உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 2
மாலை ஆறு மணியை தாண்டிய சில நிமிடங்கள். ஒருவர் பின் ஒருவராய் அந்த கம்பெனியில் இருந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
தாமஸ் அன்றைய வேலைகளை செய்து முடித்தவன் தன் பணிகளை முடித்துக் கொண்டு வந்திருந்த மெயில்களோடு தன் அஞ்சலையும் சேர்த்து அதிரன் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் அறை கதவை தட்டிவிட்டு காத்திருந்தான்.
"கமின்!" என்ற அதிரன் குரலுக்கு தாமஸ் உள்ளே செல்ல,
"நீங்க கிளம்பலையா சார்?" என்றான் தாமஸ். சும்மா ஃபைல்ஸ் எல்லாம் பார்த்துட்டு இருந்தேன். புதுசா நிறைய தெரிஞ்சிக்க வேண்டியதா இருக்கு!" என்று சொல்லி நெட்டி முறித்த அதிரன்,
"உன் வீடு எங்க தாமஸ்?" என்றான்.
"பக்கத்துல தான் சார். நடந்து போய்டுவேன்!" என்றவனை,
"அவ்ளோ பக்கமா?" என அதிரன் கேட்க,
"இல்ல சார்! நேட்டிவ் எல்லாம் திருச்சி பக்கம் ஒரு கிராமம். பேமிலி அங்க தான் இருக்காங்க. டெய்லி ட்ராவெல் முடியாதே! அதனால இங்கேயே ஒரு ரூம்ல தங்கி இருக்கேன்!" என்றான் தாமஸ்.
"மை காட்! என்னை மாதிரி தானா நீயும்?" அதிரன் கேட்கவும் தாமஸ் சிரிக்க,
"ஓகே! வெளில போலாம் சொன்னேனே! கூட்டிட்டு போவ தானே? இல்ல பிஸியா?" என்றும் கேட்டான் அதிரன்.
"அதெல்லாம் இல்ல சார். இங்க ரூம்ல கூட என் சித்தப்பா பையன் இருக்கான். அவன்கிட்ட சாவி மட்டும் குடுத்துட்டு வர்றேன். போகலாம். எங்க போகணும் உங்களுக்கு?" என்று கேட்க,
"அதானே மேன் எனக்கு எதுவும் தெரியாதுன்னு உன்னை கூப்பிட்டேன்" என்று கொஞ்சம் முறைப்பதாய் பார்த்தவன்,
"ஓகே நீ போய் கீ குடுத்துட்டு வா. நான் எல்லாம் கிளோஸ் பண்ணிடறேன்!" என்று சொல்லி எடுத்து வைத்தான்.
தாமஸ் சென்ற சில நிமிடங்களில் தன் அறையின் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அதிரன் வெளியில் வர, அப்பொழுது தான் அஞ்சனாவும் பையை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.
மணியைக் கண்டவன், "நீங்க இன்னும் கிளம்பலையா?" என்றான் அவளிடம்.
"இதோ கிளம்பிட்டேன் சார். தாமஸ் அண்ணா சிஸ்டம் இப்ப தான் எனக்கு கிடைச்சது. அப்டேட் முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு!" என்று சொல்லியவள் விடைபெற தலையசைத்துவிட்டு வெளியில் நடக்க, அங்கே வேலை செய்யும் காவலர் வந்துவிட்டார் உள்ளே கவனிக்க.
அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு அதிரன் அங்கு நடப்பவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.
சில நிமிடங்களில் எல்லாம் தாமஸ் வரவும் காவலாளியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்ப, அதிரனின் காரில் இருவரும் புறப்படிருந்தனர்.
"இந்த ரோட் எப்பவுமே டிராபிக் தான் சார். ஈஸியா ஹாண்ட்ல் பண்றீங்க. கார் ரொம்ப வருஷமா டிரைவ் பண்றீங்களா?" என்ற தாமஸ் கேள்வியில் சிரித்த அதிரன்,
"ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டேன் தாமஸ். எப்பன்னா ஸ்கூல் முடிச்ச டைம்" என்றதுமே,
"ஓஹ்! அதான் ஈஸியா இருக்குல்ல?" என்றான் சிரித்த தாமஸ்.
