• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 5

STN - 29

Member
குழல் - 5

அலுவலகம் சென்றும் வேலையே ஓடவில்லை திலோத்தமாவிற்கு. மனம் முழுக்க அமரனை பற்றிய சிந்தனையே‌ ஓடிக் கொண்டிருந்தது. பெண் துணை இல்லாமல் ஆண்கள் இருவர் மட்டுமே வெகு நாட்களாக தனியாக வசிக்கின்றனர் என்பதுவரை அவளுக்கு தெரியும். அம்மா, மனைவி, சகோதரி என்று யாரேனும் ஒரு பெண் உடன் இருந்து கவனித்துக் கொள்வது என்பது ஒரு ஆணுக்கு மிகப்பெரும் பக்கபலமாக இருக்கும்.

இளங்கோ அவனது நெருக்கமான நண்பன்தான். ஆனாலும் உடல் நலம் சரியில்லாமல் தனிமையில் என்ன செய்கிறானோ..? எப்படி இருக்கிறானோ..? இதே சிந்தனையில்தான் அவள் மனம் உழன்றது.

ஒரு வழியாக நேரத்தை நெட்டித் தள்ளி பணியை முடித்து வழக்கமான நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தாள். அவர்களது கார் வாசலில்தான் நின்றிருந்தது. வீட்டிற்குள் விளக்கு எரிவது தெரிந்தது. உடல் நலம் சரியில்லாததால் நண்பர்கள் இருவரும் எங்கும் வெளியில் செல்லவில்லை என்பது புரிந்தது.

அவன் வீட்டை நோக்கி நடக்கச் சொல்லி கால்கள் பரபரத்தன. ஆனால் யார் என்றே தெரியாத தன்னை என்னவென்று அறிமுகம் செய்து என்ன சொல்லி விசாரித்து என்ன செய்வது..? குழப்பமும் தயக்கமுமாக அமரனின் வீட்டையே பார்த்தபடியே மாடி ஏறி இருந்தாள்‌.

இரவு உணவு தயாரிக்கும் எண்ணமே எழாமல் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு பால்கனியில் வந்து அமர்ந்தாள். அமரனின் வீட்டு பால்கனியில் ஒரு சிறு மின்விளக்கை தவிர மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. நண்பர்கள் இருவரும் அங்கு வந்திருக்கவில்லை. தினமும் இரவு நேரங்களில் அவனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பால்கனி விளக்கை இவள் போடுவதே இல்லை. இன்றும் இருட்டிற்குள் அமர்ந்தபடிதான் அவன் வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

எதிர் வீட்டில் இருந்து இளங்கோ மட்டும் சாலையைக் கடந்து கணேஷ் வீட்டை நோக்கி வருவது தெரிந்தது. நகத்தைக் கடித்து யோசித்தவள் தானும் கீழே இறங்கிச் சென்றிருந்தாள்.

கணேஷும் சாந்தியும் எங்கோ வெளியில் செல்வதற்காக கிளம்பி தயாராகி சிட் அவுட்டிற்கு வந்திருக்க இளங்கோவும் சரியாக வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.

“வெளியே கிளம்பிட்டீங்களா அங்கிள்..?” என்றவன் தன் கையில் இருந்த பாத்திரத்தை சாந்தியிடம் கொடுத்தான்.

“ஆமா இளங்கோ… ஒரு கல்யாண ரிசப்ஷன் இருக்கு… அங்கே கிளம்பிட்டோம்…” கணேஷ் கூற “அமரனுக்கு இப்போ எப்படி இருக்கு..?” என்று கேட்டிருந்தார் சாந்தி.

