• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 10

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 10

தேனூர் :

கதிரின் மொபைல் போனிற்கு தொடர்ந்து கால் வந்துக் கொண்டிருந்தது. அவன் வெளியே இருந்ததால் சத்தம் கேட்கவில்லை.

தோட்டத்திலிருந்து உள்ளே வந்த வள்ளிக்கு ரிங்டோன் சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தால் 'கோயம்புத்தூர் கேங்' வாட்ஸ்அப் குழுவில் இருந்து வீடியோ கால் வந்து கொண்டிருப்பது தெரிந்து மகனிடம் கொண்டு போய் கொடுத்தார்.

அவனும் அட்டென் பண்ண, "டேய் கதிரா... ஊருக்குப் போனதுமே எங்களை மறந்துட்டியா? அங்க போயி நல்லா நாட்டுக்கோழி அடிச்சுப் பிரிச்சுக்கிட்டு இருப்பியே," என்று முதலில் ஆஜரானான் அன்பு.

கதிர் சிரித்துக்கொண்டே, "ஆமாடா, இப்பதான் அம்மா கைப்பட செஞ்ச இட்லியும் கறியும் சாப்பிட்டுட்டு வந்து உக்காந்தேன். நீங்க என்ன பண்றீங்க?" என்றான்.

அதற்குள் குழுவில் இணைந்த மற்ற நண்பர்களான வேலனும், முகமதுவும், "ஏய் கதிர்! என்னடா விசேஷத்துக்கு எங்களை கூப்பிடவே இல்லை? நாங்க எல்லாம் வந்தா உன் ஊர்ல சாப்பாட்டுக்கு பஞ்சம் வந்துடும்னு பயந்துட்டியா?" என்று கிண்டல் செய்தனர்.

அதைக் கேட்டவன் "அடப் போங்கடா! அப்பா சொன்னாருன்னு உங்க கிட்ட சொல்லிட்டு தானே எருமைகளா கிளம்பி வந்தேன். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விசேஷம். நீங்க கிளம்பி வரதுன்னா வாங்கடா, என் ஊரு தேனூர் உங்களை அன்போடு வரவேற்கும்," என்றான்.

"நிச்சயமா வரோம் மச்சான். அக்ரி படிக்கிற புண்ணியத்துல அந்தப் பக்கம் ஏதாவது புதுசா விவசாயம் பண்றாங்களான்னு பாரு. சும்மா ஊர் சுத்திட்டு வந்துடாத," என்று முகமது அறிவுரை சொல்ல,

"அதெல்லாம் பார்த்துக்கலாம். ஆனா இங்க இருக்கிற காத்தும், இந்த மண்ணோட வாசனையும் நம்ம கோயம்புத்தூர்ல கிடைக்காதுடா. சரி, நான் அப்புறமா கூப்பிடுறேன்," என்றவாறு அழைப்பை துண்டித்தான்.

மறுநாள் பொழுதும் வர, முறைப்படி சீர்வரிசை பொருட்களோடு மீனாட்சி வீட்டிற்கு போனவர்கள் சடங்கை நல்லபடியாக முடித்து விட்டு வந்தனர்.

பாவாடை சட்டையில் பார்த்த மாமன் மகள் இன்று பட்டுப் புடவையில் அழகோவியமாக இருப்பதை பார்த்த கதிருக்கு முதல் முறையாக மீனாட்சியின் மேல் சலனம் வந்தது.

அவளின் மஞ்சள் பூசிய முகத்தை மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் கல்லூரிக்கு வந்து விட்டவனின் சிந்தனையில் மீனாட்சியின் நினைவுகளே நிறைந்திருந்தது.

நாட்களை தாண்டி மாதங்களும் கடந்திருக்க, பத்தாம் வகுப்பின் கட்சி தேர்வை எழுதி விட்டு வீட்டிற்கு வந்த கயல்விழியோ அம்மா என்றவாறு வயிற்றை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

என்னடி ராங்கி ஆச்சென்று வேகமாக வந்த மரகதமோ பேத்தி பெரிய மனுஷி ஆன சங்கதியை தெரிந்து கொண்டவர் பேச்சிஆத்தா நீ தான் கூட இருக்கணும் என்றவர் வயலில் இருக்கும் மருமகளுக்கு செய்தி அனுப்ப வள்ளியும் அரக்க பரக்க ஓடி வந்தார்.

பின்னர் ஊர் வழக்கப்படி தாய்மாமன் வீட்டில் சொல்லிட்டு வந்தவர்கள் ஐந்தாம் நாள் விஷேசத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.

பட்டுக்கடை வாசலில் நின்றபோது கலாவின் நெஞ்சுக்குள் பழைய நினைவுகள் அலைமோதின. "இடுப்பில் தூக்கி வளர்த்த பிள்ளை, அதற்குள் இவ்வளவு வளர்ந்துவிட்டாளா?" என்ற ஆச்சரியம் அவளை மெல்ல வருடியது.

