உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 5
"ஹாய் ண்ணா! குட் மார்னிங்!" என அஞ்சனா தாமஸ்ஸிடம் காலை வேலைக்கு வந்ததும் சொல்ல,
"குட் மார்னிங் டா!" என்றான் புன்னகையுடன்.
ஆராய்ச்சியாய் அவள் பார்த்து நிற்க, "நாளைக்கு சாட்டர்டே அஞ்சனா. பேக்கப் எல்லாம் சரியா இருக்கனும். லேபிள் எல்லாம் நீ செக் பண்ணிடு. பேக்கிங்க்கு நான் போறேன்! அவங்க ரெண்டு பேரும் லோட் ஏத்துற இடத்துக்கு போய்டட்டும்!" என தாமஸ் வேலையைப் பற்றி சொல்ல, தானுமே அவனோடு கவனத்திற்கு வந்தாள்.
அதிகத்திற்கும் அன்றைய வேலைகள் இருந்தது. நாளைக்குமே இதைவிட கூடுதல் தான் இருக்கும். வெள்ளி சனிக்கிழமைகளில் எப்பொழுதும் இப்படி தான் என்பதால் அதில் இருந்தனர் அனைவரும்.
அதிரனும் வந்ததும் உள்ளே சென்று மற்றவர்கள் வேலைகளை பார்வையிட்டுக் கொண்டு வந்தவன் அஞ்சனாவின் வேலையையும் கவனித்து அவனுக்கு தோன்றிய சில கேள்விகளையும் கேட்க, பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
"எப்பவும் ஒருத்தங்களே பண்றது இல்லை சார்! எல்லாருக்கும் தெரியணுமே! அதனால பூபாலன் சார் பத்து பேரை செலக்ட் பண்ணி எல்லாமே தெரிஞ்சுக்க வச்சிருக்காங்க. தாமஸ் அண்ணா தான் அதை ஃபால்லோவ் பண்ணி வீக்லி ஒன்ஸ் எல்லாருக்கும் வேலையை மாத்தி கொடுத்து செக் பண்ணுவாங்க. சரி இல்லைனா அவங்களே சொல்லியும் குடுப்பாங்க. ஸ்டிச் பண்றவங்களை நான் பார்த்து செக் பண்ணிட்டு அண்ணாகிட்டயும் காட்டிடுவேன்!" என்று சொல்ல,
"ஓகே!" என்றவன் நின்று அவள் வேலைகளை கவனித்து தானும் தெரிந்து கொண்டு அடுத்து ஒவ்வொருவரையும் கண்காணித்து அதைப் பற்றி அறிந்து கொண்டு வந்தான்.
அடுத்ததாய் பேக்கிங் நடக்கும் இடம் வர, அத்தனை சிரத்தையாய் வேலையில் இருந்த தாமஸ் அதிரணை கவனிக்கவில்லை.
அதே நேரம் காபிய் வர, "தாமஸ் காபி!" என்று கொடுத்துவிட்டு வந்தவர்,
"உங்களுக்கு வேணுமா சார்?" என்று கேட்கவும் தான், 'யாரிடம் கேட்கிறார்?' என தாமஸ் திரும்பிப் பார்த்தவன் அதிரனைக் கண்டான்.
"குட் மார்னிங் சார்!" என காபியுடன் அவனருகில் வர, தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு தாமஸைப் பார்க்க,
சாப்பிட்டீங்களா சார்?" என்றான் அடுத்ததாய் தாமஸ்.
"ஆச்சு தாமஸ். நாளைக்கு லோட் இருக்கு தானே?" என்று கேட்க,
"ஆமா சார்! அதான் ஒர்க் போய்ட்டு இருக்கு!" என்றான் தாமஸும்.
அதனைப் பற்றி தொடர்ந்து பேச்சுக்கள் செல்ல,
"வேலை நடக்கணும் தான். ஆனா சாப்பிடுற நேரம் எல்லாருக்கும் ஒண்ணு தான். ஓகே! நேத்து மாதிரி பண்ணாதீங்க. அஞ்சனாக்கும் சேர்த்து தான் சொல்றேன். சொல்லிடு!" என்றான் அதிரன்.
"கண்டிப்பா சார்!" என்ற தாமஸ்,
"எங்களோட சாப்பிட வர்றிங்களா? இன்னைக்கு நான் நிறையவே கொண்டு வந்திருக்கேன்!" தாமஸ் சொல்ல, அதிரன் சிரித்தவன்,
"எனக்காகவா?" என்றான்.