"நீ டிரைவ் பண்ணுவியா?" என்ற அதிரன் கேள்விக்கு,
"எப்பவாச்சும் சார்! கிடைச்சா விடுறதில்ல. நம்ம கம்பெனிக்கு லோடு வர்றவங்க எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க உள்ள வரத்துக்குள்ள. அப்போ லாரி எல்லாம் நான் தான் உள்ளே எடுத்துட்டு வருவேன். அப்படி தான் இங்க வந்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேனே! பூபாலன் சார் நிறைய இந்த மாதிரி சொல்லி தந்திருக்கார். நல்ல மனுஷன்!" என்று தாமஸ் கம்பெனியில் தொடங்கி வேலை செய்யும் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லிக் கொண்டே அங்கிருந்த இடங்களை எல்லாம் காண்பித்தான்
அருகில் என்னென்ன எங்கே கிடைக்கும் என கூறியதோடு கோவில்கள் வரை அவனுக்கு தெரிந்த இடங்களை எல்லாம் சொல்லி,
"இதோ இந்த ரெஸ்டாரண்ட்ல லஞ்ச் நல்லா இருக்கும் சார். ஒரு நாள் பூபாலன் சார் கூட வந்திருக்கேன். வேற நீங்க சாப்பிடுற மாதிரி ஹோட்டல்னா இன்னும் கொஞ்சம் தூரமா தான் இருக்கும்!" என்றான் தாமஸ்.
"நான் சாப்பிடுற ஹோட்டலா? என்ன அங்க என் பேரை போட்டு அப்படி மென்ஷன் பண்ணிருக்காங்களா என்ன?" என அதிரன் சிரிக்க,
"அப்படி இல்ல சார்.. உங்க அளவுக்கு உள்ளவங்க சாப்பிடுற இடம் இது. அதை சொன்னேன்!" என்றவன் சொல்லில்,
"யாரு டா சொன்னா இப்படி எல்லாம்? நீயா நினைச்சுப்பியா?" என்ற அதிரன்,
"ஆமா உன்னை அதினு தானே கூப்பிட சொன்னேன்?" என்று கேட்க,
"இல்ல சார் இதுவே இருக்கட்டும்!" என்றான் சங்கடமாய் புன்னகைத்து.
"நீயே கூப்பிடுவ ஒரு நாள்!" என்றவன்,
"சரி வா இங்கேயே சாப்பிட்டுப் பார்ப்போம்!" என்று அழைக்க,
"அதெல்லாம் வேண்டாம் சார். நான் என் ரூம்க்கு போறேன். நீங்க சாப்பிடுங்க. வேற எதுவும் தெரிஞ்சிக்கணும்னா நாளைக்கு கூட போகலாம் சார்!" என வேகமாய் மறுத்தான் தாமஸ்.
"ரூம்க்கு போய் என்ன பண்ண போற?" அதிரன் கேட்கவும் மணியைப் பார்த்த தாமஸ்,
"தம்பி ரூம்ல இருக்கானே எதுவும் சமைச்சு வச்சிருப்பான். சாப்பிட்டு தூங்கலாமேன்னு..!" என்றவன் சொல்லில்,
"ஓகே வா! உன்னை ட்ராப் பண்ணிட்டு உன் கூடவே இன்னைக்கு நானும் சாப்பிடுறேன்!" என்றவன் சொல்லில் அதிர்ந்து தான் விழித்தான் தாமஸ்.
'என்ன இத்தனை படுத்துகிறான் பார்த்த முதல் நாளில். இவனை நம்பலாமா வேண்டாமா?' என பல சிந்தனைகள் தாமஸிடம் வலம்வர, அவனை தவறாய் நினைக்கவும் முடியவில்லை.
