• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 16

STN - 29

Member
குழல் - 16

திலோவைப் பார்த்த இளங்கோவின் விழிகள் நெற்றிவரை விரிந்து கொண்டன. ஒரு நொடி அரை தூக்கத்தில் நிற்கிறோமோ என்றுகூட எண்ணினான்.

“என்னண்ணா உறைஞ்சு போய் நிக்கிறீங்க..? ஒரு வாரம் ஆச்சு என் அமர் முகத்தை பார்த்து… வழியை அடைச்சுக்கிட்டு நின்னா எப்படி..? தள்ளுங்க…”

சிரித்தபடியே அவனை உரிமையோடு பிடித்துத் தள்ளி உள்ளே நுழைந்தவளை அதே அதிர்வோடுதான் திரும்பிப் பார்த்தான் இளங்கோ.

தனது அறையில் தியானத்தில் கண்மூடி அமர்ந்திருந்த அமரனை அவளது குரல் செவி வழியே சீண்டியிருக்க படக்கென கண் விழித்தவன் விலுக்கென எழுந்து நின்றிருந்தான்.

சோம்பிக் கிடந்த இதயம் குடையாய் விரிந்து அசைந்தாட தன்னிச்சையாய் விரிந்த இதழ் புன்னகையுடன் வேகமாய் நடந்தவன் நான்கே அடிகளில் அதே இடத்தில் நின்றிருந்தான்.

மூளையை வென்று ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த மனதை மீண்டும் மூளை இழுத்துப் பிடித்திருந்தது.

ஏன் வந்தாள்..? எதற்கு மீண்டும் வந்தாள்..? அதே உற்சாகக் குரல்… இது கூடாதே..?

பரிதவிப்போடு நகம் கடித்தவன் அறைக்குள்ளேயே இங்கும் அங்குமாக நடமாடினான்.

கண்களைச் சுழற்றி ஆசையாக அமரனை தேடிக் கொண்டிருந்தவளின் எதிரில் முறைத்தபடி வந்து நின்றான் இளங்கோ.

“ஒரு வாரம் மூச்சு பேச்சே இல்லாம எங்கே ஓடிப்போன..? ஒரு போன் கால் இல்ல… நான் கூப்பிட்டாலும் நீ கால் அட்டென்ட் பண்ணல… என்னோட மெசேஜ் எதையும் பாக்கல… எந்த ரெஸ்பான்ஸும் இல்ல… நான் உனக்கு அந்த அளவுக்கு வேண்டாதவன் ஆயிட்டேன் இல்லையா..? இப்பகூட உன்னை துரத்தி அடிச்சவனைத்தான் தேடிக்கிட்டு இருக்க. உன்னப்பத்தியே யோசிச்சவனை என்ன ஏதுன்னு கூட கண்டுக்கல…”

அவள் பேச அவகாசமே கொடுக்காமல் படபடவென பொரிந்து தள்ளியவனை அமைதியான புன்னகையோடு தலைசாய்த்து பார்த்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா.

“ஏன் திலோ..? என்னை உன் அண்ணனா நினைக்கலையா..?”

வலியோடு கேட்டவனின் கரத்தை பற்றிக் கொண்டாள் திலோத்தமா. அவள் முகத்திலும் சட்டென சங்கடம் குடி கொண்டது.

“ஐயோ அண்ணா… என்ன இது பேச்சு..? அப்படி எல்லாம் எதுவுமே இல்ல… முக்கியமான வேலையா வெளியூர் போயிட்டேன்… உங்ககூட பேசவே முடியாத சூழ்நிலை... மத்தபடி வேற ஒன்னுமே இல்ல…”

“அப்படி என்ன முக்கியமான வேலை..?”

“சொல்றேண்ணா…” என்றவள் தன் கையில் இருந்த ஹாட் பாக்ஸை டைனிங் டேபிளில் வைத்திருந்தாள்.

“பிரட் ஆம்லெட்தான் டோஸ்ட் பண்ணி எடுத்துட்டு வந்தேன். வேற ஒன்னும் ஸ்பெஷலா பண்ணல. இந்த நேரத்துக்கு இதுதான் பண்ண முடிஞ்சது. ஏன்னா ஒரு வாரம் லீவ் போட்டதால இன்னைக்கு சீக்கிரமே ஆபீஸ்க்கு போகணும். அதனாலதான் இதையும் கொடுத்துட்டு உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு போயிடலாம்னு ஓடி வந்தேன்…”

அமரன் கொடுத்த வலிகளின் வடுக்கள் சிறிதுமின்றி வழக்கம் போன்று அதே உற்சாகத்துடன் அதே சிரிப்புடன் பேசியவளை ஆச்சரியமாகதாதான் பார்த்தான் இளங்கோ.

