• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 17

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 17

என்னுடனே இவ்வாறெல்லாம் கதைக்கிறவள் அம்மாவோட என்னவெல்லாம் கதைத்தாளோ என நினைத்தவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் ஏற்பட்டது. ஆத்திரத்துடன் கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கமும் வர மறுத்தது. அவள் கதைத்ததிலேயே மனம் கிடந்து உழன்றது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதை அவள் ஒரு விதமான ஏளனமாகப் பார்த்தாளோ…! இப்படித் தான் மற்றவர்களும் நினைப்பார்களோ…! நான் திருமணம் செய்யாமல் இருப்பதை மற்றவர்கள் அனுதாபத்துடன் பார்க்கிறார்களோ…! எனது திருமணத்தைப் பற்றி யாரும் அம்மா வருத்தப்படுவது போல் கதைத்திருப்பார்களோ…? இவ்வாறு பல விதமான சிந்தனைகளுடன் அங்கும் இங்குமாக திரும்பி திரும்பி படுத்தவன், அதிகாலையில் தான் உறக்கத்திற்கு சென்றான்.

அடுத்த நாள் காலை சௌமி வீட்டுக்காரர் பயணம் புறப்படும் போது, வாகனத்தில் பொருட்களை ஏற்றுவதற்கு உதவி செய்ய அகிலன் வருவதாக கூறியிருந்தான். எனவே காலையில் எழுந்து தயாராகி, அறையைவிட்டு வெளியே வந்தவன், தேநீர் அருந்துவதற்கு சமையலறைக்குச் சென்றான். அங்கே அவனின் தாய் எழும்பியதற்கான அறிகுறிகளை காணவில்லை. எனவே ‘அம்மா’ என்றவாறு தாயின் அறையை எட்டிப் பார்த்தான்.

அங்கே அவர் கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். தன்னைப்போல் அவரும் நேற்றிரவு நீண்ட நேரம் தூங்காமல் யோசிச்சு கொண்டிருந்திருக்கிறார் போல என்று எண்ணியவன் அவரை எழுப்ப மனம் இல்லாமல், தேநீர் அருந்தாமலே சௌமி வீட்டுக்குச் சென்றான்.

அங்கே அவர்கள் புறப்படுவதற்காக வெளிக்கிட்டு தயாராகி, வாகனத்தில் பொருட்களை ஏற்றுவதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

அகிலனைக் கண்ட சகுந்தலா “வா அகில்…, பத்மா எங்க…?” எனக் கேட்டார்.

“அம்மா இன்னும் எழும்பல…” என்றவன் தொடர்ந்து,

“எல்லாரும் ரெடியாயிட்டீங்கள் போல...” என விசாரித்தான்.

“ம்.. நாங்கள் ரெடி தான், இன்னும் வாகனத்தை காணேல்ல... ” என்றார் அவர்.

உள்ளே அவளது பையை சரி பார்த்துக் கொண்டிருந்த சௌமி, அகிலனின் குரலைக் கேட்டவுடன் வெளியே வந்தாள். அவள் வந்த அரவம் கேட்டும் அவன் அவளைத் திரும்பியும் பார்க்காதவன், அவர்கள் கொண்டு செல்வதற்காக எடுத்து வைத்திருக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வெளியே லிஃப்டிற்கு அருகில் வைத்துக் கொண்டிருந்தான்.

அவன் தன்னைப் பார்க்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சௌமி, அவன் முகம் கோபத்தில் இறுகி கிடந்ததை கவனிக்கத் தவற இல்லை. அவனின் ஆத்திரம் புரிந்தாலும், அவன் தன்னை புறக்கணிப்பதை எண்ணி வேதனைப் பட்டாள்.

