• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி - 4

Vishakini

Moderator
Staff member
கதையின் பெயர்- அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி

STN-83

அத்தியாயம் -04

ஆர்ப்பரிப்புடன் பாய்ந்த நீரில் தன் உடலை கொடுத்தவன் அது செல்லும் வேகத்தில் உடலின் வெப்பத்தை தீர்த்துக் கொண்டான்.

சுற்றிலும் தென்னை மரங்கள் ஒற்றை ஒளியாய் முழு நிலவு மட்டும் வானத்தில் வீற்றிருக்க, ஏகாந்த பொழுது அது.

ஆனால் தேனரசனுக்கோ தொண்டையில் முள் சிக்கிய உணர்வு.

தேகத்தில் சொட்டும் நீரோடு பம்பு செட்டில் இருந்து வெளிவந்தவன்.

மோட்டாரையும் அணைத்துவிட்டு அங்கிருந்த ஒற்றை அறை கொண்ட வீட்டிற்குள் நுழைந்து உடைமாற்றி ஒரு ஆள் படுக்கக் கூடிய கட்டிலை எடுத்து வந்து வெளியே போட்டு, அதில் படுத்தான்.

வானில் முழு நிலவு அவனைப் பார்த்து புன்னகைத்தது.

அவன் நினைவோ இன்று மாலை நடந்ததை அசை போட்டது.

முத்தையன் பிடியில் இருந்த மீனாட்சியை மீண்டும் அடிக்கப் பாய்ந்த முத்துராஜை பிடிப்பதற்குள் மீனாட்சியின் தோளில் அழுத்தமாக அடி விழுந்திருந்தது.

"என்னடா நானும் பார்த்துகிட்டே இருக்கேன். வந்ததிலிருந்து சலம்பிக்கிட்டே இருக்க, பெரிய மனுஷன்னு நான் எதுக்கு இருக்கேன்?. தீர விசாரிக்கும் முன்னே எதுக்குடா இந்த ஆட்டம் ஆடுறீங்க" என்று முத்தையன் கோபத்தைக் காட்டினார்.

செல்வராஜ் கொஞ்சம் சூதாரித்து, தன் தம்பியை கட்டுக்குள் கொண்டு வர பார்த்தார்.

"எப்படி நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டா பாருங்க ண்ணா. இதுக்கா இவளை சோறு போட்டு வளர்த்தோம்" என்று கோபமாக மொழிந்தவரின் விழிகள் தன் தங்கை மகளை கொன்று குவிக்கும் வெறியுடன் நோக்கியது.

" தேனரசா நீ என்ன சொல்ற" என்று கேள்வியை ஆணவனின் பக்கம் திருப்ப, அவன் என்னவென்று கூற, பேச்சற்றுப் போனான்.

அவன் பார்வையில் முத்தையனே, " வடிவு வீட்டுக்கு வந்துட்டாள். யார் கடத்தினாங்க என்று தெரியாதுன்னு சொல்லிட்டா. எந்த ஆதாரமும் இல்லாமல் துரை மேலே பழி போட முடியாது. ஆனால்,நீயும் மீனாட்சியும் உன் பண்ணை வீட்டில் இருந்ததை பார்த்ததற்கும் சாட்சி இருக்கு. உங்க ரெண்டு பேரையும் காரில் சேர்ந்து பார்த்ததற்கு ரெண்டு ஊரே சாட்சி".

"அந்த பொண்ணு விரும்பி தான் வந்தேன்னு சொல்லுது. இதுக்கு என்ன தீர்வு" என்றார்.

"அவளை வெட்டி போடறது தான் தீர்வு.அவளை எங்ககிட்ட ஒப்படைங்க " என்று ஆளுக்கு முன் முத்துராஜ் பரபரத்தார்.

" அட வாயை சாத்திட்டு உன்னால் இருக்க முடியாதா டா. ஆ ஊனா வெட்டி போடறேன்னு சொல்ற. பொம்பள புள்ளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா?. நீ வெட்டி போட்டுட்டு போயிடுவ உங்க ரெண்டு பேர் சண்டைக்கு ஊர்காரங்க பலியாகணுமா?. போதும் உங்க வீட்டு பகைக்கு இத்தனை நாள் ஊரு பட்ட பாடு".

கோபத்தில் படபடப்பாக வர,சில நொடி அமைதி காத்து தன் கோபத்தை அடக்கியவர்.

