• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 11

STN - 29

Member
குழல் - 11

மறுநாள் வேலைக்கு கிளம்பும் முன் மீண்டும் அமரனின் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் திலோ. வழக்கம் போன்றே கூடத்தில் மெல்லியதாய் இசைக்கீற்று. ஏதோ வேலை செய்தபடி இளங்கோ கூடத்தில் சுற்றிக் கொண்டிருக்க அறைக்குள் உடைமாற்றிக் கொண்டிருந்தான் அமரன்.

உள்ளே நுழைந்தவளை பார்த்த இளங்கோ அகலமாய் புன்னகைத்தான்.

“எங்கே உன் தொடுப்பு..? கிளம்பி ஓடியாச்சா..? இடுப்பை பங்கம் பண்ணி விட்டுட்டியே தங்கச்சி…” என்று அவன் வார்த்தையை முடிக்கும் முன் வீட்டு வாசலில் நின்றபடி தோட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்த ரஞ்சனி வெடுக்கென தலையை உள்ளே நீட்டி இருந்தாள்.

அவளை அங்கே எதிர்பாராதவன் ஒரு நொடி அதிர்ந்து அடுத்த நொடி கொப்பளிப்பது போல் குபுக்கென சிரித்திருந்தான். அவளை சீண்டுவதற்காகவே இந்த சிரிப்பு. அவன் சிரிப்பில் வெறியோடு அவனை முறைத்தவள் வேகமாக உள்ளே நுழைந்து திலோத்தமாவின் அருகில் நின்றிருந்தாள்.

இதற்குள் பேச்சுக் குரல் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தான் அமரன். கவனமாக கண்களில் கூலர்ஸ் மாட்டி இருந்தான்.

தன்னைப் பற்றி கேவலமான ஒரு அறிமுகத்தை இளங்கோ கொடுத்து விடுவானோ என்று எண்ணிய ரஞ்சனி முந்திக்கொண்டு “ஹலோ அமர் சார்… நான் ரஞ்சனி… திலோத்தமாவோட ஃப்ரெண்ட்…” என்று தானே தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

எதிரிலே இரண்டு மங்களான பிம்பங்கள்… அவர்கள் புறம் பார்வையை பதித்தவன் ‘இப்போ அதுக்கு என்ன..’ என்பது போல்தான் அலட்சியமான பாவனையுடன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

அவன் உடல்மொழியில் இன்னும் கூடுதலாய் எரிச்சலானவள் ‘இந்த ரெண்டு ஜந்துக்கும் மேனர்ஸ்னா என்னன்னே தெரியாது போல…” திலோவின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

சற்றுத் தள்ளி பக்கவாட்டாக நிற்பவனோ மீண்டும் அவளை ஏளனமாய் பார்த்து பக்கென சத்தமின்றி சிரித்து வைக்க கையில் கிடைக்கும் எதையாவது எடுத்து அவன் மண்டையை உடைக்கலாமா என்பதுபோல் பற்களை நறநறுத்தபடி வெறியோடு முறைத்தாள் ரஞ்சனி.

“உன் தொடுப்புக்கு ரொம்ப கடுப்பு போல…” அவளை சுற்றி வந்து திலோவின் காதில் மெல்ல கூறினான் இளங்கோ. அவன் சொன்னது அவள் காதில் தெளிவாகவே கேட்டது. கேட்க வேண்டும் என்றுதானே குரலை தழைத்துக் கூறுவதுபோல் அவளுக்கும் கேட்கும்படி கூறி இருந்தான்.

இருவரையும் மாறி மாறி திரும்பிப் பார்த்து ‘கொஞ்சம் அமைதியா இருங்களேன்…’ என்பதுபோல் விழிகளால் கெஞ்சினாள் திலோத்தமா.

“நானே இப்போதான் அடிபிரதட்சணம் பண்ணி அங்குலம் அங்கலமா என் ஆளை நெருங்கிட்டு இருக்கேன். மொத்தமா கதையை குழப்பி விட்டுடாதீங்க சாமிகளா… சண்டை போடுறதா இருந்தா அப்படிக்கா வெளியில போய் போடுங்க… ப்ளீஸ்…” இருவருக்கும் பொதுவாக ஹஸ்கி குரலில் கூறியிருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் அசட்டையாய் ஒரு பார்வை பார்த்து பின் கோபமாய் முறைத்து முகத்தை முன்னோக்கி திருப்பிக் கொண்டனர்.

“அமர்…”

முந்தைய நாள் சார் என்று அழைத்தவள் இன்று உரிமையோடு அமர் என்றே அழைத்திருந்தாள். இனி எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்து விடுவது என்ற முடிவோடுதானே இருக்கிறாள்.