"ஆமா சார்! நான் தான் செஞ்சேன். சாப்பிடுற மாதிரி தான் இருக்கும்!" தாமஸ் சொல்ல,
"ஹ்ம் ட்ரை பண்ணலாமே!" என்ற அதிரன்,
"ஓகே பார்க்கலாம்!" என்று சொல்லி அங்கிருந்து நகர, தாமஸ் தன் வேலையை தொடர்ந்தான்.
கிட்டத்தட்ட மதிய நேரமே பாதி வேலைகள் முடிந்திருந்தது.மாலை வரைக்குள் என்பது சதவீதம் வேலைகள் முடிந்துவிடும். காலையில் வந்து மீதியை முடித்து மதியத்திற்கு மேல் வெளியே ஏற்றுமதி ஆரம்பமானால் அதன்பின் இங்கே உள்ளே வேலைகள் குறைவு தான். அதற்கு பின் அன்று ஆசுவாசமாய் செல்லும்.
அஞ்சனாவிடம் இருக்கும் அடுத்த முடிந்த நிலையில் இருக்கும் காட்டன் திரைசீலை நிறைந்த பெட்டிகளை வாங்க வந்த தாமஸ்,
"அஞ்சனா! பாலா அங்கிளைப் பார்த்தியா? கேட்ல இல்லைனு தேடிட்டு இருக்காங்க" என்று கேட்க,
"இப்ப தான் வாசலுக்கு போறாரு!" என்றாள் அவள்.
"போய்ட்டாங்களா? ஓகே ஓகே! இப்ப எடுத்துட்டு போக வருவாங்க. எத்தனை ரெடியாகி இருக்கு?" என்று கேட்க, அதை சொல்லியவள் அவன் கிளம்பத் தயாராகவும்,
"ண்ணா!" என நிறுத்தினாள்.
"சொல்லு மா!" என்றவன் கண்கள் தன் கையில் இருக்கும் நோட்டில் கணக்கினை சரிபார்த்தபடி இருக்க,
"சாரி!" என்றவளை கண்கள் சுருங்க நிமிர்ந்து பார்த்தவன்,
"என்கிட்டயா? ஏன்?" என்றான் எதுவும் புரியாமல்.
"நேத்து நீங்க பேசிட்டு இருக்கும் போதே நான் கண்டுக்காம போய்ட்டேனா?" என்றவளை இன்னும் குழம்பிப் பார்த்து,
"ஹே! கனவு கண்டுட்டு இருக்கியா என்ன?" என்று அவன் சிரிக்க, அவள் விவரமாய் சொல்லவும்,
"எனக்கு அது நியாபகமே இல்ல. நீ என்ன இவ்வளவு எல்லாம் யோசிக்குற? யார் இதெல்லாம் சொல்லி தந்தா?" என்றான் அப்போதும் சிரித்தபடி.
"இல்ல நீங்க சார் பத்தி பேசிட்டு இருந்திங்க. நான் தான் கண்டுக்காம போய்ட்டேன். அண்ணா தான் இப்படி பண்ணாதன்னு சொன்னாங்க. கஷ்டமா போச்சு!" அஞ்சனா சொல்ல,
"கண்ணனோட வேலையா?" என்று முறைத்தவன்,
"நீ சொன்ன அப்புறம் தான் இப்படி ஒரு சைட்ல இருக்குறதே எனக்கு தெரியுது. உன் அண்ணனுக்கு இன்னைக்கு இருக்கு!" என்றவன் அவள் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருக்க கண்டு,
"டேய்! இதென்ன புதுசா டல்லா எல்லாம் இருக்குற நீ?" என்றவன்,
"நீ கோவமே பட்டாலும் நான் சாரை சொன்னது எல்லாம் நிஜம். உன்கிட்ட ஷேர் பண்ண தோணுச்சு சொன்னேன். அவ்வளவு தான். இதுல நீ பீல் பண்ண எதுவும் இல்லை. அப்படியே நீ பீல் பண்ணினாலும்.." என்றவன்,
"இன்னைக்கும் சேர்த்து பீல் பண்ணிக்கோ! ஏன்னா இன்னைக்கும் நம்ம கூட தான் சார் சாப்பிட வருவாங்க!" என்றான் சிரித்தபடி. அதில் அவளும் சிரிக்க,
"ஹ்ம்! சரி பாரு!" என்று சொல்லி வந்துவிட்டான்.
