• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 23

நிதனிபிரபு

Administrator
Staff member
ஐடின்டி கார்ட் இல்லாமல் யாரும் பக்கத்து வீட்டுக்குக்கூட வெளியேறப் பயப்படும் காலமது.மீராவின் மொத்த ஆவணங்களும் அன்று முகாமில் நடந்த விபத்தில் எரிந்துவிட்டது.இன்று அவளிடம் எதுவுமேயில்லை என்றாலும் கட்டாயமாக ஐடி கார்ட் தேவை.அவளுக்கு அந்தக் கவலை இல்லாவிட்டாலும் ரொஷானுக்கு அதன் முக்கியம் எவ்வளவென்று நன்றாகத்தெரியும் என்றபடியால் ஐடி கார்ட் எடுக்க அவளை கொழும்புக்கு அழைத்தான்.அங்கே சென்றால் அவனுடைய அறிமுகத்திற்கு உடனடியாகவும் அவளுக்கு எடுத்துவிடுவான்.

ஆனால் மீரா “நான் எங்கயும் வரமாட்டன் என்றாள்.அவனுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்கு குழப்பமாகவே இருந்தது.ஊரறிய அவன் கணவன் தான் என்றாலும் அந்த உரிமையை எடுக்கவும் கொடுக்கவும் ஏதோ ஒன்று அவளைத்தடுத்தது.
ரொஷானை வெறுப்பதற்கு எந்தக்காரணமும் அவளிடம் இல்லை.ஆனாலும், முகத்தை உம்மென்று வைத்தபடிதான் பேசுவாள்.

“பேபி…இங்க ஜடி கார்ட் தேவை.அது இல்லாட்டி கஷ்டமாகும் பேபி.ரெடி ஆகுங்க.பத்து மணிக்கு பஸ் இருக்கு” என்றான்.

அவளுக்கு கோபமாக வந்தது.
“நான்பாட்டுக்கு இவ்வளவு நாளும் ஃப்ரீயா இருந்தன்.வந்துட்டான் ரூல்ஸ் பேச”.எட்டு மணிக்குப்பிறகே எழுந்து பழகியவளுக்கு ஆறுமணிக்கு அவளை எழுப்பி கொழும்பு போகனும் என்று சொன்னால் எப்படிக்கடுப்பாக இருக்கும்? பக்கத்தில் வந்து தூங்கிவிடுவானோ என்ற பயத்திலேயே பாதி இரவு அவள் தூங்கவில்லை.காலையில் வந்த உடன் தூங்கியவன் இரவு ஏழு மணி வாக்கில் எழும்பியதால் என்னவோ தூங்காமல் டீவி பார்த்துக்கொண்டே இருந்தான்.இடைக்கிடையே அவன் கைபேசியில் பேசுவதும் கேட்டது.மீரா அவனைப் பார்த்துக்கொண்டே ஒருகட்டத்தில் தூங்கிப்போனாள்.

ஆறுமணிக்கு அவளை உலுக்கி எழுப்பியவனின் கையை தட்டிவிட்டு திரும்பிப்படுத்தவளை அவள் இரு பக்கமும் கையை ஊன்றி குனிந்து அவள் காதோரக்கூந்தலை ஒதுக்கி “பேபி…” என்று மென்மையாக அழைக்கவும் திடுக்கிட்டு எழும்பி இருந்தாள்.

“என்ன…??” கண்களை உருட்டிக்கொண்டே கேட்டவளை சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தவன் அதன்பிறகுதான் எழுப்பியதற்கான காரணத்தை சொன்னான்.அவன் சொல்லி முடிக்குமுன்னே பட்டென்று “நான் வரமாட்டேன்” என்றாள்.மீண்டும் அவன் அழைக்கும் போது அந்தக்குரலில் அதிகாரமோ கோபமோ துளியும் இருக்கவில்லை.ஆனாலும் அவன் குரலுக்குக் கட்டுப்படத்தோன்றியது.