"உன்கிட்ட எல்லாம் இந்த பிள்ளையை ஒப்படைக்க முடியாது" என்று திட்டவட்டமாக மொழிந்தார்.

"ஒன்னும் நடக்காது எங்க தங்கச்சி பொண்ணை எங்ககிட்ட ஒப்படைச்சுடுங்க. நாங்க பார்த்துக்குறோம் " என்று நிதானமாக செல்வராஜ் கூறினார்.

அவர் வார்த்தைகளின் பின் இருந்த வன்மம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

முத்துராஜ் வெளிப்படையாக காட்டிய வெறியை, செல்வராஜ் மனதிற்குள் அழுத்தி வைத்து ஒற்றைப் பார்வையில் வெறியை காட்டினார்.

அத்தனை வருட அனுபவமும்,அவர்களோடு பழக்கமும் கொண்ட முத்தையனுக்கா? இதெல்லாம் தெரியாது.

" போதும்.இனி மீனாச்சியை உங்க கூட அனுப்புறது சரிப்பட்டு வராது. இந்த பிரச்சனைக்கு இங்கேயே முடிவு கட்றது தான் உங்க ரெண்டு குடும்பத்துக்கும்,ஊருக்கும் நல்லது " என்றவரின் வார்த்தைகளில் புரியாமல் நோக்கினர்.

"தேனரசன் கையால் மீனாச்சிக்கு இப்பவே தாலி ஏறணும்" என்று தீர்ப்பாகக் கூறினார்.

" அதெல்லாம் வேண்டாம். யாருக்கு யார் தாலி கட்டுறது? அவ விருப்பப்பட்டால் போதுமா? அந்த கோட்டி கழுதை ஏதோ நாடகம் ஆடுறா. அதுக்கும் இவனுங்க தான் காரணமா இருப்பாங்க. கல்யாணம் எல்லாம் சரிப்பட்டு வராது. முடியவே முடியாது "என்று மீனாட்சியின் பக்கம் எதிர்ப்பு பலமாக இருந்தது.

" மீனாச்சி ஓட அப்பன் வேதநாயகம் என்னோட பெரியய்யா பேரன். அவனுக்கு உன் தங்கையை கல்யாணம் பண்ணி வச்சது என் தலைமையில் தான். அவன் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்கு எனக்கு உரிமை இல்லையா? இவளை பெத்த ஆத்தாவே எனக்கு உரிமை இல்லைன்னு சொல்ல முடியாது. பொண்ணு விருப்பத்திற்கும், இந்த ஊர் நல்லதுக்கும் இதுதான் என் முடிவு".

திட்டவட்டமாக கூறியவர்.ஆடலரசனை அழுத்தமாக பார்க்க, என்னவென்று கூறுவது சூழ்நிலை கைதியாக தான் அங்கு இருந்தனர்.

"தேனரசா ஐயா சொல்றதை கேளு " என்க, அவனுக்கும் நிலைமை புரிந்தது.

பார்வை தன்னைப்போல் அவளை பார்க்க அவளின் பார்வையும் அவன் மீதுதான் இருந்தது.அந்த பார்வையில் இருந்த உணர்வு என்னவென்று இப்பொழுது வரை அவனுக்கு புரியவில்லை.

இக்கட்டில் நடந்த திருமணம்.விருப்பு வெறுப்பு அனைத்திற்கும் அப்பாற்பட்டது.

ஆனால் மனையாளாக வந்தவளை என்னவென்று எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.

அவளை யோசிக்க அவள் முகம் கூட நினைவு வரவில்லை.அதில் தளர்ந்து போய் அப்படியே கண் மூடினான்.

" என்னக்கா இது?. இப்படி நடந்து போச்சு. எனக்கு எல்லாம் இன்னமும் நம்ப முடியலை " என்று சன்ன குரலில் வாணி கூற, கனகவல்லிக்கும் அதே எண்ணம் தான்.

விருந்தினர் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பெண்ணவள் இல்லை என்றால் நடந்தது அனைத்தும் கனவு என்றே நினைத்திருப்பார்.

இருவரும் அவளை பார்த்தப்படி தான் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.கதவும் பாதி திறந்தே இருக்க அவளின் தரிசனம் நன்றாக அகப்பட்டது.

