• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
9

மணிமொழி தன் அறையிலிருந்து யோசித்துக் கொண்டு இருந்தான். தனிமை அவனை எப்போதும் சூழ்ந்து கொண்டிருப்பதை போல் இப்போதும் சூழ்ந்து கொண்டே இருந்தது. அது எப்போது அவனை விட்டு போகும்? பெருமூச்சு ஒன்று அவனைக் கடந்தது.

இல்லத்தில் எல்லோருடனும் வளர்ந்தாலும் யார் யார் எப்போது அவனை விட்டு செல்வார்கள் என்பதை சொல்ல முடியாது. அந்த இல்லத்தில் இருந்து பல வெளிநாட்டவர்கள் குழந்தைகளை தத்தெடுத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இனி பார்க்கவே முடியாது என்று அவன் அழுத நாட்கள் ஏராளம். போக போக அந்த நிகழ்வுகளுக்கு பழகி இருந்தாலும் அவன் அடிமனம் ஆறுதல் தேடி தேம்பும் குழந்தையாகவே இருக்கிறது.

அதற்கு அவள் வேண்டுமே? அவள் யாரோவாக இருந்தால் அவளை தைரியமாக அணுகி இருப்பான். இப்போது இந்த கதை தெரிந்தால் இது தான் உன் நேசத்திற்கு அடிப்படையா? என்று ஒரு பார்வை அவள் பார்த்தால் இவன் உடைந்து விடுவானே?

அவள் மீது விருப்பம் வர அவளை அடிக்கடி பார்த்ததுதான் காரணமா என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால் உரிமையுடன் அவனிடம் பேசும் அவள் அவனை தானும் இந்த உலகத்தில் ஒருவன் தான் என்று உணர வைத்திருந்தாள். இல்லத்தில் இருந்து வெளியேறுபவர்களின் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு பரிதாபம் மற்றவர் கண்களில் இருப்பதை அவன் கண்டு இருக்கிறான்.

இவனை குறித்து அத்தனை உயர்த்தி பேசினாலும் பேசுபவர்களின் விழி ஓரத்தில் ஓர் ஓரமாக பரிதாபமோ, பச்சாதாபமோ அல்லது ஏதோ ஒரு ஏளனமோ இருப்பதை அவன் மனம் உணர்கிறதே? அது அவனது சொந்த சிந்தனையாக கூட இருக்கலாம். ஆனால் இது எதுவும் இல்லாமல் இவளிடம் வாய் அடிப்பவள் வதனி ஒருத்திதான். அதற்காகதான் அவள் மீது விருப்பமா என்றால், ‘காதலுக்கு காரணம் கிடையாது. காரணம் இருந்தால் அது காதலாக இருக்காது’ என்ற ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள் தான் பதிலாக இருக்கும்.

வதனி அவன் மீது அன்பாக இருப்பது போல் தான் இருக்கிறது. உரிமையாக தான் பேசுகிறாள். நன்றாகவே சிரிக்கிறாள். ஆனால் விரும்புகிறாளா என்று தெரியவில்லை. நேரடியாக கேட்கவும் அவனது தயக்கம் அவனை விடவில்லை.

அவள் அப்பாவிடம் அவளை திருமணம் செய்து தர கேட்டு விட்டான். அவரும் முடியாது என்று சொல்லிவிட்டார். அதை அப்படியே எப்படி விடுவான்? அதற்காகத்தான் ஜார்ஜிடம் பேசினான். அவரும் அவனுக்காக பேசி இருப்பார் தான். ஆனால் தமிழ் அதற்கு நிச்சயம் ஒப்புக்கொண்டு இருக்க மாட்டார்.

அடுத்து என்ன செய்ய?

இப்போது தமிழ் ஊரில் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? முதலில் இந்த விஷயத்தை வனியிடம் எப்படி சொல்வது என்று கண்ணாடியை எடுத்து வைத்துக்கொண்டு அதன் முன்னே பேசி பார்த்தான்.

கண்ணாடி முன்னே பேசவே கூச்சமாக இருந்தது. அப்புறம் எப்படி அவளிடம் பேச முடியும்? வனி வளவளவென்று பேசுகிறாள். கண்ணை கண்ணை வேறு காட்டுகிறாள். ஆனாலும் ஒத்துக் கொள்ளா விட்டால்? அவன் என்னதான் செய்வது?

நேரில் கேட்டால் அப்படியில்லை என்று சொல்லுவாளோ? நான் எல்லோரிடமும் அப்படித்தான் பேசுகிறேன் என்று சொல்லுவாளோ? உங்களைப் பற்றி நான் அப்படி நினைக்கவில்லை என்று சொல்லுவாளோ? நீங்களா இப்படி கேட்கிறீர்கள்? என்று வியந்து விழி விரித்து இவன் நெஞ்சில் நெருப்பைக் கொட்டுவாளோ?

அப்படி அவள் செய்துவிட்டால் இவன் முகத்தை இங்கே கொண்டு போய் வைப்பான்?

மீதி காலத்தை எப்படி கடப்பான்? இப்போதாவது அவளை அவ்வப்போது பார்ப்பதும், அவள் பேச்சை கேட்பதும் அவள் மலர்ந்த முகத்தை ரசிப்பதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான.