காமு பாட்டியிடம் சொல்லிவிட்டு இருவரும் வெளியேறினார்கள்.
பையில் இரண்டு நாளைக்குத் தேவையான துணிகளை அவன் வைக்கச் சொல்லியிருந்தான்.துளி சிரிப்பும் இல்லாமல் அவனுடன் பஸ் ஏறினாள் மீரா.இருப்பதற்கு இருக்கையே இல்லை.கூட்டமாக இருந்தது.ஏற்கனவே முற்பதிவு செய்திருந்தால் சீட் கிடைத்திருக்கும். இப்போது நின்று கொண்டே வரும் நிலமை.கன்டெக்டர் போதாக்குறைக்கு இன்னும் இன்னும் ஆட்களை ஏற்றிக்கொண்டே இருந்தான்.
மீரா நெருக்கமாக இருக்கும் எந்த இடத்திற்கும் போகமாட்டாள்.
கேம்பஸ் காலங்களில் கூட
கூட்டமாக இருக்கும் பஸ்ஸில் ஏறுவதேயில்லை.

வெற்றிலை நாற்றம் ஒரு பக்கம்,வியர்வை நெடி ஒரு பக்கம் என அவளுக்கு அருவெறுப்பாக இருந்தது.அவளுக்குப் பக்கத்திலே நின்றிருந்த ரொஷானின் டீசர்ட்டிலிருந்து வந்த பர்ஃபியூம் வாசத்தோடு ஒன்றி நிற்பதைத்தவிர வேறெந்த வழியுமில்லை.சீட் ஒன்றின் கம்பியை பிடித்துக் கொண்டு நின்றவளைச் சுற்றி இருகைகளையும் வைத்திருந்தான் ரொஷான்.யாரும் அவளை உரசமுடியாதது போல் அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக நின்றாள் மீரா.

ஒவ்வொரு ஊர் வரும்போதெல்லாம் ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள்.கூட்டம் குறைந்து அவளுக்கு மட்டும் இருப்பதற்கு சீட் கிடைத்தது.சோதனைச்சாவடிகள் வரும்போதெல்லாம் மீராவுக்கு பகீர் என்றது.அப்போதுதான் ஐடி கார்ட்டின் தேவையை உணர்ந்தாள்.ரொஷான் யாரென்று தெரிந்ததும் மீராவுக்கு பெரிதாகக் கேள்விகள் வரவில்லை.மூன்று மணி நேரமாக நின்று வருபவனைப் பார்க்க மீராவுக்கு பாவமாகத்தான் இருந்தது.அவளுக்குப்பக்த்தில் இருந்த பெண் இறங்கியவுடன்தான் ரொஷான் அமர்ந்தான்.
சாதாரணமாக என்றால் இன்னேரத்திற்கு கொழும்பு போயிருக்கலாம்.அதிகமான சோதனைச்சாவடிகளால் இரவு ஏழுமணி தாண்டியும் பயணம் முடிந்தபாடில்லை.

“மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே….” என்று ஒலித்த பாடலில் மீரா அவளையறியாமல் ரொஷானைப் பார்க்க அவனோ குனிந்து, என்ன பேபி? என்று கேட்டான்.அவளுக்குப்பிடித்த ஜன்னலோரம்,வெளியே அடித்த குளிர் காற்று, அந்தப்பாடல், மென்மையான அவன் குரல், எல்லாம் சேர்ந்து அவளுக்குள் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த அவன் தோளில் சாய்ந்து கண்மூடி உறங்கியே போனாள்.அவனும் அவளைச்சுற்றி கைகளால் அணைத்துக்கொண்டான். அந்தப்பயணம் நீளாதா? என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது?.

கோல் ஃபேஸை அண்டியிருந்த அந்த உயர்ரக நட்சத்திர ஹாட்டலை கண்களை உருட்டி உருட்டி பார்த்தாள் மீரா.இங்கயா தங்கப்போறோம்? அவள் கொழும்பு வந்திருக்கிறாள் தான்.ஆனால் இந்தமாதிரி இடத்திற்கெல்லாம் போனதேயில்லை.
குழந்தையைப்போல் வேடிக்கை பார்த்துக்கொண்டே அவன்பின்னே சென்றாள்.வெண்ணிறத்தில் பளீரென்றிருந்த அந்தப் பெரிய அறை பார்க்கவே அழகாக இருந்தது.திரைச்சீலைக்குள் மறைந்திருந்த கண்ணாடிக்கதவைத் திறந்தால் குட்டியாக ஒரு பால்கனி இருந்தது.தூரத்தில் தெரிந்த அந்தக்கடற்கரையும்,இருளை மிஞ்சிவிடும் ஆடம்பர விளக்குகளும்,வேகமாகச் செல்லும் வாகனங்களும் பார்க்கவே வித்தியாசமாகத் தெரிந்தது.
ஃப்ரெஸ்ஸாகிவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வந்தவள் வெளியே வேடிக்கை பார்த்துநின்றாள்.

