• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 13

குற்றாலீஸ்வரர் கோயில் அன்று விடுமுறை நாளாக இருந்ததால் கூட்டம் மிகுதியாக இருந்தது. ஒருவாறாக சாமி தரிசனம் முடித்து அனைவரும் வெளியே வந்தனர்.

வசீகரன் மெதுவாக குனிந்து மித்ரனின் காதில்,
“டேய்… நாங்க ரெண்டு பேரும் தனியா மீட் பண்றதுக்கு நீ ஏற்பாடு பண்ணணும்,” என்றான் கட்டளை போல்.

“எது? நான் ஏற்பாடு பண்ணணுமா? என்ன விளையாடுறியா?” என்றான் மித்ரன்.“டேய்… நீ நண்பன்னு, மாமான்னு கூப்பிட விட்டா, என்னை மாமாவாகவே ஆக்கிடுவ போல!”என்றவன்,“அதெல்லாம் முடியாது. உனக்கு தைரியம் இருந்தா நீயே தனியா கூட்டிட்டு போய் பேசு. எனக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்லை,” என்றான் மித்ரன்.

“எனக்கு தைரியம் இல்லைன்னு சொல்றியா நீ?” என்று பார்த்த வசீகரன் அடுத்து செய்ததில் மித்ரன் அசந்து போனான்.

அனைவரையும் கூட்டி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டவன், அனைவரையும் இறக்கிவிட்டு, திடீரென நினைவுக்கு வந்தவனாக,
“டேய்… நான் முக்கியமானத மறந்துட்டேன். மது, எனக்கு கொஞ்சம் உதவி பண்ண முடியுமா?” என்றான்.

அவள் பதில் சொல்லும் முன்னரே, மற்றவர்கள் யோசிக்கும் முன்பே அவளை இழுத்துக் கொண்டு காரில் ஏறினான்.
“வசீ… என்ன?” என்று மித்ரன் கேட்பதற்குள் காரை கிளப்பி இருந்தான்.

குற்றாலம் ஐந்தறிவி அருவி அருகே, ஓங்கி உயர்ந்த மலைகளும், அதன் மீது பச்சைப் பட்டை போர்த்தியதுபோல் பரந்த செழுமையும் பார்ப்பவர்களின் கண்களுக்கு இனிமையாக, மனதில் குளிர்ச்சியாக இறங்கியது. வானை முட்டும் மலைகளையும், அவற்றைத் தழுவி மிதந்த மேகங்களையும், மெல்லிசையாக வீசிய காற்றையும் ரசித்தவாறே வசீகரன் காரின் கதவைத் திறந்தான்.

காரிலிருந்து இறங்கி, மறுபுறம் சென்று அவளுக்காக கதவைத் திறந்து விட்டான்.
“வா,” என்று அழைத்தான். அவனின் “வா,” என்ற அழைப்பில் ஏதோ ஒரு அவசரமும், சொல்லப்படாத உணர்வும் கலந்து இருந்தது.

“இங்க என்னத்தை மறந்தான்?” என்று யோசனையுடன் அவனைப் பார்த்தபடி இறங்கியவள், “என்ன இது… எங்கோ கூட்டி வந்திருக்கிறான்,” என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“உன்னோட பேசணும்… அதான் அப்படி சொல்லி கூட்டி வந்தேன்,” என்றான்.

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“உன்னிடம் பேச வேண்டும், மது,” என்றான்—பார்வையிலும் வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து.

மெதுவாக வண்டியிலிருந்து இறங்கி, சுற்றியுள்ள பசுமையை கண்களால் அளந்தபடி, ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே அவனோடு நடந்தாள். ஐப்பசி மழையின் ஊதக் காற்று உடலைத் தழுவிச் செல்ல, இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து சூடுபரப்பி முகத்தில் வைத்தாள்.

அந்தச் சின்னச் செயல் கூட வசீகரனின் கவனத்தை இழுத்தது. அவளை ரசனை சிந்தும் விழிகளால் ஆழ்ந்து நோக்கியவன், விழிகள் பார்வையாலேயே அவளைச் சுற்றி வட்டம் இட்டது .

