால சாக முடியும்ணா”


“செய். நிம்மதியாயிருப்பேன்”


அவன் இதற்கு மேல் அவளிடம் பேசுவது அவசியமற்றதென ஆத்மீகா கண்ணபிரானிடம் திரும்பினான்.


“மேடம் என்னை பொறுத்தவரை தப்பு பண்ணினவங்க தண்டனை அனுபவிச்சியே ஆகனும்”


“அண்ணா!”


“உன்னை சொல்லல பானு. உனக்கு அண்ணனா பிறந்தது என் தப்பு தான? அதை சொன்னேன். நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன் மேடம்”


“மிஸ்டர் சித்தார்த்தன் எதுவாயிருந்தாலும் யோசிச்சி வார்த்தைகளை விடுங்க. ஏன்னா என் முடிவென்னனு உங்களுக்கு தெரியும்”


அவன் மௌனித்தான்.


அவள் தனது முகவரியை அங்கிருந்த காலண்டர் தாளின் பின்புறம் எழுதி அவன் கையில் கிழித்துக் கொடுத்தாள். புதிய தேதித்தாளில் நாளைய நல்ல நேரத்தை வட்டமடித்துவிட்டு, அமைதியாகவே விடைபெற்றாள்.


ஆனால், சித்தார்த்தன் தான் நிலைகுலைந்து போனான். எப்படி அவனால் இப்படியொரு இச்சைக்கு இணங்க முடியும்? அவனது இத்தனை வருட பிரம்மச்சரியமும் இந்தவொரு இழிநிலையில் கலையத்தானா? தலையே வெடித்துவிடும் போல் இருக்கவும், அதை பற்றியபடி இருக்கையில் உட்கார்ந்தான்.


தரையில் முழங்காலிட்டு அமர்ந்த பானுமதியோ, “அண்ணா நீ வருத்தப்படாதண்ணா. அவர் பெரிய பணக்காரர். அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருதுல்ல? அதுக்கு கண்டிப்பா பெரிய அளவுல கிஃப்ட் பண்ணுவாரு. நாம அதை வித்து இந்த கடனை அடைச்சிரலாம்ணா?” என்றாள் கண்களில் நம்பிக்கை விளக்குகள் எரிய.


“நீ என்னைக்கு தரைக்கு வருவ பானு?”


“நான் தரையில தானண்ணா இருக்கேன்?”


“அதான் உன்னை எனக்கு நசுக்கனும் போல இருக்கு. தயவு செஞ்சு என் முன்னாடி நிற்காத” என்று உள்ளடக்கிய கோபத்தில் கர்ஜித்தான் சித்தார்த்தன்.


அவள் இப்படியொரு கோரமுகத்தை அவனிடம் கண்டிராததால் அரண்டு தனது அறைக்கு ஓடினாள்.


அவளது அலைபேசி சார்ஜேறிக் கொண்டிருப்பது தெரியாமல் ‘சச் அ வொன்டர்ஃபுல் கிஃப்ட் பேபி! லவ் யூ’ என்று செய்தி அனுப்பியிருந்தான் விஹான்.


*


மறுநாள் காலை நேர்காணலுக்கு செல்பவன் போலவே கிளம்பிக் கொண்டிருந்தான் சித்தார்த்தன்.


அவனைப் பார்த்த பானுமதி யோசனையாக, “அண்ணா நீ ஹோட்டலுக்கு போகல? யூனிஃபார்ம் போடலையேன்னு கேட்டேன். அந்த மேடம் உனக்கு வேலை போட்டுக் கொடுக்கறாங்களா?” என்று விசாரிக்க, பார்வையில் அனலை கக்கியவன், கைப்பேசியையும் வண்டி சாவியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.


தங்கைக்கு அண்ணன் சாப்பிடாமல் செல்வது ரத்தக் கண்ணீரை வரவழைத்தது.


மனதை ஒருநிலை படுத்தி ஆத்மீகா கண்ணபிரானின் வீடு வரை வந்த சித்தார்த்தனுக்கோ, பல உயர்ரக கார்கள் நிற்கும் அந்த வாகன நிறுத்தத்தில் தனது வண்டியை நிறுத்தவே சங்கடமாக இருந்தது.


இதற்கேவா என்று மனம் இடித்துரைக்கவும், பணியாட்களின் துப்பாக்கி பார்வையை உதறி வரவேற்பறைக்கு சென்றான்.


ஒரு ஆணின் புகைப்படம் ஒரு பக்க சுவற்றை மறைத்து கம்பீரமாக புன்னகைத்தது. ஆத்மீகாவின் முகம் எங்கு நகலெடுக்கப்பட்டது என்ற உண்மை விளங்கியது அவனுக்கு.


