• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 4

ரோசி கஜன்

Administrator
Staff member

கதை 04

பிரிவுச் சுமையோடு ஆதிரா போராடிய காலம் அது. பிறந்தது முதல் வீட்டிலேயே வளர்ந்தவள் முதல் முறையாக ஊரை விட்டே வந்திருக்கிறாள்.

தந்தையின் சிறகுகளுக்குள் குருவிக்குஞ்சு போல் பாதுகாப்பாக வாழ்ந்தவள் அவள். தனியாக எங்குமே செல்ல மாட்டாள். அப்படியானவளுக்குக் கொழும்புச் சூழல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

இதோ இரண்டாவது முறை கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணம் செய்கிறாள். முதல் முறை குடும்பத்தாருடன் சென்றாள். அவளை விடுதியில் விட்டு விட்டு வருவதற்காக வீட்டினர் அனைவரும் வந்தார்கள்.

அவளை விட்டு அவர்கள் செல்லும் போது இதயத்தில் சுரீரென்ற வலி. அவளின் தந்தையின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவளுக்கும் விழி நீர் மடை திறந்த வெள்ளமாகப் பெருகியது.

கனக்கும் மனதோடு, வலிக்கும் தனிமையில் தூங்கிய அன்றிரவு வாழ்வே வெறிச்சோடிப் போனதொரு உணர்வைக் கொடுத்தது. வீட்டாரின் நினைவில் கன்னத்தில் கண்ணீர் கோடு போட்டது.

அன்றிலிருந்து ஆரம்பித்தது அவளின் புதிய பயணம். தனிமை அச்சுறுத்திய போதும் அதற்கு எதிராகப் போராடத் தயாரானாள். ஒன்றை இழந்து தானே இன்னொன்றை அடைய முடியும் என்ற எண்ணத்தை மனதில் இருத்தி, வீட்டு நினைவால் எழும் அழுகையை அடக்கினாள்.

ஐந்து நாட்களின் பின்னர் கொழும்புக்கு வந்த அவளது உறவினரோடு வீடு சென்றாள். இரண்டு நாட்கள் இருந்தவள் இதோ மீண்டும் புகையிரதத்தில் குடிகொண்டாள்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் பயணம் காலியில் இருந்து வெள்ளவத்தைக்கு. அலைபேசியைப் பார்த்தும் சலித்துப் போயிற்று. யன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு லேசான தலை வலி.

இருக்கையில் சாய்ந்து கொள்ள, மெலிதான உறக்கம் அவளை ஆட்கொண்டது. தலை துவண்டு விழுந்ததும் திடுக்கிட்டு விழித்தவளுக்கு உள்ளூர எழுந்தது பெரும் அச்சம். தனியாகச் செல்கிறாள். தூங்கி விட்டால் அவளை எழுப்ப யாரும் இல்லை என்ற உண்மையின் தாக்கத்தால் தூக்கத்தை வெகு சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

வெள்ளவத்தையில் இறங்கிக் கொண்டவள் வீதிக்கு வந்தாள். வெள்ளைக்கோடு இருந்தது. ஆனால் இரு பக்கமும் வாகனங்கள் இடைவிடாமல் சென்று கொண்டே இருக்க இவளால் வீதியைக் கடக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவ்விடத்திலேயே நின்று வலமும் இடமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு முறை காலை முன் வைத்ததும் பைக் ஒன்று மின்னல் வேகத்தில் செல்லவே பயந்து போனாள்.

"இன்னிக்கு இப்படியே இருக்கனுமோ?" இயலாமையுடன் முணுமுணுத்துக் கொள்ள, "ரோட் க்ராஸ் பண்ணனுமா?" எனும் ஆண் குரல் அவளருகில் ஒலித்தது.

தலை திருப்பியவளின் விழிகளில் விழுந்தான் வாட்டசாட்டமாக நின்றிருந்த விஷ்ணு. ஆசுவாசப் பெருமூச்சு விட்டவள் ஆம் என்று கூற அவனும் வீதியைக் கடக்க உதவினான்.

"தாங்க்ஸ்" என்று நன்றி நவின்றவளிடம் தலையசைப்புடன் கிளம்பினான் அவன்.

