• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
கண்ணை மூடி இருந்த புத்தரின் சிலையை பார்த்துக் கொண்டே இருந்தாள் மீரா.அவளை அறியாமல் மனதுக்குள் ஏதோ ஒரு அமைதி பரவியது.சில விஷயங்களை புரியாமல் இருப்பது நல்லது.இந்த உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் புரிந்து என்னதான் செய்யப் போகிறோம்.நடக்கும் சம்பவங்கள் ஒன்றும் அவ்வளவு நல்லதாக இல்லையே.கடவுள் படைத்ததை தவிர மற்ற எல்லாமே மனிதனின் சுயநலம் தான்.ஒவ்வொருவரும் தன் சுயநலத்துக்காக ரத்தத்தை கூட குடிப்பார்கள் போல.இந்த நாட்டை விடவா நரகம் கொடுமையாக இருக்கப் போகிறது.கோர்வையே இல்லாத எண்ணங்கள் தோன்ற அவள் கண்களை இறுக மூடினாள்.

மீரா…..மாலாம்மா அவளை அழைப்பது தெரிந்தும் அவள் கண்களை திறக்கவில்லை.ப்ளீஸ் மாலாம்மா நான் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கேன்.பசிச்சா நானே வருவன் என்றாள்.மாலா அவளை சாப்பிட கூப்பிடுகிறார் என்று அவளுக்கு தெரிந்ததால் தான் இப்படி சொன்னாள்.இப்போது எதைப் பற்றியும் நினைக்கும் மனநிலையில் அவள் இல்லை.இந்த கண்களை மூடி இருக்கும் அமைதிதான் அவளுக்கு பிடித்திருந்தது.

அதற்கு ஏற்றால் போல சிலு சிலுவென்று அடித்து காற்று அவளை கண்களை திறக்க விடாமல் பண்ணியது.எப்போது இதெல்லாம் முடிவுக்கு வரும் என்று யாருக்கு தெரியும்?நாளைக்கு எப்படியும் வீட்டிற்கு போய்விடலாம் என்ற சந்தோஷத்துடன் அவள் காலையில் இருந்த மனநிலை வேறு. இப்போது இருக்கும் மனநிலையில் வேறு.தனது நிலை குறித்து கடவுளிடம் கூட மன்றாட அவளுக்கு விருப்பமில்லை.

மீரா…….
ம்ம்ம்…முனகலுடன் கண்களைத் திறந்தாள்.அவள் நீண்ட நேரமாக தூங்கி இருக்கிறாள் என்று இருட்ட ஆரம்பிக்கப் போகும் வானம் சொல்லியது.கைகளில் சாப்பாட்டு தட்டுடன் மாலம்மா கெஞ்சுவது போல் நின்றது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.காலையில் அவருடன் ஆட்டோவில் வரும்போது எங்க போறோம் என்று எந்த வார்த்தையும் அவள் கேட்கவில்லை.அவரும் சொல்லவில்லை.சாவியை எடுத்து உரிமையாக திறந்து அவளையும் உள்ளே அழைத்து போதுதான் தெரிந்தது கொண்டாள் அது அவர் வீடென்று.

அந்த வீட்டில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இருக்கவில்லை.களிமண்ணால் கட்டப்பட்ட ஒற்றை அறை வீடு.அந்த வீட்டிற்கு முன்னே இரு பக்கமும் திண்ணை இருந்தது.அந்த வீட்டின் பருமனை விட திண்ணை விசாலமாக இருந்தது.மீரா அதில் அமர்ந்து கொண்டாள்.அந்த வீட்டிற்கு சரியாக நேரெதிரே நின்ற மிகப்பெரிய மரத்தில் புத்தரின் சிறிய சிலை உருவம் இருந்தது.அந்த வீட்டைச் சுற்றி எல்லா மரக்கறிகளும் இருக்கும் போல.பசுமையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்தது.

