• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 16

அன்பிற்கினியன் சொன்ன அந்த வார்த்தைகள், தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவு யாராவது இறந்துவிட்ட செய்தியைத் திடீரென்று பொது இடத்தில் ஒலிபெருக்கியில் கேட்டால் உடல் உதறிச் சிலிர்த்து அசைவற்றுப் போகுமோ, அப்படி ஒரு திகைப்பை நீலகண்டன், அம்புஜம், பாக்கியம் மற்றும் மாரிமுத்துக்கு ஏற்படுத்தின.

மங்கம்மாவின் முகம் எதைக் கேள்விப்படக் கூடாது என்று கடந்த ஏழு வருடங்களாக அவர் பயந்து கொண்டிருந்தாரோ, அதுவே இன்று அவர் கண்ணுக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு விசித்திரமான உணர்வுகள் பிரதிபலித்தன

அந்தக் கனமான சூழ்நிலையிலும் மாரிமுத்து தன் தங்கையின் பக்கமாக நின்று, "அத்தான்... என் தங்கச்சி ஒன்றும் உங்களை விரும்பவில்லை!" என்று உறுதியாகச் சொன்னான்.

அவன் சிற்பிகாவிடம் எப்பொழுதும் சொல்லும் ஒரே புத்திமதி, "தப்பித் தவறிக் கூட அன்பு அத்தானைக் காதலித்து, கல்யாணம் பண்ணிக்கலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டிவிடாதே!" என்பதுதான். மங்கம்மா தன் பேரனுக்குப் பெரிய பணக்கார இடத்திலிருந்து பெண் வரும் என்று காத்திருப்பதையும், அன்பிற்கினியனின் கைரேகை சாஸ்திரம் பற்றியும் அவன் அடிக்கடி அவளுக்கு நினைவுபடுத்துவான்.

சிற்பிகாவும் மாரிமுத்துவிடம், "எனக்கு என்ன மூளை பழுதா? அவனை நேசிப்பதற்கு!" என்று கோபப்படுபவள், அன்பிற்கினியனிடம் அவள் நட்பைத் தாண்டிப் பேசிப் பழகியதே இல்லை.

அவனை மெச்சியவாறு ஒரு பார்வை பார்த்த அன்பிற்கினியன், "நான் எங்கே அவள் என்னை விரும்புவதாகச் சொன்னேன்? இங்கே வந்ததிலிருந்து நம் பாட்டி, நாங்கள் எல்லோரும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற குடும்பம் என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறார்!" என்றான்.

வீட்டில் அளவுக்கதிகமான பணம் இருந்தாலும், சிற்பிகாவின் ஒருவேளைச் சாப்பாட்டுக்குக்கூட செலவழிக்க மனமில்லாத மங்கம்மாவை ஒரு கேவலமான பார்வை பார்த்தான்.

என்ன ஜாதி என்று தெரியாத ஒரே காரணத்துக்காக, வீட்டில் வேண்டாத விருந்தாளியாகச் சிற்பிகாவை நடத்தி வந்தவர் மங்கம்மா. அவளது கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்று அந்த வீட்டில் ஒருவேளை உணவைக்கூட அவளை நிம்மதியாக உண்ணவிட்டதில்லை.

அவள் அத்தனை அவமானங்களையும் பொறுத்துக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் பாக்கியமும் மாரிமுத்துவுமே. அவர்கள் இருவரும் அள்ள அள்ளக் குறையாத அன்பை அவள் மேல் கொட்ட, அந்த அன்பெனும் ஒற்றை நூலைப் பிடித்துக்கொண்டு தன் வலிகளைச் சகித்து அந்த வீட்டிலேயே தங்கியிருக்கிறாள் என்பதை நினைத்தபோது, அன்பிற்கினியனின் நெஞ்சு பாரமானது.

நெஞ்சில் தேங்கிய அந்தப் பாரமே அவனது குரலில் அழுத்தமாகவும் ஆதங்கமாகவும் உருமாறி வெடிக்க,

"பாட்டி அவளின் செலவுகளுக்கு மட்டும் காசு தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதுக்காக அநாதரவாக வீட்டுக்கு வந்தவளை வீட்டை விட்டுத் துரத்திவிடவா முடியும்? அதனால்தான் தென்னவன் வயலில் நாள் கூலிக்கு நான் வேலை பார்த்து, அவள் தலைக்குக் குத்தும் கிளிப் முதல், அவளது மாதவிடாய்ப் பயன்பாட்டிற்கான நாப்கின் வரை நான்தான் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்."