சற்று நேரத்தில் வாகனம் வந்துவிட அகிலன் மேலே இருந்து பொருட்களை கீழே எடுத்துச் சென்று கொண்டிருந்தான் . சகுந்தலாவும் சௌமியும் மேலே நின்று பொருட்களை எடுத்து வைப்பதில் அகிலனுக்கு உதவிக் கொண்டிருக்க, ரவீந்திரன், கீழே நின்று உதவிக் கொண்டிருந்தார். எல்லாப் பொருட்களையும் கீழே எடுத்துச் சென்ற பின்னர் “சௌமி கதவைப் பூட்டிக் கொண்டு வா…, கீழ போவம் ” என்றார் சகுந்தலா.

“நீங்க போங்க பெரியம்மா…, நான் உள்ள போய் எல்லா லைட்ஸையும் ஒஃவ் பண்ணிட்டு, கதவையும் பூட்டிக் கொண்டு வாறன் ” என்றாள்.

“சரி ” என்று அவர் லிஃப்டுக்குள் செல்லவும், வீட்டுக்குள் வந்த சௌமி எல்லா அறைகளையும் சரி பார்த்துவிட்டு, வெளியே வந்து கதவைப் பூட்டவும், ஏதாவது தவற விடப்பட்டுள்ளதா எனப் பார்ப்பதற்காக அகிலன் வந்தான்.

“எல்லாம் எடுத்தாச்சா…?” என பூட்டிய கதவைப் பார்த்தவாறு, அந்நிய தன்மையுடன் வினாவினான்.

அவன் தன் முகத்தை கூட பார்க்க வில்லை என்ற கவலையுடனும் அவனை விட்டு விலகிச் சென்று அவனுடன் கதைக்காமல் அவனைப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்ற நெஞ்சு நிறைந்த வேதனையுடனும் இருந்தவள், அவனது கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனது முகம் கடுகடுவென இருந்தது, அந்த அலட்சியத்தை தாங்க முடியாமல் அவள் கண்கள் நீரால் நிறைந்தது.

அவள் தன்னையே வைத்த கண் வாங்காது பார்த்தவாறு நிற்பதைப் கண்டவன், தங்களை யாராவது பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான், அவளது விழிகளிர் நீர் நிறைந்து நிற்பதைப் பார்த்தவனுக்கு, எரிச்சல் ஏற்பட விறுவிறு என நடந்து லிஃப்டிற்கு அருகில் சென்று பட்டனை அழுத்தினான்.

அவள் பின்னே ஓடி வந்தவாறு “அகி...” என்றாள் குரலடைக்க.

லிஃப்ட் திறக்க அவளைத் திரும்பியும் பாராமல் அதனுள் சென்றான் அகிலன். அவனைத் தொடர்ந்து உள்ளே சென்ற சௌமி, விழிகளில் நிரம்பி நின்ற நீர் கன்னத்தில் வடிய, “அகி…” என்றவாறு தனது இரு கரங்களாலும் அவனின் வலது கையை பற்றினாள்.

இதை எதிர் பாராதவன் திகைத்தவாறு “என்ன செய்றாய் கைய விடு யாராவது பார்க்கப் போயினம்” என்றவாறு விரைவாக தனது கையை உதறி அதை விடுவித்துக் கொண்டான். அவன் மானம், மரியாதையை வெகுவாக எதிர்பார்ப்பவன். எல்லோரிடமும் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவன், அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பவன். அவன் தனக்குத் தெரிந்த அளவில் எல்லாவற்றையும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும் என எண்ணுபவன், யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் தவறாக நினைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். அப்பிடியானவனின் கையை அவள் பிடித்ததும் சற்று மட்டுப் பட்டிருந்த அவன் ஆத்திரம் பெருகியது. “திடீரெண்டு ஆரும் உள்ள வந்தால் என்ன நினைப்பினம்…?” கோபத்தில் சிவந்த கண்களோடு உறுமினான்.

அவன் அவ்வாறு கையை உதறி விடுவித்துக் கொள்வான் என எதிர்பார்க்காதவள், திகைத்து, தடுமாறியவாறு நின்றவளுக்கு, அவனின் சீற்றத்தில் உடல் நடுங்கியது, அழுகை பெருகியது.

