• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
அதே சமயத்தில் தங்களது வீட்டிற்கு வெளியே மகிழ்ந்து வந்து நிற்கும் சத்தத்தைக்
கேட்டதும்,

“மணிம்மா! நம்ம வீட்டுக்கு முன்னாடி ஏதோ கார் நிக்குது. என்னன்னுப் போய்ப்
பார்த்துட்டு வர்றேன்”என்று தன் மனைவியிடம் உரைத்து விட்டு வாசலிற்கு வந்தார்
விஜயன்.

அங்கே காரிலிருந்து இறங்கிய தம்பதியரைப் பார்த்ததுமே அவர்கள் யாரென்று அவருக்கு
அடையாளம் தெரிந்து விட்டிருந்தது.

உடனே தனது முகத்தைச் சுருக்கிக் கொண்டு,’இவங்க ஏன் நம்ம வீட்டுக்கு
வந்திருக்காங்க?’என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டே இருந்தவரிடம்,

அங்கே வந்த அவரது கண்மணியோ,”ஏங்க! யார் வந்திருக்காங்க?”என்று கேட்டுக்
கொண்டிருக்கையில்,

“வணக்கம்ண்ணா. வணக்கம்மா”என்றவர்களைப் பார்த்து தானும் திகைத்துப் போய்
விட்டார்.

சில மணித் துளிகளிலேயே தங்களைச் சமாளித்துக் கொண்டு,

விஜயன்,“நீங்க?”என்று விஷயத்தைக் கேட்பதற்குள்,

“நாங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட முக்கிய விஷயம் பேசனும்னு தான் வந்தோம்.
உள்ளே போய்ப் பேசலாமா?”என்று தெளிவாக உரைத்தார் கலாவதி.

உடனே தன் மனைவியிடம் கண்களால் சம்மதம் வாங்கிக் கொண்டு,”சரி. உள்ளே
வாங்க”என்றார் விஜயன்.

உடனே தாங்கள் வந்திறங்கிய காரின் ஓட்டுநரிடம்,”நாங்க உள்ளே போய்ப் பேசிட்டு
வர்றதுக்குக் கொஞ்ச நேரம் ஆகும்ப்பா. அதனால் நீ போய் டீ குடிச்சிட்டு வா. பசிச்சா
சாப்பிட்டு வந்துரு”எனக் கூறி அவருக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு,
அவ்விருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்களுக்குக் காபி கொடுத்து உபசரித்து விட்டு,”நீங்க திடீர்னு எதுக்கு எங்க வீட்டுக்குச்
சொல்லாமல், கொள்ளாமல் வந்திருக்கீங்க?”என்று அவர்களிடம் கேட்டார் கண்மணி.

“நாங்க உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டா நீங்க தான் வர்றதே
இல்லையே? அதனால் தான் நாங்களே உங்களைப் பார்க்க வந்துட்டோம் அண்ணி”என்று
கூறிப் புன்னகைத்தார் கலாவதி.

அதில் சங்கடத்துடன் விஜயனும், கண்மணியும் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டனர்.

“என்ன விஷயமாக வந்திருக்கீங்க?”

“சந்தோஷமான விஷயத்தைப் பேசத் தான் வந்திருக்கோம்ண்ணா. உங்கப் பொண்ணு
வசுமதி எங்கே காணோம்?”என்று தன் கண்களைச் சுழற்றி அந்த வீட்டைச்
சோதனையிட்டார் கலாவதி.

“அவ வேலைக்குப் போயிருக்கா”என்று அவரிடம் கூறினார் கண்மணி.

அதைக் கேட்டதும் ஏமாற்றம் அடைந்தாலும், தன்னைச் சமாளித்து விட்டு,”சரிங்க
அண்ணி”என்றவரோ,

ஒருமுறை தனது தொண்டையைச் செருமிக் கொண்டு,”வசு கல்யாணத்துக்கு வரன் எதுவும்
பார்க்கிறீங்களா?”எனக் கேட்டார் கலாவதி.

அதில் தன் பார்வைக் கூர்மையுற,”இல்லை”என்று மொழிந்தார் விஜயன்.

உடனே தங்களது எண்ணம் ஈடேறி விடும் என்ற நம்பிக்கையுடன் தன் மனைவியைப்
பார்த்து மேலே பேசு என்று கண்களால் சைகை செய்தார் ஜெயராம்.