தன் முன்னே நகர்ந்து நெருங்கி வரும் பிம்பத்தை கூலர்ஸ் வழியே வெளிச்சப் புள்ளியாக பார்த்துக் கொண்டிருந்தான் அமரன்.

“நான் வேலைக்கு சேர்ந்து இன்னையோட மூனு வருஷம் முடிஞ்சு நாலாவது வருஷம் தொடங்குது… அதுக்காக கேசரி பண்ணினேன்… அதான் உங்களுக்கும் அண்ணாவுக்கும் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்…”

தன் கையில் இருந்த பாத்திரத்தை அவன் முன் நீட்டினாள்.

அவள் சொன்ன காரணத்தில் வாயில் கை வைத்திருந்தான் இளங்கோ.

‘என்னதான் எதையெதையோ நாட்டு மக்கள் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க அப்படிங்கிறதுக்காக இப்படி எல்லாமா ஒரு காரணத்தை உருவாக்கி இங்கே வந்து நிப்பா. பிறந்தநாள், அம்மா அப்பா கல்யாண நாள், பாவாடை தாவணி போட்ட நாள், ஊரை அழைத்து சடங்கு சுத்தின நாள்னு சொன்னாகூட அதுல ஒரு அர்த்தம் இருக்கும். வேலைக்கு சேர்ந்த நாள்னு அதுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி கேசரி பண்ணேன்னு சொல்றா பாரு… அங்கதான் நிக்கிறா நம்ம திலோ…’

இளங்கோவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் நினைத்தது.

ஆனால் எதிரில் இருந்தவனோ அசையாமல் சிலைபோல் அப்படியே நின்று கொண்டிருந்தான். சலனமற்ற அதே இறுகிய முகம். அவள் நீட்டிய பாத்திரத்தை வாங்கிக் கொள்ளவே இல்லை.

“திமிருக்கு இலக்கணம்…” அவள் காதை கடித்தாள் ரஞ்சனி.

புன்னகையை மாற்றாமல் இளங்கோவிடம் திரும்பி அவனிடம் பாத்திரத்தை நீட்டினாள் கிலோ. அமைதியாக வாங்கிக் கொண்டான் இளங்கோ.

“உன் பிறந்தநாள்னு சொல்லி இருக்கலாமேம்மா…” என்றான் மெல்லிய குரலில்.

“அது ரெண்டு மாசம் கழிச்சு வருதுண்ணா… அப்ப என்ன சொல்றதாம்…? எதிலேயும் ஒரு நேர்மை இருக்க வேணாமா..” என்றால் சற்று உரக்க.

அது சரி என்பதுபோல் தலையை ஆட்டிக் கொண்டான் இளங்கோ.

“கேசரி நீதானே பண்ணினே…” பாத்திரத்தை திறந்து பார்த்தவன் கேட்டபடியே ஓரக் கண்களால் ரஞ்சனியையும் ஒரு பார்வை பார்த்தான்.

“நானேதான்…” என்றவள் அமரனை மேலிருந்து கீழாக ஆராய்ந்து அழுத்தமாக நெஞ்சில் நிரப்பிக் கொண்டாள்.

“என்ன டிரஸ் போட்டாலும் அழகா இருக்கான் என் அமர் பையன்…” இதழ்கள் தனக்குள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.

அமைதியாக நின்றிருந்தவனுக்கு அவளது வாசனை அவன் சொல்பேச்சைக் கேட்காமலே நாசி வழியே மூளைக்குள் ஏறி இதயத்திற்குள் இறங்கிக் கொண்டிருந்தது.

இரவு உறங்குவதற்கு முன்பும் மூன்று ஆண்டுகளாக அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவனை துரத்தி துரத்தி அவனை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொண்டிருக்கிறாள் என்பதையும் அவன் கவனத்தில் போட்டுதான் வைத்திருந்தான் இளங்கோ.

தெரிந்தோ தெரியாமலோ பிடித்தோ பிடிக்காமலோ அவளைப் பற்றிய செய்திகளும் அவளைப் பற்றிய பேச்சுக்களும் அவள் பெயரும் இளங்கோவின் மூலம் அவன் மூளைக்குள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருந்தன. இதோ இந்த நொடி அவன் அனுமதியே இன்றி அவளது பிரத்தியேக வாசமும் அவன் நாசி வழியே உள்ளுக்குள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

“இன்னும் கிளம்பாம இங்க என்னடா நின்னுட்டு இருக்க..?” நண்பன் நின்றிருந்த திசையை பார்த்து சத்தமிட்டு இருந்தான் அமரன்.