மாலம்மா கொண்டு வந்த இளநீரை குடித்தவள் நல்லாயிருக்கு என்றாள்.எல்லாமே மிக நேர்த்தியாக இருந்த அந்த சூழல் அவளுக்கு மிகவும் பிடித்து போனது அதிலும் கண்களை மூடி தியானத்தில் இருக்கும் அந்த புத்த பெருமானின் முகத்தில் தெரிந்த அமைதியை பார்த்தவாறு சுவற்றில் தலை சாய்த்து கண்ணயர்ந்து விட்டாள்.

கிணற்று நீரினால் நிறைக்கப்பட்ட அந்த களிமண் தொட்டியில் முகம் கழுவியவளுக்கு ஊர் ஆற்றில் குளித்த ஞாபகம் வந்தது.தண்ணீர் அவ்வளவு குளிர்மையாக இருந்தது.எல்லாமே மறக்கறி வகையாக இருந்த அந்த சாப்பாட்டுத் தட்டை வாங்கினாள்.அது அவள் நினைத்ததை விட அவ்வளவு ருசியாக இருந்தது.

மாலாவின் கனிவான பார்வையில் என்ன?? ஏதும் பிரச்சினையா என்று கேட்டாள்.இப்போது ஓரளவு சிங்களம் புரியுமளவிற்கு மீரா முன்னேறியிருந்தபடியால் பதிலுக்காக மாலாவின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரொஷான் சார் வந்து சொல்லுவார்.பிரச்சினை உனக்கு வராது.என்று நிறுத்தி நிறுத்தி அவர் பேசியதால் கொஞ்சம் விளங்கியது.இதற்குப் பிறகு வேறு கேள்வி கேட்க அவளுக்கு தோன்றவில்லை.சரி என்று அவளும் முடித்துக் கொண்டாள்.ஆனால் ஏதோ ஒன்று அவளை சுற்றி நடந்து கொண்டிருப்பதை மட்டும் உள்ளுணர்வு சொன்னது.நான் கேள்வி கேட்டால் மட்டும் எதுவும் மாறிவிடப் போகிறதா என்ன. சரி பொறுமையாக தான் இருந்து பார்ப்போமே என்ன நடக்கப் போகிறது என்று.தன்னையே அவள் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அவளிடம் இல்லை.

இரண்டு பேர் தூங்க வசதி குறைவு என்பதால் மீராவை உள்ளே தூங்க சொல்லிவிட்டு மாலா திண்ணையில் தூங்கினார்.அவள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.கனமான போர்வையை மெழுகிடப்பட்ட களிமண் தரையில் விரித்து தயார்படுத்திய அந்தப் படுக்கை விரிப்பு மீராவுக்கு அவ்வளவு இதமாக இருந்தது.புத்தரின் சிலைக்குப்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த விளக்கிலிருந்து வந்த மெல்லிய ஒளி அந்த அறையை நிரப்பியது.யோசிக்க நேரமே கொடுக்காமல் நித்திரா தேவி அவளை அணைத்துக் கொண்டாள்.

அடுத்தநாள்

காலைகாற்றின் வாசத்தை தனக்குள் நிரப்பியபடி சூரியனை நோக்கி திரும்பக் காத்திருந்த அந்த சூரியகாந்தி பூவையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.உண்மையாக இது சூரியனை நோக்கி திரும்புமா?கேள்விப்பட்டிருக்கிறாளே தவிர ஒரு நாளும் அதை பார்த்ததே இல்லை.சூரியனின் ஒளிக்கதிர் இன்னும் முழுமையாக படராத அந்த விடிகாலையிலேயே மீரா குளித்து விட்டாள்.காரணம் அந்த களிமண் தொட்டியில் நிரப்பி இருக்கும் நீரில் எப்படியாவது குளித்து விட வேண்டும் என்று அவள் நேற்றே நினைத்திருந்தாள்.ஏனோ தெரியவில்லை இந்தக்காலை அவள் மனதுக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தது.இன்று நமக்கு நல்லது நடக்கப்போகுது போல.