அதில்,”உங்கப் பொண்ணு வசுமதியை எங்கப் பையன் சம்யுக்தனுக்குக் கல்யாணம்
பண்ணித் தருவீங்களா?”என்று விஷயத்தை அறிவித்தார் கலாவதி.

அதைக் கேட்ட மற்ற இருவரும் பிரம்மித்துப் போனார்கள்.

கண்மணி,“என்னது? எங்கப் பொண்ணை உங்கப் பையனுக்குக் கட்டி வைக்க
கேட்கிறீங்களா? உண்மையாகவா?”

“ஆமா அண்ணி. அதுக்காக தான் நாங்க இவ்வளவு தூரம் வந்திருக்கோம்”என்றார்
கலாவதி.

“ஏன் உங்களுக்கு வேற எங்கேயும் பொண்ணுக் கிடைக்கலையா?”எனச் சந்தேகமாக
கேட்டார் விஜயன்.

அதில் முகம் சுருங்க,”அப்படியெல்லாம் இல்ல மச்சான். உங்க கூட சம்பந்தம்
வச்சுக்கனும்னு எங்களுக்கு ஆசை. அதான்”என்றுரைத்தார் ஜெயராம்.

“ஓஹோ! ஆனால் உங்க கூடச் சம்பந்தம் வைக்கிறதுக்கு எங்களுக்குத் தகுதி
இல்லையே”என்று மறுதலித்தார் விஜயன்.

“அப்படியெல்லாம் சொல்லி நல்ல சம்பந்தத்தைக் கை விடாதீங்கண்ணா. நகை நிறையப்
போடனுமேன்னு நினைச்சுக் கலங்காதீங்க. நாங்க அதையெல்லாம் எதிர்பார்க்க
மாட்டோம்! நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலந்து பேசிட்டு எங்களுக்குக் கால்
பண்ணுங்க. நீங்க இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக
இருக்கும்”என்று கூறித் தனது கணவருடன் விடைபெற்றுக் கொள்ள யத்தனித்தார்
கலாவதி.

உடனே,”நில்லுங்க. நாங்க இப்போவே பேசிட்டுச் சொல்றோம்”என்ற கண்மணியோ,
தனது கணவனை அழைத்துக் கொண்டுத் தனியாகச் சென்று,

“ஏங்க! அவங்களே நம்ம வீடு தேடி வந்து பொண்ணுக் கேட்டு இருக்காங்க! நாம ஒன்னும்
அவங்க வீட்டுக்குப் போய் அவங்க கிட்ட சம்பந்தம் பேசலையே? அப்பறம் என்ன? நம்ம
வசுவை இவங்க பையனுக்கே கட்டிக் கொடுத்திடலாம். அப்போ தான், அவளும் நல்லா
இருப்பாள். இப்போ கஷ்டப்பட்டு வேலைக்குப் போற மாதிரி கல்யாணத்துக்கு
அப்பறமும் போகத் தேவையில்லை. அங்கே ராணி மாதிரி இருப்பாள். அதுவும் நகையும்
வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இதுக்கும் மேலே நமக்கு என்ன வேணும்?”என்றவரிடம்,

“நானும் அதை தான் யோசிச்சேன்ம்மா. ஆனால் எதுக்கும் வசுகிட்டே கேட்டுட்டுச்
சொல்லிக்கலாம்னு நினைச்சேன்”என்றார் விஜயன்.

“அவகிட்டே கேட்டாலும் நாம நினைச்சதை தான் அவளும் சொல்லவா? அதனால்
இப்போவே இவங்க கிட்ட சம்மதம்ன்னு சொல்லிடுவோம்”என்று இருவரும் கூடத்திற்கு
வந்தனர்.

அவர்களது மலர்ந்த முகத்தைக் கண்டதுமே தாங்கள் எதிர்பார்த்த பதிலைத் தான் அவர்கள்
கூறப் போகிறார்கள் என்று மகிழ்ந்து போயினர் ஜெயராமும், கலாவதியும்.