"நான் உழைப்பது சில ஆயிரங்கள் மட்டுமே என்பதால் அவளுக்கு அத்தியாவசியம் என்பதைத் தாண்டிப் பெரிதாக ஒன்றும் வாங்கிக் கொடுக்க முடிவதில்லை. சிற்பிகாவும் தன்னுடைய நிலை புரிந்து அவளின் தேவைகளைச் சுருக்கிக்கொண்டாள். அப்படி அவளுக்காக என்று நான் பலதும் சிந்தித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்க, அவளின் நல்வாழ்க்கைக்காகக் காலம் முழுதும் அவளின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் புருஷன் உரிமையை எனக்குக் கொடுத்தால் என்ன?" என்று கணீர் என்ற குரலில் கேட்டான்.

மங்கம்மா எப்படியும் தன்னுடைய அகம்பாவத்தைத் தீர்த்துக்கொள்ள அவளின் வாழ்க்கையைப் பலியிடுவார் என்பதை உணர்ந்தே, அவன் முந்திக்கொண்டான் என்பதே உண்மை.

"என்ன? அவளோட செலவுகளை அன்புவா பார்த்துக்கிறான்?" என்று அதிர்ச்சியுடன் கேட்ட நீலகண்டன், நேராகப் பாக்கியத்தைப் பார்த்தார்.

பாக்கியமோ இவ்வளவு நாளும் அந்தச் செலவுகளைத் தன் அண்ணன் நீலகண்டன்தான் பார்த்துக்கொள்கிறார் என்று எண்ணியிருக்க, "நீங்க இல்லையா அண்ணா?" என்று மெதுவாகக் கேட்டார். நீலகண்டனோ, "இல்லை பாக்கியம்... நீதான் பார்க்கிறாய் என்று நான் நினைத்தேன்" என்றார்.

அண்ணன் பார்த்துக்கொள்வார் என்று தங்கையும், தங்கை கவனித்துக்கொள்வாள் என்று அண்ணனும் ஒருவரை ஒருவர் நம்பி ஏமாந்திருக்க... இடையில் ஒரு சிறு பையனைத் தாங்கள் அறியாமையாலேயே கூலி வேலைக்கு அனுப்பிய அந்தத் தகவல் இடைவெளி, இப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

அம்புஜத்திற்கு மட்டும் பழைய நினைவு ஒன்று சட்டென்று ஞாபகம் வந்தது. சிற்பிகா இந்த வீட்டிற்கு வந்த சில நாட்களில், அவளுக்குப் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஏதோ வாங்க வேண்டும் என்று மாரிமுத்து மங்கம்மாவிடம் பணம் கேட்டான்.

அதற்கு அவரோ, "என் வீடு என்ன சத்திரமா? கண்டவளுக்கும் செலவழிக்க!" என்று சின்னப்பையனிடம் வெடுக்கென்று சொல்லிவிட்டார். மாரிமுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு மூலையில் நின்று கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்தபோது, அன்பிற்கினியன் அங்கே வந்து, "மாரி... நான் பார்த்துக்கிறேன், நீ போய்ப் படிக்கிற வேலையைப் பார்" என்று சொன்னதை அம்புஜம் கேட்டிருந்தார்.

ஆனால், மகன் தன் தந்தையிடம் பேசிப் பணம் வாங்கித் தருகிறான் என்றுதான் இத்தனை வருடங்களாக அவர் எண்ணியிருந்தார். தன் மகன் அவளுக்காக வெளியே வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தில் அவள் தேவைகளை நிறைவேற்றுகிறான் என்பது இன்றுதான் அம்புஜத்திற்குத் தெரிந்தது.