மாத்திரை போட்டும் ஒன்னும் கேக்கல ஆன்ட்டி. ஜுரம் ரொம்ப அதிகமாயிடுச்சு. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன். ஊசி போட்டு டேப்லெட்ஸ் கொடுத்து இருக்காங்க. வைரல் ஃபீவர்… ரெண்டு மூனு நாளாவது ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க…”

“இப்போ சாப்பிடறதுக்கு என்ன ஏற்பாடு பண்ணின..? நான் வேற வெளியே கிளம்பிட்டேனே…” சங்கடத்தோடு சாந்தி கூற

“பரவால்ல ஆன்ட்டி… நீங்க கிளம்புங்க…எனக்கும் சமைக்க வருமே… ஆனா அவன் வாய்க்கு எதுவுமே பிடிக்கல… வரும்போது பிரட் வாங்கிட்டு வந்தேன்…அதை சாப்பிட்டுப்பான்… இனி மாத்திரை கொடுத்து படுக்க வைக்கணும்…”

“சரி நாங்க காலையில வந்து பார்க்கிறோம்…”

பேசியவர்கள் அங்கிருந்து கிளம்ப அவர்களோடு இளங்கோவும் சேர்ந்து வெளியேற நான்காவது படியில் நின்றபடி அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் திலோ.

கணேஷ் வண்டியை கிளப்பிச் செல்லும்வரை காத்திருந்தவள் வண்டி கிளம்பிதும் வேகமாக இளங்கோவை துரத்திக் கொண்டு ஓடினாள்.

“சார்… சார்…”

அவளது அழைப்பில் திரும்பினான் இளங்கோ. கண்கள் இடுங்க அவளையே பார்த்தான்.

“ஹாய் சார்… என் பேர் திலோத்தமா… கணேஷ் அங்கிள் வீட்டு மாடியிலதான் குடியிருக்கேன்…”

மெல்லிய புன்னகையோடு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

அதற்கு என்ன என்பதுபோல் தலையை சற்றே நிமிர்த்தி மார்பிற்கு குறுக்கே கை கட்டிக் கொண்டு அவளை விழிகள் குவித்துப் பார்த்தான் இளங்கோ. அவனே அவளோடு பேச வேண்டும் என்று நினைத்திருக்க அவளே அவனை தேடி வந்திருந்தாள்.

“ஆக்சுவலா நான் உங்களுக்கும் அமர் சாருக்கும் பெரிய ஃபேன் தெரியுமா..?”

“எனக்குமா..?”

எகத்தாளமாக புருவத்தை ஏற்றி இறக்கியவனை புரியாமல் பார்த்தாள் திலோ.

“ஆமா சார்… ரெண்டு பேரும் ரொம்ப பிரமாதமான மியூசிஷியன்ஸ் ஆச்சே…”

எதுவும் பேசாமல் அவளையே கூர்ந்து பார்த்தபடி நின்றான் இளங்கோ. ஏதோ பேச முயன்று தவித்தபடி தயங்கியபடி அவள் யோசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

“அ..அமர் சாருக்கு உ..உடம்பு சரி இல்லையா..?”

ஒரு வழியாக கேட்டிருந்தாள்

“ம்ம்…”

“உ..உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் இட்லி பண்ணி எடுத்துட்டு வரட்டுமா..? இந்த நேரத்துல பிரட் வேணாமே…”

தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டிருக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு.

எதுவும் பேசாமல் அவளையே உற்றுப் பார்த்தான்.

‘இந்த மனுஷன் எதுக்கு இப்படி பார்க்கணும்..? ஹெல்ப் பண்ற ஐடியாவுலதானே கேட்கிறேன்…’

“உனக்கு என்ன வேணும்..?”

எடுத்த எடுப்பில் ஒற்றையாய் அழைத்து நேரடியாகவே விஷயத்திற்கு வந்து நின்றிருந்தான் இளங்கோ.

“ஹான்… என்ன..? புரியல…”

அவன் கேட்டதன் அர்த்தம் உண்மையில் அவளுக்குப் புரியவில்லை.

“நீ அமரனை எந்த அளவுக்கு வாட்ச் பண்றியோ அதைவிட சமீபமா உன்னை நான் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்… தெரியுமா உனக்கு..?”

கணீர் என்ற அவன் வார்த்தையில் திக்கென அதிர்ந்து நின்றிருந்தாள் திலோ.

“அவனை லவ் பண்றியா..?”