அவனது பார்வையில் ஒளிந்திருந்த உணர்வின் தீவிரம் மதுமதியைச் சற்றுத் திணறச் செய்தது. அவள் முகம் மெல்ல சிவந்தது. அந்தச் சிவப்பையும், அவளது தயக்கத்தையும், வசீகரன் சொல்லாமல் சொல்லும் பார்வையால் களவாடினான்.

அந்த நொடியில்—
பேசப்படாத வார்த்தைகள், சொல்லத் தயங்கிய உணர்வுகள், மலைக் காற்றோடு சேர்ந்து அவர்களுக்குள் சுழன்றுகொண்டிருந்தன.

பார்வை 13

உன் காதலுக்காக நான் தவிக்கிறேன் என்று தெரிந்தும்,
ஏன் என்னை இப்படி தவிக்க விடுகிறாய்?
கரை தொட வந்து வந்து போகும் அலையைப் போல,
என் நினைவுகளில் வந்து வந்து ஏனடி
என்னை வேதனைக்குள்ளாக்குகிறாய்?
என்று விழி வழி செய்தி கடத்தினான்.

தன்னை சற்று நிலைபாடுத்திக்கொண்டவள், குரலைச் செருமினாள்.

அவளது அந்தச் சிறு அசைவைக் கண்டவனும் நிதானமானான்.

வசீகரன் தான் முதலில் பேச ஆரம்பித்தான் . அவனிடம் ஒரு ஆழ்ந்த மூச்சு.
“மது…” என்று அவன் அழைத்தபோது, அந்த ஒரே சொல்லில் அவனது தயக்கமும், எதிர்பார்ப்பும் கலந்து இருந்தது.

பின்பு கனிவான குரலில்,
“நானும் உன்னை அவசரப்படுத்தக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். முடியல, மது. உனக்கு இன்னும் டைம் கொடுக்கணும்னுதான் நினைக்கிறேன்… ஆனா உன்ன நினைக்காம இருக்க முடியலடி,” என்றவனின் குரலில் இயலாமை தெளிவாகத் தெரிந்தது.

“இந்த அருவியைப் பார்க்கிறாய்தானே? அது போல்தான் என் மனசும்… உன்னைப் பார்த்ததும் ஆர்ப்பரிக்கத் தொடங்கிடுது. உன்னோட பதிலுக்கான என்னோட காத்திருப்பு தாங்க முடியல, மது. எதுனாலும் சொல்லிடு… ஐ கான்ட் வெயிட்,” என்றான் கண்களில் பரிதவிப்புடன்.

“உன்னை கட்டாயப்படுத்த வரல. எனக்கான பதிலை கேட்க மட்டும் தான் வந்தேன்,” என்றான்.“ என் காதல் உனக்கு புரியுதா, மது? என் தவிப்பு புரியுதா?”கண்கள் சிவக்க, குரலில் தவிப்புடன் கேட்டவனைப் பார்த்தவளுக்கு மனது பிசைந்தது. அவன் கண்களில் இருந்த தீவிரம் அவளை பயம் கொள்ளச் செய்தது.

“உன்ன பார்க்க வேண்டாம், பேச வேண்டாம்னுதான் புத்தி சொல்லுது. ஆனா என் மனசுக்கு அது புரிய மாட்டேங்குது. நீ எனக்கு வேணும், மது. எனக்கே… எனக்குன்னு. நீ எனக்கு மட்டும் தான். யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க என்னால ,” என்று கண்களை மூடி திறந்தவன் தலை இல்லை என்று இடமும் வலமுமாக அசைந்தது. கண்களில் தெரிந்த அதீத காதலும், அவன் குரலில் இருந்த தீவிரமும், ரத்தமென சிவந்திருந்த அவன் கண்களும் அவளை உள்ளுக்குள் உதறச் செய்தது.

அவள் கண்களில் ஏற்பட்ட அதிர்வை பார்த்தவன்,
“சாரி… சாரி… கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்,” என்று சொல்லி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

அந்தக் கணம்,மலைகள் சாட்சியாக,
காற்று சுமையாக, இருவரது மனங்களும் அந்த பேரமைதியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தனர் ..