மகனை ஒரு ராஜகுமாரன் போல வளர்த்து, அவன் ஏவும் வேலைகளைச் செய்ய ஏவல்கள் புரிய இருவரை நியமித்திருக்க, அவனோ சிற்பிகாவுக்காகக் கூலிவேலைக்குச் சென்று தன் உடலை வருத்திக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன் அவருக்குப் பெரும் திகைப்பாகியது.

"மாலை நேரங்களில் வகுப்புக்குச் செல்கிறேன்", "நண்பனுடன் சேர்ந்து படிக்கப் போகிறேன்" என்று அவன் சொன்னபோதெல்லாம், தன் மகன் படிக்கத்தான் போகிறான் என்று குருட்டுத்தனமாக நம்பி அனுப்பிய தன் முட்டாள்தனத்தை நினைத்து அவர் மௌனமாகப் புழுங்கினார்.

ஒரு தாயாக மகனின் கைகளில் படர்ந்திருந்த தழும்புகளைக் கூடக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்கிற ஆதங்கம் அவர் நெஞ்சை அடைத்தது.

மகள் என்று ஆசையாய் அழைத்து வந்த தான், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மட்டும் அவளுக்குப் புத்தாடை எடுத்துக் கொடுத்துவிட்டு, அவள் ஒருமுறை கூடத் தன் தேவைகளை அவரிடம் வாய்விட்டுக் கேட்காததால், அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பதைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று பாக்கியத்தின் மனம் குமுறியது.

எல்லோரும் அவரவர் சிந்தனையில் பேச்சற்றுப் போயிருக்க, அன்பிற்கினியனோ இன்னும் அதிர்ச்சிகள் ஓயவில்லை என்பதற்கேற்பத் தனது பேச்சைத் தொடர்ந்தான்.

"ஒருமுறை பாட்டி அவளைத் தவறாகப் பேசிவிட, இங்கே அவரிடம் பெரிய தைரியசாலி போலப் பேசிவிட்டுப் போனவள், நேராக நம் மௌனமலை முருகன் கோயில் மலை உச்சியிலிருந்து குதிக்கப் போனாள், தெரியுமா?"
என அவன் சொல்லி முடிக்கும் முன்பே, பாக்கியம் "ஐயோ!" என்று நெஞ்சில் கையை வைத்து வாய்விட்டு அலறினார்.

அன்று தென்னவனுக்கும் அன்பிற்கினியனுக்கும் கல்லூரி, மாரிமுத்து பள்ளிக்கு ஏதோ விசேஷ வகுப்பு என்று போயிருந்தார்கள். மாலை நான்கு மணி அளவில் அன்பிற்கினியன் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியபோது, "இந்தச் சிற்பிகா கோயிலுக்குப் போயே தீருவேன் என்று போனாள், இன்னும் காணோமே!" என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார் பாக்கியம்.

தன் காலால் இடும் வேலைகளைத் தலையால் நிறைவேற்றும் தன் விசுவாசமான மூன்று சேவகர்களான அன்பிற்கினியன், மாரிமுத்து மற்றும் தென்னவனை விடுத்துச் சிற்பிகா எங்கும் தனியாக அடி எடுத்து வைக்கமாட்டாள் என்பது அன்பிற்கினியனுக்கு தெரிந்த உண்மை.

ஆதலால், "அவள் தனியாகப் போகமாட்டாளே..." என்று முணுமுணுத்தவன், மெதுவாக, "அப்பத்தாவின் முன்னுக்குப் போய் அவர் வாயில் விழுந்திட்டாளா?" என்று சோபாவில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த மங்கம்மாவுக்குக் கேட்காதவாறு பாக்கியத்திடம் கேட்டான்.

பாக்கியம் அன்று நடந்ததை இரத்தினச் சுருக்கமாக,
"ஆமாம் அன்பு... பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு நீயும், மாரியும் வீட்டில் இல்லாததால், அவள் பாட்டுக்குத் தனியாகத் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் அண்ணாவும் மில்லுக்குப் போய்விட்டார்கள், அண்ணி கோயிலுக்குப் போய்விட்டார் என்று நானும் அவளைத் தனியே விட்டுவிட்டுச் சமையலறைக்குப் போய்விட்டேன். அண்ணா அம்மாவைக் கொண்டு வந்து வாசலில் இறக்கிவிட்டுவிட்டு, அண்ணியைக் கூட்டி வருவதற்காகத் திரும்பவும் கிளம்பிப் போய்விட்டார்.

