• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 20

STN - 29

Member
குழல் - 20

திலோவுடன் சமையல் வேலையில் தானும் இணைந்து கொண்டாள் ரஞ்சனி. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்த இளங்கோவை பார்த்து ரஞ்சனியின் மனம் ஓரளவு தெளிவு பெற்றது. அவன் அழுத்திப் பிடித்த கன்னம் இப்பொழுதும் லேசாக வலி எடுக்கிறது. ஆனால் அதனை தாண்டிய ஒரு இனிமை இதயம் முழுக்க பரவுகிறது.

அந்தக் கண்களில் கொப்பளித்து நின்ற கோபமும், நெருங்கி நின்ற வேகமும், விரல்களில் கொடுத்த அழுத்தமும், நெருக்கமானவளிடம் ஏற்படும் உரிமைக் கோபத்தைதான் அவளுக்கு சொல்லாமல் சொல்லின. அந்த உரிமை அவளுக்கு பிடிக்கிறது… இன்னும் கூடுதலாய் வேண்டும் என்கிறது மனம். காரணம் அவள் மனமும் அவன்பால் சாய்ந்திருக்கிறதே. அன்று கைப்பேசியில் சீற்றமாய் பொங்கித் தீர்த்து அவசரமாய் இணைப்பைத் துண்டித்தவன் சாவகாசமாய் அவள் இதயத்தில் நுழைந்திருந்தான்.

நண்பனுக்காக நட்பிற்காக அவன் நின்ற விதம்… இன்றளவும் தன் நண்பன் தனித்து நின்று விடக்கூடாது என்று தன்னைப்பற்றி தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் அமரனுக்கு அரணாகவே மாறிப்போனவன்… சுயநலமற்று ஒருவனால் இப்படி வாழ முடியுமா..?

ஆச்சர்யம் எழுந்தது… அதையும் தாண்டி அவனது பேச்சு, நடவடிக்கை, இவளிடம் காட்டிய கோபம், பின் சிநேகம், மீண்டும் தெறித்து வந்த சீற்றம் என்று அனைத்துமே அவளை முழு வீச்சில் அவனோடு இழுத்துக் கொண்டது.

இருவரின் கோபத்திலும் நட்பின்மேல் கொண்ட ஆழம்தானே தென்படுகிறது. நான்கு பேருமே ஏதேதோ வகைகளில் தனித்துவிடப்பட்டவர்கள். இன்று உறவுக் கூட்டமாக நெருங்கி நிற்கும்போது இதை இன்னும் ஆழமாக இணைத்து பிணைத்துக் கொள்ள மனம் ஆசை கொள்கிறது.

காலை உணவினை நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போதும் அவளது கண்கள் அவனைத்தான் ஏக்கமாக பார்த்துக் கொண்டே இருந்தன. ஆனால் அவள்புறம் அவன் திரும்பவே இல்லை. அமைதியாக உண்டான்… நண்பனோடு பேசினான்… திலோவிடம் புன்னகைத்தான்… அவ்வளவே. அவள் தன்னையே பார்க்கிறாள் என்பதையும் அவனால் உணர முடிந்தது. ஆனால் அவள் விழிகளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.

முகத்தில் இறுக்கம் குறைந்திருந்தது. ஆனால் அலாதியான அமைதி.. அந்த வகையில் போதும் என்றுதான் எண்ணிக் கொண்டாள் ரஞ்சனி.

“திலோ…”

காலை உணவை முடித்து அந்த இடத்தை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தவளை அழைத்தான் அமரன்.

“சொல்லுங்க அமர்…” என்றவள் வேகமாக அருகில் வந்தாள்.

அவள் கைப்பிடித்து எழுந்து கொண்டவன் “மாடிக்கு போகலாம்…” சத்தமாக கூறியபடியே அவள் கைப்பிடித்து நடந்தான்.

