அத்தியாயம் : 32
முதலிரவு முடிந்து விடிந்த அந்த அதிகாலைப் பொழுது, இளமாறன் மற்றும் பொற்செழியனின் முகங்களில் ஒரு தனிப் பொலிவைத் தந்திருந்தது. இரவு முழுவதும் நடந்த காதலும், சீண்டல்களும் அவர்களின் பிணைப்பை இன்னும் பலமாக்கியிருந்தது.
காலை உணவுக்காக அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, செந்தூர் பாண்டியன் தன் தம்பியையும் மச்சானையும் ஒரு தீர்க்கமான பார்வையால் அளவெடுத்தான்.
"என்னடா பொற்செழியா... நேத்து ராத்திரி ஜோசியர் சொன்னது எல்லாம் கரெக்டா நடந்ததா? இல்ல மறுபடியும் 'ஏப்ரல் பூல்' பண்ணனுமா?" என செந்தூர் கிண்டலாகக் கேட்க, பொற்செழியன் இட்லியை வாயில் வைத்தவன் அப்படியே திகைத்து நின்றான்.
பொற்செழியன் சிரித்துக் கொண்டே "அண்ணே... இனிமே நீ என்ன வேணா சொல்லு. இனிமே எதற்கும் அசர மாட்டான்! நேத்து ராத்திரி நடந்த 'பயிற்சி'யில நான் தேறிட்டேன்!" என ஜெயராணியைப் பார்த்து கண் அடிக்க, அவளோ வெட்கத்தில் தலை குனிந்தாள்.
அடுத்து இளமாறன் மெதுவாக காபி குடித்துக் கொண்டிருக்க, பூங்கொடியின் கண்கள் அவனையே வட்டமிட்டன. நேற்று இரவு அவன் கொடுத்த அந்த "தண்டனை" இன்னும் அவள் நினைவில் பசுமையாக இருந்தது.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், சுப்பிரமணியும், கதிரேசனும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசினார்கள்.
"இங்க பாருங்க பசங்களா... கல்யாண வேலைகள் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. அடுத்து இந்த ரெண்டு புது ஜோடிகளும் அவங்களுக்கான நேரத்தைச் செலவிடணும்," என்றார் சுப்பிரமணி.
"ஆமாம்... அதனால இளமாறன் - பூங்கொடி ஒரு பக்கமும், பொற்செழியன் - ஜெயராணி ஒரு பக்கமும் ஹனிமூன் போறதுக்கு நாங்களே ஏற்பாடு பண்ணிட்டோம்!" என கதிரேசன் ஒரு கவரை நீட்டினார்.
இளமாறனுக்கு மலைப்பிரதேசங்கள் பிடிக்கும் என்பதால் அவனுக்கு கர்நாடகா கூர்க்கும், பொற்செழியனின் துறுதுறுப்பிற்கு ஏற்ப அவனுக்குக் கேரளா மூணாறும் புக் செய்யப்பட்டிருந்தது.
"அப்பாடா! இங்கயாவது இவங்க கிட்ட இருந்து தப்பிச்சோமே!" என இளமாறன் பெருமூச்சு விட, அல்லிராணி சிரித்துக் கொண்டே, "அங்கேயும் நாங்க வருவோம்னு நினைக்காதீங்க... இந்த ஒரு வாரம் நீங்க மட்டும் தான்!" என்றாள்.
மதியமே கிளம்ப வேண்டும் என்பதால், இரு ஜோடிகளும் உற்சாகமாகத் தங்கள் துணிகளை அடுக்கி வைக்கத் தொடங்கினர்.
இளமாறனின் அறையில் பூங்கொடி துணிகளை அடுக்கிக் கொண்டிருக்க, இளமாறன் பின்னால் வந்து அவளை அணைத்துக் கொண்டான். "பூங்கொடி... வீட்லயே இவ்வளவு ரொமான்ஸ்னா, அந்தப் பனி படர்ந்த கூர்கல நாம எப்படி இருக்கப் போறோம்னு நினைச்சுப் பாரு," என அவன் காதோரம் கிசுகிசுக்க, அவள் அவனது கைகளைக் கிள்ளிவிட்டுச் செல்லமாக முறைத்தாள்.
