• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 32

நிதனிபிரபு

Administrator
Staff member
சற்று மெலிந்திருந்தான். அடர்ந்திருந்த அவன் தாடி தவிர்ந்து அவன் இயல்பான தோற்றத்தில் மாற்றமில்லை.ஆனால் அவள் அப்படியில்லையே.முன்னையதை விட குண்டாய்,பெரிய வயிற்றுடன் அவன் உயிரை சுமந்து கொண்டிருக்கிறாளே.அவள் தோற்றத்தில் முற்றாக மாறியிருக்கிறாள்.

என்னை எதிர்பார்த்திருப்பானா? உள்ளே அவள் செல்லவில்லை. கதவின் நிலையை பற்றிக்கொண்டு நின்றாள்.அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்று மட்டும் சொன்னதால் அவளுக்குள் ஆயிரம் கற்பனைகள் தோன்றியது.அதில் ஒன்று தான் தன்னைப்பற்றிய நினைவுகள் மறந்திருப்பானோ என்ற சந்தேகம்.அப்படி மட்டும் நடந்தால் அதைத் தாங்கிக் கொண்டு வாழும் சக்தி இனியில்லை.அவள் மனதின் அயர்ச்சி முகத்தில் தெரிந்தது.ஆனாலும்,ஒரு தவம் போல அவனைத் தேடியலைந்ததின் ஏக்கத்தை விழிகளில் பிரதிபலித்தவாறே அவனை பார்த்தாள்.

பே…பே….பி, மீராரா?? அவள் இடையோடு சேர்த்து அணைத்தபடி சற்று நேரம் அப்படியே நின்றான்.அவன் இதயம் துடிக்கும் ஓசை மட்டும் அவளுக்குத் தனித்துக்கேட்டது.அவனது சூடான சுவாசத்தின் கதகதப்பில் கோழிக்குஞ்சாய் அவனோடு ஒன்றிக்கொண்டாள் மீரா.

அவள் முகமெங்கும் மிகமெதுவாய் முத்தமிட்டான்.அவனுக்குப் பேச ஆயிரமிருந்ததும் முடியவில்லை.
மீராவைப்பற்றி விது சொன்னதால் அவளைப் பார்க்க வேண்டுமென்று அப்படியொரு ஆர்வமாக இருந்தது.ஆனால் சில விதிமுறைகளை மீறி எதுவுமே அவனால் செய்ய முடியவில்லை.தன் குழந்தையை சுமந்திருக்கும் மீராவை கற்பனையில் நினைத்துக்கொண்டே இருந்தான்.இன்று மீரா வருவதாக விது சொன்னதும் அவனுக்கு வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வு.

கண் முன்னால் நிற்கும் அவன் உயிரானவள்.அவனில்லா நாட்களில் எப்படியெல்லாம் துயரப்பட்டிருப்பாள்.அவள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றுதானே பெரிய தகவல் எதுவும் சொல்லாமல் போனான்.இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை.மீரா தன்னோடு இருக்க வேண்டும் என்று மனதளவில் ஏங்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது.ஆனால் அவளோடு சந்தோஷமாக வாழ காலம் விடவில்லையே.அவன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் மீரா அவனுக்கு புதிதாகத் தெரிந்தாள்.அவளை விட்டு விழியெடுக்காமல் பார்த்தான் ரொஷான்.

மீராவின் உணர்வுகளை சொல்ல முடியவில்லை.அவன் கைதொட்டது, அந்த முத்தம், அவனது நீர் திரண்ட விழிகள்,கடைசியாக அந்த பார்வை,என அத்தனையையும் தாங்க முடியாதவளாய் அவன் மார்பில் சாய்ந்தாள் மீரா.இனிமேல் அவன் பார்த்துக்கொள்வான் என்ற உணர்வு அவளை ஆட்கொண்டது.

“எங்க போனீங்க? நான் பயந்துட்டன்.உங்ககிட்ட பேச நிறைய இருக்கு தெரியுமா.திரும்ப இப்டி போகாதீங்க.என்னால இருக்க முடியாது.செத்துடுவன்” என கேவலுடன் அழுதாள் மீரா.