“மதியம் லஞ்ச் ரெடி பண்ணனுமே…”

“ரஞ்சனி பாத்துப்பாங்க…” என்றவன் அவள் கையை விடாமல் நடந்து கொண்டே கூறினான்.

“தனியா எப்படி சமாளிப்பா..?”

“இளங்கோ ஹெல்ப் பண்ணுவான்…”

சொன்னவன் தலையை திருப்பி “ரஞ்சனி தனியா கஷ்டப்பட போறாங்கடா… கூட ஹெல்ப் பண்ணு… நானும் திலோவும் கொஞ்சநேரம் பேசணும்…” என்று கூறி அவனது பதிலைகூட எதிர்பார்க்காமல் அவளை விரல்களை கோர்த்து பிடித்தபடி மாடி ஏறி இருந்தான்.

நண்பனை பார்த்து சிரித்துக் கொண்டவன் மெல்ல கண்களைத் திருப்பி சமையலறையை பார்க்க அவனைப் பார்த்தபடியே கையில் வைத்திருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் ரஞ்சனி.

டைல்ஸ் ஒட்டாமல் சிமெண்ட் சாந்தை குழைத்துப் பூசிய செந்நிறமான பளபளப்பான தரை. தரையில் முகம் பார்க்கலாம்.. அப்படி ஒரு பளபளப்பு, பரிசுத்தம். அவர்களது பால்கனிக்கு அன்றுதான் வந்திருந்தாள் திலோ.

அவளை அழைத்து வந்தவன் சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டு அவளையும் அருகிலேயே அமர்த்திக் கொண்டான். சிரித்தபடியே அவனை நெருங்கி தானும் அமர்ந்து கொண்டவள் அவன் முழங்கைக்குள் முழங்கை கோர்த்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். இவற்றையெல்லாம் இரவு நேர கற்பனைகளில் தனக்குள் தீட்டி பார்த்திருக்கிறாள்… இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா திலோ..?”

எப்பொழுதுமே அவனிடம் வளவள கொலகொலவென வார்த்தை பிரயோகங்கள் இருக்காது. அளந்து பேசுவான்… நிதானமாகப் பேசுவான்… ஆனால் செதுக்கிய வார்த்தைகளுக்குள் நிறைய அர்த்தங்களை பொதித்து வைத்திருப்பான். திலோவிடம்கூட காதல் வார்த்தைகளை கவிதைகளாக கொட்டியதில்லை. வெளிப்படுத்தும் தீர்க்கமான வார்த்தைகளில் மொத்த உரிமையையும் காதலையும் வெளிப்படுத்தி அவளை சிலிர்க்கச் செய்வான்.

இப்பொழுதும்கூட அவளிடம் ஒரு சிலிர்ப்புதான். மலர்ந்த புன்னகையோடு அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் திலோத்தமா.

“என்னடி பதிலே பேச மாட்டேங்குற..?” பக்கவாட்டாக முகத்தை திருப்பி அவள் கன்னத்தை வருடினான்.

“நாளைக்கே பண்ணிக்கலாம்னு சொன்னாலும் எனக்கு ஓகேதான். ஆனா நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணிக் கொடுக்கணும்…”

“என்ன..?”

அவள் தோளோடு கை போட்டு தனக்கு இன்னும் நெருக்கமாக்கியபடியே கேட்டான்.

“ரேஷ்மா மேடம் ஃபாரின்ல இருந்து வந்த உடனே உங்க ஆபரேஷனுக்கு நீங்க ஓகே பண்ணனும்… எந்த காரணமும் சொல்லக்கூடாது…”

“எனக்கு பார்வை திரும்ப கிடைக்கும்னு நீ நம்புறியாடி…” என்று புன்னகைத்தவனின் இதழ்களில் நம்பிக்கையின்மையே தெரிந்தது.

“நிச்சயமா கிடைக்கும்… கிடைக்கணும்… எனக்காக இல்ல… உங்களுக்காக… முதல்ல உங்க மனசுல நீங்க நம்பிக்கை வைங்க…”

அவள் விரல்களில் முத்தமிட்டு அவள்புறமாக திரும்பி அமர்ந்தான் அமரன்.