பொட்டில் அடித்தது போன்று டக்கென்று கேட்க ஜிவ்வென உடல் முழுக்க குளிர் பரவிப் போனது அவளுக்கு.

பார்த்த இரண்டே நிமிடங்களில் பட்டென இப்படி கேட்பான் என்று அவளும் எதிர்பார்த்தாளா என்ன..?

“நீ..நீங்க எ..என்ன சொ..சொல்..றீங்..க..?”

வார்த்தைகள் தந்தியடித்தன… உடலும் மெல்ல வியர்க்கத் தொடங்கியது.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லும்மா…”

பதில் பேசாமல் அமைதியாக அவள் தலை கவிழ்ந்து கொள்ள அந்த அமைதியே அவனுக்கு அனைத்தையும் உணர்த்தியது.

“வயசுக் கோளாறுல வர்ற வினை இல்லையா..? அழகா இருக்கான்… ஓரளவு வசதியா இருக்கான்… நல்ல புகழ்ல இருக்கான்.. அவனுக்குன்னு ஒரு தனி ரசிகர் வட்டம் இருக்கு… இசையில அவனுக்குன்னு ஒரு இடம் இருக்கு… இப்படி இதையெல்லாம் பார்த்து அவன்மேல உன் மனசு சாய்ஞ்சுடுச்சோ..?”

நக்கல் சிரிப்புடன் கேட்டவனை விலுக்கென நிமிர்த்து பார்த்தாள் திலோத்தமா. பயத்தில் அலைப்புற்ற கண்களில் இப்போது கோபம் மினுக்கி நின்றது. அனலென அவன்மேல் பார்வையை பாய்ச்சினாள்.

“ஒரு பொண்ணு உயரத்தில இருக்கிற ஒருத்தனை நேசிச்சா அதுக்கு பின்னணியில இத்தனை காரணங்களை உருவாக்குவீங்களா..? அப்படிப்பட்ட ஆண் வர்க்கம்தானா நீங்க..? எஸ்… நான் அவரை லவ் பண்றேன்… மூனு வருஷத்துக்கு மேல அவரை என் மனசுல சுமக்கிறேன்… ஒரு தலையா பைத்தியக்காரத்தனமா காதலிச்சிட்டு தான் இருக்கேன். அந்த காதலுக்கு இவ்வளவு அசிங்கமான அடைமொழி எல்லாம் உண்டா..? உங்க கோணத்தில நான் அவரை பார்க்கல… ஏதோ ஒரு வகையில என்னை முழுசா ஈர்த்துட்டார்… அதுக்காக என் காதல் அசிங்கமாயிடுமா..? எதை வச்சு என்னோட காதலை இவ்வளவு அசிங்கமா எடை போட்டீங்க..? சொல்லுங்க மிஸ்டர்…”

கோபத்தில் அவள் குரல் உரத்து வெளிவந்தது.

“வேற என்னம்மா பலத்த காரணங்கள் இருந்திடப் போகுது. இதுக்கு முன்ன அவனை நோக்கி வந்த காதல் எல்லாமே இந்த காரணங்களை சுமந்துதானே வந்தது. வந்த வேகத்திலேயே சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பிப் போயிடுச்சே எல்லாம். காவியக் காதல் எல்லாம் சினிமாவுல இலக்கியத்துல கதைகள்ல இப்படியே முடிஞ்சு போயிடுச்சு. நடைமுறையில இல்ல… சோ உன்னோட ஒரு தலைக் காதலை அப்படியே மறந்து ஓரமா தள்ளி வச்சுட்டு வேற வேலையை பார்த்தா உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது…”

எரிச்சல் பூசிய பார்வையோடு பேசினான் இளங்கோ.

“என்னை நீங்க அசிங்கமா அண்டர் எஸ்டிமேட் பண்ணி வச்சிருக்கீங்க…” சொல்லும்போதே அவள் குரல் தழுதழுத்தது.

“சரி சொல்லு… அவனைப்பத்தி உனக்கு என்ன தெரியும்..?”

