கதை 03
மாலை ஐந்து முப்பது மணியிருக்கும். அந்தி நேரத்து வண்ணம் பூசிய வானமும் ஆர்ப்பரிக்கும் அலைகடலும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் எழிலை ரசித்தவாறு கரையில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் விஷ்ணு.
தலை திருப்பிய நொடியில் பார்வை வட்டத்தினுள் விழுந்த ஆதிராவைக் கண்டதும் அவனது விழிகளில் பளிச்சென்ற மின்னல். அவன் தான் அவளுக்கு வரச் சொல்லிக் குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.
உதட்டுக்கும் வலிக்காத புன்னகையோடு வந்தவள், "பெஞ்ச் பக்கம் போகலாமே" என்றிட, அவனும் கால்களில் உள்ள மணலைத் தட்டிக் கொண்டு எழுந்தான்.
ஒரு பலகை பெஞ்சின் அருகே சென்றவள் அவளது கால்களுக்கு நடுவே எலியொன்று ஓடவும் துள்ளிக் குதித்துச் சற்றுத் தூரமாக இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.
அவளுக்கு அருகில் உட்கார்ந்தவன் "உனக்கு வேலை கெடச்சிருச்சு" எனக் கூற, அவளது முகத்தில் மெல்லிய பிரகாசம்.
"என்ன வேலை?" எனக் கேட்கும் போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
இதுவரை வேலை என்று எங்கும் சென்றிராதவள். தந்தையின் சிறகுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக வளர்ந்தவள். இன்று அவரின் ஸ்தானத்தில் நின்று குடும்பத்தைக் காக்கும் பொறுப்பைக் கடினமாயினும் கூட ஏற்றுக் கொள்ள முயன்றாள்.
"பக்கத்து சூப்பர் மார்கெட்ல, ஜூஸ் கடைல கூட வேலைக்கு ஆள் தேடுறாங்க. ஆனா ஃபுல் டைம். பார்ட் டைம் ஜாப் எண்டு சொல்லும் போது பின்வாங்குறாங்க. ரிஷி ஃபுட்ஸ்கு எதிர்ல இருக்கிற புக் ஷாப்ல பேசவும் சரியெண்டாங்க. நீ நாளைக்கே போய்ப் பேசி சேந்துக்கலாம்" அவன் கூறவும்,
"புக் ஷாப் ஓகே தான். மத்த கடைங்கள விட அது பரவாயில்லை" அவளுள் சிறு ஆசுவாசம்.
"நாலு மணில இருந்து எட்டு மணி வரை வர்க் இருக்கும். உனக்கு ஓகே தானா?" விஷ்ணுவின் விழிகள் அவளை யோசனையோடு ஆராய்ந்தன.
நேரம் தான் இடித்தது. ஆதிராவுக்கு இரவில் ஒன்பது மணிக்கே தூக்கம் வந்து விடும். அதனால் ஆறு முப்பதில் இருந்து எட்டு மணி வரை அவள் படிப்புக்காக ஒதுக்கும் நேரம். தற்போது எட்டு மணி வரை என்றால் என்ன செய்வது என்ற யோசனை.
"ஏன் யோசிக்கிற ஆதி? ஓகே தானே இல்லையா?"
"ஓகே இல்ல எண்டா வேற ஆப்சன் இருக்கா விஷ்?" விரக்தியோடு அவளிடம் வெளிப்பட்ட வினாவுக்கு அவனிடம் விடை இல்லை.
"நெஜமா வேற ஆப்சன் இல்லயா? உங்க ஃபேமிலில யாரும் பாத்துக்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் நீ படிச்சு முடிக்கிற வரையாவது" தன் கேள்வி சரியா பிழையா என்ற யோசனை ஒரு புறம் எழுந்தாலும் தொண்டை வரை வந்ததை வாய் விட்டுக் கேட்டு வைத்தான்.
"பாத்துக்க மாட்டாங்க எண்டு சொல்லல்ல. மாமா ஏதாவது பண்ணுவார். சாப்பாட்டுக்கு அவங்க உதவுவாங்க. ஆனா எவ்ளோ செலவு வரும். யாருக்காவது காய்ச்சல் வந்ததுண்டா மருந்து வாங்கவும் யார் கையையாவது எதிர்பார்க்க முடியுமா? எங்க கிட்டயும் ஆபத்து அவசரத்துக்குக் காசு இருக்கனும் தானே?
