• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 7

STN - 29

Member
குழல் - 7

சூடான இட்லி, சாம்பாரை ரசித்து உண்பவனை அமைதியாய் பார்த்தபடி தானும் உண்டான் இளங்கோ. ரசனை அவனுக்கும் தாவி இருந்தது என்பதுதான் உண்மை. ஆண்கள் இருவருமாக மாறி மாறி சமைத்து, சமயங்களில் உணவகங்களில் உண்டு வாழ்ந்து பழக்கப்பட்டுப் போயிருந்தனர். உயர்தர உணவுகளைக்கூட உண்டிருக்கிறார்கள். ஆனால் சொந்த வீட்டில் தங்களுக்காக யாரேனும் சமைத்து அதனை ஆசையாக உண்ணும் அரும்பெரும் வாய்ப்புகளைக் தொலைத்த அபாக்கியசாலிகள்தான் இருவரும்.

கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இப்போது இருக்கும் வீடு முழுக்க முழுக்க அமரனின் உழைப்பில் சம்பாதித்து வாங்கிக் கொண்ட வீடு. இளங்கோவிற்கும் சென்னையின் முக்கியப் பகுதியில் சொந்த இடம் உண்டு. வீடு கட்டிக் கொள்ளவும் கையிருப்பாக பணம் வைத்திருக்கிறான்.

ஆனால் தன் உற்ற நண்பனை தனியே விட்டுச் செல்ல முடியாத சூழ்நிலை. யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து வாழும் பழகியிருக்கிறான்தான் அமரன். ஆனால் அவனை பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இளங்கோவிற்கு அமைந்திருக்கவில்லை… அவசியமும் ஏற்படவில்லை.

எதிர்கால வாழ்க்கையை பற்றி இருவரும் பெரிதாக இன்னும் ஆராயவில்லை. குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியமான ஒன்று என்பது இருவருக்கும் தெரியும். ஆனால் அமரன் தான் அதற்கு எந்த வகையிலும் பொருந்தாதவன் என்று ஆழமாக நினைக்கிறான். முக்கால் குருடனை கட்டி குடும்பம் நடத்த தியாக மனம் படைத்த பெண்கள் இருப்பதாகத் தோன்றவில்லை.

அவன் அழகில் ஈர்க்கப்பட்டு நெருங்கி வந்த பெண்களும் அவன் குறை அறிந்து சத்தமின்றி ஒதுங்கிக் கொண்ட கதைதான் நடந்திருக்கிறது. ஆதலால் காதல், கல்யாணம் என்ற எண்ணங்களை தனது சிந்தனையில் இருந்தே மொத்தமாக தள்ளி வைத்திருக்கிறான். ஆனால் இளங்கோவை பற்றிய கவலையும் அக்கறையும் நிறைய உள்ளது. அவன் திருமணம் பற்றி நிறைய பேசுகிறான்… வாதிடுகிறான்.

“எனக்காக தியாகச் செம்மலா வாழ்ந்து கழிச்சிடலாம்னு எண்ணமாடா..?”

“மேட்ரிமோனியில உன் ப்ரொஃபைல் அப்ளை பண்ணிட்டேன்… தயவுசெஞ்சு ஃபாலோ பண்ணு…”

“ராஜாண்ணா உனக்கு ஒரு பொண்ணு பார்த்தாராமே… பாக்காமலே வேணாம்னு சொல்லிட்டியாம்…”

“உன் கல்யாணம் பத்தி பேசினாலே இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு 3 வருஷமா ஒரே கதையை சொல்லிட்டு அலையிற…”

“உன்னை இந்த வீட்ல இருந்த துரத்தி விட்டாதான் உருப்படியா உன்னைப்பத்தி யோசிப்ப…”

தன்மையாகவும் கோபமாகவும் அவனிடம் வாதிட்டு இருக்கிறான் அமரன்.

