கதை 10
"மீன் சாப்பிடும் போது தொண்டைக்குள்ள முள்ளு சிக்கிடுச்சு. நான் சாப்பிடும் போது மீனோட முள்ளை விட்டுத் தருவீங்களே. மீன் மட்டும் வெச்சுப் பிசைஞ்சு ஊட்டுவீங்களே. அந்தச் சோறு தனி ருசிப்பா"
-ஆதிராவின் டயரி
ஆதிராவின் வார்த்தைகள் அந்தக் கடலையும் கூடக் கொந்தளிக்கச் செய்து விட்டதோ என்று எண்ணும்படியாக, வழமையைக் காட்டிலும் வேகமாகத் தான் அலைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
"எனக்கு உன் மேல காதல் வரலை விஷ்! ஃப்ரெண்டா மட்டும் தான் உன்னப் பாக்க முடியுது" தனது முடிவை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியவளின் குரலில் எந்தப் பிசிறும் இல்லை.
அதை மட்டும் சொல்லிருந்தால் அவன் இவ்வளவு தவிப்பைச் சுமந்திருக்க மாட்டான். தன் காதலைச் சரி என்று ஏற்றுக் கொண்டாலும், இல்லையென்று மறுத்தாலும் இரண்டையும் ஏற்கும் மனநிலையோடு தான் விஷ்ணு வந்திருந்தான்.
ஆனால் அதற்கு அடுத்ததாய், அவள் கூறிய வாசகம் தான், ஆடவனின் ஆழ்மனதை அலைகடலாய் ஆர்ப்பரிக்க வைத்தது.
"எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க"
அந்தக் கூற்றை அவனால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த உணர்வையும் பதற்றத்துடன் கையாள்வதில்லை அவன். மிக நிதானமாக, அமைதியாக, நிர்மலமாகத் தான் கையாள்வான். என்றாலும் அவனும் உணர்வுள்ள மனிதனல்லவா? காதல் என்று வரும் போது கொஞ்சம் தடுமாறித் தான் போனான்.
"விஷ்" சலனமின்றிக் கடலைப் பார்த்திடும் அவனைச் சங்கடத்துடன் அழைத்தாள் ஆதிரா.
"சொல்லு ஆதி" தலை திருப்பி அவளை ஏறிட்டவனின் வதனத்தில் சற்று முன்னர் இருந்த மலர்ச்சி துளியளவும் இல்லை.
"ஆர் யூ ஓகே?" அப்படிக் கேட்கும் போது அவளது மனசாட்சியே அவளைக் கேலியாகப் பார்த்தது.
காதலை மறுத்தாள். வேறு ஒருவனுடன் தன் வாழ்வைப் பிணைத்துக் கொள்ளப் போவதாகக் கூறுகிறாள். அதைக் கேட்டு அவன் நலமாக இருப்பானா? என்ன பேசுவது என்று தெரியாமல் அதைக் கேட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
"உனக்குப் பிடிச்சிருக்கா? இல்லன்னா வீட்டு ஆட்களுக்காக ஓகே சொன்னியா ஆதி?"
"எங்க சித்தப்பா அம்மா கிட்டச் சொல்லி இருக்காரு. அம்மாவுக்கும் புடிச்சிப் போச்சு. இன்னிக்கு வரும் போது சொன்னாங்க. நான் ஓகே சொன்னேன்"
"கேட்ட உடனே ஓகே சொல்ல உனக்கு அந்தப் பையனைப் பத்தி என்ன தெரியும்?" அவளது பேச்சில் எதுவோ நெருடுவது போல் தோன்றியது.