செலவு செய்றதுக்கான காரணம் கூடினாலும் கொறயாது. மத்தவங்க கிட்டக் கை நீட்டுற நெலம அம்மாவுக்கு வரக் கூடாது. எங்கப்பா இருக்கிற வரை எங்களுக்கு என்ன தேவை எண்டாலும் உடனே செஞ்சிடுவாரு. அம்மாவும் ராணி மாதிரி இருந்தாங்க. சமைக்கத் தேவையான சாமான அம்மா லிஸ்ட் போட்டுக் குடுத்தா கடைக்குப் போய் வாங்கிட்டு வர்றதும் அவர் தான். இப்ப எல்லாமே மாறப் போகுது" ஆதிராவின் விழிகளில் நீர்த்திரை படர்ந்தது.
"எவ்ளோ தூரம் நீ யோசிச்சு இருக்கெண்டு எனக்குப் புரியுது. எதையும் மிச்சம் யோசிக்காத. யுனிவர்சிட்டி விட்டு புக் ஷாப் போ. போக முடியாத கட்டம் வரும் போது எனக்குச் சொல்லு. ஏதாவது உதவி வேணுமெண்டா தயங்காம கேளு. என்னால முடிஞ்சத உனக்காகப் பண்ணுவேன்" வாக்களித்தான் அவன்.
பக்கவாட்டாகத் திரும்பி அவனை ஏறிட்டவள், "என்னால உனக்குக் கஷ்டமா இருக்கா? அப்பா அப்பா எண்டு ஓவரா அழுற மாதிரி விளங்குது" மெல்லிய குரலில் கேட்டாள்.
"லூசு ஆதி. கஷ்டமா எல்லாம் இல்ல. சந்தோஷமா ஏதாவது நடக்கும் போது என் கிட்ட சொல்லுவ தானே? அப்ப எப்படி சந்தோஷமாக் கேப்பேனோ அப்படித் தான் கஷ்டத்தச் சொல்லும் போதும் கேக்கிறேன். நண்பன்னா இன்ப துன்பம் ரெண்டுலயும் பங்கெடுக்கனும். சொல்லப் போனா கஷ்டமான சூழ்நிலைல தான் நட்பு நம்மள அதிகமா தாங்கிப் புடிக்கனும்" அவன் சொல்வதைக் கேட்டுத் தலையாட்டினாள் அவளும்.
"நீ ரொம்ப நல்ல பையன் விஷ். இப்பிடிப் பியூரான ஃப்ரெண்ட்ஷிப் கெடக்குறது வரமெண்டு சொல்லுவேன். சென்டிமென்ட்ட சாறு பிழியுறேன்னு சொல்லித் திட்டாம காது குடுத்து கேக்குற பொறுமை உனக்கு எங்கிருந்து வந்தது?"
"எனக்குக் கிடைக்காத, கிடைக்காதா எண்டு ஏங்கின ஒன்னை என்னால அடுத்தவங்களுக்குக் குடுக்க முடியும்னா கண்டிப்பா அதக் குடுக்க ட்ரை பண்ணுவேன். அம்மா இறந்தப்ப நான் அப்படித் தான் இருந்தேன். அம்மாவே உலகமெண்டு வாழ்ந்த என்னால அம்மா இழப்ப அவ்ளோ சீக்கிரமா ஏத்துக்க முடியல. அப்பா இல்லாத குறையே தெரியாம எங்கள வளத்தாங்க.
தூங்கி எழுந்தா அம்மா ஞாபகம், சாப்பிடும் போது அம்மா ஞாபகம் எண்டு வீட்டுக்குப் போனாலே அவங்க ஞாபகம் தான். அக்கா அழுறதப் பாத்து இன்னுமே கஷ்டமா இருக்கும். ஒரு கட்டத்துல வீட்ல இருக்கப் பிடிக்கல. கடற்கரைக்கு வந்து ரொம்ப நேரம் உக்காந்திருப்பேன்.
