செம்புலம் 12
தேனூர்:
காலை 8:00 மணி: வீட்டின் அந்தப் பெரிய கூடம் இன்று வழக்கத்திற்கு மாறான அமைதியில் இருந்தது. ஊரே விடிந்து பரபரப்பாகிவிட்டாலும், கயல்விழியின் நெஞ்சுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்து கொண்டிருந்தது.
பெரிய தேக்கு மர நாற்காலியில் அமர்ந்திருந்த அவளது தந்தையின் கையில் அன்றைய செய்தித்தாள் இருந்ததே தவிர, அவர் கண்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
"என்னம்மா... இன்னும் வரலையா?" என்று அவர் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கேட்பதும், கயல்விழி மெல்லிய புன்னகையோடு "இன்னும் பத்து நிமிஷம் இருக்குப்பா" என்று சொல்வதும் அந்த அறையின் அழுத்தத்தைக் கூட்டியது.
காலை 10:00 மணி: அந்த ஒற்றை நொடி!
இணையதளத்தில் எண்களைப் பதிவு செய்துவிட்டு, அந்த 'சப்மிட்' பட்டனை அழுத்திய அந்த நொடி... மூச்சுக் காற்று நின்றது போலிருந்தது. திரை மெதுவாகத் திறக்க, மதிப்பெண்கள் ஒவ்வொன்றாக மின்னின.
தமிழ்: 100
ஆங்கிலம்: 99...
கடைசியில் பார்த்தபோது, மொத்த மதிப்பெண் மாநிலத்திலேயே முதலிடம்!
ஒரு நிமிடம் கயல்விழிக்கு எதுவுமே புரியவில்லை. கண்கள் பனிக்க, "அப்பா... நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் பா!" என்று கத்தியபோது, அந்தப் பெரிய வீட்டின் சுவர்கள் எல்லாம் அந்த வெற்றியின் ஒலியை எதிரொலித்தன.
அடுத்த அரை மணிநேரத்தில், மிராசுதார் மணியின் வீட்டு வாசலில் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. எப்போதும் அதிகாரத்தோடும் மரியாதையோடும் பார்க்கப்படும் அந்த மிராசுதார், இன்று ஒரு சாதாரணத் தந்தையாய் தன் மகளை உச்சி முகர்ந்து பாராட்டிய காட்சி காண்போரை நெகிழச் செய்தது.
"எங்க வீட்டுப் பொண்ணு படிப்புல மகாராணி ஆயிட்டா!" என்று அவர் உரக்கச் சொல்லியபோது, அவர் குரலில் இருந்த அந்தப் பெருமிதம் ஊர் முழுக்கக் கேட்டது.
இதோ வரேன் கண்ணு என்றவாறு மெதுவாகத் தன் அறைக்குள் சென்றவர் சிறிது நிமிடத்தில் ஒரு சிறிய செப்புப் பெட்டியோடு வெளியே வந்தார். அந்தப் பெட்டி பல தலைமுறைகளாக அந்தப் பெரிய குடும்பத்தின் கௌரவத்தைச் சுமந்து நிற்பதாகும்.
பின்னர் கயல்விழியைத் தன் அருகே அழைத்தவர், "கயல்... இந்த ஊர்ல எனக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கலாம், ஆனா இன்னைக்கு நீ வாங்கிக் கொடுத்த இந்த 'மாநில முதலிடம்' தான் எனக்குக் கிடைச்ச நிஜமான சொத்து. இதோ இது உனக்காக..."
முகம்கொள்ளாத மகிழ்ச்சியுடன் அந்தப் பெட்டியைத் திறக்க, அதற்குள் ஒரு பழங்கால தங்கப் பேனா மின்னிக் கொண்டிருந்தது. அது சாதாரணப் பேனா அல்ல; மிராசுதாரின் பாட்டனார் காலத்துச் சொத்து, அந்தக் குடும்பத்தில் படிப்புக்கும் அறிவுக்கும் மதிப்பளிப்பவர்களுக்கு மட்டுமே கைமாற வேண்டிய ஒன்று.
"நிலமும் புகழும் எப்பவும் நிலைக்காது தாயி... ஆனா நீ கத்துக்கிட்ட இந்த அறிவு உன்னை எங்கேயோ கொண்டு போகும். நீ இன்னும் உயரத்துக்குப் போகணும், பல பேருக்கு வழி காட்டணும். இந்தப் பேனா இனி உன் கையில இருக்கட்டும்!" என்ற பூரிப்புடன் மகளுக்கு கொடுத்தார்.
மெய்சிலிர்த்துப் போனவளோ வேகமாக தன் தந்தையின் கால்களில் விழுந்து ஆசி பெற, தன் மகளைத் தூக்கி அணைத்துக்கொண்டபோது, வீட்டினரின் கண்களில் சந்தோஷத்தில் நீர் அரும்பியது.