பே….பீ ப்ப்ப்ளீளீளீ…ஸ். பே…பி அவனுக்கு தொடர்ச்சியாக பேசவே வரவில்லை.தலை நிமிராமல் அழுதவளை நிமிர்த்தப் பார்க்க அவள் அசைய மறுத்தாள்.அவனோ ,செய்வதறியாமல் வார்த்தைகளின்றி அவளைத் தேற்றப் படாதபாடுபட்டான்.அங்கே டாக்டர் திலக், விது என இரண்டு பேர் வந்ததைக்கூட உணராதவளாய் ரொஷானுக்குள் தொலைந்து போயிருந்தாள் மீரா.
****************************
றோஜாப்பூவாய் சிவந்துகிடந்த தன் மகளை விழிதட்டமுடியாதவாறு பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு தடவை அவள் நண்பி சுந்தரியின் குழந்தையை பார்க்கப்போன போது தனக்கும் ஒரு நாள் இப்படிக்குட்டியாய் ஒரு குழந்தை வருமோ? என சின்ன கற்பனைகூட பண்ணியிருக்கிறாள்.

ஐய்ய்யோ... எனக்கு ஒரு குழந்தையா?மீராவால் நம்பவே முடியவில்லை.எல்லாமே குட்டிக் குட்டியாய் என்ன அழகு.!.இந்த அழகுக் குட்டி என்னோடது தானா?.அவ்வளவு ஆனந்தமாக உணர்ந்தாள்.அப்போது அவளைச்சுற்றி செல்வி,அனுராத,ரொஷான் என நின்றிருந்ததைக் கூட அவள் உணரவில்லை.பார்வை முழுதும் தன் மகள் மேலேயே இருந்தது.

“என்னம்மா மீரா….நாங்களும் மனிதர்கள் தான்.கொஞ்சம் நிமிர்ந்து எங்களையும் பார்க்கலாமே” என்றார் செல்வி.

சட்டென்று நிமிர்ந்த மீராவுக்கு வெட்கமாக இருந்தது.
சாரிம்மா….என நெழிந்தாள்.

“அதுக்குள்ள என்னை கண்டுக்காம விட்டியே… பாருங்க அனுராத. மேடம் இந்த உலகத்துலயே இல்ல.நாம பரவால்ல…ரொஷானையே மறந்துட்டாங்க.” என கிண்டலடித்தார் செல்வி.

“இல்லம்மா…அது….எனக்கு இந்தக்குட்டி குழந்தையப் பார்க்க அப்படி ஆச்சர்யமா இருக்கு.என்னோட குழந்தையா இதுன்னு வேற இருக்கு.இந்த உணர்வு புதுசா இருக்கு.அதான்…” என ஆர்வமும் ஆச்சர்யமுமாய் சொன்ன மீராவும் ஒரு குழந்தையாகவே தெரிந்தாள்.

சிரித்து விட்ட செல்வி…மீரா…. கடவுள் உனக்கு கொடுத்த பெரிய கிஃப்ட். இனி எப்போதும் அழாம சந்தோசமா இப்டியே இரு ஓகே.உன்னப் பார்க்க எனக்கு நிறைவா இருக்கு.பேபிய நல்லா பார்த்துக்க என்றவர் ரொஷானையும் தான் என்பதை குனிந்து ரகசியமாக சொன்னார்.

“ஓகே… நாங்க பிறகு வாரம்.எனக்கு சில அப்போயின்ட்மென்ட்ஸ் இருக்கு.இவரும் பிஸி போகனும்..பாய்…என்று அவர் விடைபெற,செல்வியின் கையைப் பிடித்து தன் விழிகளில் ஒற்றிகொண்ட மீரா,நிமிர்ந்து அவர் இடையைக் கட்டிக்கொண்டு

“அம்மா….என் பிள்ளைக்கி நீங்க முக்கியமான உறவு.அடிக்கடி வரனும்”என்றாள்.

செல்வி சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை.விழிநீர் நிறைய அவளது நெற்றியில் முத்தமிட்டவர், நிச்சயமாடா…. நா….நான் பிறகு பேசுறன் என்றுவிட்டு எம்மோஷனலாகி விடுவோமென்ற பயத்தில் அவ்விடத்தைவிட்டு வேகமாகச் சென்றுவிட ,செல்வி போன திசையை பார்த்தபடி மீரா இருந்தாள்.