காற்றில் உலரவிட்ட அவள் நீளக்கூந்தலை அள்ளி முடியும் போது அவளுக்கு மிகவும் பரிச்சயமான அந்த ஹாரன் ஒலி மிக அருகில் கேட்டது.அவனது வருகையை அந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை.தெரிந்திருந்தால் இப்படி அவசரமாக கூந்தலை அவிழ்த்து முன்னே போட்டிருக்கமாட்டாள்.கொடியில் விரித்துக் கிடந்த அவளது துப்பட்டாவையே போட்டிருப்பாள்.

அவளது செய்கைகளை பார்த்துக்கொண்டே அவளருகில் அவன் வந்தான்.இரண்டெட்டு பின்னே நகர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் மீரா.சே…இப்படிப் பக்கத்துல வாரான்.

“மாலாம்மா இல்லியா?”

“இல்ல… பக்கத்துல எங்கயோ போயிருக்காங்க.” இதைத் தவிர்த்து வேறென்ன பேசுறது.

இங்கருந்து போகலாம் என்றால் அவன் பார்த்திருக்க அவளால் அவ்வளவு தூரம் நடக்கமுடியாது.ஒரு மாதிரியாக இருந்தது.இப்படியே எவ்வளவு நேரம் நிற்பது? அவன் பார்வை முழுவதும் அவளையே மொய்த்துக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.

“நான் இன்டைக்கி வீட்ட போகலாமா? அவனை பார்க்கும்போதெல்லாம் கேட்கும் வழமையான கேள்வியை கேட்டாள்.அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே மாலாம்மா வந்து விட்டார்.அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றதும், மீரா பின் தொடர்ந்தாள்.
அவர் தயாரித்துக் கொடுத்த தேநீரை மிக மெதுவாக குடித்துக் கொண்டிருந்தான் ரொஷான்.அவர்களிருவரும் சுத்தமான சிங்களத்தில் உரையாடுவது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்த அவனை முறைத்துப் பார்த்தாள்.

“மீரா….சில விஷயங்கள் நம்மட வாழ்க்கையில தவிர்க்க முடியாத சம்பவமாக மாறும்.அது மாதிரி ஒரு சம்பவம் தான் இன்றைக்கு நடக்க போகுது.இதை விட்டா உங்கள காப்பாற்ற வேற வழி எனக்கு தெரியாது.தெரிந்தோ தெரியாமலோ என்ன நம்பி இவ்வளவு தூரம் நீங்க வந்த பிறகு உங்க உயிர் உடல் இரண்டுக்கும் நான் தான் பாதுகாப்பு.என்னோட தொழிலும் கூட அதுதான்.உங்கள பத்திரமாக வீடு போய் சேர்க்க வேண்டியது என்னுடைய கடமை.நிச்சயமா அதை நான் செய்வேன்.இந்த புத்தர் சாட்சியா சொல்றேன் நம்புங்கள்” என்றான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவன் பார்வையிலும் பேச்சிலும் நேர்மை இருந்தது.அவன் பேசியது கூட அவளுக்கு முழுதாக விளங்கவில்லை.ஆனாலும் தானாகவே “சரி”என்றாள்.மாலாம்மா கண்ணீர் மல்க அவள் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து அனுப்பினார்.இதெல்லாம் எதற்கென்று அவளுக்கு அப்போது புரியவில்லை."உங்கள பத்திரமா வீடு கொண்டு போய் சேர்ப்பது என்னோட கடமை" என்று அவன் சொன்ன கடைசி வார்த்தை மட்டும் அவளை எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் அவனை பின்தொடர வைத்தது.

அந்த ஜீப் பயணம் முழுவதும் ரொஷானின் பார்வை அவளைத் தீண்டவே இல்லை.அவன் தன்னை எங்கே அழைத்துப் போகிறான் என்று கூட அவளுக்குத் தெரியாது.அமைதியான அந்தப்பயணம் காலை 9 மணிக்கு முடிவுக்கு வந்தது.அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவள் திருமதி மீரா ரொஷான் அபேவர்த்தன என பெயர் மாற்றப்பட்டிருந்தாள்.
*************