லிஃப்ட் திறக்கவும் அவளைத் திரும்பியும் பாராமல் வேகமாக வெளியேறினான்.

கண்களைத் துடைத்து, மூச்சை நன்றாக உள் எடுத்தவாறு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, அவளும் மெதுவாக வெளியேறினாள்.

யாரிடமும் எதுவும் பேசாமல் வாகனத்தில் ஏறி ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் எல்லோருடனும் விடை பெற்றுக் கொண்ட சகுந்தலாவும் ரவீந்திரனும் வானத்தில் ஏற, அது புறப்பட்டது.

அவர்களை வழி அனுப்பிவிட்டு, பெருமூச்சை விட்டவாறு வீட்டினுள் “அம்மா…” என்றபடி நுழைந்தான் அகிலன்.

அவரிடமிருந்து எந்த பதிலும் வராதபடியால், அவருக்கு என் மீது கோபமோ… அது தான் பதில் கூறவில்லை போலும் என நினைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு, காலை எழுந்ததிலிருந்து தேநீர் கூட அருந்தாத படியால் தாகம் எடுத்தது. நீர் அருந்துவதற்காக சமையலறைக்கு சென்று நீர் குடித்தவன், தாய் சமையலறைக்குள் வந்தது போல் தெரியவில்லையே.... இன்னுமா தூக்கத்தில் இருந்து எழும்ப வில்லை என எண்ணியவாறு, தாயின் அறைக்குள் ‘அம்மா’ என்றவாறு சென்றான்.

அங்கே தூங்கிக் கொண்டிருந்த தாயைக் கண்டவன், அவர் அருகில் சென்று, ‘அம்மா’ என கூப்பிட்டுக் கொண்டு அவரின் கையைப் பிடித்து அவரை எழுப்ப முயன்றவன், அவர் எந்தப் பதிலும் அசைவுமின்றி மயக்கத்தில் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தான்.

“அம்மா… அம்மா” என்றவாறு பதட்டத்துடன் அவரை உலுக்கினான். அருகில் இருந்த நீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்தான். அவரிடமிருந்து எந்த அசுமாற்றமும் இல்லை. சற்று நேரம் பதட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் நின்றவன், பக்கத்து வீட்டுக்குச் சென்று அவர்களை அழைத்து வந்தான். அவர்களும் வந்து பார்த்துவிட்டு, ‘வைத்தியசாலைக்கு கூட்டிக் கொண்டு போவம்’ என்றார்கள். உடனே அகிலன் தனது டாக்டர் நண்பனுக்கு அழைப்பை ஏற்படுத்தி, விவரம் கூறி என்ன செய்வது என விசாரித்தான். அந்த நண்பரும் ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைவாக அழைத்துச் செல்லும் படி கூறவும் அவன் அவ்வாறு செய்தான்.

அங்கே அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு குளுக்கோஸ் அளவு நன்றாக குறைந்துவிட்டது, நல்ல காலம் மேலும் தாமதிக்காமல் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தீர்கள் என கூறி அதற்குரிய சிகிச்சைகளை ஆரம்பித்தார்.

சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் அறைக்கு வெளியே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த அகிலனுக்கு ‘நன்றாக இருந்தவருக்கு ஏன் திடீரென இவ்வாறு நடந்தது’ என்ற எண்ணம் தான்.

குளுக்கோஸ் அளவு குறைந்ததற்கு மன அழுத்தமும் ஓர் காரணம் என டாக்டர் கூறியதில் இருந்து, தன்னால் தான் இதெல்லாம் நடக்குது என எண்ணி, மிகுந்த மன உளைச்சல் அடைந்தான்.