“நான் என்னென்னமோ நினைச்சேனேம்மா…” என்றான் தணிந்த குரலில்.

“என்ன நினைச்சீங்க..? உங்க பிரண்டு பேசினதை கேட்டுட்டு சரிதான் போறான்னு அவரை தூக்கி எறிஞ்சிட்டு மொத்தமா ஊரைவிட்டே ஓடிப் போயிட்டேன்னு நினைச்சீங்களா..?” என்றவள் அழகாய் பற்கள் தெரிய சிரித்திருந்தாள்.

அவள் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அதனைத்தானே செய்திருப்பார்கள்.

“அ..அப்போ அவன்மேல உனக்கு கோபம் இல்லையா..?”

“ம்ம்ம்…” என்று இழுத்தவள் கண்களை உருட்டி சில நொடிகள் யோசித்து “இல்லையே…” என்று தோள்களை குலுக்கினாள்.

“ரொம்ப குழப்புற திலோ… ஒரு வாரமா ஆபீசுக்கு லீவு போட்டுட்டு போனதா நீ சொல்ற. ஆனா உன் ஆருயிர் தோழி ஆபீஸ் ட்ரைனிங் விஷயமா வெளியூர் போயிருக்கிறதா சவடால் பேசினாங்களே…”

ரஞ்சனியை பற்றி பேசியபோது அவன் முகம் கடுமையாக மாறி இருந்தது.

“அவகிட்ட நான் என்ன சொன்னேனோ அதைத்தானே அவ உங்ககிட்ட சொல்லி இருப்பா…”

“தெளிவா எதையும் பேச மாட்டியா..?”

எரிச்சலாக கேட்டவனை இழுத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவள் தானும் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

“எல்லாமே தெளிவா சொல்றேண்ணா… ஆனா எனக்கு இப்ப டைம் இல்ல. நிறைய பேசணும்… ஆபீஸ் முடிஞ்சு நேரா ஈவினிங் இங்கே வரேன். எல்லாமே தெளிவா சொல்றேன். இப்போ நான் கிளம்பணும்… உள்ளே ஒளிஞ்சிட்டு இருக்கிற உங்க தோஸ்தை கொஞ்சம் வெளியே வரச் சொல்றீங்களா..? அந்த திருமுக தரிசனத்தை பார்த்துட்டு நிம்மதியா போய் வேலையை செய்வேன்…”

அவன் அறையை பக்கவாட்டாய் பார்த்து சிரித்தபடியே இவள் கூற கதவின் அருகில் நின்றிருந்தவனோ கீழிதழை கடித்தபடி சுவற்றோடு சாய்ந்து கொண்டான்.

“திலோ…”

குழப்பமான குரலுடன் இளங்கோ அழைக்க இழுத்து பெருமூச்சுவிட்டு தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை திருப்பி பார்த்துவிட்டு அவனிடம் திரும்பினாள்.

“எதார்த்தமானவரா இருந்திருந்தா வழக்கம்போல வெளியே வந்திருப்பார்தானே…” என்றாள் அமரனின் காதல் விழும்படி சற்றே உரத்த குரலில்.

“அன்னைக்கு உன்னை கண்டபடி திட்டினதால உன்னை பார்க்க சங்கடமா இருக்கும்ல… அதான்…” என்று சமாளித்தான் இளங்கோ.

“இல்லண்ணா… அதெல்லாம் கண்துடைப்பு… வெளியே வந்து நின்னா எங்கே அவர் நிஜமுகம் தெரிஞ்சிடுமோன்னு பயந்து உள்ளே நிக்கிறார்…”

அவனது அறையை அழுத்தமாக பார்த்தபடியே இவள் கூற அதிர்ந்து அவளைப் பார்த்தான் இளங்கோ.