ஒருபோதும் இல்லாது இப்போதைய சிக்கல்கள் அவனுக்கு ஒரு துணிச்சலை கொடுக்கத்தான் செய்தது.

அவள்புறம் இருந்து ஒரு கண்ணசைவு கிடைத்து விட்டால் அடுத்து செய்ய வேண்டியதை அவன் பார்த்துக் கொள்வான். அதற்கு அவளிடம் தெளிவாக பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

நாளை அவளை போய் பார்க்கலாம் என்று நினைத்தவன் மெது மெதுவாக உறக்கத்தை தழுவினான்.

மறுநாள் காலையில் மதிவதனிக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினான். அவனும் சில தில்லு முல்லுகள் செய்து அவள் அலைபேசி எண்ணை பெற்று இருந்தான். அவளது வாட்சப் ஸ்டேட்டஸ், டிஸ்ப்ளே பிக்சர் எல்லாம் மணிக்கு ஒரு முறை பார்க்கிறான் மணிமொழி.

அவனது கட்டாந்தரை போன்ற வாழ்வில் தேன் தெளிக்கும் தென்றலாக இருப்பவை அவள் புகைப்படங்களை பார்க்கும் அந்த கணங்களும் அவளை பார்க்கும் சமயங்களும் தாம். மற்றபடி நிலாகாலம் அவனுக்கு பொறுப்பை தந்து இருக்கிறது.

சேவை வேறு வாழ்வு வேறு அல்லவா?

இப்படி அவள் மீது தனக்கு ஒரு எண்ணம் இருப்பதை அவள் அறிந்தால் என்ன நினைப்பாள்? அவள் ஒத்துக் கொண்டால் அதைப் போல பெரும் பேறு அவனுக்கு இல்லை. இல்லை என்று அவள் சொல்லாதபடி அவளை சமாதானப்படுத்தி, சமாளித்து அவனை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்! அவள் எப்போதும் பரிதாபத்தில் அவனுக்கு சம்மதம் சொல்ல கூடாது!

என்ன என்னவோ நினைத்துக் கொண்டே உறங்கியவன் காலையில் அவளுக்கு அழைக்க அவள் முதல் இரண்டு அழைப்புகளை தவிர்த்து இருந்தாள்.

மூன்றாவதாக இவன் அழைக்கவும் “அலோவ் பிரபா ஒயின் ஷாப் ஓனருங்களா? கடை எப்ப சார் திறப்பீங்க?” என்றாள்.

“ஹலோ நான் மணிமொழி பேசுறன். இது மதிவதனி நம்பர் தானே?” என்றான் குழப்பதுடன்.

“சாரி. ராங் நம்பர்!” என்று கலகலவென சிரித்தாள் மதிவதனி.

அட அறுந்த வாலு, கொஞ்சம் நெஞ்சம் இருக்கும் இவன் மூளையை இன்னும் குழப்புகிறாளே? இன்றைக்கு இவளிடம் அவன் மனதை சொல்லி முடிப்பதற்குள் அவன் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறது.
அதையும் பார்த்து விடுவோம்.

பிறந்தது முதல் சோதனைகளும் சவால்களும் அவனுக்கு புதிதா என்ன? ஆனால் இது இனிய சவால்! இதில் அவன் அவளிடம் சபாஷ் பெற முடியாவிட்டாலும் சாதாரண தேர்ச்சியாவது அடைய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான்.

“சரி. சரி. சிரிக்கிறதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்கு நீ கடைக்கு போறியா?”என்று கேட்டான்.

வதனிக்கு ஆச்சரியமாக இருந்தது. மணி இப்படி எல்லாம் பேச மாட்டானே? இந்நேரம் மிலிட்டரி துப்பாக்கி எடுத்து டுப்பு டுப்பு என்று சுட்டு இருக்க வேண்டுமே? இவன் வெடுக் என்று பேச்சை முடிப்பது அப்படித்தான் இருக்கும் அவளுக்கு.

“என்ன திடீர்னு? அப்பாகிட்ட எதுவும் பேசணுமா? அவருக்கு கால் போகலையா?” சிரிப்பு மனநிலையை விட்டு பொறுப்பு மனநிலைக்கு வந்து வதனி கேட்டாள்.

‘அவருக்கு கால் போனா என்ன போகாட்டி என்ன?’ என்று போகிற போக்கில் நினைத்தவன் நிஜத்தில் ஒருகையால் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டான். சே சே. என்ன இருந்தாலும் அவர் அவன் மாமனார். நாளை பின்னே அவர்கள் வீட்டுக்கு அவர் வந்து போய் இருக்க வேண்டாமா?

“ஏன்? உன்கிட்ட பேச எனக்கு ஒன்னும் இருக்காதா?” சாதாரணம் போல் கேட்க நினைத்தும் அவன் குரல் தடுமாறியது.

