அத்தியாயம் 35 :
கூர்க்கின் பனிச்சாரலையும், மூணாறின் தேயிலை வாசத்தையும் சுமந்துகொண்டு, இளமாறன் - பூங்கொடி மற்றும் பொற்செழியன் - ஜெயராணி ஆகிய இரு ஜோடிகளும் சரியாக மாலை நேரத்தில் வீட்டை வந்தடைந்தனர். வாசலிலேயே செந்தூர் பாண்டியன், அல்லிராணி, தீபிகா மற்றும் பெரியவர்கள் அனைவரும் ஆவலோடு காத்து நின்றனர்.
முதலில் காரிலிருந்து இறங்கிய இளமாறனைப் பார்த்ததும் செந்தூர் பாண்டியன் மெல்லச் சிரித்தான். "என்னடா மாறா... கூர்க்ல குளிர் அதிகமோ? மூஞ்சியெல்லாம் செம 'குளோ' (Glow) ஆகுது!" என வாரிவிட, இளமாறன் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே பூங்கொடியின் பக்கம் பார்த்தான்.
பூங்கொடி புதுப் புடவையில், கழுத்தில் மின்னும் தாலியோடும், முகத்தில் ஒருவிதமான பூரிப்போடும் இறங்கினாள். அவளது வெட்கம் அவள் அங்கு அனுபவித்த காதலைப் பறைசாற்றியது.
மறுபுறம், பொற்செழியன் காரிலிருந்து இறங்கும்போதே ஒரு "வெற்றி வீரன்" போல இறங்கினான். ஜெயராணி அவனைத் தொடர்ந்து வர, அவளது நடையிலேயே ஒரு புது கம்பீரம் தெரிந்தது.
"வா... வா... எல்லாரும் உள்ள வாங்க!" என அல்லிராணி ஆரத்தி எடுக்கத் தயார் செய்தாள்.
"ஜெயா... அங்க மூணாறுல கொழுந்தனாரு உன்னை நிம்மதியா தூங்க விட்டாரா? இல்ல அங்கேயும் ஏதாவது 'பஞ்சாயத்து' பண்ணிட்டு இருந்தாரா?" என அல்லிராணி ரகசியமாகக் கேட்க,
ஜெயராணி சிரித்துக் கொண்டே
"அக்கா... அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, இவருக்குப் பேச்சைக் காட்டிலும் 'செயல்' தான் அதிகம்னு! ஒரு நிமிஷம் கூட விடலக்கா," எனச் சொல்லிச் சிரிக்க, அங்கிருந்த பெண்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.
அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, பொற்செழியன் இளமாறனைப் பார்த்துச் சைகை செய்தான்.
"மச்சான்... நான் சொன்னது ஞாபகம் இருக்கா? யாரு முகத்துல காதல் களை அதிகமா இருக்குன்னு அண்ணன் செந்தூர் கிட்டயே கேட்டுடலாம்," எனப் பொற்செழியன் சவால் விட,
செந்தூர் பாண்டியன் எழுந்து வந்து இருவரையும் உற்றுப் பார்த்தான்.
"டேய்... நீங்க ரெண்டு பேருமே தோத்துட்டீங்கடா! ஏன்னா, உங்களை விட உங்க ரெண்டு பேர் பொண்டாட்டிங்க முகத்துல தான் அந்த சந்தோஷம் அதிகமா தெரியுது. அதனால நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் எங்களுக்கு ட்ரீட் வைக்கணும்!" எனத் தீர்ப்பு சொல்ல, அந்த இடமே கலகலப்பானது.
கூட்டம் கலைந்து இரவு உணவு முடித்த பின், இளமாறனும் பூங்கொடியும் தங்கள் அறைக்குச் சென்றனர். பல நாட்களுக்குப் பிறகு அந்தப் பழைய அறை, ஆனால் இன்று அது அவர்களுக்குப் புதியதாகத் தெரிந்தது.
"பூங்கொடி... ஹனிமூன் முடிஞ்சுடுச்சுன்னு கவலைப்படாத. இனிமே நம்ம இருக்குற ஒவ்வொரு நாளும் நமக்கு ஹனிமூன் தான்," என இளமாறன் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள,
"அத்தான்... எனக்கு உங்க கூடவே இருந்தா போதும்," எனப் பூங்கொடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில், அந்த அறையின் விளக்கு அணைய, மீண்டும் ஒரு காதல் கவிதை அங்கே அரங்கேறத் தொடங்கியது.