"மிராசுதாரர் மணியுடைய பொண்ணு படிப்புலேயும் தங்கம்னு இன்னைக்கு நிரூபிச்சுட்டா!" என்று ஊர் பெரியவர்கள் பேசிக் கொள்ள, அந்த மதிய வெயிலிலும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு குளிர்ச்சியான பெருமிதம் பரவியிருந்தது.
கயலை விட ஐந்து மார்க் குறைவாக மீனாட்சி எடுத்து இருந்தாலும் அவளையும் பாராட்ட மறக்கவில்லை.
பின்னர் பள்ளியில் அவளுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
பள்ளியின் மேடையில் அந்த ஊரின் பெரிய மிராசுதாரரான கயல்விழியின் தந்தை கம்பீரமாக அமர்ந்திருந்தார். எப்போதும் மற்றவர்களுக்குத் தான தர்மங்கள் செய்து பழகிய அவருக்கு, இன்று தன் மகளின் அறிவாற்றலால் ஊர் மக்கள் முன்னிலையில் கௌரவிக்கப்படுவது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவரது முகத்தில் தெரிந்த அந்தத் திருப்தி, ஆயிரம் ஏக்கர் நிலம் விளைந்ததைக் காட்டிலும் மேலானதாக இருந்தது.
பின்னர் தலைமையாசிரியர் மைக் முன் வந்து பேசத் தொடங்கினார்:
" தேனூரைச் சேர்ந்த கயல்விழி... இந்தப் பெயர் இன்று தமிழகம் முழுவதும் ஒலிக்கிறது. வசதிகள் ஒருவனுக்கு வெற்றியைத் தராது, விடாமுயற்சியும் கனவும் தான் தரும் என்பதற்கு கயல்விழி ஒரு சாட்சி. அவள் இந்தப் பள்ளியின் பெருமை மட்டுமல்ல, இந்த மண்ணின் அடையாளம்!" என்றவர் கயல்விழிக்குப் பொன்னாடை போர்த்தியபோது, கூட்டத்திலிருந்து எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரமானது.
சார் நீங்க பேசுங்கள் என்று கயல்விழியின் அப்பாவை கூப்பிட மைக் முன்பு பேச வந்த மணி-க்கு முதல் முறையாக அவரது குரலில் ஒரு லேசான நடுக்கம் வந்தது.
பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டவர்"எங்க குடும்பத்துக்குக் கௌரவம் என்பது காலம் காலமா எங்க சொத்து பத்துல தான் இருந்தது. ஆனா, இன்னைக்கு என் மகள் கயல்விழி அவளோட அறிவால, இந்த ஊருக்கே ஒரு பெரிய கௌரவத்தைத் தேடித் தந்துட்டா. ஒரு அப்பனா இதைவிட எனக்கு வேறென்ன வேணும்?"
இதுதான் நான் வாழ்க்கையில் சம்பாதித்த பெரிய சொத்து என்றார்.
மேலும் சிறிது நிமிடங்கள் கடந்திருக்க பின்னர் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் வழியில், கயல்விழி தன் கையில் இருந்த அந்தப் பதக்கத்தை மெதுவாகத் தொட்டுப் பார்த்தவளுக்குத் தெரியும், இது வெறும் ஆரம்பம் தான் என்பது...
கதிரும் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கோவையிலே அவன் நண்பர்களோடு வேலை பார்க்க, மீனாட்சி கயல் இருவரும் அதே பள்ளியில் மேற்படிப்பை தொடர்ந்தனர்.
நேரம் கிடைக்கும்போது எல்லாம் தனது காதலி மீனாட்சியுடன் கதிரும் போனில் பேச மறக்கவில்லை ஆனால் என்னதான் அத்தை பிள்ளை மாமன் மகளாக இருந்தாலும் யாருக்கும் அவர்கள் காதல் விஷயம் தெரியாதவாறு பார்த்துக் கொண்டனர்
மேலும் இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டது. ஒருபுறம், பள்ளிப்பருவம் முடிந்துவிட்டதே என்ற சிறு கவலை. மறுபுறம் கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று கயல்- மீனாட்சி மற்றும் அவளது தோழிகளின் மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது.
அன்று காலை, தன் தோழிகளுடன் சேர்ந்து பக்கத்து ஊரில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பிக்க முடிவு செய்திருந்தாளுங்கள்.
