அன்பிற்கினியவனின் தாயின் முப்பதாம் நாள் நினைவஞ்சலிக்கு ஊரே திரண்டு வந்திருக்க, அவன் வீட்டிற்குப் போய் விசேஷமாக அழைத்த நிகாரிகா மட்டும் அன்று வராமல் அவனுக்குத் தண்ணி காட்டியிருந்தாள்.
அன்பிற்கினியனுக்கு அன்றைய வேலைகள் இழுத்துக்கொள்ள, நிகாரிகாவைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் காத்திருந்தவன், அடுத்த நாள் விடிந்தவுடனேயே அவள் வீட்டிற்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த காவலாளி, “மேடம் வீட்டில் இல்லை. வர ஒரு வாரம் ஆகும்” என்ற தகவலைச் சொன்னார்.
அவள் திரும்ப வரும் நாளுக்காக அன்பிற்கினியன் காத்திருந்தபோது, நாட்கள் வேகமாக இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. மாதம் ஒன்று கடந்தும், போன நிகாரிகா திரும்ப வந்த பாடில்லை.
எட்டு வருடங்களாக அவளுக்காகக் காத்திருந்து, இனி அவள் வரமாட்டாளோ என அவன் மனமுடைந்து போயிருந்த வேளையில், மின்னலெனத் தன் வருகையை அறிவித்துவிட்டு மீண்டும் மறைந்து போனவளை நினைக்க நினைக்க, அவனுக்குக் கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இந்த வேளையில் நெல் ஆலை கட்டுவதற்கு அரசாங்க அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று அங்கே வேலைகளை உடனே ஆரம்பிக்குமாறும் தென்னவனுக்குப் போன் செய்த நிகாரிகா, “எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் லண்டனில் நிற்கிறேன். அடுத்த மாதம் முதல் வாரம் வந்துவிடுவேன். வந்த பிறகு நீங்கள் எனக்காகப் பார்த்து வைத்திருக்கும் வீட்டில்தான் தங்குவேன்” என்று கூறி, வேலைகளை மேற்பார்வை செய்யப் பணித்தாள்.
தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசுவாள், அப்போது நன்றாகக் கேட்டுவிடலாம் என்று காத்திருந்த அன்பிற்கினியனுக்கு ஏமாற்றமே எஞ்சியது. தென்னவன் போனை வைத்ததும், “பாருடா... அந்தத் திமிர் மட்டும் குறையவே இல்லை! என்கிட்ட ஒரு வார்த்தை பேசினால் குறைந்து போய்விடுவாளா?” என்று ஆத்திரப்பட்டான்.
“அவங்களுக்கு யாருடன் எப்போது கதைக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும். நீ கோபத்தில் இருக்கிறாய், இப்போது கதைத்தால் போனிலேயே சண்டைக்கு வருவாய் என்றுதான் புத்திசாலித்தனமாக என்னிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள்” என்றான் தென்னவன்.
அப்படியும் இப்படியுமாக அவள் பூந்தென்றலூரை விட்டுச் சென்று இரண்டு மாதங்கள் உருண்டோடின. மீண்டும் அவள் ஊருக்குள் வந்து இறங்கிய அந்த நாளில், அவள் எதிர்பார்த்தபடியே வீட்டு வேலைகள் அனைத்தும் கச்சிதமாக முடிந்திருந்தன. அதனால், தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நேராக அந்த வீட்டிற்கே வந்து தங்கப்போவதாகத் தென்னவனுக்கு அறிவித்தாள்.
அவள் வந்து இறங்கியபோது அவளின் அம்மா காஞ்சனாவும், அகத்தியனின் மகன் ஆரியனும் வந்திருந்தார்கள். ஆரியன் அத்தை செல்லம். “எனக்கு லீவு தொடங்கப்போகுது, நான் உங்ககூட வரப்போகிறேன். அப்பாவுக்கு என்னைக் கொண்டு வந்து விட நேரமில்லை. நீங்களே என்னைக் கூட்டிட்டுப் போய் பாடம் சொல்லிக் கொடுங்க” என்று அத்தையை நச்சரித்தே அங்கே வந்திருந்தான்.
மருமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், இங்கே வேலைகளைப் பார்க்க தென்னவனும் அன்பிற்கினியவனும் இருக்கும் தைரியத்திலும்தான் அவர்களைக் கூட்டிவர நிகாரிகா லண்டன் சென்றிருந்தாள்.
இவர்கள் வீட்டில் வந்து இறங்க, தென்னவன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த கிராமத்து ஆட்களையும் அறிமுகப்படுத்தினான். அன்பிற்கினியனோ அவள் மேல் இருந்த கோபம் குறையாமல், “நான் வரமாட்டேன்” என்று கூறிவிட்டு, விதை வாங்கும் வேலை இருப்பதாகச் சொல்லி வெளியே சென்றுவிட்டான்.
காஞ்சனாவோ, தென்னவனுக்கு ஒரு புன்னகையை மட்டும் அளித்துவிட்டு, தானாகவே ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அங்கே தஞ்சம் புகுந்தார். நிகாரிகாவும் குளித்துவிட்டு ஒரு சுடிதாரில் தயாராகி வந்தவள், “மிஸ்டர் தென்னவன், நாம நெல் ஆலைக்குப் போவோமா?” என்று கேட்டாள்.
“போகலாம் மேடம்” என்று சொன்ன தென்னவன், காரை எடுக்க வெளியே கிளம்பினான். குளித்த ஈரம் காயாத தலையைச் சிலுப்பியபடி, “அத்தை... நானு!” என்று ஓடி வந்தான் ஆரியன்.
“உனக்குத் டயர்டாக இருக்கும், நீ வீட்டிலேயே இரு. நான் மாலையில் வந்து உன்னை வயல் பார்க்கக் கூட்டிக் கொண்டு போகிறேன்” என்று அந்தச் சிறுவனின் தலையைக் கலைத்து விளையாடியபடி சொன்னாள் நிகாரிகா.
சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்துடன், “அங்கே ஆப்பிள் மரமும் இருக்குமா?” என்று அவன் கேட்க, “இங்கே அதெல்லாம் இல்லைடா... இப்போது இங்கே தக்காளி இருக்கும். அது வேண்டாமென்றால் நிறையப் பூச் செடிகள் இருக்கும், அதைப் பார்க்கப் போகலாம்” என்று இதமாகச் சொன்னாள்.
சரியென்று அவனும் தலையசைத்துவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டான்.
தென்னவன் வண்டியை ஓட்ட, நிகாரிகா அருகில் அமர்ந்து வந்தாள். வந்ததிலிருந்து உம்மென்று இருந்த காஞ்சனாவை நினைத்து, “உங்க அம்மாவுக்கு இங்கே வரப் பிடிக்கலையா?” என்று மெதுவாகக் கேட்டான் தென்னவன்.
“அவங்க இங்க வந்ததே உங்க தோழனைப் பார்க்க என்று தான். அவர் இல்லாததால் கொஞ்சம் அப்செட்” என்றாள் நிகாரிகா.
“அவன் உங்க மேல் கோபமாக இருக்கிறான்” என்று தென்னவன் சொல்ல,
அவன் குரலில் ஒரு உரிமையும் பாசமும் தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மரியாதையாகக் கதைக்க முனைவதைக் கண்டு, “உங்களுக்கும் உண்மை தெரியும் தானே?” என்று கேட்டாள்.
“ம்...ம்...” என்று தென்னவன் ஆமோதித்தான்.
“அப்படியென்றால் எதுக்கு இந்த மரியாதை? தங்கச்சி என்றே கூப்பிட வேண்டியதுதானே?”
“அது சரிவராது... உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது என் கடமை” என்றான் தென்னவன்.
“நான் உங்களை என் அகத்தியன் அண்ணாவைப் போலத்தானே பார்க்கிறேன். அதனால் மரியாதையெல்லாம் எனக்குக் கொடுக்கத் தேவையில்லை. அப்போதும் இப்போதும் நான் உங்கள் அழகு தான். அதனால் நீங்கள் முன்பு போலவே அழகுக்குட்டி என்று கூப்பிடுங்கள். வேண்டுமானால் ஆட்கள் இருக்கும்போது சும்மா பேச்சுக்கு மேடம் என்று சொல்லுங்கள், அது போதும்” என்றாள் நிகாரிகா.