"எங்க ஊர்ப் பையன் தான். எனக்குத் தெரியும். ரெட் சில்லி ஹோட்டல் ஓனர் அவர். பெருசாப் படிக்கல தான். இருந்தாலும் நல்ல குடும்பம்" ஏதோ படித்ததை ஒப்பிப்பது போல் அவள் சொல்ல,
"இது நீ சொல்றதா? யாராவது சொன்னத அப்படியே சொல்றியா? இந்த மாதிரி கேக்குறேன் எண்டு தப்பா நெனக்காத. என் காதல நீ மறுத்ததுக்காக இப்படி விசாரிக்கல. நீ நல்லா இருக்கணுமெண்டுற எண்ணத்துல கேக்குறேன். நான் லவ் சொல்லாம இருந்திருந்தாலும் இப்படித்தான் விசாரிச்சி இருப்பேன். நீ விரும்பித் தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்க நெனக்கிறியா? அப்படின்னா நான் எதுவும் கேட்க மாட்டேன்"
"இந்த விளக்கம் தேவையே இல்ல விஷ். என் மேலுள்ள அக்கறையால கேக்குறண்டு தெரியும். அம்மா சொன்னதுக்காக மட்டும் நான் ஓகே சொல்லல. அந்தப் பையன் மேல தனிப்பட்ட அபிப்பிராயம் எதுவும் இல்ல தான். ஆனா என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்காங்க. அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாரும் அப்பா இல்லாமத் தனியா இருப்பாங்க. நான் கல்யாணம் பண்ணி எங்கயோ போறதுக்குப் பக்கத்துல இருந்தா அவங்களப் பாத்துக்கலாம். அது தான் நான் சரியெண்டு சொல்ல முக்கிய காரணம். அடுத்தது, என்னால அம்மா பேச்சயும் தட்ட முடியல" மெல்லிய புன்னகை அவளது இதழ்களில் வீற்றிருந்தது.
அவ்வளவுதான்! அதற்கு மேல் இதைப்பற்றி எதுவும் பேசத் தோன்றவில்லை. பேசுவது சரியும் இல்லை என்று மனம் எடுத்துரைக்க, "உனக்குப் புடிச்சிருந்தா வேற பேச்சே இல்ல" என்றான், வலிந்து வரவழைக்கப்பட்ட புன்னகையோடு.
உள்ளம் எத்தனையோ பாகங்களாக உடைந்து சிதறியது. 'உன் கிட்ட முதல் முறையா நடிக்கிறேன் ஆதி' மனதினுள்ளே வலியோடு சொல்லிக் கொண்டாள்.
"உன் மனசக் கஷ்டப்படுத்தி இருந்தா சாரி விஷ்" அவனிடம் மன்னிப்புக் கேட்டாள் பாவை.
"உடனே ஏத்துக்க முடியல. அவ்வளவு தான். ஆனா இதைப் பெரிய கஷ்டமா நெனக்க மாட்டேன். நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான்" அவனது பேச்சில் சற்றும் பொய் இல்லை என்பதை அவளுக்காக ஒலித்த அக்கறையான குரலினூடாக உணர முடிந்தது.
"என் பதில் உன்னக் கஷ்டப்படுத்திடுமோ எண்டு பயந்துட்டே வந்தேன் விஷ். என் சிட்டுவேஷனச் சொன்னேன். என் முடிவச் சொன்னேன். உனக்கு உள்ளுக்குள்ள கஷ்டம் இல்லாம இருக்காது. அத நெனச்சி எனக்குக் குற்ற உணர்ச்சியா இருக்கு. நிவி உன்ன ஏத்துக்கலாமேண்டு சொல்றா. அவளப் போலவே சிலர் பார்வைக்கு என் முடிவு தப்பாத் தெரியும். அத நெனக்கும் போது உனக்கு ஓகே சொல்லி இருக்கலாமெண்டு நெனக்கத் தோணுது" அவளது குரலில் என்ன உணர்வு இருந்ததென்று அவனுக்குப் புரியவில்லை. ஏன், அவளுக்கே புரியவில்லை.
"உன்னோட முடிவுல எந்தத் தப்பும் இல்ல. காதல் மனசார உணர்ந்து வரனும். நான் கேட்டேன் எண்டு கடமைக்காக சம்மதம் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னா அது காதலே இல்ல. நீயா ஃபீல் பண்ணோனும். யோசிக்காம ஏத்துக்கனும். அப்படி உனக்குக் காதல் இருந்திருந்தா என் கிட்ட வந்து ஓகே சொல்லியிருப்ப. அந்தப் பையன ஏத்துக்க மாட்ட. இதுலருந்து உனக்கு என் மேல காதல் வரலண்டு எனக்குப் புரியுது.
