• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
10

அந்த வீடு ரணகளம் ஆகிக்கொண்டிருந்தது இருந்தது. வதனி தன் அண்ணனிடம் மீண்டும் சண்டையை ஆரம்பித்து இருந்தாள்.

“ஏதோ முக்கியமான விஷயம் பேசுறதுக்கு மணிமொழி சார் வர்றேன்னு சொல்லி இருக்கார். எதுவும் எனக்கு தெரியாததா இருந்தா நீ பேசுவேன்னு சொல்லி தான் உன்னை கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருந்தேன். அவரும் உன்னைத்தான் கூட கூட்டிட்டு வர சொல்லி இருக்காரு. நீ என்னனா வர மாட்டேன்னு சொல்ற. நீ எல்லாம் ஒரு அண்ணன்?”

“அட பைத்தியக்காரி. நான் உன் அண்ணன் மட்டும் இல்ல. டாக்டரும் தான். எனக்கு என்ன வேலைன்னு உனக்கு தெரியுமா? இன்னைக்கு எனக்கு என்னென்ன அப்பாயின்மென்ட் இருக்குன்னு உனக்கு தெரியுமா? உயிர் சம்பந்தப்பட்ட வேலையில இருக்கேன் நான். நினைச்ச நேரம் லீவு போட முடியாது. இது இன்னமுமா உனக்கு புரியல? நீ எல்லாம் காலேஜுக்கு போய் என்னதான் படிச்சே?”

“அட அட அட அட. நீ இல்லன்னா இன்னொரு டாக்டரை வச்சு உங்க ஆஸ்பத்திரில வேலையை பார்ப்பாங்க. ஆனா எனக்கு நீ ஒருத்தன் தான் அண்ணன். என் கூட வர்றத விட உனக்கு உன் வேலை தான் பெருசா போச்சா?”

“உனக்கு எல்லாம் இந்த மாதிரி ‘ஒரு இடத்து’ல வேலைக்கு போறவன் புருஷனா வரக்கூடாது. சொந்த தொழில் செய்தவன் தான் புருஷனா வரணும். அப்பதான் இந்த மாதிரி வாய் பேசாம அவனை அவன் வேலையை பார்க்கவிடுவ”

“அதை நான் பார்த்துக்கிறேன் இப்ப நீ கிளம்பி என் கூட வர்ற வழியை பாரு”

“அதான் முடியாதுன்னு சொல்றேன்ல”

“வரியா? இல்லையா?”

“வர முடியாது”

“அம்மா கிட்ட சொல்லுவேன்”

“சொல்லிக்கோ”

“அம்ம்மா!”

வதனி சத்தமாக அழைத்துக் கொண்டே அம்மா இருந்த அடுப்படிக்கு போனாள்.

இவ்வளவு சத்தத்தில் விஷயம் தெரியாமல் இருக்குமா மலருக்கு? அவருக்கு அது இவர்கள் வாக்குவாத இரைச்சலில் தெரிந்து இருந்தது. ஆனாலும் இவர்கள் இருவருக்குள்ளும் தலையிட விரும்பவில்லை. அதற்கு பயம்தான் காரணம். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் அவருக்கு தொண்டை தண்ணீர் வற்றிவிடும். தானாக வரும் வரை அவர் அவர்களின் இப்போதைய பிரச்சனையை தள்ளி போட்டார். அப்படியே முடிந்து விட்டால் அவருக்கு எவ்வளவோ நிம்மதி.

மதிவாணன் தங்கையிடம் சண்டையிட மாட்டான். ஆனால் மதிவதனி அவனிடம் சண்டை பிடிப்பாள். வீட்டில் யாரையாவது வம்புக்கு இழுக்காது அவளுக்கு பொழுது போகாது. அதே நேரத்தில் அவள் வீட்டில் இல்லை என்றால் வீடு வீடாக இருப்பதில்லை. அந்த வீட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவள்தான்.

ஒரு வழியாக தன்னிடம் வந்து சேர்ந்த பிரச்சனையை ஆராய்ந்து தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் மலர். ஏற்கனவே இதற்கு முடிவை கண்டுவிட்ட அவர் நிதானமாக மகளை எதிர்கொண்டார்.