அவனும் சரியென்று தலையசைத்தான். “அவன் ரொம்பக் கோபமாக இருக்கிறான்” என்று அவன் மீண்டும் சொல்ல, “விடுங்கள் அண்ணா, பார்த்துக்கொள்ளலாம்” என்றாள் நிகாரிகா.
நிலத்திற்கு வந்து இறங்கியபோது, அஸ்திவாரம்போடப்பட்டு அதன் சுவர்கள் ஓரளவு எழும்பியிருந்தன. அங்கே சரிகாவும், உதயகுமாரும் அவளுக்காகக் காத்திருக்க, இவளின் காரைக் கண்டவுடன் “மேடம்” என்று வந்து பணிவாக நின்றார்கள்.
அவளுடன் பாதுகாவலர்களைக் காணாததால், “மேடம்... உங்கள் பாதுகாப்புக்கு?” என்று உதயகுமார் இழுக்க, “என் பாதுகாப்புக்கு இங்கே மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களை மீறி என் மீது கைவைக்க ஒருவனுக்கும் துணிவில்லை” என்றாள் நிகாரிகா உறுதியாக.
“எங்கே மிஸ்டர் அன்பிற்கினியவன்?” என்று அவள் கேட்க, “அவர் இங்கே வரவில்லை. நானும் அவர் வருவார் என்றுதான் பார்த்தேன்” என்று பதில் சொன்னது உதயகுமார் இல்லை சரிகா.
நிகாரிகா நெற்றிக்கண்ணைத் திறந்து சரிகாவை முறைக்க,
சரிரிகாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து, இத்தனை நாள் அவளைக் கவனிக்கும் வாய்ப்பில்லாமல் போன தன் மறதியை நொந்துகொண்ட தென்னவன், நிகாரிகாவிடமிருந்து சரிகாவைக் காப்பாற்றும் நோக்குடன் “அழகு, வாம்மா... அங்கே புதுசா இறக்கின இளநீர் இருக்கிறது, உனக்கு இளநீர் பிடிக்கும் என்று இறக்கி வைக்கச் சொல்லிருக்கிறேன். வா வந்து குடிச்சுப்பார்” என்று நிகாரிகாவின் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போனான் தென்னவன்.
“அழகா? யார் அழகு?” என்று சரிகா குழப்பத்துடன் கேட்க,
நிகாரிகாவிடம் நீண்ட காலமாக வேலை செய்வதால் உதயகுமாருக்கு அவளின் பின்னணி ஓரளவுக்குத் தெரியும். தென்னவன் அவளை ஏன் அப்படி அழைக்கிறான் என்பதையும் அவர் புரிந்துகொண்டவர், “நீர் என்ன பண்ணிட்டு இருக்கீர்? வேலைக்கு வந்தால் வேலையை மட்டும் பார்க்கணும். தேவையில்லாமல் அன்பிற்கினியவன் சார் மேல ஆசையை வளர்த்துக்காதீர்” என்று சரிகாவைக் கடினமாக எச்சரித்தார் உதயகுமார்.
நிகாரிகாவுக்கு இளநீரை வெட்டிக் கொடுத்துவிட்டு, சரிகாவிடம் சென்று, "அன்பிற்கினியனை விட்டுத் தள்ளியே இருங்கள்" என்று இதமாகச் சொல்ல வந்தான் தென்னவன். ஆனால், அதற்குள் உதயகுமார் அவளைக் கடிந்துகொள்வதைக் கேட்டு,
"சகோ... அந்தப் பிள்ளைக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அதனிடம் ஏன் இவ்வளவு கடினமாகப் பேசுகிறீர்கள்?" என்று உதயகுமாரைச் சமாதானப்படுத்திய தென்னவன், சரிகாவிடம் திரும்பினான்.
சாந்தமாகவே அவளிடம், "நிகாரிகா உங்களுக்கு மேடம் என்றால், அன்பிற்கினியவன் உங்களுக்குச் சார். அது புரிந்து நடந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் உங்கள் வேலைக்கே ஆபத்தாகிவிடும்" என்று எச்சரித்தான்.