சில பேர் ஃபேமிலியா வந்து ஃபன் பண்றதப் பாத்தா அது வேற கவலையா இருக்கும். அக்கா கிட்ட கவலயச் சொன்னா அவ இன்னுமே ஃபீல் பண்ணுவா எண்டு இங்க இருந்து என் சோகத்த தீர்க்க ட்ரை பண்ணுவேன். பக்கத்துல ஆறுதலுக்கு யாரும் இல்லயேங்கிற ஏக்கம் அடிக்கடி வரும். அப்ப நான் இருந்த நெலம இப்ப உனக்கு. நான் தனியாப் பட்ட கஷ்டம் உனக்கு வராம என்னால ஆறுதலா இருக்க முடியுறது எனக்குத் திருப்தியா இருக்கு"
"ஒரு உறவு நம்ம கூடவே இருந்துட்டு திடுதிப்பெண்டு இல்லாமப் போறது ரொம்பவே கொடுமையானது இல்லயா?" அவளது கூற்றை அவனும் ஆமோதித்தான்.
"இருந்தாலும் அந்த நெனப்புலயே மூழ்கிப் போய் கண்ணீர் சிந்துறது சரியில்ல டா. மெதுமெதுவா மீண்டு வா. அப்பாவ நெனக்க வேணாமெண்டு சொல்லல. ஆனா அதை மட்டுமே நெனக்காத. கஷ்டத்த மட்டுமே யோசிக்காம உன்னால முடிஞ்சளவு சின்னச் சின்ன சந்தோஷங்கள உருவாக்கிக்கப் பழகு"
"என்ன செய்யச் சொல்ற? எனக்குப் புரியல"
"ஒன்னு சொல்றேன் உனக்கு ஓகேன்னாப் பண்ணு. காலைல எழுந்து வேலை எல்லாம் பண்ணி முடிச்சிட்டு யுனிவர்சிட்டி போகும் வரை கொஞ்ச நேரமாவது சும்மா இருப்பியா?" என்று கேட்க, "இருப்பேன். ஃபிப்டீன் மினிட்ஸ் மாதிரி டைம் கெடக்கும். அந்த டைம்ல ஃபோன் பாப்பேன்" என்று சொன்னாள்.
"ஒரு டயரி எடுத்துக்க. காலையிலேயே ஃப்ரெஷ்ஷா எழுத ஸ்டார்ட் பண்ணு. உனக்குத் தோணுறத எழுது அப்பா பத்தி. அவர் கிட்ட பேசுற மாதிரி எழுது. இன்னைக்கு நான் இங்க போகப் போறேன்பா, இது பண்ண போறேன்பா அப்படின்னு. அப்பறம் அந்த ஞாபகத்த ஸ்டாப் பண்ணிடு. பிறகும் ஞாபகம் வரும் தான். ஆனா அதுலயே நீ ஆழ்ந்து போக கூடாது.
மறுபடி நைட்ல திரும்ப டென் மினிட்ஸ் ஒதுக்கு. இன்னிக்கு நான் இதெல்லாம் பண்ணேன்னு எழுது. அப்பா பத்தின பீலிங்ஸ கொட்டு. நான் நம்ம குடும்பத்த நல்லா பாத்துப்பேன் அப்படின்னு அவர் கிட்ட பேசற மாதிரி எழுது. உங்கப்பா இல்லங்கிற நெனப்பு ஓரளவுக்குக் குறைய சான்ஸ் இருக்கு. உன் மனசுல உள்ள பாரம் குறையும். என்ன சொல்லுற?" தன் யோசனையை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
அதைக் கேட்ட போது அவளுக்கு நல்ல யோசனையாகத் தோன்றியது. இப்படியாவது தந்தையுடன் பேசலாமே என்ற நிம்மதி அவளது உள்ளத்தைக் கொஞ்சமாக ஆறுதல்படுத்தியது.
"உண்மையாவே நல்ல ஐடியா விஷ். அப்படியே பண்றேன். நல்லா இருக்குமெண்டு தோணுது" என்றவளுக்கு அவனது நட்புக் கிடைத்தது அதிர்ஷ்டம் தான் என்ற உணர்வு.
