அத்தியாயம் 28:
மாரியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்ட மேடை, இன்று இரண்டு திருமணங்களுக்குச் சாட்சியாக நின்றது. ஒருபுறம் இளமாறன் - பூங்கொடி மறுபுறம் பூங்கொடியின் அண்ணன் பொற்செழியன் - ஜெயராணி.
நேற்று நடந்த கலவரங்களுக்குப் பிறகு, இன்று பலத்த பாதுகாப்புடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளஞ்செழியனும் செந்தூர் பாண்டியனும் மேடையைச் சுற்றிப் புலிகள் போல வலம் வந்து கொண்டிருந்தனர்.
ஊரே திரண்டிருக்க, நாதஸ்வர இசை முழங்கியது. ஆனால், அந்த இசைக்கு அடியில் ஒரு மரண அமைதி ஒளிந்திருப்பதை இளமாறன் உணர்ந்தான்.
மேடையில் மணப்பெண்ணாக பூங்கொடி அமர்ந்திருந்தாள். நேற்று நடந்த சம்பவத்தின் பயம் அவள் கண்களில் இன்னும் மிச்சமிருந்தது. அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதை கவனித்த இளமாறன், ரகசியமாக அவள் கையைப் பற்றி அழுத்தினான். அந்தத் தொடுதல், "நான் இருக்கிறேன்" என்ற நம்பிக்கையை அவளுக்குக் கொடுத்தது.
மறுபக்கம் அமர்ந்து இருந்த ஜெயராணிக்கும் அதே பயம் தான். பயத்தில் பொற்செழியனின் கைகளை பற்றிக்கொண்டாள்.
மேடைக்குக் கீழே இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் சாதாரணமாக இருப்பது போல நடித்தாலும், அவர்கள் கண்கள் கூட்டத்தை அங்குலம் அங்குலமாகச் சல்லடை போட்டன.
"அண்ணே... வலது பக்கம் அந்த மல்லிகைப்பூ கூடைக்கு பின்னாடி நாலு பேரு நிக்கிறானுங்க. அவனுங்க இடுப்புல ஏதோ கனமா தெரியுது," என இளஞ்செழியன் மெல்லிய குரலில் சொன்னான்.
"பார்த்துட்டேன் டா... இடது பக்கம் அந்த சமையல் பந்தல் கிட்டயும் அஞ்சு பேரு இருக்கானுங்க. இவங்க தாலி கட்டுற நேரத்துல ஏதோ பண்ணப் போறானுங்கனு நினைக்கிறேன்," என செந்தூர் பாண்டியன் தன் கையை இடுப்பில் இருந்த மறைத்து வைத்திருந்த கத்திக்குக் கொண்டு சென்றான்.
திடீரென கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து கருப்பு கண்ணாடி அணிந்து, ஆக்ரோஷமாக இறங்கினார் கலையரசன். அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருவர் இருந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியது. ஐயர், "மாப்பிள்ளைகள்... தாலியை எடுத்து மணப்பெண்கள் கழுத்துல கட்டுங்க!" என்றார்.
இளமாறன் தாலியை கையில் எடுத்த அந்த நொடி, கலையரசன் கத்தினான், "நிறுத்துங்க! இந்த கல்யாணம் நடக்காது!"
கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கலையரசன் மேடையை நோக்கி முன்னேற, இளஞ்செழியனும் செந்தூர் பாண்டியனும் குறுக்கே நின்றனர்.
"என்ன பெரியவரே... வழி தெரியாம வந்துட்டீங்களா? இது எங்க வீட்டு விசேஷம். இங்க உங்க வேலை எதுவுமில்லை," என செந்தூர் பாண்டியன் அரிவாளை வெளியே எடுத்தான்.
கலையரசன் வஞ்சகமாகச் சிரித்தார். "உன் மச்சான் தாலி கட்டுவான்... ஆனா அது இந்தப் பொண்ணு கழுத்துல இல்ல, எமன் பாசக்கயிறு தான் அவன் கழுத்துல ஏறும்! இப்பவே இந்தப் பந்தலைச் சுத்தி என் ஆளுங்க வெடிகுண்டோட நிக்கிறாங்க!"
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பூங்கொடி பயத்தில் இளமாறனை இறுகப் பற்றிக்கொண்டாள். ஆனால், இளமாறன் துளியும் பதட்டமில்லாமல் சிரித்தான்.
"வெடிகுண்டா? கலையரசன்... நீ பழைய ஆளுங்ககிட்ட பேசிட்டு இருக்க. உன் ஆளுங்க அஞ்சு பேரையும் என் மச்சான்ங்க ஆளுங்க எப்போவோ அமுக்கிட்டாங்க. அந்தப் பந்தல் ஓரமாப் பாரு!"
இளமாறன் கை காட்ட, அங்கே கலையரசனின் ஆட்கள் கை கால்கள் கட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு கலையரசன் முகம் வெளுத்தது.
