அத்தியாயம் 6:
மறுவீட்டு வைபவங்கள் முடிந்து அனைவரும் வீடு திரும்பியிருந்தனர்.
சில மாதங்கள் கழித்து...
வீடு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தாலும், ஒரு அறையில் மட்டும் அமைதியும் ஒருவித எதிர்பார்ப்பும் கலந்திருந்தது. அது செந்தூரன் - அல்லிராணியின் அறை.
செந்தூரன் கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது அறைக்குள் நுழைந்த அல்லிராணியின் முகம் வழக்கத்தை விட அதிகப் பொலிவுடன் காணப்பட்டது.
அவளது கைகள் எதையோ மறைப்பது போலப் பின்னால் இருந்தன.
அவளை நிமிர்ந்து பார்த்த செந்தூரன், "என்ன அல்லி? ரொம்ப நேரமா சமையலறையில வேலையா? முகம் ஒரு மாதிரி கலைப்பா தெரியுது, வந்து படு," என்றான் அக்கறையுடன்.
அல்லிராணி மெல்ல அவனருகில் வந்து அமர்ந்தாள். அவளது கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. ஆனால் அது துக்கத்தினால் வந்த கண்ணீர் அல்ல.
"அத்தான்... உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்," என மெல்லிய குரலில் திக்கினாள்.
அவளது பதற்றத்தைக் கண்ட செந்தூரன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.
"என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு எதுவும் முடியலையா? எனப் பதறினான்.
அல்லிராணி மெதுவாகத் தன் கையில் மறைத்து வைத்திருந்த அந்தப் பரிசோதனை கருவியை (Pregnancy Test Kit) அவனிடம் நீட்டினாள்.
அதில் இருந்த அந்த இரண்டு சிவப்பு கோடுகள் அவர்களின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைச் சொல்லாமல் சொல்லின.
அதைப் பார்த்த செந்தூரன் ஒரு நிமிடம் சிலையாக சமைந்து நின்றான். அவனுக்குப் பேச்சு வரவில்லை. அந்தக் கருவியையும் அல்லிராணியின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.
"அல்லி... இது... இது உண்மையா?" என அவன் குரல் தழுதழுக்கக் கேட்டான்.
அல்லிராணி தலையசைத்து "ஆமாங்க... நாம அப்பா அம்மா ஆக போறோம்," என்று கூறி அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
செந்தூரனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் நீண்ட முத்தம் ஒன்றை அளித்தான்.
"இதைவிட ஒரு பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவுமே இல்லை அல்லி" என்றான் நெகிழ்ச்சியுடன்.
சற்று நேரம் அந்த மௌனமான மகிழ்ச்சியில் திளைத்த செந்தூரன், சட்டென்று அவளை விலக்கி, "இரு... இரு... முதல்ல அப்பா,அம்மா, கொடி, தம்பிங்க, அத்தை, மாமா எல்லார்கிட்டயும் சொல்லணும்.
அப்புறம் அந்தப் பய இளமாறன்... அவன் மாமா ஆகப்போறான்னு தெரிஞ்சா குதிப்பான்!" என உற்சாகமாக எழுந்தான்.
"இருங்க... இப்போவே சொல்லணுமா? விடிஞ்சதும் சொல்லிக்கலாமே," என அல்லிராணி தடுக்க, "முடியாது அல்லி... இந்தச் சந்தோஷத்தை மனசுக்குள்ளேயே வச்சிருந்தா எனக்குத் தூக்கமே வராது," எனச் சிரித்துக் கொண்டே அவளை மீண்டும் ஒருமுறை அணைத்துக் கொண்டான்.
செந்தூரன் உற்சாகம் தாளாமல் தன் மனைவி அல்லிராணியின் கையைப் பிடித்துக் கொண்டு ஹாலுக்கு அழைத்து வந்தான்.
சில நேரம் அனைவரும் ஒரே வீட்டில் இருப்பதும் உண்டு. அவனது அப்பா, அம்மா, தம்பிகள், மாமனார், மாமியார், இளமாறன், ஜெயராணியும் பூங்கொடியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
"எல்லாரும் கொஞ்சம் கவனிங்க... ஒரு முக்கியமான விசேஷம்!" என செந்தூரன் உரத்த குரலில் சொல்ல, அனைவரும் பேச்சை நிறுத்திவிட்டு அவர்களை ஏறிட்டனர்.
"என்ன மாப்பிள்ளை? ராத்திரி நேரத்துல இவ்வளவு சத்தம்?" எனச் சிரித்துக்கொண்டே கேட்டார் சுப்ரமணி.
செந்தூரன் தன் மனைவி அல்லிராணியின் தோளில் கை போட்டுக்கொண்டு, "நம்ம வீட்டுக்கு ஒரு புது வாரிசு வரப்போகுது மாமா... அல்லி கர்ப்பமா இருக்கா!" என்று கண்கள் மின்னக் கூறினான்.
