• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 5

ரோசி கஜன்

Administrator
Staff member
கதை 05

"அந்தப் பையன் பெயராவது தெரியலப்பா" தந்தையிடம கூறினாள் ஆதிரா.

"நீ சொல்லுறத வெச்சுப் பாக்கும் போது நல்ல பையனாத் தான் விளங்குறான். இருந்தாலும் என்னால உறுதியா சொல்ல முடியல. அவனை நெனக்கும் போது மனசுக்கு நெருடலா இல்லாம, அவன் பார்வை உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, அவன் அருகாமை உனக்கு சேஃப்டியா இருக்கா அப்படின்னு பாரு இதெல்லாம் ஓகேனா உன் தாராளமா பிரெண்ட் ஆகலாம் என்று சொன்னார்.

தந்தையின் பதில் அவளுக்குத் திருப்தியாக இருந்தது. மகளின் பேச்சைப் புரிந்து கொண்டு அவளுக்கு உறுதுணையாக நின்று சரியான வழியைக் காட்டும் தந்தை வரம் தான் அல்லவா?

"சரிப்பா நான் யோசிச்சிப் பாக்குறேன். எதுவா இருந்தாலும் உக்க கிட்டச் சொல்லுவேன்" என்றவள் அன்று நிம்மதியுடனே துயில் கொண்டாள்.

அடுத்த நாள் கடற்கரைக்குச் செல்ல, அவன் ஏற்கனவே அங்கு வந்திருந்தான். அவளின் பாதங்கள் அவனை விஷ்ணுவை நோக்கி நடை போட்டன.

"உங்களுக்கு வேலையே இல்லையா? எப்பவும் பீச்ல இருக்கீங்க?" என்று வினவினாள் ஆதிரா.

"சோ என் கூட ஃப்ரெண்ட் ஆகலாம்னு பாக்குற?" ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவனைப் பார்த்து "இல்லையே" என தோள்ககளைக் குலுக்கினாள் ஆதிரா.

"ஃப்ரெண்ட் ஆகுற பேச்சை இழுக்க மாட்டேன் எண்டு சொன்னீங்க. ஆனா வந்த உடனே கேக்குறீங்களே.."

"ஆமா. என்ன வேலை செய்றேனெண்டு சும்மா கேக்க மாட்டியே. என்னப் பத்தித் தெரிஞ்சுக்க நினைச்சிருக்க. ஃப்ரெண்ட்டாகத் தானே அதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்புற" தன்னிலை விளக்கமளித்தான் அவன்.

"ஓஓ அப்டின்னு வர்றீங்களா?" மெச்சுதலான பார்வை அவளிடம்.

"ஆக்சுவலி நான் ஒரு விஐபி" ஷர்ட் காலரை உயர்த்திக் கொண்டவனைப் பார்த்து, "தற்புகழ்ச்சியா?" என்று கேட்டாள்.

"நோ நோ! வேலை இல்லாப் பட்டதாரி எண்டு சொன்னேன். ஸவுத் ஈஸ்டர்ன் யுனிவர்சிட்டில படிச்சிட்டு இன்னும் படிப்புக்கு ஏத்த வேலை இல்லாம கவர்மன்ட் ஜாப் கிடைக்கும் வரைக்கும் எதிர்ல இருக்கிற புக் ஷாப் ஒன்னுல வேலை பாக்குறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்க வந்து உக்காந்திருப்பேன். எனக்கும் கடலுக்கும் அப்படி ஒரு பந்தம்‌. என் ஃபீலிங்ஸ் எல்லாமே அதுக்குத் தெரியும்" அவனது கண்கள் கடலின் மீது கனிவுடன் படிந்தன.

"எப்படித் தெரியும்? நெறயப் பேசுவீங்களா?"

"வாய் திறந்து பேசினாத் தான் புரியனுமா? வார்த்தையால சொல்ல முன்னாடியே மனசப் புரிஞ்சு உணர்வுகளை உணர்ந்து கொள்ளுறது நட்புக்கு அழகு" அவன் முகத்தில் அப்படியொரு மென்மை.

"அதுவும் சரி தான். ஆனா அது மனுஷங்களுக்கு செட்டாகுமா?" அவன் சொல்லும் வித்தியாசமான பதில்கள் அவளை இன்னும் இன்னும் கேள்வி கேட்க வைத்தன.

"எல்லா மனுஷங்களையும் பத்தி எனக்குத் தெரியாது. ஒவ்வொரு மனுஷங்களும் ஒவ்வொரு விதம் இல்லயா? நான் இப்பிடித் தான். என்னோட நட்பு நான் சொன்ன மாதிரி ஆழமான ஒரு புரிதலோட இருக்கும்"

"உங்களுக்கு எவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க?"