பேபி…. என்ற அழைப்பில் சட்டென்று அவள் சிந்தனை கலைந்தது.நிமிர்ந்து ரொஷானைப் பார்த்தாள்.அவள் பார்வையில் கோபம் கொப்பளித்தது.அவள் பக்கத்தில் அமர்ந்து அணைத்துக்கொள்ளப் போக அவன் கையைத் தட்டிவிட்டாள்.அவன் இயலாமையுடன் அவளைப் பார்த்தான்.அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது.அப்போது கதவு தட்டப்பட ,அனுமதியுடன் நர்ஸ் பெண் ஒருத்தி உள்ளே வந்து ரொஷானை வரும்படி டாக்டர் திலக் அழைத்ததாக சொல்லிச் சென்றாள்.

மீராவின் அருகே சென்று தன் குழந்தையின் தலையில் மிக மென்மையாய் முத்தமிட்டுச் சென்றான் ரொஷான். என்னை விட இந்த குட்டி மேல பாசம் வந்துட்டா.இதுக்கெல்லாம் சேர்த்துதான் இவனை பழி வாங்கனும் என நினைத்துக் கொண்டாள்.நாளுக்கு நாள் அவன்மேல் கொண்ட ஊடல் கூடிக்கொண்டே போனது.

அந்த திலக் டொக்டரை முதல் சந்திப்பிலேயே மீராவுக்கு அறவே பிடிக்கவில்லை.அன்று, ரொஷானின் கைகளைப் பற்றிக்கொண்டு அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு பல மணி நேரங்களாக அமைதியாக இருந்தாள் மீரா.இத்தனை மாதங்களாக அவள் அனுபவித்த அலைச்சல்கள் வலிகள் அத்தனையும் அந்த நொடிகளில் காணாமல் போனது போல் உணர்ந்தாள்.அப்போது,

மீரா ரைட்? என்றார் திலக்.

ம்ம் என்றவள்…யார் என்பதைப் போல அண்ணாந்து ரொஷானைப் பார்த்தாள்.அப்போதும் அவனை விட்டு விலகவேயில்லை.

“நான் டொக்டர் திலக்.மீரா…உங்க ஹஸ்பன்ட் எந்த நிலமையில இருந்தார் என்டு உங்களுக்கு தெரியுமா??.எவ்வளவு ஸ்ட்ரோங்க் மேனா இருந்தவர ஒரே இடத்துல கட்டிப்போட்டா அவரோட மென்டாலிட்டி எப்டி இருக்கும்.யோசிச்சி பாருங்க.
ஆனாலும் வேகமா ரீகவர் ஆகிட்டாரு.அதுக்கு முதல் காரணம் அவர் பெஸ்ட் ப்ரெண்ட் தான்.என பக்கத்தில் நின்ற விதுவைக்காட்டினார்.

“நிறைய ஹெல்ப் செய்திருக்காங்க.
ஒவ்வொரு நாளும் வந்து ரொஷான் சார் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுறது இவங்கதான்.கட்டாயம் இவங்களுக்கு நன்றி சொல்லுங்க.” என விதுவின் புகழ் பாடினார்.

“தனியா நான் பைத்தியம் மாதிரி அலைஞ்சது இவருக்கு தெரியுமா? அவளைப் பத்தியே பெருமை பேசுறாரே” என மனதிற்குள் கோபமாய் நினைத்தாள்.அந்தக் கோபத்தை அவள் முகம் தெளிவாக பிரதிபலித்தது.

“இப்போதைக்கு பழய மாதிரி வேகமா பேசமுடியாது.அவர் சொல்றத பொறுமையா கேளுங்க.நீங்களும் தொடர்ந்து பேசுங்க.இதே மாதிரி தெரபி செய்தா மூணு மாசத்துக்குள்ள நல்லா பேசிடுவார்” என்றார் திலக்

பின்னர் சிங்களத்தில் ரொஷான் விதுவிடம் ஏதோ பேசிவிட்டு வெளியேறினார்.அவர் சென்ற பிறகும் விது அங்கேயே நிற்பது மீராவுக்குப் பிடிக்கவில்லை.
இவளுக்கு இங்க என்ன வேலை.இவர் ஏன் விதுவ அனுமதித்தாரு? இன்னும் ரொஷானை நெருங்கி சாய்ந்து கொண்டாள் மீரா.அவள் தோள்களைச் சுற்றி கைபோட்டவன் தலை சரித்து அவள் தலையில் முத்தமிட்டான்.விது அங்கே இருக்கும் போது இப்படி செய்தது மீராவுக்கு சற்று சங்கடமாகவே இருந்தது.