"ரொம்ப யோசிக்குறியே! நான் அவ்வளவு ஒர்த் எல்லாம் இல்லையோ?" என அதிரன் கேட்ட நொடி,
"சார் சார்! அதெல்லாம் ஒண்ணுமில்ல. நானும் அவனும் சும்மா நூடுல்ஸ், தோசைனு சோம்பேறித்தனமா எதாவது செஞ்சி சாப்பிட்டுப்போம். அதனால தான் யோசிச்சேன்!" என்றவன் அந்த ரெஸ்டாரண்ட்டையும் திரும்பிப் பார்க்க,
"எனக்கு எந்த இஸ்ஸுஸும் இல்ல. உன்னால முடிஞ்சா கூட்டிட்டு போ!" என்று அதிரனும் விடவே இல்லை.
"இன்னொரு நாள் நல்ல சாப்பாடா செஞ்சி கூப்பிடுறேனே. இன்னைக்கு வேனா இங்கேயே சாப்பிடுவோமா சார்?" தயங்கியே என்றாலும் தாமஸ் கேட்டதில் சிரித்துவிட்ட அதிரன்,
"ஷூர்! ஆனா சமைக்குறதுக்கு முன்னாடி என்னையும் கூப்பிடு. ஹெல்ப் பண்றேன். அண்ட் உன்கிட்ட இருந்து கத்துக்கவும் ட்ரை பண்றேன்!" என்று சொல்ல,
"அது நடந்தா சாப்பாட்டையே வெறுத்துடுவீங்க!" என்று சொல்லி சிரித்த தாமஸும் அதிரனுடன் இணைந்து ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றான்.
"என்ன டா வேணும்?" என அத்தனை உரிமையாய் கைகழுவி அமர்ந்ததும் அதிரன் கேட்க,
"தோசை, சப்பாத்தி எதுனாலும் ஓகே சார்!" தாமஸ் சொல்ல,
"ஹ்ம் வேற?"
"வேற எதுவும் வேணாம்!" வேகமாய் அவன் மறுக்க முறைத்த அதிரன், அவனே அதற்கு சரியான கிரேவியும் சேர்த்து சொல்ல,
"ஓஹ்!" என்று சொல்லிக் கொண்ட தாமஸ் தன் தலையில் தானே தட்டிக் கொண்டான்.
"என்னோட பேமிலி ரொம்ப பெருசு சார். அக்கா, ரெண்டு தங்கச்சி, தம்பினு என் கூட பிறந்தவங்க நாலு பேர். ரெண்டு வருஷம் முன்னாடி தான் இங்க வந்தேனே! அதுவரையும் டிகிரி முடிச்சுட்டு விவசாயம் தான் அப்பா கூட பார்த்தேன். கொஞ்சம் வளரவும் வீட்டோட நிலைமை புரிஞ்சது. எதாவது செய்யணும்னு கிளம்பி வந்தேன். பூபாலன் சார் ஹெல்ப்ல இங்க இருக்கேன். பேமிலியும் இப்ப கொஞ்சம் ஓகேவா இருக்காங்க!" தாமஸ் தான் அதிரன் கேட்காமலே கூறி இருந்தான்.
சிறு புன்னகை கொடுத்து அதிரன் அதை கேட்டபடி இருக்க, "நாம வரும் போது ஒரு சூப்பர்மார்க்கெட் பார்த்தோம் தானே?" என்று தாமஸ் கேட்கவும் ஆம் என்று அதிரன் தலையசைக்க,
"அதுக்கு ஆப்போசிட்ல ஒரு ரோட்டுக்கடை இருக்கும் சார். நைட்ல மட்டும் தான். எனக்கு சேலரி வர்ற அன்னைக்கு நானும் என் சித்தப்பா பையனும் அங்க போய் தான் சாப்பிடுவோம். அங்கயும் எல்லாமே கிடைக்கும். இங்க நீங்க தனியா ஆர்டர் சொல்ற கிரேவியை அங்க நாம கேட்காமலே தருவாங்க. விலையும் கம்மி தான்" என்றான் தாமஸ்.