கடைக்காரர் அடுக்கடுக்காகப் புடவைகளை விரித்தார். ஆனால் கலாவின் தேடல் கயல்விழிக்காக மட்டுமே இருந்தது. "தம்பி, அந்த இளஞ்சிவப்புப் புடவையை எடுங்க... அதுதான் என் மருமகளுக்கு எடுப்பா இருக்கும்," என்றாள். அந்தப் பட்டுப்புடவையைத் கையில் வாங்கியபோது, தன் மகளைப் போலவே வளர்த்த கயல்விழியின் முகம் அவள் கண்ணில் வந்து போனது. புடவையின் மென்மை, தனது நாத்தனார் மகளின் மென்மையான குணத்தைப் போலவே அவளுக்குத் தோன்றியது.

"என் பொண்ணு கையில மணம் வீசணும்" என்று தேடித்தேடி மணக்கும் சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் வாங்கினாள்.

பின்னர் கயல்விழிக்குப் பிடித்தமான முறுக்கும், அதிரசமும் வைக்கப் பெரிய அகலமான தட்டுகளைத் தேர்ந்தெடுத்தாள். ஒவ்வொரு பொருளையும் எடுக்கும்போது, "இதை கயல் பார்த்தா எவ்வளவு சந்தோஷப்படுவா!" என்கிற எண்ணமே கலாவின் முகத்தில் ஒரு அழகான சிரிப்பைத் தந்தது.

கடைசியாக ஒரு வளையல் கடை. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி வளையல்களைப் பார்த்ததும் கலாவின் கண்கள் மின்னின. "அத்தை... எனக்கு சத்தம் போடுற வளையல் தான் பிடிக்கும்" என்று கயல்விழி சிறுவயதில் சொன்னது அவள் காதில் ஒலித்தது. உடனே, பச்சை நிறத்தில் கலகலவெனச் சத்தம் எழுப்பும் கண்ணாடி வளையல்களை ஆசையோடு அள்ளிப் பையில் வைத்தாள்.

சேகரோ வழமைப்போல மனைவியை நினைத்து பூரித்துப் போனார். சீர்வரிசைக்கு தேவையான
பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது, கையில் இருந்த பைகளின் எடையை விட, அர்களது இதயத்தில் இருந்த அன்பு தான் அதிகமாக இருந்தது.

"நாத்தனார் வீட்டுப் பிள்ளை என்றாலும், என் வயிற்றுப் பிள்ளையைப் போலத்தானே அவளைப் பார்த்தேன்" என்று நினைத்துக்கொண்ட கலாவின் கண்களில் ஒரு சிறு துளி கண்ணீர் கசிந்தது. அது வருத்தத்தில் அல்ல, ஒரு பெண்ணாகத் தன் வீட்டுப் பெண் அடுத்த நிலைக்கு வளர்ந்துவிட்டாளே என்கிற பெருமிதத்தில்!

மறுநாள் பொழுதும் வர சொந்த பந்தங்களோடு சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பக்கத்து தெருவிலிருக்கும் மணி வீட்டை நோக்கி வந்தனர்.

மணி- வள்ளி தம்பதியினர் மாமன் வீட்டிலிருந்து வந்தவர்களை ஆலம் சுத்தி வரவேற்து வீட்டிற்குள் அழைத்துப் போக, ஆண்களோ வெளியே உட்கார்ந்து கொண்டு பொதுவாக பேசிக் கொண்டிருக்க, கயல்விழிக்கு நலங்கு வைக்கும் சடங்குகள் முடிந்ததும், விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு ஆரம்பமானது. வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், வேப்பிலை மற்றும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, கயல்விழியை ஒரு மரப்பலகையில் அமர வைத்திருந்தனர்.

பெரிய அண்டாக்களில் மஞ்சள் கலந்த நீர், வேப்பிலை மற்றும் வாசனைப் பூக்கள் தூவப்பட்டுத் தயாராக இருந்தது. முதலில் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, சடங்கைத் தொடங்கி வைத்தார் மரகதம் பாட்டி.

"பெரியவளாகிட்டா என் பேத்தி... இனிமே இவ தான் இந்த வீட்டு மகாலட்சுமி," என்று சொல்லிக் கொண்டே, தட்டில் இருந்த மஞ்சள் நீரை எடுத்து கயல்விழியின் காலில் இருந்து தலை வரை தெளித்து ஆசீர்வதித்தார்.