மதியம் இன்று ஒரு மணிக்கெல்லாம் அஞ்சனாவை அழைத்துவிட்டு சாப்பிட வந்த தாமஸ் அதிரனுக்கு அழைக்க,
"நீ சாப்பிட்டுட்டே இரு தாமஸ். ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்!" என்று சொல்லிய அதிரன் கால் மணி நேரத்தில் கையில் ஒரு கவருடன் அங்கே சாப்பிட வந்தான்.
சாப்பிடும் அறை மிகப்பெரியது தான். நான்கு நான்கு நாற்காலிகளுக்கு ஒரு டேபிள் என செட் செய்திருந்தது.
இன்று தான் அங்கே இவ்வளவு பேரை காண்கிறான். இவன் அவர்களை எல்லாம் பார்க்க, அவர்கள் இவனை வித்தியாசமாய் பார்க்க,
"ஏன் டா நானும் மனுஷன் தானே? பசிக்கும் தானே? ஏன் எல்லாரும் இப்படி பாக்குறாங்க?" என தாமஸிடம் கேட்டு அவனருகில் அதிரன் அமர, அஞ்சனா அருகில் இருந்தவள் அவன் கேள்வியில் சிரித்தாள்.
பூபாலன் சார்க்கு அவங்க வைஃப் சாப்பாடு கொண்டு வருவாங்க. ரூம்லயே சாப்பிட்டுப்பார். இங்க வந்தது இல்லை. அதான் புதுசா பாக்குறாங்க!" என்ற தாமஸ்,
"இதென்ன சார்? வாங்கிட்டு வந்திங்களா?" என்று அவன் கையில் இருந்ததைப் பார்த்து கேட்க,
"ஆமா! ஆனா நான் போகல. பாலா சாரை வாங்கிட்டு வர சொன்னேன்!" என்றான். அவன் பேச்சுக்களை இப்போது கவனிக்க ஆரம்பித்தாள் அஞ்சனாவும்.
"நான் தான் கொண்டு வந்திருக்கேன்ல?" என்று தாமஸ் சொல்ல,
"இருக்கட்டும் டா. சமைக்க ஆள் கேட்டேனே?" என்றான் அதிரன்.
"ஆனா பாட்டிகிட்ட பேச போறதாவும் சொன்னிங்களே! அதனால ஆள் தேவையில்லையோனு நினைச்சேன்!" என்றான் கிண்டலாய் தாமஸ்.
இருவரின் பேச்சுக்களும் அவ்வளவு இலகுவாய் வர, அஞ்சனாவிற்கு அப்பொழுது தான் தாமஸ் பேச்சின் அர்த்தமே புரிந்தது.
"டேய்! பாட்டியை என்ன சமைக்கவா கூப்பிட்டேன்? சும்மா நாலு வார்த்தை ஒரு கப் காபி குடிக்க கூப்பிடலாம் நினைச்சேன். நீ தான் என்னை டைவேர்ட் பண்ணிட்ட" என்று சிரித்த அதிரன்,
"அஞ்சனா!" என்று அழைக்கவும், "ஹான்!" என்று அதுவரை தன் எண்ணங்களில் இருந்த அஞ்சனா விழிக்க,
"உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தா கூட சொல்லுங்க. சமைக்குறதுக்கு மட்டும். காலைல வந்துட்டு வேலை முடிச்சுட்டு உடனே கிளம்பிட்டா போதும்!" என்று அவளிடமும் அவன் சொல்ல,
"ஹ்ம் சொல்றேன் சார்!" என்றாள் அவளும்.
அடுத்து ஒரு வாரத்தில் அஞ்சனா தன் அன்னையிடம் சொல்லி ராஜேஸ்வரி பக்கத்து குடியிருப்பில் வேலை செய்யும் ஒரு பெண்மணியிடம் சொல்லி விலாசம் வாங்கி அனுப்பி வைக்க, அதிரன் தன் தேவையை சொல்லி அவரை அடுத்த நாள் காலை முதல் வர சொல்லி இருந்தான்.