“காலம் வரும்போது எல்லாம் நடக்கும்டா… அமைதியா இரு…”

ஒரே வார்த்தையில் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான் இளங்கோ.

தன்னால்தான் தன் நண்பனின் வாழ்வு தொலைகிறதோ என்ற பெரிய கவலை அமரனுக்கு உண்டு. அனைத்தையும் தாண்டி இசை என்ற உலகில் அவர்களது சங்கமம் அவர்களது தனிப்பட்ட வெறுமைகளை போக்கி வைக்கிறது.

இதோ இன்று வீட்டுமுறையில் எளிதான ஒரு சமையல்தான். சுவை நாக்கை தாண்டி நாபிக்கபலம் வரை தித்திக்கிறது. எதிர் வீட்டு சாந்தி கொடுத்து அனுப்பியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் அமரன். உணவை ருசித்து உண்டாலும் திலோவின் திடமான வார்த்தைகளும் அவள் கண்களில் தெரிந்த அமரனின் மீதான தெளிவான காதலும் இளங்கோவை அசைத்துக் கொண்டே இருந்தன. அவனுக்கு அனைத்துமாக ஒருத்தி வந்துவிட்டால் அதைவிட பெரிய ஆனந்தம் இவனுக்கு இல்லை. அப்படியான ஒருத்தியாக திலோ இருப்பாள் என்று தோன்றினாலும் காலப்போக்கில் இயல்பு வாழ்க்கையில் காதலின் வீரியம் குறைந்துபோனால் தன் நண்பன் முற்றிலும் நொறுங்கி விடுவானே என்ற அச்சமும் எழாமல் இல்லை.

சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயம் வரும். ஆனால் அது எதிர்கால வாழ்வை பாதித்து விடக்கூடாது அல்லவா. திலோவிடம் இன்னும் நிறைய பேச வேண்டும். அதன் பின்புதான் அவளை அமரனிடம் நெருங்க விடவேண்டும். அமரனும் அத்தனை எளிதில் திலோவின் காதல் வலையில் விழமாட்டான் என்பதும் தெரியும். அவன் காதலைப் பெற அவள் போராடித்தான் ஆக வேண்டும். அந்த போராட்டத்தில் உறுதியும் வேண்டும். திலோவிடம் பேசியே ஆகவேண்டும்… தனக்குள் முடிவு செய்து கொண்டவன் இரவு கால தாமதமாகத்தான் உறங்கவே ஆரம்பித்திருந்தான்.

“நைட் டிபன் சாப்டீங்களாண்ணா… நல்லா இருந்ததா..? ஒரு மணி நேரம் உங்க வீட்டு பால்கனியை பார்த்து கண்ணு ரெண்டும் நட்டமா நின்னுக்கிச்சு… அவ்வளவு தூரம் சொல்லியும் அவரை கூட்டிட்டு வரல பார்த்தீங்களா..?”

மறுநாள் காலை செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவனிடம் செல்லமாய் முறுக்கியபடியே கேட்டிற்கு வெளியே நின்று அளவளாவ தொடங்கி இருந்தாள் திலோ. தயாராக கழுவி வைத்திருந்த பாத்தரங்களை அவளிடம் கொடுத்தான் இளங்கோ.

“உன்கூட பேசணும்மா…”

“பேசிட்டுதானே இருக்கோம்…”

“ஆபீஸ் முடிஞ்சு வரும்போது நான் சொல்ற காபி ஷாப் வந்துடு… நிறைய விஷயங்கள் பேசணும்…”

“எவ்வளவு வேணாலும் பேசலாம்ணா… ஆனா என் முடிவு மாறாது…”

பதில் பேசாமல் அவளை அழுத்தமாக சில நொடிகள் பார்த்தான் இளங்கோ.

“உன் போன் நம்பர் குடு…”

கொடுத்தாள்… உடனடியாக சேமித்து அவளுக்கு மிஸ்டுகாலும் அனுப்பி இருந்தான்.