ரெண்டு பேரு இரு விரல்களைக் காட்டி அவன் சொல்ல, "அவ்ளோ தானா?"

"யாரையாவது கண்டா சிரிப்பேன் பேசுவேன். ஆனா அவ்வளவா இல்ல. ஒரு லிமிட்டோட இருந்துப்பேன்.. லிமிட்டே இல்லாம, மனசு விட்டு எனக்குத் தோணுதை எல்லாம் நான் இப்போ பேசுறது என் அக்கா கிட்டயும் மாமா கிட்டயும் தான். அவங்க தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்" அவனது விழிகள் வானத்து விண்மீன்களாய்ப் பளிச்சிட்டன.

"அம்மா அப்பா.." என்று ஆரம்பித்தவள் சடுதியில் சுதாகரித்துக் கொண்டு "சாரி சாரி! நான் உங்க கிட்ட ஓவராக் கேள்வி கேக்குறேன்ல?" எனத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

"ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள எதுக்கு சாரி?" தலையை ஒரு பக்கமாகச் சரித்தபடி வினவினான்.

"நாம ஃப்ரெண்ட்ஸ் எண்டு யாரு சொன்னது?" என்று அவள் கேட்க, "இந்தப் பொண்ணுங்களே இப்படித்தானாம். மனசுல ஒன்ன வச்சுப்பாங்க‌. ஆனா அதை வெளிக்காட்டிக் கொள்ளாம வாயத் திறந்து பொய்யாச் சொல்லுவாங்க. ரொம்ப மோசம்" அவன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தான்.

"அப்படி எல்லாம் இல்லைங்க. ஜஸ்ட் கேட்டேன். ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமெண்டு நீங்க முடிவே பண்ணிட்டீங்க போல" என்று அவள் சொல்ல, "ஆகிடுவோம் எண்டு என் மனசு சொல்லுது" என்றான், இடது நெஞ்சை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டி.

"எனக்கு ரொம்பத் தாகமா இருக்கு" என்றவளுக்குத் தொண்டை வறண்டு போயிருந்தது.

"என்ன வேணும்? ஐஸ்கிரீம், ஜூஸ், இல்லன்னா டீ?" அவன் பட்டியலிடத் துவங்க, "டீ இருக்கா?" அவளின் விழிகள் பெரிதாக விரிந்தன.

"இருக்கே. அவ்ளோ டேஸ்டான டீ இருக்கு"

"எங்க? டீயெல்லாம் விப்பாங்களா?" அவள் குரலில் ஆச்சரியம்.

"இங்க தள்ளு வண்டிக் கடை வரும். ஏலக்காய், கறுவா எல்லாம் போட்டு சூப்பரான டீ இருக்கும்" அந்த டீயை நினைத்து அவனது நாவில் எச்சில் ஊறியது.

"அப்படின்னா வாங்கிட்டு வாங்க. எனக்கு டீ குடிக்கணும் போல இருக்கு" கைப்பையில் இருந்த ஐந்நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினாள்.

"வேண்டாம் இருக்கட்டும்" அவன் மறுக்க, "அப்படிச் சொல்லாம வாங்கிக்கோங்க. நான் உங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்கிறேனோ இல்லையோ ஏதாவது வாங்கும் போது நானும் என் பங்கு காசத் தருவேன். அதை நீங்க கண்டிப்பா வாங்கிக்கணும்" அவளது பேச்சில் இருந்த உறுதியைக் கவனித்தவன் தலையசைப்புடன் சென்று இருவருக்கும் டீ வாங்கி வந்தான்.

முகத்தினருகே கொண்டு செல்லும் போது வாசனை மூக்கைக் துளைத்தது.

"ஆஹா! வாசனை தூக்கலா இருக்கு" அவ்வாசனையை நாசி வழியே செலுத்தியவாறு சொல்ல, "குடிச்சிப் பாரு. இன்னும் சூப்பரா இருக்கும்" அவனும் தேநீரைச் சுவைக்க ஆரம்பித்தான்.

"நிஜமாவே சூப்பருங்க" அதை ருசித்து அருந்திக் கொண்டே சொன்னவள், "நான் ஒரு டீ லவ்வர். எனக்கு டீ நல்லா இருக்கணும். ஒரு நாளைக்கு எவ்வளவு வேணாலும் குடிப்பேன். தலை வலி வந்தாலும் எனக்கு அது தான் மருந்து" என்று அவளைப் பற்றித் தகவல் கொடுத்தாள்.