என்ன விஷயம் என்று மீண்டும் கேட்டார். அவளும் மீண்டும் முதலில் இருந்து கதையை சொன்னாள். இந்த இடைவெளியில் உணவு வேலையை முடித்துவிட்டு வேலைக்கு கிளம்ப தயாரான மகனுக்கு மதிய உணவுப் பொதியை கையில் கொடுத்தார் மலர். அங்கேயே சாப்பாடு சிற்றுண்டி தேநீர் எல்லாம் இருந்தாலும் முடிந்த வரை மதிய உணவு மட்டும் வீட்டில் இருந்து எடுத்துச் சென்று விடுவான் மதிவாணன். இன்றும் அப்படித்தான்.

“அம்மா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீங்க என்ன செய்றீங்க? நான் அவனை என் கூட வர சொல்லி சொல்லிட்டு இருக்கேன். நீங்க அவனை ஹாஸ்பிடலுக்கு பேக் பண்ணிட்டு இருக்கீங்க. அப்ப இந்த வீட்ல என் பேச்சுக்கு ஒரு மதிப்பில்லை! அப்பா இப்போ வீட்டில இருந்தா என்ன இப்படி அனாதையா விட்டு இருப்பாரா?”

வதனி எக்கச்சக்கமாக மூச்சு பிடித்து பேசிப் பார்த்தும் மலர் அசையவில்லை. இவளுக்கு வேற வேலை இல்லை என்பதாக ஏற இறங்க மகளை பார்த்தவர், “வேலைக்கு போகும் போது இப்படி நிலையாக நிற்க கூடாது. அவன் போயிட்டு வரட்டும். அந்த தம்பி உனக்கு தெரியாத விஷயம் ஏதாவது கேட்டா அண்ணனுக்கு போன் போட்டு கொடு. அவன் பேசுவான. வீட்டுல பொம்பளை பிள்ளை அமைதியா அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமா? அவன் வெளியே போறவன். நிம்மதியா போயிட்டு வரட்டும். கொஞ்சம் அமைதியா இரு” என்று இவள் வாயை மூடிவிட்டார.

இத்தனை சென்டிமென்ட் அம்மா பேசிய பிறகு அடுத்த வார்த்தை இவளால் பேச முடியாது போனது. என்ன இருந்தாலும் அண்ணனின் மீது அவளுக்கு அக்கறையும் பாசமும் இருக்கிறதே? தன்னால் அவனுக்கு எதுவும் ஒன்று ஆவதை அவள் விரும்பவில்லை.

“இப்படி எதையாவது சொல்லுங்க” என்று முகத்தை தூக்கி வைத்தாலும் அண்ணனை மலர்ந்த முகத்துடன் “சரி போயிட்டு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தாள் வதனி.

அப்புறம் அவள் கிளம்பி தன்னுடைய பாத்திரக்கடைக்குச் சென்றாள். “ நான் வேணும்னா வரட்டுமா” என்ற தாயை முறைத்துவிட்டு கிளம்பினாள். அங்கே பாத்திரங்களின் இருப்பு, தேவையான பாத்திரங்களாக அவள் கருதுபவைகளின் கணக்கு ஆகியவற்றை குறித்துக் கொண்டு சிலரிடம் முக்கியமான தொலைபேசி அழைப்புகளை பேசி முடித்தாள்.

அவளுடைய தினசரி வேலையை செய்து விட்டு வெட்டி வேலையான செல் போன் நோண்டுவதை செய்ய ஆரம்பித்தாள்.

மணிமொழி வருவதாக சொல்லி இருக்கிறான். ஆனால் நேரம் சொல்லவில்லை. வரும்போது வரட்டும். பார்த்துக் கொள்ளலாம். காலையில் வந்தால் டீயும் வடையும் வாங்கி கொடுக்கலாம். மதியம் வந்தால் ஏதாவது சாப்பிட சொல்லலாமா? வேண்டாம். வீடு போய் அவன் சாப்பிட்டுக் கொள்ளட்டும். சாயந்திரம் வந்தால் அதே கடையில் டீ. அதற்கு மேல் அவளே கடையில் இருக்க மாட்டாள்.

