• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 24

STN 22

New member
அதேசமயம் அடிக்கடி வேலைக்கு விடுப்பு எடுத்தால் அது சம்யுக்தனுக்குச் சந்தேகத்தை வரவழைத்து விடும் என்பதை அறிந்திருந்தாள் பிரார்த்தனா.

அதனாலேயே அடுத்த நாள் கல்லூரிக்குக் கிளம்பத் தொடங்கி விட்டாள்.

அவளது அனைத்து செயல்களையும் கவனித்துக் கொண்டிருந்த சம்யுக்தனோ, தனது முதல் கல்யாணத்தைப் பற்றித் தூண்டித் துருவிக் கேட்டிருந்தாளே? ஆனால் அதைப் பற்றி அவள் தன்னிடம் அடுத்து எந்த உரையாடலையும் மேற்கொள்ளவில்லையே! என்ற ஆச்சரியம் மற்றும் ஆராய்ச்சிப் பார்வையுடன் அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டிருக்க,

அதை அறிந்தாலும் கூட வெளிக் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் வளைய வந்தாள் பிரார்த்தனா.

அதேபோல், அவனது முதல் மனைவியைப் பற்றிய தனது ஆராய்ச்சியைத் தன் கணவனிடம் யாரும் தெரிவித்து விடக் கூடாது என்று ஜெயராம், கலாவதி மற்றும் பிரதீபனிடம் கேட்டுக் கொண்டாள்.

அதனால் அவர்களும் அவனிடம் அதைப் பற்றி மூச்சு விடவில்லை!

இதையெல்லாம் அறியாமல், தனது மனையாள் தன்னை எப்படி காதலித்தாள்? எப்போதிருந்து காதலிக்கத் தொடங்கி இருந்தாள்? என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தான் சம்யுக்தன்.

ஆனால் அவளாகச் சொல்லாமல், தன்னால் அதை தெரிந்து கொள்ள முடியாது என்பதாலேயே தானும் மௌனமாக வேலைக்குக் கிளம்பி விட்டிருந்தான்.

“இன்னைக்கு நான் சாயந்தரம் வீட்டுக்கு வர லேட் ஆகலாம்த்தை. ஏன்னா, நேத்து லீவ் போட்டுட்டேன். எவ்வளவு வேலை முடிக்காமல் இருக்கேன்னுத் தெரியலை. அதான்”எனத் தன் மாமியாரிடம் கூறி விட்டு,

“நீங்க சாப்பிட்டீங்கன்னா நாம கிளம்பலாம்”எனக் கணவனிடம் தெரிவித்தாள் பிரார்த்தனா.

உடனே சாப்பாட்டு மேசைக்கு வந்து அவளது அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு,”அப்போ சாயந்தரம் வீட்டுக்கு எப்படி வர்றதாக ஐடியா?”என்று அவளிடம் வினவினான் சம்யுக்தன்.

“பஸ் இல்லைன்னா ஆட்டோவில் தான் வரனும்”எனப் பதிலளித்தாள் மனைவி.

“அதெல்லாம் வேண்டாம். நான் வெயிட் பண்ணி உன்னைக் கூட்டிட்டு வர்றேன்”என்றவனை வியப்பாகப் பார்த்தனர் மற்ற மூவரும்.

ஆனால் கணவனின் அந்த வார்த்தைகள் பிரார்த்தனாவிற்கு அதிர்ச்சி அளிக்கவில்லை!

ஏனென்றால் அவன் தன்னிடம் இயல்பாக நடக்கத் தொடங்கி விட்டான் என்பதைச் சில நாட்களாகவே அவனது சிறு, சிறு செயல்களின் மூலமாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

அதனால்,”பரவாயில்லைங்க”என்றவளைக் கையமர்த்தி,

“நான் தான் சொல்றேன்ல? நான் உன்னைக் கூட்டிட்டு வர்றேன்” என்று தீர்க்கமாக உரைத்து விட்டு உணவுண்டு முடித்ததற்கு அடையாளமாக கையைக் கழுவச் சென்று விட்டான் சம்யுக்தன்.