இன்னொரு பக்கம், பொற்செழியன் தன் அறைக்குள் ஜெயராணியிடம், "ஏய் ஜெயா... மூணாறுல வெறும் தேயிலைத் தோட்டம் மட்டும் இல்லை, அங்க நம்ம ரெண்டு பேரோட காதல் தோட்டமும் தான் மலரப் போகுது!" என அதிரடியாகப் பேச, ஜெயராணி அவனது உற்சாகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
பொற்செழியன் - ஜெயராணி ஜோடி மூணாறுக்குக் கிளம்ப, இளமாறன் தனது காரிலேயே பூங்கொடியை அழைத்துக்கொண்டு கர்நாடகாவின் 'ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் கூர்க் நோக்கிப் பயணமானான்.
மலைப்பாதையில் கார் ஏறும்போதே, ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று பூங்கொடியின் முகத்தை வருடியது. அவள் அந்தப் பசுமையையும், பனியையும் ரசித்துக் கொண்டிருக்க, இளமாறன் ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி, மறு கையால் பூங்கொடியின் மென்மையான விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.
"என்ன பூங்கொடி... என்ன யோசனை? அங்க பாரு, காபி தோட்டங்கள் எவ்வளவு அழகா இருக்கு," என இளமாறன் கேட்க,
"அத்தான்... இங்க இருக்குற காத்துலேயே ஒரு மல்லிகை வாசம் தெரியுது. ரொம்ப நிம்மதியா இருக்கு அத்தான்," என அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் பூங்கொடி.
அவர்கள் புக் செய்திருந்த ரிசார்ட், அடர்ந்த காபி தோட்டங்களுக்கு நடுவில் ஒரு தனி பங்களா போல இருந்தது. மாலையில் அங்கு சென்றடைந்ததும், அறையைச் சுற்றிப் பார்த்த பூங்கொடி ஆச்சரியத்தில் உறைந்தாள்.
அறை முழுவதும் ரோஜா இதழ்களாலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜன்னலைத் திறந்தால், எதிரே மலைகளின் உச்சியில் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தன.
இரவு நெருங்க நெருங்க, கூர்க்கின் குளிர் ஆளை உலுக்கியது. பூங்கொடி குளித்துவிட்டு, ஒரு மெல்லிய சந்தன நிறப் புடவையில், ஈரக்கூந்தலோடு அறையினுள் வந்தாள். அவள் மேனியிலிருந்து வந்த அந்தச் சோப்பு வாசனையும், ஈரக்கூந்தலின் மணமும் இளமாறனை நிலைதடுமாறச் செய்தது.
இளமாறன் அவளருகே வந்து, அவளது இடையைச் சுற்றித் தன் கைகளைப் போட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளது ஈரக்கூந்தலை மெல்ல ஒதுக்கிவிட்டு, கழுத்தில் முத்தமிட்டான்.
"கொடி... இங்க இருக்குற குளிரை விட, உன்னோட இந்த நெருக்கம் தான் எனக்கு ரொம்ப சூடா இருக்கு," என அவன் காதோரம் கிசுகிசுக்க,
பூங்கொடி வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
"அத்தான்... யாராவது பாக்கப் போறாங்க," என அவள் வழக்கம்போலச் சொல்ல,
"இங்க நாம ரெண்டு பேர் மட்டும் தான் கொடி... இந்த மலை, இந்த மேகம், அப்புறம் நம்ம காதல் மட்டும் தான்!" எனச் சொல்லி அவளைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தினான்.
அவனது இதழ்கள் அவளது இதழ்களோடு மோத, பூங்கொடி தன் அத்தானின் ஆழமான முத்தத்தில் தன்னை மறந்தாள். வெளியே பெய்யும் மெல்லிய தூறலும், உள்ளே எரியும் காதலின் தணலும் அந்த இரவை இன்னும் அழகாக்கின. அந்த கூர்க் மலைப்பிரதேசத்தின் குளுமையில், இரு உயிர்களும் ஒன்றாகச் சங்கமித்தன...