ஒரு நொடி அந்த இடமே நிசப்தமானது. அடுத்த நொடி...
உண்மையாவா அல்லி? எனக் கேட்டு தனலட்சுமியும், முருகவள்ளியும் ஓடி வந்து அல்லிராணியைத் தழுவிக் கொண்டனர்.
"என் கண்ணே... எவ்ளோ பெரிய சந்தோஷமான செய்தியை சொல்லிட்ட! இத்தனை நாளா ஒரு வாரிசுக்காக காத்துக்கிட்டு இருந்தேன்.
நம்ம வீட்டுக்கு மொத வாரிசு வர போகுது" என ஆனந்தக் கண்ணீருடன் மருமகளின் கன்னத்தைத் தடவினார், தனலட்சுமி.
சுப்ரமணி அவர்கள் அருகில் வந்து, "ரொம்ப சந்தோஷம்பா செந்தூரா! தாத்தாவாகப் போறேன்னு நினைக்கும் போதே மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு," என மருமகனின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
கதிரேசனும் மகனை அணைத்துக் கொண்டார். பொற்செழியனுக்கும், இளஞ்செழியனுக்கும் சித்தப்பா ஆக போகும் மகிழ்ச்சி...
அவர்களும் தனது அண்ணனை அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நான் சித்தி ஆகப் போறேன் என ஜெயராணியும் அவளது அக்காவை கட்டிக் கொண்டாள்.
இளமாறன் தன் மச்சான் செந்தூரனைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தான்.
"என்னது... எங்க அக்கா அம்மாவாகப் போகுதா? அப்போ நான் தாய்மாமன் ஆகப்போறேனா?" எனச் சொல்லிவிட்டுச் செந்தூரனைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
"வாழ்த்துகள் மச்சான்! ஆனா ஒன்னு... குழந்தை பிறந்தா கண்டிப்பா இந்த மாமன் மாதிரிதான் இருக்கணும். அப்போதான் வீடே கலகலப்பா இருக்கும்!" என அவன் வம்பிழுக்க, செந்தூரன் அவனை அணைத்துக் கொண்டான்.
பூங்கொடி ஓடி வந்து அல்லிராணியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். "அத்தாச்சி! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போவே எனக்குள்ள நிறைய ஆசை வந்துடுச்சு...
பாப்பாவுக்கு டிரஸ் எடுக்கணும், நான்தான் கூடவே இருந்து விளையாடுவேன்..." என உற்சாகமாகக் கூறினாள்.
அப்போது இளமாறன் பூங்கொடியின் காதருகே மெதுவாகச் சென்று, "பாத்தியா... என் அக்கா-மச்சான் அடுத்த லெவலுக்குப் போயிட்டாங்க. நாம இன்னும் கல்யாணத்துக்கே காத்துக்கிட்டு இருக்கோம். நாம எப்படியோ?" என ரகசியமாகச் சீண்டினான்.
பூங்கொடி சட்டென்று முகம் சிவந்து, "போங்க அத்தான்!" என அவனை மெல்ல இடித்தாள்.
தனலட்சுமி உடனே சமையலறைக்குச் சென்று ஒரு தட்டில் இனிப்புகளை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தார்.
"இன்னைக்கு இதுக்கு மேல ஒரு விசேஷம் இருக்க முடியாது. நாளைக்கே குலதெய்வம் கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்திடணும்," என உத்தரவு போட்டார்.
அந்த இரவு, அந்த வீடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. அல்லிராணியின் முகத்தில் ஒரு தாய்க்கே உரிய பெருமிதம் மின்ன, செந்தூரன் அவளை இமை மூடாமல் காதலுடன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
நாட்கள் வழக்கம் போல நகர்ந்தது....
அல்லிராணிக்கு ஆறாவது மாதம் தொடங்கி இருந்தது.
அன்று மாலை பொழுது. கல்லூரியில் வகுப்புகள் முடிந்து, பூங்கொடியும் இளமாறனின் தங்கை ஜெயராணியும் ஊருக்குத் திரும்பும் பேருந்துக்காகக் காத்திருந்தனர்.
அண்ணி அல்லிராணி விசேஷமாக இருப்பதால், அவருக்குப் பிடித்தமான சிலவற்றை வாங்கிக் கொண்டு இருவரும் பேருந்தில் ஏறினர்.
பேருந்து ஓரளவு கூட்டமாக இருந்தது. இருவரும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த ஊரின் பெரும்புள்ளி என சுற்றி கொண்டிருக்கும் கருணாகரன் தனது அடியாட்களுடன் பேருந்தின் பின் பக்கமாக வந்து ஏறினான்.
கருணாகரனுக்குப் பூங்கொடியின் மேல் நீண்ட நாளாவே ஒரு கண் உண்டு. இளமாறனுக்கும் அவனுக்கும் ஏற்கனவே சில கொடுக்கல் வாங்கல் முன்விரோதங்கள் இருந்தன.