"நீ என் கொடி சேலையைத் தொட்டு அவ மானத்தை எடுக்கப் பார்த்தல... அதே மேடையில, உன் கௌரவத்தை நான் காலி பண்றேன்டா!" எனச் சொல்லிய இளமாறன் மேடையிலிருந்து கீழே குதித்தான்.
"மச்சான்... ஆரம்பிங்கடா!" எனச் சொல்ல, இளஞ்செழியனும் செந்தூர் பாண்டியனும் கலையரசனின் பாதுகாவலர்களைத் துவம்சம் செய்யத் தொடங்கினர்.
இளமாறன் நேராகக் கலையரசனின் சட்டையைப் பிடித்துத் தூக்கினான். "உன் பொண்ணுக்காக ஒரு குடும்பத்தையே அழிக்கப் பார்த்தியே... இப்போ உன் பொண்ணு முன்னாடியே உன்னை இழுத்துட்டுப் போய் போலீஸ்ல ஒப்படைக்கப் போறேன்!"
சண்டையின் நடுவே, பூங்கொடி மேடையிலிருந்து இறங்கி வந்து இளமாறனின் கையைப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களில் இப்போது பயமில்லை, தன் அத்தான் மீதான பெருமை மட்டுமே இருந்தது.
இளமாறன் காட்டிய வேகம், கலையரசனை நிலைகுலையச் செய்தது. இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் கலையரசனின் அடியாட்களைச் சல்லடை போட்டுத் துவம்சம் செய்து, அவர்களைக் கட்டிப்போட்டனர்.
"உன் பணத்திமிரும், சாதி வெறியும் இனி இங்க செல்லாது கலையரசன்!" என்று கத்திய இளமாறன், அவரை இழுத்துச் சென்று ஊர் மந்தையில் இருந்த போலீஸ் ஜீப்பில் தூக்கிப் போட்டான்.
ஏற்கனவே இளமாறன் கொடுத்த புகாரின் பேரில், ஆதாரங்களுடன் வந்திருந்த காவல்துறையினர் கலையரசனையும் அவர் ஆட்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கலவரம் அடங்கியது. ஊர் மக்கள் முன்னிலையில் இளமாறன் பூங்கொடியின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றான்.
"முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு... ரெண்டு மாப்பிள்ளைகளும் தாலியை எடுங்க!" என ஐயர் குரல் கொடுத்தார்.
இளமாறன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகத் தாலியை ஏந்தினான். அவனுக்குச் சரிசமமாக பொற்செழியன், தன் காதலி ஜெயராணியின் கழுத்தில் தாலி கட்டும் ஆவலோடு நின்றான்.
பூங்கொடியும் ஜெயராணியும் ஒரே நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து தேவதைகள் போல அமர்ந்திருந்தனர்.
மேள தாளங்கள் முழங்க, கெட்டி மேளம் அதிர...
ஒரே நொடியில் இளமாறன் பூங்கொடி கழுத்திலும், பொற்செழியன் ஜெயராணி கழுத்திலும் மூன்று முடிச்சுகளை இட்டனர்!
கதிரேசன் மற்றும் சுப்பிரமணி தம்பதியர் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. மிதுனும் தூரிகாவும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
செந்தூர் தன் மனைவி அல்லிராணியை அணைத்துக்கொண்டான்.
மறுபக்கம் இளஞ்செழியன் தீபிகா இருவரும் மணமக்களை வாழ்த்தினர்.
கூடி நின்ற மக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். பூங்கொடியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். தன் அண்ணனும் ஜெயராணியும் இணைந்ததும், தானும் தன் அத்தானோடு இணைந்ததும் அவளுக்கு ஒரு மாபெரும் கனவு நனவானது போல இருந்தது.
திருமணம் முடிந்ததும் இளஞ்செழியனும், செந்தூர் பாண்டியனும் மேடைக்கு வந்தனர்.
"மாறா... எங்க தங்கச்சிய பத்திரமாப் பார்த்துக்கோ. இந்த ரெண்டு ஜோடியும் நல்லா இருக்கணும்!" என செந்தூர் பாண்டியன் நெகிழ்ச்சியுடன் கூறினான்.
இளஞ்செழியன் சிரித்துக் கொண்டே, "என்ன ... நம்ம மாப்பிளை தான் பொற்செழியன் கழுத்தை அறுக்காமத் தாலி கட்ட விட்டுட்டாரே, அதுவே பெரிய விஷயம்!" என கிண்டல் செய்ய, அங்கிருந்த இறுக்கம் தளர்ந்து சிரிப்பொலி எழுந்தது...
கலையரசனின் சதி முறியடிக்கப்பட்டது, கருணாகரனின் கொட்டம் அடக்கப்பட்டது. இறுதியில் காதலும், உடன்பிறந்தவர்களின் பாசமும் வென்றது. ஊரே போற்றும் வகையில் இந்த இரண்டு ஜோடிகளும் ஒரு முன்னுதாரணமான வாழ்க்கையைத் தொடங்கினர்...