எல்லாம் சௌமியால் தான் என நினைத்தவனுக்கு, அவள் மீது கடும் சீற்றம் உண்டாகியதில், கண்கள் சிவந்து, நரம்புகள் புடைத்ததன. கைகளை இறுக மூடிக் கொண்டான். அவளை சிறு பிள்ளை என நினைத்து அன்பாக பழகியது தவறு என உணர்ந்தான். தான் எவ்வளவோ கூறியும் கேளாது, தன் சொல்லுக்கு கொஞ்சமேனும் மதிப்பு கொடுக்காமல், அவள் தனது விருப்பம் தான் முக்கியம் என்று இருப்பதில் அவனுக்கு அவளில் வெறுப்பு தான் ஏற்பட்டது. அவள் மீது அகிலன் வைத்திருந்த நம்பிக்கை, மதிப்பு, மரியாதை, எல்லாவற்றையும் அவள் ஒரு கணப்பொழுதில் இழந்தது மாத்திரமில்லாமல் வெறுப்பையும் சம்பாதித்து விட்டாள்.

அவனின் டாக்டர் நண்பர் உட்பட ஒரு சில நெருங்கிய நண்பர்கள் அவனுக்குத் துணையாக வைத்தியசாலைக்கு வந்தனர். அவனின் குடியிருப்பில் உள்ளவர்களும் அவனுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் தாய் இவ்வாறு மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதால் அவனது பல்லில் பச்சைத் தண்ணீர் கூட படவில்லை.

பயணம் செய்து கொண்டிருந்த சகுந்தலாவும் அவர்களின் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் மூலம் இந்த விஷயம் அறிந்து, மிகுந்த கவலை அடைந்து, அகிலனுக்கு போன் பண்ணி தனது நண்பியின் நலனை விசாரித்தார்.

சௌமி இந்த தகவலை கேள்வி பட்டதிலிருந்து, வருத்தமடைந்தவள் அகிலனுக்கு அழைப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தாள். ஆனால் அவன் அவளின் அழைப்பை ஏற்கவில்லை.

அவளது அழைப்பை பார்த்தவனுக்கு, இவை அனைத்துக்கும் அவள் தான் காரணம் என்பதில் அவள் மீது கடும் கோபமும், அலட்சியமும் ஏற்பட அவளின் அழைப்புக்களை ஏற்காமல் துண்டித்து விட்டான்.

அவளும் ஆண்டிக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும் என்பதிலும், கவலையுடன் இருக்கும் அகிலனுக்கு தான் ஆறுதல் கூற விரும்பியதாலும் அவளும் பல தடவை முயற்சி செய்துவிட்டு, தனது பெரிய தாயாரிடம் பத்மாவின் உடல் நலனை கேட்டு அறிந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் பத்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் பயப்படும் படி எதுவும் இல்லை, அவரின் உடலில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைந்ததால் தான் அவர் மயக்கமடைந்தார் என்றும், சரியான நேரத்தில் கவனித்ததால் பிரச்சினை ஏதும் இல்லை என அவரைப் பரிசோதித்த டாக்டர் அகிலனிடம் கூறிய பின்னர் தான், தாய்க்கு என்ன சிக்கலோ என எண்ணி மிகவும் கலங்கிக் கொண்டிருந்த அவனால் சற்று ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. அவன் பெரிய மூச்சை நன்கு இழுத்து விட்டவாறு கதிரையில் தொப்பென்று அமர்ந்தான்.

இவ்வளவு நேரமாக அவனது நண்பர்கள் ஆறுதல் கூறினாலும் அவனால் எதையும் கிரகிக்க முடியாமல் எல்லாமே இருண்டது போலத் தோன்றியது, இப்போது தான் அவனால் சற்று நிதானத்துக்கு வர கூடியதாக இருந்தது. இன்னுமே தன்னால் தான் தாய்க்கு இப்படி நடந்திருக்கும் என எண்ணுகையில் அவன் மனதில் அழுத்தம் ஏறியது. இவ்வளவு காலமாக அவனின் தாயார், சாதாரணமாக காய்ச்சல் என்றோ தலையிடி என்றோ ஒரு நாளும் படுத்திருந்து அவன் அறியவில்லை, என்னதான் அவருக்கு இயலாவிட்டாலும், மகன் வேதனைப்படுவான் என்பதில் அவர் அவனிடம் வெளிப்படுத்த விரும்பாமல் சகல வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார்.