“எனக்குகூட இப்போ அந்த ஆசை வருது திலோ. எனக்காக இல்ல... உனக்காக… இப்போவெல்லாம் உன்னை பாக்கணும் போல இருக்கு… விரல் அளந்து பார்க்கிற இந்த முகத்தை என் கண்ணு ரசிச்சு பார்க்கணும். வெறும் பட்டையான வெளிச்சத்தோட மட்டுமே நின்னு போயிடாம உன்கூட சேர்ந்து வசந்தமான வாழ்க்கையை அனுபவிக்கணும்னு தோனுதுடி. இந்த ஆசை எல்லாம் மனசுக்குள்ள நிறைஞ்சு போயிடும்னுதான் பல விஷயங்கள்ல இருந்து தள்ளியே இருந்தேன். ஆனா எல்லாத்தையும் உடைச்சுட்டடி. எனக்குள்ள நிறைய ஆசைகளை விதைக்க ஆரம்பிச்சுட்ட… போக்கிரி…”

செல்லமாக கூறியவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டான்.

அவனது செதுக்கப்பட்ட முள்தாடி அவள் கன்னத்தை உரசி செல்லச் சேட்டை செய்ய அவன் கழுத்தோடு பற்றிக் கொண்டு இன்னும் கூடுதலாய் இழைந்தாள் திலோ.

“கண்டிப்பா உங்க பார்வை உங்களுக்கு திரும்ப கிடைச்சிடும்… அதுக்கு முன்னாடியே நாம கல்யாணம் பண்ணிக்கணும்…”

“ஆபரேஷன் முடிச்சிட்டு பண்ணிக்கலாமே…”

“இப்போதானே பண்ணிக்கலாமான்னு கேட்டீங்க…”

“உண்மைதான் திலோ... உன்னை இன்னும் நெருக்கமா என் கைவளைவுக்குள்ள வெச்சுக்கணும்னு ஆசையா இருக்கு. எனக்காக ஒருத்தி… எனக்காகவே… எனக்காக மட்டுமே… இந்த சந்தோஷத்தை அனுபவிச்சுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. இதுல இன்னொரு சந்தோஷம் என்னன்னா என் வாழ்க்கை சரியாயிட்டா இளங்கோ அவனுக்கான வாழ்க்கையை பத்தி யோசிப்பான். எனக்காகவே அவனுடைய பல ஆசைகளை மனசுக்குள்ள புதைச்சு வச்சிருக்கான்டி. அவனுக்கான வாழ்க்கையை சீக்கிரமாக அமைச்சுக் கொடுக்கணும். இது என் மனசுல பெரிய உறுத்தல்..”

“ஒரு உறுத்தலும் வேணாம்… அண்ணனுக்கு அழகான ஒரு துணை சீக்கிரமே அவரை தேடி வருவா…”

பட்டென கண்கள் விரித்தவன் “திலோ… எனக்கு ஒரு ஐடியா…” என்று வேகமாக அவள்புறம் திரும்ப,

“நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கும் தெரியுது… ரஞ்சனி பத்திதானே…” என்று சிரித்தவளிடம் அவள் தலையில் முட்டி “போக்கிரி…” என்று சிரித்தான்.