சிற்பித் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்ததால், வீட்டுக்குள் கார் வந்த சத்தம் அவளுக்குக் கேட்டிருக்காது போலிருக்கிறது. அம்மா வந்து பார்க்கும்போது இவள் இப்படி அமர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றுதான் நமக்குத் தெரியுமே! நான் சமையலறையில் இருந்தபோது, இங்கே இரண்டு பேருக்கும் இடையில் பலமான வாக்குவாதம் நடக்கும் சத்தம் மட்டும் எனக்குக் கேட்டது. நான் பதறியபடி வெளியே வருவதற்குள், சிற்பி என் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், கோயிலுக்குப் போகிறேன் அம்மா என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வாசலைத் தாண்டிப் போய்விட்டாள்."

"நானும் அவள் பின்னாடியே ஓடப் பார்த்தேன், ஆனால் அதற்குள் அம்மா குறுக்கிட்டு, இவள் வீட்டுக்குத் திரும்பாமல் தொலைந்து போனால் நிம்மதி என்றார்கள். எனக்குக் கோபம் தாங்கவில்லை... 'அம்மா!' என்று நான் சத்தமாக அதட்டினேன். அதற்கு அவர், ஆம்பளைப் பிள்ளை மாதிரி ஊர் மேய்கிறதைப் பார்! இவள் இப்படியே போனால், எவனையாவது இழுத்துக்கொண்டு சின்ன வயசிலேயே ஓடிப் போகப் போகிறாள். நீ யாரோ கேடுகெட்டவளைக் கொண்டு வந்து வீட்டில் தங்க வைத்த பாவத்திற்கு, ஒரு மூலையில் உட்கார்ந்து அழு என்று எனக்கும் ஒரு சாபத்தை விட்டுவிட்டு, அலட்சியமாக உள்ளே போய்விட்டார்."

"சிற்பிகாவும் தன் பர்ஸ் எடுப்பதற்காக உள்ளே வந்தவள், என் அம்மா பேசியதைக் கேட்டுவிட்டாள். அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டுச் சிற்பிகா கலங்கிவிடுவாளோ என்று பயந்து அவளிடம், சிற்பி... அவர்களைப் பற்றி உனக்குத்தான் தெரியுமல்லவா? என்று கேட்டேன்."

"அதற்கு அவள், அவர்களை விடுங்கள் அம்மா... நான் படித்துப் பெரிய ஆளாகி, உங்களையும் அண்ணாவையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலட்சியத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் உங்கள் மருமகனைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், இவர்களின் வாய் என்னை இந்த வீட்டுக்கு மருமகளாகக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறது! எப்போதும் அந்த அன்பைப் பற்றியே பேசிப் பேசி, எனக்கும் அவன் மேல் காதல் வந்து, அவனுக்கும் என் மேல் காதல் வந்துவிடும் போல! என்று கிண்டலாகப் பேசிவிட்டுப் போனாள்" என்றார் பாக்கியம்.

மங்கம்மாவின் பேச்சின் சாரம்சம் எப்படி இருக்குமென்று அன்பிற்கினியனுக்குத் தெரியும்!, “என் பேரனை மயக்கப்போகிறாயா?” என்று அவர் நாகரிகமாகவெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை. அவர் பேச்சில் துளியும் பண்போ, ஈரமோ இருக்காது. கேட்பவர்களின் காதுகளே கூசும் அளவுக்கு வன்மத்தைக் கக்குவதில் அவர் வல்லவர்.

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை அவர் கையில் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே மாரிமுத்துவும் அன்பிற்கினியனும் எப்போதும் சிற்பிகாவிற்கு காவலாக இருப்பார்கள். மங்கம்மா அந்த அன்று முழுதும் வீட்டில் இருந்தால், அவளை அழைத்துக்கொண்டு வெளியே போய்விடுவார்கள். ஆனால், இன்று எதிர்பாராதவிதமாக அவள் மங்கம்மாவிடம் நேருக்கு நேராக, வசமாகச் சிக்கிக்கொண்டாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அதனால், "சரி இருங்கள், நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு நேராக மௌனமலைக்கு வந்தான். அன்று விசேஷ நாட்கள் ஏதுமில்லாததால், பூசை நேரமும் கடந்து அங்கே ஒருவரும் இல்லை.