ஹனிமூன் முடிந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. இளமாறனும் பொற்செழியனும் தங்கள் வேலைகளில் பிஸியாகிவிட்டனர். ஆனால், மாலை வீடு திரும்பினால் அவர்களுக்குக் கிடைப்பது சொர்க்கம்தான். பூங்கொடியும் ஜெயராணியும் வீட்டைத் தங்கள் அன்பால் நிறைத்து வைத்திருந்தனர்.
அன்று காலை, சமையலறையில் பூங்கொடியும் ஜெயராணியும் வேலை செய்துகொண்டிருந்தனர். பூங்கொடி ஏதோ வேலையாக குனியும்போது, அவளுக்கு லேசாகத் தலைசுற்றுவது போல இருந்தது.
"என்ன பூவு... ஒரு மாதிரியா இருக்க? முகம் எல்லாம் வெளுத்துப்போய் கிடக்கு," என ஜெயராணி பதற்றத்துடன் கேட்டாள்.
"ஒன்னுமில்ல ஜெயா... காலையில இருந்து ஒரு மாதிரி குமட்டலா இருக்கு. காபி வாசம் கூட பிடிக்க மாட்டேங்குது," என பூங்கொடி சொல்ல, ஜெயராணியின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை மலர்ந்தது.
"இரு... இரு... எனக்கும் அதே மாதிரிதான் இருக்கு. நேத்து ராத்திரி எனக்கும் இதே போலத் தான் குமட்டல் வந்துச்சு. ஒருவேளை...?" என ஜெயராணி இழுக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புரிந்து கொண்டனர்.
அதே நேரம், ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த இளமாறனிடமும் பொற்செழியனிடமும், "டேய் இளமாறா! இங்க வாங்கடா!" என அல்லிராணி உற்சாகமாகக் கத்தினாள்.
அனைவரும் ஹாலில் ஒன்றுகூடினர். இளமாறனும் பொற்செழியனும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தனர்.
"என்னக்கா... ஏன் இவ்வளவு சத்தம்?" என இளமாறன் கேட்க,
"உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடிச்சிருக்குடா! உங்க ஹனிமூன் சவால்ல நீங்க ரெண்டு பேருமே ஜெயிக்கல... ஆனா இதோ, உங்க ரெண்டு பேர் மனைவிகளும் ஜெயிக்கப் போறாங்க!" என அல்லிராணி சொல்ல, இளமாறனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
பொற்செழியன் சட்டெனப் புரிந்து கொண்டு, "ஜெயா... நிஜமாவா?" எனத் தழுதழுத்த குரலில் கேட்க, ஜெயராணி வெட்கத்துடன் தலையாட்டினாள்.
அடுத்து இளமாறன் பூங்கொடியின் கண்களைப் பார்த்தான். அந்தப் பார்வையில் இருந்த ஈரமும், சிரிப்பும் அவனுக்கு உண்மையைச் சொன்னது. "கொடி... நான் அப்பா ஆகப்போறேனா?" எனச் சொல்லி அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.
சுப்பிரமணியும் கதிரேசனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். "நம்ம வீட்டுக்கு ஒரே நேரத்துல ரெண்டு வாரிசுங்க வரப்போகுது! இதை விட வேற என்ன சந்தேஷம் வேணும்?" என ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
அன்று இரவு, இளமாறன் பூங்கொடியின் வயிற்றின் மீது கை வைத்து, "பாரு கொடி... நம்ம காதல் இப்போ ஒரு உயிரா வளர்ந்துட்டு இருக்கு. இனிமே உன்னை நான் கண்ணுக்குள்ள வச்சுப் பார்ப்பேன்," என அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
மறுபுறம் பொற்செழியன், "ஏய் ஜெயா... இனிமே நீ எந்த வேலையும் செய்யக்கூடாது. அத்தான் நானே உனக்கு எல்லாம் செய்வேன். என் புள்ளை பிறக்கும்போதே ஒரு கராத்தே மாஸ்டர் மாதிரி வரணும்!" என அதிரடியாகச் சொல்ல, ஜெயராணி சிரித்துக் கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள்.
அழகாக செல்லும் அவர்கள் வாழ்வில் ஒரு பூகம்பம் வந்தாள்...