“அவரோட யோசனை நல்லாதான் இருந்தது… ஆனா அதை என்கிட்ட காட்டினதுதான் தப்பு. எப்படி எல்லாம் பேசினா அவரை விட்டு விலகிப் போவேன்னு நினைச்சு அப்படி எல்லாம் பேசினார். ஆனா அந்த கடுமையான வார்த்தைகளுக்கு பின்னால அவர் என்மேல வச்சிருக்கிற அபரிமிதமான நேசம் எனக்கு அப்பட்டமா தெரிஞ்சது அண்ணா. எல்லாரும் ஆசை வார்த்தைகளால காதல் பார்வையால அவங்க மனசுல இருக்குற நேசத்தை வெளிப்படுத்துவாங்க… என்னோட அமர் கொஞ்சம் வித்தியாசமானவர் இல்லையா. அந்த கடுமையான வார்த்தைகளால அவருக்குள்ள நான் இருக்கேன்னு எனக்கு தெளிவா புரிய வச்சார். அவரோட குறை என்னையும் என்னுடைய எதிர்காலத்தையும் பாதிச்சிடுமாம். அவர்கிட்ட சொல்லுங்க… நிறைஞ்ச அன்பு எப்பேற்பட்ட புயல் மழை பூகம்பத்தையும் எதிர்த்து நிற்கும் வல்லமை பொருந்தியதுன்னு அவருக்கு தெளிவா சொல்லுங்க…”

“அப்புறம் ஏன் இந்த ஒரு வாரம்…” என்று அவன் அடுத்து பேச ஆரம்பிக்கும் முன் “அதைத்தான் ஈவினிங் வந்து பேசலாம்னு சொல்றேனே… எனக்கு டைம் ஆச்சு… என்னோட ஒரு வார தவத்தோட இன்னொரு நாளையும் சேர்த்துக்கிறேன்… ஆனால் நைட் எங்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது… அவர் இங்கே இருக்கணும்.. இருந்துதான் ஆகணும்… நிறைய விஷயங்களை நேரடியா அவர்கிட்ட பேசணும்… இழுத்துப் பிடிச்சு உட்கார வைங்க… நான் வந்துடுவேன்… பை அண்ணா…” என்று கூறி அமரனின் அறையை ஏக்கத்தோடு ஒரு பார்வை பார்த்து வேகமாய் நடந்தபடியே “மறக்காம ரெண்டு பேரும் சாப்பிடுங்க அண்ணா என்றவள் அங்கிருந்து ஓடி வண்டியை கிளப்பி பறந்திருந்தாள்.

சுவற்றை முதுகோடு தேய்த்தபடியே அதே இடத்தில் மடிந்து அமர்ந்துவிட்டான் அமரன். கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.

என்ன மாதிரியான காதல் இவளுடையது..?

பிரமிக்காமல் இருக்க முடியவில்லை…

இவன் ஒன்றை நினைக்க அவளோ இவனை முற்றிலுமாக உணர்ந்து கொண்டாளே.

“ஏன்டி..? என்னை விட்டு போயிடேன்… போயிடு திலோ…”

உதடு நடுங்க சொன்னவனின் விழிகள் பன்னீர் கீற்றாய் கண்ணீரோடு மின்னின.

அன்றைக்கு நண்பர்களுக்கு பெரிதான வேலை என்று எதுவும் இல்லை. அடுத்த வாரத்தில்தான் இளம் இசை அமைப்பாளர் ராகேஷின் பாடல் ஒலிப்பதிவிற்கு அவர்களுக்கான வேலை ஆரம்பமாக இருந்தது.

திலோவின் காதலையும் அவள் குணத்தையும் நினைத்து பெருமிதமாய் பூரித்த இளங்கோ ரஞ்சனியை நினைத்து மனதளவில் வலி கொண்டான். நிலையாக இருந்த அவன் மனம் அவளிடம் தடுமாறியதை நினைத்து அவனின்மேல் அவனுக்கே கோபம் வந்தது.

வார்த்தை கொடுக்குகளால் கொட்டி ரணப்படுத்திய தன்னவனின் உண்மை சொரூபத்தை உணர்ந்து கொண்ட திலோ எங்கே..?

அதே வார்த்தை கொடுக்கினால் அமரனை பற்றி பேசி இவனை துடிக்க வைத்த அந்த ரஞ்சனி எங்கே..?

நினைக்க நினைக்க அவளின்மேல் ஆத்திரம் பொங்கியது.