அதனைத் தொடர்ந்து அத்தை கலாவின் முறை வந்தது. தட்டில் இருந்த மஞ்சள் நீரைக் கைகளில் எடுத்து, தன் அன்பு மருமகளின் தோள்களில் மென்மையாகத் தெளித்தவள் "எப்பவும் சிரிச்ச முகமா, தீர்க்க சுமங்கலியா இருக்கணும் மருமகளே," என்று அவள் சொல்லும் போது, வள்ளி உணர்ச்சிவசப்பட்டுத் தன் அண்ணியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

அடுத்ததாக, 'தாய்மாமன்' முறையுள்ள மாறன் முன்னே வந்தான். முறைப்படி தாய்மாமன் தான் இந்த விழாவில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். மாறன் தட்டை ஏந்திக் கொண்டு வர, மேளதாளங்கள் இன்னும் சத்தமாக முழங்கின. மஞ்சள் கலந்த நீரை எடுத்து கயல்விழியின் தலைமேல் தெளிக்கும் போது, மெலிதாகச் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தாள்.

சுற்றியிருந்த பெண்கள் கிண்டலாக, "மாமன் மகன் கையால மஞ்சள் தண்ணி பட்டதும், கயலு முகம் எப்படிச் சிவக்குது பாரு!" என்று சொல்ல, அட...எதுக்கு ஆச்சியை இப்படி கிண்டல் பண்ணுறீங்க என்று சங்கடப்பட்டுச் சிரித்துக் கொண்டே மாறன் பின்வாங்கினான்.

சடங்குகள் முடிந்ததும், மாமன் வீட்டிலிருந்து கொண்டு வந்த புதிய பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு, நகைகளை போட்டுக்கொண்டு தேவதை போல மேடைக்கு வந்தவளுக்கு 'ஆலத்தி' (ஆரத்தி) எடுக்கப்பட்டது.

வீட்டின் பெரியவர்கள் ஒவ்வொருவராக வந்து கயலின் தலையில் மஞ்சள் கலந்த அரிசியைப் (அட்சதை) போட்டு ஆசீர்வதித்தனர். மணி தன் ஒன்றுவிட்ட தங்கையிடம், "கலா, விசேஷம் ரொம்ப நல்லபடியா நடக்குது. கயலுக்கு நம்ம குடும்பத்தோட ஆசீர்வாதம் எப்பவும் உண்டு," என்று நெகிழ்ந்து சொன்னார்.

பந்தியில் அறுசுவை உணவும், கறிக்குழம்பு வாசனையும் ஊரைக் கூட்ட, வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் கயலை வாழ்த்திவிட்டு வயிறாரச் சாப்பிட்டுச் சென்றனர்.

இதையெல்லாம் வீடியோ காலில் பார்க்குமாறு கதிர் தனது நண்பர்களிடம் போனில் பேசிக்கொண்டே, "மச்சான், தங்கச்சி விசேஷம் எல்லாம் சூப்பரா போயிட்டு இருக்கு. நீங்க வரும்போது இன்னும் ஜாலியா இருக்கும்," என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

பாசமும், பாரம்பரியமும் கலந்த அந்தத் தேனூர் கிராமத்தின் மஞ்சள் நீராட்டு விழா, மீனாட்சி- கதிரின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத தொடக்கமாக அமைந்தது.

ஏனென்றால் தனது அத்தை மகள் பெரிய பெண் ஆகிவிட்டதை கேட்டு வேகமாக வந்த மீனாட்சி எதிரில் வந்த கதிரின் மேல் இடித்து அவனோடு சேர்ந்து கீழே விழ, மின்சாரம் தாக்கிய போல இருவருக்கும் ஒன்னும் சொல்ல முடியவில்லை.

கண்களை மூடி படுத்திருப்பவளை பார்த்த கதிர், வெறுமையான அவளது இடையில் இறக்கி பிடிக்க அதில் பட்டென்று கண்களை திறந்தாள்.

அவள் கண்களை ஒரு நொடி பார்த்தவன் லவ் யூ டி மீனு என்றவாறு தனது மாமன் மகளின் உதடுகளை சிறைபிடித்தவனோ முத்தத்தில் மூழ்கி இருக்கும் போது யாரோ வரும் சத்தம் கேட்டு பட்டென்று எழுந்தவன் அதிர்ந்து போய் இருப்பவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்த அதில் சுயத்திற்கு வந்தவள் ஐயையோ என்று வெட்கத்தோடு வீட்டிற்குள் ஓடி விட்டாள்.

அதோடு இல்லாமல் எதாவது சாக்கு போக்கு சொல்லி அவளை தனிமையில் சந்தித்த கதிர், அவள் மீதான காதலை மனம் விட்டு சொல்ல, மீனாட்சிக்கும் தனது மாமனை பிடிக்கும் என்பதால் விழியாலே சம்மதத்தை சொல்ல, கதிரை தான் கையில் பிடிக்க முடியவில்லை.

செம்புலம் தொடரும்..

 
Top Bottom