சற்று நிதானமானவன், நேராக அவளைப் பார்த்து,
“உன்கிட்ட காதல் சொன்ன இந்த ஆறு மாதமாக என்னால தூங்க முடியல… சாப்பிட முடியல. இதுக்கு முன்னாடி யாராவது இப்படிச் சொல்லியிருந்தா கண்டிப்பா சிரிச்சிருப்பேன். ஆனா உணரும் போதுதான் தெரியுது. பட் இந்த உணர்வு பிடிச்சுதான் இருக்கு. உனக்கு எப்படி சொல்லன்னு எனக்கு தெரியல . ஆனா நான் இவ்வளவு எல்லாம் பேசவே மாட்டேன்.இது என் இயல்பே இல்லை ஆனா உன் விஷயதில் எல்லாம் தலைகீழ். எனக்கு இந்த உணர்வெல்லாம் புதுசு , உன் பதில் என்னன்னு தெரியாம என் மனசு ஒவ்வொரு நிமிசமும் தவிக்குது, மது,”
“இங்க வலிக்குது,” என்று இதயத்தைத் தொட்டுக் காட்டினான்.

இப்பொழுதாவது சொல்லுவாயா என்றான்

“அவள் அவனை இமைக்காமல் பார்க்கக”.

“என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா?” என்ற அவனின் கண்களில் அவளுக்கான காதல் கொட்டிக் கிடந்தது. அவனின் இதயத்தின் துடிப்பு அவனுக்கே கேட்கும் பேரமைதி ..நெஞ்சமெல்லாம் அவளை நிரப்பி, அவள் பதிலுக்கான தவிப்புடன் அவன் அவளைப் பார்த்தான்.


“பிடிக்கலன்னு சொன்னா…” என்று அவள் சற்று நிறுத்திவிட்டு,
“விட்டுவிடுவாயா?” என்று அவன் நேர்கொண்டு பார்த்து கண்களால் அவனை சீண்டினாள்.

அவளின் சீண்டளை உணர்ந்தவன் சற்றும் அசராமல்,
“விட மாட்டேன். என்னை பிடிக்கிறது என்று நீ சொல்லும் வரைக்கும் அவகாசம் கொடுப்பேன்,” என்றான்.

அவள் எதுவும் சொல்லவில்லை. காற்றில் அசைந்த மர இலைகளைப் பார்த்தபடி நின்றாள். அவனும் அவளுக்கு சற்றுத் தூரத்தில் தான் நின்றான்

“நீங்க, உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்களே என் வாழ்க்கையா இருக்கிற அளவுக்கு பிடிக்குமான எனக்கு தெரியலை, நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வருமா? உங்க கோபம்… உங்க உயரம் உங்க உலகம்… எல்லாம் எனக்கு பயமா இருக்கு.”அவளது கலக்கத்திற்க்கு காரணமும் இருந்தது.

அவன் அவளை மெதுவாக திரும்பி பார்க்க

அந்தப் பதில் அவன் எதிர்பார்த்தது தான்.
“பயம் இருக்கறது தப்பில்லை, மது,” என்றான் அமைதியாக.
“பயம் இல்லாம எடுக்குற முடிவுகள் தான் தப்பு. ஆனா… அந்த பயம் மட்டும் காரணமா இருந்தா, ஒண்ணு மட்டும் சொல்லறேன் ,நான் உன்னோட எப்பவும் இருப்பேன். உனக்காக எதுவும் செய்வேன் , ஆனா எதுக்காகவும் உன்னை விட முடியாது மது, என் வாழ்வு முழுமைக்கும் நீதான். அது நீ கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் .” என்றவன் அவளுக்கு அவனை புரியவைக்க முயன்றான்

“நான் சட்டென்று எதற்கும் கோபப்படுவேன் தான்,” என்றான் உண்மையாக. .ஆனா உன்கிட்ட வர கோவம் அது கோவமில்லை என் உள்மனதோட ஆற்றாமை. “ அது உனக்கு என்னை புரியவைக்க முடியலையே, நீயும் என்னை புரிஞ்சுகலையே அப்புடின்னு தான் , உரிமையுள்ளவங்க மேல வர கோவம் .”

மதுமதி மெதுவாக அவனை நோக்கி பார்த்தாள். அந்தக் கண்களில் இருந்த உறுதி, அவளது மனதை அசைத்தது.