“எனக்கும் அந்த ஆசை இருக்கு அமர்… ஆனா இந்த விஷயத்தை ரெண்டு பேர்கிட்டயுமே நாம ஃபோர்ஸ் பண்ண முடியாது. இது பத்தி பேசவே முடியாது. அது ரொம்ப செல்ஃபிஷா டீல் பண்ற மாதிரி இருக்கும். இயல்பா அவங்களுக்கே அந்த மாதிரியான எண்ணம் வந்து அவங்களே நம்மகிட்ட சொன்னா அது பெரிய சந்தோஷம். ஆனா இதை நீங்களும் நானும் அவங்ககிட்ட கேக்குறது கூட சரின்னு எனக்கு தோணல. அண்ணனும் சரி ரஞ்சனியும் சரி நமக்காக என்ன வேணாலும் பண்ணக்கூடியவங்க. நம்ம ஆசைக்காக அவங்களுக்கு அந்த எண்ணமே இல்லைன்னாலும் நமக்காக சரின்னு சொன்னா அது அவ்வளவு சரியா வராது. அதனாலதான் எனக்கும் அந்த ஆசை இருந்தும் இதைப்பத்தி அவங்க ரெண்டு பேர்கிட்டயுமே நான் வாயே திறக்கல…”

அவள் சொன்னதில் இருந்த நிதர்சனம் புரிந்து தானும் ஆமோதிப்பாய் தலையாட்டிக் கொண்டான் அமரன்.

பாத்திரங்களை போட்டு உருட்டிக் கொண்டு சமையலறையில் ரஞ்சனி ஏதேதோ செய்து கொண்டிருக்க கூடத்தில் அமர்ந்திருந்த இளங்கோவிற்கோ தர்மசங்கடமாய் இருந்தது. அவளோடு இணைந்து சமையலில் உதவவும் முடியவில்லை… அவளை தனியே சமைக்கவிட்டு தேமே என்று தனியே அமர்ந்திருக்கவும் மனமில்லை.

“அவனுக்கு என்ன..? ஜாலியா அவன் ஆளை இழுத்துட்டு காதல் கதை பேசப் போயிட்டான்… நான் ரெண்டும் கெட்டதனமா உட்கார்ந்து இருக்கேன்…”

புலம்பியபடி புத்தகத்தை தலைகீழாக வைத்து வாசித்துக் கொண்டிருந்தான்.

“காபி சாப்பிடுறீங்களா இளங்கோ..?” சமையல் அறையில் இருந்து குரல் கேட்க வேகமாக திரும்பிப் பார்த்தான்.

வியர்த்த முகத்தை துப்பட்டாவால் துடைத்தபடியே புன்முறுவலோடு நின்றிருந்தாள் ரஞ்சனி.

“எனக்கு குடிக்கணும் போல இருக்கு… உங்களுக்கும் சேர்த்து போடட்டுமா…”

காலையில் இவன் வெளிப்படுத்திய கோபத்தின் தாக்கத்தை சிறிதும் காட்டிக் கொள்ளாமல் எதார்த்தமாக பேசியவளிடம் முகத்தை இன்னும் இழுத்து வைத்துக் கொண்டிருக்க அவனால் முடியவில்லை. சரி என்று தலையை மட்டும் ஆட்டினான்.

“எல்லாத்தையும் நானே கிழிக்கப் போறேன்னுட்டு அவ ஆள்கூட ஜாலியா கடலை போட போயிட்டா பக்கி… இங்க இவ ஒருத்தி தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கா…”

அவனையும் மீறி அவன் இதழ்கள் புலம்பின. தன்னிச்சையாக கால்கள் சமையலறை நோக்கி நடந்தன.

இதற்குள் காபி தயாரித்து முடித்தவள் உள்ளே வந்து நின்றவனிடம் புன்னகையோடு கோப்பையை கொடுத்து தானும் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டாள்.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா..?”

அவள் முகம் பார்க்காமல் காப்பி டம்ளரை உருட்டியபடியே கேட்டான்.

“ஹப்பா… இந்த அளவுக்காவது பேசுறீங்களே… இதுவே எனக்கு பெரிய ஹெல்ப்தான்…” என்று சிரித்தவளை விழிகள் உயர்த்திப் பார்த்தவன் அவளது இரு கன்னங்களின் ஓரத்திலும் வழிந்து கழுத்தை நனைத்து இறங்கிக் கொண்டிருந்த வியர்வையைக் கண்டு மின்விசிறியை சுழலவிட்டான்.