மீரா அழுது அழுது அவள் கண்ணிமை வீங்கியிருந்தது.
கண்களை கஷ்டப்பட்டு பிரித்தவளுக்கு அப்போதுதான் சுயநினைவு திரும்பியது போலிருந்தது. நேற்று நடந்ததை நினைத்துப்பார்த்தாள்.ஜீப்பின் கதவைக் கூட மூடவில்லை.வாசலில் நின்ற மாலாவை கவனிக்காமல் உள்ளே வந்தவள் அவளது அறைக்குச்சென்று கதவை மூடினாள்.மாலா எவ்வளவு கூப்பிட்டு பார்த்தும் அவள் அன்றைய நாள் முழுவதும் கதவைத் திறக்கவே இல்லை.

கடவுளே என்னுல உனக்கு இரக்கமே இல்லையா? உனக்கு என்ன பிடிக்கலைன்டா சாகடிச்சிடு.
அதவிட்டு இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துவியா? அப்பா….. நான் என்ன செய்றதுன்டே எனக்கு தெரியில்ல.நான் சொல்றதெல்லாம் நம்புவிங்களா? முகத்தை மூடிக்கொண்டு சத்தமில்லாமல் குழுங்கி அழுதது நினைவுக்கு வந்தது.அப்படியே தூங்கிட்டன் போல.

அவள் கதவை திறந்து வெளியே வந்ததும் தாமதம் மாலா வேகமாக அவளை அணைத்துக் கொண்டார்.அவர் கண்களில் அவ்வளவு பதட்டமிருந்தது.நேற்று முழுக்க அவர் ஹாலிலேயே தூங்கி இருக்கிறார் என்று தரையில் போடப்பட்டிருந்த தலையணையை பார்த்து புரிந்து கொண்டாள்.உள்ளே ஓடிச் சென்று அவசரமாக ஒரு டீ யுடன் வெளியே வந்தவர் அவளைக் குடிக்குமாறு வற்புறுத்தினார்.நேற்று காலையிலிருந்து அவள் எதுவுமே சாப்பிடவில்லை.

மீராவுக்கு இவர் மீது கோபப்படுவது அனாவசியமாகப்பட்டது.எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத அந்த உறவு அதுவும் சிங்களவர் வேறு. அவள் மீதும் அவர் காட்டும் பாசம் அவளை நெகிழ வைத்தது.அவள் சித்தி கூட இப்படியில்லையே.பல்லைக்கூட விளக்காமல் அதை வாங்கிக் குடித்தாள் மீரா.

தன் வாழ்க்கையில் இனி விடிவே இருக்காதா?இப்படி அழுது கொண்டே இருப்பது தான் என் தலையெழுத்தா?அவளுக்கு அவ்வளவு சலிப்பாக இருந்தது.அவளது அப்பா பாட்டி தூரப் போய்விட்டதாக மனதுக்குள் உணர்ந்தாள்.பாட்டி, ஒரு சிங்களவர் என்னை கல்யாணம் பண்ணிட்டார் இது தெரிஞ்சா நீங்க என்ன செய்வீங்க? என மனதால் நொந்து கொண்டிருந்தாள் மீரா.

ஆம்.நேற்று சட்ட ரீதியாக அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.
அவனோடு அவள் ஜீப்பில் இருந்து இறங்கும்போது பலத்த மரியாதைகளுடன் அவன் அழைத்து செல்லப்பட்டான்.ராணுவ உடையில் நிறைய பேர் அங்கே நின்று கொண்டிருந்தனர்.காவி உடை அணிந்திருந்த சிங்களத்துறவி ஒருவர் நின்றிருந்தார்.அவர் முகத்தில் அப்படி ஒரு சாந்தம் இருந்தது.ரொஷான் அவரைக் கண்டதும் தலைக்குநேரே கைகூப்பி வணங்கினான்.மீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது.அவர் சிங்கள மொழியில் ஏதோ மந்திரம் போல் ஓதிக் கொண்டிருந்தார்.
எல்லோரும் அமைதியாகினர்.

எல்லாவற்றையும் யாருக்கோ வந்த விருந்து போல் சற்று தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீராவை ரொஷான் அழைத்தான்.