“அமர் நம்பர் கிடைக்குமாண்ணா…”

“இப்ப கொடுக்க மாட்டேன்…”

“அவரைப் பார்க்கவாவது அனுமதிப்பீங்களா..?”

“உன் வீட்டு பால்கனியில உட்கார்ந்து பாத்துக்கோ… அதுக்கெல்லாம் தடையில்ல… அவன்கிட்ட நெருங்கணும்னா அதுக்கு முன்னால நிறைய கிளரிஃபிகேஷன் வேணும்…”

“அடேங்கப்பா… நவீன கர்ணனோ நீங்க..?”

“ஆனா அவன் துரியோதனன் இல்ல…”

“என் அமர் உங்களை மாதிரி நண்பர் கிடைக்க கொடுத்து வச்சவர்தான்…”

அன்று இரவு ஏழு மணிக்கு இளங்கோ சொன்ன காபி ஷாப்புக்கு வந்திருந்தாள் திலோ.

“அவரை தனியா விட்டுட்டு வந்துட்டீங்களா..?”

“அவன் தனியா பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தான்… வேலை இருக்கிறதா சொல்லிட்டு வந்தேன்…” என்றவன் இருவருக்கும் காபி ஆர்டர் செய்து தொண்டையைச் செருமிக் கொண்டு அவளிடம் நிமிர்ந்தான்.

“அவனோட பத்தாவது வயசுலதான் அவனோட 90% பார்வை போச்சு…”

அமரனை பற்றி தெளிவாக பேச ஆரம்பித்திருந்தான் இளங்கோ.

“அ..அப்போ அவருக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இல்லையா..?” அதிர்ச்சி மேலிட கேட்டாள் திலோ.

“இல்ல… ஒன்பது வயசு வரைக்கும் நம்மளை மாதிரி இயல்பான பார்வையோடு இருந்தவன்தான்… அப்பா, அம்மா, அமரன் மூனு பேர் மட்டுமே சேர்ந்த அழகான குடும்பம் அவனோடது. நடுத்தர வர்க்கம்தான்… ஆனா நிம்மதியான வாழ்க்கை. அவன் நாலாவது படிச்சுட்டு இருக்கும்போது தீபாவளிக்கு முதல்நாள் பட்டாசு வாங்குறதுக்காக மூனு பேரும் ஒரு பெரிய கடைக்கு போயிருந்தாங்க…”

இளங்கோ சொல்ல ஆரம்பிக்க அன்றைய நிகழ்வுகள் அவளது கண்முன் காட்சிகளாக விரியத் தொடங்கின.

சிறுவனான அமரன் விதவிதமான துப்பாக்கிகளின் அழகில் ஈர்க்கப்பட்டு முன் பகுதியில் நின்றுவிட பெற்றவர்கள் இருவரும் இன்னும் சற்று உள்ளே நுழைந்து வேறு வெடிகளையும் பட்டாசுகளையும் வாங்கிக் கொண்டிருந்தனர். கடை முழுக்க பட்டாசுகள்… பெரிய கடையும்கூட… நிறைய கூட்டம்… திடீரென அங்கு ஏற்பட்ட மின் கசிவால் கடையின் பட்டாசுகளில் தீப்பொறி பறந்து விழுந்து எதிர்பாராத வகையில் வெடித்து சிதறத் தொடங்க அலைமோதிய கூட்டம் அலறி அடித்தபடி திசைக்கு ஒருவராக முண்டியடித்து ஓடத் தொடங்கினர்.

மருந்து நெடியுடன் சுற்றிலும் புகைமூட்டம்… விடாமல் வெடித்துச் சிதறும் பட்டாசின் காதை பிளக்கும் ஒலி… மக்களின் சத்தமிட்ட ஓலக்குரல் என்று அந்த பகுதியே கிடுகிடுத்துப் போனது. கூட்டத்தினரால் இழுக்கப்பட்டு வாசலில் வந்து விழுந்திருந்தான் அமரன். உள்ளே சிக்கியவர்களில் வெகு சிலரே சிற்சில காயங்களோடு தப்பி ஓடிவர மீதி நபர்களின் அலறல்கள் மட்டுமே கேட்டது.

யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை. தத்தம் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆளாளுக்கு ஓடிக் கொண்டிருந்தனர். அழுதபடி விழுந்து கிடந்த அமரனை சிலர் தூக்கிச் சென்று தள்ளி நிறுத்த பெரும் ஓசையுடன் நெருப்புக் குழம்பை கக்கியபடி பளீரென்ற ஜுவாலையுடன் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அந்த இடம்.

அதிர்வும் அழுகையுமாக விரிந்த விழிகளுடன் நெருப்பின் கோரத் தாண்டவத்தை மொத்தமாக விழிகளில் உள்வாங்கியபடி நின்றிருந்த அமரன் அங்கேயே மயங்கிச் சரிந்தான்.

கரிக்கட்டையாய் சிலர்… அரைகுறையாக வெந்த உடலுடன் சிலர்… சிற்சில காயங்களுடன் சிலர் என்று அரசு மருத்துவமனையே அல்லோல கல்லோலப்பட்டது. சிறுவன் அமரனும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான்.

மயக்கம் தெளிந்து எழுந்தவன் பயத்திலும் பெற்றோரைத் தேடியும் அழுது கரைய போலீசார் அவனிடம் விசாரித்த வரையில் அவனது பெற்றோரும் கருகி இறந்து போனது தெரிய வந்தது. திக்கற்று நின்ற சிறுவன் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டான். நிறைய தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ஓரளவு தரத்தோடு நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த இல்லத்தில் அவனும் ஒருவனானான். அங்குதான் மற்றொரு அனாதைச் சிறுவனான இளங்கோவும் இருந்தான்.

எந்நேரமும் அழுது கொண்டே இருந்த அமரனுக்கு உறுதுணையானான் இளங்கோ. இருவரும் ஒத்த வயது என்பதாலும் இளங்கோ அவனிடம் காட்டிய பரிவினாலும் அமரனுக்கு சகலமுமாக மாறிக் கொண்டிருந்தான் இளங்கோ. நாட்கள் மெல்ல நகர சாரிட்டி மூலம் நடத்தப்படும் பள்ளியில் இளங்கோவுடன் இணைந்து பள்ளிக்கும் அனுப்பப்பட்டான் அமரன்.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க அமரனின் பார்வையில் மெல்ல மெல்ல குறைபாடு நிகழத் தொடங்கியது. கண்களில் அரிப்பு எடுத்து எந்நேரமும் கசக்கினான்… பொருட்கள் மங்கலாக காட்சி அளிக்கத் தொடங்கின… கண்களில் நீர் வழியத் தொடங்கியது… வகுப்பறையில் கருப்பலகையை உற்று கவனிக்கும்போது கண்களில் கூச்சமும் எரிச்சலும் ஏற்படத் தொடங்கியது… அவனது பிரச்சனை நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது… அவர்களும் முறையாக கண் மருத்துவரை அணுகினர்.

பரிசோதனையின் முடிவில் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்தார் மருத்துவர்.

விபத்தின்போது அளவு கடந்து வெளிச்சத்தை விழிப்படலங்கள் உள்வாங்கியதால் ரெட்டினாவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. பார்வை சிறிது சிறிதாக மங்கும் அபாயம் இருப்பதாகவும் தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்து சரி செய்வதற்கு அவனது வயது ஒத்துழைக்கவில்லை… அதனோடு இலட்சங்களை கொட்டி இறைத்து அந்த சிகிச்சையை மேற்கொள்ள அவர்களாலும் முடியவில்லை. ஓரளவு அவனை வளர்த்து உருவாக்க மட்டுமே முடியும்… அதை தாண்டி அவர்களால்தான் என்ன செய்துவிட முடியும்..?