என்ன பேசப் போகிறாள்..? எதைப் பற்றி பேச போகிறாள்..? நண்பர்கள் இருவருமே அவள் வரும் நேரத்தை எதிர்பார்த்து நடப்பு நேரத்தை நெட்டி தள்ளிக் கொண்டிருந்தனர்.

“அவ வரும்போது இங்கே இருக்க வேண்டாம்… நம்ம எங்கேயாவது போயிடலாம்…”

இறுக்கமாய் பேசியபடி எதிரில் வந்து நின்ற நண்பனை கோபமாய் முறைத்தான் இளங்கோ.

“எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவ ராசா..? எங்க போய் ஒளிவ..? அவ ஒரு முடிவோடதான் இருக்கா. இன்னும் நாடகம் போட்டு எல்லாரையும் கூமுட்டை ஆக்காதே. நானும் ஒரு அளவுக்குதான்டா பொறுமையா இருப்பேன். என்னதான் பேசுறான்னு கேப்போம். வாய மூடிக்கிட்டு அப்படி ஓரமா போய் உட்காரு… இன்னும் கொஞ்ச நேரத்துல அவ வந்துருவா…”

மிரட்டும் தொணியில் பேசிய இளங்கோவை மீறிக் கொண்டு வேறு எதுவும் செய்யவே முடியவில்லை அமரனால். இதயம் எக்குத்தப்பாய் துடிக்க அவளை தவிர்க்கும் மார்க்கம் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தபடியே அமர்ந்திருந்தான் அமரன்.

ஸ்கூட்டியை நேராக அவர்களது வீட்டு போர்டிகோவில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தாள் திலோத்தமா. தன் வீட்டிற்கு கூட செல்லவில்லை. நேராக இங்குதான் வந்திருந்தாள்.

வேகமாக உள்ளே நுழைந்தவள் இளங்கோவின் அருகில் இரு கைகளையும் கோர்த்து தொடையில் வைத்து தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த அமரனை பார்த்து நெஞ்சம் நிறைந்து போனவளாய் முகம் விகசிக்க அழகான புன்முறுவலோடு அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தாள்.

இதோ கடந்த எட்டு நாட்களாக அவன் தொலைத்த அந்த வாசம்… அந்த நேசம்… அவன் எதிரில்.

உடலுக்குள் ஏற்படும் உணர்வு கொப்பளிப்புகளை கட்டுப்படுத்தியபடி இதழ்களை அழுத்தமாக கடித்துக் கொண்டு அதே நிலையில் அமர்ந்திருந்தான்.

அவள் முகத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

“நான் ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்றதுக்காக பெங்களூர் போயிருந்தேன் அண்ணா…” நேரடியாகவே பேச்சை துவங்கியிருந்தாள் திலோத்தமா.

அன்று அவன் கண்டபடி திட்டித் தீர்த்தபின் அந்த நொடி அவளுக்குள் அழுகை வெடித்துக் கொண்டு வர அழுது கொண்டுதான் வீட்டிற்கு ஓடி இருந்தாள். கண்ணீரை வெளியேற்றியபின் சற்று நிதானம் அடைந்தவளுக்கு அமரனின் நிஜரூபம் புரிந்து போனது.

“சோ… உன்னோட கண் பார்வை குறைபாடுதான் உன்னை என்கிட்ட நெருங்க விடாம தடுக்குது. நீ பிறவி குருடன் இல்ல.. இப்பவும் கூட முழுக்குருடன் இல்ல… இவ்வளவு டெக்னாலஜி கொழிச்சு கிடக்கிற உலகத்துல என் அமரனுக்கு ஒரு தீர்வு கிடைக்காம போயிடுமா..?”

தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் தனது மடிக்கணினியை திறந்து வைத்து நிறைய ஆராயத் தொடங்கினாள். கண்பார்வை சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தோண்டித் துருவி தேடிக் களைத்தாள்.

தலைசிறந்த கண் மருத்துவர்களின் பட்டியலை சேகரித்தாள். மறுநாள் பெங்களூரில் கண் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடப்பதாக அவள் தேடலில் தெரியவர இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து தெளிவு பெற வேண்டி தனக்குள் முடிவு செய்து கொண்டவளாக ரஞ்சனியிடம் அலுவல் சார்ந்த பயிற்சி என்று நேரில் சென்று கூறி அன்று இரவே பெங்களூருக்கு பயணப்பட்டு இருந்தாள்.

(தொடரும்)
 
Top Bottom