“நான் கிளம்பிட்டேன்டா… ட்ரஸ் சேஞ்ச் பண்ணா சரி…”

“அப்போ போய் அதை பண்ணு…”

வெடுக்கென சொன்னவன் டைனிங் டேபிள் இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.

“உன்ன மட்டும் இல்ல… என்னையும் சேர்த்து அசிங்கப்படுத்தறான்டி இந்த ஆளு. இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் உனக்கு வேணுமா..?”

ரஞ்சனியின் சன்னக் குரல் தன் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்த இளங்கோவின் காதுகளிலும் விழுந்தது. திரும்பி நின்று அவளைப் பார்த்து முறைத்தான்.

“நீ உன் பிரண்டுக்கு ஹெல்ப் பண்ண வந்தியா..? இல்ல கட் பண்ணி விட வந்தியா..? என்றான் கடுப்பாய்.

“உங்க பிரண்டு மாதிரி ஒரு ஆளுக்கு என் பிரண்டு தேவையான்னு ஒரு நல்ல நட்பு யோசிக்கத்தான் செய்யும்…”

“ஏன் அவனுக்கு என்ன குறைச்சல்..? போராடினாதான் அவனோட காதல் கிடைக்கும்னு உன் பிரண்டுகிட்ட ஏற்கனவே தெளிவா பேசிட்டேன். அவ எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கா. நீ நோண்டி விடாம இருந்தா போதும். அவ பார்த்துப்பா…”

“ஆமாமா… இப்படி ஒரு இளிச்சவாச்சி எங்க தேடினாலும் உங்க தலைக்கனம் பிடிச்ச நண்பருக்கு கிடைக்க வாய்ப்பே இல்லையே…”

இருவரும் மீண்டும் வார்த்தைப் போரை தொடங்கியிருக்க எங்கே டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தவனின் காதுகளில் இவை விழுந்துவிடுமோ என்று பதறியபடி எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா.

“போதும் வாய மூடுடி… நாம போகலாம்…” தன் தோழியை அடக்கியவள் இளங்கோவிடம் திரும்பி “கேசரியை அவருக்கும் கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்கண்ணா… ரொம்ப பிகு பண்ணுவாருதான்… ஆனாலும் சாப்பிடுவார்… நம்பிக்கை இருக்கு…” என்று சிரித்துக் கொண்டவள் தன் தோழியினா கையைப் பிடித்துக் கொண்டு நடக்க கையை உதறிக் கொண்டு வேகமாய் முன்னே நடந்த ரஞ்சனி ஏளனமாய் புன்னகைத்தபடி நின்றிருந்த இளங்கோவை எரிச்சலாய் திரும்பிப் பார்த்தபடியே கதவு நிலையைத் தாண்ட பட்டென கால் இடறி தடுமாறி அப்படியே படிகளில் உருண்டு வாசலில் விழுந்திருந்தாள்.

மீண்டும் கடகடவென சத்தமிட்டு சிரித்திருந்தான் இளங்கோ. கையை உதறிக் கொண்டு எழுந்து நின்றவள் முழங்கையை தேய்த்தபடியே கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். வலியில் அழுதாலா அவனது சிரிப்பில் அழுதாலா தெரியாது… ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் குளமாக தேங்கி நின்றது. சிரித்துக் கொண்டிருந்தவன் அந்த கண்ணீர் விழிகளை பார்த்து அப்படியே உறைந்து நின்றிருந்தான்.

சிரிப்பு முற்றிலும் தொலைந்திருக்க அவன் விழிகள் அவளது கண்ணீர் விழிகளையே அழுத்தமாய் பார்த்திருந்தன.

உதட்டை கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள் மெல்ல தாங்கி தாங்கி நடக்க “பார்த்து வர மாட்டியாடி…” சங்கடத்தோடு கூறி அவள் கையை பற்றிக் கொண்டு அழைத்துச் சென்றாள் திலோத்தமா. இருவரும் சென்று மறையும்வரை ரஞ்சனியை பார்த்தபடி வாசலில் நின்றிருந்தான் இளங்கோ. இதயத்தில் ஏதோ பிசைந்தது… மனம் கனத்தது… அந்த கண்ணீர் இவனை என்னவோ செய்தது.