“இது எல்லாருக்கும் தெரியிற மாதிரியான ஒரு திருமணப் பதிவு.இது வெறும் சடங்குக்காக மட்டும்தான்.லெப்டினன் ஜெனரல் எல்லாருமே வந்திருக்காங்க.வந்து சைன் பண்ணுங்க” என்றான்.

அவளையும் அந்தப் பிக்குவையும் தவிர அங்கிருந்த அத்தனை பேரும் ராணுவ சீருடை அணிந்திருந்தனர்.
மீராவிற்கு மறுக்க முடியாத சூழலாக இருந்தது.இந்த நாடகம் எதற்கு என்று கேட்கக் கூட துணிவு வரவில்லை.அத்தனை பேரும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அவன் சொன்னதை அவளும் இயந்திரமாக பண்ணினாள்.

அதன் பிறகு யாரோ சிலர் வாழ்த்து சொன்னனர்.சிலர் முறைத்தனர்.
சத்தியமாக இப்படி ஒரு சம்பவத்தை அவள் எதிர்பார்த்து வரவில்லை.
அப்படி என்றால் அவளுக்கு திருமணம் நடந்து விட்டதா என்ற கேள்வி மட்டுமே இருந்தது.

இப்போது நினைத்து பார்த்தால் கூட அவளுக்கு பதறியது.அவள் பாட்டி எவ்வளவு சடங்கு சாங்கியம் பார்ப்பவர்.அப்பா இதெல்லாம் சொன்னார் தாங்குவாரா? இப்படி ஒரு சம்பவம் எதற்காக நடந்தது? இதற்கு பதில் அவன் சொல்லித்தான் ஆக வேண்டும்.தனக்கு யாருமே இல்லை என்று அவனாகவே ஒரு முடிவு எடுத்தானா? ரொஷான் மீது கோபம் அவளுக்கு பன்மடங்காக பெருகியது.

மாலா அன்றும் வீட்டுக்கு போகவில்லை.மீரா 10 மணிக்கு மேல் ஆகியும் தூங்காமல் ரொஷானின் வருகைக்காக காத்திருந்தாள்.அவன் வந்தது தான் தாமதம் நீங்க எதற்காக இப்படி எல்லாம் முடிவெடுத்த? நீங்க என்ன கடத்தி வச்சிருக்கீங்க?நான் வீட்டுக்கு போகனும்.நீங்க சொல்றதெல்லாம் பொய்.நான் இனி உங்களை நம்ப மாட்டேன்.நான் இப்பவே தனியா போறேன் என்று வெளியேறினாள்.

அவள் கையைப் பிடித்தவன் ஏறத்தாழ கெஞ்சினான் என்றே சொல்ல வேண்டும். “இங்க நிலவரம் ஒரு கிழமைக்கு ரொம்ப மோசமா இருக்கும். இப்ப தனியா போனா நான் செஞ்சதெல்லாம் வீணா போய்டும்.உங்கட பாதுகாப்புக்காகத் தான் நான் செய்தன்.ப்ளீஸ்….. ப்ளீஸ் மீரா.கொஞ்சம் பொறுங்க.வீட்டுக்கு நானே கூட்டிப் போய்விடுவன்” என்றான்.

எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவன்.அவன் ஒரு பார்வை பார்த்தாலே போதும்.அவ்வளவு பயம் வரும்.அப்படிப்பட்டவன் மீராவின் முன்னால் கெஞ்சுவதை புதுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் மாலா.இந்த ரொஷான் அவருக்கு முற்றிலும் புதிது.

குழந்தையைப் போல மீரா தேம்பித்தேம்பி அழுதாள்.
அப்போதைக்கு அவன் பேச்சை நம்புவதா இல்லையா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
அவளை நெருங்கியவன் பின்னர் மாலாவை கண்களால் சாடை செய்துவிட்டு சொல்லொண்ணாத கவலை முகத்துடன் அவனது அறைக்குச்சென்றுவிட்டான்.
 
Top Bottom