"அப்போ அங்கேயே சாப்பிட்டிருக்கலாமே! நானும் டேஸ்ட் பாத்திருப்பேன்ல?" என்ற அதிரன்,
"வர்ற மன்ந்த் சேலரி வந்ததும் என்னையும் கூட்டிட்டு போற நீ!" என்றான் உத்தரவாய் மலர்ந்த புன்னகை கொடுத்து.
"கண்டிப்பா சார்!" என்ற தாமஸிற்கு என்னவோ அதிரன் மேல் அவனையும் அறியாமல் ஒரு ஒட்டுதல் வந்திருந்தது.
ஒரு சிறு இடைவெளி கொடுத்து அவனிடம் தள்ளியே இருக்க சொல்லி தாமஸ் நெஞ்சம் காலையே சொல்லி இருக்க, இரவுக்குள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான் தாமஸ்.
'எதுவும் காரணத்தோடு தன்னிடம் தோழமை எதிர்பார்க்கிறானோ!' என்றெல்லாம் முதலில் நினைத்திருந்தான். இந்த நொடி அப்படி எதுவும் இன்றி மனதிலிருந்து ஒரு பிடித்தம் தோன்றி இருந்தது அதிரன் மேல்.
ஆனாலும் நடந்தது என்னவோ தாமஸ் உள்ளுணர்வு சொல்லியது சரி தான் என்பதாய் இருக்க, அவனுக்கு தெரிய வந்த உண்மையில் வாயடைத்து போனான் தாமஸ்.
*************
"எல்லாம் உன்னால தான் ண்ணா! இன்னைக்கு நான் எவ்வளவு லேட் தெரியுமா கம்பெனிக்கு?" என அத்தனை கோபமாய் தன் அண்ணன் கண்ணனிடம் கூறிக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
"நானா உன்னை சமைக்க சொன்னேன்? உன்னை யாரு சமைக்க சொன்னாங்கன்னு நீ சாப்பாடு ரெடி பண்ணின?" என பதிலுக்கு கேட்டான் கண்ணன்.
"அம்மாக்கு ஹெல்ப் பண்ணினா அவ்வளவு பேச்சு? போ ண்ணா. இன்னைக்கு புது எம்டி முன்னாடி மானமே போச்சு" என்றாள் சட்டென்று வாடிய முகமாய்.
"ஏன் டா எதுவும் சொன்னாங்களா? அப்படி ஒன்னும் நீ வேலைக்கு போக வேண்டாம். நீ ஆசைப்பட்டியேன்னு தான் அனுப்பினோம்!" அஞ்சனா அன்னை ராஜேஸ்வரி சொல்ல,
"அதானே! இனி நீ போக வேண்டாம் பாப்பா. எவன் அவன் என் தங்கச்சியை பேசினது?" என்று அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தான் கண்ணனும்.
"ஆரம்பிச்சுட்டீங்களா? எப்ப டா என்னை நிறுத்தலாம்னே இருக்கீங்க இல்ல ரெண்டு பேரும்? வெளுத்துடுவேன். சார் எல்லாம் ஒன்னும் சொல்லல. எப்படியும் நான் இப்படி தான்னு நினைச்சிருப்பார் இல்ல? அதை தான் சொன்னேன். தாமஸ் அண்ணாவும் இனி கவனமா இருக்க சொன்னாங்க!" என்று தெளிவாய் அவள் சொல்ல,
"அவ்வளவு தானா?" என்றான் கண்ணனும்.
"வேற என்ன? எப்படான்னு இருக்குறல்ல நீ?" என முறைத்த அஞ்சனா,
"எவ்வளவு ஜாலியான ஒர்க் தெரியுமா ம்மா? எல்லாருமே பிரண்ட்லி. ஜாலியான எனக்கு பிடிச்ச ஒர்க். ஹப்பியா இருக்கேன். அப்படியே விட்டுடுங்க" என்றாள் கும்பிட்டு.
ராஜேஸ்வரியும் கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.