" இப்படித்தான் நடக்கணும்னு விதி இருக்கிறப்ப என்ன பண்ண " அயர்ந்து போய் கனகவள்ளி கூறினார்.

"எல்லாம் இந்த தமிழ் முன்கோபியால் வந்தது. இவனால் எவ்வளவு கஷ்டம்" மனம் வெறுத்துப் போய் வாணி மொழிந்தார்.

" அட விடு நடந்து முடிந்ததைப் பற்றி என்ன பேசுறது. அவன் என்ன இப்படி நடக்கணும்னு தெரிஞ்சா பண்ணினான் " என்று தமிழுக்கு பரிந்து பேசும் கனகவள்ளியை கண்டு இன்னும் குற்ற உணர்வு கூடியது.

'ஆனால் அதை கூறினால் என்னை அப்படி தான் நினைத்தாயா?' என்று கோபித்துக் கொள்வாரே அதனால் மௌனம் காத்தாலும் மனமெங்கும் பெறாத மகனை எண்ணி வருத்தமும்,தன் பெற்ற மகனை எண்ணி கோபமும் மேலோங்கி இருந்தது.

"இன்னும் தூங்காமல் என்ன பண்றீங்க. போய் படுங்க.மேல் வேலை எல்லாம் நாளைக்கு ராசு வந்து பண்ணிடுவா" என்று அதட்டியப்படி வந்த வேலம்மாளை கண்டு உடனே எழுந்தவர்கள்.

அவரவர் அறைக்கு செல்ல, உறங்கிக் கொண்டிருந்த மீனாவை பார்த்தவர்.

'இவள் எப்படிப்பட்டவளோ?' என்று மனம் படபடத்தது.

அவள் அறைக்கு செல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எவ்வித யோசனையும் இல்லாத முகம்.

கண்ணம், கழுத்தில் எல்லாம் சிவப்பு தடம் தெரிய, "இந்த கோட்டிக்காரர்களுக்கு மத்தியில் பொம்பளைங்க பாடு நாய் பொழப்பு தான்" என்று முணுமுணுத்தவர்.

மருந்து எண்ணையை மிதமாக சூடு படுத்தி எடுத்து வந்து பட்டும் படாமல் மயிலிறகால் அவள் கன்னத்திற்கு பூச, அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.

அதில் பயந்து, "அடியாத்தி " என்ற அலறலோடு விழபோனவர். இறுதி நொடியில் சூதாரிக்க, மீனாட்சி உடனே வந்து தாங்கிக் கொண்டாள்.

அவரையும்,அந்த வீட்டையும் கண்டு தான் ஆசுவாசமே பிறந்தது.

" அட பேரனோட பொண்டாட்டியை பார்க்க அர்த்த ராத்திரியில் வந்தாச்சா? இத்தனை நேரம் முழிச்சி இருந்தால், உடம்பு என்னவாகிறது. போய் முதலில் படுங்க. விடிஞ்சதும் தரிசனம் தரேன். அப்போ நிறுத்தி நிதானமா ரசிப்பீங்கலாம்" என்றவளை வாயை பிளந்து அவர் பார்க்க,

அதனை கண்டுகொள்ளாத பாவனையில் அவரின் அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்து விட்டே சென்றாள்.

'இவளை எந்த ரகத்தில் சேர்ப்பது' என்று புரியாமல் குழம்பிப்போய் அவர் புலம்பியப படியே படுத்து கண்மூட, அறைக்கு வந்தவள் மருந்து எண்ணையை கண்டு புன்னகைத்தாள்.

மனம் உடனே தன் தாயை எண்ணியது.

ஆனால் இறுதியில் அவர் பேசியதெல்லாம் நினைவு வர,தலையை உலுக்கி கொண்டு கன்னத்திற்கும் அந்த மருந்தை பூசி விட்டு கண் மூடினாள்.

காலை கூடத்திற்கு வந்ததுமே வித்தியாசம் கண்ணில் பட, "வா..." என்று அழைக்கப் போனவரின் வார்த்தைகள் அறைக்கதவை திறந்து கொண்டு வந்த ஓரக்கத்தியை கண்டு நின்று விட,

"அட நீங்களும் இப்போ தான் வந்தீங்களா அப்புறம் எப்படி சாம்பிராணி" என்று திரும்பியவருக்கு எதிரில் மீனாட்சி தென்பட்டாள்.