வேண்டும் என்றால் அவனே கூப்பிடட்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு செல்போனில் ஆழ்ந்தாள். நடுநடுவே வியாபார ரீதியான அழைப்புகள் வந்ததுடன் இரண்டு தோழிகளும் பேசினார்கள். ஒரு சில சில்லறை வியாபாரங்களும் ஆனது. அப்படியே மணி பதினொன்று ஆனபோது மணிமொழியின் இருசக்கர வாகனம் அவள் கடையில் முன் நின்றது. அதிலிருந்து இறங்கி வந்தவன் அரை கை வைத்த கதர் சட்டையும், பேண்டும் அணிந்து இருந்தான். உடை எப்போதும் எளிமையாக இருந்தாலும் விலை அதிகம் உள்ளதாகவே இருக்கும். இப்போது அணிந்து இருந்த உடையும் அப்படியே.

“வாங்க” என்று புன்னகையுடன் வரவேற்றவளை பார்த்துக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

“சாப்டீங்களா?” என்று சாதாரணமாக கேட்டவளை நெஞ்சம் குளிர பார்த்தான் மணிமொழி.

“என்ன பார்வை? கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டியதுதானே?” என்றபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள் வதனி.

“நான் சாப்பிட்டது இருக்கட்டும். நீ சாப்பிட்டியா?” என்று கேட்டபடி அவள் எதிர் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். வந்தவனை உட்காரச் செல்லாததை நினைத்து தன்னை திட்டிக் கொண்டாள் வதனி.

கூடவே வந்த இடத்தில் எந்த தயக்கமும் இன்றி வந்து அமர்ந்தவனை பார்க்கும் போது ஆச்சரியமும் வந்தது. ‘நெம்ப காறு வாறா இருப்பானே?’ என நினைத்துக் கொண்டவள், சரி. அவன் முன்பு எப்படி இருந்தால் என்ன? இப்போது எப்படி இருந்தால் என்ன? இனிமேல் எப்படி இருந்தால் என்ன? என விட்டேற்றியாக நினைத்தாள்.

வந்ததில் இருந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் மனதில் அவனைப் பற்றிய எந்த சலனமும் இல்லை என்பதை அவளது சலனமற்ற முகத்தை பார்த்து தெரிந்து கொண்டான். ஆனால் அவள் கல்லூரியில் படிக்கும் போது ஏன் அவனை அப்படி பார்த்தாள்? அதை நம்பிதானே அவன் இப்போது ஏமாந்து நிற்கிறான்? எப்படி இருந்தாலும் அவளைத்தான் மணப்பான். ஆனால் அவள் மனதில் அவனுக்கு இடம் ஏற்கனவே இருந்ததே? அவளுக்கு புரியுமா?

அவளுடன் அவள் அண்ணனை வர சொல்லி இருந்தான். அவன் வந்திருந்தால் அவனுக்கும் ஒரு வேலை கொடுத்து அனுப்பிவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தான். யாரும் வர வேண்டாம் என்று சொன்னால் நிச்சயம் அவள் வீட்டில் எல்லாம் செல்வதை போல் அதையும் சொல்லி இருப்பாள். அப்படி இருந்தால் அவர்களுக்கு சந்தேகம் வரலாம். அது அவனது திட்டத்தை பாதிக்கலாம். அதற்காகவே மதிவாணனை அழைத்துக் கொண்டு வரச் சொல்லி இருந்தான்.

அவன் ஒரு மருத்துவர் என்பதால் முடிந்த அளவு வரமாட்டான் என்பது தான் இவனது கணிப்பும். அதைப்போல அவன் வரவில்லை. அவள் தாய் பற்றி சொல்லவே இல்லை மொழி. அவர் பாவம். வயதானவர். மூட்டுவலியில் சிரமப்படுபவர். அவரை இந்த பிரச்சனைகளுக்குள் இப்போதைக்கு இழுக்க மாட்டான்.

அவன் எண்ணத்தை தடை செய்யும் விதமாக “என்ன சாப்பிடுறீங்க?” என்று உபசாரத்தை தொடங்கினாள் வதனி.

“ம்..சாப்பிடலாம். அப்புறம் வேலை எப்படி போகுது? உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

“வேலையா? அது அது பாட்டுக்கு போகுது. பிடிக்காமலா தொடர்ந்து நடத்திக்கிட்டு இருக்கேன்?” என்று புன்னகைத்தாள்.