அறையின் ஏசிக் குளிரை காட்டிலும் கடலைத்தழுவிய வெளிக்காற்று இதமாக இருந்தது.வெள்ளை நிற புல் ஸ்லீவ் டீசர்ட்,கறுப்புநிற தொள தொள ஜீன்ஸ் காற்றோடு சண்டையிடும் விரிந்த கூந்தல் என அவள் நின்ற விதம் பின்னால் நின்ற ரொஷானை காந்தமாக அவள்புறம் இழுத்தது.

“பேபி…பசியில்லியா? என்ற அவன் குரலில் திரும்பிப்பார்த்தவள்,

“ம்ம்ம் ப.. பசிக்கிது..”

“என்ன வேணும்?”

“எது சரி சாப்பிடலாம்.”

அவன் பார்வை அவளை அலசி எடுப்பதை உணர்ந்தவளுக்கு கூச்சமாக இருந்தது.அவன் பார்வையை அவளால் தாங்க முடியவில்லை.

“இங்கயா? இல்ல..கீழ போய் சாப்பிடலாமா?” என்று கேட்டான்.

கீழ போக வேண்டுமென்றால் உடைமாற்றவேண்டும்.நினைக்கவே அலுப்பாக இருக்க,

“இங்கயே சாப்பிடலாம்” என்றாள்.அதன்படியே அவனும் வரவழைத்தான்.எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் மீராவுக்கு அவன் பக்கத்தில் இருக்கும் போதுமட்டும் பேச்சு மறந்தேபோகும்.சாப்பிட்டவள் அப்படியே உறங்கியும் போனாள்.காலையில் கண்விழித்தபோது அவன் கண்ணாடிக்கு முன்னின்று தலைவாரிக் கொண்டிருந்தான்.
உடனே எழுந்தமர்ந்து பக்கத்தில் பார்த்தாள்.இரவு அவன் தூங்கியதற்குரிய எந்தத்தடயமும் கட்டிலில் இல்லை.யோசித்தவளைப் பார்த்து,

“குட் மார்னிங்.நான் டி(D)பன்ஸ் ஆஃபிஸ் போயிட்டு வரனும்.நீங்க ரெடியாகுங்க.வந்து நாம போகலாம்.சாப்பாடு சொல்லிருக்கன் வரும்.டீ அங்க இருக்கு” என்றவனை இன்னும் யோசனையோடு பார்த்தாள்.

அந்தப்பார்வையில் அவனோ, அவளை நோக்கி எட்டுகள் வைக்க கட்டிலில் இருந்தவாறே மீரா பின்னோக்கி நகர்ந்தாள்.அவன் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் தெரிந்ததோ? பேசாமல் வெளியேறினான்.எதைப்பற்றியும் சிந்திக்காமல் சொன்னதைச் செய்தவள் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

அவளுக்கான ஐடி கார்ட் இரண்டு வாரத்தில் அனுப்புவதாக சொன்னார்கள்.பிறகு இருவரும் மதியம் வெளியே சாப்பிட்டார்கள்.
ரூமை காலி செய்துவிட்டு வெளியேறும் போது எதிரே அநியாயத்திற்கு அழகாக ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.முழங்கால் வரைக்கும் கிழித்துவிடப்பட்ட நீளமான பாவாடை,உள்ளாடை தெரிய மிக மெல்லிய துணியில் வெள்ளை சட்டை. (மீராவின் பாஷையில்) போதாக்குறைக்கு முன்னால் இரண்டு பட்டனை திறந்துவிட்டிருந்தாள்.

ஹேய்…..ரொஷான்? ஆச்சர்யமாய் சிரிப்புடன் ஓடி வந்து அவனை இறுகக்கட்டிக்கொண்டு அவன் கழுத்தில் தொங்கியவளை வெறுப்பாகப் பார்த்தாள் மீரா.