சரிகா மிரண்டு போய் விழிக்க, "சகோ... வாங்க, அந்தப் பிள்ளைக்குப் புரிந்திருக்கும். அந்த மேஸ்திரி வேலையைப் பார்க்காமல் எங்கே பராக்கு பார்க்கிறார்? வாங்க போய்க் கேட்போம்" என்று உதயகுமாரைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் தென்னவன்.
நிகாரிகா ஒரு மறைவான இடத்திலேயே நின்று இளநீரைக் குடித்துக்கொண்டிருக்க, ஆத்திரத்துடன் வந்த அன்பிற்கினியன் அவள் கையிலிருந்த இளநீரைப் பறித்துத் தன் வாயில் சரித்துக்கொண்டான். அதனை ஒரே மூச்சில் குடித்து முடித்தவன், அவளைக் கண்டதும் கேட்க வேண்டும் என்று சில மாதங்களாகத் தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த கேள்வியைக் கோபமாகக் கேட்டான்.
“ஏன் வரவில்லை?”
“எனக்கு மினிஸ்டரோட மீட்டிங்... அதை என்னால் கேன்சல் பண்ண முடியவில்லை” என்று நிகாரிகா அசால்ட்டாகக் காரணம் சொல்ல,
“ஓ! அப்போ அதுதான் உனக்கு முக்கியம். என் அம்மாவோட சாமி கும்பிடுறது உனக்கு முக்கியமில்லை, அப்படித்தானே?” என அவன் முகம் பாறையென இறுக, குரலில் கடுமை காட்டி வினவினான்.
“புரிஞ்சுக்கோங்க... நான் அங்கு வந்திருந்தால் தேவையில்லாத பேச்சுகள் வரும். அது உங்களுக்கும் சங்கடம்” என்று அவள் சொல்ல,
அவள் தங்களுடைய உறவை ஊராருக்கு தெரியப் படுத்த விரும்பாமல் இருப்பதை எண்ணி அன்பிற்கினியனின் முகம் பாறையென இறுகிப்போக, “எதுக்குத் திரும்ப வந்தாய்? என் உடம்பில் இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிரையும் எடுக்கவா?” என்றான் ஆத்திரத்துடன்.
அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டுச் நிகாரிகாவின் மனம் கலங்க, “இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினீர்கள் என்றால்...” என்று கையை நீட்டி எச்சரித்தவளின் கண்கள் கசியத் தொடங்கின. உடனே தன்னைச் சமாளித்துக்கொண்டு, “நான் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துவிட்டேன், இடையில் போக முடியாது. நாம் முதலாளி தொழிலாளி என்று அவரவர் இடத்தில் நின்றுவிடலாம். அதற்கு மேல் உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒன்றுமில்லை” என்று அப்போதும் மிதப்பாகவே சொல்லிவிட்டுச் சென்றாள்.
“திமிர்... திமிர்!” என்று அவளுக்குப் பின்னால் அன்பிற்கினியன் கத்த, அவள் அவனைத் திரும்பி ஒரே ஒரு பார்வை பார்த்தாள். அந்த விழிகளில் இருந்த அளவிட முடியாத சோகத்தைக் கண்டு, அவர்கள் இருவரினதும் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் அந்த நொடி மறந்துபோக, “என்னடி?” என்று அவன் பதறி அருகில் வந்தான்.
அவளை ஆதரவாக அணைக்க முனைய, அவனின் கைகளை விலக்கிவிட்டவள்,அவனுடைய கண்களைப் பார்த்தபடி, “நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்களை மட்டும் இழக்கவில்லை...” என்றவள், தன் அடிவயிற்றில் கையை வைத்து, “என் எதிர்காலச் சந்தோஷத்தையும் சேர்த்துதான் இழந்திருக்கிறேன். அதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் ஓயமாட்டேன். அதுவரை நீங்கள் என்னை நெருங்காமல் தள்ளியே நில்லுங்கள்!” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
அன்பிற்கினியன் அவள் சொன்னதன் பொருள் 'குழந்தை' தானோ என்று எண்ணி அங்கேயே உறைந்து நின்றான்.