பையின் பாரத்தால் தோள்கள் வலியைக் கொடுத்தன. எதையும் கவனிக்காமல் வேகமாக நடக்கலானாள் ஆதிரா. சில நிமிடங்கள் கடந்ததும் அவளுள் திகைப்பு. அவள் செல்ல வேண்டிய பாதை எதுவென்று தெரியவில்லை.

விடுதி இருக்கும் பாதையின் பெயரை மொபைலில் தேடலாம் என்று பார்த்தால் அதில் டேட்டா இல்லை. நெற்றிப்பொட்டை உள்ளங்கையால் தேய்த்துக் கொள்ள, அவள் விழிகளில் விழுந்தது விஷ்ணுவின் உருவம்.

"எக்ஸ்கியூஸ்மீ" மெல்லிய குரலில் அழைக்க, கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

"லில்லீ அவெனியு எங்கிருக்கு?" திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் இருந்தது அவள் முகம்.

"ஸ்டேஷன் ரோடுக்கு அடுத்தது. நீங்க மூனு ரோட் தாண்டி வந்துட்டீங்க" என்றபடி டீயைக் குடித்து முடித்து கப்பை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு முன்னே நடக்கலானான்.

"நானே போறேன். தாங்க் யூ" அவன் தனக்கு வழிகாட்ட வருவதை அவள்‌ மனம் ஏற்க மறுத்தது.

"சும்மா உக்காந்து இருக்கிறதுக்கு ஒரு நல்ல காரியம் பண்ணலாம்னு நெனைக்கிறேன். நான் முன்னால போறேன். நீங்க பின்னால வாங்க" என்று பின்னால் திரும்பிச் சொல்லி விட்டு நடந்தவனை அவளும் பின்தொடர்ந்து சென்றாள்.

லிலீ அவனியு வந்ததும் "இது தான் ரோட். ஞாபகம் வெச்சிக்கோங்க. ஸ்டேஷன் ரோடுக்கு அடுத்தது தான். இந்த போர்ட்ட மனசுல பதிச்சுக் கொண்டாச் சரி" எனக் கூறியதோடு, "கொழும்புக்குப் புதுசுன்னு நெனக்கிறேன். முதல்ல அப்படித் தான் இருக்கும். போகப் போகப் பழகிடும். டேக் கேர்" என்று கூறினான்.

"தாங்க் யூ" என்றவாறு விடைபெற்றவள் தற்போது வேகத்தைத் தத்தெடுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் பல்கலைக்கழகம் சென்று வந்து பஸ்ஸில் இருந்து இறங்கியவளுக்கு வீட்டின் ஞாபகம். விடுதியினுள் நுழையாமல் நேராகவே நடக்கத் துவங்க, அவள் விழிகளுக்குத் தென்பட்டது வெள்ளவத்தை கடற்கரை.

இதுவரை தனியாக கடற்கரைக்குச் சென்றதில்லை. இருந்தாலும் தற்போது தனிமைக்குத் துணை போகக் கடலைத் தேர்ந்தெடுத்தால் என்ன என்று தோன்றியது. உடனே சென்றும் விட்டாள்.

அங்கிருந்த பெஞ்சில் எல்லாம் காதல் ஜோடிகள் அமர்ந்திருக்க, சங்கடத்துடன் இன்னும் நடந்தாள். ஓரிடத்தில் இரண்டு இருக்கைகள் அருகருகே இருந்தன. ஒன்றில் ஒரு ஆடவன் முதுகு காட்டி அமர்ந்திருந்தான். விஷ்ணு தான் அது என்று அவளுக்குத் தெரியவில்லை.

அதில் உட்காரலாமா வேண்டாமா எனத் தனக்குள் பட்டி மன்றம் நடத்தியவள் இறுதியில் சென்று அமர்ந்து கொண்டாள். வீட்டார் நினைவு மனதைப் பிழிந்தது.

குடும்பத்துடன் சென்று கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த பொழுதுகள் நெஞ்சில் அழகான ஊர்வலமாய். பலரும் குடும்பம் சகிதமாக வந்து குதூகலிப்பதைப் பார்த்தவளுக்கு நினைவின் ஏக்கத்தில் கண்ணீர் சுரந்தது.

வீட்டிற்கு அழைத்துப் பேசினாள். "பத்திரமா இருடா ஆதி" என்று தந்தை கூறவே, "சரிப்பா" என்றவளுக்கு அழுகையில் குரல் உடைந்தது. பேசி விட்டு வைத்தவள் விசும்பலுடனே அங்கிருந்து நகர்ந்தாள். விடுதியோ அவளின் அழுகையை இரட்டிப்பாக்கியது‌.