"நான் அவ்வளவு எல்லாம் இல்லை. காலையில கண்டிப்பா வேணும். டீ குடிக்கலண்டா அந்த நாளே ஒரு மாதிரியா இருக்கும். நீ சொல்றதுக்கு பார்த்தா உன்ன டீ லவ்வர் எண்டு சொல்ல முடியாது. டீ அடிக்டரெண்டு சொல்லலாம்" என்றவனோ நாடியில் விரல் தட்டி யோசித்து விட்டு, "டீ குடிகாரி எண்டு சொல்லவா?" புதுப்பெயர் கண்டு பிடித்து அவளது முறைப்பைப் பரிசாக வாங்கிக் கொண்டான்.

இப்படியாக அவர்களுக்குள் சுவாரஸ்யமான உரையாடல்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தன. முதலில் நட்புப் பற்றி ஞாபகமூட்டிய விஷ்ணு பிறகு அந்தப் பேச்சை தவிர்த்துக் கொண்டு சாதாரணமாக உரையாட, அவளுக்கோ நட்புப் பற்றிய பேச்சு கடலின் அலையாக மனமெனும் கரை நோக்கி வந்து போய்க் கொண்டிருந்தது.

அந்த வாரம் வீட்டுக்குச் சென்றவள் அடுத்த திங்கட்கிழமை பல்கலைக்கழகம் முடித்த கையோடு கடற்கரை நோக்கிச் சென்றாள். மனம் சரியில்லாமல் போனதில் விஷ்ணுவைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

அவன் இன்னும் வந்திருக்கவில்லை. சோகத்தின் சிகை கோதலில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளின் அருகில் ஓர் ஆடவன்.

"தனியாத் தான் வந்தீங்களா?" அவன் அவளிடம் கேட்க, பதில் ஏதும் கூறாமல் அமைதியாக நின்றாள்.

"உங்க பெயர் என்ன?" மீண்டும் அவன் கேட்கவே அவளுக்கு அசௌகரியமாக இருந்தது.

அவனை நிமிர்ந்து முறைத்தவளின் கண்கள் விஷ்ணுவைத் தேடி அலைபாய்ந்தன. அவன் வந்து விட்டால் போதும் என்று மனம் படபடத்தது‌.

"உங்க கிட்டத் தான் கேக்குறேன்" அவன் தன்னைப் பார்ப்பதை அவனைப் பாராமலே உணர்ந்தவளுக்கு அப்பார்வையில் உடல் கூசுவது போன்றதொரு நிலை.

கடலை வெறித்தபடி முறைப்பைக் கை விடாமல் அப்படியே அமர்ந்திருந்தவள் விஷ்ணு வருவதைக் கண்டதும் வேகமாக அவனிடம் சென்றாள்.

"என்னாச்சு?" அவளின் முகத்தைப் பார்த்து அவன் வினவ, "அங்க போகலாம். எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல" தூரத்தில் இருந்த பெரிய பாறையைக் கை காட்ட, அவனும் அவளுடன் நடந்தான்.

"அந்தப் பையன் என் கிட்ட பெயர் கேட்டு சும்மா சும்மா கதைக்க வர்றான். எனக்கு அங்க இருக்கப் பிடிக்கவே இல்ல. ஏதோ அசௌகரியமா, சேஃப் இல்லாத மாதிரி இருந்தது" அவளின் விழிகளில் அலைப்புறுதல்.

"அவனை விட்டுத் தள்ளு. ரெண்டு நிமிஷம் கண்ண மூடித் திறந்துட்டு ஒரு மூச்சை இழுத்து விடு" என்று விஷ்ணு கூற, அவளும் விழி மூடினாள்.

உள்ளத்து உணர்வுகள் மெல்லமாய் அடங்கின. பாதுகாப்பான ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தது போன்ற உணர்வு. கண்களை மூடியிருந்தாலும் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். இருப்பினும் அப்பார்வை அவளுக்குச் சங்கடமாக இல்லை.

அவனோடு இலகுவாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியும் என்ற தோன்றியது. தந்தை கூறியதோடு இவற்றை இணைத்துப் பார்த்தவளுக்கு அவனுடன் நட்புக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை மனதினுள் வேர்விட்டது‌.

கண்களைத் திறந்து பெருமூச்சு விட்டவளைச் சின்னப் புன்னகையுடன் பார்த்து "ஓகேயா?" என்று கேட்டான்.

"ம்ம்ம்" என்று பதிலளித்தவளுக்கும் இதழ்களில் புன்னகை அரும்பிற்று.