அவனது அக்கறையில் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவள் தனது வேலையை தொடர்ந்தாள்.

“பெரிய மிக்ஸி ஜார் வேணுமே…”

மேலே இருந்த கப்போர்டை திறந்து எடுத்து அவள் அருகில் வைத்தான்.

“என்ன சமையல்..?”

“நான் அரைச்சு தரட்டுமா..?”

“தக்காளி குட்டி குட்டியா கட் பண்ணனுமா..?”

“பூண்டு போதுமான்னு பார்…”

“காரல் அடிக்குது… அடுப்பை சிம்ல வச்சுக்கோ…”

மெல்ல ஆரம்பித்து அவளிடம் சகஜமாகி இருந்தான் இளங்கோ. இனிக்க இனிக்க அருமையாக சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது.

அனைத்தையும் முடித்து சமையல் மேடையை துடைத்து பாத்திரங்களை தூக்கி கழுவும் இடத்தில் போட்டு கழுவப் போனவளை தடுத்தான் இளங்கோ.

“அதெல்லாம் இருக்கட்டும்… அப்புறமா நான் பண்ணிக்கிறேன். இன்னைக்கு உனக்கு நிறைய வேலை…”

“ஆனா எனக்கு வேலை பார்த்த அலுப்பே தெரியல… ரொம்ப சந்தோஷமா இருந்தேன்…”

அவனுடன் பேசியபடியே வெளியே வந்து கூடத்தில் அமர்ந்தாள்.

“சந்தோஷமா..? எதுக்கு..?” தெரியாததுபோல் கேட்டான்.

“நீங்க நார்மல் ஆகிட்டீங்க… என்னை மன்னிச்சிட்டீங்க… அப்புறம் உங்களோட சேர்ந்து வேலை செஞ்சது ஒரு மாதிரி மனசுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…”

மறைக்காமல் மனதில் தோன்றியதை அப்படியே கூறினாள்.

“ஆனாலும் நீ அன்னைக்கு பேசின வார்த்தை ரொம்ப அதிகம் இல்லையா..? அமரனை குருடனாதான் பாக்குறியா..?

இன்னும்கூட அந்த வலியில் இருந்து மீளாதவனாக சங்கடத்தோடு கேட்டான்.

எதிர் சோபாவில் அமர்ந்திருந்தவள் வேகமாக எழுந்து அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“அவர் குருடன் இல்ல… நான்தான் குருடி… அறிவு மழுங்கிப் போன குருடி… அவரைப் பார்க்கும்போது எனக்கே ரொம்ப கில்ட்டியா இருக்கு… என்னை மன்னிப்பீங்களா இளங்கோ..?”

தொண்டை அடைக்கக் கேட்டவள் அவன் கரங்களை சட்டென பற்றி இருந்தாள்.

நெருக்கமாய் அவள் முகம்… கலங்கி விடவா என்று கேள்வி கேட்டபடி அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது… அவளது விரல்கள் அவன் விரல்களை அழுத்தமாய் பற்றி இருந்தன.

“மறந்துடுங்களேன்…”

கண்கள் கெஞ்ச தலைசாய்த்து அவனிடம் கேட்டாள்.

“மறக்கமுடியலையே…”

அவள் கண்ணோடு கண் பார்த்து அழுத்தமாகக் கூறினான்.

“நான் என்ன பண்ணனும்..?”

அவள் குரல் அடைத்தது.

“நீயும் மறக்காம அழுத்தமா மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கணும்…”

அவள் புரியாமல் பார்க்க அவனோ குறும்புச் சிரிப்புடன் அவளை இன்னும் ஆழமாகப் பார்த்தான்.

“நான் மறக்க முடியலேன்னு சொன்னது உன்னை…”

அதற்குமேல் பேசாமல் அவன் பார்த்த அர்த்தப் பார்வையில் விழிகள் விரிந்து ஆனந்த அதிர்வில் சமைந்து அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.

(தொடரும்)
 
Top Bottom