“என்கிட்ட கேட்கணுமா? அடேடே. அப்போ நிஜமா பெரிய தொழில் அதிபர் ஆகிட்டேன் போலவே? இருக்கும். ஜி எஸ்.டி, ஐ.டி எல்லாம் காட்டுறேனே? சரி. சொல்லுங்க. அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன். இல்ல அண்ணனை கூட்டிட்டு வரவா? எதுவும் எனக்கு தெரியாத டீடெயில் நீங்க கேட்டா என்ன பண்றது?”

‘நங்கு நங்கு’ என்று சுவற்றில் முட்டி கொள்ள வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. அப்போ அவனிடம் எல்லோரையும் போல் தான் பேசி சிரித்து இருக்கிறாள். இவன்தான் அதையும் இதையும் முடிச்சு போட்டு கற்பனையில் கோட்டை கட்டி அதனையும் இதோ இடிந்துவிட்டது.

முடியாது. இவளை இதோடு விடாமல் வளைத்து பிடித்து மணத்தை முடித்தே தீருவான் இந்த மணிமொழி. அவள் கொஞ்சம் இவன் நினைப்பை புரிந்துகொண்டு ஒரு உம் கொட்டி இருந்தால் கூட இன்னும் இவனுக்கு தயக்கம் இருந்து இருக்குமோ என்னவோ? இனி இவளை விட்டு வைத்தால் அவன் சன்னியாசம்தான் வாங்க வேண்டும் போல் இருக்கிறது. இப்படியே பேசி சிரித்து அவனை சுற்றவிட்டு அப்பா காட்டும் பையனை நல்ல பிள்ளையாக கட்டி கொள்ளுவாள் போல் இருக்கிறது.

அந்த அப்பா இவனை ஏற்றுக் கொண்டு இருந்தால் இவளிடம் இப்படியெல்லாம் போய் பேச வேண்டிய அவசியம் என்ன? இந்நேரம் அவர்களின் முதல் குழந்தைக்கு காது குத்தி முடி எடுத்திருக்கலாம்.

அந்த சடங்கை அவன் எப்போதோ அறிந்து இருந்தான். கல்யாண ஆசை வந்தபின் அதற்கு உரிய சடங்குகள் அதற்கு அடுத்த அடுத்த சடங்குகளை அறிந்து கொண்டுவிட்டான். அத்தோடு அதை அவர்கள் இருவருக்கும் மனதில் நடத்தியும் பார்த்துவிட்டான். ஒன்றை தவிர.

கொஞ்ச நேரம் சத்தமில்லாமல் போனதும் பிசி லேடி போனை வைக்கப் பார்த்தாள்.

“ஹலோ ஹலோ” என்று கத்திவிட்டு “ போனை வச்சிட்டார் போல” என்று சத்தமாக சொல்லிவிட்டு அழைப்பை தூண்டிக்க போனாள்.

இவளை இன்னும் விட்டு வைப்பதா?

“சாரி. பால் பாக்கெட் வந்துது. அதான். ஆமா உன் அப்பா எங்கே? அம்மாவை கூட்டிட்டு வர்றேன்னு சொல்ற? அவர்தான் உன்னை இன்னும் கங்காரு மாதிரி பொத்தி வச்சு இருக்காரே?” என ஏதாவது பேச வேண்டுமே என்று அவசரமாக பேசினான். இல்லை என்றால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுமே? அடுத்தாக கூப்பிட்டால் எடுப்பாளோ என்னவோ? இவளை இப்போது நம்ப முடியவில்லை.

ஒரு விதையை போட்டு வைப்போம் என்று ஆரம்பித்தால் இவளுக்கு சிந்தனை இப்படி செல்கிறது. அதுவும் சரிதான். இவனுக்கு மட்டும் இல்லை வேறு எவனுக்கும் இப்போது இதுதான் கதி என்பதும் அவனுக்கு புரிந்தது. அதில் அவனுக்கு நிம்மதிதான்.

“அப்பா அவர் பிரண்டு யாரையோ பார்க்க போய் இருக்கார். வர இன்னும் ஒரு வாரம் ஆகுமாம். போன் பண்ணார். இப்போ இருக்கற இடத்தில டவர் இல்லியாம். எப்படித்தான் இவருக்கு இப்படி ஊர்லாம் சிக்குதோ?”

இந்த விஷயம் அவனுக்கு பரபரப்பை தந்தது.

ஒன்று : இத்தனை நாள் மொத்தமாக ஆளைக் காணோம் என்றால் மீண்டும் ஏதோ பிரச்சனை பண்ணப் போகிறார்.

ஆகவே அவர் போன இடத்தை கண்டு பிடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் நிம்மதியாக இரண்டாவது விஷயத்தை செய்ய வேண்டும்.

இரண்டு : அவனுக்கு அவளிடம் தன் நெஞ்சத்தை சொல்ல கால அவகாசம் இருக்கிறது. அதற்காக அதை தள்ளி போடாமல் உடனே அதை செய்ய வேண்டும்.

எப்படி இருந்தாலும் இரண்டாவது சொன்னதை முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு,

“சரி அது இருக்கட்டும். உன் அண்ணனை கூட்டிட்டு வா. கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி அழைப்பை நிறுத்திவிட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டான்.
 
Top Bottom