“பேபி….இப்போ போயிட்டு நாளைக்கி வாங்க.ஒரு மீட்டிங் இருக்கு.ப்ளீஸ்.” என்று திக்கித் திக்கி பேசி முடித்தான்.

அவனது பேச்சுஅவளுக்கு கவலையாக இருந்தது.என்ன இப்படி பேசுறார் என கவலை தோய்ந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.ஆனால் அவன் சொன்ன செய்தி சற்றே கோபப்படுத்தியது.
காரணம் விது கதிரையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அப்படியென்றாள் அவள் இருக்க நான் போகனுமா? முகம் சுருங்க கண்களை உருட்டி அவனைப் பார்த்தாள்.

பே….பி…. பப்ளீ..ஸ் என்றான்.

முறைத்தவள் அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே போக,அவளை சமாதானப்படுத்துவதற்காய் மீண்டும் கையைப் பற்றி பே..பி என்றான்.இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி அவளைப் பார்த்து கண்களால் பேசினான்.அவள் மூக்கைச் சுருக்கி முறைத்தாள்.
சிரிப்புடன் கன்னக் குழியைத் தேடினான்.தன் ஒற்றை விரலால் குழி விழும் இடத்தைத் துழாவ ,

“நான் போறன்” என்றாள் கண்ணீர் வடிய அதே நேரம் கோபத்தோடு.

ரொஷான்..என்ற விதுவின் அழைப்பில் அவளை விட மீரா சற்றே மூச்சுவாங்க வெளியே வந்துவிட்டாள்.அப்படியொரு அழுகை வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.இவ கூட இவ்வளவு நெருக்கமா இருக்காரே.உலகமே அவளைவிட்டுப் போவதைப் போலுணர்ந்தாள்.

ஒரு வழியாக ஹாஸ்பிடலைவிட்டு வெளியே வர“ஹேய்…மீரா என்ன முகமெல்லாம் சிவந்திருக்கு? ரொஷானை பார்த்தியா? என்ன நடந்தடா? அவர் ஓகே தானே?”

செல்வியின் கேள்வியில் உடைந்து போன மீரா அவர் கையைப்பிடித்து குழந்தையாய் அழுதாள். “சரி…சரி வா வீட்ல பேசுவம் என அவளைத் தேற்றி அழைத்துச் சென்றார்.

அவள் ஒப்பித்த அத்தனை புகார்களையும் கேட்ட செல்வி சிரிப்பை அடக்கியபடி பேசினார். மீரா உன் ரொஷான் உனக்குத்தான்.உன்னை விட்டு எங்கயும் போகமாட்டார்.இது அப்நோர்மல் சிச்சுவேஷன் டா.விளங்கிக்க.எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்.நீ தினமும் ரொஷானைப் பார்க்கப் போகலாம்.கவலைப்படாத…

மீராவின் மனது கொஞ்சமும் தெளியவில்லை.அவனைக் காணமாட்டோமா என ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது அவன் தன்னை விட்டு விதுவிடம் போய்விட்டானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

அடுத்த நாள், மறுநாள் என தொடர்ந்து சென்றாள்.ஆனால் அவனோட பேச தனிமையே கிடைக்கவில்லை.அவள் போகமுன்னரே விது உட்பட இரண்டு ராணுவ உடை அணிந்தவர்கள் அங்கே இருந்தார்கள்.உரிமையாக அவனிடம் பேச முயலவில்லை.ஏதோ ஒரு தயக்கம் புதிதாய் அவளிடம் ஒட்டிக்கொண்டது.செல்வி எதுவும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்த நாட்கள் மீரா சென்றாள்.அவளை தன் பக்கத்திலேயே இருத்திக் கொண்டான் தான்.ஆனால் மற்றவர்கள் முன் அந்த நெருக்கம் அவளை சங்கடப்படுத்தியது.
சிங்களத்தில் நடந்த உரையாடல்கள் அந்த சூழலை விட்டு அவளை இன்னும் தூரப்படுத்தியது.

இப்படியே நான்கு நாட்கள் கழிய செல்வி திருகோணமலை செல்ல வேண்டுமென்ற சந்தர்ப்பம் வந்தது. ஒரே ஒரு நாள்தான் என்றாலும் மீராவை தனியாக கொழும்பில் விட்டுச் செல்லவும் முடியாது என்ற சூழலில் ஹாஸ்பிடலில் தங்க சொன்னார்.அவள் தங்குவதற்கான அந்த அனுமதியைக்கூட விது தான் வாங்கித்தந்தாள் என்பது மீராவுக்குத் தெரியாது.