பூங்கொடியைப் பார்த்ததும் கருணாகரன் மெதுவாக அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து நின்றான். அவனது பார்வை வக்கிரமாக அவளை அளவெடுத்தது.
"என்ன பூங்கொடி... காலேஜ் முடிஞ்சு வீட்ல போய் அத்தாச்சிக்கு பணிவிடை செய்யக் கிளம்பிட்டீயா? இல்ல அந்த இளமாறனுக்குப் பொண்டாட்டியா போறதுக்கு ட்ரைனிங் எடுக்குறியா?" என உரக்கக் கேட்டு வம்பு செய்தான்.
பூங்கொடியின் முகம் சுருங்கியது. "மரியாதையா பேசுங்க கருணாகரன்... இது பொது இடம்!" என எச்சரித்தாள்.
"பொது இடம்னு தெரிஞ்சுதான் பேசுறேன். அந்த இளமாறன் கிட்ட என்ன இருக்குன்னு அவனைச் சுத்திச் சுத்தி வர்ற? என்னைக் கட்டிக்கிட்டா மகாராணி மாதிரி வச்சிருப்பேன்," எனச் சொல்லி அவள் தோளைத் தொடக் கை நீட்டினான்.
பதறிப்போன ஜெயராணி, "என்ன பண்றீங்க? கையை எடுங்க," என கத்தினாள்.
"ஏய் சின்னப் பொண்ணு... நீ சும்மா இரு. உன் அண்ணன் கிட்ட போய் சொல்லு, இந்தக் கொடி எனக்குத்தான் சொந்தம்னு," என ஏகத்தாளமாகச் சிரித்தான் கருணாகரன்.
அப்போது, பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. யாரும் எதிர்பாராத விதமாக, புயலென உள்ளே நுழைந்தான் இளமாறன்.
தன் தங்கைக்கும் பூங்கொடிக்கும் பாதுகாப்புக்காக எப்பொழுதும் பின்னாடியே பைக்கில் வரும் இளமாறன், பேருந்து நின்றதும் ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்து உள்ளே வந்திருந்தான்.
கருணாகரன் பூங்கொடியின் கையைப் பற்ற முயன்ற அந்த நொடி, இளமாறனின் இரும்புக்கரம் அவன் மணிக்கட்டைப் பிடித்துத் திருப்பியது.
"என் வீட்டு பொண்ணு மேல கை வைக்கணும்னு நினைச்சாலே உன் கையை வெட்டுவேன்னு சொன்னேனே... ஞாபகம் இருக்கா கருணாகரன்?" - இளமாறனின் குரல் சிங்கத்தின் கர்ஜனையாக ஒலித்தது.
கருணாகரன் திமிற முயல, இளமாறன் ஓங்கி அவன் தாடையில் ஒரு குத்து விட்டான்.
கருணாகரன் நிலைகுலைந்து பேருந்தின் சீட்டுகளுக்கு இடையே விழுந்தான்.
"அத்தான் வேணாம்... விட்ரு... பிரச்சனை பெருசாகிடும்!" எனப் பூங்கொடி பயந்து போய் அவன் கையைப் பிடித்தாள்.
ஆனால் இளமாறன் அடங்குவதாக இல்லை. கருணாகரனின் சட்டையைப் பிடித்துத் தூக்கி, "மறுபடி இவங்க ரெண்டு பேரையும் சுத்தி எங்கயாவது உன்னைப் பார்த்தேன்... உயிரோட இருக்க மாட்ட!" என எச்சரித்து, அவனைப் பேருந்தில் இருந்து கீழே தள்ளினான்.
கருணாகரன் தரையில் விழுந்து, மூச்சிரைக்க எழுந்தான். "இளமாறா! எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சுட்ட இல்ல... இதுக்கு நீ பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்டா.
உன் குடும்பத்தையும், உன் கர்வத்தையும் நான் சிதைக்கல... என் பேரு கருணாகரன் இல்ல!" எனச் சபதம் போட்டுவிட்டு ஆத்திரத்துடன் சென்றான்.
பேருந்திற்குள் இருந்த அனைவரும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இளமாறன் பூங்கொடியையும் ஜெயராணியையும் பார்த்து, "பயப்படாதீங்க... வாங்க வீட்டுக்குப் போலாம்," என அவர்களை அழைத்துக் கொண்டு இறங்கினான்.
வீட்டிற்குச் செல்லும் வழியில் பூங்கொடி அமைதியாகவே வந்தாள். இளமாறனின் ஆத்திரம் அவளுக்குப் பெருமையாக இருந்தாலும், கருணாகரன் போட்ட சபதம் அவளுக்குள் ஒரு இனம் புரியாத பயத்தை விதைத்தது.
இந்தச் சண்டை குடும்பத்திற்குள் என்ன மாதிரியான பூகம்பத்தைக் கொண்டு வரப்போகிறது?