பக்கவாட்டாக இருந்த திண்டில் சாய்ந்து நின்றபடி கேட்டான் இளங்கோ.

“அவருக்கு சொந்தபந்தம் இல்ல… நண்பர் நீங்க மட்டும்தான் அவருக்கு எல்லாமே… நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் இணைஞ்சு ஒன்னாவே ரொம்ப காலமா இருக்கீங்க. அவருக்கு இசைதான் உயிர்… அதுல தனக்குன்னு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திகிட்டே இருக்கார். ஒரு நல்ல நண்பரா அவருக்கு தோள் கொடுக்குறீங்க நீங்க…”

“ம்ம்… அப்புறம்..?”

“youtubeல சேனல் வச்சிருக்கீங்க… நிறைய சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்காங்க… நிறைய மியூசிக் சம்பந்தப்பட்ட வீடியோஸ் போடுறீங்க… உங்க ரெண்டு பேருக்குமே நிறைய ரசிகர்கள் இருக்காங்க… குறிப்பா அமரனுக்கு பெண் ரசிகைகள் அதிகம்…”

“ம்ம்… அப்புறம்..?”

“வெளிப்படையாவே நிறைய பேர் அவங்களோட காதலை கமெண்ட்லயே சொல்லி இருக்காங்க. நாசூக்கா பேசி எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிட்டு இருக்கார்… அவருக்கு ஒரு காதல் இருக்கிற மாதிரி எந்த இடத்திலும் காட்டிக்கல…”

“அடுத்து..?”

“இ..இன்னும் வேற என்ன சொல்லணும்..?” தடுமாறினாள் திலோத்தமா.

“இதுக்கு முன்ன மத்த பொண்ணுங்க தெரிஞ்சுக்கிட்ட அதே பொதுவான விஷயங்கள்தான் நீயும் தெரிஞ்சுக்கிட்டு வந்திருக்க…”

“என்ன சொல்றீங்க..?”

“இதே மாதிரி லவ் ப்ரோபோசல் அமரனுக்கு இதுக்கு முன்ன நிறைய வந்திருக்குன்னு சொல்றேன்…”

“ஆனா நான் மத்தவங்க மாதிரி இல்ல…” மீண்டும் அவள் கண்களில் கனல் தெரிந்தது.

“அவ்ளோ ஸ்பெசிபிக்கான பொண்ணா இருந்தா அவனைப் பத்தின முக்கியமான விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு வந்திருக்கணுமே…”

“என்ன முக்கியமான விஷயம்..?”

“அவன் நார்மல் பர்சன் கிடையாது…”

“புரியல…”

“அவனை காதலிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லு…”

“என் காதலுக்கு காரணம் எல்லாம் கிடையாது… எனக்கு அவரை பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்..”

“அவன் அழகா இருக்கானே அதனாலயா..?”

“அந்த இசையா..? அழகா..? அதைக் கடந்த வேற ஏதோ ஒன்னா..? நான் அழுத்தமா ஆராய்ச்சி பண்ணல… ஆனா அமர் என்னோட உயிர்…”

அவளது அழுத்தமான வார்த்தையில் அகலமாய் சிரித்தான் இளங்கோ.

“அவன பத்தின முக்கியமான விஷயத்தை தெரிஞ்சுக்காமலே அவன்தான் உன்னோட உயிர்னு எப்படி முடிவுக்கு வந்த..?”

“அப்படி என்ன முக்கியமான விஷயம்..? ஆரம்பத்தில இருந்து புதிர் போட்டுட்டே இருக்கீங்க…” கடுகடுத்தாள் திலோ.

“அவன் பத்து சதவிகிதம் மட்டுமே பார்வை உள்ளவன்…கிட்டத்தட்ட குருடன்…அவன் உலகம் முழுக்க மங்கலான பிம்பங்கள் மட்டுமே காட்சிப் பொருளா தெரியும்… அந்த விஷயம் தெரியுமா உனக்கு..?”

“எ..ன்..ன..?”

அதிர்ந்து நெஞ்சில் கை வைத்து ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றிருந்தாள் திலோ.