விபரீதத்தை விதியின் கையில் ஒப்படைத்து வேதனையோடு ஒதுங்கிக் கொண்டது நிர்வாகம்.

தனது பத்தாவது வயதின் முடிவில் 90 சதவிகிதம் பார்வையை இழந்திருந்தான் அமரன்.

தனது நண்பனின் நிலையில் மிகவும் உடைந்து போனான் இளங்கோ. அவன் மனம் தளராமல் அவனை அரண்போல் பாதுகாத்துக் கொண்டான். அமரனும் மெல்ல மெல்ல தனக்குள் ஒருவித வைராக்கியத்தை உருவாக்கத் தொடங்கினான். குழந்தையாக இருந்த காலம் தொட்டே இசையின்மீது அவனுக்கு அதீத ஆர்வம் இருந்தது.

அவனது ஏழாவது வயதிலிருந்தே புல்லாங்குழல் கற்றுக் கொள்வதற்காக உரிய ஆசானிடம் பயிற்சிக்கும் அனுப்பியிருந்தார் அவனது தந்தை. அவன் ஆசைப்பட்ட இசை உலகில் எதிர்காலத்தில் நின்ற நிலைபெற்று அவன் கோலோச்ச வேண்டும் என்பதே அவனைப் பெற்றவர்களின் தீராத ஆசையாக இருந்தது.

நிறைவேறாத ஆசைகளோடு தங்களது மகனை தனியே தவிக்க விட்டுச் சென்ற அந்த ஆன்மாக்கள்கூட இன்னும் வேதனையோடு தான் அவனை சுற்றி உழன்று கொண்டிருக்கும் என்று எண்ணியவன் தன்னை பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற பெரும் வைராக்கியத்தை இதயத்தில் செதுக்கினான்.

கூடுதலாக இளங்கோவும் வயலின் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவன் என்பதும் தெரியவர நண்பர்கள் இருவரின் ஆசையையும் அந்த நிர்வாகம் ஏற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

தொண்டு நிறுவனங்களின் மூலம் வாரம் இருமுறை இல்லத்திற்கே வந்து விருப்பம் உள்ளவர்களுக்கு இசை வித்வான்கள் மூலம் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் முழு ஈடுபாட்டுடன் அமரனும் இளங்கோவும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தினர். இருவரின் அசாத்திய திறமையில் ஆச்சரியம் கொண்ட இசைக் கலைஞர்கள் தனிப்பட்ட முறையிலும் அவர்களுக்கு பயிற்றுவித்தனர்.

மறுபுறம் கல்வியையும் முடித்தனர் இருவரும். பார்வையில் குறைபாடு தோன்றிய பின்பு அமரனின் மூளை அதிகமாகவே விழித்துக் கொண்டது. படிப்பிலும் தேர்ந்தவனாகவே விளங்கினான். நண்பர்கள் இருவரும் இளங்கலை படிப்பை முடித்தனர்.

இசையில் தங்களது பங்களிப்பையும் அதிகமாக வெளிப்படுத்தவும் தொடங்கினர். அவர்களது திறமையால் கவரப்பட்ட ராஜன் என்ற நபர் தான் புதிதாக தொடங்கிய இசைக்குழுவில் அவர்களையும் இணைத்துக் கொண்டார்.

இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள் இருவரும் தங்களுக்கான ஒரு அடையாளத்தோடு அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

ராஜன் தொடங்கி இருந்த இசைக்குழுவும் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு தமிழ்நாட்டில் மிகச்சிறந்த இடத்தில் நிலைபெற்று நின்றது. தங்களது தனித் திறமையால் கூடுதலாக வேறு சில கச்சேரிகளிலும் கலந்து கொண்டு விடாமல் உழைத்து இன்று முன்னேற்றம் கண்டு நிற்கின்றனர் இருவரும்.

(தொடரும்)
 
Top Bottom