பத்மாவுக்கு கூடப் பிறந்த சகோதரங்கள் இல்லை…, கணவரின் திடீர் மறைவிற்குப் பின்னர் கணவரின் உறவுகளின் உறவும் குறைந்து, நாளடைவில் விட்டுப் போய்விட்டதால் உறவினர் என்று பெரிதாக யாரும் கொழும்பில் இல்லை. தகப்பனின் மறைவிற்குப் பின்னர் தனியாளாக தன்னை வளர்ப்பதற்கு தன் தாய் பட்ட கஷ்டங்களை நன்கு அறிந்தமையால் சிறு வயதிலிருந்தே அகிலன் தாய்க்கு சிரமத்தை கொடுக்க விரும்பாமல், அவனுக்குள்ள இயல்பான கெட்டித்தனத்தாலும் சிறப்பாகப் படித்தான். தந்தையின் ஓய்வூதியப் பணம் கிடைப்பதால் பொருளாதாரப் பிரச்சினை அவர்களுக்கு பெரிதாக இருக்கவில்லை என்றாலும் வேறு பல உதவிகள் தேவைப்படும் நேரங்களில் சகுந்தலாவும் ரவீந்திரனும் தான் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்காகத் தான் அவன் சௌமிகாவிடம் பிரியமாக நடந்துகொண்டான். சிறு வயதில் இருந்தே அவளைத் தெரியும் என்பதால் அவள் மீது அவனுக்கு இயல்பாகவும் பாசம் இருந்தது. பல வருடங்களுக்குப் பின்னர், அவளை வளர்ந்த பெண்ணாக பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தாலும் நாகரீகம் கருதி சிறு இடைவெளியை கடைப்பிடித்தான். அவள் வெகு இயல்பாக அவனுடன் பழகிய போது அவனும் தயக்கமின்றி பழகினான். அவள் தன் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வதை அவன் அறிந்த போது, அவன் சற்று விலகித் தான் இருந்தான். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படவில்லை! நண்பன் கொடுத்த தேநீரை அருந்தியவாறு இருந்தவனுக்கு மனதில் பல எண்ணங்கள்!

தாய் காலையில் இருந்த நிலையை எண்ணிய அவனுக்கு, மீண்டும் கவலை ஏற்பட்டது. நாலைந்து வருடங்களுக்கு முன்னர், தாய் அடிக்கடி சோர்வாக இருப்பதை அவதானித்த அகிலன், அவரை வற்புறுத்தி டாக்டரிடம் அழைத்து வந்து பரிசோதித்த போது சலரோகமும் இரத்த அழுத்தமும் இருப்பதை கண்டறிந்த பின்னர் அவர் உணவில் மிகுந்த கட்டுப்பாடுடன் இருந்தார். இவற்றைத் தவிர வேறு எந்த நோயும் இல்லாதபடியால் மிகுந்த ஆரோக்கியமாகத் தான் அவர் இருந்தார். இன்று திடீரென அவரை மயக்கமுற்ற நிலையில் கண்டதும் அவன் மிகுந்த பதட்டம் அடைந்து விட்டான், சற்று நேரம் என்ன செய்வது என அவனுக்கு விளங்காமல் திண்டாடி, நிலைகுலைந்து போய்விட்டான். அதை நினைக்கையில் இப்பவும் அவனுக்கு கலக்கமாக இருந்தது. அம்மா சீக்கிரம் குணமடைய வேண்டும் என கடவுளைப் பிரார்த்தித்தான்.

