அத்தியாயம் 29:
திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததில், அனைவர் முகத்திலும் ஆனந்தம் நிறைந்திருந்தது. ஊர் மக்கள் வந்து மணமக்கள் இருவரையும் ஆசீர்வதித்துச் சென்றனர்.
மாலை வேளையில் அனைவரும் பூங்கொடியின் வீட்டில் இருந்தனர். மணமக்கள் இருவரையும் தனித்து அமரவைத்துவிட்டு, மற்ற எல்லாரும் கூடி கூடி ரகசியமாகப் பேசினர். செந்தூர் வெளியே அலைபேசியில் யாருடனோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
பொற்செழியனும் இளமாறனும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து, "என்னடா நடக்குது?" என்பது போல் விழித்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த தீபிகாவும் இளஞ்செழியனும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர். இளமாறனுக்குக் கொலை வெறியானது.
"மச்சான், என்னன்னு சொல்லிட்டுச் சிரியா... கடுப்பாகுது!" என கூறினான்.
அவன் ஒன்றும் கூறாமல் தீபிகாவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, இளமாறனையும் பொற்செழியனையும் மாடிக்கு அழைத்துச் சென்றான்.
செந்தூரும் பேசிவிட்டு இவர்களுடன் வந்தான்.
இளமாறனின் பொறுமை காற்றில் பறந்தது. "போதும்யா நீ நட பழகுறது! எதுக்கு இப்படி நடக்குற?" என குறுக்கும் நெறுக்கும் நடந்து கொண்டிருந்த இளஞ்செழியனை கையைப் பிடித்து நிறுத்தினான்.
"அது வந்துடா... மாப்பிள்ளை... எப்படி சொல்றதுன்னு தெரியலை. அண்ணே! நீயே சொல்லு. நான் கீழே போறேன், என் பொண்டாட்டி என்னை தேடுவா!" என ஓடப் பார்த்தான்.
அவன் கையைப் பிடித்து நிறுத்திய செந்தூரன், "அடேய் சின்னப் பசங்ககிட்ட நான் எப்படிடா சொல்றது? நீயே சொல்லு!" என நிற்காமல் அவன் கீழே இறங்கிச் சென்றுவிட்டான்.
"யாராவது சொல்லுங்கப்பா!" என்ற ரீதியில் பொற்செழியன் கீழே அமர்ந்துவிட்டான். இளமாறன் மெதுவாக இளஞ்செழியன் அருகில் வந்து, "யோவ் மச்சான்... சரக்கடிக்க கூப்பிடியா?" என ரகசியமாகக் கேட்டான்.
அவனை மேலும் கீழும் பார்த்து ஒரு முறைப்பைப் பரிசளித்த இளஞ்செழியன், அவனையும் இழுத்துக் கீழே அமர்த்தித் தானும் அமர்ந்தான்.
அமர்ந்தவன் ஒன்றும் கூறாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். இந்த முறை பொற்செழியன், "டேய் மாறா! வாடா கீழே போவோம். அல்லிராணி அண்ணி கிட்டப்போய் கேட்போம். இவன் நம்மளை ஏதோ வயசு பொண்ணு மாதிரி குறுகுறுன்னு பார்க்கிறான்!" என இளமாறனை இழுத்தான்.
அவன் கூறியதில் இளமாறனுக்குச் சிரிப்பு பீறிட்டது. "சரி, இதற்கு மேல் கூறாவிட்டால் இவனுங்க ரெண்டு பேரும் தலையில கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்னுடுவானுங்க!" என நினைத்த இளஞ்செழியன், "அது ஒன்னுமில்லைடா... கல்யாணம் அவசர அவசரமா நடந்துடுச்சு.
அதான் இன்னைக்கு முதலிரவுக்கு நல்ல நாள் இல்லையாம். அதுனால ஒரு வாரம் கழிச்சு..." என இழுத்தான்.
அவன் கூறியதைக் கேட்ட இருவரும் படக்கென எழுந்தனர். "என்னது, முதலிரவு இன்னைக்கு இல்லையா?" என்ற ரீதியில் இளஞ்செழியனை முறைத்த மாறன், "மச்சான், நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்னயா பாவம் பண்ணோம்? இன்னைக்கு ஏப்ரல் பூல்லாம் இல்லையே... ஏன் மச்சான் இப்படி பொய் சொல்ற?" என வாய் ஓயாமல் புலம்பித் தள்ளினான்.
பொற்செழியன் ஒருபடி மேலே போய், "டேய்! உன்ன அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன்!" என கழுத்தைப் பிடித்தான். "அடேய் கொலைகாரப் பயலுகளா! விடுங்கடா என்னை. நேத்து வர 'அண்ணன்' தவிர அடுத்த வார்த்தை பேச மாட்ட... இன்னைக்கு ஒரு முதலிரவுக்காக அண்ணனையே கொல்லப் பார்க்கிறேடா!" என அவனை விலக்கி நிறுத்தினான்.