வேற வழியே இல்லாமல் அவளும் அவனுடன் தங்க வேண்டியிருந்தது.அன்று, வரும்போதே அவளுக்கு சற்று வலியாக இருந்தாலும் முன் அனுபவம் எதுவும் இல்லாததால் வழமைபோன்று தான் போலும் என நினைத்துவிட்டாள்.செல்வியிடமும் சொல்லவில்லை.அந்த அறையில் யாரோ ஒருத்தியைப்போல் அமர்ந்திருந்தாள்.விது அவ்வளவு உரிமையாக அவனுடன் சிரித்துப் பேசுவதைக் காண அவளுக்கு எரிச்சலாக இருந்தது.அவனைப் பார்க்கவே கூடாது என்பதற்காய் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போதும் அவளுக்கு வலிதான்.நேரம் ஆக ஆக அவளுக்கு வலி கூடிப்போனது.ஒரு கட்டத்தில் ஜன்னல் கம்பியில் முகத்தை வைத்து சமாளித்தாள்.

உணர்ந்தவன் போல்,அவளைக் கூட்டிவந்து கட்டிலில் உட்காரவைத்தான் ரொஷான்., வியர்த்திருந்த அவள் முகத்தை துடைத்தவன், குனிந்து அவள் முகத்தை தன் கையில் ஏந்தி அவளைப்பார்த்தான்.புருவ மத்தியில் முடிச்சுவிழ கேள்வியாய் நோக்கினான்.

இடைக்கிடையே வந்து போன அந்தப்பயங்கர வலியில் அவள் முகத்தில் அப்பட்டமான பயம்தெரிந்தது.

“நோ..நோகுது. பயமாயிருக்கு” என்று அவன் டீசர்ட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

அவனோ, அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டவன், இடுப்பு, முதுகு என தடவிக்கொடுத்தான்.பே…பி, ம்ம்மீரா….ஓ….ஓகே.பயமில்ல.நான் இருக்கன் என உடைத்து உடைத்து பேசினான்.

அவன் விதுவை திரும்பிப்பார்க்க அவள் ஏதோ சொல்லிவிட்டு விரைந்தாள்.மீரா அவனை அசையவே விடவில்லை.வலி உச்சத்தைத் தொட சத்தமாக அழத்தொடங்கினாள் மீரா.பிறகு, சிறிது நேரத்திலேயே பிரசவ அறைக்கு மாற்றப்பட்டாள்.

இப்போது நினைக்கவே மீராவிற்கு பயமாக இருந்தது.என்ன வலி…அவள் குழந்தையை பூமிக்கு வருவதற்குள் ரொஷானை ஒரு வழியாக்கியிருந்தாள் என்றே கூறவேண்டும்.டாக்டர், நர்ஸ், ரொஷான் என அத்தனை பேரையும் சோதித்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஒரு கட்டத்தில் ம்மாஆஆ…ஆ..ஆஆ என்ற அலறலுடன் பூமி தொட்ட தன் மகளின் குரலில் அவள் அமைதியாகி ஓய்ந்து போக,அவனோ கண்ணீருடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.அவள் டிஸ்சார்ச் செய்யப்பட்டு வரும்போது “உங்கள விட உங்க கணவருக்குத்தான் பெயினா இருந்திருக்கும்.அவர் கிடைச்சதுக்கு நீங்க கடும் லக்கி.பேபி…பேபின்னு உண்மையான பேபிய மறந்துட்டார் என நர்ஸ் நக்கலாக சொன்னதும் அவளுக்கு நாணமாக இருந்தது.அவளுக்குரிய சில அந்தரங்கமான கடமைகளைக்கூட முகம் சுழிக்காமல் செய்து,அன்னைக்கும் மேலாயிருந்து அவளைப் பார்த்துக்கொண்டான் ரொஷான். இரண்டு வாரம் செல்வியுடன் கொழும்பில் தங்கிவிட்டு பிறகே கந்தாளாய் வந்து சேர்ந்தாள் மீரா.அவள் வந்து இரு வாரம் கழித்தே ரொஷான் வந்து சேர்ந்தான்.
 
Top Bottom