அந்த பெண்மணி உதவியில் அன்று முதல் அவனுமே மதிய உணவைக் கொண்டு வர ஆரம்பிக்க,
"உங்களுக்கு ஓகேவா சார்?" என்றான் சாப்பிட்டுப் பார்த்த தாமஸ்.
"ஓகே இல்லைனா நீங்க தினமும் போலாம்ல சமைச்சு குடுக்க?" என அஞ்சனாவும் கிண்டல் செய்ய,
"நல்லாருக்கு தானே? டெய்லி ஹோட்டல் மூணு நேரமும். அதுக்கு இது மச் பெட்டர்!" என்றான் அதிரன்.
இப்படி அஞ்சனாவுமே அவர்களோடு அதன்பின் இணைந்திருந்தாள்.
ஞாயிறு கிழமை மட்டும் காலையோ மாலையோ என ஒரு நேரம் தாமஸ் அதிரனுடன் வெளியில் சென்று வருவான்.
ஒருநாள் தன் வீட்டிற்கும் அழைத்து சென்றான் அதிரன். "இங்கேயா இருக்கீங்க?" என்றவன் பார்த்ததும் அப்படி வியந்தான்.
இவ்வளவு பெரிய வீட்டில் தனியாய் என இன்னுமே அதே கேள்வி தான். அதிரன் குடும்பம்?.
ஒருநாள் அஞ்சனா மூலம் அதிரனும் சமைத்துக் கொடுக்கும் பெண்ணின் சம்பளப் பணத்தைக் கேட்டு, "அவ்வளவா?" என வியக்க,
"சார் கொஞ்சம் மேலிடம் தான் போல ண்ணா! ஆனா ஏன் பேமிலியை கண்ணுல காட்ட மாட்டுறார்னு தான் தெரில!" என்றாள் அஞ்சனாவும் இப்பொழுது தாமஸைப் போலவே.
ஒரு மாத காலம் ஓடி இருந்தது. அன்று அதிரனுடன் தாமஸ் ஷாப்பிங் என்று வந்திருந்தான்.
அதிரன் தன் மொபைலை தாமஸிடம் கொடுத்துவிட்டு தனக்கு எடுத்திருந்த சட்டையை அணிந்துப் பார்க்க செல்ல, அதே நேரம் அவன் அலைபேசிக்கு அழைப்பு வந்திருந்தது.
"ஹரிச்சந்திரன்!" எப்பிடற பெயரில் அழைப்பு. அதிரன் எங்கும் தன் பெயரை அதிரன் ஹரிச்சந்திரன் என்று தான் வைத்திருக்கிறான். பல இடங்களில் அதைக் கண்டிருந்த தாமஸ்,
"சாரோட அப்பாவா?" என்று எண்ணம் வர, உடனே ஏற்றுவிட்டான் அழைப்பை.
"டேய் அதி! அதி! அதி எங்க டா இருக்க? எப்படி இருக்க? எத்தனை போன் டா? ஏன் டா இப்படி பண்ற?" என தாமஸை பேச விடாமல் அவ்வளவு கேள்வி அவர் கேட்க,
"ஹெலோ சார்!" என்றான் எதிர்பக்கம் கேட்ட அந்த தவிப்பான குரலில்.
"ஹெலோ யாரு?" என்ற ஹரிச்சந்திரன் பயந்து போனார் புதிய குரலில்.
"சார் நான் தாமஸ். சார் கம்பெனில ஒர்க் பண்றேன்!" என்ற தாமஸ் அதிரன் டரயல் ரூமில் இருப்பதாய் சொல்ல,
"கம்பெனியா?" என்றவருக்கு புரியவே இல்லை.
"ஓகே எந்த பிளேஸ்? எங்க இருக்கீங்க?" என்று ஹரிச்சந்திரன் கேட்க, அந்த மால் பெயரைக் கூறினான் தாமஸ்.
அடுத்து ஹரிச்சந்திரன் கேட்ட அனைத்தும் தலை சுற்ற வைத்தது தாமஸை.
"தாமஸ் உன் நம்பர் எனக்கு சொல்லு பா!" என்று கேட்கவும் அவனும் எதுவும் புரியாமல் அவ்வளவு தயங்கினான்.
அவசரப்பட்டு எடுத்துவிட்டோமோ என்று அவன் யோசித்து தன் எண்ணை மட்டும் சொல்லி வைத்துவிட, அதிரனும் வந்துவிட்டான்.