இளமாறனைத் திரும்பிப் பார்த்த பொற்செழியன், "ஏன் மச்சி நமக்கு மட்டும் இப்படி நடக்குது?" என கட்டிப்பிடித்துக் கண்ணீர் வடித்தான். இருவரும் சேர்ந்து ஒப்பாரி வைக்காத குறையாக அழுதனர்.
"அடேய் அடேய்! ரெண்டு பேரும் வாய மூடுங்கடா... கீழே இருக்கிற எல்லாருக்கும் கேட்கப் போகுது!" என இருவரையும் பிரித்து விட்டான் இளஞ்செழியன். "அதான் அடுத்த வாரம் முதலிரவு வைக்கலாம்னு சொல்லிட்டாங்கள்ள... ஒரு வாரம் தான்டா, வெறும் ஏழே நாள்!" என கூறியவனை கை நீட்டித் தடுத்த மாறன், "போதும் மச்சான் போதும்! நீ கீழே போ. அக்கா உன்னைத் தேடுவாங்க. நீ மட்டும் போய் ஜாலியா இரு!" என பிடித்துத் தள்ளினான். அவனும் சிரித்துவிட்டு கீழே சென்றுவிட்டான்...
இளஞ்செழியன் கீழே சென்றதும், மாடியில் பொற்செழியனும் இளமாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த "ஏழு நாள்" என்பது அவர்களுக்கு ஏதோ ஏழு யுகம் போலத் தெரிந்தது.
"என்னடா மாறா... இது அநியாயமா இல்ல? எல்லாருக்கும் ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயமா?" என்று பொற்செழியன் சோகமாக வினவினான்.
இளமாறன் தன் சட்டையைச் சரி செய்துகொண்டே, "விடு மச்சி... வீட்டுல எல்லாரும் நம்மள வச்சு செஞ்சிடாங்க".
இருவரும் ஒருவாறாகத் தேறிக்கொண்டு கீழே இறங்கினர். அங்கே வரவேற்பு அறையில் பெண்கள் கூட்டம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது.
செந்தூரன் இவர்களைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு மின்னியது.
"என்ன... மேல ஆலோசனை கூட்டம் முடிஞ்சா? அடுத்த வாரத்துக்கான பிளானா?" என செந்தூர் சீண்டினான்.
பொற்செழியன் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, "நீங்க பெரியவங்க... உங்களுக்கு இதெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும். ஆனா எங்க நிலைமைய யோசிச்சுப் பாருங்க," என முணுமுணுத்தான்.
அப்போது அங்கே வந்த முருகவள்ளி , "ஏன் ரெண்டு பேரும் இப்படி மூஞ்சியத் தூக்கி வச்சிருக்கீங்க? கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்துல இருக்காம இப்படி இருந்தா எப்படி?" எனக் கேட்க, இளமாறன் சமாளித்தான்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தை... சும்மா டயர்ட் ஆயிடுச்சு, அதான்" என பொற்செழியன் கூறினான்.
தீபிகாவும் அல்லிராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அவர்களுக்குத் தெரியும், மேலே என்ன நடந்திருக்கும் என்று. இளஞ்செழியன் கண்ணாலேயே அவர்களுக்கு 'டாஸ்க் கம்ப்ளீட்' என்பது போல சிக்னல் கொடுத்தான்.
பூங்கொடிக்கும் ஜெயராணிக்கும் இதை கூறிய போது அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இரவு உணவின் போது, அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். சாப்பாட்டு இலையில் அமர்ந்திருந்தாலும் பொற்செழியன் கவனமெல்லாம் அடுத்த வாரக் கணக்கிலேயே இருந்தது. அவன் மெதுவாகத் தன் போனை எடுத்து காலண்டரைப் பார்த்தான். "இன்னைக்கு திங்கள்... அப்போ அடுத்த திங்கள்கிழமை வரைக்கும் நாம இப்படியே 'டீசன்டா' சுத்திட்டு இருக்கணுமா?" என நினைக்கும்போதே அவனுக்கு அழுகை வந்தது.
சாப்பிட்டு முடித்ததும், செந்தூர் அனைவரையும் அழைத்து, "சரி, நாளைக்கு காலையில எல்லாரும் குலதெய்வம் கோயிலுக்குப் போறோம். அதனால சீக்கிரம் தூங்கப் போங்க," என்றான்.
"கோயிலுக்குப் போனா புண்ணியமாவது கிடைக்கும்... இந்த முதலிரவு பஞ்சாயத்து தீருமா?" என இளமாறன் மெதுவாகப் பொற்செழியன் காதில் கேட்க, இருவரும் மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டனர்.
இரவு நிலவு பிரகாசமாகத் தெரிந்தது, ஆனால் அந்தப் புது மாப்பிள்ளைகளுக்கு மட்டும் அது ஏனோ ஏப்ரல் பூல் நிலவாகவே தெரிந்தது!