விடுதியில் இருப்பதைக் காட்டிலும் கடற்கரைக்குச் செல்வது அவளுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் சில வேளைகளில் அழுவாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

வெயில் அதிகமாக இருந்த ஒரு நாளில் குடையுடன் வந்திருந்தாள் ஆதிரா. பலமான காற்று மோதவே கையிலிருந்த குடை தூரச் சென்று விழுந்தது.

மணலில் அமர்ந்திருந்த விஷ்ணு குடையை எடுத்து நீட்ட, "தாங்க்ஸ்" என்று வாங்கிக் கொண்டாள்.

"இன்னொரு தாங்க்ஸ் சொல்லுங்க. அஞ்சு தடவை நன்றி சொன்னேனு எங்கக்கா கிட்டப் போய்ச் சொல்லுறேன்" என்றவனைப் பார்த்தவள், "உங்கக்கா கிட்ட எதுக்கு என்னப் பத்தி சொல்றீங்க?" என்று கேட்டாள்.

"அவங்க கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்" எனப் புன்னகையோடு சொல்ல, அவளோ அவசரமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

இந்த வார இறுதியில் விடுதியில் தங்குவதாக முடிவு செய்து வந்திருந்தாள். அடிக்கடி பயணம் செய்யாமல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வீடு வருமாறு அப்பா சொன்னதை அவளும் ஏற்றுக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் முழுக்க எங்கும் செல்லாமல் விடுதிக்குள்ளே இருந்தால் கண்ணீருடன் தான் காலம் கழியும் என நினைத்தவாறு காலைப் பொழுதிலேயே கடற்கரையை நோக்கி நடை போட்டாள்.

மாலை நேரம் போல் கலகலப்பாக இன்றி அமைதியின் மடியில் அடங்கிக் கிடந்தது அலைகடல். பறவைகளின் கீச்சிடும் ஓசையும், அலைகளின் இரைச்சலும் செவிகளுக்கு இதமாக இருந்தன. அவளுள்ளிருந்த ஆசை ஊற்றெடுக்கவே புத்தகத்தைத் திறந்து கவிதை எழுத ஆரம்பித்தாள்.

பஞ்சுக் கூட்டங்கள் மிதக்கும் வானத்தையும், பரந்து விரிந்த சமுத்திரத்தையும், நிசப்தத்தின் அசாத்திய அழகையும் வார்த்தைகளால் வடித்தாள்.

"யாருமே இல்ல இந்த டைம்ல" என்று சத்தமாகவே சொல்லிக் கொண்டு கண்களால் தேடல் மேற்கொண்டவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் விஷ்ணு.

பெரிய பாறையொன்றில் கடலைப் பார்த்தவாறு அமர்ந்து, கையில் புத்தகம் ஒன்றை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான் அவன்.

அந்நேரத்தில் அவனும் அவளைப் பார்த்திட, எழுந்து அவளை நோக்கி வந்தான்.

அவளோ கேள்வியாக நோக்க, "இன்னிக்கு கடலோட கோவமா?" என்று கேட்டான் அவள் முன்னே நின்றவாறு.

"ஏன்?"

"எந்த நாளும் வந்து கடலுக்கு உப்பு சேத்துட்டுப் போவீங்களே, உங்க கண்ணீரால. இன்னைக்கு சிரிச்சிட்டு இருக்கீங்க" என்று சொன்னவனது இதழ்களில் குறுநகை வீற்றிருந்தது.

"கவலையா இருந்தா அழுவேன். சந்தோஷமா இருந்தா சிரிப்பேன். எப்பவும் போல அமைதியா இருந்துட்டுப் போகாம இன்னிக்கு ஏன் என் கிட்டப் பேசுறீங்க?"

"உனக்கு யாருமே இல்லண்டு தானே ஃபீல் பண்ணுற?" பன்மையில் இருந்து ஒருமைக்கு மாறியிருந்தது அவன் பேச்சு.

"ஆமா. நீங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து விடப் போறீங்களா?" அவளிடம் நக்கல்.