“எங்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் பரிபூரண சம்மதம்! வசுகிட்டே கேட்கவே
தேவையில்லை! அவ நாங்க சொன்னதை மறுக்காமல் கேட்டு நடப்பாள். அதனால் நீங்க
போய்ப் பொண்ணுப் பார்க்க வர்றதுக்கான நாளைக் குறிச்சு சொல்லுங்க”என்று
புன்னகையுடன் கூறினார் கண்மணி.

அதைக் கேட்டு,” எங்களைக் காக்க வைக்காமல் இப்போவே பதிலைச் சொன்ன
உங்களுக்கு ரொம்ப நன்றி”என்றார் ஜெயராம்.

விஜயன்“அப்பறம் மதிய சாப்பாடு?”என்றவரிடம்,

“ஏதாவது ஹோட்டலுக்குத் தான் போய்ச் சாப்பிடனும்ண்ணா”என்றுரைத்த
கலாவதியிடம்,

“என்னம்மா நம்ம வீட்டுக்கு வந்துட்டு ஹோட்டலில் சாப்பிடப் போறேன்னு
சொல்லிக்கிட்டு! நீங்க இங்க தான் சாப்பிடனும்”எனக் கறாராகச் சொல்லி அவர்களுக்கு
உணவுப் பரிமாறி உண்ண வைத்து அவர்களது வாகன ஓட்டியும் வந்து விட
அவ்விருவரையும் மகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்கள் வசுமதியின் பெற்றோர்.

காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தங்களது இளைய மகன் அழைத்து
விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் ஜெயராம்.

“சூப்பர் ப்பா! இனிமேல் அண்ணன் கல்யாணத்தைப் பத்தி நமக்குக் கவலையே இல்லை.
மத்ததை வீட்டுக்கு வந்து சொல்லுங்க”என்று தானும் மகிழ்ச்சியுடன் பேசி விட்டு
வைத்தான் பிரதீபன்.

அதற்குப் பின், தாங்கள் திருமண விழாவிலேயே மதிய உணவை உண்டு விட்டு ஊருக்குத்
திரும்பிக் கொண்டிருப்பதைச் சம்யுக்தனுக்கு அழைத்து தெரிவித்து விட்டார் கலாவதி.

ஒரு மணி நேரப் பயணம் முடிந்ததும் தாங்கள் வந்திருந்த வாடகை காருக்கான பணத்தைக்
கொடுத்து அனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்தனர் இருவரும்.

“ஹப்பாடா! போன காரியம் நல்லபடியாக முடிஞ்சது. இப்போ தான் எனக்கு நிம்மதியாக
இருக்குங்க”என்ற தன் மனைவியிடம்,

“ஆமாம்மா. ஒரு வழியாக நம்மளோட பெரிய கவலை தீர்ந்துடுச்சு”என்றுரைத்தார்
ஜெயராம்.

“ஆனா சம்யுவைப் பத்தி அவங்க கிட்ட பேசிட்றது நல்லதுன்னு எனக்குத்
தோணுதுங்க”என அவரிடம் பகிர்ந்து கொள்ள,

“அவங்களுக்குக் கால் செஞ்சிப் பேசிரு”என்றுரைத்து விட,

“இப்போ தானே வீட்டுக்கு வந்தோம். சாயந்தரம் அவன் வர்றதுக்குள்ளே
பேசுறேன்”என்று கூறி விட்டார் கலாவதி.

அதே சமயம் மாலை நேரம் வேலை முடிந்து தனது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த
மகளை,”வசும்மா! வேலை முடிஞ்சு வந்துட்டியா?”மிகவும் அன்பொழுக வரவேற்றார்கள்
அவளது பெற்றோர்.

“ரொம்ப களைப்பாகத் தெரியுறியே! டீ போட்டுத் தரவா?”என அவளிடம் அக்கறையுடன்
வினவினார் கண்மணி.

அதில் குழப்பம் அடைந்து,”என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி வித்தியாசமாக
நடந்துக்கிறீங்க? நான் தினமும் தான், வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துட்டு
இருக்கேன். இன்னைக்கு மட்டும் இப்படி என்னைப் பாசமாக வரவேற்கிறது

மட்டுமில்லாமல் உபசரிக்க வேற செய்றீங்களே! எதனால்?”என அவர்களிடம் கேட்டாள்
வசுமதி.