மத்தவங்க சொன்னதப் பத்தி எப்பவும் யோசிக்காத. ஒவ்வொருத்தருடைய பார்வையும், பார்க்கிற கோணமும் வித்தியாசமானது. நாம பண்றது நமக்குச் சரியெண்டு தெரிஞ்சாப் போதும். நீ செஞ்சது சரி உன் பார்வைக்கும், என் பார்வைக்கும். அதனால சரி பிழையெண்டு இதுக்கு மேல எதுவும் யோசிக்காத.
காதலிக்கலண்டா என்ன? உன் மேல வெச்ச நட்பு அப்படியே இருக்கு. காதலுக்காக நட்பத் தூக்கியெறிய மாட்டேன். எப்பவும் உனக்கு நல்ல நண்பனா இருப்பேன் ஆதி" என்று அவளைப் பார்த்து மென்மையாக உரைத்தவனை இமைக்காமல் நோக்கிய ஆதிரா அவனது கையை மெதுவாகப் பற்றிக் கொண்டாள்.
"உன் நெலமய ஒதுக்கி வெச்சிட்டு, உன் ஃபீலிங்ஸப் பத்தி அலட்டிக்காம எனக்காகப் பேசுற பாத்தியா நீ க்ரேட் விஷ்! உன்ன மாதிரி ஒரு ஃப்ரெண்டு கெடக்க குடுத்து வெச்சேன். ஆனா ஹஸ்பண்டா கெடக்கக் குடுத்து வெக்கல"
"நாம ஒன்ன சூஸ் பண்ணுவோம். இது கெடச்சா நல்லா இருக்குமெண்டு ஆசப்படுவோம். ஆனா வாழ்க்க நமக்காக வேற ஒரு தெரிவ வெச்சிருக்கும். அதை நாம ஏத்துக்கிறது தானே முறை"
"அதுவும் சரி தான் சில விஷயங்கள ஆசைப்படலாம். அனுபவிக்க முடியாது. நாம எப்பவும் ஃப்ரெண்ட்ஸா இருப்போம். வாழ்க்கையில் எனக்குக் கெடச்ச பெரிய பொக்கிஷம் உன் நட்புத் தான். அதை என்னிக்குமே இழக்க மாட்டேன்"
"நீ கவலப்படுற மாதிரி எதுவும் நடக்காது டா ஆதி. உன் நட்பு எனக்கும் வேணும். டைம் ஆச்சு. வா போகலாம்" அவன் முன்னே நடக்க ஆரம்பிக்க, "என்னை அவாய்ட் பண்றியா விஷ்?" என்று கேட்டாள், அவன் பின்னே ஓடி வந்தபடி.
"லூசு ஆதி. உன்ன அவாய்ட் பண்ணுவேனா? டயர்டா இருக்கும். நாளைக்குப் பாக்கலாம்"
"நாளைக்கு வேலை இருக்கு" அவளிடத்தில் சோர்வு.
"அத நாளைக்குப் பாத்துக்கலாம். இப்ப ஃப்ரீயா விடு"
"நீ படிக்கிறியா இல்லையா விஷ்? எக்ஸாம் இருக்கெண்டு சொன்ன. படிக்கிற மாதிரி விளங்கல்ல" சற்றே கடுமையாகக் கேட்டாள் காரிகை.
"அப்பப்ப படிக்கிறேன்"
"அப்பப்பண்டு அப்பம் சுடாத. எப்பவும் படிக்கோனும். கெடக்கிற டைமுக்குப் படி. பீச்ல குந்திட்டு வேடிக்கை பாக்குற நேரத்துல கூட புக் எடுத்துப் படிக்கலாம். நல்லா படிச்சாத் தான் பாஸ் பண்ண முடியும்" மாணவனுக்கு அறிவுரை கூறும் ஆசிரியையாகத் தான் மாறிப் போனாள் அவளும்.