மலையின் ஒரு ஓரத்தில், கீழே யாரும் விழுந்துவிடாமல் இருப்பதற்காகப் போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பிக்கு மேலே சிற்பிகா ஏற முயற்சித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவன் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க, பதறியபடி அவளை நோக்கி ஓடி வந்தான். அதற்குள் அவளாகவே கீழே இறங்கிக் கொண்டவள், அன்பிற்கினியன் வந்ததைக் கவனிக்காமல் தனக்குத் தானே சத்தமாகப் பேசத் தொடங்கினாள்.

"தற்கொலை என்பது கோழைகளின் முடிவு... இந்தச் சிற்பிகா அந்த மங்கம்மாவின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டும் தைரியசாலி! நான் இப்படிப் பண்ணக்கூடாது. பாவம் மாரி அண்ணா... நான் இல்லாவிட்டால் அவர் என்ன செய்வார்? இந்த அன்புவும் பிடில் வாசிப்பான்... பேசாமல் கண்ணிலேயே கரண்ட் வைத்திருப்பது போல எந்நேரமும் நெருப்பைக் கக்கும் அந்த மங்கம்மாவை, கரண்ட் ஷாக் வைத்துக் கொலை செய்துவிடலாம்" என்று சொன்னவள், சட்டென நிறுத்திக்கொண்டு,

"அச்சோ! ஜெயிலுக்குப் போனால் ஒரே இடத்தில் இருக்க வேண்டுமே? நமக்கோ ஒரு அறைக்குள் அரை மணி நேரம் கூடத் தொடர்ந்து இருக்க முடியாது! பேசாமல் ரூட்டை மாற்றுவோம்... இந்த அன்பு பெரிய மன்மதக் குஞ்சு என்றுதானே நான் அவனைக் கொத்திக்கொண்டு போய்விடுவேன் என்று அந்தக் கிழவி என்னைப் பேசுகிறது? நாம் படித்துப் பெரிய ஆளாக வந்து, அன்புவை விட அழகாக ஒருவனை லவ் பண்ணுவோம். பிறகு ஜோடியாக வந்து அந்தக் கிழவியை வெறியேற்றலாம்!" என அங்கே யாருமில்லை எனச் சுற்றத்தை மறந்து அவள் சத்தமாகப் பிதற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதுவரை இருந்த பதற்றம் நீங்கி அன்பிற்கினியனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

அந்தப் புன்னகையுடன் அன்பிற்கினியன் குறுக்கிட்டு, "அதுக்கு அன்புவையே லவ் பண்ணினால் இன்னும் வெறுப்பேத்தலாம்" என்று அவளுக்குக் கேட்கும்படிச் சொன்னான்.

தன் சிந்தனையிலேயே இருந்த சிற்பிகா, அவன் பேசியதைச் சரியாக உணர முடியாமல், "வேண்டாம், அவன் தார் ரோடு மாதிரி இருக்கான்... நமக்கு செட் ஆகமாட்டான்" என்று சத்தமாகச் சொல்லிவிட்டாள்.

"தார் ரோடா?" என்று கோபமான அன்பிற்கினியன், அவளிடம் வந்து அவள் முதுகில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டினான். பதினான்கு வயதுச் சின்னப் பெண்ணிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல், "ஏண்டி! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன குறை?" என்று கேட்டான்.

அவனை அப்போதுதான் கவனித்தவள், "வாடா அன்பு!" என்றாள். தான் அவனை தார் ரோடு என்று சொன்னது அவனுக்குக் கேட்டுவிட்டது என்று புரிந்தும், பதறாமல் கூலாகவே, "உண்மையைச் சொன்னால் ஏத்துக்கணும் அன்பு..." என்றாள் நக்கலாக.