மாலை ஆகிவிட்டது, அனைவரும் அவனை உண்ணும்படி வற்புறுத்தினாலும், அவனால் உணவைப் பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. நினைவிழந்து இருந்த தாயை பார்ப்பதற்கு மனம் மிகவும் ஏங்கியது. தாயைத் தன்னால் உடனடியாக கவனிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணி மனம் வருந்தினான்.

இவ்வாறு பலவிதமான மனக்கவலைகள் உடன் இருந்தவனிடம் டாக்டர் வந்து ‘அம்மா இப்போது நல்லா இருக்கிறார்… உள்ளே சென்று அவரைப் பார்க்கலாம் எனவும் நாளைக்கு வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்’ எனக் கூறியதன் பின்னர் தான் அவன் மனம் நிம்மதி அடைந்தது.

விரைவாகத் தாயிடம் சென்றவன், நரம்பு வழியாக சேலைன், மருந்து ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டவன் வேதனையுடன் “அம்மா…” என்றான்.

மகனது குரலில் கண் திறந்து அவனைப் பார்த்தவர், “அகில்…” என்றார்.

“என்னம்மா செய்யுது…?” என்றவனின் குரலில் வேதனை நிரம்பி இருந்தது.

“முதல் தான் கொஞ்சம் சோர்வாக இருந்தது…, இப்ப எல்லாம் சரி…, நீ ஒண்டும் யோசிக்காதே…” என்றார் அவனைத் தேற்றும் விதமாக.

தாயின் அருகில் அமர்ந்து அவரின் கையை பிடித்தவனைப் ஆதூரத்துடன் நோக்கியவர் எனக்கு “ஒண்டுமில்லை கண்ணா… நீ யோசிக்காத…” என்றார் அவனின் சஞ்சலத்தை போக்கும் விதமாக.

தாய் தன்னை தேற்றுவதற்றாக கூறுகின்றார் என எண்ணியவன் ‘சரி’ என்பதாக தலையை ஆட்டினான்.

“சாப்பிட்டியா அகில்…?” மகன் பசியில் இருக்கிறானோ என்ற தவிப்புடன் கேட்டார்.

“தேவியக்கா சாப்பாடு கொண்டு வந்தவா…, இவ்வளவு நேரமும் இங்க இருந்திட்டு இப்பத் தான் போறா… வெளியில மதன், சதீஷ் எல்லாரும் நிக்கினம்” என்றான்.

“நான் எல்லாரையும் கஸ்டப்படுத்தி போட்டன்…” என்றவருக்கு சோர்வாக இருந்தது.

“அப்பிடி எல்லாம் யோசிக்காதீங்கம்மா…” அவரை ஆறுதல் படுத்தினான்.

“நீங்கள் என்ன சாப்பிடலாம் எண்டு டாக்டரை கேக்கணும்…, இரவுக்கு சீதா அக்கா சாப்பாடு தாறன் எண்டு சொன்னவா....”

“இஞ்ச எனக்கு ஏற்ற மாதிரி சாப்பாடு தருவினம் அகில்…”

“சரி… நான் வெளியில இருக்கிறவையை கூட்டிக் கொண்டு வாறன்…” என்றவன், வெளியே உட்கார்ந்திருந்த தனது நண்பர்களையும் அழைத்து வர, அவர்களும் பத்மாவை நலம் விசாரித்தனர்.

அடுத்த நாள் மதியம் போல வீட்டுக்கு வந்த பத்மாவிற்கு, அயலவர்களும், நண்பர்களும் ஆறுதலாக இருந்தனர். சகுந்தலாவும் அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி, நலன் விசாரிக்க தவறவில்லை.

பத்மாவுக்கு வீட்டு வேலைகளில் சகல விதத்திலும் அகிலன் ஒத்தாசையாக இருந்தான். அவர் ‘வேண்டாம்’ என மறுத்தாலும் அதைக் கேட்காமல், அயலவர்கள் உணவு சமைத்து கொடுத்தார்கள்.
 
Top Bottom