அதில் அவனை மெச்சும் பார்வைப் பார்த்து விட்டு,”ம்ஹ்ம். சரிங்க”என்றவளோ, தனது உணவையும் உண்டு முடித்து இருக்க,

“இங்கே என்ன நடக்குது?”என்று தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டுத் தனது அண்ணன், அண்ணியை ஆச்சரியமாகப் பார்த்தான் பிரதீபன்.

“என்னடா?”என்று அவனிடம் அதட்டலாக கேட்டான் சம்யுக்தன்.

“ஹாங்! ஒன்னுமில்லை அண்ணா”என்றவனோ, தனது கல்லூரிப் பையை எடுத்துக் கொண்டு வந்து விட்டு,

“நான் அடுத்த வாரம் என்னோட ஃப்ரண்ட்டோட சிஸ்டர் மேரேஜூக்குப் போகனும். அதனால் காலேஜூக்கு லீவ் போட்டுக்கிறேன்”என்று அனைவரிடமும் அறிவித்தான் பிரதீபன்.

உடனே,”சரிடா”என்றார் கலாவதி.

“அடுத்த வாரம் போறதுக்கு இப்போவே எங்ககிட்ட தகவல் சொல்லிட்டு இருக்கிறியேடா!”என்று மகனைக் கிண்டலடித்தார் ஜெயராம்.

“என்னை வேற என்னப் பண்ணச் சொல்றீங்கப்பா? இப்போவே சொல்லி வச்சா தான் நான் அன்னைக்குக் கிளம்பும் போது ஏன், எதுக்குன்னுக் கேட்க மாட்டீங்க. அதான்”என்று தன் தமையனை ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டே கூறி இருந்தான் பிரதீபன்.

அதை அவதானித்து விட்டு,”டேய்! நீ என்னை தானே ஜாடைமாடையாகப் பேசிட்டு இருக்கிற?”என்று அவனிடம் அதட்டிக் கேட்டான் சம்யுக்தன்.

உடனே,”ஐயோ! அப்படியெல்லாம் இல்லண்ணா. நான் எல்லாரையும் பொதுவாகத் தான் சொன்னேன்!”என்றுரைத்து விட்டு இதற்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்று தனது கல்லூரிப் பையை எடுத்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்று விட்டுக் கிளம்பிச் சென்றான் இளையவன்.

அதைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை ரசனையுடன் தழுவியது சம்யுக்தனின் விழிகள்.

கணவனின் பார்வையின் வித்தியாசத்தைக் கண்டு அவனைக் குறுகுறுப்புடன் ஏறிட்டாள் பிரார்த்தனா.

உடனே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,“காலேஜூக்கு டைம் ஆச்சு. வா, போகலாம்”என்று அவளை அழைத்தான் சம்யுக்தன்.

“ம்ஹ்ம். வர்றேன்ங்க”என்றதுமே,

ஜெயராம் மற்றும் கலாவதியிடம் சொல்லிக் கொண்டுக் கல்லூரிக்குக் கிளம்பி விட்டனர்.

“நீ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சம்யு நடந்துக்கிட்டதைப் பார்த்தியா கலாம்மா?”என மனைவியிடம் கேட்க,

“ஆமாங்க. பார்த்தேன். அவன்கிட்ட ஒரு மாற்றம் தெரியுது. பிரனாவைப் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சிட்டான். அவளுக்காகச் சின்னச், சின்ன விஷயங்களைக் கூடச் செய்யத் தொடங்கிட்டான்”என்று ஆச்சரியமாக கூறவும்,

“எனக்கு இப்போ நம்ம மருமகளோட முயற்சி வெற்றி அடையும்ன்ற நம்பிக்கை வந்துடுச்சு!”என அவரிடம் தெரிவித்தார் ஜெயராம்.