அவள் சொன்ன அந்தத் தார் ரோடு கிண்டலைப் புறந்தள்ளிவிட்டு, தன்னுடைய கறுத்த நிறத்தைக் கண்டு அவள் உண்மையிலேயே தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிடுவாளோ என்ற பதற்றம் மேலோங்க, "உண்மையிலேயே... என்னை உனக்குப் பிடிக்கலையா? என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று சீரியஸாகவே கேட்டான்.

மீசை அரும்பத் தொடங்கும் வயதில் நின்றுகொண்டு, கல்யாணத்தைப் பற்றித் தீவிரமாகப் பேசும் அவனைக் கண்டு சிற்பிகா சிரித்தபடி, "கல்யாணமா? டேய்! உனக்கு இப்பதான் பத்தொன்பது வயசாகிறது, எனக்கோ பதினான்கு... அதுக்குள்ளே என்னடா கல்யாணப் பேச்சு வேண்டியிருக்கு?" என்றாள் முகத்தைச் சுழித்து.

அன்பிற்கினியன் கல்லூரிக்குச் செல்பவன் என்பதால், அங்கே அரங்கேறும் பல காதல் கதைகளை நேரில் கண்டவன். அதனால், சிற்பிகா இன்னும் பள்ளிச் சிறுமியாக இருப்பதையோ, அவள் உயரத்தில் சற்று குள்ளமாக இருப்பதையோ அவன் ஒரு தடையாகவே கருதவில்லை.

தன் காதலை அவளிடம் அழுத்தமாகப் பதிய வைக்க நினைத்தவன், "ஏய்! இப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடப் பிள்ளைகளைக் காதலிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏன்... எனக்கே என் பள்ளிக்கூடக் காலத்தில் எத்தனை காதல் கடிதங்கள் வந்திருக்கின்றன தெரியுமா? அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவே இல்லை. என் அத்தை மகளைத்தான் நான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்று, வந்த கடிதங்களை எல்லாம் அப்படியே கிழித்துப் போட்டுவிட்டேன்!" என்றான்.

‘படித்து உருப்பட வேண்டிய வயதில் காதலும் கத்தரிக்காயும்... இப்படியே போனால் நாடு உருப்பட்ட மாதிரிதான்!’ என்று எரிச்சலாக மனதுக்குள் எண்ணியவள், வெளியே, "கல்யாணத்தைப் பற்றிப் பேச இது சரியான வயசு இல்லை, போய் உருப்படுற வழியைப் பார் அன்பு!" என்று ஒரு பெரிய மனுஷியைப் போல அவனுக்குப் புத்திமதி சொன்னாள்.

அவன் அப்பொழுதும் பதில் வேண்டும் என்று உறுதியாக நிற்பதைக் கண்டு, தனக்குத்தானே, "தன் பேரன் பிஞ்சிலேயே பழுத்துப்போய் நிற்பது தெரியாமல், முப்பது வயதில்தான் கல்யாணத்தைப் பற்றியே யோசிக்க வேண்டும் என்று இருக்கிற என்னைப் பார்த்து இந்தக் கிழவி என்னவெல்லாம் சொல்லுது! எல்லாம் கலிகாலம்!" என்று பெருமூச்சு விட்டாள்.

அவளின் முணுமுணுப்பு அன்பிற்கினியனுக்குக் கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டதுதான். அதை அன்பிற்கினியன் தன் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளிடம், "கல்யாணம் என்னைக்கு நடந்தால் என்னடி? எப்ப நடந்தாலும் சரி, நீதான் என் பொண்டாட்டி! அதை மட்டும் நீ மனசுல வச்சுக்கிட்டா போதும், வேற எதைப் பற்றியும் யோசிக்காதே!" என்று ஒரு தீர்க்கமான முடிவெடுத்த உறுதியோடு, அவளது கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான்.

அவனைக் கேலியாகப் பார்த்த சிற்பிகா, "போடா! நான் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுகிற வயதில் இருக்கிறேன். எனக்குக் கல்யாணம் நடக்கும்போது உன்னுடைய ஞாபகம் வந்தால், உன்னைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணுவேன்... அவ்வளவுதான்! மற்றபடி இப்போதைக்கு எனக்குப் படிப்புதான் முக்கியம்!" என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள்.
 
Top Bottom