"சரிங்க மிஸ். நான் படிக்கிறேன். நீங்க அப்பிடி கோவமாப் பாக்காதீங்க. அடிச்சிடுவீங்களோண்டு பயமா இருக்கு" பயந்தது போல் பம்மிக் கொண்டு பேச, சிரித்து விட்டாள் ஆதிரா.
"உன் சிரிப்பப் பாத்து எவ்ளோ நாளாச்சு" அந்தச் சிரிப்பை ஆசையோடு பார்த்தான் விஷ்ணு.
"உன்னால நான் சிரிக்கிறேன். என்னால உன் சிரிப்பு இல்லாமப் போகுமாண்டு யோசனையா இருக்கு"
"அந்த யோசனையை அழிச்சிடு. உன்னால நான் சந்தோஷமா மட்டும் தான் இருப்பேன். சிரிப்பை இல்லாமப் பண்ணுற உறவை யாராவது கெட்டியாப் புடிச்சிக்க ஆசைப்படுவாங்களா? நான் உன்னோட உறவை ஆசப்படுறேன் டா ஆதி"
அவன் சொன்னதைக் கேட்க நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அவள் மனம் ஏற்க மறுத்தது. இத்தனை நாள் நட்பில் அவனது இயல்பை அறியாமல் இருப்பாளா? உள்ளுக்குள் கவலையை வைத்துத் தனக்காகப் புன்னகைப்பது புரிந்தது.
'உனக்கு என் மேல காதல் வராம இருந்திருக்கலாம் விஷ். உன்ன இப்படிப் பாக்கக் கஷ்டமா இருக்கு' மனதினுள் உரையாடிக் கொண்டாள்.
"ஓய் ஆதி! ரோட் க்ராஸ் பண்ணு" என்று அவளைப் பாதை மாற்றி விட்டான்.
"கேக்க மறந்துட்டேன். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்று அவன் கேட்க, "இருக்காங்க. நானும் சொல்ல மறந்துட்டேன். அனுவும் அருணும் நீ எழுதின பேச்சு நல்லா இருந்ததெண்டு பாராட்டினாங்க. உன் கிட்டச் சொல்லச் சொன்னாங்க" என்றிட, "நன்றி சொல்லு" அவனது முகத்தில் புன்னகை பூத்தது.
"இந்தச் சிரிப்பை நானும் மிஸ் பண்ணேன் இன்னிக்கு. இப்படியே இருக்கனும் விஷ் நீ! இதான் உனக்கு அழகு" என்றவளின் உணர்வு செறிந்த குரலில் பாதிப்புற்றவனாக, "ட்ரை பண்ணுறேன் டா. கொஞ்சம் டைம் கொடேன்" என்றான்.
"சரி. ரொம்ப யோசிக்காத. சாப்பிட்டுத் தூங்கு"
"இது நான் சொல்லுற டயலாக். உனக்கும் அதத் தான் சொல்றேன். ரொம்ப யோசிச்சிட்ட இன்னிக்கு. உன் குட்டி மூளை டயர்டா இருக்கும். போர்டிங் போய்த் தூங்கி எழும்பி நாளைக்கு மீதியைப் பாத்துக்கலாம்" அவளின் தலையில் தட்ட,
"தூக்கம் வந்தா தூங்கிடுவேன். அப்பாக் கிட்டப் பேசோனும். அவர் கிட்டச் சொல்ல நிறைய விஷயம் இருக்கு. டயரில எல்லாத்தையும் எழுதி முடிச்சாத் தான் மனசு ரிலாக்ஸாகும்" என்று கூறினாள்.
"ரொம்ப லேட் பண்ணாத"
"சரி விஷ். நான் போயிட்டு வர்றேன்" விடுதியினுள் நுழைந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இடது நெஞ்சு கனத்தது.
தொடரும்...