அவனும் ஒரு கையால் அவளை அணைத்துப் பிறகு விலக அரும்பாடுபட்டுப் போனான்.

விது??? ஒயா கொஹெத மென்ன? அவளை அங்கே பார்த்ததில் அவனுக்கும் ஆச்சர்யம்தான் போல.

இருவரும் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கப் பார்க்க மீராவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அந்த இடத்தில் தேவையில்லாத ஒருத்தியைப்போல் உணர்ந்தாள்.விது அவன் கைகளைப்பற்றறிக் கொண்டும் அவன் முடியை கோதிக்கொண்டும் பேசும்போதெல்லாம் ரொஷானை முறைத்துப்பார்த்தாள்.அவன் அவளைப் பார்க்கவே இல்லை.அவர்கள் பேசுவதை அவளால் புரிந்து கொள்ளவே முடியாதது வேறு மீராவை இன்னும் சூடாக்கியது.தன்னை விது வேண்டுமென்றே கண்டுக்கவில்லை என மீராவுக்குப் புரியாமலில்லை.
எம்பி ரொஷானின் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றவளை ரொஷான் வழியனுப்பிவைக்க மீராவோ எதிர்பாராத அந்த முத்தத்தில் வாய்பிழந்து நின்றாள்.

கோல் ஃபேஸ் பீச் தவிர வேறெந்த இடத்திற்கும் போக வாய்ப்பில்லாமல் போனது.காரணம்,அப்போது ரொஷானுக்கு விடுதலைப்புலிகள் பொதுஇடங்களில் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஆயத்தமாகி உள்ளதாக ரகசியத்தகவல்கள் கிடைத்திருந்தன.இதனால் நிறையப்பகுதிகளில் பாதுகாப்பு அதி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
சும்மாவே ஆயிரம் சோதனைச் சாவடி.இதுல இந்த செய்தி வேறயா? மீராவுக்கு பஸ் பயணம் வெறுத்துப்போனது.
அடிக்கொரு தடவை இறங்கவேண்டியிருந்தது.
பஸ்ஸில் ஏறியதிலிருந்து ரொஷான் பதட்டத்தில் இருப்பதாக மீராவுக்குத் தெரிந்தது.வரும் போது அவன் நடந்துகொண்டதற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசத்தை உணர்ந்தாள்.
அடிக்கடி அவனைப் பார்த்தாலும் அவனது பார்வை இவள் பக்கம் திரும்பவேயில்லை.

“விதுவை நினச்சிட்டு வாரான் போல.என் பக்கம் திரும்பவேயில்ல”.ஹோட்டலில் நடந்த முத்த சம்பவத்தை படையப்பா நீலாம்பரியைப் போல மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஓட்டிக்கொண்டு வந்தாள்.

வெளியே காற்றுடன் அடைமழை பெய்துகொண்டிருந்தது.அவள் ஜன்னலோரம் இருந்தபடியால் மழைச்சாரல் அவள் முகத்தையும் நனைத்தது.குளிரில் துப்பட்டாவை எடுத்து தோளை சுற்றிக்கொண்டாள்.
நச் நச்சென்று தும்மலும் வந்ததால் ஜன்னல் கண்ணாடியை அவள் மூட நினைக்கும் முன்னரே ரொஷான் அவள் பக்கம் சாய்ந்து மூடிவிட்டான்.

எதிலாவது அவன்மீது கோபத்தை காட்டிவிட நினைத்தவளுக்கு அவனது இந்த செயல் போதுமாக இருக்க அவன் மூடிய வேகத்தில் அவள் திறந்திருந்தாள்.அந்தக்காற்று மீராவுக்கு இன்னும் தும்மலை ஏற்படுத்தியது.ரொஷான் மீண்டும் எழுந்து கண்ணாடியை இழுக்க மீரா அவனை முறைத்துக்கொண்டே கண்ணாடியை அதிகமாகத் திறந்துவைத்தாள்.ரொஷானின் பார்வையோ லூசா..? என்பதைப்போல இருந்தது.