‘பலமா அடிபட்டு இருக்குமோ..? கை கால்ல ஏதாவது காயம் ஆகி இருக்குமோ..? ம்ம்… என்ன இருந்தாலும் அப்படி சிரிச்சிருக்க கூடாது… பாவம் அந்த முகத்துல அப்படி ஒரு அவமானம்… அந்த கண்ணுல அப்படி ஒரு வலி…’

இதயம் மொத்தமாய் கனத்துப் போக அசையாமல் அங்கேயே நின்றபடி திலோவின் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

“டேய்… இன்னும் என்னடா பண்ற..?”

உள்ளே இருந்து உரத்த குரல் வெளியே வர இழுத்துப் பெருமூச்சு விட்டு உணவு மேஜைக்கு சென்றிருந்தான் இளங்கோ.

திலோத்தமா கணித்தது போன்றே முதலில் வேண்டாம் என்று பிலுக்கிக் கொண்டிருந்தவன் நெய்யோடு கமகமத்த கேசரியின் வாசனையில் விருப்பமே இல்லாதவன் போல் கொஞ்சமாக வாயில் எடுத்து போட்டுக் கொள்ள நாக்கில் பட்ட கேசரி வழுக்கிக் கொண்டு தொண்டைக் குழிக்குக் கீழ் தித்திப்போடு வயிறுவரை சென்று விழுந்திருந்தது.

“செமையா இருக்குல்ல மச்சி… ரொம்ப பண்ணாம சாப்பிடுடா… உனக்காகத்தான் செஞ்சிருக்கா… அதுக்கு அவ சொன்ன காரணத்தை யோசிச்சியா..? அவ மெனக்கடலுக்காவது சாப்பிடு… ரொம்ப பண்ணாத…” என்றபடியே தானும் வழித்து உள்ளே வீசிக் கொண்டிருந்தான் இளங்கோ.

இதழில் மெல்லியதாய் தோன்றிய புன்னகையுடன் அந்த கேசரியை ரசித்துதான் உண்டான் அமரன். உண்மையில் கேசரி அப்படி ஒரு ருசி.

‘நல்லா சமைக்க வரும் போல…’

தனக்குள் எண்ணிக் கொண்டவன் அவள் சொன்ன காரணத்தை எண்ணி மீண்டும் சிரித்தும் கொண்டான்.

மறுநாள் குக்கூ இசை நிகழ்ச்சியின் அந்த சீசனுக்கான இறுதி நிகழ்வு. நேரடி ஒளிபரப்பாக திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளதால் அன்றைய நாள் முழுக்க ஒத்திகை இருந்தது.

நண்பர்கள் இருவரும் அனைத்தையும் முடித்து களைத்துப் போய்தான் வீடு வந்து சேர்ந்தனர். படுத்துக்கொள்ளலாமா என்று அமரனை இளங்கோதான் வற்புறுத்தி பால்கனிக்கு அழைத்து வந்திருந்தான்.

“டேய் தூக்கம் வருதுடா… ரொம்ப டயர்டா இருக்கு… நாளைக்கு ஃபைனல்ஸ்...
இன்னும் ஹெவியா ஒர்க் இருக்கும்… தெரியும்ல…” அலுப்பாய் சொன்னபடியே அவனோடு மாடி ஏறினான் அமரன்.

“இருக்கட்டும்டா… ஒரு அரைமணி நேரம் அங்கே உட்கார்ந்துட்டு வந்து படுத்தா நல்லா தூக்கம் வரும் வாடா…” என்று இழுத்துங் சென்றிருந்தான் இளங்கோ.

அவனுக்கு ஏன் அத்தனை ஆர்வம்..?

எதிர்வீட்டு பால்கனியில் திலோவுடன் ரஞ்சனியும் இருப்பாளே என்ற எண்ணம்தான்.

அன்றைய காலை அவள் அழுத விழிகளோடு தத்தித் தத்தி நடந்து சென்றபின் இவன் மனம் முழுமையாக வேதனை கொண்டது. அவன் சிரிக்காமல் இருந்திருக்கலாம்… அந்த சிரிப்பு அவளை இன்னும் கூடுதலாக வலி கொள்ளச் செய்திருக்கும் என்று தாமதமாக யோசித்தவனுக்கு வேலையின் நடுவே அவளை பற்றிய எண்ணமே முளைத்துக் கொண்டிருந்தது.

எதிர்வீட்டு பால்கனியில் வழக்கம் போன்று தன்னவனின் தரிசனத்திற்காக தயாராக அமர்ந்திருந்தாள் திலோத்தமா. ஆனால் அருகில் ரஞ்சனி இல்லை.

எதிர்பார்ப்புடன் வந்த இளங்கோவின் முகத்தில் ஏமாற்றம் அறைந்தது.

(தொடரும்)
 
Top Bottom