“சரி.என்ன சாப்பிடுறீங்க?” என்று மீண்டும் கேட்டபடியே கடையில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து,

“அக்கா சாருக்கு டீயும் வடையும் வாங்கிட்டு வாங்க” என்றாள்.

கெடுத்தாளே காரியத்தை. இவளிடம் டீயும் வடையும் வாங்கி சாப்பிடலாம் என்றுதான் வந்து குதித்தானா? சரி இருக்கட்டும். எடுத்த எடுப்பில் எதுவும் பேச வேண்டாம்.

“ஓகே. டீ சாப்பிடலாம். ஆனா எனக்கு பிடிச்ச கடை ஒன்னு இருக்கு. அங்க போகலாமா?” அவளை அங்கே இருந்து நகர்த்தி விட்டால் மீண்டும் அந்த கல்லூரி பெண்ணாக மாறி அவனிடம் கண்களால் பேசுவாளா?

ஏதேதோ சிந்தனைகள் அவனை பந்தாடின. அவள் வீடும் தொழில் பொறுப்பும் அவளை அவனிடம் இருந்து தள்ளி வைத்து இருக்கின்றனவா? அதிகபட்சம் அது ஒன்றுதான் அவனை தள்ளி நிறுத்த காரணமாக இருக்க வேண்டும்.

பேசுகிறாள். நன்றாகத்தான் பேசுகிறாள். ஆனால் முன்பு போல் பேசவில்லை. ஆத்மார்த்தமாக அவன் மனதோடு பேசவில்லை. அந்த நாட்கள் அவன் வாழ்வில் பொக்கிஷங்கள். அது மட்டும் போதாது. இன்னும் வேண்டும். நிறைய நிறைய வேண்டும். அவன் வாழ்நாள் எல்லாம் வேண்டும். அதற்கு அவள் மனம் தெளிவுபட வேண்டும். இப்போது இருப்பது அவள் அல்ல. பொறுப்பான பெண். அந்த பெண் வேண்டாம். எந்த கவலையும் இல்லாமல் யாரைப் பற்றிய சிந்தனைகளும் இல்லாமல் அவனை கண்ணுக்கு கண்ணாக சந்தித்து, கண்களால் உரையாடி, கண்களால் சிரித்த அந்த அவன் வனிதை வேண்டும்.

இப்படி எல்லாம் வதனியும் யோசிக்கவில்லை. அந்த வயதில் என்ன தோன்றியதோ அதை செய்தாள். அது தவறென்று அவளுக்கு தெரியவில்லை. அவனும் தவறாக படவில்லை. அவன் மீது ஒரு துளி சந்தேகம் வந்திருந்தாலும் அவனை எப்போததோ தன் வாழ்வில் இருந்து வெட்டி இருப்பாள்.

படித்து முடித்தவுடன் வேலையை ஆரம்பித்தாள். எங்காவது வேலைக்கு சென்று இருந்தால் கூட அதே மனநிலை இருந்திருக்கும். ஆனால் சொந்த பிசினஸ் ஆரம்பித்ததில் அவனது உயரமும், அதற்காக அவன் எவ்வளவு உழைத்து இருக்க வேண்டும் என்பதும் தெரிந்து இருந்தது.

இவள் கல்லூரியில் படிக்கும் போதுமே அவன் வேலை விஷயமாகத்தான் அங்கே அடிக்கடி வருவான். அப்படி இருக்கும் போது நிலா காலத்தில் இருக்கும் அவனுடனான அறிமுகத்தை வைத்துக்கொண்டு அதிகமாக உரிமை எடுக்கக் கூடாது என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டே இருப்பாள்.

இருந்தும் சொந்த புத்தி காரணமாக அவளுக்குப் பிடித்த எல்லோரிடமும் வாயடி அடிப்பது போல் அவனிடமும் வாய் அடிக்கிறாள். அதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதெல்லாம் மணிமொழி மண்டையை உடைத்து கண்டுபிடித்து இருந்தான்.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடத்தான் இன்று வந்து இருக்கிறான்.
 
Top Bottom