சாலையைக் கடக்கும் போது வந்த மெல்லிய வெளிச்சத்தில் மழைத்துளிகள் பட்ட மீராவின் முகம் பளபளத்தது.மூக்கை சுருக்கி கோபமாகப் பார்க்கும் போது,நுனி மூக்கிலிருந்த ஒற்றைத்துளி நளுவி அவள் இதழ் தொட முன்னர் ரொஷான் ஒற்றை விரலால் தொட்டுப்பார்க்க அவள் பட்டென்று தட்டிவிட்டாள்.’

“என்னத் தொடக்கூடாது.எனக்கு கோபம் வரும்” என்று விட்டு வெளியே வேடிக்கை பார்த்தாள்.மழைக்காற்று அவளை இம்சிக்க காட்டிக்கொள்ளாமல் விறைப்பாக இருந்தாள்.ரொஷான் மீண்டும் கண்ணாடியை இழுத்து மூடவும் அவள் கை வைக்கவும் சரியாக இருந்தது.ஆஆஆஆ……. கட்டை விரல் ஜன்னல் இடுக்கில் கண்ணாடியோடு சேர்த்து நசிந்திருந்தது.

“சாரி……சாரி பேபி. நோகுதா?? அவளை விட அவன்தான் வலியை பிரதிபலித்தான்.குறைந்தது இருபதிற்கு மேல் முத்தமிட்டிருப்பான்.
அவள் கையை இழுக்க அவனோ,

“ப்ளீஸ் பேபி….” என்று கெஞ்சி கொஞ்சி அவளுக்கு முத்த வைத்தியம் செய்துகொண்டிருந்தான்.
வலி மறைந்து மறந்து போக அவளுக்கே கேட்காத குரலில் “போதும்,நோகல்ல”என்றாள். அவனோ, என்ன கோபம் ? என்று கேட்டான். “அது ஒன்டுமில்ல” என்றுவிட்டு கண்ணாடியை மூடினாள்.விது கூட பேசாத.எனக்குப் பிடிக்கல்ல என்றா சொல்ல முடியும்.

பஸ்ஸில் கடும் இருளாக இருந்தது.அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.தஹட பங்க் என்று சொல்லப்படும் பதினெட்டு வளைவுகளைக் கொண்ட அந்த ஆபத்தான பாதையில் பஸ் மெதுவாக சென்றது.மீராவுக்கு எப்போதுமே இந்தப் பாதை என்றால் பயம்தான்.பஸ் பாதையை விட்டு விலகி நிறைய விபத்துக்கள் ஏற்பட்டு சம்பவங்கள் அதிகம் என்பதால் இந்த வளைவுகளில் பயணிக்கும் போதெல்லாம் கடவுளை வேண்டிக்கொண்டே இருப்பாள்.அமைதியாக சென்ற பஸ்ஸின் பின் கதவு நொடிக்கும் குறைவான நேரத்தில் திறந்து மூடுவதை மீரா நன்றாக உணர்ந்தாள்.காரணம் அவர்கள் இருந்ததோ, பின் கதவிலிருந்து இரண்டு சீட் முன்னால் என்பதால் குப்பென்று அடித்த குளிர்காற்றும் அதன் சத்தமும் கதவு திறந்ததை உணரமுடிந்தது.சட்டென்று திரும்பினால் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக எந்த அறிகுறியும் இல்லை.நிறைய இருக்கைகள் காலியாகத்தான் இருந்தது.தவிர,அனைவரும் நல்ல தூக்கம்.ரொஷான் ஃபோனில் தீவிரமாக எதையோ டைப் பண்ணிக்கொண்டிருந்தான்.
ஒருவழியாக பங்க் முடிய மீரா நிம்மதியானாள்.

அன்று சிங்களவர்களின் பெரஹெரா நடக்கும் தினம் என்பதால் கண்டி முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.அவள் கேம்பஸ் இருக்கும் போது மூன்று தடவை இந்த பெரஹெரா நடந்திருக்கிறது.அவளைத்தவிர எல்லாருமே பார்க்கப் போவார்கள்.மீராவுக்கும் ஆசைதான்.ஆனால் அப்பாவின் போகக்கூடாது என்ற கட்டளையை அவளால் மீறமுடியவில்லை.அன்று அவள் தோழிகள் சொல்லிக்கேட்ட அலங்காரங்களை இன்றுதான் நேரில் பார்க்கிறாள்.
ஆர்வமாக,இன்டைக்கி பெரஹெராவா??என்று கேட்டும் அவனிடத்தில் பதிலே இல்லை.ஃபோனை விட்டு கண்களை எடுக்கவுமில்லை.