"மூனு நாள் கழிச்சுப் பாக்குறோம். புதுக்கதை எதுவும் இருக்கா?"

"வீட்டுக்குப் போனேன். அங்க போனா சந்தோஷத்துக்குக் குறைவே இல்ல. போகும் போது ஜாலியா இருக்கும். திரும்பி வரத் தான் மனசில்ல" என்று சொன்னவள், "யுனிவர்சிட்டில தான் இன்னிக்குக் கொஞ்சம் அப்செட்டாச்சு" என்றாள்.

"ஊர் ஊரா நெறய கேங் இருக்கு‌. அப்பறம் ஹாஸ்டல் புள்ளைங்க ஒன்னா இருக்காங்க. எனக்கு யாருமே இல்லாத மாதிரி ஒரு ஃபீல். நிவி இருக்கா தான். அவ லெக்சர்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்குப் போற அவசரத்துல ஓடிடுவா.

இன்னிக்கு எங்க பேட்ஜ் மேட் ஒருத்தருக்கு பர்த்டே. நிக்க சொன்னதால நானும் இருந்தேன். கேக் வெட்டி நல்லாதான் போச்சு. அதுக்குப் பிறகு ஃபோட்டோ எடுக்க ஆரம்பிச்சாங்க. கேங் கேங்கா ஃபோட்டோ எடுக்குறாங்க. சிரிச்சுப் பேசி சந்தோஷமா இருக்காங்க. என் கூட யாரும் பேசல. ஒரு ஃபோட்டோ எடுக்கக் கூடக் கூப்பிடல. ஒரு மாதிரி ஆகிடுச்சு. என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் ஞாபகம் வந்ததுல அப்படியே பஸ் ஏறி வந்துட்டேன்" பாடசாலைத் தோழிகளை நினைத்துக் கொண்டாள்.

"ஆரம்பத்துல அப்படித் தான். போகப் போக உங்களுக்குள்ள நல்ல போண்டிங் உருவாகும். யுனிவர்சிட்டி லைஃப் முடியும் போது பிரிஞ்சு போகவே தோணாது. இதை அவ்வளவா யோசிக்காம ஃப்ரீயா விடு" என்றவன் தன் பல்கலைக்கழக நினைவுகளையும் பகிர்ந்து கொண்டான்.

"அக்கா கிட்ட உன்னப் பத்திச் சொல்லும் போது நீ ரொம்ப சென்சிடிவ்வான புள்ளயா இருப்பண்டு அக்கா சொன்னா. உண்மை தான்"

அவனைச் சில நொடிகள் இமைக்காமல் பார்த்திருந்து விட்டு "உங்கக்காக் கிட்ட இதையும் சொல்லிடுங்க. அவங்க தம்பி மேல இந்த சென்சிடிவ்வான புள்ளக்கி நம்பிக்கை வந்துருச்சு எண்டு" என்றாள் அவள்.

"சீரியஸ்லி?" வியப்பை வழிய விட்டான் விழி வழியே.

ஆமோதிப்பாகத் தலையை ஆட்டியவள் "ஆதிரா உன் கூட ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கப் போறா" என்றவள் ஒருமைக்குத் தாவியிருந்தாள்.

"எனக்கு ரொம்பச் சந்தோஷம்" என்றவன் அவனது பெயரைச் சொல்லாததில் அவள் முறைத்துப் பார்த்தாள்.

கடலின் பக்கம் பார்வையைச் செலுத்தி "இந்தக் கடலைச் சாட்சியா வெச்சு நாம நட்பு பந்ததுல சேருவோம். உன் நம்பிக்கைய நான் எப்பவும் காப்பாத்துவேன். ஆதிராவும் விஷ்ணுவும் இனி பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்" என்றான் ஆனந்த அலையோடு.

"விஷ்ணுவா?" அவள் புருவம் தூக்க, "எஸ் ஆதி" என்றான்.

"ஓகே விஷ்" அவளும் கண் சிமிட்ட, "அடடா" என்றவனுடன் சேர்ந்து அவளும் மெல்ல நகைத்தாள்.

கடலின் மடியில் ஆறுதல் தேடி வந்த இரு உள்ளங்கள் தன்னைச் சாட்சியாக வைத்துக் கள்ளங்கபடமில்லா நட்பில் கரம் கோர்த்ததைக் கண்டு தன் மகிழ்வைப் பறைசாற்றும் விதமாகச் சற்றே அமைதியோடு கொந்தளித்தது அலைகடல்.

தொடரும்...
 
Last edited:
Top Bottom