“நீ முதல்ல மூஞ்சியைக் கழுவிட்டு வா. டீ போட்டுக் கொண்டு வர்றேன். அதைக்
குடிச்சிட்டே பேசலாம்”என்று கூறி அவளை அனுப்பி வைத்து விட்டுத் தாங்கள்
மூவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தார் கண்மணி.

அதேபோல், தானும் முகம் கழுவி விட்டு வந்து விட்டிருந்தாள் வசுமதி.

“இந்தா குடி”என்று அவளிடம் தேநீர்க் குவளையைக் கொடுத்து விட்டுத் தங்களுக்கு
உரியதை எடுத்துக் கொண்டனர் மற்ற இருவரும்.

“இப்போதாவது சொல்லுங்களேன்!”என்று அவர்களிடம் எரிந்து விழுந்த மகளிடம்,

“நான் சொல்றேன்”என்று ஜெயராம் மற்றும் கலாவதியின் வருகையைப் பற்றியும்,
அதற்குப் பிறகு நடந்த அனைத்தையும் அவளுக்கு விவரித்தார் விஜயன்.

அதைக் கேட்டதும்,”என்ன சொல்றீங்க? அவங்களாகவே வந்து உங்ககிட என்னைப்
பொண்ணுக் கேட்டாங்களா?”என்று நம்ப முடியாமல் வினவினாள் வசுமதி.

“ஆமாம் டி! அதை தானே உங்கப்பா இவ்வளவு நேரம் சொன்னார்”என்றார் கண்மணி.

“அவங்களுக்குத் திடீர்னு நம்ம மேல் இவ்வளவு பாசம் எப்படி வந்துச்சு?”எனக்
கேட்டவளிடம்,

“பாசம் எல்லாம் ஒன்னும் இருக்காது! அவங்க பையனுக்குப் பொண்ணுக் கிடைக்கலை
போல. அதைச் சொல்ல தயக்கம். அதான்”எனப் பதிலளித்தார் விஜயன்.

“ஓஹ்! அப்பறம், நான் மட்டும் அவனை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?
அவனுக்கு ஏதாவது குறை இருக்குமோ?”என்றாள் சந்தேகமாக.

“அப்படியும் இருக்குமோ? அவசரப்பட்டு அவங்களுக்கு ஓகே சொல்லிட்டோமோ?”என்று
கலக்கத்துடன் கூறிய கண்மணிக்கு,

“நீ பேசாமல் அவங்களுக்குக் கால் செஞ்சி இந்த விஷயத்தைக் கேட்ரு. அது தான்
நல்லது”என்று அறிவுறுத்தினார் கணவர்.

அதே நேரத்தில், தனது செல்பேசி ஒலிப்பதை அவதானித்து அதை எடுத்துப்
பார்த்தவரோ,”கலாவதி தான் கால் பண்றாங்க”என்று மற்ற இருவரிடமும் கூற,

“எடுத்துப் பேசு மணி”என அவரை அவசரப்படுத்தினார் விஜயன்.

உடனே, அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க,”உங்களைத் தொல்லைப்
பண்ணிட்டேன். சாரி அண்ணி”என்று மன்னிப்புக் கோர,

“பரவாயில்லைம்மா. என்ன விஷயமாக கூப்பிட்டு இருக்கீங்க?”என்று விசாரிக்க,

உடனே அவரிடம் தனது மகன் சம்யுக்தனின் சுபாவம் மற்றும் குணாதிசயத்தைப்
பற்றியும், அவனது விதிமுறையையும் அவரிடம் கூறி முடித்தார் கலாவதி.

அதைக் கேட்டதும் தனது முகம் மலர,”ஓஹோ இது தான் விஷயமா? இதைச் சொல்லத்
தான் தயங்கிட்டு இருந்தியா? என்னம்மா நீ? எங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையும்
இல்லை! எங்கப் பொண்ணோட குணமும் கிட்டத்தட்ட இப்படித் தான் இருக்கும்.
அதனால் இந்த சம்பந்தத்தை நாங்க உறுதி செய்றோம். நீ கவலைப்படாமல் மத்த
வேலையைப் பாரும்மா”எனச் சொல்லி அழைப்பை வைத்து விட்டு அந்த உரையாடலைத்
தனது கணவர் மற்றும் மகளிடம் பகிர்ந்து கொண்டார் கண்மணி.

- தொடரும்
 
Top Bottom