மின்தூக்கியிலிருந்து ஆர்வமாக இறங்கினாள் ஆத்மீகா கண்ணபிரான். வாயிற்காவலாளி அறிவித்திருப்பான் போலும்.


தனது இரவு உடையின் மேலங்கியை கட்டிக்கொண்டே, “கம்! கம்!” என்று அவனை அதே மின்தூக்கியினுள் மேலே அழைத்துச் சென்றாள்.


அவனுக்கு ஏனோ அந்த நவீனமாக்கப்பட்ட விசால படுக்கையறையை பார்த்ததுமே நெஞ்சம் தடதடத்தது. கால்கள் உதறின.


“நீங்க இங்க உட்காருங்க மிஸ்டர் சித்தார்த்தன். நான் ஒரு அரைமணி நேரத்துல ஃப்ரெஷப்பாகி வந்திடுறேன். போரடிச்சா சுத்திப் பாருங்க. அதுக்கு இன்னொரு நாள் இதே மாதிரி வரணும்னு எல்லாம் சார்ஜ் பண்ண மாட்டேன்” என்று கண்ணடித்தாள்.


எப்படி இப்படி கொடூரமாக எல்லாம் இவளால் கேலி பேச முடிகிறது என்று வெறுப்பாக இருந்தது அவனுக்கு.


வேலைக்காரப் பெண்மணி காஃபி கொண்டு வந்து கொடுக்க, அதனை தொட விரும்பாமல் வெறித்தான். அது ஆடைவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனும் தானே? காபி குடிக்காமலே கசந்தது.


சுற்றி அறையை அளவிட்டான். பணத்தின் செழுமை தெரிந்தது. தன் தலைவிதியை நொந்தான். அவள் வெளியே வந்தாள் மயில்பச்சை சாட்டின் கோ-ஆர்ட் செட்டில்.


அவனை மேலிருந்து கீழாக ரசித்துக்கொண்டே இயல்பாக அவனருகில் அமர்ந்து ரிமோட்டின் ஒரு பொத்தானை அழுத்தினாள்.


இரண்டு பேருக்கும் டிபன் வந்தது. அவள் எவ்வளவு வற்புறுத்தியும் சாப்பிட மறுத்தான் சித்தார்த்தன். அது அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது.


இங்கு அவளைத் தேடி வந்தவர்கள் யாரும் இப்படி அவளை கெஞ்சவிட்டது கிடையாது என்பதால், “மிஸ்டர் சித்தார்த்தன் ஒரு திருக்குறள் இருக்கு. உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு தெரியல. ‘எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு’னு. பொருள் தெரியுமா? தெரியுமில்லையா? அப்பறம் ஏ..ன்? லுக்! இந்த விசயத்துல உங்க ஒத்துழைப்பு இல்லாம என்னால ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு யார்கிட்டயும் கெஞ்சறது பிடிக்காது.” என்று கடுத்தக் குரலில் பேசவும், அவன் பதறினான்.


“சாரி. நான்.. அது வந்து.. எனக்கு இது பழக்கமில்ல.” என்றான் கமறிய குரலில்.


“ஏன்? மகாபாரதத்துல முனிவர் கிந்தமன் பாண்டுவுக்கு நீ உன் இல்லாளுடன் கூடினால், உன் ஆவி நீங்கிவிடும்னு சாபம் கொடுத்த மாதிரி, உங்களுக்கு யாராவது இந்த விசயத்துல சாபம் கொடுத்துட்டாங்களா? சரி‌ சரி புரியுது. கைப்படாத ரோசா. எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணுமில்லையா ராசா?”


அவள் இப்படி கிண்டலில் இறங்கியது தான், அவனை மேலும் வதைத்தது. அவளின் வாயை மூடச்செய்ய கொஞ்சமாக சாப்பிட்டான்.



தொடரும்…


இதற்கு முன் இப்படியொரு சம்பவத்தை எங்காவது கேள்விபட்டதுண்டா நண்பர்களே? பெண்கள் பணயமாக்கப்பட்ட சம்பவத்தை கேளுங்கள்; லட்சோபலட்ச கதைகள் உண்டு. கற்பனை என்றாலும் சித்தார்த்தனை பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது. இந்த கட்டத்தில் உங்களின் கருத்து என்ன நண்பர்களே? பிறகு, கதையின் தலைப்பு அசோகவனத்தில் ராமன், நான் எழுத்தாளர் STN-124. மறந்து விடாதீர்கள்.
 
Top Bottom