“ஓ…” என்றவளுக்கு சட்டென்று வார்த்தை வரவில்லை அவளால் இல்லை என்று சொல்ல முடியவில்லை.தொண்டைக்குழிக்குள் சிக்கிய வார்த்தைகளை, தைரியம் திரட்டி அவள் உதிர்த்த நொடி !

”எனக்கு உங்களை பிடித்திருக்கிறது. நான் உங்களை காதலிக்கிறேன் “என்று அவள் இதழ்கள் சொன்னது தான் தாமதம்; அவன் முகத்தில் தோன்றிய ஜாலங்களை அவள் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது இதயம் தாறுமாறாகத் துடித்தது; எங்கே மார்பைத் தாண்டி வெளியே குதித்து விடுமோ என்ற அளவிற்கு. அவன் மீண்டும் மீண்டும் மார்பை நீவி விட்டுக்கொண்டான். , “மது… மது… என்றவனால் அந்த நொடியின் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கினான்.

“வசி, என்ன பண்றீங்க? அச்சோ…” என்றவளை கீழே இறக்கிவிட்டு, அவள் என்னவென்று உணரும் முன், அவன் அவள் முகத்தை கைகளால் தாங்கி நெற்றியில் முத்தம் பதித்தான்.முதல் முத்தம் இருவருக்கும் உயிர்வரை தாக்கியது.

மது அவனது ஆர்ப்பரிப்பில் பேச்சின்றி நின்றாள். “மது… என்னை என்ன பண்ணற?” என்று எண்ணியவனின் பாதங்கள் ஒரே இடத்தில் நிற்கவில்லை அங்கும் இங்கும் நடந்தன; சந்தோஷத்தில் துள்ளின.

“மது… மது…” என்று இடைவிடாமல் அவளின் பெயரை உச்சரித்தன அவன் இதழ்கள் .

இடுப்பில் கைவைத்து நின்றவன், காற்றை உள்ளிழுத்து வெளியேற்றினான்; அவனுக்கு மூச்சுத் திணறுவது போல் இருந்தது. அவள் காதல் சொன்ன அந்த நொடியில், அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

“இவ்வளவு நாள் கூட தெரியல… ஆனா இப்ப, மது…” என்றவனின் பேசாத வார்த்தைகளுக்கு இடையிலான அந்த சின்ன சின்ன இடைவெளிகள் கூட அர்த்தம் பொதிந்த மௌனங்களாய் . ஒரு கையால் தன் தலையை கோதியவன், பின் இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு, அவளை விழிகளால் மொத்தமாக களவாட முயன்றான்.

அவனது இந்த பரிமாணம் அவளை வாயடைக்கச் செய்தது. வசீகரன் பார்க்க கம்பீரமானவன், சற்று வளமிக்கவன்; அவன் அவளை காதலிக்கிறான் என்பதையே அவளால் நம்ப முடியவில்லை. அவளின் காதலுக்காக இவ்வளவு ஏங்குகிறானா என்பதும் அவளுக்கு நம்ப முடியாததாக இருந்தது. இது தனக்கு நிலைக்குமா என்ற ஓர் எண்ணம் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவளின் விழிகளில் அந்த கலக்கத்தை கண்டவன், அவளை நெருங்கி அவளின் முகத்தை கைகளில் தாங்கி, விழிகளோடு விழிகளை கலக்கவிட்டபடி, “ஏன்? என்றான் ஒற்றை புருவமுயர்த்தி ” .

“ஆசை வச்சு நடக்கலைன்னா, அதை என்னால தாங்கிக்க முடியாது, வசீ,” என்றவளை ஆதூரமாக பார்த்தவன்,
“நீ என் வாழ்க்கையில இருக்கணும்னு ஆசை… ஆசைன்னு கூட சொல்ல முடியாது; பேராசை. ஆனா என் வாழ்க்கையில நீ வர, உன்னுடைய முழு சம்மதம் வேணும் டா.

ஒரே ஒரு தடவை… என்னை நம்பி பாரு.”என்றவன் கண்களில் தெரிந்த பரிதவிப்பு அவளை அசைத்தது. அவனை அவள் முழுதாக நம்பினாள். அவளின் நம்பிக்கையை அவன் காப்பாற்றுவானா? .
 
Top Bottom