"முடியாத காரியத்த ஏன் கேக்குற? ஆனா நீ என் கூட ஃப்ரெண்ட் ஆகிடு. அப்போ யாரும் இல்லங்குற ஃபீல் உனக்கு வராம இருக்குமே"

"அதெல்லாம் வேணாங்க. நான் யார் கூடவும் ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்க விரும்பல" அவளிடத்தில் மறுப்பு.

"நானும் இங்க தனியா வருவேன். நீயும் தனியா வந்திருப்ப. நாம ஏன் ஃப்ரெண்ட்ஸ் ஆகக் கூடாதுன்னு தோணுச்சு. நம்ம கவலைகளை, சந்தோஷங்களை ஷேர் பண்ணிக்கலாம் தானே?"

"நான் ஓகே சொல்வேன்னு எப்படி நெனச்சீங்க?" புருவம் உயர்த்திக் கேட்டாள் ஆதிரா.

"நான் யாருன்னு உனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது ஓகே சொல்லுவன்னு நெனக்கல. ஒரு வாட்டி உன் கிட்டக் கேட்கலாமேன்னு நெனச்சேன். மனசால நெனச்சா மட்டும் போதாது, ட்ரை பண்ணியும் பாக்கனும். அதான் கேட்டேன். இனி உன் இஷ்டம். இந்தக் கேள்வியை இனிமே உன் கிட்ட நான் கேக்க மாட்டேன்" அவன் சொன்ன விதம் அவளுக்குப் பிடித்திருந்தது.

ஆனால் எந்த நம்பிக்கையில் சரியென்பாள்? அவனைப் பற்றி எதுவுமே தெரியாது, பெயர் உட்பட‌. பெண்களுக்கு உரித்தான அச்ச உணர்வும், ஆண்களிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என்ற எண்ணமும் கூட அவளை யோசிக்க வைத்தது.

"என்னப் பத்தி ஏன் உங்கக்கா கிட்டச் சொன்னீங்க?" அன்று கேட்க நினைத்ததை இன்று கேட்டாள்.

"அக்கா கிட்ட நான் எல்லாமே சொல்லுவேன். நீ ரோட் மாறப் பயந்து நின்னது, ரோட் மாறி வந்தது, தினமும் பீச் வர்றது எல்லாம் சொன்னேன். ஃப்ரெண்ட் ஆகலாமான்னு கேளுன்னு அக்காவும் சொன்னாங்க. ஊரை விட்டு வந்திருக்கிற ஒரு பொண்ணுக்கு சப்போர்ட்டா இருக்க முடியும் எண்டுற எண்ணத்துல தான் நானும் உன் கிட்டக் கேட்டேன்" என்றிட, அவளும் தலையசைத்தாள்.

அவனது கையில் இருந்த நாவலைப் பார்த்தவாறு "நாவல் இருந்தா எனக்கும் தர்றீங்களா?" என்று கேட்டாள்.

"கண்டிப்பா. பப்ளிக் லைப்ரரியால நான் வாங்குவேன். வாசிச்சிட்டு உனக்கும் கொண்டு வந்து தர்றேன்"

"புக்க நான் காணாம போட்டுட்டேன்னா?" அவள் கேள்வி கேட்க, "வேற வாங்கிக்கலாம்" என்று வந்தது பதில்.

"என்னைத் திட்ட மாட்டீங்களா?"

"தெரியாம நடந்ததுக்குத் திட்ட மாட்டேன். ஆனா நீ தான் அதைத் தேடி வாங்கித் தரனும்" அவன் எச்சரிக்கையோடு சொல்ல, "சும்மா கேட்டேன். அப்படில்லாம் பண்ண மாட்டேன். நம்பித் தரலாம்" அவசரமாகக் கூறினாள்.

"நம்பிக்கை இல்லாமலா ஃப்ரெண்ட்டாகக் கேட்டேன்?" என்றவன், "உனக்கு என் மேல முழு நம்பிக்கை இருந்தா மட்டும் தான் நீ ஓகே சொல்லனும். இல்லன்னா வேண்டவே வேண்டாம். உனக்கு அப்பாவ ரொம்பப் புடிக்குமே. அவர் கிட்ட என்னப் பத்திச் சொல்லி ஒபீனியன் கேளு. வர்க் இருக்கு நான் வர்றேன்" விடைபெற்றுச் சென்றவனோ தன் பெயரையேனும் இன்னும் சொல்லவில்லை.

தொடரும்...
 
Last edited:
Top Bottom