"சாப்பிட்டுத் தான் வந்திய?" என்று அவன் கேட்க, "சாப்பிட்டேன். இன்னிக்கு தொடர்ந்து லெக்சர்ஸ்னால காலையில டைம் இல்ல. அதனால பதினொன்றரை மணிக்கு மாதிரி ரெண்டு வேளையும் சேர்த்து ஒன்னாவே சாப்பிட்டுட்டேன்" என்று பதில் தந்தாள் சின்னச் சிரிப்போடு.
"நானும் யுனில இருக்கும் போது அப்படிப் பண்ணுவேன் காச மிச்சப்படுத்துறதுக்காக. வீட்டுல நம்ம செலவு பண்ணும் போது எதுவுமே விளங்காது. நமக்காக அம்மா அப்பா செலவு பண்றாங்களே. ஆனா நம்ம கையில காசு இருக்கும் போது சின்னதா செலவு செய்யவே ரொம்ப யோசிப்போம். பணத்தோட அருமை அப்ப விளங்கும். ரொம்ப கஞ்சத்தனமா இருக்கோமோ எண்டு கூட நமக்குத் தோணும். ஆனால் அப்படி இருந்தாகனும்" தனது பல்கலைக்கழக நாட்களை நினைவு கூர்ந்தான் ஆடவன்.
"அங்க ரொட்டியும் வடையும் விக்கிறாங்கள்ல.வாங்கிட்டு வரட்டுமா?" என்று அவன் கேட்க, சரி என்று தலையை அசைத்து விட்டுத் தனது கைப்பையில் இருந்து இருநூறு ரூபாயை வழங்கினாள்.
"இன்னும் இப்படித்தானா இருக்க?" என அவன் முறைப்போடு கேட்க, "அதெல்லாம் என்னைக்கும் மாறாது. ப்ரெண்ட்ஷிப்குள்ள இந்தக் கணக்கு வழக்கெல்லாம் இருக்கக் கூடாது" என்றாள் கறாராக.
ஆதிரா அப்படித் தான். அவர்கள் நட்பு பந்தத்தில் இணைந்தாலும் அவளுக்கு எது வாங்குவதாக இருந்தாலும் அவளே பணம் தருவாள். தன்னிடம் இருக்கிறது என்று விஷ்ணு மறுத்தாலும் பிடிவாதமாக அவனிடம் கொடுத்து விடுவாள். இருபது ரூபாய் குறைந்தாலும் அடுத்த நாள் அதைக் கொண்டு வந்து நீட்டுபவள் மீது கோபம் கொள்வது அவனது வழக்கம். அந்தக் கோபத்திற்கும் சஞ்சலப்படாமல் வற்புறுத்தி வாங்கச் செய்து விடுவாள்.
இருவரது பிறந்த நாள் தினத்தில் மட்டும் தான் ஒருவர் மற்றவருக்கு தமது செலவிலேயே வாங்கிக் கொடுத்தார்கள். அடுத்த நாளெல்லாம் தமது செலவுக்குத் தமது பணம் தான். அவளது குணம் அறிந்ததால் தான் வேலை வேண்டும் என்று கேட்ட போதும் தன்னால் பண உதவி செய்ய முடியுமாக இருந்தும் அவளது முடிவை ஏற்றுக் கொண்டான்.
வெள்ளவத்தை கடற்கரை அருகில் ரொட்டி, பருப்பு வடை, இறால் வடை விற்கும் தள்ளு வண்டிக் கடையொன்று இருக்கும். ருசியான தேநீரும் கூட விற்பனைக்கு உண்டு.
ரொட்டியும் வடையும் வாங்கி வந்தான். எதிர்க்கடையால் ஃபலூடா ஐஸ்கிரீமும் வாங்கியிருந்தான்.
"அய்ய் ஐஸ்கிரீம்" அவள் முகம் பிரகாசிக்க, "வாண்டர் கோர்ன் வாங்க காசு பத்தல" என்றவனைப் பார்த்து, "நீ வாங்கியிருக்கலாம்" என்றாள்.
"சாப்பிட்டா சேர்ந்து சாப்பிடனும். இல்லண்டா வேணாம்" என்றவாறு வடையைக் கடித்து ருசித்தவனைப் பார்த்தவளுக்கு அவனுடனான அறிமுகம் நினைவு வானில் வானவில்லாய்த் தோன்றியது.
தொடரும்...