எப்போதும் கட்டும் பள்ளிச் சீருடைக்கு விடை கொடுத்து, முதன்முதலாக ஒரு நேர்த்தியான சுடிதாரைத் தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்ட கயல், கையில் சான்றிதழ்கள் அடங்கிய கோப்புகளோடு அவளது இஷ்ட தெய்வமான பேச்சிக்கு முன் வந்து கண்ணை மூடி வணங்கி விட்டு வெளியே வர, மீனாட்சியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
பின்னர் இருவரும் வள்ளியிடம் சொல்லிக்கொண்டு சைக்கிளில் ஏறியவளுங்கள் அவர்கள் ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தாளுங்கள்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, ரயில்வே கேட் அருகே அவளது தோழிகள் மிதிவண்டியிலும், சிலர் நடந்தும் வந்து சேர்ந்தனர். அனைவர் முகத்திலும் ஒருவிதமான 'பெரிய மனுஷி' ஆகிவிட்ட பெருமிதம் தெரிந்தது.
பின்னர் அவர்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊருக்குச் செல்ல அந்தப் பாசஞ்சர் ரயிலுக்கு காத்திருக்க, "இந்த ரயில் பாதையைப் போலவே நம் வாழ்க்கையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கப் போகிறது," என்று மீனாட்சி சொல்லவும், தோழிகள் அனைவரும் ஆமா டி என்று சத்தமாக சிரிக்கும் போது ரயிலும் வந்தது.
நால்வரும் உள்ளே ஏறியவர்கள் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, வேகமாக ஓடும் மரங்களையும் வயல்வெளிகளையும் பார்த்தபடி, கல்லூரியில் எந்தப் பாடம் எடுக்கலாம், அங்கு புதிய நண்பர்கள் எப்படி இருப்பார்கள் என்ற விவாதங்களோ ரயிலின் சத்தத்தை விட அதிகமாக இருந்தது.
ஒரு மணி நேரப் பயணத்தில் சிலால் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தவளுங்கள், அங்கிருந்து கல்லூரிக்கு நடந்து செல்லும் தூரம் தான் என்பதால் பேசிக்கொண்டே தோழிகள் நால்வரும் மெயின் ரோட்டிற்கு வந்து வலது பக்கம் திரும்பும் போது கல்லூரியின் அந்தப் பிரம்மாண்டமான நுழைவு வாயிலைக் கண்டதும் அவர்களுக்குள் ஒரு நிசப்தம்.
இவர்களின் அடுத்த மூன்று ஆண்டு காலக் கனவு இல்லம் அல்லவா... கல்லூரியை வியப்போடு பார்த்துக் கொண்டு அலுவலகத்திற்கு போனவர்கள் அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு அங்கிருந்த மரத்தின் நிழலில் வந்து உட்கார்ந்தனர்.
என்ன கோர்ஸ் டி எடுக்கலாம் என்று கயல் கேட்கவும், கவிதாவோ நீ சொல்லுடி என்கவும், இன்னொரு தோழியான நிலா நீ சொல்லு என்க, அவளோ நீ சொல்லுடி மீனு என்றாள்.
அடியே இப்படி ஆளாளுக்கு சொல்லிக்கிட்டே இருந்தாக்க என்னைக்கு தான் அப்ளிகேஷனை ஃபில் பண்றது என்று கயல் கொஞ்சம் கோவமாக சொல்ல, வழக்கம் போல் இங்கி பிங்கி பாங்கி தான் என்று மீனாட்சி சிரித்துக் கொண்டே சொல்லவும் உங்களை திருத்தவே முடியாது என்ற கயலுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
பின்னர் ஒரு மனதாக பேசி முடிவெடுத்தவளுங்கள் பிஎஸ்சி இயற்பியல் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடுத்து விட்டு வெளியே வந்தவர்களோ காலேஜை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாளுங்கள்.
அவர்கள் ஊருக்கு அடுத்த ட்ரெயின் சாயந்திரம் 4:00 மணிக்கு தான் என்பதால் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து அங்கிருந்து பஸ்ஸில் ஏறி நால்வரும் தேனூர் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் வந்து இறங்கிவிட்டு அங்கிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டவளுங்கள் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டாளுங்கள்.
ஸ்சூ அப்பாடா என்றவாறு வீட்டுக்குள் வந்த பேத்தியை பார்த்த மரகதம், என்னமோ நாலு முட்டை நெல்லு குத்துன போல இந்த குமரிக்கு இவ்வளவு களைப்பு வருதே என்கவும் அப்பாயி என்று பல்லை கடித்தவள் இந்த மொட்டை வெயில்ல சைக்கிள் ஓடிட்டு வந்து பாரு அப்போது தெரியும். உனக்குத்தான் சைக்கிளை தள்ளக்கூட தெரியாதே என்கவும் அதைக் கேட்டு மரகதத்தின் கணவர் பழனிச்சாமி சத்தமாக சிரித்து விட்டார்.
செம்புலம் தொடரும்...