“ஒருவேளை அந்த விதுக்குத்தான் மெசேஜ் பண்றானோ”.அவள் நினைத்து முடிக்கவில்லை பஸ் சர்ரென்ற சத்தத்துடன் நின்றதுதான் தாமதம் ரொஷான் வேகமாக எழுந்து பின்னால் செல்ல,பின் இருக்கையிலிருந்த ஒருவன் பாய்ந்துசென்று கதவைத்திறந்தான்.
அதற்கிடையில் ரொஷான் அவனது பின்னங்காலில் உதைக்க அவன் திறந்த கதவிலிருந்து கீழே விழுந்தான்.இதற்கிடையில் ஒரு ராணுவப்பட்டாளமே பஸ்ஸினுள் நுழைந்தது.மீரா கண்ணாடியைத் திறந்து ரொஷானைத் தேடினாள்.கீழே விழுந்தவனோ அங்குகிடந்த கல்லை எடுத்து ரொஷானின் தலையில் வீசியெறிந்துவிட்டு ஓடப்போக,அணிந்திருந்த சட்டையை ரொஷான் புறம் சுண்டி இழுத்து கழுத்தில் கைகளை போட்டு அசையாதவாறு இறுக்கிப்பிடித்தான்.
இழுத்த வேகத்தில் அவன் சட்டை பின்னால் கிழிய உள்ளே வயர்களால் பொருத்தப்பட்ட உள்ளங்கி தெரிந்தது. அத்தனை ராணுவங்களும் அவனை சுற்றிவளைத்துப் பிடித்து அதைக்களையப் போராட,மீண்டும் வேகமாக பஸ்ஸினுள் நுழைந்த ரொஷானின் முகத்தைப்பார்க்கவே மீராவுக்கு நடுங்கியது.

அங்கிருந்த அத்தனைபேரின் முகத்திலும் உயிர்பயம் தெரிந்தது.ஒரு சுற்று அனைவரையும் பார்த்தவன் பின்னிருக்கையில் அமர்ந்தவனை இழுத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.மீராவிற்கு பயத்தில் பூச்சி பறந்தது.விழுந்தவன் எழவேயில்லை.ஒரு ராணுவம் வந்து அவனைப்பிடித்து எழுப்ப அவன் வாய்க்குள் எதையோ அவசரமாக மென்று முழுங்கிக் கொண்டான்.
அதே வேகத்தில் வாயில் நுரைதள்ளி கண்கள் மேலே சொருகிப்போனது.
உள்ளேயிருந்த அத்தனை பேரையும் கீழே இறங்கச்சொல்லி ஒருத்தன் கத்திப்பேசினான். மீராவிற்கு கைகால் எல்லாம் நடுங்கியது.என்ன செய்யப்போறாங்க??என ஒரு நடுத்தரவதுப் பெண்மணி மீராவைக்கேட்க அவளோ தெரியாதே என அழுபவள் போல் பதிலளித்தாள்.அவர் உங்களோட தானே வந்தவர்.ராணுவமா? என ரொஷானைக்காட்டி குசுகுசுக்க, அங்கிருந்த ஒருத்தன் “பஹின்ன பஹின்ன” என பஸ்ஸில் அடித்தான்.

“நம்மள என்ன செய்யப்போறாங்க.பிழை செய்யல்லியே.பேக் எல்லாம் எடுத்துட்டு பயப்படாம இறங்குங்க.” என ஒரு பெரியவர் எல்லாருக்கும் ஆறுதல்சொல்லிவிட்டு முதலில் இறங்கினார்.