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு தான்ங்க. என்ன நடக்குதுன்னுப் பார்ப்போம்”என்றுரைத்து விட்டார் கலாவதி.

இதே வேளையில் தங்களது இரு சக்கர வாகனப் பயணத்தின் போது,”அப்போ நீ எங்கிட்ட அதைப் பத்தி இப்போதைக்குச் சொல்ல மாட்டே! அப்படித் தானே?”எனக் கேட்டான் சம்யுக்தன்.

அதில் அவளுக்குப் புன்னகை தோன்றி விட,”ஆமாம்!”என்று உறுதியாகப் பதிலளித்தாள் பிரார்த்தனா.

“அப்படின்னா அதை எப்போ சொல்லுவ? ஏதாவது தேதி! நாள்! இதையாவது எனக்கு முன்னாடியே சொல்லேன்”என அவளிடம் வேண்டுதல் வைக்க,

“அதெப்படி சொல்லுவேன்ங்க? அப்பறம் நீங்க அதையே நினைச்சு மத்த விஷயங்களைக் கவனிக்காமல் இருந்துடுவீங்களே! அதனால் நான் சொல்ற வரைக்கும் காத்திருங்க”என்று தீர்க்கமாக கூறி விட, அதற்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த விரும்பாமல் மௌனமாக வண்டியை இயக்கினான் சம்யுக்தன்.

சில நிமிடங்களில் கல்லூரியை அடைந்ததும், வண்டியில் இருந்து இறங்கி,”ஓகே, பை. ஈவ்னிங் பார்க்கலாம்”என அவனிடம் விடைபெற்று விட்டு உள்ளே சென்றாள் பிரார்த்தனா.

அவளைப் பொருமலுடன் பார்த்து விட்டுத் தன் வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்தி விட்டுத் தானும் கல்லூரிக்குள் நுழைந்தான்.

இங்கே பிரார்த்தனாவைப் பார்த்ததும்,”என்ன மேடம் நேத்து ஏதோ உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டு இருந்தீங்களே! இப்போ பரவாயில்லையா?”என்று அவளிடம் நலம் விசாரித்தாள் உத்ரா.

“இப்போ ஓகே தான் உதி”என்றிருந்தாள்.

“நேத்து சம்யுக்தன் சார் கிட்டே உன் ஹெல்த்தைப் பத்தி விசாரிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் அவரைப் பார்த்தாலே எனக்குக் கொஞ்சம் பயம். அதான். அவர்கிட்ட எதுவும் கேட்டுக்கலை”என்றவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் வகுப்பறைக்குச் சென்றாள் பிரார்த்தனா.

அவளது குறிக்கோளே, தனது கணவன் தன்னைப் பற்றிய சிந்தனையில் மட்டுமே ஆழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்து தான் தனது காதலைப் பற்றி அவனிடம் கூறி மேற்படி தகவல்களை அவனுக்கு விவரிக்காமல் விட்டிருந்தாள்.

ஏனென்றால், சம்யுக்தனின் எண்ணவோட்டங்கள் முழுவதும் தன்னைச் சுற்றியே இருந்தால் தான், தனது குறிக்கோள் நிறைவேறும் என்றெண்ணினாள்.

அப்போது தான், வசுமதியும், அவளது பெற்றோரும், தனது கணவன் மற்றும் புகுந்த வீட்டாரிடம் என்ன விஷயத்தை மறைத்த இருந்தார்கள் என்பதை தன்னால் கண்டறிய முடியும் என்று முடிவெடுத்து தான் தனது காதலைப் பற்றிய தகவலைச் சம்யுக்தனிடம் மேலோட்டமாகச் சொல்லி அதில் அவனது கவனத்தைப் பதிக்கச் செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுத் தன் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கி விட்டாள் பிரார்த்தனா.

ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்து கொண்டு அவளைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் சம்யுக்தன்.