“கிட்டத்தட்ட மோப்ப சக்தியிலதான் அவன் திறனை வெளிப்படுத்தி நடமாடிட்டு இருக்கான். மொத்தமா இருட்டான உலகத்துலகூட வாழ்ந்துடலாம்… ஆனா மங்கலான ஒளிகளுக்கு மத்தியில உருவங்களுக்கு மத்தியில வாழற அவனோட வாழ்க்கை எத்தனை கொடுமை தெரியுமா..? அதையும் கடந்து வந்து மன உறுதியோட திடமா நிக்கிறான்… உன்ன மாதிரி பொண்ணுங்க அப்பப்போ வந்து அவனை கீறிவிட்டு போயிடுறீங்க… அப்படிப்பட்ட ஒருத்தனோட வாழ்க்கையில உன்னால பங்கெடுத்துக்க முடியுமா..? முடியாதுல்ல…”

மூச்செடுக்கவும் மறந்து அவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் திலோ.

“எல்லா ப்ரோக்ராம்லயும் அவன் கூலர்ஸ் போடறதுக்கு காரணமே அது ஸ்பெசிபிக்கான மேக்னிபயர்… கொஞ்சம் கஷ்டப்படாம சுற்றுப்புறத்தை உணர வைக்கும். கண் வலியில இருந்து அவனை பாதுகாக்கும்… தடுமாற்றம் இல்லாம நடமாட வைக்கும்… அதுக்காகத்தான்…”

அவள் இதயம் துடிப்பதை நிறுத்தி இருந்தது.

“ப்ரோக்ராம்ல ப்ளூ ஐஸ்ஸோட உட்கார்ந்து பொண்ணுங்களை கவர் பண்றான்னு நினைக்கிறியா..? அவன் பார்வைத் திறன் குறைபாடு வெளியே தெரியக்கூடாதுன்னு லென்ஸ் போட்டுக்குறான். அவன் செல்ஃப் கான்பிடன்ட் லெவலை குறைச்சுக்காம இருக்க முயற்சி பண்றான்…”

“அவன்மேல காதல்னு சொல்லி நெருங்கி வந்து அவனோட பிரச்சனையை பார்த்து ஒதுங்கி ஓடிப்போன பொண்ணுங்க அதிகம் தெரியுமா..? பிராக்டிகல் லைஃப்க்கு இதெல்லாம் ஒத்து வராது இல்லையா..? அப்படி எந்த தெய்வீகக் காதலும் அவனை நோக்கி வரல. இன்னும் சொல்லப்போனா காதல்னு சொல்லி யாராவது வந்தா அவனுக்கு கோபம்தான் அதிகமா வரும். நீயும் தேவையில்லாம எதையாவது உளறி அவன்கிட்ட வந்து அவன் பிரச்சனை தெரிஞ்ச ஓடிப்போய் அவனுக்கு இன்னும் மனசுல ரணத்தை அதிகப்படுத்தி கொடுத்துடாத. அவன் பார்வை குறைபாடு உள்ளவன்னு யாருக்குமே தெரியாத அளவுக்கு அவன் வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்கான். நம்பிக்கையோட அவன் வேலைகளை செஞ்சுட்டு இருக்கான். அவனை சும்மா சும்மா வந்து இப்படி நோண்டிப் பார்த்து அவனை முடங்க வைக்காதீங்க. புரியுதா..? எப்படியும் சீக்கிரம் நெருங்கி அவன்கிட்ட நீ பேசிடுவேன்னு தெரியும். அதுக்காகத்தான் முன்கூட்டியே உன்கிட்ட சொல்லிட்டேன். சீக்கிரம் வீட்டை காலி பண்ணிட்டு வேற வேலை இ
ருந்தா பாரு…”

எரிச்சலோடு கூறியவன் அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து வீட்டிற்குள் நுழைந்திருக்க அதே இடத்தில் அசையாத சிலையாக நின்றிருந்தாள் திலோ.

(தொடரும்)
 
Top Bottom