அதுவும் அவரின் ரவிக்கையும்,கனகவள்ளியின் புடவை அணிந்தும்.

தலைக்கு குளித்து தயாராகியவள்.வீட்டை சாம்பிராணியால் மலர வைத்திருந்தாள்.

" பால் காய்ச்சி ஆச்சு. நீங்க டீ குடிப்பீங்களா?இல்லை காபியா?. சொன்னால் கலந்திடுவேன்" என்றாள்.

அதில் இருவரும் புரியாமல் விழிக்க, "சரி நீங்க கூட கலந்துக்கோங்க.அப்புறம் ராஜாவை பிடிச்சவ என்னுடைய ராஜ்யத்தையும் பிடிச்சிட்டான்னு என்னை தப்பா நினைச்சிறக்கூடாது இல்ல" அதில் கனகவள்ளியோ நெஞ்சை பிடித்து வாணியின் மீது சாய,

"அட அத்தை.ஆ ஊன்னா விழுந்துடுறீங்க வாங்க வாங்க" என்று அவரையும் வாணியையும் ஒருசேர அமர வைத்தவள்.

சொம்பு நிறைய தண்ணீரை கொடுக்க, " இதுதான் தண்ணீர் காட்டுறதா?" என்று வாணி கனகவள்ளியின் காதில் முணுமுணுக்க, அதில் அவரை முறைத்தவர்.அவள் கையில் இருந்த தண்ணீரை வாங்கி குடித்தார்.

"அப்படியே நமக்கும்" என்று தோளினை சொரிந்த வாணியின் கையில் தண்ணீரை திணித்தார்.

மீனாட்சியிடம் என்ன பேசுவது என்று புரியாமல் பார்க்க, " கேட்டேனே? " என்று அவள் ஆரம்பிக்க,

" இல்லை நானே கலந்துக்குறேன்" என்றதும்,

" அப்போ எனக்கும் ஒரு டீ. சக்கரை கம்மியா.அப்புறம் காய்கறியும் எடுத்து குடுங்க. கட் பண்ணி தரேன்" என்று அமர்ந்து விட, கனகவள்ளி சமையல் அறை சென்றுவிட,

வாணியோ அவளை குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருக்க, " என்ன சின்னத்தை.வெறும் சோம்பை வெச்சிட்டு என்னையே பார்த்துட்டு இருக்கீங்க. தண்ணி வேணுமா?.

"இல்ல இல்ல நீ காட்டுன வரைக்கும் போதும்" என ஒரு வேகத்தில் கூறியவர் உடனே தொண்டையை செரும்பிக் கொண்டு, " இல்லை குடிச்ச வரையும் போதும்".

கனகுவின் பின்னே வால் பிடித்து சென்றுவிட, சன்னமாக சிரித்துக் கொண்டவள். எதிர்பட்ட அரவத்தில் நிமிர்த்தாள்.

"அடடா! வாங்க கொழுந்தே".

அவளை அங்கு அந்த நேரத்தில் எதிர்பாராமல் திகைத்தவன். அவள் அழைப்பில் இன்னும் தடுமாற," கொழுந்தனரோட ஷார்ட் ஃபார்ம்" என விளக்கியவள்.

"உங்களுக்கு பழைய சோறா? கஞ்சியா?".

"என்ன" என்று அவன் தடுமாற,

"இல்ல வயலுக்கு தானே கிளம்புனீங்க. பொதுவா டீ,காபி குடிக்க மாட்டாங்க. அதன் பழைய சோறா? கஞ்சா?. இருக்கா இல்ல மாட்டுக்கு ஊத்திட்டாங்களான்னு தெரியலை. கேட்டு சொல்லவா?" என்று கூறியவளை கண்டு,

" இல்லை ஒன்னும் வேணாம். நான் கிளம்புறேன்" என்று பதறி கொண்டு வெளியேறப் போனவன் தயங்கி நின்றான்.

தான் கடத்தியப் பெண்ணே இப்பொழுது வீட்டின் மூத்த மருமகளாக, அன்னைக்கு சமமான உறவில் இருக்க, அவன் இதயத்திலோ இரும்பைக் கட்டிய உணர்வு.

தடுமாறி அவளை பார்க்க, அவள் பார்வையோ தமிழின் மீது தான் பதிந்திருந்தது.