அதே மாதிரி இடைவேளையின் போதும் கூட அந்தக் கல்லூரியின் இடங்களைச் சுற்றிப் பார்த்து, அவள் தன்னை எங்கிருந்து பார்த்துக் காதல் வயப்பட்டுப் போனாள் என்பதை எண்ணியவனோ, மதிய உணவு இடைவேளையின் போதும் தனது உணவை உண்டு கொண்டே அதே ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டிருந்தான்.

கணவனின் கண் முன்னால் இயல்பாக நடமாடுவதைப் போல் காட்டிக் கொண்டு அவனின் செயல்களை எல்லாம் கண்காணித்தாள் பிரார்த்தனா.

அவனது செய்கைகள் யாவுமே தன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளாகவே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து விட்டதும் அதை எண்ணி நிம்மதி அடைந்து விட்டு வேண்டுமென்றே பிறரது வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாலையில் கல்லூரியில் இருந்து கிளம்பும் நேரத்தை தாமதப்படுத்தவும்,

“நீ என்ன இன்னும் கிளம்பாமல் இருக்கிற பிரனா? இது யாரோட வேலை? நீ தான் எல்லாத்தையும் முடிச்சிட்டியே?”என்று அவளிடம் வினவினாள் உத்ரா.

“ஆமாம் உதி. ஆனால் இது சித்ரா மேடமோட வேலை. என்னைப் பார்த்து தரச் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க பொண்ணுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சாம். அதனால் எங்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லி வாங்கிட்டேன்”என்றவளை முறைத்துப் பார்த்து,

“நீ எதுக்கு இதையெல்லாம் உன் தலையில் வாங்கிப் போட்டுக்கிற பிரனா? இவங்க உனக்கு ஹெல்ப் தேவைப்படும் போது முன் வந்து செஞ்சிக் கொடுத்து இருக்காங்களா? அப்பறம் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற?”என அவளைக் கடிந்து கொள்ளவும்,

“அதுக்கு அர்த்தம்! நானும், அவங்களும் ஒன்னு இல்லையே உதி! நான் எப்பவும் ஸ்பெஷல் அண்ட் அவங்களை விட வித்தியாசமானவ! அதான்!”என்று கூறி அவளைப் பார்த்துக் கண்டித்தாள் பிரார்த்தனா.

“அது உண்மை தான்!”என்று கூறி அவளது தலையில் செல்லமாகத் தட்டி விட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கேயிருந்து கிளம்பி விட்டாள் உத்ரா.

உடனே தனது இதழ்கள் மலரப் புன்னகைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தவளுக்காகப் பார்க்கிங் ஏரியாவில் காத்திருந்த சம்யுக்தனோ,

அங்கே வந்து கொண்டிருந்த உத்ராவை,

“மேடம்!”என அழைக்க,

அதைக் கேட்டு வியந்தாலும்,”எஸ் சார்”என்றிருந்தாள்.

“என் வொய்ஃப் பிரார்த்தனா கிளம்பியாச்சா?”என்று அவளிடம் விசாரித்தான் சம்யுக்தன்.

“அவங்களுக்கு இன்னும் வேலை முடியலை சார். அதனால் கிளம்புறதுக்குக் கொஞ்சம் நேரமாகும்”என்றுரைத்தாள் உத்ரா.

“ஓஹ். தாங்க்யூ மேடம்”என்று அவளுக்கு நன்றி கூறி அனுப்பி வைத்து விட்டுத் தன் செல்பேசியை எடுத்து மனைவிக்கு அழைப்பு விடுக்க,

அதை அவதானித்ததும், உடனே ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ”என்றாள் பிரார்த்தனா.

“ஹலோ! இன்னும் எவ்வளவு நேரமாகும்?”என்றவனிடம்,

“இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்ங்க. ஏன் எனக்காக காத்திருக்க மாட்டீங்களா?”என்று வினவ,

உடனே,”நான் உனக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பேன்!”என்று தீர்க்கமாக உரைத்து விட்டிருந்தான் சம்யுக்தன்.

- தொடரும்
 
Top Bottom