மீராவிற்கு ரொஷானிடம் செல்வதா இல்லை கீழே இறங்கி நடப்பதா என குழப்பமாக இருந்தது.அவனோ வெளியே தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.அனைவரிடமும் ஐடி கார்ட் கேட்கப்பட மீரா ஸ்தம்பித்துப்போனாள்.ரொஷானை நெருங்கவே முடியாதளவு ராணுவம் சுற்றிநின்றது.அவளது பையை ஒருத்தன் ஆராய இன்னொருவன் ஐடி கார்ட்டிற்காக அவளைப்பார்த்தான்.சுத்தமாகத் தமிழே தெரியாத அவனிடம் என்னவென்று சொல்லுவாள்.எதிரே நிற்பவனின் முகம் கோபத்தில் சுருங்க, என்ன செய்யப்போகிறானோ என்ற பயம் மீராவின் இதயத்துடிப்பை எகிறவைத்தது.

அவனுடன் இன்னொருத்தனும் சேர்ந்துகொண்டு அவளிடம் மாறி மாறிக்கேள்விகளைக் கேட்க, பதட்டத்தில் அவளுக்கு பேச்சே மறந்து போனது.அத்தனை பேரையும் தவிர்த்து ஒரு குற்றவாளியைப் போல மீராவை சுற்றிக் கேள்வி கேட்கவும் ரொஷான் வரவும் சரியாக இருந்தது. அவனைக்கண்ட உடனே ஓடிப்போய் அணைத்துக்கொண்டாள்.

நடுங்கிக்கொண்டிருந்தவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டவனின் குரல் கோபமாய் ஒலிக்க,முன்னின்றவனோ சமாவென்ன(மன்னிச்சிருங்க)
சார் என பலமுறை சொன்னான்.
பலத்த சோதனைகளுக்குப் பிறகு பஸ் கிளம்பத்தயாரானது.

பெரஹெரா ஊர்வலத்தை மையப்படுத்தியே இரண்டு பேரும் வந்திருக்கவேண்டும் என்ற சந்தேகங்கள் எழுந்தன.ஒருத்தன் இறந்துபோக பிடிபட்டவன் அடியின் தாக்கத்தில் அரைஉயிரில் இருந்தான்.மனித வெடிகுண்டு வடிவில் வந்தவனின் உள்ளங்கி பத்திரமாக செயலிழக்கப்பட்டிருந்தது.
ரொஷானின் வேகமான புத்திசாலித்தனமான செயலை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

ரொஷானின் நெற்றியிலிருந்து இரத்தம் வந்துகொண்டேயிருந்தது.
முதலுதவியாக கைக்குட்டையால் இறுகக் கட்டியியிருந்தாலும் இரத்தம் நின்றபாடில்லை.அவனை பஸ்ஸில் போக அங்கிருந்த ராணுவ வீரர்கள் விடவேயில்லை.ஹாஸ்பிடல் போய் மருந்துகட்ட ஜீப்பில் ஏற்றியிருந்தார்கள்.

அவன் கைகளுக்குள் ஐக்கியமாயிருந்த மீராவோ சுற்றிலும் என்ன நடக்குதென்று தெரியக்கூடாது என்பதற்காகவே கண்களை இறுகமூடியிருந்தாள்.
இனி அவன் பார்த்துக் கொள்ளுவான் என்ற அவள் ஆழ்மனதின் நம்பிக்கை அவள் அறியாமல் வெளிப்பட்டிருந்தது.
அவன் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால் என யோசிக்கும் போது இன்னமும் ரொஷானை இறுக்கமாக அணைத்தாள்.முதன் முதலாக அவனைப் பார்த்ததில் இருந்து இன்றுவரைக்கும் அவளைப் பாதுகாத்தே இருந்திருக்கிறான்.

“நான் இருக்கன்.பயப்படாதீங்க.”
அன்று சொன்ன அவனது வார்த்தை பொய்யில்லை.அவன் போதும் பார்த்துக்கொள்வான்.அவன் யார்? அவனது பூர்வீகம் எதுவுமே மீராவுக்குத் தெரியாது.ஆனால் அவனுக்குள் இருக்கும் ஒழுக்கம் தெரியும். மென்மை தெரியும். அன்பு தெரியும்..இடையில் எதுவும் தேவையில்லை.உலகமே எதிர்த்து வந்தாலும் தன்னவன் பார்த்துக்கொள்ளுவான் என்ற நம்பிக்கையை தவிர ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேண்டும்?
 
Top Bottom