அசராமல் பார்த்தவள். "என்ன கொழுந்து ஏதாவது வேணுமா?" இல்லை என தடுமாற்றத்துடன் தலையசைத்து விட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட, ஒரு பெருமூச்சுடன் சமையலறை செல்ல, அதுவரை கனகவள்ளியின் காதில் குசுகுசுத்துக் கொண்டிருந்த வாணி உடனே நகர்ந்து வேலையை கவனிக்க, நமட்டு சிரிப்புடன் அவரை நெருங்கியவள்.

"சின்னத்தை" என்று அழைக்க, " என்னமா" என்றார்.

" உதவி பண்ணவா? ".

"திவ்வியமா பண்ணு மா" என்றவர்.

கையில் இருந்த காய்கறிகளை அப்படியே அவளிடம் திணித்துவிட்டு அவர் ஓடிவிட எதுவும் பேசாமல்,வெளிக்கூடத்தில் அமர்ந்து காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.

சில நிமிடங்களிலே அவள் அருகே டம்ளர் வைக்கப்பட, அதில் ஒரு நொடி உள்ளம் தடுமாறினாலும் அதை தூசி போல் தட்டியவள்.அதனை எடுத்து பருக ஆரம்பித்தாள்.

இதமாக இறங்கிய தேநீர் கண்ணீரை வரவழைக்கும் போல் இருக்க அதை வைராக்கியத்துடன் ஒதுக்கி வைத்து விட்டு டீயை குடித்தவள்.

டம்ளரை கழுவி வைத்து விட்டு மீண்டும் வேலைகளை கவனித்தாள்.

வாணி சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்தவர்.

"கோலமும் போட்டாச்சா?" என்று அவளிடம் முனகலாகக் கேட்க, "அதெல்லாம். நல்லா இருக்கா?".

"எது" என்று அவர் புரியாமல் விழிக்க,

"கோலத்தை தான். ஆமா,நீங்க எதை நினைச்சீங்க " என்று விட்டு கண்ணை சிமிட்டியவளை கண்டு என்ன பேச என்று புரியாமல் விழித்து விட்டு அங்கிருந்து அகல,வாணியின் ஓட்டத்தைக் கண்டு கனகுக்கும் சிரிப்பு வர, "அக்கா இது நியாயமே இல்லை" என்றவர்.

பின் வாசலுக்கு வேலைகளைக் கவனிக்க சென்றார்.

அனைத்திற்கும் மீனாட்சியும் உதவ வேலம்மாள் பார்வையாளராக மட்டுமே இருந்தார்.

உண்ண வந்த ஆடலரசனும் அன்பரசனும், மீனாட்சியை கண்டு சங்கடமாக, அதை உணர்ந்து மீனாட்சி அகன்று கொண்டாள்.

ஆண்கள் இருவரும் வெளியேறியதும், வேலைகளை கவனிக்கிறேன் என்று செல்லப்போன இரண்டு அத்தையும் அமர வைத்து வடிவையும் அழைத்து அமர வைக்க,

வடிவோ அவளை சங்கடமாகப் பார்ப்பதும் தட்டை பார்ப்பதுமாக இருக்க, " இட்லி என்ன என் முகத்திலா இருக்கு. தட்டை பார்த்து சாப்பிடு".

வடிவு உடனே தலையை தட்டிற்கு கொடுத்துக் கொண்டாள்.

கோயிலுக்கு சென்று விட்டு வந்த குணவதியோ நால்வரையும் கண்டு விட்டு எதுவும் பேசாமல் செல்லப் போக, " பெரியம்மா நீங்களும் வாங்களேன் சாப்பிட "என்றவளை கண்டு பொடுப்பொடு என்று அவருக்கு வந்தது.

" நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன்" என்று சன்னமாக முனங்கிவிட்டு அவர் அங்கிருந்து செல்ல, வேலம்மாள் மகளுக்கு உணவை தட்டிலிட்டுக் கொண்டு சென்றார்.

உண்டு முடித்ததும் மீனாட்சி அனைத்தையும் ஒதுக்கி வைத்தாள்.

கனகு யோசனையுடன் அமர்ந்திருப்பதை கண்டு, " அரசனை வர சொல்லி கால் பண்ணுங்க அக்கா ".

" இல்லை போன் போக மாட்டேங்குது" என்று தளர்ந்து போய் கூறும் போதே தேனரசன் வந்து விட, தண்ணீர் எடுக்க எழுந்த கனகவள்ளியோ மீனாட்சி தண்ணீர் சொம்புடன் வருவதைக் கண்டு அப்படியே அமர்ந்து கொண்டார்.

"அக்கா ஒருவேளை உண்மையாவே விரும்பி இருப்பாங்களோ?" என்று வாணி காதை கடிக்க, கனகுக்கும் ஒரு நொடி அந்த எண்ணம் வந்து உடனே மகன் குணத்தை எண்ணி மறைந்தது.

வாணியை முறைக்க, " இல்ல அப்படி தான் இருக்கு " என்று முனங்க, கனகுவின் பார்வை இருவரின் மீது படிந்தது.

ஒரு நொடி தயங்கியவன். பிறகு தண்ணீர் சொம்பை வாங்கிக் கொண்டான்.

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன். குளிச்சிட்டு வாங்க " என்று அவள் சென்று விட, அவள் சென்ற திசையை வெறித்தவன்.

உடனே தன்னை பார்க்கும் தாயை கண்டு "சாப்பிட்டீங்களா?" என்று கேட்க,

" ஆச்சு" என்று மட்டும் கூறியவர். மௌனம் காத்தார்.

குளித்து உடை மாற்றி வந்து டைனிங் டேபிளில் அமர, அருகில் நின்று பரிமாறிய மனைவியை ஒன்றும் சொல்லவும் முடியாமல், அவளின் செயலை ஏற்கவும் முடியாமல் திண்டாடிப் போனான்.

' ஏன் இவள் இவ்வாறு இருக்கிறாள்' சட்னி பரிமாறியவளின் வளைக்கரத்தைப் பார்த்து எண்ணிக் கொண்டான்.

அளவான உணவோடு அவன் எழுந்து கொள்ள, கனகு ஒரு வித தவிப்போடு பார்த்திருக்க, நிறை டம்ளரில் கம்பங்கூலுடன் மகனை பின்தொடர்ந்தவளைக் கண்டதும் கனகுக்கும் முன்பே விரும்பி இருப்பார்களோ என்ற எண்ணம் வந்து போனது.

அவன் அறைக்குள் சென்று விட கதவை தட்டி விட்டு வாசலில் நின்றவளை புரியாமல் பார்த்தான்.

அவளை உள்ளே அழைக்க வேண்டும் என்று எண்ணமே இல்லை.

" என்ன வேணும் ".

"நீங்க சரியா சாப்பிட்ட மாதிரி இல்லை. அதுதான் கூழ் கொண்டு வந்தேன்".

"அதெல்லாம் வேண்டாம்".

"சரி" என்றவள். அறைக்குள் நுழைய அவளை அவன் அழுத்தமாக பார்த்தான்.

"கொஞ்சம் டிரஸ் வாங்கணும் கடைக்கு கூட்டிட்டு போறீங்களா? அத்தான்" அத்தானில் அவள் தந்த அழுத்தத்தில் அவன் நெஞ்சில் பாரம் ஏறியது.

" சரி ரெடியாகு".

"இல்லை. சாயந்திரம் போலாம்".

' அப்புறம் எதுக்கு கேட்ட' என்ற கடுப்போடு அவளைப் பார்க்க,

"இந்த புடவையோட வெளியே வர முடியாது. என்னோட புடவையை துவைச்சு போட்டு இருக்கேன். அது காயவும் போலாம்.சாயந்திரம் வந்துருங்க".

அதற்கு என்ன பதில் சொல்ல என்று தலையை மட்டும் சம்மதமாக அசைக்க,அவளோ கூழை அங்கேயே வைத்துவிட்டு செல்ல, அவள் வெளியேறும் இறுதி நொடியில்,

" ஏன் நேத்து அப்படி சொன்ன" என்றான்.

தெரியாதது போல் எல்லாம் அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அவனை புன்னகையுடன் நோக்கியவள்.

"உங்களைப் பார்த்ததும் தொப்புக்கடீர்ன்னு விழுந்துட்டேன். அதான் அத்தான் " என்று விட்டு அவள் சென்றுவிட, நெற்றியை தேய்த்துக் கொண்டவனுக்கு அவள் கூற்றில் உண்மையே இல்லை என்பது புரிந்தது.
 
Top Bottom